கார்த்திக் தன் வாகனத்தை வீட்டின் முன் நிறுத்தும் போதே, அதன் பக்கவாட்டில் நிறுத்தப்பட்டிருந்த ஹெர்லி டேவிட்சனை கவனித்தான். உடனே அவன் முகம் சுருங்கியது. மகனின் முக மாற்றத்தை கவனித்தபடி வீட்டின் கதவை திறந்த பால்கி, “திரு வந்திருப்பான் போலடா…’’ என பேசிக் கொண்டே உள்ளே நுழைந்தார்.
அதுவரை உற்சாகமாக பால்கியுடன் பயணித்து கொண்டு வந்த கார்த்தி, முகத்தில் எரிச்சலை வெளிப்படையாக காட்டியபடி, ஒரு வித அலட்சிய மனப்பான்மையுடன் வீட்டிற்குள் நுழைந்தான்.
வரவேற்பறையில் இருந்த நீண்ட இருக்கைகளில், பால்கியின் சகோதரி வெண்ணிலா அமர்ந்திருக்க, அழுது கொண்டிருந்த அவளின் கரம் பற்றி ஆறுதல் சொல்லிய படி மதுரா அமர்ந்திருந்தாள்.
இருவருக்கும் அருகில், திருமுருகன் கவலை தேய்ந்த முகத்தோடு அமர்ந்திருந்தான். “வெண்ணி…’’ அண்ணனின் குரல் கேட்கவும், அதுவரை அண்ணியின் கை பிடித்து குனிந்து அழுது கொண்டிருந்த, வெண்ணிலா எழுந்து தன் அண்ணனை நோக்கி ஓடி வந்தாள்.
வந்த வேகத்தில் உணர்ச்சிப் பெருக்கில் பால்கியின் கால்களில் அவள் விழ, அருகில் நின்று கொண்டிருந்த கார்த்திக் பதறி அவரை எழுப்ப முன் வந்தான். ஆனால் அதற்குள் திரு ஒரே பிடியில் தாயை எழுப்பி நிறுத்தி இருந்தான்.
திருவின் பார்வை, ‘நீ அத்தனை கடினப்பட்டு என் தாயை தூக்க தேவை இல்லை.’ என்ற செய்தியை தாங்கியிருக்க, அதுவரை ‘என்ன பிரச்சனையோ’ என்ற பதட்டத்தில் இருந்தவன், அருகிருந்த இருக்கையில் சென்று அமர்ந்து கொண்டான்.
“என்னம்மா… என்ன ஆச்சு…? சொன்னா தானே தெரியும். மொதோ அழுகையை நிறுத்து.மது கொஞ்சம் தண்ணி கொண்டு வா. டேய் கார்த்தி… என்னடா ஆச்சு?’’ தங்கையை இருக்கையில் அமர்த்தி, தானும் அவளின் அருகே அமர்ந்தவன், தங்கை மகனிடம் கேள்வியை முன் வைத்தான்.
அவமானத்தில் முகம் கறுத்துவிட திரு மரம் போல நின்றான். அப்போது வரை தேம்பிக் கொண்டிருந்த வெண்ணிலா, “ணே… நேத்து ரவைக்கு குடிச்சிட்டு வந்த மனுஷன் நெஞ்சு எரியுதுன்னு கத்திட்டு கிடந்தாரு. வழக்கமா குடிச்சா வர நெஞ்சு எரிச்சல் தான்னு நான் கண்டுக்காம விட்டுபுட்டேன். ஆனா காலைல மனுஷன் மூச்சு பேச்சு இல்லாம மயங்கி கிடந்தாரு. அவசர அவசரமா, பக்கத்துல இருக்க மலர் ஆஸ்பத்திரிக்கு தூக்கிட்டு ஓடினோம். அவங்க ஏதோ நெஞ்சுல சுருள் படம் எல்லாம் எடுத்து பார்த்துட்டு, உடனே டவுன் ஆஸ்பத்திரிக்கு எழுதி கொடுத்துட்டாங்க. டாக்டருங்க எல்லாம் மாரடைப்புன்னு சொல்றாங்க. எனக்கு ரொம்ப பயமா இருக்குன்னே. வீட்ல இருந்த பால் காசு, சீட்டு காசு எல்லாத்தையும் சேர்த்து ஆஸ்பத்திரிக்கு முன் பணம் கட்டிட்டேன் ணே…! டேய் கார்த்தி ஏதோ கம்பி வைக்கணும்னு டாக்டருங்க உன்கிட்ட சொன்னாங்க இல்ல… அதை சொல்லேண்டா…’’ என்றார் தேம்பலோடு.
“சேவ் லைப் ஹாஸ்பிடல்ல அப்பாவை அட்மிட் செஞ்சி இருக்கோம் பால்கிப்பா. ஆஞ்சியோ செஞ்சி ஸ்டன்ட் வைக்க ஒன்றரை லட்சம் ஆகும்னு சொல்லி இருக்காங்க. அம்மா வீட்ல இருந்த இருபதாயிரத்தை கொண்டு வந்து கட்டிட்டாங்க. ஜி.எச் ஷிப்ட் செய்யலாமான்னு அங்க இருந்த டாக்டர்ஸ்கிட்ட கேட்டேன். ரொம்ப க்ரிடிகல் கண்டிசன். ஆறு மணி நேரத்துக்குள்ள ஆஞ்சியோ செஞ்சா தான் ஹார்ட் பெயிலியர் ஆகாம காப்பாத்த முடியும்னு சொல்றாங்க. என்ன செய்றதுன்னு தெரியல.’’ என்றான் குரலில் தாழ்வு மனப்பான்மையை தேக்கியபடி.
அதுவரை என்னவோ ஏதோ என்று கொஞ்சமே பரிதாபத்துடன் அமர்திர்ந்த கார்த்தி, இப்போது தன் கால் மேல் கால்களை போட்டு, திருவை வெளிப்படையாக நக்கலாக பார்த்தான். இப்போது மட்டும் அவனின் பாட்டி செண்பா இருந்திருந்தால், “வந்துட்டாங்க பணம் புடுங்கி கூட்டம். மாசத்துல ரெண்டு தடவை எதாச்சும் ஒரு காரணத்தை சொல்லி பணம் வாங்க வந்துடுறது. உன் அம்மா சரியான இளிச்சவாயி. அவங்க சொல்ற கதையை எல்லாம் நம்பி புருஷன் சம்பாத்தியம் அத்தனையும் தூக்கி கொடுத்துருவா.’’ என்று இவனிடம் புலம்பிக் கொண்டிருப்பார்.
“டேய்… நிலா குட்டி. அழாத பார்த்துக்கலாம். இந்த அண்ணன் எதுக்கு இருக்கேன். காலைல ஏதாச்சும் சாப்பிட்டியா…? மது ரெண்டு பேருக்கும் டிபன் எடுத்து வை. அந்த சேவ் லைப் டாக்டர்ஸ் டீடைல்ஸ் கொடு. நான் எங்க கிருஷ்ணாவை பேசி என்ன எதுன்னு விசாரிக்க சொல்றேன். மணி நான் நேரடியா ஹாஸ்பிடல் அக்கவுன்ட்ல போட்டு விட்டுடுறேன். ரெண்டு பேரும் முதல்ல போய் சாப்பிடுங்க. போங்க. நிலாமா எழுந்திரு.’’ என்று தங்கையை கை பிடித்து எழுப்பிக் கொண்டிருந்தான்.
அப்போது கார்த்திக் “ஏன் மம்மி…! இந்த விவசாய நிலத்தை பேங்க்ல அடமானம் வச்சா பணம் கிடைக்காதா…?’’ என்றான் குத்தலாய். பால்கி கசங்கிய முகத்தோடு மகனை ஏறிட்டு பார்க்க, மதுரா உரத்த குரலில், “கார்த்திக். பெரியவங்க முன்னாடி என்ன பேச்சு இது.’’ என்று வன்மையாக கண்டித்தாள்.
திருவின் முகம் முற்றிலும் இறுக, அவன் நடக்க முனைந்திருந்த தாயின் கரத்தை இறுக பற்றியிருந்தான். “இல்ல அண்ணா. பாப்பா மட்டும் தான் அவர் பக்கத்துல இருக்கா. நாங்க கிளம்புறோம். நீ பணம் கட்டிட்டு எவ்ளோ ஆச்சுன்னு சொல்லுண்ணா. சீட்டு பணம் எடுத்து கொஞ்சம் கொஞ்சமா கடனை அடைச்சிடுறோம். நிலத்தை ஏற்கனவே மூத்தவ கல்யாண செலவுக்கு அடகு வச்சிட்டேன் அண்ணா. இல்லைனா உன்னை தேடி இங்க வந்து இருக்க மாட்டேன். எனக்கும் உன்னை விட்டா வேற யாரு அண்ணா இருக்காங்க.’’ என்றபோது வெண்ணிலாவின் கண்களில் கண்ணீர் உடைபெடுக்க, முகமோ இயலாமையில் குறுகி இருந்தது.
ஏதோ கோபத்தில் வாய் விட்டு விட்டானே தவிர தற்சமயம், கார்த்திக்கின் மனது உள்ளுக்குள், ‘ஐயோ’ என வருந்தியது. “நான் வறேன் அண்ணா.’’ என்ற வெண்ணிலா அதன் பிறகு அங்கு நிற்கவே இல்லை.
விரைத்து போய் சிலை போல நின்று கொண்டிருந்த திரு, முடிந்த மட்டும் கார்த்திக்கை தன் பார்வையால் பொசுக்கிவிட்டு, “வறேன் மதுமா.’’ என்று விட்டு தாயைத் தொடர்ந்து நடந்திருந்தான்.
இயலாமையில் எழுந்த வருத்தத்துடன், பால்கி இருக்கையின் பின் தலை சாய்த்து அமர்ந்து கொள்ள, மதுரா, “உனக்கு கொஞ்சமாச்சும் அறிவு இருக்கா கார்த்திக். அவங்களே எவ்ளோ நொந்து போய் வந்து இருக்காங்க. அவங்ககிட்ட போய் இப்படி தான் பேசுவியா..? உன் பாட்டி புத்தி உனக்கு அப்படியே வந்து இருக்குடா.’’ என்றவள் அவனை திட்ட தொடங்க, வேண்டாம் என்பதை போல பால்கி கை உயர்த்தி தடுத்தார்.
“வருத்தத்தோட வந்த தங்கச்சிக்கு ஒரு வாய் சோறு போட்டு அனுப்ப முடியல மது. நான் மட்டும் சாப்பிட்டு இனி என்ன ஆகப் போகுது. எனக்கு எதுவும் வேணாம். கொஞ்ச நேரம் எல்லாரும் என்னை தனியா விடுங்க.’’ என்ற பால்கி எழுந்து தன் அறைக்குள் செல்ல முயன்றார்.
அவரின் கரம் பற்றி தடுத்த கார்த்திக், “டாட் விளையாடாதீங்க. உங்களுக்கு சுகர் இருக்கு. டைமுக்கு சாப்பிடலைன்னா உங்களுக்கு மயக்கம் வரும்.’’ என்று பதறினான்.
“பரவாயில்லைப்பா…! ஒரு நாள் தானே. ஒன்னும் ஆகாது. அப்படியே எனக்கு ஏதாச்சும் ஆனாலும் நீங்க யார் வீட்லயும் போய் கூனிக் குறுகி நிக்க வேண்டாம். அதான் அக்கவுன்ட் நிறைய பணம் இருக்கே. நல்லா ஹாஸ்பிடலா பார்த்து சேர்த்தி என் உயிரை காப்பாத்திட மாட்டீங்க.’’ என்றான் கசந்த புன்னகையை இதழில் தேக்கி.
“டாட்…’’ கார்த்திக் தகப்பனின் அகிம்சா ஆயுதத்தின் முன் மலைத்து நிற்க, மதுரா உடனே செயல்பட்டு, “கார்த்திக்… அவங்க மூணு பேருக்கும் டிபன் பேக் செஞ்சி தறேன். நீயே கொண்டு போய் கொடுத்துட்டு அங்கிள் ஹெல்த் ஸ்டேடஸ் தெரிஞ்சிட்டு வா. அதுகுள்ள நாங்க கிருஷ்ணா அண்ணாகிட்ட பேசி ஹாஸ்பிடல் பில் பே பண்றோம்.’’ என்றுவிட்டு உணவை எடுத்து வைக்க கிளம்பினார்.
மனைவியின் வேகத்தில் பால்கியின் முகத்தில் சிறு புன்னகை மலரந்தாலும், “வேண்டாம் மது. அவங்களை இன்னும் இன்னும் கஷ்டப்படுத்த வேண்டாம். திரு ஏற்கனவே உடஞ்சி போய் இருக்கான். பசி எங்க குடும்பத்துக்கு அப்படி ஒன்னும் புதுசு இல்ல. நாங்க பார்த்துக்கிறோம்.’’ என்றான்.
கணவன் தன்னை தள்ளி வைப்பதை உணர்ந்த மதுராவின் முகம் வெளிற, “பால்…. அப்போ நான் உங்க குடும்பம் இல்லையா…’’ என்று வினவிய போது கண்களில் திரண்ட இரு துளி நீர் கன்னம் நனைக்க காத்திருந்தது.
தாய் தந்தையின் அன்யோன்யத்தை உணர்ந்தவன் ஆகையால், தான் செய்த பிணக்கை தானே நேர் செய்ய வேண்டும் என்று உணர்ந்த கார்த்திக், “டாட்… ஐயம் சோ சாரி…! நானே நேர்ல போய் உங்க தங்கச்சிக்கும் அவரோட பையனுக்கு சாப்பிட மாட்டேன்னு சொன்னா கூட ஊட்டி விட்டுட்டு வந்துடுறேன். அதுக்கும் வாய திறக்க மாடேன்னு சொன்னா கரண்டிய வச்சி கிண்டி கிளறியாவது தொண்டைக்குள்ள சாப்பாட்டை திணிச்சி விட்டுறேன். ஓகே. ப்ளீஸ் நீங்க இங்க எதுவும் ட்ராமா செஞ்சிட்டு இருக்காதீங்க. மா… சும்மா அவர் மூஞ்சியை பார்த்துட்டு இருக்காம போய் சாப்பாட்டை எடுத்து வையுங்க. அவங்க சாப்பிட்டதும் நான் அங்க இருந்து உங்களுக்கு போன் போடுவேன். நீங்க ஒழுங்கா இங்க சாப்பிடனும். சரியா.’’ என்றவன் தாயை தள்ளிக் கொண்டு சமையல் அறைக்குள் நுழைந்தான்.
தன் குடும்பம் என்ற வரை கார்த்திக் தாய், தந்தையருக்கு நல்ல மகன். தங்கைக்கு நல்ல அண்ணன். ஆனால் அதை தாண்டி அவனுக்கு அவன் தந்தையின் குடும்பத்தை பிடிப்பதில்லை. அதற்கு முக்கிய காரணம் பால்கியின் மீது அவனுக்கு இருக்கும் கண் மூடித் தனமான பாசமே. அவனுக்கு தன் தந்தை பாசத்தை யாருடனும் பங்கிட்டு கொள்ள விருப்பம் இல்லை.
மதுரா அவசர அவசரமாக இட்டிலியையும், அதற்கு தொட்டுக்கொள்ள இரு வகை சட்னிகளையும் ஹாட் பேக்கில் அடைத்து, மகனிடம் நீட்ட, அதை உணவுக் கூடையில் வைத்து மூடியவன், “மா போயிட்டு வந்துடுறேன்.’’ என்றுவிட்டு தனக்கு எப்போதும் ஆகாதவர்களை வாழ்வில் முதன் முறையாக தேடி சென்றான்.
தலையில் முகத்தையும் பாதி மறைக்கும் தொப்பி அணிந்திருந்தான் கார்த்திக். அவன் என்னவோ அத்தனை கிரிக்கெட் பிரபலம் கிடையாது என்றாலும், ஐ.பில்.எல் அணியில் தேர்ந்தெடுக்கப்பட்டதில் இருந்து ஓரிருவர் அடையாளம் கண்டு கொள்ள தொடங்கி இருந்தனர்.
மருத்துவமனையில் அப்படி யாரேனும் அடையாளம் கண்டு கொண்டு பேசினால் அவர்களோடு உரையாடும் மன நிலையில் இல்லை அவன். வரவேற்பில், மாரிமுத்து என்று நோயாளியின் பெயர் சொல்ல அவர்கள் ஐ. சி.யூவில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்து, அதற்கு எந்த பாதையில் செல்ல வேண்டும் என்று வழியும் காட்டினர்.
அவர்களுக்கு ஒரு நன்றியை நவிழ்ந்து விட்டு, உணவு கூடையோடு அந்த அவசர சிகிச்சை பகுதியை நோக்கி நடந்தான். உறவினர்கள் கவலை தேய்ந்த முகங்களோடு அந்த காத்திருக்கும் கூடாரத்தில் அமர்ந்திருக்க, அவன் கண்களில் முதலில் பட்டது பள்ளிச் சீருடையோடு இருந்த பிருந்தா தான். மாரிமுத்து வெண்ணிலாவின் கடைசி முத்து. இந்த வருடம் பனிரெண்டாம் வகுப்பில் இருக்கிறாள்.
அவன் அருகே செல்ல மரியாதை நிமித்தம் எழுந்து நின்றவன், “மா…’’ என்று இழுத்துவிட்டு, “அண்ணா மருந்து வாங்க போயிருக்கார். அம்மாவை உள்ள போய் இருக்காங்க.’’ என்று அவசர சிகிச்சை பகுதியை கை காட்டினாள்.
“சரி உக்காரு. இப்போ என்ன ஸ்டாண்ட்டர்டு படிக்கிற…?’’ கார்த்திக் அவளிடம் விசாரித்து கொண்டிருக்கும் போதே, கையில் மருந்துகளோடு அங்கு வந்து சேர்ந்த திரு, “பிருந்தா கண்டவங்களோடு உனக்கு என்ன பேச்சு.’’ என தன் தங்கையை மிரட்டினான்.
அவனின் அதட்டல் குரலில் அவள் மிரண்டு விழிக்க, “ஹே…! சும்மா சீன் கிரியேட் செய்யாத. நான் ஒன்னும் உங்களோட ஒட்டி உறவாட வரல. நீங்க சாப்பிட்டா தான் சாப்பிடுவேன்னு அங்க ஒரு மனுஷன் உண்ணா விரதம் இருக்கார். அதுக்கு தான் உனக்கு எல்லாம் சோத்து மூட்டை தூக்கிட்டு வந்தேன்.’’ என்றான் கடுப்புடன்.
அதே நேரம், திருவின் அலைபேசி ஒலிக்க, அதில் ஒளிர்ந்த எண்ணை கண்டவனின் முகம் பணிவை தத்தெடுத்தது. “சொல்லுங்க மதுமா…’’ என்றவன் அதன் பிறகு வரிசயாக உம் மட்டுமே கொட்டிக் கொண்டிருந்தான்.
அலைபேசியை அணைத்தவன், கார்த்திக்கை நோக்கி திரும்பி, “நீ வச்சிட்டு போ. நாங்க சாப்பிடுவோம்.’’ என்றான். “அந்த அளவுக்கு சீன் இல்ல. உங்க அம்மாவை கூப்பிடு. கேன்டீன் போலாம். நீங்க சாப்பிட்டதை எங்க அப்பா கண்ல காட்டினா தான் அவர் சாப்பிடுவார்.’’ என்றான் அழுத்தமாய்.
அவன் ஒரு பெரு மூச்சை வெளியேற்ற, வெண்ணிலா கணவருக்கு மருத்துவமனையில் கொடுத்த கஞ்சியை புகட்டி விட்டு வெளியே வந்தார். கார்த்தியை அங்கு கண்டதும் அவர் முகம் சுருங்கினாலும், மரியாதை நிமித்தமாய், “வாங்க தம்பி…!’’ என்றார்.
“மா… மாமா ஹாஸ்பிடல் பணம் கட்டிட்டாரம். இன்னைக்கு சாயங்காலம் அப்பாவுக்கு ஆஞ்சியோ ப்ளான் செஞ்சிட்டாங்களாம்.’’ என்றான் திரு தகவலாய். உடனே வெண்ணிலாவின் முகம் மகிழ்ச்சியில் மலர்ந்தது.
“வெண்ணங்குடி முனியப்பனுக்கு ஒரு கடா வெட்டிடலாம் திரு. ரொம்ப சந்தோசம் தம்பி.’’ என்றார் கார்த்தியை பார்த்து.
“மா…! நீ சாப்பிடமா வந்ததால அங்க மாமாவும் சாப்பிடாம இருக்காராம். வாங்க போலாம். போய் சாப்பிடலாம்.’’ என தாயின் கரம் பற்றி உணவகம் நோக்கி அழைத்து சென்றான். நால்வரும் மருத்துவமனையின் வெளி வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த. உணவு கூடம் நோக்கி சென்றனர்.
நோயாளிகளின் உறவினர்கள் உணவருந்த தேவையான மேஜை, நாற்காலிகள் அவ்விடத்தை அலங்கரித்து இருந்தது. அதோடு சிறிய உணவகமும் இயங்கி வந்தது. கார்த்திக் தான் கொண்டு வந்த உணவு கூடையை மேஜை மேல் வைக்க, பிருந்தா அதை பிரித்து சிறிய அலங்கார தட்டுகளில் இட்லியை மூவருக்குமாய் அடுக்கினாள்.
“தம்பிக்கும் ஒரு தட்டு எடுத்து வை பாப்பா…” என்ற தாயின் குரலில், அவள் வேறு தட்டு இல்லையே என தயக்கமாக கூடையை பார்க்க, “ஐயோ ஆன்ட்டி. அம்மா உங்களுக்கு மட்டும் தான் கொடுத்து விட்டாங்க. நீங்க சாப்பிடுங்க. நான் வீட்டுக்கு போய் சாப்பிட்டுகிறேன்.’’ என மறுத்தான்.
“இல்ல தம்பி நீங்க ஒரு இட்லியாவது சாப்பிடுங்க.’’ என்று தன் தட்டை அவன் புறம் நகர்த்தி வைத்தார். இவர்களை தான் காலையில் மட்டம் தட்டி சாப்பிட விடாமல் வீட்டில் இருந்து துரத்தி அடித்தோம் என்ற குற்ற உணர்வு அவன் நெஞ்சை அடைக்க, கார்த்திக் செயலற்று நின்றிருந்தான்.
“மா…! அவரு நம்ம தட்ல எல்லாம் சாப்பிட மாட்டார். நீ சாப்பிடு பேசாம.’’ என்றான் திரு. உடனே வெண்ணிலாவின் முகம் கூம்பி விட, அருகில் நடக்கும் நிகழ்வுகளுக்கும் எனக்கும் சம்மந்தம் இல்லை போங்கடா எனக்கு பசிக்குது.. என இட்லிகளை விழுங்கிக் கொண்டிருந்த பிருந்தாவின் தட்டில் இருந்து ஒரு விள்ளல் இட்லியை எடுத்தவன் அதை வாய்க்குள் போட்டுக் கொண்டு, “நான் சாப்பிட்டேன். போதுமா. நீங்க சாப்பிடுங்க.’’ என்றவன் தந்தைக்கு காணொளி அலைபேசி அழைப்பை விடுத்தான்.
பால்கியை திரையில் கண்டதும் வெண்ணிலா மறுபடி, “அண்ணா…!’’ என தேம்ப, “கழுத… அழுத வந்து தலையில கொட்டுவேன். டவுசர் ஒழுங்கா போடத் தெரியாத பையன் எதையாச்சும் பேசினா அதையெல்லாம் கேட்டுட்டு கிளம்புவியா கழுதை நீ? எங்களை நீ புரிஞ்சிகிட்டது அவ்ளோ தானா…? உன் அண்ணிக்கு எவ்ளோ வருத்தம் தெரியுமா…?’’ என்றார் கவலையுடன்.
“இல்ல.. இனி அழல அண்ணன். தம்பிய ஒன்னும் சொல்லாதீங்க.’’ என்றார். உடனே பால்கி, “அவன் பேசினது உன்னை வருத்தி இருந்தா நான் உன்கிட்ட மன்னிப்பு கேட்டுக்குறேன் நிலாமா.’’ என்றதும், “பா… தகப்பா…’’ என இருபுறமிருந்தும் கார்த்திக்கும், திருவும் அலறினர்.
“நானே கேக்குறேன். எனக்காக நீங்க ஏன் மன்னிப்பு கேட்கணும்.’’ என்று கார்த்திக்கும், “பா…! மத்தவங்க பேச்சை எல்லாம் நாங்க பெருசா எடுக்குறதே இல்ல… ஏன்பா என…’’ என திருவும், “அண்ணே…! சும்மா இருங்க… பெரிய வார்த்தை பேசிக்கிட்டு.’’ என வெண்ணியும் மொழிய, பால்கியின் முகத்தில் கீற்றாய் ஒரு புன்னகை.
“தகப்பா… சந்தடி சாக்குல என்னை டவுசர் போடா தெரியாத பையன்னு கலாய்சிட்ட இல்ல நீ. இரு வீட்டுக்கு வந்ததும் நீ ஏற்காட்ல எடுத்த படத்தை அம்மாகிட்ட டெலிகாஸ்ட் பண்றேன்.’’ என மிரட்டினான்.
“டேய்… டேய்…’’ என பால்கி பேச முற்படும் போதே, அழைப்பை துண்டித்தவன், “சரிங்க. நான் கிளம்புறேன். சாப்பாட்டு கூடை இங்கேயே இருக்கட்டும் அம்மா சாயங்காலம் பாக்க வரும் போது எடுத்துகிறதா சொன்னாங்க.’’ என்றவன் அங்கிருந்து கிளம்பும் போது, எதிரே பால்கியின் அண்ணனும் அவனின் இரு புதல்வர்களும் பதட்டத்தோடு வருவதை கண்டான்.
அதிலும் மூத்தவன் புகழ், வெளிப்படையாக கார்த்திக்கை முறைத்தபடி வர, “ஆஸ்பத்திரியில எந்த பஞ்சாயத்தையும் கூட்டதீங்கடா…!’’ என்ற திருப்பதி மகன்களோடு தங்கையை நோக்கி நடந்திருந்தார்.
அதுவரை இருந்த இலகு தன்மை மறைய முகத்தில் ஒரு கடுமை குடியேற, கார்த்திக் தன் நிஞ்சா நோக்கி நடந்தான். ஆளுக்கு ஒரு மனநிலையில் இருக்க, திருவின் மனமோ, காணொளி காட்சியில் பால்கியின் பின் பக்கம் தெரிந்த உருவத்தின் மீது நிலைத்திருந்தது.