தன் கையில் இருந்த புத்தகத்தை அன்றுடன் பதினாறாவது முறையாக படித்துக் கொண்டிருந்தான் திரு.எத்தனை முறை படித்தாலும், அந்த புத்தகம் அவனுக்கு சலிப்பை ஏற்படுத்துவதில்லை. அதற்கு இரு முக்கிய காரணங்கள் உண்டு.
ஒன்று அந்த கதையின் களம். இரண்டு அந்த கதையை எழுதிய எழுத்தாளர். இரண்டுமே அவன் மனதுக்கு மிகவும் நெருக்கம். புத்தகத்தை படித்து முடித்தவன், தொலைகாட்சியை உயிர்ப்பித்து, செய்திப் பிரிவை வைத்தான்.
செய்தியை வாசித்து கொண்டிருந்த பெண், “2028 ஆம் ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த விருதை எழுத்தாளர் ஆதாரா அவர்கள், கடந்த வருடத்தில் எழுதிய, ‘பால்வெளிக் கனவுகள்’ என்ற புதினத்திற்காக பெறுகிறார்.
தொடர்ந்து செய்தி வாசிப்பாளர் பேசிக் கொண்டே இருக்க பின்னணியில், எழுத்தாளரின் வீடு காட்டப்பட்டது. பத்திரிக்கைகள், அவரை பேட்டி காண குழுமியிருந்தனர். மறித்து மறித்து கேட்கப்பட்ட அத்தனை கேள்விகளுக்கும், “நான் வெறும் கருவி. இந்த புகழ் அத்தனையும், பல சாதனைகளை தாண்டி விண்வெளியில் பயணித்து வந்த பிருந்தா அவர்களயே சாரும்.’’ என தெளிவாக பதில் கொடுத்து கொண்டிருந்தாள் அவள்.
திரு கண் இமைக்க மறந்து அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். உடல் மொழியில் அதிகப்படியான கம்பீரம் சேர்ந்திருந்தது. புதிதாய் முகத்தில் இணைந்திருந்த கண்ணாடி, அவள் அறிவின் தீட்சண்யத்தை பறை சாற்றிக் கொண்டிருந்தது.
அவர்கள் வீசிய அத்தனை கேள்விகளையும் கம்பீரமாக எதிர்கொண்டவள், முகம் முழுக்க பரவிய புன்னகையுடன் “நன்றி! வணக்கம்!” என சொல்லி விடை பெற்ற போது, நீங்காது அவள் முகத்தில் குடியிருந்த இறுக்கத்தை திருவின் உள்ளம் கண்டு கொண்டது.
இன்னும் எத்தனை எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அவன் வாழ்வில் எதுவும் மாறப் போவதில்லை. திரு தன் முப்பதாறு வயதை நெருங்கிக் கொண்டிருந்தான். தற்சமயம் சேலம் மாவட்ட ஆட்சியராக பொறுப்பில் இருந்தான்.
அவள் வீதி கடக்கும் காற்றை தான் சுவாசிக்கிறான். ஆனாலும் அவளை கண்டு நெடிய மூன்று வருடங்கள் உருண்டிருந்தது. அவன் குடும்பத்தை விட்டே ஏறக் குறைய விலகி மூன்று ஆண்டுகள் ஆகிறது.
அன்றைக்கு தான் பேசிய வார்த்தைகள் அதிகம் என்பதை திரு உணர்வதற்குள், அத்தனையும் முடிவிற்கு வந்திருந்தது. அன்றைக்கு யாரும் யாரிடமும் அதிகப்படியாய் ஒரு வார்த்தை பேசவில்லை.
அமைதியாக தங்கள் அறைக்குள் சென்று உறங்கினர். கார்த்திக் பிருந்தாவை தன் கை வளைவிலேயே தன் அறைக்கு அழைத்து சென்றிருந்தான். அடுத்த நாள் காலை பிருந்தா அவன் முகம் பார்க்காமல், “நீங்க என்னை என்ன வேணா பேசி இருக்கலாம் அண்ணா. கார்த்திக்கை அப்படி மோசமா பேசி இருக்க கூடாது. சாரி அண்ணா. இது நாங்களே எதிர் பார்க்காம நடந்த விஷயம். உங்க ஆசையை நிறைவேத்த முடியாம போனதுக்கு ஐயம் சோ சாரி. ஆனா இப்போ நான் மிசஸ் பிருந்தா கார்த்திக். இனி நீங்க அவரை மோசமா பேசினா என்னால அதை சகிச்சிக்க முடியாது. உங்களால எப்போ கார்த்திக்கை உங்க மச்சானா ஏத்துக்க முடியுதோ, அப்போ நீங்க என்கிட்ட பேசலாம். ஏன்னா இப்போ நான் உங்க தங்கச்சி மட்டும் கிடையாது அண்ணா. பை.” என்றவள் கார்த்திக்குடன் பெங்களூருக்கு கிளம்பி சென்றாள்.
திருவும் மௌனமாகவே கடலூர் வந்து சேர்ந்தான். அதன் பிறகு நடந்த நிச்சயம் முறிந்தது என்ற குறுஞ் செய்தி மட்டுமே மித்ராவிடம் இருந்து வந்தது. நடந்தவைகளை ஏற்றுக் கொள்ள முடியாமலிருந்த திருவிற்கும் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ள கொஞ்சம் நேரம் வேண்டி இருந்தது.
ஆனால் ஆறு மாதங்களுக்கு பிறகும் அவள் தன் நிலையிலிருந்து மீண்டு வரமாலிருக்க, திரு பதட்டமானான். அவன் அழைப்புகள் ஏற்கப்படாமல் போக, தன் தாயின் மூலம் அவளை தொடர்பு கொள்ள முயன்றான்.
அவரோ, “அண்ணன் பிடி கொடுத்தே பேச மாட்டேங்கிறார். பிருந்தா புள்ள மாசமா இருக்கு. வேலையை விட்டுட்டு வான்னு சொன்னா புடிவாதமா பெங்களூர்ல உக்காந்துட்டு இருக்கு. அந்த கார்த்திக் தம்பியும் அதுக்கு ஒத்து ஊதிட்டு அங்கேயே இருக்கார். என்னவோ எனக்கு எதுவும் புரியல. படிச்சவன் கணக்கு மொத்தமும் தப்புங்கிறது சரியாத்தான் இருக்கு.’’ என்று அவர் புலம்ப தொடங்க, திரு அதன் பின் அவருக்கு அழைக்கவே இல்லை.
இடையில் கார்த்திக் இந்திய சர்வேத போட்டிகளில் இருந்து இரண்டு ஆண்டுகள் விலகுவதாக வெளி வந்த செய்தி கிரிக்கெட் ரசிகர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது. திருவிற்கு நடப்பது எதுவும் புரியவில்லை என்றாலும், கார்த்திக்கை ஏற்றுக் கொள்ளவும் பிடிக்கவில்லை.
தங்கையை வசியப்படுத்தி தன்னிடமிருந்து பிரித்துவிட்டான் என்ற கோபம் அவனுக்குள் கனன்று கொண்டே இருந்தது. கார்த்திக்கை ஏற்றுக் கொள்ளாமல் தங்கையிடம் பேச முடியாது என்பதால் அவளிடமிருந்தும் விலகியே இருந்தான்.
இதற்கிடையில், மித்ரா எழுதிய, ‘மழை முடிந்த மாலை’ என்ற கவிதை தொகுப்பு இளைய வாசகர்களின் கவனம் ஈர்த்தது. காதல் தோல்வியை கருவாய் அமைத்து அவள் எழுதிய கவிதைகள் மொத்தமாய் வாசகர்களை ஈர்த்திருந்தது.
‘நான் மூங்கில்.
என்னை ஒடித்தாய்.
புல்லாங் குழல் செய்தாய்.
விடிய விடிய கீதம் இசைத்தாய்.
பின் ஒரு மழைநாளில்
விறகாய் எரித்து குளிர் காய்ந்தாய்.
எஞ்சிய சாம்பலில்
எங்கிருக்கிறது காதல்?’
அவளின் அந்த தொகுப்பில் அவனுக்கு மிகப் பிடித்த கவிதை அது. அதன் பிறகு நிறைய கவிதைகளும், சில புதினங்களும் எழுதினாள். ‘காக்டெயில் காதல்’ என்ற தலைப்பில் இளைய சமூகம் காதல் என்ற வலையில் விழுந்து சீரழிவதை பிரபலமான வார இதழ் ஒன்றில் தொடராக எழுதினாள்.
அதில் ஒட்டு மொத்த தமிழ் வாசகர்களின் கவனமும் அவளின் மீது திரும்பியது. இதற்கிடையில் கார்த்திக், பிருந்தா தம்பதியினருக்கு பெண் குழந்தை பிறந்தது. வெண்ணிலா மிகுந்த பூரிப்போடு மகனுக்கு அழைத்து செய்தியை பகிர்ந்தார்.
நெஞ்சம் நெகிழ, கண் கலங்க அந்த செய்தியை உள்வாங்கினான். மருமகள் என்ற உறவு. தாய் மாமன் என்ற பெருமிதம். வேக வேகமாய் முக நூலை திறந்தான். மித்ரா அவனை ஏமாற்றாமல் தங்கள் வீட்டின் புதிய வரவின் செய்தியை அங்கே பகிர்ந்திருந்தாள்.
கார்த்திக் பிருந்தாவின் நெற்றியில் முத்தமிட்டு கொண்டிருக்க, மித்ராவின் கரங்களை ஒரு பிஞ்சுக் கரம் இறுக பற்றியிருந்தது. “அத்தையானதில் ஆனந்தம்.’’ என்ற ஒரு வரியை அந்த புகைப்படம் சுமந்திருந்தது.
குழந்தையின் முகம் தெரியவில்லை. ஆனால் அவளின் பிஞ்சுக் கரம் ஒன்றே அவனை நெகிழ்த்த போதுமானதாய் இருந்தது. கார்த்திக் குழந்தை பிறந்ததை குறித்து புலனத்தில் செய்தி அனுப்பி இருந்தான். மற்ற யாரும் அவனுக்கு அழைத்து சொல்லவில்லை.
அந்த குழந்தையை கொல்ல சொன்ன நொடிகள் நினைவில் வந்து அவன் மன நிம்மதியை குலைத்தது. வைரத்தில் மருமகளுக்கு அணிகள் வாங்கி, பெரிய பரிசு பெட்டகத்தில் பிறந்த குழந்தைக்கு தேவைப்படும் அத்தனையும் வாங்கி குவித்து, பிருத்தா பிரசவித்திருந்த மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தான்.
ஒரே நாளில் சுவற்றில் அடித்த பந்தாக, “அப்பா கூட பேசுற மாமாவோட கிப்ட்ஸ் தான் வாங்குவேன்- ஆதாரா’ தங்கையின் கையெழுத்தே அவள் அவனோடு பேசிய நிறைவை தர, கண் கலங்க திரும்பி வந்த பரிசுப் பெட்டகத்தை பார்த்துக் கொண்டிருந்தான்.
‘ஆதாரா’ தனக்குள் சொல்லிப் பார்த்தான். பால்வெளியில் மிதக்கும் ஒளி மிகுந்த நட்சத்திரத்தின் பெயர். தனக்குள் புன்னகைத்து கொண்டான். தன்னை தடுப்பது எது என்பதை அவன் உணரவில்லை. ஆனாலும் ஏனோ அவனால் கார்த்தியை எளிதில் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
அடுத்த ஆறே மாதத்தில் இந்தியாவின் ‘மூன் டூ மிசன்’ திட்டம் வெற்றிக் கனியை பறித்தது. இந்தியாவிலிருந்து முதன் முதலில் நிலவில் இறங்கிய இந்திய பெண் என்ற பெருமையை பிருந்தா பெற்றாள். ஏறக்குறைய பதினான்கு நாட்கள் அவர்கள் விண்கலம் விண்வெளியை சுற்றி வந்தும்ம். நிலவில் இதுவரை காலடி படாத இடங்களில் இருந்தும் அவர்களின் குழு மாதிரிகள் சேகரித்து வந்தம் அவர்கள் குழு விண்வெளித்துறையில் பல புதிய சாதனைகளை படைத்தது.
ஒட்டு மொத்த இந்தியாவும், பிருந்தாவை தலைக்கு மேல் தூக்கி வைத்து கொண்டாடியது. திரு தனக்கிருக்கும் விண்வெளி மீதான காதலால் இந்த திட்டத்தின் அடுத்தடுத்த நகர்வுகளை கவனித்தபடியே தானிருந்தான். பிருந்தா தான் பிரசவித்த பதினைந்தே நாளில் பணியில் இணைந்திருந்ததை அவள் தோழியின் மூலம் அறிந்தவன் மனம் குழந்தை மற்றும் அவளின் உடல் நலம் குறித்து ஏக குழப்பத்தில் இருந்தது.
ஆனால் அவனை அதிகம் கவலை கொள்ள வைக்காமல், முதல் மாதம், இரண்டாம் மாதம் என பால் சதையுடன் பொக்கை வாயோடு ஆரோக்கியமாய் சிரிக்கும் ஆதாரவை தன் புலனத்தின் முகப்பில் வைத்து திருவின் மனதை சாந்தி கொள்ள செய்தாள் மித்ரா.
அதோடு ஆதாரா என்ற பெயரை தனக்கு புனைப் பெயராக மாற்றிக் கொண்டாள். தங்கை நிலவில் காலடி எடுத்து வைத்த தருணத்தை காணொளி காட்சியாக பூமியில் நின்று ரசித்தவன் விழிகள் குளமானது.
‘எனக்கு நீ இணையில்லை என்ற பதர்கள் மத்தியில் நான் உங்களின் கற்பனைக்கு அப்பாற்பட்டவள் என் விண்வெளியில் மிதக்கிறாள் தன் தங்கை’ என்றவனின் எண்ணம் அவனுள் பேருவகையை பொங்க செய்தது.
விண்வெளி பயணம் முடித்து அவள் மீண்டும் பூமியை அடைந்ததும், தங்கையை தலைக்கு மேல் தூக்கி வைத்து, கொண்டாட அவன் உதிரம் துடியாய் துடித்தது. ஆனால் திரு அப்போதும் அசைந்து கொடுக்கவில்லை.
திருப்பும் தொலைக்காட்சி பிரிவுகளில் எல்லாம், திருவின் பெற்றோர், உற்றோர் உறவுகள், பள்ளி ஆசிரியர்கள் என அனைவரும் முகம் முழுக்க பெருமிதம் பொங்க பேட்டி கொடுத்து கொண்டிருந்தனர். வெண்ணிலாவும், மாரிமுத்துவும் முதன் முறையாக தங்கள் மகளின் மதிப்பை உணர்ந்திருந்தனர்.
கார்த்திக்கின் மனைவி பிருந்தா என்ற அடையாளம் கடந்து பிருந்தாவின் கணவன் கிரிக்கெட் வீரர் கார்த்திக் என்ற புதிய அடையாளம் உருவானது. அந்த அடையாளத்தை கார்த்திக் பெருமிதமாய் ஏற்றுக் கொண்டான். பால்கி மற்றும் மதுராவின் கொண்டாட்டங்கள் கூட தொலைகாட்சியில் வலம் வந்தன.