“அச்சோ அப்புறம் என்ன ஆச்சு.’’ கார்த்திக் ஆர்வ மிகுதியில் கேட்க, “இருங்க நீங்க கேட்ட கேள்விக்கு விடை வந்துட்டே இருக்கு.’’ என்றவள், “அண்ணா காலேஜ்ல இருந்து உடனே வீட்டுக்கு வந்தாங்க. ரெண்டு பேரும் நோட்ஸ் ஜெராக்ஸ் போட டவுனுக்கு போறோம்னு பொய் சொல்லிட்டு, அண்ணா என்னை ஒரு கயனக்காலஜிஸ்ட்கிட்ட கூட்டிட்டு போனாங்க. அவங்க தான் எனக்கு மென்சுரல் கப்ஸ் யூஸ் செய்ய சொல்லிக் கொடுத்தாங்க. அந்த மென்சுரல் கப்ஸ் பத்தின அவார்னஸ் பெருசா இல்லாத நேரம். அதுவும் கல்யாணம் ஆகாத கன்னிப் பொண்ணுங்க அதை எல்லாம் எப்படி யூஸ் செய்ய முடியும்னு நிறைய குழப்பம் இருந்த டைம். என் வாழ்கையில எனக்கு எப்பவும் பெஸ்ட் தான் கொடுக்கணும்னு முடிவு செஞ்சி வச்சி இருந்த திரு அண்ணா… நான் ஏஜ் அட்டன் செஞ்சா எந்த மாதிரி மென்சுரல் ஹைஜீன் பாலோ செய்யணும்னு கூட யோயசிச்சு வச்சி இருந்து இருக்காங்க. அங்க இருந்த டாக்டர் அந்த கப்ஸ் எப்படி யூஸ் செய்யணும்னு எனக்கு சொல்லி கொடுத்தாங்க. முதல்ல கொஞ்சம் கஷ்டமா இருந்தது. ரெண்டாவது டைம் அவங்க இன்ஸ்ட்ரக்சன் என்னால கேரி செய்ய முடிஞ்சது.’’ என்றவள் சிரிக்க அடப்பாவிகளா என்பது போல கார்த்திக் அவளை பார்த்தான்.

“நான் ஏஜ் அட்டன் செஞ்சதை யாருக்கும் சொல்லாம வெற்றிகரமா டென்த் எக்ஸாம் எழுதி முடிச்சேன். அப்புறம் சம்மர் ஹாலிடேஸ்ல ஏஜ் அட்டன் செஞ்சதா எங்க அம்மாவுக்கு கணக்கு காட்டிட்டோம். எங்க அம்மா சொல்றபடி கேட்டு எங்க அக்கா லைப் வீணா போச்சுன்னு அண்ணா அடிக்கடி வருத்தப்படுவாங்க. அதனால என் விசயத்துல ரொம்ப சென்சிடிவ். நான் நல்லா படிச்சதால என்னை அவங்களுக்கு ரொம்ப பிடிக்கும். அந்த அருவா வெட்டு சம்பவத்துக்கு பிறகு, அவங்க மொதோ குழந்தை மாதிரி என்னை பார்த்துக்க ஆரம்பிச்சாங்க. அந்த வருஷ எக்ஸாம்ல நான் எங்க டிஸ்ட்ரிக் தேர்ட் வந்தேன்.” என்றதும், கார்த்திக் பெருமை பொங்க அவளை பார்த்தான்.

“நம்ம இந்தியால இன்னும் ஐம்பது சதவீத பெண்கள் பீரியட்ஸ் டைம்ல சுகாதாரம் இல்லாத துணிகள் தான் பயன்படுத்துறாங்க. மீதி பெண்கள், நிறைய கெமிக்கல்ஸ் கலந்த பேட்ஸ் யூஸ் செஞ்சி அவங்க உடல் நலத்தோட, சுற்றுப்புற சூழல் நலத்தையும் கெடுக்குறாங்க. இந்தியாவுல மட்டும் ஒரு வருசத்துக்கு கலக்ட் ஆகுற பேட் வேஸ்ட் நூத்தி அறுபது டன் இருக்குமாம். இதுவும் அண்ணா சொன்னது தான். சின்ன குழந்தைகளுக்கு மென்சுரல் ஹைஜீன் டீச் செய்ய அண்ணா புக்ஸ் எல்லாம் எழுதி இருக்காங்க. அதோட பீரியட்ஸ் பிரச்சனையை பேசுற மனுசின்னு ஒரு ஷார்ட் பிலிம் கூட எடுத்து இருக்காங்க. நீங்க என் கழுத்துல தாலி கட்டினப்ப, சப்போர்ட் செஞ்சி பேசின அம்மா, அப்பாவை ரொம்ப மோசமா திட்டி பேசிட்டதா சொல்லி என்கிட்ட வருத்தப்பட்டாங்க. அவங்களை பொறுத்தவரை எனக்கு கிடைக்கிறது எல்லாமே பெஸ்டா இருக்கணும். போனா போகுதுன்னோ, அவங்க அப்பாகிட்ட இருக்க உரிமையை நிலைநாட்டவோ தாலி கட்டின பையனை எப்படி எங்க அண்ணா என் லைப் பார்ட்னரா சூஸ் செய்வாங்க.’’ என்றாள் கேலியாய் சிரித்து.

அவன் ஆமோதிப்பாய் தலை அசைக்க, “உங்க டவுட் கிளியர் ஆயிடுச்சா…’’ என்று பிருந்தா கேட்க, ‘ஆம்… இல்லை …’ என்று எல்லா பக்கமும் தலை அசைத்தவன், “அந்த மென்சுரல் கப்ஸ் அப்படினா என்னன்னு தெரியல. இட்ஸ் ஓகே கூகிள் ஆண்டவர் எதுக்கு இருக்கார். போய் கேட்டுகிறேன்.’’ என்றான்.

“எங்க அண்ணா எடுத்த அனிமேசன் ஷார்ட் பிலிம் லிங்க் இருக்கு. அனுப்புறேன். தெரிஞ்சிக்கோங்க.’’ என்றாள் பிருந்தா. சரி என்பதாய் தலை அசைத்தவன், முன்னே நடக்க பிருந்தா அவனை பின் தொடர்ந்தாள்.

அவள் கொட்டி கவிழ்ந்த சம்பவங்கள் அவனை பெரிதும் பாதிக்க, அதன் பின் கார்த்திக் பெரும் மௌனத்தில் அமிழ்ந்து போனான். பிருந்தா அதை கலைக்க முற்படவில்லை. அவளை குடியிருப்பில் இறக்கிவிட்டவன், அதே மௌனப் பெருவெளியை சுமந்து பயிற்சி மையத்திற்கு திரும்பினான்.

இன்னும் இரு நாளில் அடுத்த போட்டி இருந்தது. ஆக நாளை முதல் பயிற்சி தீவிரப்படும். உள்ளத்தில் ஏற்படும் சோர்வு, தன் உடலில் பிரதிபலிக்க கூடும் என்பதை உணர்ந்தவன், இன்றைய பிருந்தாவின் நிலையை மனதிற்குள் பதிய வைத்து மனதை ஆற்றுப்படுத்த முனைந்து, அதில் வெற்றியும் கண்டான்.

திரு தன் அறையில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான்.ஆனால் அந்த உறக்கத்தை கெடுப்பதை போல அறையில் இருந்த அலைபேசி ஒலித்தது. திரையில் ஒளிர்ந்த எண்ணை கண்டதும், ‘இவர் எதற்கு இந்த நேரத்தில் அழைக்கிறார்’ என எண்ணிக் கொண்டவன், தற்சமயம் ஐ.பி.எல் போட்டிகள் நடப்பதை நினைவு கூர்ந்தவன், ‘போச்சுடா அவங்க பையன் சிக்ஸ் அடிச்சான்னு பெருமை பேச கால் பண்றார் போல.’ என்று அலுத்தபடி தான் அந்த அழைப்பை ஏற்றான்.

அவரிடம் பேசியே ஆறு ஏழு மாதங்கள் ஆகியிருக்க, தற்சமயம் எப்படி அவரிடம் இலகுவாய் பேசுவது என யோசித்தபடியே திரு அழைப்பை ஏற்றான். அவன் அழைப்பை ஏற்ற மறுநொடி, “திருப்பா…’’ என்ற அவரின் தழுதழுத்த குரலில் அவனுக்கு சர்வமும் அடங்கிவிட்டது.

அவர் ஏன் அழுகுரலில் பேசுகிறார் என புரியாது திகைத்தவன், “பால்கிப்பா…! என்ன ஆச்சு. எதுக்கு இவ்ளோ டென்சனா இருக்கீங்க..?’’ என்றவன் படுக்கையில் எழுந்து அமர்ந்து இருந்தான்.

அவர் பதில் பேச முடியாது அழத் தொடங்க, முழுதாக பதறிப் போனவன், “பால்கிப்பா…! என்ன ஆச்சு. நான் உடனே கிளம்பி அங்க வரவா… யாருக்கு என்ன பிரச்சனை. எதுவா இருந்தாலும் பார்த்துக்கலாம். நீங்க முதல்ல தைரியமா இருங்க. பக்கத்துல மதுமா இருந்தா போனை கொடுங்க.’’ என்றான்.

“திரு… நீ கொஞ்சம் கடலூர் மெடிக்கல் காலேஜ் போப்பா. நாங்க வர வரைக்கும் கொஞ்சம் மித்ராவை பார்த்துக்க. இந்த ஒரு உதவி மட்டும் உன்னோட மாமானுக்கு பண்ணுப்பா…’’ என்றவர் கதறி அழ மித்ராவின் பெயர் அடிபடவும் முற்றாக பயம் கொண்டவன், “என்ன ஆச்சு மாமா?’’ என தன்னையும் மீறி கத்தி இருந்தான்.

“நம்ம மித்து… நம்ம மித்து…’’ என்றவர் அழுகையோடு இழுக்க, “என்ன ஆச்சு மாமா. மித்ராவுக்கு என்ன..?’’ என்றான் திரு பயத்தின் அழுத்தத்தை உள்அடக்கிய குரலில்.

“திரு சூசைட் அட்டன் செஞ்சிட்டா திரு. அவ படிச்சிட்டு இருக்க மெடிகல் காலேஜ்லையே அட்மிசன் செஞ்சி இருக்காங்க. ஒரு பத்து நிமிஷம் முன்னாடி தான் எனக்கு கால் வந்துச்சு. விசயத்தை சொன்னதும் மது மயங்கிட்டா. கார்த்திக்கு கால் ரீச் ஆகல. எனக்கு என்ன செய்றதுன்னே புரியல திரு..’’ என்றவர் சிறு குழந்தையாய் தேம்பி அழ தொடங்கினார்.

“மாமா…. ஒண்ணுமில்ல. அவளுக்கு ஒண்ணும் இருக்காது. நான் இப்பவே போய் பார்க்குறேன். நான் இனியனுக்கு பேசுறேன். இன்னும் கொஞ்ச நேரத்துல அங்க இருப்பான். ரெண்டு பேரையும் பத்திரமா சிதம்பரம் கூட்டிட்டு வருவான். நான் போய் பார்த்துட்டு மித்து ஸ்டேடஸ் உங்களுக்கு அப்டேட் பண்றேன். ஒண்ணும் பயப்பட வேண்டாம். நல்ல பெசிலிட்டி உள்ள ஹாஸ்பிடல் தான். நான் பார்த்துகிறேன்’’ என்றவன் இரவு உடையோடு தன் வண்டி சாவியை எடுத்து கொண்டு வெளியே கிளம்பினான்.

வாயிலில் இருந்த காவலாளி, இந்த நேரத்தில் இவர் எங்கே போறார் என பார்த்திருக்க, “ஒரு எமர்ஜென்சி ஹாஸ்பிடல் வரை போறேன்.’’ என்றவன் அவரின் மறுமொழிக்கு காத்திருக்காமல் வண்டியை உயிர்ப்பித்து கிளம்பினான்.

பயணித்துக் கொண்டே, இனியனுக்கு அழைத்தவன், மித்துவின் தற்கொலை முயற்சியை விடுத்து, அவளுக்கு விபத்து என்பதை போல சொல்லி, ஊரில் இருக்கும் இருவரையும் பத்திரமாய் சிதம்பரம் அழைத்து வர சொன்னான்.

மனம் எல்லாம் தீப்பற்றி எரிவதை போல இருந்தது. அவன் அறிந்தவரை தற்சமயம் உள்ள மித்ரா மிகவும்  முற்போக்கானவள். ‘என்ன பிரச்சனை அவளை தற்கொலை நோக்கி தள்ளி இருக்கும்’ என்று சிந்திக்க சிந்திக்க, ஆற்றொண்ணா வேதனை அவனை ஆட்கொண்டது.

சரியாக நாற்பது நிமிடங்களில் மருத்துவமனையை அடைந்தவன், நேராக அவசர சிகிச்சை பிரிவை நோக்கி ஓடினான். அவள் தீவிர சிகிச்சை பிரிவிற்கு மாற்றப்பட்டிருக்கிறாள் என்பதை அறிந்ததும் அந்த இடம் நோக்கி ஓடினான்.