அவள் கவனம் தன் மீது தான் இருக்கிறது என்பதை உணர்ந்தவன், தொலை நோக்கியின் வழியே வானை ரசித்தபடி, “நீ ஹாஸ்பிடல்ல அட்மிட் ஆகி இருந்தப்ப உங்க அப்பா என் பொண்ணை கல்யாணம் செஞ்சிகோ திருன்னு சொன்னார்.’’ என்றான் சலனமற்ற குரலில். 

நொடியில் மித்துவின் முகம் அவமானத்தில் கருத்தது. பெண் பெயர் கெட்டுப் போனால் முதலில் அவளின் பெற்றவர்கள் எடுக்கும் முதல் முடிவு அவளின் திருமணம் தானே. தன் பெற்றவர்களும் சாராசரி இந்திய பெற்றவர்களாய் நடந்து கொண்டதில் மனம் நொந்து போனாள். 

அவனையே ஆழ்ந்து பார்த்தவள், “அதுக்கு நீங்க என்ன சொன்னீங்க…?’’ என்றாள் நடுங்கும் குரலில். “பிருந்தா ஹாஸ்பிடல்ல அட்மிட் ஆகி இருந்தப்ப நான் உங்க அப்பாகிட்ட இதே வார்த்தையை கேட்டேன். அதுக்கு நீ சொன்ன பதிலை அப்படியே திருப்பி சொல்லிட்டேன்.’’ என்றவன் அவள் முகம் பார்க்க, விழிகளில் உத்திரவா என கேட்டு இரு துளி நீர் சுரந்திருந்தது. 

“அப்போ நீங்களும் என்னை கேவலமான பொண்ணா நினைக்குறீங்க இல்ல…’’ என்றவளின் குரல் தழுதழுக்க, போட்டு வைத்த அத்தனை கட்டுப்பாடுகளையும் மீறி அவளின் கரம் பற்றி தன் அருகே இழுத்தவன் மிக அழுத்தமாய் அவளை அணைத்துக் கொண்டான். 

அவள் சட்டை ஈரமாவதில் இருந்து அவள் அழுகிறாள் என்பதை உணர்ந்து கொண்டவன், “பைத்தியம்.’’ என்றவன் அவன் உச்சந்தலையில் மென்மையாய் முத்தமிட நீர் வடியும் கண்களோடு அவனை நிமிர்ந்து பார்த்தவள், “அப்புறம் எதுக்கு என்னை வேண்டாம்னு சொன்னீங்க.’’ என்றாள் தோற்றுவிட்ட குழந்தை குரலோடு. 

“நான் எப்ப உன்னை வேண்டாம்னு சொன்னேன். உன்னை நான் கல்யாணம் செஞ்சிக்க கேக்கும் போது நீ என்ன சொன்ன. நீங்க என்னை விட உங்களை கீழா நினைக்குறீங்க. அந்த தாழ்வு மனப்பான்மையை சரி செய்ய எல்லாம் யாரையும் கல்யாணம் செய்ய முடியாதுன்னு சொன்ன. எனக்கு தெரிஞ்சி இப்போ அப்படி ஒரு மன நிலையில நீ இருக்க. அதான் உங்க அப்பாகிட்ட கல்யாணம் இன்ட்ரஸ்ட் பேஸ் செஞ்சி இருக்கணும். இன்ஸ்டன்ட் பேஸ் செஞ்சி இருக்க கூடாதுன்னு தெளிவா சொல்லிட்டேன். இப்போ சொல்லேன் உனக்கு என் மேல இன்ட்ரஸ்ட் இருக்கா..?’’ என்றான் முகம் மறைத்த கூந்தலை காதோரம் ஒதுக்கியபடி. 

இத்தனை நேரம் மனதில் இருந்த இறுக்கம் அத்தனையும் மறைய, லேசாய் அவனை பார்த்து முறுவலித்தவள், “இன்ட்ரஸ்ட் பழகி பார்த்தா தானே வருமா வராதான்னு தெரியும்.’’ என்றாள். 

அவளின் கன்னம் வருடியவன், “பழகி பாத்துருவோமா.’’ என்றான் குரலில் ரகசிய சிரிப்புடன். அவன் நெருக்கத்தில் சற்றே சிவந்தவள், எதையோ எதிர்பார்த்து கண்களை மூட, அவளை தன்னிடமிருந்து பிரித்து, நேராய் அந்த தொலை நோக்கியை நோக்கி அழைத்து சென்றான். 

அவள் திகைப்பில் இருக்கும் பொழுதே அவளை தொலை நோக்கியின் முன் நிறுத்தியவன், “இந்த ஆங்கிள்ல இந்த பக்கம் பாரு. ஒரு டபுள் ஸ்டார்ஸ் தெரியுதா. அதான் என்னோட பேவரிட்.அவங்க பேரு மிசார் அண்ட் ஆல்கார். மேக்சிமம் பால் வீதியில நட்சத்திரங்கள் ஜோடி ஜோடியா தான் இருக்கும்.’’ என்றபடி மேலும் அவன் சில  நட்சத்திரங்களை அடையாளப்படுத்தினான். 

இதுவரை வெறும் வெண் புள்ளிகளாய் மட்டுமே ரசித்த நட்சத்திர தொகுப்பை, அவன் பெயர் சொல்லி தனித்துவங்களோடு விளக்க, மித்து சுவராசியமாய் அவன் சொல்லும் தகவல்களை கேட்டபடி, பால் வீதியை ரசித்திருந்தாள். 

தொலைநோக்கியில் வானத்தை ரசித்த பின், அவன் மொட்டை மாடியில் வெற்று தரையில் படுத்து கொள்ள, அவனையே பார்த்திருந்த மித்து அவன் அருகில் வந்து படுத்துக் கொண்டாள். விண் மீன் மீதே விழிகளை பதித்திருந்தவன், அவளிடம் பேச தொடங்கினான். 

“தப்பு செய்ய எப்படி தைரியம் இருக்கோ, அதே தைரியம் அந்த தப்போடா விளைவுகளை பேஸ் செய்யும் போதும் இருக்கணும். ஆமா நான் தான் செஞ்சேன் இப்போ அதுக்கு என்ன அப்படிங்கிற திமிர் உன்கிட்ட இருக்கணும். நீ குனிஞ்சி குறுகி நின்னா மட்டும் இந்த உலகம் உன்னை பார்த்து பரிதாபப்படும்னு நினைக்குறியா..? கண்டிப்பா இல்ல. நீ தைரியமா நிமிந்து நின்னா மட்டும் தான் உன்னால சர்வைவ் ஆக முடியும். உன்னை நீ தான் ஜஸ்டிபை செய்யணும் மித்து. அடுத்தவங்க இல்ல. இனி ஒரு முறை இப்படி தப்பா எ தையும் செஞ்சிடாதா…’’ என்றவன் விழிகளில் இருந்து கோடாய் நீர் வழிந்து அவன் காதில் இறங்கியது. 

அவன் அழுவதை கண்டவள், குறுக்கு வாக்கில் அவனை அணைத்துக் கொண்டு, “ஐயம் சாரி…’’ என்றாள் தானும் கண்ணீர் உகுத்து. “உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும் மித்து. நீ எனக்கு கிடைக்க மாட்டன்னு தெரிஞ்சே உன் மேல பாசம் வச்சவன். அன்னைக்கு நீ ஹாஸ்பிடல்ல படுத்து இருந்தப்ப நான் மனசளவுல செத்துட்டேன் தெரியுமா…’’ என்றான் கரகரத்த குரலில். 

“சாரி… வெரி சாரி…’’ என்றவள் ஒவ்வொரு வார்த்தைக்கும் அவன் முகம் எங்கும் முத்தமிட, திரு அவள் கைகளில் தன்னை ஒப்புக் கொடுத்தான். முகம் எங்கும் அவள் முத்தமிட்டு விட்டு அவன் முகம் பார்க்க, அவள் கண்களை ஆழ்ந்து பார்த்தவன், அடுத்த நொடி அவள் இதழ்களை தன் வசமாக்கி கொண்டான். 

அவளுக்குள் மூழ்க துடிப்பவன் போல, அவன் அவளை ஆழ்ந்து முத்தமிட, அவனின் நேசத்திற்கு பரிசாய் தன்னை ஒப்புக் கொடுத்து ஆழ்ந்திருந்தாள் மித்து. பல நிமிடங்களுக்கு பின்பே தன் நிலை மீண்டவன், அவளை விட்டு விலகி, “சாரி..’’ என்றான். 

மித்து ‘எதற்கு?’ என்பதை போல அவனை பார்க்க, “உன் பர்மிசன் இல்லாம உன்னை கிஸ் செஞ்சதுக்கு.’’ என்றான் இதழில் குமிழிட்ட குறுநகையோடு. “உங்க கண்ணு என்கிட்ட பர்மிசன் கேட்டுச்சு. நானும் கொடுத்தேன்.’’ என்றபடி தன் இதழ்களை துடைத்து கொண்டாள் மித்து. 

அவளின் இதழ்களையே பார்த்திருந்தவன், “மறுபடி பர்மிசன் கேக்கவா..?’’ என்றான். உடனே இதழ் சுளித்து மறுத்தவள், அதெல்லாம் சும்மா சும்மா தர முடியாது. வேணும்னா எங்க அப்பா சொன்ன மாதிரி என்னை கல்யாணம் செஞ்சிக்கோங்க.’’ என்றாள். 

“உன்னை கல்யாணமே செஞ்சிகிட்டாலும் நான் பர்மிசன் கேப்பேன்மா.’’ என்று குழைந்தவன் அடுத்த கணமே குரலில் உறுதியை தேக்கி, “இன்னும் பி.ஜி ஸ்டடிஸ் கூட முடியல. அதுக்குள்ள என்ன கல்யாணமா. எந்திரி உன் ரூமுக்கு போலாம். வாசுவை நோட்ஸ் எல்லாம் என் வாட்ஸ் அப்புக்கு அனுப்ப சொல்லி இருந்தேன். கொஞ்ச நேரம் படிச்சிட்டு தூங்கு.’’ என்றவன் எழுந்து கொண்டான். 

முகத்தை சுருக்கி கொண்டவள், “அவ்ளோ தானா…” என்றாள் ஏமாற்றமாய். “மேடம். சாப்பிட்டு தூங்கலாம். நேரமாச்சு. வாங்க.’’ என்றபடி அவளின் கரம் பற்றி எழுப்பி தன்னோடு அழைத்து சென்றான். 

இதுவரை திறக்காத பல பருவ கதவுகள் அவளின் இதழ் பட்டு திறக்க, அவளின் மீது பொங்கிய வேட்கையில் தன் மீதே பயம் கொண்டவன் அவளை அவசர அவசரமாக கீழே அழைத்து வந்திருந்தான். 

இரவு உணவை அவளுக்கு பரிமாறி தானும் உண்டவன், இரவு வணக்கம் சொல்லி மென்மையாய் அவள் நெற்றியில் முத்தமிட்டான். அவன் இதழ்களையே குறு குறுவென்று பார்த்துக் கொண்டிருந்தவனின் தலையில் லேசாக தட்டியவன், “போய் தூங்கு போ.’’ என்றான். 

உதட்டை சுளித்து அவளுக்கு பழிப்பு காட்டியவள், தன் அறைக்குள் சென்று கதவடைக்க, வெகு நாட்களுக்கு பின் அமைதி கொண்ட நெஞ்சத்துடன் அந்த மூடிய கதவையே பார்த்துக் கொண்டிருந்தான் திரு.   

தன் அறைக்குள் நுழைந்தவன், தூங்கும் முன் முக நூலில் உலவ, வெகு நாட்களுக்கு பின் அவளின் சகி குறுஞ் செய்தி அனுப்பியிருந்தாள். அவன் வேகமாய் அந்த செய்தியை திறக்க, 

“நீ என் வாழ்வில் வந்த 

வாய்ப்பல்ல – விட்டு நீங்கா 

வரம்.’’ என ஒரு கவிதை வந்து அமர்ந்திருந்தது. 

நெற்றி சுருங்க கவிதையை மீண்டும் மீண்டும் வாசித்து பார்த்தவன், அந்த முக நூல் கணக்கை வெகு கவனமாய் ஆராய தொடங்கினான். அந்த கவிதைகளை மீண்டும் மீண்டும்  வாசிக்க அது சொல்ல வந்த செய்திகள் திரை விலகுவதை போல மெல்ல மெல்ல அவனுக்கு விளங்க தொடங்கியது. 

முதலில் மன்னிப்பில் தொடங்கிய கவிதை, அவனின் ஒவ்வொரு செயலையும் ஆர்பரித்து, ஆராதித்து முடிந்திருந்தது. ஆண்டாள் பெருமாளுக்கு எழுதிய பாசுரம் போல, சகி அவனுக்கு ஊன் உருக, உயிர் உருக எழுதிய வரிகளை மீண்டும் மீண்டும் வாசித்தவன், இறுதியாய் தன் செயலாளரை தொடர்பு கொண்டு, அந்த முகநூல் கணக்கின் அசல் முகவரியை தொழில் நுட்ப உதவியோடு கண்டறிய சொன்னான். 

“நாளைக்கு காலைல முழு இன்பர்மேசனும் கண்டு பிடிச்சிடலாம் சார்.’’ என்று அவர் உறுதியளிக்க, தன் கணிப்பு உண்மையாகுமா என்ற எண்ணத்தோடே உறங்கி போனான் திரு. 

‘இந்த மக்கு மாமா எப்போ தான் என்னை கண்டுபிடிப்பார்…?’ என்ற சிந்தையில் இருந்தவளும் அவன் எண்ணங்களோடு உறங்கி போனாள். 

அடுத்த நாள் காலை இவர்களின் சிந்தையை சிதறடிக்க, அரவிந்த் தன் பெற்றோருடன் திருவின் ஆட்சியர் மாளிகையை தேடி வந்திருந்தான், மித்ராவை பெண் கேட்டு.  

பால் வீதி வளரும்.