அத்தியாயம் 04
“இரண்டு மாசத்துக்கு முன்னாடி வராத திருவிழாவுக்கு, உன் அப்பங்காரன் நேற்று பேசும்போதும் கூட திட்டுறான் டா” ராகவனோடு கைபேசி வழியாக பேசிக்கொண்டிருந்த அவன் சித்தப்பா சிதம்பரம் அங்கலாய்த்து கொண்டார்.
“வந்து தலையை காட்டிட்டு போயிடுங்க. இல்லைன்னா உங்க அண்ணன் ங்குற புயல் கரையைக் கடக்க பலமாசங்கள் ஆகும்னு, நான் தான் சொன்னேன்ல சித்தப்பூ…” என்று அட்டகாசமாக சிரித்த ராகவன்,
“உங்களுக்காவது அர்ச்சனை ஃபோன் மூலமா கிடைச்சது. ஆனா, அத்தை நேற்று நேர்ல வந்துல்ல வாங்கிட்டு போறாங்க” என்றான் மாறாத சிரிப்போடு.
குமாரசாமியின் உடன் பிறந்தது இரண்டு பேர். அவருக்கு அடுத்தது கஸ்தூரி என்ற பெண். அவரை பக்கத்து ஊரில் நல்ல முறையில் திருமணம் செய்து கொடுத்திருக்கிறார் குமாரசாமி. ஆண் ஒன்று, பெண் ஒன்று என இரண்டு பிள்ளைகள் கஸ்தூரிக்கு இருக்கிறார்கள்.
அடுத்தது சிதம்பரம். குமாரசாமிக்கும் சிதம்பரத்திற்கும் பத்து வயது வித்தியாசம். சிதம்பரம், அரசு வருமானவரித் துறையில் நல்ல பதவியில் இருக்கிறார். அவர் மனைவி ஜானகி, ஆசிரியை. இரண்டு பேருமே பணி நிமித்தம் சென்னையில் இருக்கிறார்கள். முறையே பத்து, எட்டு வயதில் இரண்டு பெண் குழந்தைகள் இந்த தம்பதியினருக்கு உண்டு.
குமாரசாமியின் வாலிப வயதில் தாயும், தகப்பனும் தவறிவிட, குடும்ப பொறுப்பைத் தயங்காமல் தன் தோள்களில் தாங்கி, உடன்பிறப்புகளை ஆளாக்கி, இருவருக்கும் திருமணம் நடத்தி வைத்தது அவர் தான். ஆக, அந்த தம்பிக்கும் தங்கைக்கும் அண்ணன் என்ற பெயரில் இருக்கும் அப்பா தான் குமாரசாமி.
அதற்காகவெல்லாம் உடன்பிறந்தவர்களிடம் குமாரசாமி கொஞ்சி வழிவார் என்றெல்லாம் கிடையாது. அவர்களிடமும், அதே முசுட்டு முனுசாமி தான்.
இதோ நேற்று கூட, “பிறந்த ஊர்ல நடக்குற திருவிழாவிற்கு வரமுடியாத அளவுக்கு பெரிய மனுஷன் ஆகிட்டீங்களோ? எவ்வளவு உயரத்துக்கு போனாலும் வேரை மறக்கக்கூடாது டா” என்று, திருவிழா முடிவடைந்த இரண்டு மாதங்களுக்குப் பிறகும் தம்பியை ஒருபிடி பிடித்திருக்கிறார் குமாரசாமி. அதைக்கொண்டே சிதம்பரம் தன் அண்ணன் மகனிடம் புலம்புவது.
“திருவிழாவுக்கு வரணும், கரகாட்டம் பாக்கணும்னு எவ்வளவு ஆசையா இருந்தேன் தெரியுமா ராகவா? ம்ப்ச்… கடைசி நேரத்துல முக்கியமான வேலை வந்து எல்லாத்தையும் சொதப்பிடிச்சி” என்று அலுத்துக் கொண்டார் சிதம்பரம்.
“எதே… கரகாட்டம் பாக்கவரணும்னு நினைச்சீங்களா? இந்த விஷயம் சித்திக்கு தெரியுமா சித்தப்பூ?” குறும்பாக கேட்ட ராகவனுக்கு, கரகாட்டம் என்றதுமே மலர்விழியின் ‘மலர்முகம்’ ஞாபகம் வந்தது. கூடவே, திருவிழா முடிந்த அன்று காலையில் அம்மா பேசியதும் ஞாபகத்துக்கு வந்தது.
ஆமாம்… திருவிழா முடிந்த அன்று காலையில் ராகவனின் தம்பியும், தங்கையும் எப்போதும் போல பள்ளி, கல்லூரிக்கு என்று கிளம்பி சென்றிருந்தார்கள். ராகவன் தன்னுடைய பைக்கிலேயே கல்லூரிக்கு செல்வதால், பதட்டமின்றி அக்கா ஆனந்தியோடு அமர்ந்து காலை உணவை உண்டு கொண்டிருந்தான். ஆனந்தி இன்னும் சிலநாட்கள் தாய் வீட்டில் தங்கிவர ஆசைப்பட்டதால், அவள் கணவன் மாதவன் மட்டும் ஊருக்கு கிளம்பி சென்றிருந்தான்.
தன் பிள்ளைகள் இருவருக்கும் பார்த்துப் பார்த்து பரிமாறியபடி இருந்த தெய்வானை, “இனிமே அப்பா இப்பிடி வேலை ஏவுனா, என்னால முடியாதுன்னு தயங்காம சொல்லிடணும் ராகவா” என்றார் மகனிடம்.
தாயின் பேச்சில் தலையும் புரியாமல் வாலும் புரியாமல், “என்ன ம்மா சொல்லுறீங்க?” என்று, யோசனையோடு கேட்டான் மகன்.
“அதான்… அந்த ஆட்டக்காரியை ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போகச் சொன்னாரே, அதைத்தான் சொல்லுறேன்” என்றார் தெய்வானை முகத்தை சுழித்தபடி.
தாயின், ஆட்டக்காரி என்ற அலட்சியமான பேச்சில், “ம்மா… ஒருத்தங்க தொழிலை வச்சி, அவங்களை அலட்சியமா பேசாதீங்க” என்றான் மகன் கண்டிப்பான குரலில்.
“இங்க, நீ அம்மாவா? இல்ல, நானா டா?” நான் சொல்லுறதை கேட்டு சரின்னு தலையாட்டுறதை விட்டுட்டு, எனக்கு பாடம் எடுக்க முயற்சி செய்யுற?” மகனிடம் கோபம் காட்டினார் தெய்வானை.
“தப்பை யார் வேணும்னாலும் சுட்டிக் காட்டலாம் ம்மா” என்றான் ராகவன்.
“நான் மட்டும் இல்ல, இந்த ஊர்ல உள்ள எல்லோருமே ஆட்டக்காரின்னு தான் சொல்லுவாங்க. அவங்க எல்லாரையும் திருத்தப் போறியா நீ?” என்றார் தெய்வானை.
“அடுத்தவங்க செய்யுற தப்பையே, நாமளும் செய்யணும்னு என்ன ம்மா இருக்கு? கரகாட்டம் ஒரு கிராமியக்கலை. கால மாற்றத்துல அதுவும் மாறி நிக்குது. அதுக்காக அந்த தொழில்ல இருக்குறவங்களை நீங்க அலட்சியமா பேசுவீங்களா?” என்ற ராகவன்,
“விவசாயத்தையே எடுத்துக்கோங்க. நம்ம பூட்டன் காலத்துல செய்த மாதிரியா நாம இப்போ விவசாயம் செய்யுறோம்? மொத்தமும் மாறிப்போய் நிக்குதுல்ல? அதுக்காக நாம செய்யுறது விவசாயம் இல்லைன்னும், நாம விவசாயி இல்லைன்னும் ஆகிடுமா?”
“அப்பிடித்தான் இந்த கரகாட்டகலையும் தன்னோட சுயத்தை இழந்து நிக்குது. அதைத் தவிர வேற தொழில் தெரியாதவங்க, அதோட சேர்ந்து ஓடிட்டு இருக்காங்க. விவசாயத்தை எப்படி பழைய மாதிரி இயற்கை விவசாயமா மாற்ற முயற்சி செய்யுறமோ, அதேபோல, இந்த மாதிரி நாட்டுப்புற கலைகளையும் அதன் பழமை மாறாமல் மீட்டெடுக்கணும். அதை விட்டுட்டு அந்த தொழில்ல இருக்குறவங்களை மரியாதைக் குறைவா பேசக்கூடாது” என்றான் ராகவன்.
ராகவன் பேச, பதிலுக்கு தெய்வானை பேச என்று நீண்டு கொண்டே சென்ற வாக்குவாதத்தை, கடைசியில் ஆனந்தி தான் தலையிட்டு சமரசம் செய்துவைக்க வேண்டியதாயிற்று.
“ஹலோ மகனே… லைன்ல இருக்கியா டா?” சித்தப்பாவின் சத்தத்தில், “ஹ்ம்ம்… சொல்லுங்க சித்தப்பூ” என்றான் ராகவன்.
சித்தப்பனின் தோளிலும் மார்பிலுமாக ராகவன் வளர்ந்ததாலோ என்னவோ, இருவருக்குள்ளும் அப்பா, மகன் என்ற உறவைத் தாண்டி நல்ல நட்பு இருந்தது. அதனால் இருவரின் பேச்சும், கேலியும் கிண்டலுமாகத் தான் இருக்கும்.
“அப்புறம், எம்எஸ்ஸி முடிச்சதும் என்ன பண்ணலாம்னு உத்தேசம் ராகவா?” பேச்சை அண்ணன் மகனின் படிப்பு பக்கமாக திருப்பினார் சிதம்பரம்.
“மொதல்ல நெட் எக்ஸாம் (NET) கம்ப்ளீட் பண்ணி, காலேஜ்ல வேலைக்கு சேரணும் சித்தப்பா. அப்புறம், அப்பிடியே பிஹெச்டி பண்ணனும்” என்றான் ராகவன்.
“ம்ம்… நல்ல ஐடியா. இந்த பக்கமா வர்றியா? நான் காலேஜ் ஏற்பாடு செய்யுறேன்.” அக்கறையாக கேட்டார் சிதம்பரம்.
“ஐயையோ… அப்புறம், உங்க அண்ணாத்த வாயில தினமும் விழுந்து எழும்பாம, எங்கம்மாவை யார் காப்பாத்துவா?” என்று சிரித்த ராகவன்,
“எக்ஸாம் க்ளீயர் பண்ணு, பாத்துக்கலாம்னு எங்க டிபார்ட்மெண்ட் ஹெச்ஓடி சொல்லியிருக்கார் சித்தப்பா. அப்பிடி முடியலைன்னா உங்ககிட்ட தான் வருவேன்” என்றான்.
“சரிடா, இப்பயிருந்தே எக்ஸாம் க்கு தேவையான ஸ்டடி மெட்டீரியஸ்ஸை கலெக்ட் பண்ண ஆரம்பிச்சிடு. கிடைக்காததை சொல்லு, நான் வாங்கிட்டு வரேன்” என்றவர், அரசாங்க தகுதித் தேர்வை எதிர்கொள்வது எப்படி என்று குறிப்புகளை கொடுக்க ஆரம்பித்தார்.
கவனமாக கேட்டுக்கொண்ட ராகவன், பேச்சு முடியும் தருவாயில், “உங்க அண்ணன் வர்றாப்ல, பேசுறீங்களா சித்தப்பூ?” என்று கேலியாக கேட்டான்.
“அடுத்த ரௌண்ட் திட்டு வாங்க, என்னோட உடம்புல தெம்பில்லைடா மகனே, நீங்க ஃபோனை வச்சிடுங்க” என்று சிதம்பரம் அவசரமாகச் சொல்ல, இருவரும் சிரித்தபடியே அழைப்பை துண்டித்துக் கொண்டார்கள்.
“உன் ஆளு போன் பண்ணிச்சுதாடா?” கல்லூரிக்கு பைக்கில் சென்று கொண்டிருந்த ராகவனின் பின்னால் அமர்ந்திருந்த அவனுடைய நண்பன் செந்தில் கேட்டான்.
செந்தில், ராகவனின் வகுப்புத் தோழன். ஆழ்வார்க்குறிச்சிக்காரன். பெரும்பாலும் இருவருமாக சேர்ந்து தான் கல்லூரிக்கு செல்வது வழக்கம்.
“என் ஆளா? யாரை டா சொல்லுற?” சாலையில் கவனத்தை பதித்தபடியே கேட்டான் ராகவன்.
“அதான்… அந்த டான்ஸரைத் தான் சொல்லுறேன்” என்றான் செந்தில். மலர்விழியைப் பற்றி, நண்பனிடம் சொல்லியிருந்தான் ராகவன். அதனாலேயே இந்த விசாரணை.
“அந்த புள்ள என் ஆளா? லூஸு மாதிரி பேசாதடா” என்று அதட்டினாலும், “பரீட்சை முடிஞ்சு ரிசல்ட்டும் வரப்போகுது. இதுவரைக்கும் ஃபோன் பண்ணலை. ஒருவேளை அவங்க வீட்டிலேயே படிக்க வைக்கிறேன்னு சொல்லிட்டாங்களோ என்னவோ?” என்றான் ராகவன் சந்தேகமாக.
பின்னர் அவனே, “இல்ல… அப்படி ஒண்ணு நடக்க சான்ஸே இல்ல” என்றான் தலையை அங்குமிங்கும் ஆட்டியபடி.
“அந்த புள்ள மட்டும் படிச்சான்னா, வாழ்க்கைல நல்ல நிலைமைக்கு போய்டுவா. அந்த அளவுக்கு திறமை இருக்கு அவகிட்ட. ஆனா, அவளுக்கு இஷ்டமில்லாத ஃபீல்டுல தள்ளப் பாக்குறாங்க. சுயநல மனுஷங்க” என்ற புலம்பலோடே வண்டியை ஓட்டிக்கொண்டிருந்தான் ராகவன்.
“உன் ஃபோன் நம்பரை கொடுத்த அறிவாளி, அந்த பொண்ணோட நம்பரையும் வாங்கி இருந்தா, இப்பிடி பொலம்ப வேண்டி இருக்காதுல்ல” என்றான் செந்தில்.
“அதெப்பிடி டா? கொஞ்ச நேரம் பழகிட்டு உடனே ஃபோன் நம்பர் தான்னு கேட்டா, அந்த பொண்ணு பயந்துக்காதா? அதுவும் இல்லாம, அவகிட்ட ஃபோன் இருக்கும்னு எனக்கு தோணலை” என்றான் ராகவன்.
“நீ சொல்றதை வச்சி பாத்தா, அந்த புள்ளையோட நிலமை பரிதாபம் தான். இப்போ என்னடா பண்ணலாம்?” என்று யோசித்த செந்தில், “பேசாம உங்க அப்பாகிட்ட அந்த பிள்ளையோட மாமன் ஃபோன் நம்பரை வாங்கிடு” என்றான்.
“ஹாங்… அப்புறம்…” கேலியாக இழுத்தான் ராகவன்.
“அப்புறம் என்னடா? அந்த மலர் கிட்ட நேரடியாவே பேசிடலாமே.”
“ஏன்? நான் நல்லா இருக்குறது உனக்கு பிடிக்கலையா?” கிண்டலாக கேட்ட ராகவன், “எங்கப்பாவைப் பத்தி தெரிஞ்சிகிட்டே இப்பிடி ஒரு ஐடியாவை குடுக்குறியே டா?” என்று அலுத்துக் கொண்டான்.
“அப்போ, என்ன தான் டா இதுக்கு வழி?” என்று செந்தில் கேட்க, “தெரியவில்லை” என்பது போல தோள்களைக் குலுக்கிய ராகவன், மத்தளம்பாறை வந்ததும், “ஒருநிமிஷம், அக்கா வீட்டுக்கு போய்ட்டு வந்துடலாம்” என்று ஆனந்தியின் வீட்டுக்கு முன் கொண்டுவந்து வண்டியை நிறுத்தினான்.
அவ்வப்போது இது நடப்பது தான். எனவே, பைக் அருகிலேயே செந்தில் நின்று கொண்டான். ராகவன், பைக்கின் சைட் ஹேங்கரில் தொங்கவிட்டிருந்த பையை எடுத்துக்கொண்டு அக்கா வீட்டுக்குள் நுழைந்தான்.
அவனுக்காகவே ஹாலில் காத்துக் கொண்டிருந்தாள் ஆனந்தி. அவளின் ஏழுமாத வயிறு, இப்போது நன்றாகவே மேடிட்டிருந்தது. தன்னைக் கண்டதும் முகம் மலர வரவேற்ற தமக்கையிடம், “க்கா… அம்மா பால் கொழுக்கட்டை தந்துவிட்டாங்க” என்று கையிலிருந்த பையைக் கொடுத்தான் ராகவன். ஆசையோடு வாங்கிக் கொண்டாள் ஆனந்தி.
அந்த நேரம் அங்கே வந்த ஆனந்தியின் மாமியார், “இதுக்காகத் தான் காலைலயிருந்தே ஹால்ல குடியிருக்கிறியா?” என்று நக்கலாக மருமகளிடம் கேட்டவர்,
“சின்ன பசங்ககிட்ட இப்பிடி குடுத்து விடுறதுக்கு பதிலா உங்கம்மாவே கொண்டுவந்து தந்துட்டு, உன்னைப் பாத்துட்டு போலாம்ல. பழக்க வழக்கம் ஒண்ணும் தெரியிறதில்ல, இதுல பெரிய்ய்ய… நாட்டாமை குடும்பம்னு வேற சொல்லிக்கிறது” என்றும் நொடித்துக் கொண்டார்.
என்ன செய்தாலும் குறைசொல்லும் அந்த பெண்மணியின் வார்த்தைகளில் ராகவனுக்கு எப்போதும் போல கோபம் வந்தது. அடக்கிக்கொண்டு, அக்காவின் முகத்தை பார்த்தான். அங்கோ, எதுவும் பேசிவிடாதே என்ற வேண்டுகோள் இருந்தது.
பல்லைக் கடித்து தன் கோபத்தை பொறுத்துக் கொண்டவன், அக்காவின் நலனை விசாரித்துவிட்டு, விடைபெற்றுக் கொண்டான். மறக்காமல் அந்த பெண்மணியிடமும் சொல்லிவிட்டே கிளம்பினான். இல்லையென்றால் அதற்கும் ஒரு பஞ்சாயத்து அக்காவிடம் ஓடும் என்று அவனுக்கு தெரியும்.
அப்போது, அங்கே வந்த ஆனந்தியின் கணவன் மாதவன், “என்ன மாப்பிள்ள… கிளம்பியாச்சா?” என்று கேட்க, நின்று அவனை அதிருப்தியாகப் பார்த்தான் ராகவன்.
“இரண்டு குடும்பத்துக்கு இடையில் ஒரு புரிதல் வர்றவரைக்கும் இப்பிடி தான் மாப்ள இருக்கும். கொஞ்சம் எனக்காக பொறுத்துக்கோ.” ராகவனின் தோளில் கை போட்டுக்கொண்டு அவனுடன் சேர்ந்து நடக்க ஆரம்பித்த மாதவன் மெல்லியக் குரலில் சொல்ல,
“இப்பிடியே நல்லா கொம்பு சீவி விடுங்க. என்னைக்காவது ஒருநாள் கூர் பார்க்க நம்மளையே குத்தும் போதுதான், மொதல்லயே தட்டி வச்சிருக்கணும்னு புரியும்” என்ற ராகவன், அக்கா கணவனின் கோபப்பார்வையில், தோள்களைக் குலுக்கியபடி நண்பனோடு வண்டியில் ஏறி சென்றுவிட்டான்.