மதுரா அதற்குள் அட்சதை தட்டை எடுத்து வந்திருக்க, அதிர்ச்சி விலகாத இருவரும் சிறியவர்களை ஆசிர்வதித்தனர். மதுராவே அவர்கள் கொண்டு வந்திருந்த சீர் பொருட்களை தாம்பாள தட்டில் அடுக்கி இருவரின் கையில் கொடுக்க, அதற்கு மேல் ஒரு ஐநூறு ரூபாய் கற்றையை திருப்பதி வைக்க, தந்தையும், அத்தையும் மேடையில் நிற்பதை கண்ட புகழ் தானும் அங்கே வேகமாக விரைந்தான். 

மகன் அருகில் வந்ததும், “எங்கடா வந்த இடத்துல சுத்தப் போன…’’ என்று திருப்பதி புகழை வசை பாட, “அண்ணா எல்லாரும் வந்து ஒண்ணா கொடுங்க.’’ என்று பால்கி மூவரையும் பெருமை பொங்க அழைத்தார். 

தன் மகன் தன் பக்கத்து உறவுகளுக்கு மரியாதை கொடுத்ததில் அளப்பரிய ஆனந்தம் அவருக்கு. மூவரும் இணைந்து சீர் தட்டை கொடுக்க, அதை தம்பதிகள் இருவரும் பணிவுடன் பெற்றுக் கொண்டனர். 

தந்தையை கண் ஜாடையில் அருகில் அழைத்தவன், “அப்பா….! மூணு பேரையும் சாப்பிட கூட்டிட்டு போங்க. நம்ம வெங்கட் மாமாவை பக்கத்துல இருந்து பாத்துக்க சொல்லுங்க. பபே சிஸ்டம், சாப்பிட சங்கடப்படுவாங்க.’’ என்று மெதுவாக அவர் காதில் ஓதினான். 

“சரிப்பா…! நான் கூட இருந்து பார்த்துகிறேன்.” என்றவர், “வாங்க சாப்பிட போகலாம்.’’ என்று தன் உடன் பிறப்புகளை அழைத்து கொண்டு விருந்து நடக்கும் தோட்டத்தின் பக்கம் சென்றார். கார்த்திக் கணித்ததை போலவே பபே முறை உணவை பார்த்ததும் அவர்களின் முகத்தில் தயக்கம் வந்தது. 

பால்கி மூவருக்கும் தட்டை எடுத்து கொடுப்பதில் தொன்டங்கி, “இது நல்லா இருக்கும். இதை போட்டுகோங்க.’’ என்று தட்டில் உணவை நிரப்பும் வரை அவர்களோடு சுற்றிக் கொண்டிருந்தார். மேஜையில் அமர்ந்து மூவரும் உண்ண தொடங்கும் வேளை, பெண்வீட்டார் அழைப்பதாக பாண்டி வந்து தெரிவிக்க, அதன் பிறகே அங்கிருந்து நகர்ந்தார். 

பால்கி நகர்ந்ததும் வெண்ணிலா, “அந்த பையன் எப்படி மாறிட்டான் பாரு அண்ணா. முன்ன எல்லாம் என்னைப் பார்த்தா மூஞ்சு கொடுத்து பேசமாட்டான்.’’ என்றார். 

“சும்மா பால்கிப்பா முன்னாடி சீன் போடுறான் அத்தை. அவனை எல்லாம் நம்பாதீங்க. சும்மாவே அவனை கையில பிடிக்க முடியாது. இப்போ பெரிய கிரிகெட் ஸ்டார் வேற. கேக்கவா வேணும்.’’ என்றான் புகழ் சற்றே காட்டமாய். 

“டேய் நடிப்போ நிஜமோ. அது நமக்கு தேவையில்லை. பால்கி முகத்துக்காக வந்தோம். வந்த இடத்துல அந்த பையனும் நல்லபடி நடந்துகிட்டான். அதுவரை சந்தோசம். மத்தபடி அவனால நமக்கு என்ன ஆக வேண்டி இருக்கு.’’ என்று அந்த விசயத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார் திருப்பதி. 

சற்று நேரம் அங்கு எந்த பேச்சும் எழவில்லை. மூவரும் அமைதியாக உணவினை உண்டு கொண்டிருந்தனர். அப்போது அங்கே வந்து அமர்ந்தார் மதுராவின் ஒன்றுவிட்ட சகோதரன் சக்திவேல் பாண்டியன். 

“என்ன திருப்பதி சௌக்கியமா…?’’ என்ற அவர் குரலில் திருப்பதி நிமிர்ந்து பார்க்க, வெண்ணிலா கையில் இருந்த உணவை அப்படியே தட்டில் வைத்தார். “ஏன்னா ஆளுங்க ரொம்ப கம்மியா இருக்கு. வீட்ல எல்லாரையும் கூட்டிட்டு வர வேண்டியது தானே. இந்த மாதிரி பெரிய இடத்தை எல்லாம் அப்புறம் எப்ப பார்க்குறது.’’ என்றார் சக்தி நக்கலாய். 

“நாங்களே இங்க அதிகம் தான்.’’ என்றான் புகழ். “அடேங்கப்பா… உன் பெரிய பையன் தான…! எவ்ளோ உசரமா வளந்துட்டான். பின்ன காட்ல மேட்ல களை எடுக்குற வகையறா உடம்புன்னா சும்மா கின்னுன்னு தான இருக்கும். பையன் படிக்கிறானா…! இல்ல உங்க வம்ச தொழில்ல இறங்கிட்டானா.’’ என சக்தி விசாரித்ததும், புகழ் எழுந்து நின்றான். 

உடனே தானும் எழுந்து நின்ற சக்தி, “பாருடா…! ரோசமெல்லாம் பெரிய ஆம்பளை மாதிரி வருது.” என்றுவிட்டு மெலிதாய் சிரித்த சக்தி, கண்களை கூர்மையாக்கி திருப்பதியை ஒரு அளவிடும் பார்வை பார்த்தார். 

“உன் தம்பி உசிரோட அலைய காரணமே என் தங்கச்சி தான். பையன பாத்து வச்சிக்க. எம் பங்காளி பொண்ணு பின்னாடி உன் மகன் சுத்திட்டு இருக்காப்ள. என் தங்கச்சி முகத்துக்காக ஒவ்வொரு முறையும் அமைதியா போயிட்டு இருக்க மாட்டேன். சொல்லிவை.’’ என்ற சக்திவேல் அங்கு வந்த கார்த்திக்கை கண்டதும் குழைந்து, “மாப்பிள்ளை…’’ என்றபடி முன்னால் வர, “மாம்ஸ்…’’ என்றபடி அவனும் அவரை தாவி அணைத்துக் கொண்டான். 

அந்த காட்சியை அருவருப்போடு முகத்தை சுளித்தபடி பார்த்துக் கொண்டிருந்தான் புகழ். “சாப்டீங்களா அத்தை…!’’ என்று கார்த்திக் விசாரிக்க, “ஆச்சுப்பா…! இனி கை கழுவிட வேண்டியது தான்.’’ என்று சக்திவேலை பார்த்து முறைத்தபடி கூற, “பால்கிப்பா…! அவங்களுக்கு எல்லாம் டெசர்ட் சர்வ் பண்ணுங்க.’’ என்றவன் சக்திவேலோடு பேசியபடி முன் செல்ல, மாறிவிட்ட தன் உடன் பிறப்புகளின் முகத்தை கண்ட பால்கி, “அந்த கிறுக்குப்பய ஏதாச்சும் சொன்னானா…?’’ என்றார். 

“அதெல்லாம் ஒண்ணும் இல்ல. எப்பவும் போல வெட்டி கத பேசிட்டு போறான். நீ போய் ஆக வேண்டியத கவனி. ஊருல ஆட்டு மாட்டை எல்லாம் போட்டது போட்டபடி வந்தாச்சு. நாங்க பத்தரை மணி ரயிலுக்கு கிளம்புறோம். மதுராகிட்ட ஒருவார்த்தை அப்புறம் சொல்லிடு.’’ என்று திருப்பதி சாதரணமாய் பேச, “பத்து மணிக்கு உங்களை நானே கொண்டு வந்து ரயில்வே டேசன்ல விட்டுடுறேன். உள்ள பாட்டு கச்சேரி நடக்குது. வாங்க போலாம்.’’ என்று மூவரையும் கையோடு தன்னுடன் அழைத்து சென்றார். 

மேடையில் பிரபல இசை வல்லுனர்கள் கீதம் இசைக்க, ஒருகையில் கிட்டாரை கையில் வைத்திருந்த பிரதாப், “என் இனிய பொன் நிலாவே…’’ பாடிக் கொண்டிருந்தான். அவனுக்கு அருகில் அவனின் உயிர் தோழர்கள். கூட்டம் இசையை உள்வாங்கி மெல்ல மெல்ல அமைதியில் மூழ்கியது. 

அதுவரை மனசஞ்சலத்தில் இருந்த வெண்ணிலா மற்றும் திருப்பதியின் மனது கூட அமைதி கொண்டது. கானம் முடியவும், “ஹே…’’ என்று ஆர்பரித்து வெளி வந்த முதல் சத்தம் மதுராவினதாய் இருந்தது.

அடுத்து மணமக்கள் மேற்கத்திய கலாச்சார முறையில் இணைந்து ஜோடி நடனமாடினர். அவர்களோடு அவர்களின் நண்பர்கள் இணைய, அப்படியே வட்டம் பெரிதாகி மொத்தத்தில் மண்டபத்தில் இருந்த மொத்த கூட்டமும் துள்ளல் இசைக்கு ஏற்ப துள்ளிக் கொண்டிருந்தனர். 

அவர்களோடு ஒன்ற முடியாமல், திருப்பதி குடுமப்தினர் தனியே அமர்ந்திருந்தனர். இரவு மணி பத்தை நெருங்கியதும், நண்பர்களுக்கு நடுவில் தானும் ஆடுகிறேன் என்று குதித்துக் கொண்டிருந்த பால்கி கூட்டத்தை விட்டு வெளியே வந்தார். 

மூவரும் அமைதியாக தனியே அமர்ந்திருப்பதை கண்டவர், தன் தலையில் தானே தட்டிக் கொண்டு, “டேய்… அவங்க ரெண்டு பேருக்கும் தான் இதெல்லாம் ஒத்து வராது. உனக்கு என்னடா..? நீ வந்து ஆட வேண்டியது தானே.’’ என்றார் புகழைப் பார்த்து. 

அவன் உடனே சலிப்பாக, “ஆமா…! இப்ப அது ஒண்ணு தான் குறைச்சல்.” என்று வாயிற்குள் முணகி கொள்ள, “என்ன…?’’ என பால்கி மீண்டும் வினவ, “அதெல்லாம் ஒண்ணுமில்லை. நீ வண்டியை எடு பாலு கிளம்பலாம். சின்ன பையன்கிட்ட எதுக்கு சரிக்கு சமமா பேசிட்டு இருக்க.’’ என்ற திருப்பதி முன்னால் நடக்க, பால்கி வேறு வழியின்றி அவர்களை பின் தொடர்ந்தார். 

அவர்களை ரயில் நிலையத்தில் இறக்கி விட்டவர், ரயில் கிளம்பும் வரை உடனிருந்து அவர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தார். ரயில் கிளம்பியதும், தங்கள் உறங்கும் இருக்கையில் வந்து திருப்பதி அமர, அவருக்கு எதிர் இருக்கையில் இருந்த புகழ், “நம்ம சித்தப்பாவுக்கு என்ன குறை. இருபது வருசத்துக்கு முந்தியே லட்சத்துல சம்பளம் வாங்கின ப்ரோபசர். தன் தங்கச்சிக்கு வாழ்க்கை கொடுத்த குடும்பம்னு ஒரு மட்டு மரியாதை இல்லாம அந்த ஆள் வந்து பேசிட்டு போறான். நாமளும் அமைதியா கேட்டுட்டு இருக்கோம். அவனையெல்லாம்…’’ புகழ் அடுத்து என்ன பேசி இருப்பானோ, “யாருடா அந்த பொண்ணு..?’’ என்று திருப்பதியின் குரல் அவனை தடுத்து நிறுத்தியது. 

“என்ன நினச்சிட்டு இருக்க நீ. வெளிய தெரியிற நாட்டு நடப்பை வச்சி எல்லாம் சமம்னு நினச்சிட்டு இருக்கியா. அவனுங்க கண்ணுக்கு தெரியாத கோட்டை காத்துல வரைஞ்சி வச்சி இருக்கானனுங்க.  எங்க அப்பன் செத்த சவத்துக்கு பறை அடிக்கிற கூலி ஆளுடா. உன் சித்தப்பன் படிச்சி பெரிய வாத்யார் ஆயிட்டான். ஆனாலும் ஊருக்குள்ள அவனை பார்க்குற பார்வை மாறிடுச்சின்னு நினைக்கிறியா…? இன்னைக்கும் மேல தெருகாரனுக்கு நாங்க பறை அடிக்கிற மாயாண்டி மவனுங்க தான். 

அதையெல்லாம் மாத்த இன்னும் எத்தனை வாத்தியாருங்க நம்ம வம்சத்துல இருந்து உருவாகி வரணுமோ எனக்கு தெரியல. இதோ பாரு புகழ் நீ மெத்த படிச்சி உன் தம்பிக்காரனாட்டம் ஜில்லா கலெக்டர் வேலைக்கு தான் போகணும்னு நான் சொல்லல. ஆனா அந்த ஜில்லா ஆபிஸ்ல ஒரு அரசாங்க வேலையாச்சும் வாங்கப்பாருன்னு தான் சொல்றேன். படிப்பும், அதிகாரமும் தாண்டா உங்களை காத்து நிக்கிற வேலியா இருக்கும். எனக்கு தெரிஞ்சதை நான் சொல்லிட்டேன். இதுக்கு மேல பொண்ணு சோக்கு தான் முக்கியம்னு போய் வாழ்கையை கெடுத்துகிட்டா வயசான காலத்துல அநாதைப் பொணமா போயிட்டு போறோம். அவ்ளோ தானே.’’ என்ற திருப்பதி தன் கலங்கி கணங்களை துடைத்து கொண்டார். 

அவர் அப்படி பேசியதும், “அண்ணா…!’’ என்று வெண்ணிலாவும், “பா…’’ என்று புகழும் அலறினர். “எதுக்குண்ணே ஆகாத வார்த்தையெல்லாம் பேசுறீங்க. வேண்டாம்னு எடுத்து சொன்னா நம்ம பிள்ளை கேட்டுகப் போறான்.இதுக்கு போய் பெரிய வாரத்தை எல்லாம் பேசிக்கிட்டு.’’ என்று வெண்ணிலா அங்கலாய்த்தார். 

அவர் புகழை பார்த்த பார்வையில், “டி.என். பி.எஸ்.சி சென்டர்ல கூட படிக்கிற பொண்ணுப்பா. இவங்க ஆளுங்கன்னு எல்லாம் தெரியாது. சும்மா டவுட் கேக்க பேசும். அவ்ளோ தான்.” என்றான் புகழ் உள்ளே போய்விட்ட குரலில். 

“அதானே. என் அண்ணன் பசங்களை பத்தி எனக்கு தெரியாதா…? அந்த விளங்காத கோண வாயன் வாய்க்கு வந்ததை உளறிட்டு போய் இருக்கான் அண்ணா. நீங்க அதுக்குள்ள நம்ம புகழை திட்டிடீங்க. அதெல்லாம் நம்ம புள்ள தங்கம்.’’ என்று வெண்ணிலா புகழை தாங்கிப் பேசினார். 

“அவன் சொல்றது நிஜமா இருந்தா சரி தான். சரி நேரமாச்சு. போய் படுங்க. டேய் புகழு. போன்ல அலராம் வச்சி நாலரைக்கு எழுப்பிவிட்ரு.’’ என்று திருப்பதி சொல்ல, புகழ் சரி என்பதாய் தலை அசைத்தான். 

புகழ் தன் இருக்கையில் சென்று படுத்துக் கொண்டான். அவன் மனத்திரையில் ‘நான் உனக்கு ஒன்றுமே இல்லையா…?’ என கேள்வி கேட்டபடி சிவரஞ்சனி தோன்றினாள்.  

தன் ஆசைதான் மொத்த குடும்ப பந்தத்தையும் எரிக்கும் நெருப்பாக மாறப் போகிறது என்பதை புகழ் அன்றைக்கு அறியாமல் போனதால், பலரின் வாழ்கையை புரட்டிப் போடும் சம்பவங்கள் நடப்பதற்காய் காத்திருந்தன.        

பால் வீதி வளரும்.