மித்ரா கண்களை கூட சிமிட்டவில்லை. அவனையும், அவன் உயர்த்திய கரத்தையும் அழுத்தமாய் பார்த்தாள். தன்னையே நொந்து கொண்ட திரு மெதுவாய் கைகளை கீழே இறக்கினான். “கற்பு ஒரு நெறி என்றால் அஃதை ஆணுக்கும், பெண்ணிற்கும் பொதுவில் வைப்போம்னு பாரதி பாடி இருக்கார் தெரியும் இல்ல. எங்க அண்ணனை நீங்க ஒரு ரேபிஸ்ட் அளவுக்கு கீழ இறக்கி பேசி இருந்தீங்க. அவனுக்கு எவ்ளோ வலிச்சி இருக்கும். என்னாலையே அத இன்னும் மறக்க முடியல” என்றவள் தன் கண்களை மூடி அதை கடக்க முயன்றாள்.
“நீங்க எவ்ளோ கேவலமா அவனை போர்ட்ரேட் செஞ்சி இருந்தாலும், அவன் தங்கச்சியும், உங்க தங்கச்சியும் சந்தோசமா இருக்கணும்னு கேம்ல விட்டு கொடுத்துட்டு குழந்தை மாதிரி சிரிச்சிட்டு இருக்கானே அது தான் அவன்.’’ என்றவள் கண்களை மூட அதிலிருந்து இரண்டு பெரிய நீர்த்துளிகள் கன்னம் நனைத்தன.
திரு தான் பேசியது தவறு என்று மட்டுமே நினைத்திருந்தான். கார்த்திக்கிடம் பழகும் போது தான் அது எத்தனை அபத்தம் என்பதை உணர்திருந்தான். அவனுக்கு மித்ராவை எப்படி ஆற்றுப்படுத்துவது என்றே தெரியவில்லை.
நொடியில் முடிவெடுத்தவன், மித்ராவின் இரு கன்னங்களையும் தன் கைகளில் தாங்கி, அழுத்தமாய் அவள் இதழ்களில் முத்தமிட தொடங்கினான். முதலில் திமிறிய மித்ரா, பின் திருவின் கரங்களில் அடங்கி அப்படியே கரைந்து போனாள்.
நீண்ட நேரத்திற்கு பின் திரு மெதுவாய் விலக, கண்ணீர் வழிந்த கண்களோடு, “எங்க அண்ணாவை மோசமா நினச்ச நீங்க எனக்கு வேண்டாம்னு தான் ஒவ்வொரு முறையும் நினைக்கிறேன். ஆனா… உங்களை தாண்டி வேறொரு வாழ்கையை என்னால தேர்ந்தெடுக்க முடியல. என் போராட்டத்தை பார்த்துட்டு எங்க அண்ணன் தான் உங்களை தேடி வந்து இருக்கணும் ரைட். எங்க அண்ணன் தானே உங்களை தேடி வந்தான்.’’ என்றாள் வேதனை நிரம்பிய குரலில்.
மித்ராவை தன்னோடு சேர்த்து அணைத்து கொண்டவன், “ஆமா… உங்க அண்ணா தான் என்னை தேடி வந்தான். நடந்ததை மாத்துற சக்தி எனக்கு இல்லை மித்து. ஆனா இனி நடக்கப் போறதை நல்லபடியா என்னால மாத்த முடியும். கார்த்திக் எப்பவும் எனக்கு ஒரு பெஸ்ட் பிரண்டா இருப்பான். எல்லாரையும் விட ஒரு முக்கியமான இடம் என் இதயத்துல இனி அவனுக்கு எப்பவும் இருக்கும். அதை நீ நம்பணும். எனக்கு ஒரு வாய்ப்பு கொடு.’’ என்றான்.
மித்ரா கண்களில் வழிந்த கண்ணீரை துடைத்த படி மெதுவாக தலை அசைத்தாள். அவள் கண்களில் மெலிதாக முத்தமிட்டவன் அவளை அழுத்தமாய் தன்னோடு அணைத்துக் கொண்டான்.
அடுத்த இரு நாட்களில், இரு பெண்களும் ஒரே மேடையில் விருது பெற, அதன் காரணகர்த்தாவாய் பின்னணியில் இயங்கிய ஆண்கள் கைதட்டி அவர்களின் வெற்றியை கொண்டாடினர்.
திரு மித்ராவின் அருகில் செல்லும் போதெல்லாம், அங்கு போய் கேட் போடும் வேலையை செவ்வனே செய்து தன் பழிவாங்கும் படலத்தை துவங்கினான் கார்த்திக். மித்ராவிற்கு திருவின் தவிப்பு புரிந்தாலும், அண்ணனோடு சேர்ந்து, அவனை தவிக்கவிட்டாள்.
இடையில் நின்று போன நாட்களுக்கும் சேர்த்து மித்ராவின் திருமண ஏற்பாடு மொத்தமாக களை கட்ட துவங்கியது. இந்தியாவின் அத்தனை பிரபலங்களும் கலந்து கொண்ட திருமணம் ஒட்டு மொத்த இந்திய தொலைக்காட்சிகளின் கவனம் ஈர்த்திருந்தது.
ராஜா முத்தையா திருமண மண்டபம். மொத்த சொந்தங்களோடு, முக்கிய கிரிக்கெட் வீரர்கள், தொழில் அதிபர்கள், அரசியல்வாதிகள் என அனைவரும் குழுமி இருந்தனர். அந்த இனிய நொடிகளை ப்ராட்கேஸ்ட் மூலம் செய்தி அலைவரிசைகள் ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் ஒளிபரப்பிக் கொண்டிருந்தன.
திரு மித்ராவின் கழுத்தில் தாலி கட்டியதும், கண்களில் திரண்ட நீரோடு அவள் அவனை நிமிர்ந்து பார்க்க, திருவோ அருகில் நின்று கொண்டிருந்த கார்த்திக்கின் கரம்பற்றி இழுத்து, அழுத்தமாய் அவன் கன்னத்தில் முத்தமிட்டவன், “ஐயம் சோ சாரி கார்த்திக். ஐ லவ் யூ…’’ என்றான் சற்றே கலங்கிய விழிகளோடு.
திருவிடமிருந்து அப்படி ஒரு செய்கையை எதிர்பாராத கார்த்திக் திகைத்து போனான். பால்கி, மற்றும் மதுராவிற்கு கூட திருவின் வார்த்தைகளின் மீதிருந்த கோபம் வடிந்திருந்தது. மித்ராவும், பிருந்தாவும் நெக்குருகி போயினர்.
முக புத்தகம், இன்ஸ்டாகிராம் என அனைத்திலும், அந்த முத்த காட்சி அன்றைக்கு வைரலாகி போனது.ஒட்டு மொத்த உலகும் அவனின் அந்த மன்னிப்பை கேட்டிருந்தது. அதன் பின்னணி என்னவென்று யாருக்கும் புரியவில்லை என்றாலும், ஏதோ மாமன், மச்சான் நெகிழ்வு என எண்ணிக் கொண்டனர்.
கார்த்திக் அந்த விடியோவை தன் இன்ஸ்டாவில் பதிவிட்டு, “இப்படி எதிபாராமல் இவன் முத்தம் கொடுப்பான் என தெரிந்திருந்தால் முகத்திற்கு ஹெல்மெட் போட்டு திருமணத்திற்கு சென்றிருப்பேன். சந்தோஷத்தில் தலை கால் புரியாமல் என் கன்னத்தை ஈரம் செய்த மச்சான்… இனி தங்கை கணவன்களிடம் ஜாக்கிரதையாய் இருக்க வேண்டும் போல…’’ என ஆங்கிலத்தில் பதிவிட அதன் பின்னணி மறைந்து, கார்த்திக்கின் ஹாஸ்யம் அங்கே ஆதிக்கம் செலுத்தியது.
ஒட்டு மொத்த உலகத்தின் முன் கொஞ்சமும் கர்வமின்றி, தன் தவறை முழுதாய் உணர்த்து மன்னிப்பு கேட்ட திருவை மித்ரா முன்னிலும் அதிகமாய் காதலித்தாள். ஒரு வழியாய் ஆரவாரங்கள் ஓய, கார்த்திக் சொன்னபடி திருவின் முதலிரவிற்கு வேட்டு வைத்திருந்தான்.
அவர்கள் வீட்டு மொட்டை மாடியில் இரண்டு பாய்களை விரித்து, இன்னைக்கு நாம இங்க தான் தூங்குறோம் என திருவை தள்ளிக் கொண்டு வந்திருந்தான். அவன் கையில் அவன் மகள். மருமகளை அள்ளி நெஞ்சில் போட்டுக் கொண்டவன், கார்த்திக் எதிர்பார்த்ததை போல முரண்டு பிடிக்காமல் அவன் அருகில் படுத்துக் கொண்டான்.
திரு எதுவும் பேசாமல் கார்த்திக்கின் மீது காலை தூக்கி போட காண்டாகிப் போனவன், “டேய்… அவனா நீ! ஏதோ கெஞ்சுவ பஸ்ட் நைட் வேணும்னு கதறுவன்னு பார்த்தா… நீ என்னடா என் மேல காலை போடுற. ஆளை விடு ராசா. நான் என் பொண்டாட்டிகிட்ட போகணும். என் தகப்பாவுக்கு எங்க மம்மிக்கு தெரியாம ரெண்டு சமோசா மிக்ஸ் வாங்கி கொடுத்து ஆதுவை பாத்துக்க சொல்லி ஸ்பெஷல் பர்மிசன் வாங்கி இருக்கேன். நான் போறேன்.’’ என எழுந்து கொள்ள முயற்சி செய்ய, அவன் பக்கம் புரண்டு படுத்த கார்த்தி, தன் இரு கால்களாலும் மச்சானை சிறை செய்தான்.
“டேய்… விடுடா… எரும. இனி நீ என் தங்கச்சி ரூம் பக்கம் போகும் போது கேட் போட மாட்டேன். விடுடா… உன் காலே காண்டா மிருகம் மாதிரி கனக்குது. காலை எடுடா…’’ என கதற, கார்த்திக்கின் அருகில் பிருந்தாவும், திருவின் அருகில் மித்ராவும் இலகு இரவு உடையில் வந்து படுத்தனர்.
கார்த்திக் புரியாமல் மனையாளை பார்க்க, “இன்னைக்கு நாலு பேரும் மூன் நைட் கொண்டாட போறோம்.’’ என்றாள் இதழில் மலர்ந்த சிரிப்போடு. அப்போது தான் கார்த்திக் வானத்தை கவனித்தான். அன்றைக்கு முழு நிலவு பிரகாசமாய் ஒளிர்ந்து கொண்டிருந்தது.
நிலாச் சோறு கேள்விப் பட்டு இருக்கிறான். அது என்ன புதிதாய் நிலா இரவு, என எண்ணிய கார்த்திக் திருவை பார்க்க, மித்ராவின் தலைக்கு தன் வலது கையை தலையணையாக்கியவன், கார்த்திக்கை நோக்கி திரும்பி, “நாம, நமக்கு பிடிச்சவங்க, கூட நிலா… நிலாவை பார்த்துட்டே நிம்மதியா ஒரு தூக்கம்.’’ என்றான் கண்கள் சிமிட்டி.
அவன் இதழில் இருந்த புன்னகை கார்த்திக் இதழ்களிலும் மலர்ந்தது. தன் மனையாளை ஒற்றை கையில் அணைத்து கொண்டவன், நேரே நிலவை பார்த்து படுத்தான். மாமனின் நெஞ்சில் படுத்திருந்த ஆதாராவும் நிலவை நோக்கி திரும்பி நேராய் படுத்து கொண்டாள்.
அதே நேரம் கீழே பால்கியின் நண்பர்கள் வழமை போல அவனை சூழ்ந்து அமர்ந்திருக்க, பிரதாப், கையில் கிடாருடன், ‘என் இனிய போன் நிலாவே’ பாடிக் கொண்டிருந்தார். அவரின் ஒரு வயது பேரன் அவினாஷ் தாத்தாவின் குரலை ரசித்து கேட்டுக் கொண்டிருந்தான்.
சந்திர சேகர், கிருஷ்ணன், பாண்டி மூவரும் லேசாக அசைந்து ஆட, மதுரா அந்த பாடலில் லயித்திருந்தாள். பால் நிலா பூமிக்கு தன் குளிர் வெளிச்சத்தை பரப்பிக் கொண்டிருந்தாள்.
மேலே சயனித்திருந்த நால்வரின் கரங்களும் ஒன்றில் மற்றொன்று சங்கிலித் தொடராய் பிணைந்திருந்தது. லேசாய் உறக்கத்திற்கு கிறங்கிய விழிகளில் நிலவொளி சிதற, அவரவர் பால்வெளிக் கனவுகள் மெல்ல கருக் கொள்ள துவங்க, பிரபஞ்சத்தின் பால்வெளியோ நிலவொளியாய் அவர்களை நோக்கி புன்னகைத்து கொண்டிருந்தது.