கார்த்திக் தன் நிஞ்சாவை வீட்டை நோக்கி செலுத்திக் கொண்டிருந்தான். அடுக்கடுக்காய் அவன் மனதில் பழைய நினைவுகள். தகப்பனின் வழியில் அவனால் யாரையுமே சொந்தம் என்று முழு மனதாக ஏற்றுக் கொள்ள முடிந்ததில்லை.
“இவரு எங்க அப்பா. உன்னோட அப்பா சாமிக்கிட்ட போயிட்டாராம்.’’ புகழும், இனியனும் சிறு வயதில் அவர்களோடு விளையாட முனைந்த போது, அவனை பிடித்து தள்ளி உடலோடு மனதையும் ரணமாக்கிய நினைவுகள்.
“எம் மகனுக்கு ஒரு வாரிசு இல்லாம போச்சே…’’ என இவனைக் காணும் போதெல்லாம் கண்கள் கலங்கும் ஈஸ்வரி ஆச்சி. தாயின் கண்கள் கலங்க, திருப்பதியோ, “அதான் ஒரு விலை பேசி உங்க மகனை வித்தாச்சு இல்ல. இனி ஒப்பாரி வச்சி என்ன செய்ய. மாச மாசம் அவன் நமக்கு படி அளக்கனும்னு தானே அந்த பொண்ணை கட்டிக்கிட்டான். இனி அழுது என்ன செய்ய…?’’ என்றுவிட்டு அவனை முறைத்தபடி கடந்த நினைவுகள்.
ஆறு வயது பாலகனுக்கு அப்போது விவரம் ஏதும் புரியவில்லை. ‘ஏன் இவர்களுக்கு நம்மை பிடிக்கவில்லை.’ என்ற ஆற்றாமையோடு அங்கிருக்கும் சில மணி நேரங்களும் தனிமையில் கழித்து விட்டு வருவான்.
இவன் வீடு வந்ததும், ஆச்சி செண்பாவோ, “அதுங்க கிட்ட எல்லாம் சேராத சாமி. உன் ஆத்தாக்காரி புத்தி கெட்டுப் போய் புதை குழியில விழுந்துட்டா. நம்ம வீட்டு தோட்டத்துல வேலை செஞ்ச கூட்டம். எப்பவும் அதுங்ககிட்ட இருந்து தள்ளி இரு.’’ என்பார்.
இரண்டும் கெட்டான் நிலையில் பெரியவர்களின் சொல்லாடல்கள் புரியாதவனோ, தந்தையின் வீட்டிற்கு வாரம் ஒரு முறை செல்லும் போதெலாம் யாருடனும் பழகாமல், தன் வீடியோ கேம்களோடு தனிமையில் ஒதுங்கி கொள்வான்.
முதலில் அது கருத்தில் பதியாவிட்டாலும், மதுரா, மகனை கேள்வி கேட்கும் போது, “மாம்…! எனக்கு வெளிய விளையாட போக பிடிக்கல.’’ என்றதோடு முடித்துக் கொண்டான்.
அதன் பிறகு வளர வளர தான் அவனுக்கு சில விசயங்களை விளங்கிக் கொள்ள முடிந்தது. அவனுக்கு பத்து வயது நடக்கையில், மெல்ல மெல்ல பால்கி தன் உயிரியல் தந்தை இல்லை என்பதை உணர்ந்து கொண்டான்.
மூன்று வயதாய் இருக்கும் போது, தனக்கு உயிர் கொடுத்த தந்தை வினோத், விபத்தொன்றில் இறந்ததும், சில காலம் வேறு திருமணம் வேண்டாம் என்று ஒதுங்கி இருந்த தாய், மூன்று வருடங்கள் கடந்த நிலையில் தன்னோடு பணிபுரியும் ஒருவரை மணந்து கொண்டதையும் புரிந்து கொண்டான்.
என்னதான் பால்கி உயிரியல் தந்தை இல்லை என்று தெரிய வந்தாலும் அதனால் கார்த்திக்கிற்கு பெரிய வருத்தம் ஏதும் இல்லை. ஏனெனில் அப்படி ஒரு தடுமாற்றத்தை பால்கி கார்த்திக்கை உணர விடவில்லை.
அவன் அதிகாலை தொடங்கி, அசந்து உறங்கும் இரவு வரை, ஒவ்வொரு நொடியும் பால்கியின் பங்கு இருக்கும். ஒரு மிக சிறந்த கதாநாயக பிம்பமாக கார்த்திக்கிற்கு பால்கி இருந்தார். அவனின் முதல் நண்பன் யார் என்று கேட்டால் கண்ணை மூடிக் கொண்டு பால்கி என்று சொல்லி விடுவான் கார்த்திக். அதனால் தான் செண்பா எத்தனை வெறுப்பை விதைத்தாலும், பால்கியை விட்டு கார்த்திக் விலகியதே இல்லை.
இதற்கு இடையில் கார்த்திக் நான்காம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கையில், அவர்கள் வீட்டிற்குள் குட்டி தேவதை அவதாரம் எடுத்து வந்தவள் மித்ரா. கார்த்திக்கின் தங்கை. அவனை ஒதுக்கி வைத்த பால்கியின் குடும்பம் மித்ராவை தலையில் தூக்கி வைத்து கொண்டாடியது.
அது அவனுள் புகைச்சலை கிளப்ப, தந்தையின் வீட்டிற்கு செல்லும் போதெல்லாம், வீடியோ கேம்களை ஒதுக்கிவிட்டு, எப்போதும் குட்டி தங்கையை கையில் வைத்துக் கொண்டு சுற்றினான். யார் கேட்டாலும் தர மாட்டான்.
மீறி அவனிடமிருந்து யாராவது அவளை பறிக்க முயன்றால், கத்தி அழுது ஆர்ப்பாட்டம் செய்வான். பால்கி தான் அதன் பிறகு, “விடுங்க. அவனே வசிக்கட்டும்.’’ என்று மற்றவர்களை சமாதானம் செய்வார்.
முக்கியமாக, புகழ், இனியன் யாரேனும் குழந்தையை எட்டிப் பார்க்க வந்தால், “எங்க பாப்பா..’’ என்று அவளை தன்னோடு இறுக்கி கொள்வான். அப்போது அவனை விட இரண்டு வயது இளையவனான திரு ஒரு ஓரமாய் நின்று நடப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பான்.
கார்த்திக் பதின்ம வயதிற்குள் அடியெடுத்து வைக்கும் போது அவனுக்கு வேறு சில விசயங்களும் புரிய தொடங்கின. பால்கியின் குடும்பம் வறுமை கோட்டிற்கும் கீழ் இருந்தது. பால்கி மட்டுமே படித்து நல்ல அரசுப் பணியில் இருந்தார்.
அதனால் அவரின் குடும்பம் முழுக்க பொருளாதார தேவைக்காய் முற்றும் முழுதாக அவரையே சார்ந்திருந்தது. இதில் இன்னும் பல சிக்கல்கள் இருந்ததை கார்த்திக் உணர்ந்திருந்தான். ஆனால் அதை அவன் அறிந்து கொள்ள எப்போதும் விரும்பியதில்லை.
பால்கி பொருளாதார ரீதியாக தன் குடும்பத்திற்கு உதவி செய்வதை கார்த்திக் ஒரு போதும் பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டான். ஆனால் அவன் உடன் பிறந்தவர்கள் மக்கட் செல்வங்கள், “பால்கிப்பா..’’ என சுற்றி வருவதை தான் அவனால் சகித்து கொள்ள முடியாது.
பால்கி கார்த்திக்கிற்கு ஏதேனும் பொம்மை வாங்கினால், அதே போல தன் உடன் பிறந்தோர் மழலைகளுக்கும் வாங்குவார். கார்த்திக் பொறாமையில் அவற்றை உடைப்பான். இல்லை தனக்கு பொம்மை வேண்டாம் என்று தூக்கி போடுவான்.
மதுரா அவர்களுக்குள் ஒரு நட்பை உருவாக்க எவ்வளவோ முயன்றார். ஆனால் அது இறுதி வரை கை கூடவில்லை. பாவம் மதுரா அப்போது அறிந்திருக்கவில்லை, “அப்பன முழுங்குன பய… எம் பிள்ளை வாரிசு இல்லாம நிக்க இவன் தானே காரணம்…’’ போன்ற சுடு சொற்களால் மழலைப் பருவத்தில் அவன் மனதில் வடுக்களை உருவாக்கியதை.
அப்போது பால்கி, மதுரா திருமணம் முடிந்த புதிது. பால்கியின் அறையில் கார்த்திக் உறங்கி இருந்தான். பால்கியும், மதுராவும் அருகில் இருந்த கோவிலுக்கு சென்றிருந்தனர். கண் விழித்த கார்த்திக், பால்கியின் தாயிடம், “பால்கிப்பா எங்க…?’’ என கேட்க, “ஆமா எங்க அண்ணன் தான் உன்னை பெத்தாரு… வந்துட்டான் … அப்பா நொப்பான்னுகிட்டு… ஆத்தா ஆள் மயக்கியா இருக்கான்னா… மகன் ஆள் முழுங்கியா இருக்கான்.’’ என்று பால்கியின் மூத்த சகோதரி கொதிக்க, “சின்ன பிள்ளைகிட்ட உன் கோபத்தை ஏண்டி காட்டிட்டு இருக்க. அதான் எல்லாம் முடிஞ்சி போச்சே. போய் வேலையைப் பாரு போ.” என பால்கியின் அன்னை ஈஸ்வரி கண்டிப்பார்.
ஆனாலும் உள்ளுக்குள் தன் மகனுக்கு ஒரு வாரிசு இனி வரப் போவதில்லை என்ற வேதனை அந்த மூதாட்டியை வருத்திக் கொண்டே தான் இருந்தது. அது பார்வையிலும், செயலிலும் அந்த சிறுவனின் மீது வெளிப்பட, இவர்கள் தன்னிடம் மட்டும் ஏன் வித்யாசமாக நடந்து கொள்கிறார்கள் என புரியாத நிலையில் அங்கு நடப்பவற்றை எல்லாம் தோண்டி துருவி விசாரிக்கும் தன் பாட்டி செண்பாவிடம் அப்படியே ஒப்புவித்துவிடுவான்.
“அந்த ஒண்ணுமத்த சிறுக்கிங்க உன்னையே பேசுறாளுகளா… அதான் மகன் சம்பளம் முனை முறியாம வேணும்னு உங்க அம்மாகிட்ட ஆர்டர் போட்டுட்டு தானே கல்யாணத்துக்கு வந்து நின்னாங்க. அப்போ தெரியலையா நீ யாருன்னு. இனி நீ அங்க போகாத ராசா. நம்மை வீட்டு திண்ணையில உக்கார வக்கில்லாத பொம்பளைங்க… உன்னை பேச விட்டுட்டு உங்க ஆத்தா பாத்துட்டு இருந்தாளாக்கும். வரட்டும் இன்னைக்கு அவளுக்கு இருக்கு.’’ இப்படி செண்பா அவர்களின் மீது எதிர்மறை எண்ணத்தை விதைக்க, அது ஆல் போல வளர்ந்து நின்றது.
எட்டாம் வகுப்பிற்கு பின் அங்கு செல்வதை கார்த்திக் நிறுத்தி கொண்டான். அதன் பின்னணியில் இருந்த காரணம் யாருக்கும் தெரியாது. மித்ரா ஆறு வயது வரை, தாய், தந்தையோடு மாதம் ஒரு முறை திருச்சிக்கு சென்று வருவாள். வளர வளர அங்கிருந்த வசதி வாய்புகள் அவளுக்கு அசௌகர்யத்தை கொடுக்க, அண்ணனோடுசேர்ந்து அவளும் மெல்ல மெல்ல அவர்களை தவிர்க்க தொடங்கினாள்.
என்ன தான் ஆகாத மாப்பிள்ளை என்றாலும், பேத்தி என்றால் செண்பாவிற்கு கொள்ளை பிரியம். அவளிடமும் பால்கி வீட்டினர் மீதான வெறுப்பின் நஞ்சை விதைத்திருந்தார். கார்த்திக் ஒற்றை தாயின் மகன் என்ற பொறுப்பில் சில காலம் வளர்க்கப்பட்டவன். அது பண்பாய் அவனுள் விதைக்கப்பட்டிருந்தது.