அத்தியாயம் 2

வினய்யின் கல்யாணம் நல்லபடியாக முடிந்திருக்க, மச்சினர், நாத்தனாரின் குடும்பத்தினர் அரட்டைக் கச்சேரியில் அமிழ்ந்திருக்க, செந்திலும் தர்ஷினியும் அவர்களுடன் சேர்ந்து கொள்ள,பெரியவர்களைக் கவனிப்பது, உணவு தயாரிப்பது, பாத்திரம் கழுவுவது என்று வேலைகள் பெண்டெடுக்க, உதவி செய்ய ஆளில்லாமல் அல்லாடித் தான் போனார் ராஜம். இந்தக் களேபரத்தில் ஒரு நல்ல விஷயம் என்னயென்றால் அதே ஊரில் தங்கி இருந்தாலும் சம்மந்தி இவரைத் தொந்தரவு செய்யவில்லை.

தினமும் காலை பொழுதில் வாடகை காரை அனுப்பி மகளைத் தங்கும் விடுதிக்கு அழைத்துக் கொள்வார்கள். சிலசமயம் வினய் அவளோடு சென்றான். பல சமயங்களில் வீட்டில் இருந்து விடுவான். அவன் ஊருக்கு செல்லும் வரை நாள்கள் அனைத்தும் அந்த மாதிரி தான் கடந்து சென்றது. அதன் நடுவே ஒரேயொரு நாள் குடும்பத்தாரோடு புதுத் தம்பதியைக் குலதெய்வக் கோவிலுக்கு அழைத்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதற்கு மருமகளின் பெற்றோரும் வந்தது அதிசயமாக இருந்தது அனைவர்க்கும்.

பெண் வீட்டு குலதெய்வத்தைத் தரிசிக்க தம்பதியை அழைத்து செல்வதைப் பற்றி நாத்தனார் விசாரித்த போது,’ஒரு வருஷம் கழிச்சு தான் போக முடியும்..அசம்பாவிதம் நடந்து போச்சு.’ என்ற பதில் ராஜத்தின் மனத்தில் நெருடலை ஏற்படுத்தியது. திருமணம் முடிந்து நான்கு வருடங்கள் ஆனபின்னும் இப்போது வரை தம்பதியைக் குலதெய்வக் கோவிலுக்கு அழைத்துச் செல்லவில்லை, பெண் வீட்டு குலதெய்வம் எது என்று கூட இவருக்குத் தெரியாது.

திருமணம் முடிந்து கிட்டதட்ட ஒரு வருடம் கழித்து தான் வெளிநாடு சென்றாள் அவருடைய மருமகள். பன்னிரெண்டு மாதங்களில் ஒரு வாரம் கூட அவர்களுடன் தங்கவில்லை. அதைப் பற்றி மகனிடம் பேச அவருக்குத் தயக்கமாக இருந்தது. நம்முடைய ஊரில், நமது குடும்ப அமைப்பில் வளர்ந்த பெண் இப்படி ஈடுபாடேயில்லாமல் இருப்பது கவலையை ஏற்படுத்தியிருந்தாலும் அதைக் கணவன், மகன் இருவரிடமும் பகிர்ந்து கொள்ளவில்லை .

ஒரு சமயம் தைரியத்தை வரவழைத்து கொண்டு, கணவனிடம், தாய் வீட்டில் இருக்கும் மருமகளை அவர்களுடைய வீட்டிற்கு அழைத்து வருவதைப் பற்றி பேச்சு எடுத்த போது,’உனக்கு சேவகம் செய்ய ஆள் கேட்குதா? அவளுக்கு எவ்வளவு வேலை இருக்குது தெரியுமா? விஸா, மேல்படிப்புன்னு காலைலேர்ந்து இராத்திரி வரை பிஸியா இருக்குறா..இங்கே மாதிரி வெளி நாட்லே வாழ்க்கையை ஓட்ட முடியாது..உன் மருமகளும் வேலைக்குப் போகணும்..அதுக்கு அவளோட தகுதியை வளர்த்துக்கணும்.. மேலே படிக்கணும்..

இப்போ இருக்கற சூழ்நிலைலே ரொம்பத் தூரத்திலே தான் காலேஜ் கிடைக்கும் போல இருக்குன்னு வினய் கவலைப்பட்டிட்டு இருக்கான்..எப்போவும் போல தானே வீட்டு வேலை இருக்கு..புதுசா உனக்கு எதுக்கு உதவி தேவைப்படுது?’ என்று வள்ளென்று விழ, அதன் பின் இப்போது வரை மருமகளைப் பற்றிய பேச்சை செந்திலே எடுத்தாலும் ராஜம் அதில் கலந்து கொள்வதில்லை. அதே கொள்கையை மகனிடமும் கடைப்பிடிக்க கஷ்டப்பட வேண்டியிருக்கவில்லை.  மகன், மகள் இருவருக்கும் முதல்பட்சம் இரண்டாம்பட்சம் இரண்டும் அப்பா தான். அம்மாவைக் கணக்கில் சேர்க்கவில்லை இருவரும்.

செந்திலின் பார்வை, கண்ணோட்டம் எப்போதும் வேறாக தான் இருக்கும். அவரது கோணம் ராஜத்திற்குக் கோணலாகத் தெரியும். அதை வெளிப்படுத்தினால் கணவனின் நாக்கு போகும் போக்கை சமாளிக்க முடியாதென்பதால் அவரின் கோணத்தை வெளியிட்டதே இல்லை ராஜம். இப்போது கூட மகளின் சொந்த ஃபிளாட் இவருடைய கண்ணுக்கு அவள் தோள் மீது அமந்திருக்கும் சுமையாக தான் தெரிந்ததே தவிர சொத்தாக தெரியவில்லை. வேலைக்கு சேர்ந்த சில வருடங்களில் பலவருடங்களுக்கு இழுத்து செல்லக் கூடிய வீட்டுக்கடனை மகள் வாங்கியது இவருக்கு கொஞ்சமும் பிடிக்கவில்லை.

திருமணத்திற்கு பிறகு கணவனோடு கலந்தாலோசித்து அவனின் துணையோடு செய்ய வேண்டியதை திருமணத்திற்கு முன்பே தனி ஆளாக மகள் செய்ததை இவரது மனம் ஒப்புக் கொள்ளவில்லை. அவரது ஒப்புதலை மகளும் கேட்கவில்லை. நல்லவேளை மாப்பிள்ளை வீட்டினர் அவரைப் போல் சுமையாக பார்க்காமல் சுகமானதாக பார்ப்பது ஆறுதலாக இருந்தது ராஜத்திற்கு.

ஆறுதலைத் தேடிய மனது அம்மாவிற்கு அலைப்பேசி அழைப்பை விடுத்தது. மதிய வேளையில் கொஞ்சம் போல் ராஜம் கண் அசந்த நேரத்தில் அலைப்பேசி ஒலிக்க, சில நொடிகள் தாமதத்திற்கு பிறகு அழைப்பை ஏற்றார் ராஜம். செந்தில் அலுவலகத்தில் இருக்க, மாமனார், மாமியார் இருவரும் அவர்களுடைய படுக்கையறையில் இருக்க, தெருவில் சென்ற வாகனங்களிருந்து எழுந்த இரைச்சலை தவிர வேறு சத்தம் எதுவுமில்லாமல் அமைதியாக இருந்தது வீடு.

அழைப்பை ஏற்றவுடன்,”அம்மா” என்று கதறினான் வினய்.

பதறியடித்து எழுந்து கொண்ட ராஜம்,”என்ன டா ஆச்சு” என்று கேட்டார்.

அழுகைக்கு இடையே,“நீ வா ம்மா.” என்றான் வினய்.

“அவ எதுக்கு வரணும்?” என்று பலமுறை மகனிடம் கேட்டு விட்டார் செந்தில். பதில் வரவில்லை. பதிலிற்குப் பதிலாக பயணச்சீட்டு தான் வந்து சேர்ந்தது. தனியாக செல்ல பயமாக இருந்தாலும் மகனின் கதறல் ஏற்படுத்திய பயம் ராஜத்தின் பயத்தை பின்னுக்கு தள்ளியிருந்தது.

“பயமா இருக்கு ராஜம்..இரண்டு நாளாச்சு கண் திறந்து.” என்று அவருடைய அம்மாவின் நிலையை மனைவிக்குத் தெரியப்படுத்தினார் செந்தில். அதற்கு ராஜத்திடமிருந்து பதில் வரவில்லை. மகனின் அலைப்பேசிக்கு அழைத்து ஒரு பிரயோஜனமுமில்லை. அவரது அழைப்புக்களை அவன் ஏற்கவில்லை. ஏன்யென்று காரணம் தெரியாமல் மண்டை காய்ந்து, இறுமாப்பை இறக்கி வைத்து விட்டு, மனைவியிடம் விசாரித்த போது மௌனம் தான் பதிலாக கிடைத்தது. ‘என்ன தான் நடக்குது? ஆத்தாளும் மகனும் என்ன செய்திட்டு இருக்கீங்க? மருமகளுக்கு ஃபோன் போட்டு விசாரிக்கப் போறேன்.’ என்ற அவரது வாய்ஸ் மெஸேஜ்ஜிற்கு,’முதல்லே அதைச் செய்யுங்க’ என்று பதில் அனுப்பி வைத்தார் ராஜம்.

செந்திலின் அழைப்பை அவருடைய மருமகள் ஏற்கவில்லை. அவளது பெற்றோரும் இவருடைய அழைப்பை எடுக்கவில்லை. மகனின் இல்லற வாழ்வில் தான் பிரச்சனை என்று புரிந்து போன செந்திலுக்கு ஒரு விஷயம் மட்டும் புரியவில்லை. அவரிடம் ஆலோசனை கேட்காமல் மனைவியை மகன் வரவழைத்துக் கொண்டது அவருக்கு புதிராக தான் இருந்தது.

மனைவியின் மௌனத்தைப் பொறுட்படுத்தாமல்,”நீ எப்போ வர்ற?” என்று கேட்டார்.

“விஸா முடியறத்துக்குள்ளே வந்திடுவேன்.” என்று அனைவருக்கும் தெரிந்த பதிலைக் கொடுத்து விட்டு இணைப்பைத் துண்டித்தார் ராஜம்.

“என்ன அண்ணி இது? நம்ம வழக்கத்திலே இல்லாததை செய்யறீங்க? அம்மா போனதும் கேட்க ஆளில்லைன்னு நினைக்கறீங்களா?” என்று கைப்பேசி வழியாக பாய்ந்து வந்தது நாத்தனாரின் கோபம். அவர்கள் வழக்கத்தில் இல்லாதது, கேள்விபடாதது, விபரீதமான ஒன்றை சந்தித்து அதனோடு சண்டையிட்டு கிட்டதட்ட சடலமாகி இருந்தார் ராஜம்.

அது தெரியாமல் கெஞ்சல், மிரட்டல் என்று பலவிதமாக கணவனும் அவனுடன் பிறந்தவர்களும் ராஜத்தைக் கார்னர் செய்தனர். மகனை விட்டு அகல முடியாத சூழ்நிலையாக இருந்தாலும் சமூகத்தின் கட்டாயத்திற்காக மாமியாரின் கடைசி காரியங்களில் கலந்து கொள்ள தாய்நாடு திரும்பிய ராஜம் அதன்பின் ஒருமுறை கூட மகனிற்கு அழைத்துப் பேசவில்லை.

மனமுடைந்து போயிருந்த மகனைத் தேற்ற கெஞ்சல், மிரட்டல் எதுவுமே வேலை செய்யப் போவதில்லை என்று உணர்ந்திருந்ததால், சுயமாக சிந்தித்து அவனே வெளி வரட்டும் என்று மகனுடன் தொடர்பு வைத்துக் கொள்ளாமல் அமைதியாக காத்திருந்தார் ராஜம். மனைவி, மகனின் மௌனம் செந்திலின் சஞ்சலத்தை அதிகரித்திருந்தது. அவரது தாயார் மறைவை இரண்டு சம்மந்திகளுக்கும் தெரியப்படுத்த முனைந்த போது மகனின் மாமியார், மாமனார் இருவரையும் தொடர்பு கொள்ளமுடியவில்லை. அதை மகனுக்குத் தெரியப்படுத்த,’சொல்லத் தேவையில்லை’ என்று முடித்து விட்டான் மகன். ஏன் அப்படி சொன்னான்? ஏன் அவர்களைத் தொடர்பு கொள்ளமுடியவில்லை? என்ற கேள்விகளுக்கு விடையைத் தேட அவருக்கு அவகாசம் கிடைத்த போது ராஜம் தாய்நாட்டிற்குத் திரும்பி கிட்டதட்ட ஒரு மாதமாகி இருந்தது.

அவருடைய காத்திருப்பு வீணாகவில்லை. “உன் மேலே எந்தத் தப்பும் இல்லை டா..ஆனாலும் அவ கேட்கறதைக் கொடுத்திடு.” என்று மகனுக்கு அறிவுரை அளித்து விட்டு கைப்பேசியை ராஜம் அமர்த்திய போது தான் அறைக்குள் நுழைந்தார் செந்தில்.

மகன் சொன்னதைக் கேட்டு மனம் சுக்கு நூறாக சிதறியிருந்தாலும் அதை மறைத்துக் கொண்டு மகனுக்கு அறிவுரை அளித்திருந்த ராஜம் உணர்வுகள் அனைத்தும் செத்து போய் சுவரை வெறித்தபடி அமர்ந்திருந்தார்.

கடந்த சில மாதங்களாக,’ யாருடைய பிழை இது? யார் பழியை ஏற்பது? என்ற கேள்விகளுக்கு விடையைத் தேடிய போது ஒவ்வொருமுறையும் குற்றவாளியின் பெயர் வேறாக தான் இருந்தது. மகனின் எதிர்காலத்தை கணகச்சிதமாக திட்டமிட்ட கணவன், மகனது திருமணத்தில் பெரிதாக வழுக்கியது தான் மகனின் இன்றைய நிலைக்கு காரணமென்றால் அவன் தான் இந்தப் பழியை சாகும் வரை சுமக்க வேண்டும்.

பெரிய படிப்பு, பெரிய நிறுவனத்தில் வேலை, வெளிநாட்டு வாழ்க்கை என்று கணவர் காட்டிய பாதையில் பயணம் செய்த மகன், சுயமாக சிந்திக்கத் தெரியாமல், முடிவு எடுக்க முடியாமல் சகலத்தையும் தந்தையின் பொறுப்பில் விட்டது தான் அவனுடைய அவலநிலைக்கு காரணமென்றால் மகன் தான் பழியைச் சுமக்க வேண்டும்.

‘வெளிநாட்டு பெண்ணை மருமகளாக ஏற்க மாட்டேன்’ என்று நான் வரையறையை வரைந்ததால் தான் நம்மூர் பெண்ணை அவன் மணக்க நேர்ந்தது. ஒரு பெண்ணோடு எப்படி வாழ வேண்டுமென்ற அடிப்படையை சரியாக சொல்லித் தராதது என் தவறு தானே. என் மகனாக பிறந்ததால் தான் அவனுக்கு இந்த நிலை என்றால் வேறு யாரும் இந்தப் பழியைச் சுமக்க முடியாது நான் தான் கடைசிவரை சுமக்க வேண்டும்.’ என்று பழியை ஏற்றுக் கொண்டு தன்னையே வருத்திக் கொண்டிருந்தவருக்கு சற்றுமுன் தான் அந்தக் கண்ணோட்டம் எத்தனை பெரிய தவறு என்று புரிந்திருந்தது.

மகனின் கையால் தாலி கட்டிக் கொண்டவள் அவனுக்கு மனைவியாக வாழாமல் வேறொருவனின் மனைவியாக வாழ்ந்து அவனது வாரிசை வயிற்றில் சுமந்து கொண்டிருக்கும் அந்தப் பெண்ணிடம் தான் பிழை என்று திட்டவட்டமாக தோன்றியது. மகளின் காதலை மறைத்து, ஊரைக் கூட்டி அவளை வேறொருவனுக்கு திருமணம் செய்து கொடுத்து, இன்று, ஊர் உலகத்தைப் பற்றி கவலைப்படாமல், ஈனச் செயலை செய்த மகளுக்கு துணையாக நிற்கும் அவளுடைய பெற்றோர் தான் அனைத்திற்கும் காரணம் என்று திண்ணமாக தோன்றியது.

அதே சமயம் இனி அவர்களைக் குற்றவாளியாக்கி என்ன ஆகப் போகிறது? என்று விரக்தியடைந்தாலும் மகனின் திருமணத்தில் மறைமுகமாக சம்மந்தப்பட்டவர்களைக் கூட விட்டு வைக்காமல் அனைவரையும் மனத்தில் கழுவேற்றிக் கொண்டிருந்த ராஜத்தின் ரணமாகியிருந்த மனம் இதமாக உணர ஆரம்பித்த போது,

“ராஸ்கல்..என்ன வேலை செய்திட்டு வந்திருக்க? வாழ வழி காட்டாம விவாகரத்துக்கு வழி சொல்லிட்டு வந்திருக்க? என் பொண்டாட்டியா இந்த வீட்லே இருக்கறதுனாலே தானே இப்படியொரு கொழுப்பான வேலையைச் செய்திருக்க..உனக்கு நான் விவகாரத்து கொடுக்கறேன்.” என்று ஜடமாக அமர்ந்திருந்த ராஜத்தின் மேல் பாய்ந்தார் செந்தில்.