காலையில் உணவுக் கூடத்தில் அமர்ந்து அர்ஸ்லான் குடும்பம் சாப்பிட்டுக் கொண்டிருந்தது.. அந்த பெரிய உணவு கூடம், மிக விஸ்தாரமான உணவு மேசையை நடுநயமாக வைத்து சுற்றிலும் நாற்காலிகளுடன் இருந்தது.. பண்டங்கள் பலவகையிலும் இருக்க.. சாரா பழச்சாறை அனைவருக்கும் ஊற்றிக் கொண்டிருந்தார். நடுவிலுள்ள தலைவர் இருக்கையில் ஆர்யன் அமர்ந்து… முள் கரண்டி, கத்தியின் உதவியால் உண்டுக் கொண்டிருக்க.. அவனுக்கு இடது பக்கம் அம்ஜத் அண்ணன், அவனருகே அவன் மனைவி கரீமாவும் அமர்ந்திருக்க.. வலது பக்கத்தில் இவான் இருக்க.. நானி அவன் பக்கம் உட்கார்ந்து உணவு ஊட்டிக் கொண்டிருந்தாள்… 

இவான் கேட்டான், “சித்தப்பா! சித்தி எப்போ வருவாங்க?”.. சாப்பிடுவதை நிறுத்திய ஆர்யன் அவனுக்கு பதில் சொல்லாமல் அண்ணியிடம் கேட்டான்.. “இன்னைக்கு டாக்டர் அப்பாயின்மென்ட் இருக்கு தானே?.. ‘ஆம்’ என கரீமா நாசுக்காக தலையாட்ட.. 

“எத்தனை மணிக்கு” அடுத்த கேள்வி வந்தது.. 

“ரெண்டு மணிக்கு” 

“சரி!.. நான் வந்து கூட்டிட்டு போறேன்” என இவானை பார்த்துக்கொண்டே சொன்னான்.. இவானும் தான் கேட்ட கேள்விக்கு பதில் எதிர்பார்த்து தன் சித்தப்பாவை தான் பார்துக்கொண்டிருந்தான்…

“சரி!” என்று கரீமா சொல்லும்போது ரஷீத் அங்கு வந்து அனைவருக்கும் குட்மார்னிங் சொல்லி தன் பாஸிடம் தெரிவித்தான்.. 

“ஆர்யன்! துபாயிலிருந்து கப்பல் இன்னைக்கு வருது..”  

“நீ பார்த்துக்கோ, ரஷீத்.. நான் இவானை ஹாஸ்பிடல் கூட்டிட்டு போறேன்”..

ரஷீத் அதை கேட்டு தயக்கமாக சொன்னான், “அப்படியா! போன முறை என்ன நடந்தது நினைவிருக்கா? நீங்களும் வரனுமே” 

ஆர்யன் யோசிக்க கரீமா உதவிக்கரம் நீட்டினாள்… “ஆர்யன்! நீ கிளம்பு.. உன் வேலைய கெடுக்காதே.. நான் கூட்டிட்டு போறேன்” என்றவள் இவானை பார்த்து “நாம போலாமா?” என சிரிப்புடன் கேட்க.. இவானும் அழகாக தலையசைத்தான்..  “ஆமா ஆர்யன்! உன் வேலைய கெடுக்காதே” என அம்ஜத்தும் அதையே சொன்னான்.. திருப்தியான ரஷீத் “இனிய உணவு” என கூறி கிளம்பினான்..  

கரீமா, “இவான்! ஜாலியா வெளிய போலாம்.. அப்புறம் நீ என்ன கேக்குறியோ அது சாப்பிடலாம்..” என சேர்த்து சொல்ல.. இவான் முகத்தில் லேசான புன்னகை.. அதில் மகிழ்ந்து போன ஆர்யன், “என் வேலை சீக்கிரம் முடிஞ்சா நான் போன் செய்றேன்.. நான் வந்து வீட்டுக்கு கூட்டிட்டு வரேன்”.. என சொல்ல கரீமாவும், “அங்க போய் பார்த்துட்டு நானும் கால் செய்றேன்” என்றாள்.. பின் இவானை பார்த்து, “நாம இன்னைக்கு வெளிய போறோம்!” என்று சிரிப்புடன் சொன்னவள் தன் வலது கை திருப்பி மணி பார்த்தாள்.. “பரவால்லயே! அப்பாயின்ட்மென்ட்க்கு இன்னும் நேரம் இருக்கே.. நான் ஒரு வாக்கிங் போயிட்டு வரேன்” என கிளம்பிவிட்டாள்… 

——————-

அர்ஸ்லான் மாளிகையின் கேட் தாண்டி ஒரு சுவரோரம் ஒதுங்கி நின்று ருஹானா உள்ளே எட்டி எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தாள்… காரோடும் பாதையில் நின்ற காரில் ஏற ஆர்யன் வரவும்.. மறைந்து நின்று கொண்டாள்.. ஆர்யன் தன் கருப்பு நிற சொகுசு காரில் ரஷீத்துடன் நகர நகர.. மூச்சை பிடித்துக் கொண்டு சுவரோடு ஒட்டிக் கொண்டாள்.. “ரஷீத்! இருபத்திநாலு மணி நேரத்துல எலக்ட்ரானிக் பொருட்கள்லாம் கொடௌன் போய்டணும்.. எந்த பிரச்சினையும் வரக்கூடாது” என்று எச்சரித்து விட்டு.. மணியை பார்த்தவன் சொன்னான்.. “திறமையான பாடிகார்ட்ஸ் ரெண்டு பேரை இவான் கூட ஆஸ்பிட்டல் அனுப்பு.. கண் சிமிட்டாமல் இருக்கணும்னு சொல்லு”.. பின் நடப்பு தொழில் நிலவரங்களை பேசிக்கொண்டே ஆர்யன் கார் ருஹானாவை கடந்துவிட்டது..  அவன் கார் பின்னே பாதுகாவலர்கள் காரும்  தொடர.. கேட்டில் நின்ற காவலாளிகள் கேட்டை பூட்டிவிட்டு  நகர்ந்து விட்டனர்..  

அதை பார்த்து சிறிது மூச்சு விட்டு கொண்டவள், மாளிகை வாசலுக்கு வந்தாள்.. தைரியத்திற்காக இவான் சங்கிலியைப் பிடித்துக் கொண்டவள், “அல்லாஹ்! எனக்கு உதவி செய்யுங்கள்.. நான் இவானை தூக்கிட்டு போகணும்” என்றபடி உள்ளே நோட்டம் விட்டாள்.. நடைப்பயிற்சி முடித்து திரும்பிய கரீமா வாசலில் கண்டது, தோளில் பையுடன், கனமான குளிர்ஆடைகள் அணிந்து அதற்கும் மேல் ஒரு கருப்பு நிற ஷாலையும் போட்டு, விரித்த கூந்தல் இரு தோள்களிலும் புரள, மிரள மிரள விழித்தபடி அங்கு நின்ற ருஹானாவைத் தான்.. வியப்புடன் “நீயா?” என கேட்க.. ருஹானா அவள் புறம் திரும்பிப் பார்த்தாள்.. 

“கரீமா மேம்! உதவி செய்ங்க.. நான் கெஞ்சி கேட்கிறேன்.. பெண்ணான உங்களுக்கு என்னை புரிஞ்சுக்க முடியும்… இவான் என் அக்கா பையன்.. என் அக்காவோட ஒரு பகுதி, அவன்..” என ருஹானா கெஞ்சினாள்.. அட! கள்ளம் கபடம் தெரியாத சின்ன பெண்ணே! நீ யார்ட்ட பேசிட்டு இருக்க.. உன் அக்காவின் சாவுக்கு காரணமான அரக்கி அவ.. அது உனக்கு தெரியாதது, மிகவும் பரிதாபம் தான்..

கரீமா “எனக்கு புரியுது.. ஆனா..” தயங்க.. 

“நீங்க அவனை பார்த்தீங்க, இல்லையா…  பாவமா இருக்கான்…” 

“டியர்! எனக்கு உனக்கு உதவி செய்த ஆசை தான்.. ஆனா என்னால எதுவுமே செய்ய முடியாது”

“ஒரே ஒரு முறை இவானை பார்க்க எனக்கு அனுமதி கொடுங்க”

“அது நடக்கவே நடக்காது, ருஹானா! என்னை சங்கடப்படுத்தாதே.. இப்படி உன்ன பார்க்கவே பாவமா இருக்கு.. நீ வீட்டுக்கு போ” என்று சொல்லிவிட்டு நடக்க

“கரீமா மேம்! உங்களை கெஞ்சி கேட்கிறேன்.. எனக்கு உதவி செய்யுங்கள்” என அவள் பின்னாடியே ஓடினாள்.. “எனக்காக இல்லை… இவானுக்காக செய்ங்க.. நான் அவன் சித்தி.. அவனுக்கு  அம்மாவும் இல்லை.. நானும் இல்லனா என்ன செய்வான்…?” என கண்ணீருடன் கேட்டாள்..

சில விநாடிகள் யோசித்த கரீமா, “இவான் ரெண்டு மணிக்கு ஹாஸ்பிடல் போவான்..” என்று சொல்ல ருஹானா புரியாமல் பார்த்தாள்.. “அதாவது  ஹாஸ்பிடலுக்கு யார் வேணும்னாலும் வரலாம், போகலாம்… யாரும் யாரையும் பார்க்கலாம்.. மீட்டிங்கு சரியான இடம்” என்று லேசான சிரிப்புடன் சொல்லிவிட்டு அவள் தோளில் தட்டி உள்ளே நடந்துவிட்டாள்.. “நன்றி! நன்றி!” என்று சொல்லி புன்னகைத்தாள் ருஹானா…

——————-

‘டைம் போய்ட்டே இருக்கே.. என்ன செய்ய.. என்ன செய்ய’ என அவள் அறையில் நடந்து கொண்டே யோசித்த கரீமாவுக்கு அங்கிருந்த செடி தொட்டி கண்ணில் பட்டது.. காலையில் அம்ஜத் அதை அங்கே வைத்தது நினைவு வந்தது.. ஒரு குருர சிரிப்புடன் அதை கீழே தட்டி விட்டவள் வரவேற்பு அறைக்கு சென்று விட்டாள்…

————

“ஊசி வலிக்குமா?” இவானை வெளியே செல்ல தயார் செய்து கொண்டிருந்தாள், நானி.. “கொசு கடிச்ச மாதிரி தான் இருக்கும்” குளிர் உணராவண்ணம் கனமான உடைகள், காலணி அணிவித்து விட்டு.. “சரி! வா.. கரீமா மேம்  காத்திருப்பாங்க” என்று இவானை கூப்பிட்டுக் கொண்டு கீழே வந்தாள்.. பலமுறை மேலே பார்த்து கொண்டே நின்ற கரீமா, “அதுக்குள்ள ரெடியாயிட்டீங்களா..” என்று கேட்டபடி நஸ்ரியா கொண்டு வந்த பழச்சாறை குடித்தாள்… ‘இன்னும் ஒன்றும் நடக்கவே இல்லையே?’ என சுற்றும் முற்றும் பார்த்தவள்.., ‘கைப்பையில் எல்லாம் இருக்கிறதா’ என்று நேரம் கடத்தினாள்.. “சரி, நாம போகலாம்” என்று பையைத் தோளில் மாட்டிக்கொண்டு கிளம்பும்போது மேலே இருந்து சத்தம் கேட்டது… 

உள்ளே எழுந்த பூரிப்பை அடக்கிக்கொண்டு அமைதியாக மேலே பார்க்க… “இல்ல! இல்ல!! இல்ல!! என் செடி!!!” என அலறும் அம்ஜத் சத்தம் அவள் அறையிலிருந்து கேட்டது… சாரா ஓடிவந்து, “கரீமா மேம்! அம்ஜத் சாருக்கு உடம்பு சரியில்ல” என கூப்பிட “அடடா இப்ப பார்த்தா அட்டாக் வந்துடுச்சு? என்ன செய்றது? நான் இல்லாம அம்ஜத் அமைதியாக மாட்டாரே!” என நடித்தாள்… நானி தானே தனியாக இவானை கூட்டி செல்வதாக கூறினாள்..

அதற்குள் மேலிருந்து அம்ஜத் “கரீமா!!” என்றழைக்க… “சரி நீ போய்ட்டு வா.. நான் செக்யூரிட்டிட்ட சொல்றேன்… பத்திரம்… ஜாக்கிரதையா கூட்டிட்டு போயிட்டு வா” என்று கரீமா மேலே செல்ல… இவான் நானியுடன் மருத்துவமனை கிளம்பினான்… கரீமா சந்தோஷமாக, “குட்பை”… என்று சொல்லி.. வரவழைக்கப்பட்ட பதட்டத்துடன் மேலே சென்றாள்..

 

————————

மருத்துவமனையில்  இரு பாதுகாவலர்களுடன், நானி கை பிடித்து இவான் வருவதை பார்த்து கொண்டிருந்தாள், ஒரு தூணுக்குப் பின்னே மறைந்திருந்த ருஹானா… உள்ளே டாக்டர் இவானை பரிசோதித்துக் கொண்டு இருக்க.. பூட்டிய கதவின் முன்னே நின்றுருந்த இரண்டு மெய்காப்பாளர்களும், “லாக்  செஞ்சி தானே  இருக்கு.. அதுக்குள்ள போய் டீ குடிச்சிட்டு வரலாம், வா” என்று நகர ‘இதுதான் தருணம்’ என அங்கே வந்த ருஹானா பக்கத்தில் இருந்த எமர்ஜென்சி சுத்தியை உடைத்து எடுத்து, பூட்டையும் உடைத்து உள்ளே சென்றாள்… 

அங்கே பரிசோதனை முடிந்து டாக்டர் சென்று இருக்க… இவானுக்கு நானி மேல்கோட்டை போட்டுவிட்டு தலையில் குல்லாவை மாட்டிக்கொண்டு இருந்தாள்.. ருஹானாவை பார்த்ததும் இவான், “சித்தி!” என்று பரவசமாக அழைக்க.. “என் செல்லமே” என அவனை கட்டி பிடித்தவள் அவனை தூக்கி தோளில் போட்டுக் கொண்டாள்… அதிர்ந்த நானி, ”மேம்! என்ன செய்றீங்க?” என  பின்னாடி ஓடி வர அவளை அறையில் வைத்து பூட்டிவிட்டு குழந்தையைத் தூக்கிக் கொண்டு ஓட்டம் பிடித்தாள்.. “கதவை திறங்க” என்று நானி கத்திய கத்தல் கேட்ட பின்னே சுதாரித்த காவலர் இருவரும் ஓடி வர… ருஹானா நேரே வெளியே போகாமல்  கார் பார்க்கிங்க்கு ஓடினாள்… 

அங்கே ஒளிந்து, போக்குக்காட்டி, துரத்தியவர்களின் கண்களில்  மண்ணைத் தூவி வெளியே வந்தாள்…  இவளை  தேடியபடி அவர்கள் வேறு பக்கம் செல்வதை பார்த்து நிம்மதி அடைந்தவள்…  வெளியே வந்து பாதுகாப்பான ஓரிடத்தில் அவள் வைத்த  சூட்கேசை எடுத்தவள், இவானை  ஆசையுடன் அணைத்துக் கொண்டாள்.. “இனி நீ என் கூடத்தான், இவான்… நாம பிரியவே மாட்டோம் என்னுயிரே! பிரியவே மாட்டோம்”.. என ஆனந்த கண்ணீருடன் சொல்லி, “நல்ல இடத்துல மறைச்சி வச்சிருக்கேன்ல” இவானை பார்த்து சிரித்தாள்..   

சூட்கேசை பார்த்ததும் சின்னக் குட்டி கேட்டான்.. “எங்க போறோம், சித்தி?” அவன் கைகளை பிடித்து கொண்டு “தூரமா போக போறோம், என் கண்ணே.. அந்த இடம் உனக்கு ரொம்ப பிடிக்கும்.. அங்க ஓடுற அழகான நதியை நீ ரசிப்ப.. பச்சை பள்ளத்தாக்கு இருக்கும்… பெரிய பெரிய மரங்கள் இருக்கும்…” என சித்தி அடுக்கிக் கொண்டே செல்ல.. அவள் செல்ல குட்டி கேட்டான்.. “ஆட்டுக்குட்டி இருக்குமா, அங்க?”… 

“நிச்சயமா.. வெள்ளாடு, குட்டி ஆடுங்க எல்லாம் இருக்கும்” என சொல்லிக் கொண்டே வந்தவளுக்கு திடீரென ஒரு சந்தேகம் தோன்ற… “இவான்!” என அவனை கிட்டே இழுத்தவள்… “என்கூட அங்க வரதுக்கு உனக்கு விருப்பம் தானே?” என மெதுவாக கேட்டாள்.. அவன் சிரித்துக்கொண்டே வேகமாக பல முறை தலையாட்ட..  அவளும் சந்தோஷமாக அவனை கட்டிக்கொண்டாள்…

“வா வா சீக்கிரம் போலாம்.. கொஞ்ச நேரம் தான் இருக்கு, ட்ரெயின் கிளம்ப..”

“நம்ம ட்ரைன்ல போறோமா?” சந்தோஷம் கொப்பளித்தது சிறுவனின் முகத்தில்… “!ஆமா அன்பே!” அவள் சொல்ல.. இன்னும் அறிய வேண்டியிருந்தது குழந்தைக்கு… ‘சீக்கிரம் கிளம்புங்களேன்..’ என்றிருந்தது, நமக்கு… ஆனால் இவான் கேட்டான்.. “அது பெரிய ட்ரைனா?” முதுகில் சிறிய பையை மாட்டிக்கொண்டு.. அவனை ஒரு கையிலும், பெட்டையை மறு கையிலும் பிடித்துக் கொண்டு நடந்தவாறே  பதில் சொன்னாள், சிரிப்புடன்… “ஆமா இவான்! அது பெரிய ட்ரைன் தான்… நிறைய கேரேஜ் இருக்கும்”

“சித்தப்பா எப்போ வருவாங்க?” என அவன் குண்டை தூக்கி போட.. அவள் முகத்திலிருந்த சிரிப்பு மறைந்தது… சடாரென நின்றவள், “நமக்கு லேட்டாயிடுச்சு.. நாம முதல்ல போகலாம்.. சித்தப்பா பின்னாடி வருவாங்க.. சரியா?” என்று கேட்டுக்கொண்டே இவானுடன் நடக்க ஆரம்பித்தாள்.. கவனமாக சுற்றுமுற்றும் பார்த்தபடி பின்பக்கமும் பார்த்தபடி அவள் வேகநடை நடக்க…. அவள் வேகத்திற்கு ஈடாக சிறுவன் ஓடிவந்தான்.. “இங்கே டாக்சி ஸ்டேஷன் இருக்கும்… நம்ம டாக்சி எடுக்கலாம்” என்று வலது பக்க சாலையில் வாடகை காரை தேடியவண்ணம் கூறினாள்.   

அப்பொழுது கருப்பு நிற டொயோட்டா செக்வயா கார், வேக தடை மேலே ஏறி இறங்கி… மெதுவாக அவர்கள் முன்னே வந்து நின்றது… காரின் முன்னாலிருந்து ரஷீத் இறங்கி முன்புறம் நிற்க… பாடிகார்ட் பின்கதவை திறக்க… ஆர்யன் இறங்கி அவள் மீது கண்ணெடுக்காமல் இவர்களை நோக்கி நடந்து வர ஆரம்பித்தான்… அவனை பார்த்து திக்பிரமை அடைந்த ருஹானா என்ன செய்வது என்று புரியாமல் இவானின் கையை பிடித்தப்பிடியை இறுக்கி கொண்டாள்.. சித்தப்பாவை பார்த்ததும் முகத்தில்  சந்தோஷ கீற்று உதயமாக இவான், சித்தியை நிமிர்ந்து பார்த்தான்… அவளோ வானம், தரை என பார்வையை திருப்பி.. வேட்டையாட வரும் சிங்கம் போல் மெல்ல நடந்து வரும் ஆர்யனை மேலும் கீழும் பார்த்தாள்… ரஷீத், பாதுகாவலர்கள் இருவர் பின்தொடர அவள் முன்னே சாலையின் நடுவே வந்து நின்றவன் முகத்தில் கோபம் மையம் கொள்ள… கண்ணில் எரிமலை வெடிக்கவா என்றிருந்தது… 

பச்சைக்கிளியின் பயணம்

மலர் வனத்தை நோக்கியே

அக்னி சிறகுடன் பறந்திட முனைந்திட!

தீப்பறவை பாதுகாக்கும் சிறகு

அதை விட்டு விலகிட விழைந்திட!

பாவம் கிளி எதிர் கொண்டதோ

செந்தீ பறவையை!!!!

(தொடரும்)