அத்தியாயம் 03
மாயனும், பரமேஸ்வரியும் தங்கள் தொழிலில் உச்சத்தில் இருந்த நேரம் தங்கள் பெண்பிள்ளை மீது வைத்த கவனத்தை, ஆண்பிள்ளை தானே என்ற அலட்சியத்தால் மகன்மீது வைக்கத் தவறினார்கள்.
அந்த தம்பதியருக்கு தங்கள் தவறு புரிந்த போது, அவர்கள் மகனோ திரும்பி வரமுடியாத பாதையில், நெடுந்தூரம் பயணம் செய்திருந்தான்.
ஆமாம்… பதின்ம வயதிலேயே எல்லா கெட்ட பழக்கங்களுக்கும் அடிமை ஆகியிருந்தான் சந்திரன்.
படிப்பு அவனுக்கு எட்டிக்காயாக கசந்தது. மகனின் எதிர்காலம் மிரட்ட, வேறுவழியில்லாமல், இளம்வயதிலேயே தங்கள் தொழிலில் மகனை இறக்கி இருந்தார்கள் அந்த கரகாட்ட தம்பதியினர்.
சந்திரனின் பெற்றோர்கள் அந்த கலையை அவர்களின் தொழிலாக பார்க்க, அவனோ, தன்னுடைய இச்சையின் வடிகாலாக பார்த்தான்.
ஆமாம்… உடன் ஆடும் பெண்களோடு நடனம் என்ற பெயரில் அத்துமீறி நடக்க ஆரம்பித்தான் சந்திரன்.
மகனின் நடவடிக்கைகள் புரிந்தாலும், அவனை விட்டுக்கொடுக்க முடியாமல், அவன் தவறுகளுக்கு மறைமுகமாக துணை போனார்கள் மாயன் தம்பதியினர்.
அங்கே இங்கே என்று அலைபாய்ந்த சந்திரனின் மனதும், கண்களும், ஒருகட்டத்தில், பிறந்தது முதலே தன்வீட்டில் வளர்ந்து வரும் அழகுப் பதுமையான அத்தை மகள் மலர்விழி மீது நிலைகொண்டது.
மலர்விழியின் தாயும், மாயனின் தங்கையுமான காமாட்சியும், தன்னுடைய இளமைக்காலத்தில் கரகாட்டத்தில் கொடிகட்டி பறந்தவரே. அவரின் அழகுக்கும், ஆட்டத்திறமைக்கும் திருவிழா காலங்களில் இடைவிடாது நிகழ்ச்சிகள் இருந்து கொண்டே இருக்கும்.
அந்த தங்கமுட்டையிடும் அழகுமயிலை பொக்கிஷமாக மாயனும் அவன் மனைவியும் பாதுகாத்து வந்தார்கள். ஆனால், அவர்களின் பாதுகாப்பு வளையத்தையும் தாண்டி, நிகழ்ச்சிக்கு சென்ற இடத்தில் பெரிய இடத்து பையன் வீசிய காதல் வலையில் சிக்கிக் கொண்டார் காமாட்சி.
இருவரிடமும் காதல் காட்டாற்று வெள்ளமாக கரைபுரண்டு ஓடியதில், உடன் இருப்பவர்களின் கண்களில் மண்ணையள்ளித் தூவிவிட்டு, வெளியிடங்களில் சந்தித்து காதல் ராகம் மீட்டிக் கொண்டார்கள். விளைவு, அந்த பெரிய இடத்தின் வாரிசு, காமாட்சியின் வயிற்றில்.
காமாட்சியின் கர்ப்பத்துக்கு காரணமானவனுக்கு காதலியை கைப்பிடிக்க சம்மதமே. ஆனால், அவன் பெற்றோர், உற்றோர் என்று அத்தனைபேரும், ஒரு கரகாட்டக்காரியை திருமணம் செய்வதா என்று போர்க்கொடியை உயர்த்தினார்கள். அவர்களை எதிர்த்து நிற்க துணிவின்றி, எல்லைமீறி பழகிய காதலியை உதறிடத் துணிந்தான் அந்த கோழை.
காமாட்சி, தன் காதலனை கைப்பிடிக்க எவ்வளவோ போராடியும், அவர்களின் பணத்துக்கும், அதிகாரத்துக்கும் முன், எல்லாம் ஒன்றுமில்லை என்றாகிப் போனது. அதுவுமில்லாமல், ஒருகை தட்டி ஓசை எழும்பிவிடுமா என்ன?
தங்கை கூடவே நின்று, அவள் வாழ்க்கைக்காக போராட வேண்டிய தமையனோ, அந்த பணக்காரர்கள் வீசிய எலும்புத் துண்டை பொறுக்கிக்கொண்டு, தன்குடும்பத்தோடும், தங்கையோடும் ஊரையே காலி செய்து, திருநெல்வேலி பக்கமாக ஒதுங்கிவிட்டான்.
இது எதுவும் தெரியாமல், தன் அண்ணனின் கட்டுப்பாட்டுக்குள் இருந்திருந்தால், தனக்கு இந்தநிலை நேர்ந்திருக்காதே என்று மறுக்கிப்போனார் காமாட்சி.
ஆனால், அண்ணன்காரன் எத்தனையோ சொல்லியும், தன் வயிற்றில் தன்னை நம்பி வந்த உயிருக்கு முடிவுரை எழுத மட்டும் காமாட்சி சம்மதிக்கவே இல்லை.
காதலித்தவன் சந்தர்ப்பவாதியாக இருந்தாலும், நான் கொண்டது உண்மைக் காதல் என்று சொல்லி, தன் மழலையைப் பெற்றெடுத்து மலர்விழி என்று பெயரும் வைத்து விட்டார் காமாட்சி.
அதன் பிறகு தன் மொத்த வாழ்க்கையையும் மகளுக்காக ஒரு அர்ப்பணிப்போடு வாழத்தொடங்கியவர், இன்னொரு ஆணை தன்னுடைய வாழ்க்கையில் நுழையவே அனுமதிக்கவில்லை.
தன் மகளுக்கும் தனக்குமான பாதுகாப்பு தன் அண்ணனின் நிழல் மட்டுமே என்று உள்ளத்தில் பதியவைத்துக் கொண்டவர், மகளுக்கும் அந்த உணர்வை சிறுவயதிலிருந்தே ஊட்ட ஆரம்பித்தார்.
கண்மூடித்தனமான தன் அன்புக்கு, அண்ணனும் கூட அருகதையானவன் இல்லை என்ற உண்மை அந்த அப்பாவிக்கு தெரியவே இல்லை.
அவர் பெற்ற மகளுக்கு அது புரிந்தபோதோ, அந்த அப்பாவி அன்னை கொடூரமான நோயின் பிடியில். ஆமாம்… கர்பப்பை புற்றுநோய் முற்றிய நிலையில் தெரியவந்து, சிகிச்சை பலனளிக்காமல் இப்போது வாழ்க்கையின் கடைசி நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறார் அந்த பெண்மணி.
இப்படியொரு சூழ்நிலையில், தன் மகளை பாதுகாப்பில்லாத கரங்களில் விட்டுச் செல்லப் போகிறோம் என்ற மனச்சுமையை தாய்க்கு தர மனமின்றி, நடக்கும் அனைத்தையும் பொறுத்துக் கொண்டு அமைதிகாத்து வருகிறாள் மலர்விழி.
ஆமாம்… தன்னை சந்திரனுக்கு மணமுடித்து, அவனுக்கு ஜோடியாக கரகாட்ட தொழிலில் நுழைய வைத்துவிட வேண்டும், என்று மாமனும், அவர் மனைவியும் பேசிக் கொண்டிருந்ததை, எதேட்சையாக மலர்விழி கேட்க நேரிட்டது.
தன்னுடைய எதிர்கால ஆசை வானளவிற்கு உயர்ந்திருக்க, தன்னை கரகாட்டம் என்ற குடுவைக்குள் அடைக்க முயலும் திட்டத்தை கேட்டு அதிர்ந்து போனாள் மலர்விழி. அதுவும் மாமன் மகனோடு ஒரு மணவாழ்க்கையை, ஐயோ… அவளால் யோசித்து பார்க்கவே முடியவில்லை.
சமீபகாலமாக துகிலுரியும் அவன் பார்வைகளும், அருவருப்பான பேச்சுக்களும், அவன் மீது ஒரு ஒவ்வாமையைத் தான் மலர்விழிக்கு உண்டாக்கியிருந்தது.
இருந்தாலும், ‘என்னை மீறி எதுவும் நடந்துவிட முடியாது’ என்ற நம்பிக்கையில், தாயை கலவரப்படுத்தாமல் அமைதியாக, ஆனால் படுகவனமாக வலம் வந்து கொண்டிருக்கிறாள் மலர்விழி.
ஏதாவது செய்து மலர்விழி, சந்திரன் திருமணத்தை அப்போதே நடத்தி விடலாம் என்றால், இன்னமும் மலருக்கு பதினெட்டு வயது முடியவில்லை. பள்ளிக்கு செல்லும் பிள்ளை. அதனால் தங்களுக்கு பிரச்சினை எதுவும் ஏற்பட்டு விடக்கூடாது என்ற பயம் மாயனுக்கும் அவன் மனைவிக்கும் இருக்கிறது.
அதேநேரம், படுக்கையில் இருக்கும் காமாட்சி கூட, ‘தங்கள் மகனுக்கு மலர்விழியை திருமணம் செய்யக் கேட்டால் சம்மதிக்க மாட்டார்’ என்ற எண்ணமும் அவர்களுக்கு இருக்கிறது. எனவே, வேறுவிதமாக காயை நகர்த்தினார்கள்.
ஆமாம்… காமாட்சியின் மறைவுக்கு முன்னர் அவருடைய மகளுக்கு கரகாட்டக்காரி என்ற முத்திரையை குத்திவிட வேண்டும் என்ற முயற்சியில் இருக்கிறார்கள் மாயனும் அவன் மனைவியும்.
‘தாயின் காலத்திற்குப் பிறகு தங்களுடைய திட்டத்திற்கு சம்மதிக்காமல் மலர்விழி நிச்சயமாக முரண்டு பிடிப்பாள்’ என்ற எண்ணம் அவர்களுக்கு இருக்கிறது. ‘எனவே, இதுதான் உன் உலகம் என்று காமாட்சி மூலமாகவே மலர்விழியை கரகாட்டத்திற்குள் தள்ளி விட்டுவிட வேண்டும். அதன் பிறகு எப்படியாவது அவளை மகனுக்கு மணமுடித்து வைத்து விடலாம்’ என்று தப்புக்கணக்கு போட்டு, அந்த தருணத்திற்காக காத்துக் கொண்டிருந்தார்கள்.
இது எதுவும் தெரியாமல், “எம்பொண்ணை அவ இஷ்டப்படி படிக்க வச்சிடு அண்ணே… நான் உனக்கு கஷ்டத்துக்கு மேல கஷ்டத்தை தான் தர்றேன். எனக்கே அது புரியுது. ஆனா, உன்னைவிட்டா எங்களுக்கு யார் இருக்கா?” என்று, உடன்பிறந்தவனிடம் உருக்கமாக விண்ணப்பம் வைத்தார் காமாட்சி.
தன் வாழ்நாள் சம்பாத்தியம் முழுமையும் அந்த தமையனிடம் தான் கொடுத்தோம் என்பதை மறந்து, ஏதோ அவனுக்கு தானும் தன் மகளும் பாரமாக இருக்கிறோம் என்ற எண்ணத்தில் பேசிய காமாட்சியிடம்,
“எனக்கும் ஆசை தான் ம்மா. ஆனா, இப்போல்லாம் உம்மருமகனுக்கு தொழில் அவ்வளவா இல்ல. நம்ம தொழில்ல பொண்ணுங்களை விட பசங்களுக்கு வாய்ப்பு கம்மின்னு உனக்கே தெரியும் தானே.”
“உன்னோட மருந்து செலவு, சாதனாவோட படிப்பு செலவு, வீட்டுச் செலவுன்னு, இதுக்கே எனக்கு முழி பிதுங்கி போகுது. இதுல, மலரை எப்படி படிக்க வைக்கப் போறேன்னு தெரியல” என்று முதலைக் கண்ணீர் வடித்தான் மாயன்.
“ஏன் காமாட்சி, இந்த லீவ்ல ஒரு இரண்டு மூனு நிகழ்ச்சிக்கு மலரை கூட்டிட்டு போய்ட்டு வரட்டுமா? அந்த பணத்துல அவளைக் காலேஜ்ல சேர்த்துடலாம்.” கிடைத்த சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்திக் கொண்டாள் பரமேஸ்வரி.
காமாட்சியோ அதற்கு பதில் சொல்லாமல் யோசனையோடு மகளைப் பார்த்தார்.
“எங்க பொண்ணு சாதனா மட்டும் மலரைப் போல அழகா பிறந்திருந்தா, அவளை எப்பவோ நம்ம தொழில்ல இறக்கி விட்டிருப்போம். அட… அழகு குறைச்சல்னா கூட அப்பிடி இப்பிடி கொஞ்சம் மேக்கப்பை போட்டாவது சரி செய்துடலாம். ஆனா, அந்த கழுதைக்கு ஆட்டத்தோட நெளிவுசுளிவு எதுவும் வரலயே, என்ன செய்ய?” என்று போலியாக அலுத்துக் கொண்ட பரமேஸ்வரி,
“ஆனா, நம்ம மலர் அப்பிடியா? அழகு, டான்ஸுன்னு, அவ பக்கத்துல யாரால வரமுடியும்? மலர், இரண்டு மூனு ப்ரோக்ராம் செய்தா மட்டும் போதும். அந்த பணத்தை வச்சி, அவளை காலேஜ்ல சேர்த்துடலாம். இனி நீ தான் என்ன செய்யணும்னு முடிவெடுக்கணும்” என்றார் நல்லப்பிள்ளையாக.
கண்களை மூடி சிறிதுநேரம் அமைதியாக இருந்த காமாட்சிக்கு, தங்களால் அண்ணன் சிரமப்படுகிறான் என்ற கற்பனை பிம்பம் தோன்றியது. எனவே, தன் நலிந்து போனக்குரலில், “சரின்னு சொல்லு பாப்பா. உனக்காகத்தான் மாமா பாக்குறாங்க” என்று, தன்னருகே அமைதியாக நின்றிருந்த மகளிடம் சொன்னார்.
தாயின் பேச்சுக்கு மறுபேச்சின்றி தலையாட்டிய மலர், ‘அவர்களோடு நிகழ்ச்சிக்கு போகவேண்டும். ஆனால், எக்காரணம் கொண்டும் கரகம் மட்டும் ஆடக்கூடாது’ என்று அங்கேயே முடிவெடுத்து கொண்டாள்.
அவள் முடிவெடுத்தது போல, கடைசி நேரத்தில் காலை உடைத்து ஆடுவதில் இருந்து தப்பிக்கவும் செய்துவிட்டாள்.
ஆனால், ஆடும் சாக்கில் அந்த மெல்லிய மலரை கசக்கி நுகர்ந்துவிட வேண்டும் என்று கற்பனையில் கோட்டைக்கட்டி வைத்திருந்த சந்திரனுக்கு, அது தகர்ந்து தரைமட்டம் ஆகிப் போனதை தாங்கிக் கொள்ளவே முடியவில்லை.
அதுவும், தன் கண்ணெதிரே மலர் இன்னொரு இளைஞனோடு, அது மருத்துவமனைக்கு என்றால் கூட வெளியே சென்றது, அவன் இரத்த அழுத்தத்தை அதிகரித்திருந்தது.
எனவே, ஆட்டத்தின் இடையில் கலைஞர்களுக்கு டீ குடிக்க ஒதுக்கிய நேரத்தில் மெதுவாக நழுவி இங்கே வந்துவிட்டான்.
வந்தவனை, மலர்விழியின் காலுக்கு கீழே இருந்த கரகாட்டத்திற்கான உடையும், அலட்சியப் பார்வையும் உசுப்பேற்றியது. போதாததற்கு காதில் இருந்த பஞ்சை எடுத்து விட்டு, இப்போ சொல்லு என்று நக்கலாக மலர்விழி பேச, வெறியாகிப் போனான் சந்திரன்.
ஆனால், அதை கட்டுக்குள் கொண்டுவந்து, “கட்டிக்கப்போறவன் கிட்ட இப்பிடி உரிமையா விளையாடாம, வேற யாருகிட்ட நீ விளையாடுவ? தாராளமா விளையாடு டி செல்லம்” என்று சிரித்தபடியே அவள் கன்னத்தை வருட முயன்றான்.
“ம்ஹும்… யாரு? நான் உன்னை கட்டிப்பேனா? கனவு… கனவு கூட கண்டுறாத டா.” ஏளனச் சிரிப்பில் இதழ்கள் வளைய, எச்சரிப்பது போல சொல்லியபடி அவன் கையை வேகமாக தட்டிவிட்டாள் மலர்விழி.
வீட்டில் வாய்பேசா ஊமையாக உலாவரும் மலர்விழி, இப்போது தன்னிடம் நிமிர்ந்து நின்று எதிர்த்து பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியாத சந்திரன், “ஏய்… என்னடி? ரொம்ப தான் துள்ளுற? நாட்டாமை மகனை வளைச்சிட்டோம் ங்குற திமிரா? இன்னைக்கு வேணும்னா அவன் உனக்காக கொடி பிடிக்கலாம். ஆனா, விடிஞ்சா எங்க கூடத்தான் நீ வீட்டுக்கு வந்தாகணும், அதை ஞாபகம் வச்சிக்கோ” என்றான் ஆணவமாக.
பெண்களைப் பலவீனப்படுத்துவதற்காக காலங்காலமாக சில ஆண்கள் உபயோகப்படுத்தும் யுக்தியையே சந்திரனும் உபயோகப்படுத்த, “உன் சாக்கடை புத்தி இப்படி யோசிக்கலைன்னா தான், நான் ஆச்சர்யப்படணும்” என்றாள் மலர்விழி அலட்சியமாக.
“இந்த சாக்கடைல தான் நீ குளிச்சாகணும், அதை மறந்துட்டு ரொம்பவும் துள்ளாத டி செல்லோ…” என்று அசிங்கமாக சிரித்தான் சந்திரன்.
மலர்விழியோ, “அதையும் பார்ப்போம் டா” என்றாள், ‘டா’ என்ற வார்த்தையில் அழுத்தம் கொடுத்து.
அதில் கோபம் வரப்பெற்றவன், சட்டென்று மலர்விழியின் முகவாயைப் பிடித்து அழுத்தியபடி, “விட்டா ரொம்பத்தான் பேசிட்டே போற? என்னைக்கா இருந்தாலும் நீதான் என் பொண்டாட்டி. எங்கையால தாலி வாங்க தயாரா இருந்துக்கோ” என்றான் திமிராக.
அவன் கையை பிய்த்து எடுக்க முயற்சி செய்தபடியே, “உங்கிட்ட உடம்புல வேணும்னா பலம் இருக்கலாம். ஆனா, எங்கிட்ட மனசுல பலம் இருக்கு டா. பாக்கலாம், நீயா, நானா ன்னு” என்றாள் அப்போதும் அசராமல் மலர்விழி.
தன்னைக் கண்டு பயந்து போகாமல், வார்த்தைக்கு வார்த்தை மல்லுக்கு நின்ற மலர்விழியின் செயலில், ஆத்திரம் மேலிட, “இது தர்ற தைரியம் தான, உன்னை இப்பிடி எல்லாம் பேசவைக்குது” என்று, மலர்விழியின் மடியிலிருந்த கணக்கு நோட்டின் மீது ஆவேசமாக கையை வைத்தான் சந்திரன்.
அவ்வளவு தான், உக்கிர காளியாக மாறிப்போன மலர்விழி, கண்களில் அனல் பறக்க, “ஏய்… எட்றா கையை, எடுன்னு சொன்னேன்” என்று, அவன் நெஞ்சில் தன் இருகைகளையும் வைத்து வேகமாக தள்ளினாள்.
பூஞ்சை போல இருந்த பெண்ணின் தேகத்தில், எங்கிருந்து தான் அத்தனை பலம் வந்ததோ தெரியாது. அவள் தள்ளிய வேகத்தில் சட்டென்று பக்கவாட்டில் சரிந்து அமர்ந்தான் சந்திரன்.
அதன் பிறகும் தன் ஆத்திரம் அடங்காதவளாக, “எல்லாத்தையும் பொறுத்துட்டு போறேங்குறதுக்காக, என்ன வேணும்னாலும் செய்திடலாம்னு அர்த்தம் இல்ல. என் படிப்புல மட்டும் கைவைக்க நினைச்சா, உன்ன கொன்னுடுவேன் டா.” ஒற்றை விரலை அவன் முகத்துக்கு நேராக நீட்டிய மலர்விழி, கிட்டத்தட்ட உறுமினாள் என்று தான் சொல்ல வேண்டும்.
மலர்விழியை எளிதாக நினைத்திருந்த சந்திரன், வாயடைத்து போய் அவளை பார்த்துக் கொண்டிருந்த நேரம், வீட்டுக்குள் வந்திருந்தான் ராகவன்.
அப்போதும் கண்களில் குறையாத கனலோடு சந்திரனை முறைத்தபடியிருந்த மலர்விழியைப் பார்த்த ராகவனுக்கு, ‘மான்குட்டி போல மருண்ட பார்வை பார்த்தவளிடமிருந்தா, இப்படியொரு அனல் பார்வை?!’ என்ற ஆச்சர்யமே.
அதற்கு காரணம் எதிரே அலங்கமலங்க உட்கார்ந்திருப்பவன் தான் என்று புரிந்து கொண்ட ராகவன், சந்திரனைப் பார்த்து, “ஏய்… நீ என்ன, இங்க இருக்கிற?” என்றான் அதட்டலாக.
எப்போதுமே சகமனிதர்களை மதித்துப் பேசும் ராகவனைக் கூட, அலட்சியமாக பேசத் தூண்டியிருந்தான் சந்திரன்.
தான் ஜம்பமாக மார்தட்ட முயலும் பெண் முன்னால், தன்னை இன்னொரு ஆண் அலட்சியமாக பேச, உள்ளுக்குள் வெந்து தணிந்தான் சந்திரன்.
ஆனாலும், மீசையில் மண் ஒட்டவில்லை என்பது போல, “மலர் எப்படி இருக்கான்னு பாத்துட்டு போக வந்தேன்” என்று பதில் சொல்லியவன், “காலுக்கு உயரம் வேணும்னா, என் பையை வச்சிக்கோ மலர்” என்று அவன் உடைகளிருந்த பையை எடுத்து மலரின் காலுக்கு கீழே வைக்கும் முயற்சியிலும் ஈடுபட,
“மரியாதையா ஓடிப்போயிரு, இல்லைனா ஏதாவது சொல்லிடப்போறேன்” என்ற மலரின் மௌன பாஷையில், அவள் அருகில் பையை வைத்து விட்டு அங்கிருந்து வெளியேறினான்.
அந்த சந்திரன் பற்றியதால் கன்றிச் சிவந்திருந்த மலர்விழியின் முகத்தை, கண்களில் கனிவைத் தேக்கி பார்வையிட்ட ராகவன், “எல்லா நேரமும் உன் அசட்டு தைரியம் கை குடுக்காது மலர். அப்படி இவங்க கூடத்தான் இருக்கணும்னு என்ன இருக்கு?” என்றான் மென்மையாக.
அப்பா பற்றிய மலரின் பேச்சும், என்தங்கை மகள் என்று அந்த மாயனின் உரிமையான பேச்சும், பரமேஸ்வரியின் நடவடிக்கைகளும், அவர்களோடு தான் மலர்விழியும், அவள் தாயும் இருக்கக்கூடும் என்ற யூகத்தை ராகவனுக்கு கொடுத்திருந்தது. அதனாலேயே அவ்வாறு சொன்னது.
ராகவனின் கேள்வியில், பெருமூச்சு ஒன்றை வெளியிட்ட மலர்விழி, “அம்மா” என்றாள், இப்போதும் ஒற்றை வார்த்தையில்.
அவள் பதிலில் அதிருப்தியாக உதடு சுழித்த ராகவன், சாத்தியிருந்த கதவை திறந்து கொண்டு ஹாலில் இருந்து வீட்டுக்குள் நுழைந்தான்.
திரும்ப வரும்போது ஒருகையில் ஃப்ளாஸ்க்கும், மற்றொரு கையில் தலையணையும், இரண்டு தம்ளர்களும் இருந்தன.
தலையணையை மலர்விழியிடம் நீட்டிய ராகவன், “என்னோடது தான், காலுக்கு வச்சிக்கோ” என்றான்.
அவன் அக்கறையில் கண்ணோரம் கரித்தது மலருக்கு. ஆனால், தன்னோடு மருத்துவமனைக்கு வேறு யாரையாவது அனுப்பச்சொல்லிய, அவன் அன்னையின் முகம் மனதில் வந்து அதை கைகளில் வாங்க விடாமல் தடுத்தது.
“இல்ல… வேண்டாம்.” வேகமாக தலையசைத்தவள், “இதே எனக்கு நல்லா இருக்கு” என்று தன் காலுக்கு கீழ் இருந்த துணியை சுட்டிக்காட்டினாள்.
அவளை சில வினாடிகள் கூர்ந்து பார்த்த ராகவன், ஜன்னல் திண்டில் தலையணையை வைத்தான். ஆமாம்… அந்த ஹாலில் கிடந்த சோஃபா, நாற்காலி, இன்னபிற பொருட்கள் எல்லாம், கரகாட்டக் கலைஞர்கள் வருவதை முன்னிட்டு அடுத்த அறைக்கு இடம் பெயர்ந்திருந்ததால், ஜன்னல் திண்டில் தான் தலையணையை வைக்கமுடிந்தது ராகவனால்.
அதே திண்டில் தம்ளர்களை வைத்து டீயை ஊற்றியவன், ஒன்றை எடுத்து மலரிடம் நீட்டி, “குடி… ஃப்ரெஷ்ஷா ஃபீல் ஆகும்” என்றான்.
திருவிழா நேரங்களில், விடிய விடிய தூங்காமல் விழித்திருக்கும் நாட்டாமை குமாரசாமிக்கு அவ்வப்போது டீ தேவைப்படும். அதனால் தெய்வானை எப்போதுமே ஃப்ளாஸ்கில் டீயை போட்டு வைத்துவிடுவார்.
ராகவன் நீட்டிய டீயையும் வாங்காமல், சாத்தி வைக்கப்பட்டிருந்த உள் அறையின் கதவைப் பார்த்தாள் மலர்விழி. ‘இந்நேரம் ராகவனின் அம்மா இங்கே வந்தால், சூழ்நிலை எப்படி மாறும்?’ என்று அவளுக்கு எண்ணத் தோன்றியது.
எனவே, டீயையும் பார்வையாலே மறுக்க, இரண்டு தம்ளர்களிலும் ஊற்றிய டீயை மறுபடியும் ஃப்ளாஸ்கிலேயே ஊற்றி மூடினான் ராகவன்.
“நீங்க குடிங்க.” வேகமாக சொன்னாள் மலர்விழி.
“உன்னைப் பாக்க வச்சிட்டு நான் எப்படி குடிக்கிறது?” கேலியாக புருவம் உயர்த்தினான் ராகவன்.
இயல்பிலேயே அன்பு, பாசம், கருணை என்ற குணங்கள் நிறைந்திருந்த ராகவனுக்கு, மலர்விழியின் சூழ்நிலை, அவள் மீது ஒரு இரக்கத்தை உண்டாக்கி இருந்தது. அதனால் கனிவு என்னும் மழையை அவள் மீது அதிகமாகவே தூவினான்.
ஆனால் பாலைவனமாக கிடந்த பாவையின் மனதோ, அந்த சின்னச் சின்ன தூறல்களையும், பேராவலோடு உறிஞ்சிக்கொண்டது. அதுவே அவளுக்கு பயத்தையும் உண்டாக்கியது.
சிறுபெண்ணாக இருக்கும் போது தன் அம்மாவோடு கரகாட்ட நிகழ்ச்சிகளுக்கு மலர்விழி போய் இருக்கிறாள். அப்போதெல்லாம் தீண்டத்தகாதவரைப் போல தன் அம்மாவை, பார்வையாலும் செயலாலும் பெண்கள் ஒதுக்குவதை கண்கூடாக பார்த்திருக்கிறாள் மலர்விழி.
இவ்வளவு ஏன்? அவர் மகளான தன்னையும் கூட கேலிப்பொருளாக அவர்கள் பார்ப்பதையும் உணர்ந்திருக்கிறாளே.
அதனால் தான், தெய்வானை சொல்லிய வார்த்தை மலர்விழியின் உணர்வோடு உரசிச் சென்றது.
ஆனால் இப்போதோ, ‘அவர்கள் உன்னை ஏளனமாக நினைத்தார்கள் என்று நீயாக ஏன் கற்பனை செய்து கொள்ளவேண்டும்? ஒரு இளம்பெண்ணோடு மகனை அனுப்ப வேண்டாம் என்ற எண்ணத்தில் கூட, அப்படி சொல்லியிருக்கலாமே. நீயாக ஏன் உன்னை தாழ்த்திக் கொள்கிறாய் மலர்? காமாட்சியின் மகளான நீ, யாருக்கும், எந்த விதத்திலும் குறைந்தவள் இல்லை’ என்று அவள் மனம் பாடமெடுத்தது.
அதில் தெளிந்தவள், “குடுங்க” என்று, டீ க்காக ராகவனிடம் கையை நீட்டினாள்.
சந்தோஷமாக கொடுத்தவன், தானும் ஒரு கப்பை எடுத்துக் கொண்டு, “ப்ரீ ப்ளான்ட்டா தான் வந்திருக்க போல?” என்றான் கண்களால் மலர்விழியின் மடியிலிருந்த நோட்டை சுட்டிக்காட்டியபடியே.
ராகவனின் பேச்சில் லேசாக சிரித்த மலர்விழி, பதிலேதும் சொல்லாமல் விழிகளை தாழ்த்திக்கொள்ள, அதைப்பற்றி வேறெதுவும் தூண்டித் துருவாமல், “அது என்ன சப்ஜெக்ட் நோட்ஸ்?” என்று கேட்டான் ராகவன்.
“மேத்ஸ்” கண்கள் மின்னச் சொன்னாள் மலர்விழி.
“ஓ… பொண்ணுக்கு மேத்ஸ் ரொம்ப பிடிச்ச சப்ஜெட்டோ? சும்மா கண்ணு மின்னுது.” சுவரில் சாய்ந்தபடி கேலி பேசினான் ராகவன்.
அதற்கும் தன் சிரிப்பையே பதிலாக தந்தவள், “நீங்க என்ன பண்ணுறீங்க?” முதன்முதலாக அவனைப்பற்றி கேட்டாள்.
“அதே சப்ஜெட்ல தான் எம்எஸ்ஸி பண்ணுறேன்” என்றான் ராகவன்.
“அதே சப்ஜெட்டா? அப்படி ஒரு சப்ஜெக்ட் இருக்கா என்ன?” வாய்விட்டு முணுமுணுத்தபடியே யோசித்தவள், “ஹைய்யோ… மேத்ஸ்லயா பி ஜி பண்ணுறீங்க?” என்றாள் ஆரவாரமாக.
படிப்பைப் பற்றி பேசும் போது அவள் கண்களில் வந்து போன சந்தோஷ மின்னலை கவனித்த ராகவன், “படிப்பு மேல இவ்வளவு ஆசையை வச்சிட்டு, இப்பிடி ஏன் வர்ற?” என்றான் ஆற்றாமையாக.
“அதைவிடுங்க… எப்படியாவது நான் படிச்சிடுவேன், படிச்சிரணும்” என்று தனக்கு தானே சொல்லிக் கொண்டவள், “எனக்கு இன்டக்ரேஷன்ல கொஞ்சம் சந்தேகம் இருக்கு, கிளீயர் செய்யுறீங்களா? பிளீஸ்…” என்று கண்களைச் சுருக்கி கேட்டாள்.
அடுத்த சில நிமிடங்களுக்கு அந்த இடம் ட்யூசன் சென்டராக மாறிப் போயிருந்தது.
தான் சொல்லிக் கொடுத்ததை கிரகித்துக் கொண்ட வேகத்திலேயே மலர்விழி ஒரு சிறந்த மாணவி என்பது ராகவனுக்கு புரிந்து விட, “மேல படிக்கிறதுக்கு என்ன ஹெல்ப் வேணும்னாலும் நான் உனக்கு பண்ணுறேன். என் ஃபோன் நம்பரை குறிச்சு வச்சிக்கோ. எப்போ வேணும்னாலும் ஃபோன் பண்ணு” என்றபடியே தன் கைபேசி எண்ணைச் சொன்னான்.
அதை நோட்டின் பின் அட்டையில் குறித்தபடியே, “உங்களால முடியுமா?” ஆவலே உருவாக கேட்டாள் மலர்விழி.
“முடியும் ங்குறதால தானே சொல்லுறேன்” என்றவன், மலர் எழுதி வைத்திருந்த தன் கைபேசி எண்ணை, அவளைச் சொல்ல வைத்து சரிபார்த்துக் கொண்டான்.
“படிப்புக்கு மட்டுமில்ல, வேற எந்த ஹெல்ப் வேணும்னாலும் தயங்காம நீ எனக்கு போன் பண்ணலாம்” என்று கூடுதலாக சொல்லியவன், குடித்து முடித்த டீ கப்பிற்காக மலர்விழியிடம் கையை நீட்ட, “ஐயோ…” என்று பதறிப்போனாள் மலர்விழி.
“அடக் குடு ம்மா” என்று, அவள் கையிலிருந்து பிடுங்கிக் கொண்டவன், தான் கொண்டு வந்தவற்றை எல்லாம் கைகளில் அள்ளியபடி, “நான் கொஞ்ச நேரம் தூங்கப்போறேன், நீயும் தூங்கு” என்றான்.
மொத்தத்தில், தன்னுடைய தோரணையான பேச்சாலும், அக்கறையான செயல்களாலும், கண்பார்த்து பேசும் கண்ணியத்தாலும் அந்த சிறுபெண்ணின் மனதில் தான் கல்லெறிந்தது தெரியாமல் வீட்டுக்குள் நுழைந்து கொண்டான் ராகவன்.
நிகழ்ச்சி முடியவும், இருள் பிரியாத அந்த அதிகாலை வேளையில், பேசிய பணத்தை மாயனுக்கு அப்படியே கொடுத்த குமாரசாமி, “காலை இப்பிடி வச்சிகிட்டு அந்த பிள்ளையால பஸ்ல ஏறமுடியாது. ஆட்டோல கூட்டிட்டு போ” என்று கூடுதலாக பணமும் கொடுக்க, வாயெல்லாம் பல் தான் மாயனுக்கு.
“வீட்டுக்கு போனதும், மலரை ஆர்த்தோ டாக்டர் கிட்ட கண்டிப்பா கூட்டிட்டு போங்க.” தந்தைக்கு அருகில் நின்றிருந்த ராகவன் அவன் பங்குக்கு மாயனிடம் அழுத்தமாகச் சொன்னான்.
“கண்டிப்பா தம்பி” என்றான் மாயன்.
அவர்களுக்குமே மலர்விழியின் கால் அதிமுக்கியமானது தானே. ‘இதோ, இப்போது தங்கள் எண்ணம் நிறைவேறிவிடும்’ என்று மகிழ்ந்திருந்த நேரத்தில், மலர்விழி காலை முறித்துக் கொண்டுவர, ஒரு வறட்டு பிடிவாதத்தில் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்ல மறுத்து விட்டார்கள். அவ்வளவு தான்.
சற்றுநேரத்தில் அவர்களை அழைத்து செல்ல ஆட்டோவும் வந்துவிட்டது. அதில் ஏறப்போகும் நேரம் தன்னையறியாமலேயே திரும்பிய மலர்விழி, ராகவனைப் பார்த்து புன்னகைத்தாள். இயல்பாக தலை அசைத்து, அவளுக்கு விடை கொடுத்தான் ராகவன்…