அவள் தம்பியோ, தன் மனைவியின் முகம் பார்த்தான். அந்த பார்வையிலேயே தனக்காக கணவன் யோசிக்கிறான் என்பது மலர்விழிக்குப் புரிய, தனக்கு சம்மதம் என்று மலர்விழி கண்களை மூடித் திறந்தாள். “சரி” என்று தலையாட்டினான் ராகவன்.
அவ்வளவு தான்… பரபரவென்று மேலும் கீழுமாக மாடிப்படி ஏறியிறங்கி ராகவனின் ரூமை தயார் செய்த அவன் உடன்பிறந்த பெண்கள், “இப்போ நீங்க உங்க ரூமுக்கு போலாம்” என்றார்கள் கோரஸாக.
பத்மாவுக்கு தாங்கள் இங்கே தங்கப்போவதை மலர்விழி ஃபோன் செய்து சொல்ல, “என்ஜாய் க்கா. நாங்க பிள்ளைங்களைப் பாத்துக்குறோம்” என்றாள்.
மனைவியோடு தன்னுடைய அறைக்கு வந்து கதவைத் திறந்த ராகவன், அங்கே கண்ட காட்சியில் வெடித்து சிரித்தான்.
‘அப்படி கணவன் சிரிக்குமளவிற்கு அங்கே என்ன தான் இருக்கிறது?’ அவன் பின்னால் நின்று உற்றுப் பார்த்த மலர்விழியின் முகம் நாணத்தில் சிவந்து போனது.
“ஆனாலும் உங்க கூடப்பிறந்தவங்களுக்கு குசும்பு ஜாஸ்தி தான்” என்ற மலர்விழி, “இன்னைக்கு நமக்கா ஃபர்ஸ்ட் நைட்? இப்பிடி பண்ணிவச்சிட்டு போயிருக்காங்க?” என்றாள் வெட்கத்தில் குழைந்த குரலில்.
ஆமாம்… புது விரிப்பு, தலையணை சகிதம் இருந்த படுக்கை முழுவதும், மல்லிகைப் பூவை நெருக்கமாக தூவி விட்டிருந்தார்கள் ஆனந்தியும் ஜெயந்தியும்.
“என்னோட ரூம்ல இன்னைக்கு நமக்கு ஃபர்ஸ்ட் நைட் தானே?” என்றபடியே அறைக்குள் ராகவன் நுழைய, “ஆச தான்” என்று நொடித்துக் கொண்டாள் மலர்விழி.
“அட… என்னோட ரூம்ல, நாம மொத மொதலா, சேர்ந்து தூங்கப்போற நைட் இதுதான ம்மா? அப்போ, இது நமக்கு ஃபர்ஸ்ட்நைட் தானே.”
கண்களைச் சிமிட்டியபடி மனைவியை இழுத்துக் கொண்டு கட்டிலில் அமர்ந்த ராகவனின் கண்கள் ஆவலோடு அறையைச் சுற்றி வலம்வந்தது.
சுவரிலிருந்த ப்ளாக் போர்ட், அவன் உபயோகித்த டேபிள், செயர் எல்லாம் அப்படியே இருந்தன. அந்த அறையோடு கூடிய தன் ஞாபகங்களை உற்சாகமாக ராகவன் மனைவிக்கு சொல்ல, கேட்டுக் கொண்டிருந்தாள் மலர்விழி.
அந்நேரம் கதவு தட்டும் சத்தமும், மலர் என்ற ஆனந்தியின் அழைப்பும் கேட்கவே, யோசனையோடு அறையின் வாசலுக்கு மலர்விழி செல்ல,
“அன்னைக்கு கேட்டல்ல பால் சொம்பு, இந்தா பிடி.” இதழ்களுக்குள் சிரிப்பை மறைத்தபடி, பால் இருந்த சொம்பை நீட்டினாள் ஆனந்தி.
“அண்ணி…” வெட்கத்தில் மலர்விழி சிணுங்க,
“வெள்ளி சொம்பு ம்மா… பாத்து.” கிளுக்கிச் சிரித்தபடியே அங்கிருந்து நகர்ந்தாள் ஆனந்தி.
மனைவி கையிலிருந்த பால் சொம்பும், அவள் முகத்திலிருந்த வெட்கமும் ராகவனுக்கு வேறு கதைகள் சொல்லியது. தன்னருகில் வந்த மனைவியின் இடையை சுற்றி வளைத்தபடியே, “நாம, அடுத்த குழந்தை பெத்துக்கலாமா மலர்?” ஆவலாக கேட்டான்.
“என்ன திடீர்னு?” என்றாள் மலர்விழி வெட்கம் மேலிட.
“நான் லிஸ்ட் போட்டேன்னா, இன்னைக்கு பொழுதெல்லாம் காணாது ம்மா. சுருக்கமா சொன்னா, நீ குழந்தை உண்டான நாள்லயிருந்து உன்னை நான் உள்ளங்கைல வச்சு தாங்கணும்” என்றவனின் குரல் கொஞ்சம் கரகரத்துப்போய் தான் வந்தது.
கணவன் மனம் வாடுவது பொறுக்காமல், “அவ்வளவு தான? டன்” என்ற மலர்விழி, லேசாக முகத்தைச் சுருக்க, “என்னாச்சு?” பதறினான் ராகவன்.
அவனுக்கு பதில் கூட சொல்லாமல் பாத்ரூமிற்குள் நுழைந்து வாந்தி எடுத்தவள், தன்னை சுத்தப்படுத்தியபடியே,
“ம்ம்… உங்க மிஷன் ஸ்டார்ட் ஆகிடிச்சி. எனக்கு முதுகை தடவி விடுங்க, நெத்தியை பிடிச்சு விடுங்க, குடிக்க புளிப்பா ஏதாவது குடுங்க…” என்று அடுக்கிக்கொண்டே போனாள்.
புரியாமல் பார்த்தவனோ, புரிந்தபோது மனைவியை தன் கைகளில் அள்ளிக்கொண்டு முத்தமழை பொழிந்தான்.
மறுநாள் காலையில் மாடியிலிருந்து இருவரும் இறங்கி வரும்போது எட்டுமணி ஆகிவிட்டது. குழந்தைகளிடம் செல்ல வேண்டும் என்று வேகமாக படியிறங்கிய மலர்விழியை குமாரசாமியின் குரல் தேக்கியது.
அடுத்த மாதத்தில் நடைபெற இருக்கும் திருவிழாவில் கலைநிகழ்ச்சி நடத்துவதற்காக, ஏதோ ஒரு கரகாட்ட குழுவிடம் பேசிக் கொண்டிருந்தார் குமாரசாமி.
திருவிழா நடைபெறயிருக்கும் தேதியைச் சொல்லி, அவர்களின் சம்பளம், போன்ற இன்னபிற தகவல்களை கேட்டு முடித்த குமாரசாமி,
“அப்புறம்… கரகாட்டம் ஆடுறவங்க ட்ரஸ், அரைகுறையா இல்லாம, ஆடுறதுக்கு வசதியா நீட்டா இருக்கட்டும். டபுள் மீனிங் பேச்சு எதுவும் ஆட்டத்துக்கு நடுவுல வேண்டாம். மொத்தத்துல பழைய காலத்துல என்ன தரத்தோட கரகாட்டம் இருந்ததோ அதைப்போல இருக்கணும்” என்றார்.
அதற்கு எதிரில் இருந்தவர் என்ன சொன்னாரோ தெரியவில்லை,
“ஹாங்… திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் என்னோட மருமக தான். நம்ம வீட்டு பிள்ளையோட முயற்சியை நாமளே ஆதரிக்கலைன்னா எப்பிடி? அதான், நம்மாலான முயற்சியை முன்னெடுப்போமேன்னு, உங்ககிட்ட சொல்லுறேன்.” மீசையை நீவி விட்டபடியே சொன்னார் குமாரசாமி.
கேட்டுக்கொண்டிருந்த மலர்விழிக்கு, மாமனாரின் பேச்சில் மயக்கமே வந்தது.
வேறொன்றுமில்லை… கடந்த வாரம் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கரகாட்டக் குழுக்களின் சங்க நிர்வாகிகளை கலெக்டர் அலுவலகத்திற்கு அழைத்து, குமாரசாமி இப்போது சொன்னவற்றையே வேண்டுகோளாக வைத்திருந்தாள் மலர்விழி.
ஆமாம்… எதற்காக கலெக்டர் நம்மை அழைத்திருக்கிறார் என்ற குழப்பத்தோடு அமர்ந்திருந்த சங்க நிர்வாகிகளைப் பார்த்து,
“கரகாட்டம் தன்னோட சுயத்தை இழந்து நிக்குதே, அதுக்கு என்ன காரணமா இருக்கலாம்னு நீங்க நினைக்குறீங்க?” என்று, நேரடியாக விஷயத்துக்கே வந்தாள் மலர்விழி.
“கண்டிப்பா மக்கள் தான் மேடம். அவங்களுக்கு என்ன இஷ்டமோ, அதைத்தானே நாங்க கொடுக்க வேண்டியதா இருக்கு.” அங்கேயிருந்த நபர்களின் குரலாக ஒருவர் பேசினார்.
“ம்ம்… மக்களுடைய ரசனையிலும் மாற்றம் வரணும். நான் இல்லைன்னு சொல்லலை. ஆனா, என்னைக் கேட்டா எல்லாத்துக்கும் காரணம் கலைஞர்கள் கிட்ட ஒற்றுமை இல்லாதது தான்னு சொல்லுவேன்.” அமைதியாக சொன்னாள் மலர்விழி.
“என்ன மேடம் சொல்றீங்க?” கூட்டத்திலிருந்து அதிருப்தியாக வந்தது கேள்வி.
“நீங்க எல்லோரும் சேர்ந்து ஒற்றுமையா, இப்பிடித்தான் எங்க நிகழ்ச்சி இருக்கும்னு ஒரு வரையறையை வச்சிகிட்டீங்கன்னா, உங்களை யாரால வளைக்க முடியும்?” சவாலாக கேட்டாள் மலர்விழி.
“உங்களுக்கு என்ன மேடம்? ஏசில உக்காந்துட்டு ஈசியா அறிவுரை சொல்லிடுவீங்க. எங்க வலி, வேதனை, கஷ்டம் எல்லாம் உங்களுக்கு எப்படி புரியும்?” ஆதங்கமாக வந்தது ஒரு குரல்.
“இதைச் சொல்லுறதுக்கு எனக்கு முழு தகுதியும் இருக்குன்னு நினைக்கிறேன். ஏன்னா, நானும் ஒரு பெண் கரகாட்டக் கலைஞரோட பொண்ணு தான்.” மலர்விழி இதைச் சொல்லவும், அமர்ந்திருந்த நபர்களிடையே ஒரு பரபரப்பு வர, அவள் பேச்சை கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தார்கள்.
“எனக்கு உங்க வலி, வேதனை, கஷ்டம் எல்லாம் தெரியும், புரியும். அதனாலத் தான் உடை கட்டுப்பாட்டை கொண்டுவாங்கன்னு சொல்லுறேன். இப்படித்தான் எங்க நிகழ்ச்சி இருக்கும்னு தைரியமா சொல்லுங்க. மொத்தமா எல்லோரும் சேர்ந்து சொல்லும் போது யாராலும் உங்களை அவங்க இஷ்டத்துக்கு வளைக்க முடியாது. நீங்க உங்க சைட்ல இருந்து முயற்சி எடுங்க. நான் அரசாங்கம் மூலமா நம்ம கலைக்கும், கலைஞர்களுக்கும் விடிவுகாலத்தை கொண்டுவர முயற்சி செய்யுறேன்” என்றவள்,
“அப்புறம் இன்னொரு விஷயம். இந்த துறைல நுழைய விருப்பம் இல்லாத பொண்ணுங்களை, கட்டாயப்படுத்தாதீங்க. அவங்களைப் படிக்க வைங்க. உங்கள்ல ஒருத்தியான நான் இன்னைக்கு ஒரு மாவட்டத்தையே ஆட்சி செய்யும் பொறுப்புல இருக்கும் போது, அவங்களால ஏன் முடியாது?” என்று முடித்தாள்.
ஆரம்பத்தில் அசட்டையாக பேசிய சங்க நிர்வாகிகள், கண்டிப்பாக மலர்விழி சொல்லியதை முயற்சிப்பதாக சொல்லிச் சென்றார்கள்.
பத்திரிக்கைகளும், தொலைக்காட்சிகளும் மலர்விழியையும், அவள் வார்த்தைகளையும் தலைப்புச் செய்திகளாக்கின. அதன் மூலம் விஷயத்தை தெரிந்து கொண்ட குமாரசாமி தன்னாலான முயற்சியை எடுக்க முயல, உண்மையிலேயே நெகிழ்ந்து தான் போனாள் மலர்விழி.
“ரொம்ப நன்றி மாமா.” மாடிப்படியிலிருந்து இறங்கியிருந்த மலர்விழி, மனதார குமாரசாமியிடம் சொன்னாள்.
“ஏதோ என்னால முடிஞ்சது ம்மா.” தன்மையாகவே சொன்னார் குமாரசாமி.
ஆக, ஒரு கிராமியக்கலையின் புதிய விடியலுக்கான பூபாளம் மட்டுமல்ல, ஒரு உறவுக்கான ‘புதிய பூபாளமும்’ அங்கே இசைக்கப்பட்டது.
மலர்விழியைப் பற்றிய செய்தியை அறிந்து கொண்ட எத்தனையோ பேர்களில் ஒருவன் மாயன். மறுநாளே அவளை சந்திப்பதற்காக மனைவியோடு கலெக்டர் அலுவலகத்தில் வந்து நின்றான்.
மலர்விழியின் அலுவலக உதவியாளர், “மேம், உங்க தாய்மாமா ன்னு சொல்லிட்டு ஒருத்தர் வந்திருக்கார். பெயர் கூட மாயன்னு சொன்னார். உள்ள விடட்டுமா?” என்று அனுமதி கேட்க,
“எனக்கு தாய்மாமாவே கிடையாது. அப்பிடி சொல்லிட்டு வர்ற யாரையும் இப்போ இல்ல, எப்பவுமே உள்ள விடாதீங்க” என்று விட்டாள் மலர்விழி.
“நாங்க கிளம்புறோம் ப்பா.” பல வருடங்களுக்குப் பிறகு, வாய்ப்பூட்டு கழன்று தகப்பனிடம் பேசினான் ராகவன்.
“இப்போ என்ன அவசரம்? பிள்ளைங்களை இங்க வரச்சொல்லுவோம். எல்லோரும் சாப்டுட்டு மெதுவா போலாம்” என்ற குமாரசாமியை, வீடே ஆச்சர்யமாக தான் பார்த்தது.
ஆமாம், இப்போதெல்லாம் மனிதரிடம் பயங்கர மாற்றம். இவ்வளவு ஏன்? மகன் குடும்பத்தோடு குமாரசாமி உறவாடுவது, சமீபத்தில் ஊர்கூட்டத்தில் பேசுபொருளாக மாற,
“எனக்கு, என்னோட பசங்க தான் முக்கியம், அதுக்கு தடையா இந்த நாட்டாமை பதவி இருந்தா, அதுகூட எனக்கு வேண்டாம்.” வேட்டியில் ஒட்டிய தூசைப் போல நாட்டாமைப் பதவியை உதறிவிட்டு கிளம்பி வந்தே விட்டார் மனிதர்.
ஆனால், ஊருக்கென்று தங்கள் பொன்னான நேரத்தையும், பணத்தையும் செலவழிக்க யாருக்கும் மனமில்லாததால், இன்னமும் அந்த பதவி அவரோடு தான் ஒட்டிக்கொண்டிருக்கிறது.
“அப்பா தான் சொல்லுறாங்கல்ல, உக்காரு ராகவா.” பரபரப்பாக தெய்வானை சொல்ல, மெல்லிய சிரிப்பு ராகவனின் இதழ்களில்.
அதைக்கண்டதும், சட்டென்று மகனின் கைகளைப் பற்றிக் கொண்ட தெய்வானை, “அம்மா மேல கோபம் போயிடிச்சா ராகவா?” என்றார் வேகமாக.
“உங்க மேல எனக்கிருந்தது கோபம் இல்ல ம்மா. ஆதங்கம்.” அன்னையின் வார்த்தைகளை திருத்தினான் ராகவன்.
“சரி, ஆதங்கம் போயிடிச்சா?”
“ம்ம்… போயிடும்னு தான் நினைக்கிறேன்.”
ராகவன் சொன்ன நேரம், வீட்டு வாசலில் ஒரு விலையுயர்ந்த கார் வந்து நின்றது.
அதிலிருந்து டாம்பீகமாக இறங்கினார் ஒரு மனிதர். மூன்று நபர்கள் பின்தொடர வீட்டுக்குள் வந்த அந்த நபர், “மலர்விழி…” என்று கேள்வியாக இழுத்து, அவளைக் கண்டதும்,
“என்னோட பெயர் சபாபதி” என்று அறிமுகம் செய்து, ஊரையும் சொல்ல, நாணேற்றிய வில்லைப் போல ஆனது மலர்விழியின் உடல்மொழி.
சில ஹோட்டல்கள், லாட்ஜ்களின் பெயர்களைச் சொல்லி, அவையெல்லாம் தன்னுடையதாக அந்த மனிதர் சொல்ல, கொஞ்சம் பிரம்மிப்பாகத் தான், வீட்டிலுள்ளவர்கள் அந்த நபரைப் பார்த்தார்கள்.
“உக்காருங்க” குடும்பத்தலைவராக குமாரசாமி உபசரிக்க,
உட்கார்ந்த மனிதர், தொண்டைக்குள் வார்த்தைகள் சிக்கிக் கொண்டது போல, எதுவும் பேசாமல் கொஞ்சம் அவஸ்தையாக மலர்விழியை பார்த்தார்.
“சொல்லுங்க… என்ன விஷயமா வந்துருக்கீங்க?” இப்போதும் குமாரசாமியே தான் பேசினார்.
“இல்ல… மலர்விழியோட அம்மா காமாட்சியை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்லி…” அதற்கு மேல் எதுவும் சொல்ல முடியாமல் பார்வையை நிலத்தில் தாழ்த்திய அந்த சபாபதி,
“நான் கல்யாணம் செய்ய தயாராத்தான் இருந்தேன், ஆனா, என்னைப் பெத்தவங்க விடலை. என்னால அவங்களை மீறமுடியல. ஆனா, நான் காமாட்சிக்கு செய்த துரோகத்துக்கு கூலியா இதுவரைக்கும் எனக்கு குழந்தைங்களே இல்ல.”
“ஆமா... என்னோட ஒரே பிள்ளை மலர்விழி மட்டும் தான். நேத்து தான் எனக்கு மலர்விழியைப் பத்திய தகவல்கள் கிடைச்சது. ஒரு கரகாட்டக்காரியோட பொண்ணுங்குறதால நீங்க கூட அவளை ஒதுக்கி வச்சதா கேள்விப்பட்டேன்.”
“அதான், இந்த சபாபதி பொண்ணா, மலரை இந்த உலகத்துக்கு அறிமுகம் செய்துடலாம்னு ஓடி வந்துட்டேன். என்ன நான் சொல்லுறது?” படபடவென்று பேசி முடித்தார் சபாபதி.
அந்த சபாபதி சொன்ன தகவலில் திகைத்துப்போய் எல்லோரும், அவரையே மௌனமாக பார்த்தபடி நின்றிருந்தார்கள். ஆனால் தெய்வானையால் அப்படி இருக்க முடியவில்லை.
“ஒரு பொண்ணுக்கு நம்பிக்கைக் கொடுத்து, வயித்துல குழந்தையோட அவளை நட்டாத்துல விட்டுட்டு போன, ஒரு நம்பிக்கை துரோகியோட பொண்ணு எங்க மருமகன்னு சொல்லுறதை விட, கரகாட்ட காமாட்சியோட பொண்ணு எம்மருமகன்னு சொல்லுறது எங்களுக்கு எவ்வளவோ பெருமை. உங்க சங்காத்தமே எங்களுக்கு தேவையில்ல, நீங்க கிளம்பலாம்” என்ற தெய்வானை,
“நான் சொல்லுறது சரிதானே மலர்?” என்று மருமகளைப் பார்த்து கேட்டார்.
“ரொம்ப சரியாச் சொன்னீங்க அத்த” என்ற மலர்விழி,
“சபாபதி… இந்த பெயர் மட்டும் இல்ல, ஆளோட வரலாறையே எனக்கு பத்து வயசா இருக்கும் போது எங்கம்மா எங்கிட்ட சொல்லியிருக்காங்க” என்றவள், நிறுத்தி நிதானமாக அந்த மனிதரை பார்வையிட்டாள்.
தெய்வானையின் வார்த்தைகளில் முகம் சிறுத்துப் போன அந்த மனிதர், மலர்விழியையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருக்க,
“உங்களுக்கு ஒண்ணு தெரியுமா? என்னோட இனிஷியல் ‘கே’ மட்டும் தான். ‘கே’ மீன்ஸ், காமாட்சி. என் அம்மாவே, அந்த ‘சபாபதி’ ங்குற பெயரை எம்பேரோட சேர்க்க இஷ்டப்படாதப்போ, நான் மட்டும் அதுக்கு அனுமதிப்பேன்னா நினைக்குறீங்க?”
“இப்போ மட்டுமில்ல, எப்பவுமே நீங்க நினைக்கிறது நடக்காது. டைமை வேஸ்ட் பண்ணாம நீங்க கிளம்பலாம்.” கண்களால் வாசலைக் காட்டியபடி சொன்னாள் மலர்விழி.
“மலர், இல்ல ம்மா…” உட்கார்ந்திருந்த இடத்திலிருந்து எழும்பி, சமாதானம் செய்யும் விதமாக மலர்விழியை அந்த சபாபதி நெருங்க முயல,
சட்டென்று மனைவியை தன் கைவளைவுக்குள் கொண்டு வந்த ராகவன், “அதான் முடிவா சொல்லியாச்சு ல்ல, கிளம்புங்க” என்றான் உறுதியான குரலில்.
சுற்றியிருந்த மற்றவர்களின் முகங்களும் அதே பாவனையையே காட்ட, வேறுவழியில்லாமல் கிளம்பினார் அந்த சபாபதி.
“சூப்பர் மலர்… சரியான பதிலடி குடுத்தீங்க அண்ணி… மூஞ்சை எங்க கொண்டுபோய் வைக்கப்போறாரோ இந்த ஆளு.”
ஆளாளுக்கு ஒவ்வொன்றாக சொல்ல, தன்னை பெற்றவளுக்கு தன்னாலான நியாயத்தை செய்துவிட்டது போல பூரித்துக் கிடந்தது மலர்விழியின் மலர் முகம்.
*******
மத்தியான நேரம்,
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் வளாகம் ஜனநெருக்கடி குறைந்து கொஞ்சம் அமைதியாக காணப்பட்டது.
அங்கே பார்க்கிங் ஏரியாவில் காரை நிறுத்திய ராகவன், கையில் லஞ்ச் பேகை எடுத்துக் கொண்டு, அலுவலக காரிடாரில் நடந்தான்.
அவனைத் தெரிந்த அலுவலக ஊழியர்கள் வணக்கம் வைக்க, பதிலுக்கு மரியாதையாக தலையசைத்தபடி நடந்தவன், ‘மலர்விழி ஐஏஎஸ்’ என்ற பெயர் பலகை இருந்த அறைக்கு முன்னர் வந்து, அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்தான்.
“மேடம் ஃபீரி ஆகிட்டாங்க சார், நீங்க உள்ளப் போங்க” மலர்விழியின் அலுவலக உதவியாளர் சொல்லவும் அறைக்குள் நுழைந்தான் ராகவன்.
தனது நாற்காலியில் சாய்ந்தமர்ந்து, அறைக்குள் வரும் கணவனையே பார்த்தபடி இருந்தாள் மலர்விழி.
“மேடம், மெட்டர்னிட்டி லீவ் லேடீஸ் க்கு மட்டும் தானா? ஜென்ட்ஸ் க்கு கிடையாதா? ஆண்களின் சார்பா, அவங்களுக்கும் அந்த லீவை தரச்சொல்லி அரசாங்கத்துக்கு பரிந்துரை செய்யலாம்ல நீங்க?” மனைவிக்கு எதிரே கிடந்த நாற்காலியில் அமர்ந்தபடியே சொன்னான் ராகவன்.
“ஏன்? அப்பப்போ பொண்ணுங்க வயித்து பிள்ளைங்களை உங்க ஆண் இனம் வாங்கி சுமக்க போறீங்களா?” கேலியாக கேட்டாள் மலர்விழி.
“நீங்களாவது பிள்ளைங்களை மட்டும் தான் சுமக்குறீங்க. நாங்க, அம்மாவையும், பிள்ளைங்களையும் சேர்த்துல்ல சுமக்குறோம். என்னைக் கேட்டா, எங்களுக்கு டபுள் மெட்டர்னிட்டி லீவ் தரணும் இந்த அரசாங்கம்.”
வேடிக்கையாக சொன்ன ராகவன், இருக்கையிலிருந்து எழும்பி வந்து, அமர்ந்திருந்த மனைவியின் கையைப் பிடித்து எழுப்பினான்.
மலர்விழியின் ஏழுமாத வயிறு கொஞ்சம் பெரியதாகவே இருந்தது. காரணம், இப்போதும் வயிற்றிலிருப்பது இரட்டையரே.
“ஒரேயடியா உக்கார்ந்திருக்காம, அப்பப்போ எழும்பி நடக்குறியா மலர்?” கேட்டபடியே, அலுவலக அறையை ஒட்டியிருந்த டைனிங் ரூமிற்கு மனைவியை கைபிடித்து அழைத்துச் சென்றான்.
“அதெல்லாம் நான் அப்பப்போ நடப்பேன் ராகவ்.” சிறு பிள்ளையாக சொன்னாள் மலர்விழி.
“நீ நடந்த அழகு இப்போ தெரிஞ்சிடும், வா” என்றபடியே, அங்கிருந்த நாற்காலியில் அவளை அமர வைத்த ராகவன், மனைவியின் பாதங்களைப் பற்றி பார்வையிட, மெத்து மெத்தென்று நீர் கோர்த்திருந்தது பாதங்கள்.
“இதுதான் நீ நடந்த அழகா? லீவ் எடுன்னு சொன்னாலும், கேக்காம என்னைப் படுத்துற டி” என்ற ராகவன், இப்போது இருபது நாட்களாக முழுவிடுப்பில் இருந்து மனைவியை கவனித்துக் கொள்கிறான்.
கவனித்துக் கொள்கிறான் என்றால், அன்று சொன்னானே, உள்ளங்கையில் வைத்து தாங்க வேண்டும் என்று, அதுதான் நடக்கிறது.
மூன்று வேளையும் சமைத்து, கபிலனையும், நாச்சியையும் பள்ளிக்கு அனுப்பி, மனைவிக்கு ஆஃபீஸுக்கு மதிய சாப்பாடு கொண்டு வந்து என்று, இந்த இருபது நாட்களில் முழு குடும்ப இஸ்திரியன் ஆகிப்போனான் ராகவன்.
“ம்ப்ச், ராகவ்… ப்ரெக்னெட்டா இருக்கும் போது மோஸ்ட்லி எல்லா லேடீஸ் க்கும் இப்படி கால்ல நீர் கோர்க்கும் தான். நோ ஒர்ரீஸ்” என்ற மலர்விழி,
“நமக்கு கல்யாணம் ஆகி ஆறு வருஷம் ஆகுது. இதுல ஐந்து வருஷம் பிரிஞ்சி இருந்திருக்கோம். ஆனா, நமக்கு நாலு பிள்ளைங்க. செம ஸ்பீட்ல நாம.” கண்களைச் சிமிட்டினாள்.
“ஐயோடா… என்ன ஒரு கால்குலேஷேன்?” என்றபடியே மனைவிக்கு தட்டில் உணவைப் பரிமாறிய ராகவன்,
“அப்போ, அந்த ஐந்து வருஷமும் நாம கூடவே இருந்திருந்தா, இப்போ ஒரு டஜன் தாண்டியிருக்குமோ?” என்றான் படுசீரியஸான குரலில்.
கணவனின் வில்லங்கமான கணக்கை மனக்கண்ணில் காட்சிப்படுத்திய மலர்விழி, அருகே நின்றிருந்தவனின் இடுப்பைக் கட்டிக் கொண்டு அடக்க முடியாமல் அருவியாக சிரித்தாள். உடன் இணைந்து கொண்டான் ராகவன்.
நேசிப்பதும், நேசிக்கப்படுவதும் மட்டும் இல்லையே காதல். தன் துணையின் துயர் களைய முற்படுவதும் காதல் தானே.
மலர்விழியின் அந்த முயற்சியில் ராகவன் காயம்பட்டு போனாலும், தன்னுடைய சிறிய புரிதலில் வாழ்க்கையை பேரழகாக்கிக் கொண்டான்.
அந்த புரிதல் எப்போதும் அந்த தம்பதியரின் வாழ்க்கையில் நிலைத்திருக்க வேண்டும் என்று வாழ்த்தி விடைபெறுவோம் நாமும்.
நிறைவு பெற்றது.