தலையை எங்கேனும் சுவற்றில் கொண்டு போய் முட்டிக் கொள்ளலாம் போல இருந்தது திருவிற்கு. அவன் எந்த முறையில் மித்ராவை அணுக முயற்சித்தாலும் அத்தனை கதவுகளும் பட் பட்டென அவன் முகத்திற்கு நேரே அறைந்து சாத்தப்பட்டன.
முதல் இரண்டு நாட்கள் அவனின் அழைப்பை ஏற்காத மித்து, மூன்றாம் நாள் அவன் தொடர்பு எண்ணை கருப்பி இருந்தாள். முதல் இரண்டு நாட்களும் சற்று பொறுமையாக இருக்கும் படியும், முடிந்த அளவு விரைவாக பெண் கேட்டு வருவதாக செய்திகள் அனுப்பி இருந்தான்.
அதற்கு மித்து, “எங்க அப்பா எனக்கு வேற ஒரு பையனோடு ஒப்பு தாம்பூலம்னு சொன்னப்ப மௌனமா இருந்தே உங்க ஈகோவோட அளவை எனக்கு காட்டிட்டீங்க. உங்களை பிடிச்சு இருக்குன்னு சொன்னாலும் நீங்க என்ன வேண்டாம்னு சொன்னதை மனசுல வச்சிக்கிட்டு எங்க அப்பா மறுபடி உங்ககிட்ட வந்து மாப்பிள்ளை கேக்க போறதில்லை. இனி உங்க செயல்கள் தான் பேசணும். வார்த்தைகள் இல்ல. அதுவரை நீங்க என்கிட்ட பேசவே வேண்டாம்.’’ என்றதோடு முற்றிலும் அவன் தொடர்பை தவிர்த்திருந்தாள்.
முதலில் இந்த விசயத்தில் தன் தாயை உதவிக்கு அழைக்க நினைத்து அவருக்கு அழைத்தவன், “மா… பால்கி மாமா பொண்ணு தான் உங்க மருமக. மித்ராவை எனக்காக பொண்ணு கேளுங்க.’’ என்ற கோரிக்கையை வைத்தான்.
உடனே வெண்ணிலா, “அண்ணன் முந்தா நேத்து தான் போன் போட்டு அந்த பிள்ளைக்கு ஏதோ வெளிநாட்டுல இருக்க டாக்டரு மாப்பிள்ளை பேசி முடிக்கப் போறதா சொன்னாங்க. இனி நான் என்னத்த போய் பேச. அதோட உங்க அப்பா வீட்டு ஆளுக வேற அவங்களை ஒத்துக்கி வச்சிட்டதா ரொம்ப குமஞ்சி பேசுறாங்க. உங்க அப்பாருக்கு அவுக ரெண்டாவது தங்கச்சி மக சுமதிய உனக்கு கட்டி வைக்கணும்னு ஒரு ஆச இருக்குப்பா. நீ என்ன சொல்ற?’’ என அவனை நோக வைத்தார்.
இவரிடம் பேசினால் வேலைக்கு ஆகாது என உணர்ந்தவன், அடுத்து நேரடியாக பால்கியை தொடர்பு கொள்ள முயற்சித்தான். அவரோ இவன் அழைப்பை ஏற்றதும், அவன் பேச வாய்ப்பே தராமல், “தம்பி உன் பிரண்ட் ஒருத்தன் பட்டு சேரி நெய்ற தறி போட்டு இருந்தான் இல்ல அவன் போன் நம்பர் அனுப்பி வை. மித்துவுக்கு கஸ்டமைஸ்டு பட்டு சேரி நெஞ்சி வாங்கணும்.’’ என்று திருமண காரியங்கள் குறித்து பேசி பேசியே அவன் பொறுமையை குறைத்தார்.
இன்னைக்கு பேசலாம் நாளைக்கு என இரண்டு நாட்கள் கடத்தியவன், இறுதியில், “எனக்கு மித்துவை ரொம்ப பிடிக்கும் பால்கிப்பா.’’ என அவரிடம் சற்றே உரத்த குரலில் அறிவிக்க, “அதுதான் எனக்கு தெரியுமே.’’ என்று ஒற்றை வார்த்தையில் அதை முடித்துவிட்டார் பால்கி.
திரு புரியாமல் திகைக்க, “நீ அவளுக்கு ஒரு காட் பாதர் மாதிரின்னு எனக்கு தெரியும்டா. நான் தான் உங்க ரிலேசன்ஷிப் பத்தி தெரியாம, மித்துவை உன்னை கல்யாணம் செஞ்சிக்க சொல்லி எல்லாம் கேட்டு கஷ்டப்படுத்திட்டேன். சரி முடிஞ்சா வியாழக்கிழமையே வந்துடுப்பா.’’ என்றதோடு அவர் அலைபேசியை வைத்துவிட, திருவிற்கு அடுத்து யாரை அணுகுவது என்றே தெரியவில்லை.
நிறைய யோசனைக்கு பின் வேறு வழியில்லாமல் கார்த்திக்கை தொடர்பு கொண்டான். முதல் நாள் அவன் முயற்சி தோல்வியில் தான் முடிந்தது. அடுத்த நாள் விடாமல் ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை அவன் தொடர்புகொள்ள, மாலை வேளையில் கார்த்திக் அழைப்பை ஏற்றான்.
கார்த்திக், “ஹெலோ.’’ என்றது தான் தாமதம், திரு ஒரு நொடியை கூட வீணாக்காமல், “மித்துவுக்கு நடக்கப் போற நிச்சயத்தை நிறுத்துங்க.’’ என்றான். கார்த்திக் ஒன்றும் புரியாமல், “ஹெலோ’’ என்றான் சற்றே காட்டமாக.
அப்போது தான் தன் அலைபேசி எண் அவனிடம் இருக்காது என்பதை உணர்ந்தவன், “நான் திரு பேசுறேன். பால்கிப்பா தங்கச்சி பையன்.’’ என்றான். திருவின் குரலை கார்த்திக் முதல் ஹலோவில் கண்டுபிடித்திருந்தான். ஆனாலும் பிருந்தாவுடன் நடந்த திருமணத்தில் நடந்த கசப்புகள் அப்படியே அவன் அடிநெஞ்சில் தேங்கி நின்றிருந்தது.
“பிருந்தாவோட அண்ணன்னு சொல்லியிருந்தா கொஞ்சம் சீக்கிரம் நியாபகம் வந்து இருக்கும். சொல்லுங்க திரு என்ன விஷயம்.’’ என்றான் கறாராய். ஒரு பெருமூச்சை விட்டு தன்னை நிலைப்படுத்திக் கொண்டவன், “நானும் உங்க தங்கச்சியும் லவ் பண்றோம்.’’ என்றான்.
திரு எதிர்பார்த்ததைப் போல கார்த்திக் ஆத்திரப்படவோ ஆவேசப்படவோ இல்லை. வெகு நிதானமாக, “அதுக்கு.’’ என்றான். திருவிற்கு மேற்கொண்டு என்ன பேசுவது என தெரியவில்லை. “உனக்கு புரியலைன்னு நினைக்கிறேன். நான் மட்டும் இல்ல. மித்துவும் என்னை லவ் பண்றா. லாஸ்ட் சிக்ஸ் மன்த்தா நாங்க மனசளவுல கப்பில்ஸ் மாதிரி வாழ்ந்துட்டு இருக்கோம்.’’ என்றான்.
சற்று நேரம் மறுமுனையில் அமைதியாக இருந்த கார்த்திக், “இதெல்லாம் நீ எங்க அப்பா, அம்மாகிட்ட தான் பேசணும் திரு. கல்யாண விசயத்துல முடிவெடுக்குற முழு உரிமையும் அவங்களுக்கு தான் இருக்கு. அதோட உன் லவ் பண்றதா மித்து எங்க வீட்ல இதுவரைக்கும் யார்கிட்டையும் சொல்லல.’’ என்றான்.
கார்த்திக்கிடம் பேச வந்த தன் மடத்தனத்தை நொந்து கொண்ட திரு, “இப்போ உன்னோட ஈகோவோ என்னோட ஈகோவோ முக்கியம் இல்ல கார்த்திக். நான் சொல்றதை கொஞ்சம் காது கொடுத்து கேளு. அவளுக்கு என்னை ரொம்ப பிடிக்கும். நான் பொண்ணு கேட்டு வரணும்னு எதிர்பார்த்துட்டு இருக்கா. வேற யாரும் இந்த விசயத்துல எனக்கு உதவி செய்யப் போற மாதிரி எனக்கு தெரியல. எதாச்சும் செஞ்சி நடக்கப் போற ஒப்பு தாம்பூலத்தை தயவுசெஞ்சு நிறுத்து.’’ என்று ஏறக்குறைய கெஞ்சினான்.
மறுபுறம் இதழ்களில் மலரத் துவங்கி இருந்த குறுநகையை அடக்கிக் கொண்ட கார்த்திக், “அம்மா இந்த அலயன்ஸ பேசி முடிச்சே ஆகணும்னு ரொம்ப தீவிரமா இருக்காங்க திரு. இப்போ நான் போய் வேண்டாம்னு சொன்னா அவங்களுக்கு சரியான ரீசன் சொல்லணும். நீங்க ரெண்டு பேரும் லவ் பண்றீங்கன்னு நான் போய் சொல்ல முடியாது. அது மித்ரா மனசை காயப்படுத்தும். இதுக்கு ஒரே வழி நீங்க நேரா போய் உங்க லவ்வை எங்க பேரன்ட்ஸ்கிட்ட சொல்றது தான்.’’ என்றான்.
ஒரு பெரு மூச்சை இழுத்து வெளியேற்றிய திரு, “கார்த்திக் நான் பால்கிப்பாகிட்ட பேசாம உன்கிட்ட பேச வந்தேன்னு நினைக்கிறியா? நான் என்ன சொல்ல வறேன்னு அவங்க யாரும் காது கொடுத்து கேக்க தயாரா இல்ல. பால்கிப்பா மித்துவை கல்யாணம் செஞ்சிக்க சொல்லி கேட்டு நான் வேண்டாம்னு சொல்லிட்டேன் அப்படிங்கிற கோபம் அவங்களுக்கு. நான் ஏன் அப்படி சொன்னேன்னா…’’ அவன் அடுத்த வார்த்தை பேசுவதற்குள் கார்த்திக் அவசரமாக இடையிட்டான்.
“என்ன அப்பா தானா கேட்டு வந்து நீங்க வேண்டாம்னு சொன்னீங்களா? இது எப்ப நடந்தது?’’ என ஆத்திரக் குரலில் இடையிட்டான் கார்த்திக். ‘இவனுமா’ என்று மனதிற்குள் அலறினாலும், “கார்த்திக் ப்ளீஸ்…! மித்ரா அப்போ சூசைட் அட்டம்ப்ட் செஞ்சி கில்டி பீலிங்ல இருந்தா. அப்போ உடனே நான் மேரேஜுக்கு ஓகே சொல்லி இருந்தா அவ செல்ப் எஸ்டீம் முழுசா உடஞ்சி போயிருக்கும். அது ஏன் உங்க யாருக்கும் புரிய மாட்டேங்கிது. அவ நிலையில கீழ இறங்கி இருந்ததா அவ பீல் செஞ்சிட்டு இருந்த நேரம் அது. அப்படி ஒரு சமயத்துல நான் அவளை கல்யாணம் செஞ்சி இருந்தா நான் ஏதோ அவளுக்கு வாழ்க்கை கொடுத்தா நினச்சி அவ தாழ்வு மனப்பான்மையில கடமைக்கு என் கூட வாழ்ந்து இருப்பா. அங்க காதல் எப்படி இருக்கும் கார்த்திக்? நான் இதெல்லாம் உங்களுக்கு எப்படி புரிய வைப்பேன்.’’ என்றான் அயர்ச்சியுடன்.
திருவின் குரலில் இருந்த ஆற்றாமை கார்த்திக்கையே லேசாக அசைத்து பார்த்தது. ஆனாலும் பெற்றவர்கள் கூறிய வார்த்தை நினைவில் ஆட, “நீங்க எத்தனை மணி நேரம் என்கிட்ட பேசினாலும் என்னோட ஒரே பதில் எங்க அம்மா, அப்பாகிட்ட பேசுங்க அப்படிங்கிறதா தான் இருக்கும் திரு.’’ என்றான்.
அதற்கு மேல் திரு கார்த்திக்கிடம் ஒரு வார்த்தையும் பேசாமல் அமைதியாக அலைபேசியை துண்டித்தான். அதிகமாக வேதனைப்படுத்துகிறோமோ என்ற எண்ணம் தோன்றிய அடுத்த நொடியே, மித்ராவின் கண்ணீர் வடிந்த முகம் நினைவில் வர, முகம் இறுகிப் போனவன், மனதை திசை திருப்பும் செயலாக தன் வலைப் பயிற்சிக்கு கிளம்பினான்.
தாமதிக்கும் ஒவ்வொரு நொடியும் தன் காதலுக்கு பாதிப்பு என்று உணர்ந்தவன், இனி எது வந்தாலும் நேரடியாக மோதிப் பார்க்கலாம் என்ற முடிவோடு பயணத்திற்கு தயாரானவன், தன் உதவியாளரை அழைத்து, அடுத்த இரு நாட்கள் தன் விடுப்பையும், கவனிக்க வேண்டிய முக்கிய வேலைகளையும் தெரிவித்தான்.
அடுத்த சில நிமிடங்களில் ஒரு ஜோடி மாற்று உடைகளோடு, சிறிய பயணப் பையை தோளில் சுமந்தவன், தன்னுடைய டேவிட்சன் வாகனத்தை எடுத்துக் கொண்டு சேலம் நோக்கி பறந்தான். யோசிக்கும் வரை தயங்கியவன், அதன் பிறகு ஒரு நொடியை கூட வீணாக்கவில்லை.
கடலூருக்கும், சேலத்திற்கும் இடைப்பட்ட, 190 கிலோ மீட்டரை மூன்றரை மணி நேரங்களில் கடந்து, இரவு ஒன்பது மணிக்கு பால்கியின் வீட்டின் முன் நின்றிருந்தான் திரு. வாகனத்தை ஓரமாய் நிறுத்தியவன், சற்று நேரம் மூடியிருந்த பெரிய வாயிற் கதவை விழி அகற்றாது பார்த்தான்.