‘என்ன ஆச்சு இவளுக்கு. ஆளு ஒரு மார்க்கமாவே இருக்காளே.’ என எண்ணிக் கொண்ட சரிகா, ‘பாத்துக்கலாம்’ என்பதாய் தோளை குலுக்கிவிட்டு குளிக்க சென்றாள். தான் விடுதியில் இருந்து கிளம்பிவிட்டதாய் கோபிக்கு குறுஞ் செய்தி அனுப்பியவள், தன் வாகனத்தை கடலூர் ஆட்சியர் அலுவலகம் நோக்கி செலுத்த தொடங்கினாள்.

பொதுவாய் அவர்களுக்கு மதியம் மட்டுமே வகுப்பு. காலை வேளையில் நோயாளர்களுக்கு இயன்முறை சிகிச்சை அளிக்க வேண்டும். மருத்துவமனையில் வேலை முடித்து, விடுதிக்கு திரும்பி, சாப்பிட்டு, ஒரு குட்டி தூக்கம் போட்ட பின், மீண்டும் ஒரு முறை குளித்து கல்லூரிக்கு கிளம்புவது அவர்கள் வழமை.

திருவின் உதவியாளன் மித்ராவை தொடர்பு கொண்டு, மாலை நான்கு மணி போல வந்து சந்திக்க சொல்லி இருந்தான். அதனால் கல்லூரியில் இரு மாணவர்கள் ஆட்சியரை சந்திக்க அனுமதி பெற்றிருந்தனர்.

மித்ரா தன் அலுவலகத்தில் நுழைந்த அடுத்த நொடி உள்ளிருந்த அகத் தொலைகாட்சியின் (CCTV Camera) மூலம் அவள் வருகையை அறிந்தவன், கண் இமைக்காமல் அவளை ரசித்துக் கொண்டிருந்தான்.

‘கிட்டாதாயின் வெட்டென மற’ என்று மனதிற்குள் உருப் போட்ட வைராக்கியம் மொத்தமும், அவளின் ஒற்றை பார்வையில் வலுவிழக்கும் மாயத்தை உணர்ந்து அனுபவித்துக் கொண்டிருந்தான்.

தரணியை அழைத்தவன், “அந்த காலேஜ் ஸ்டூடண்ட்சை கடைசியா அனுப்பு தரணி. நிறைய டீடைல்ஸ் கலெக்ட் செய்ய வேண்டி இருக்கு.’’ என்றவன் அன்றைக்கு முடிக்க வேண்டிய அலுவல்களில் முயன்று  கவனத்தை செலுத்தினான்.

இதற்கு மேல் செய்வதற்கு வேலை எதுவும் இல்லை என்ற நிலை வந்ததும், அவர்களை உள்ளே அழைத்தான். காத்திருந்து, காத்திருந்து சோர்ந்து போன கோபி அப்போது தான் ஒரு தேநீர் அருந்தி வரலாம் என வெளியேறி இருந்தான்.

அறைக்குள் மித்ரா நுழையவும், கார்த்திக் அவளை மிதப்பாக பார்த்தபடி, “ஸ்டூடண்ட்ஸ் டீடைல்ஸ் எல்லாம் கொண்டு வந்தாச்சா…?’’ என்றான். ‘ஆம்’ என தலையாட்டியவள், அவனை ஆழ்ந்து பார்த்தாள்.

முகம் எத்தனைக்கு எத்தனை விறைப்பாக இருந்ததோ, கண்களில் அவளுக்கான குழைவு அப்பட்டமாய் வெளிப்பட்டது. அவளின் நேர் பார்வையை எதிர்கொள்ள முடியாதவன் கையிலிருந்த கோரிக்கை மனுவை பார்வையிடுபவன் போல குனிந்து கொண்டான்.

“ஆல்ரெடி எம்.எம்.சி ஸ்டூடண்ட்ஸ்க்கு ஸ்டைபன்ட் கொடுக்குற ஜி.ஓ இருந்தா அதை வாங்கி இதுல அட்டாச் செஞ்சி கொடுங்க. அதை பேசா வச்சி உங்களுக்கும் ஸ்டைபன்ட் ப்ராசஸ் ஓகே செய்ய ஈசியா இருக்கும்.’’ என்றான்.

மித்ரா, “ஓகே சார்” என பதில் கொடுக்க, “உங்க நேடிவ் எங்க…?’’ என்றான். மித்து ஒரு வரி பதிலாய், “சேலம்…’’ என்றாள். “ஓ… அம்மா அப்பா என்ன செய்றாங்க…?’’ என்றான். குனிந்திருந்த அவன் தலையை பார்த்துக் கொண்டே, “அப்பா, அம்மா ரெண்டு பேருமே காலேஜ் ப்ரோபசர்ஸ். எனக்கு ஒரு அண்ணா கூட இருக்கான். அவன் இந்தியன் கிரிக்கெட் டீம்ல ப்ளேயர்.’’ என்றாள்.

கார்த்திக்கின் பெயர் அடிபட்டதும், சடாரென அவளை நிமிர்ந்து பார்த்தவன், “உங்க பேமிலி பேக் ரவுண்ட் பார்த்தா உங்களுக்கு ஸ்டைபன்ட் தேவைப்படாது போலவே மிஸ்.மித்ரா…’’ என்றான் நக்கலாய்.

கேலி புன்னகையை இதழில் சுமந்து போலி பணிவுடன் அவனை பார்த்தவள், “அச்சோ சார்…! எனக்கு பசிக்கும் போது அவங்க சாப்பிட்டா என் வயிறு நிறைஞ்சிடும்னு நீங்க சொல்லவே இல்ல.’’ என்றாள்.

திரு முகம் சுருக்கி அவளை பார்க்கும் போதே, “சார்…! அவங்க வேற. நான் வேற. யு.ஜி. முடிச்சி எப்போ முதன் முதலா வேலைக்கு போனேனோ அப்போ இருந்தே, என் செலவை நான் தான் பார்த்துகிறேன். அதோட கவர்மென்ட் ஒண்ணும் எங்களுக்கு சும்மா ஸ்டைபன்ட் தரல. தினம் ஆறு மணி நேரம் பேசன்ட் கேர் கொடுக்குறோம். எங்க உழைப்புக்கு அவங்க கொடுக்குற குறைந்த பட்ச ஊதியம் தான் அந்த ஸ்டைபன்ட்.’’ என்றாள்.

தெளிவாக பேசும் அவளை, திரு ஆழ்ந்து  பார்த்திருக்க, “எக்ஸ்கியூஸ் மீ சார்..’’ என்ற மன்னிப்பு வேண்டலோடு கோபி உள்ளே வந்தான். இருவரிடமும் பொதுவாய் மேற்கொண்டு தேவைப்படும் ஆவணங்கள் குறித்து பேசியவன், “ரெண்டு நாள்ல அதெல்லாம் ரெடி செஞ்சி உங்க டீன் ஆபிஸ்லையே கொடுத்துருங்க. நான் அவர்கிட்ட பேசிடுறேன். அங்கிருந்தே நேரடியா டி.எம்.ஈக்கு பைலை பார்வர்ட் செஞ்சிடலாம்.’’ என்றான்.

“ஓகே சார்” என்ற இருவரும் அங்கிருந்து கிளம்ப, “மிஸ்  மித்ரா…’’ என்ற குரல் அவளை தேக்கியது. கோபியும் நின்று திரும்பி பார்க்க, உங்க கான்டாக்ட் டீடைல்ஸ் கொடுத்துட்டு போங்க. இது விசயமா மேற்கொண்டு தகவல் தெரிஞ்சா ஷேர் பண்றேன்.’’ என்றான்.

மித்ரா எப்படியெல்லாம் விளையாடுகிறான் என அவனை பார்க்க, தன் மேஜையில் இருந்த நோட் பேட் புத்தகத்தை எடுத்துக் கொடுத்தவன், “உங்க கான்டாக்ட் டீடைல்ஸ் இதுல எழுதி கொடுத்துட்டு போங்க” என்றான்.

கோபி அங்கேயே நிற்க, உள்ளே வந்த தரணி, “நீங்க வெளிய வெயிட் பண்ணுங்க. அவங்க எழுதிட்டு வருவாங்க.’’ என்றதும், கோபி வெளியேறினான். தான் கொண்டு வந்த கோப்புகளை மேஜையில் அடுக்கிய தரணி, “சார் உங்க சைன்.’’ என கேட்டதும், “போட்டு வைக்குறேன் தரணி. ஒரு டென் மினிட்ஸ் கழிச்சி வாங்க.’’ என்று அவரையும் அனுப்பி வைத்தான்.

தான் கையெழுத்திட வேண்டிய கோப்பை பிரித்த திரு, குனிந்து எழுதிக் கொண்டிருந்த அவள் தலையை பார்த்து, “ஐ லவ் யூ…மித்து’’ என்றான்.

மித்து அவனை திடுக்கிட்டு நிமிர்ந்து பார்க்க, “இப்ப இல்ல சின்ன வயசுல இருந்தே எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும். அப்போ எல்லாம் நீ என்னை ஒரு மனுசனா கூட மதிச்சது இல்ல. ஆனாலும் உன் மேல இருந்த பிரியத்தை என்னால மாத்திக்கவே முடியல. நான் லைப்ல எவ்ளோ உயரத்துக்கு போனாலும், உங்க வீட்டு ஆளுங்க முன்னாடி வந்து நின்னாலே ஒருவித  தாழ்வு மனப்பான்மை என்னை சூழ்ந்திடுது. போதும். இதையும் நான் கடந்து வந்து தான் ஆகணும். உன்னை எனக்கு பிடிக்கும். அதை நேரா உன்கிட்ட சொல்லிட்டேன். உன்னோட பதிலும் எனக்கு தெரியும். ஆனா அதையும் நீ மூஞ்சில அடிச்ச மாதிரி நேருக்கு நேரா என் முகத்தை பார்த்து சொல்லிடு. நான் உன்னையும் கடந்து போகணும் மித்து. என் வாழ்கையையும் பார்க்கணும். என் மூஞ்ச பார்த்து சொல்லிடு. உனக்கு என்னை இப்போ இல்லடா இனி எப்பவும் பிடிக்காதுன்னு என் மண்டையில உரைக்கிற மாதிரி நல்லா அழுத்தி சொல்லிடு மித்து.’’

உணர்ச்சி பெருக்கில் அவன் குரல் தழுதழுக்க, திரு எழுந்து நின்றிருந்தான். மித்து இமைக்காமல் அவன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள். தன் உணர்சிகளை அடக்க முற்பட்டதில், அவன் முகம் செந்தணலாய் சிவந்திருந்தது.

“நீங்களே கேள்வி கேட்டு நீங்களே பதிலும் சொல்லிடீங்க மிஸ்டர் கலெக்டர் சார். சபாஷ். அப்புறம் ஏன் என்னை சொல்ல சொல்லி கேக்குறீங்க. நீங்க சொல்ல சொல்றதை எல்லாம் என்னால சொல்ல முடியாது. பை த பை…உங்களுக்கு நல்லா தெரிஞ்ச என்னோட கான்டாக்ட் டீடைல்சை உங்க நோட் பேட்ல எழுதிட்டேன். இது உங்க ஆபிஸ். இனி அபிசியல் மேட்டர்ஸ் மட்டும் பேசினா நல்லா இருக்கும்னு நினைக்கிறேன்.’’ என்றவள் தன் கைபையை எடுத்துக் கொண்டு வெளியேற, திரு விலகி செல்லும் அவளையே குழப்பத்தோடு பார்த்துக் கொண்டிருந்தான்.

‘இவளுக்கு தன்னை பிடிக்குமா…? பிடிக்காதா…?’ என்ற விடை தெரியா கேள்வியோடு அவன் அவளை பார்த்துக் கொண்டிருக்க,  மனதிற்குள் குத்தாட்டம் போட்டபடியே வெளியே வந்த மித்ரா, ‘இப்போ தானே லவ் சொல்லி இருக்காங்க. என் பின்னாடி நல்லா சுத்த விடுறேன். எவ்ளோ திமிர் இருந்தா என்னை பிடிக்காதுன்னு சொல்லுன்னு என்கிட்டையே சொல்லுவாங்க.’’ என மனதிற்குள் சொல்லிக் கொண்டவள் வண்டியை நோக்கி நடந்தாள்.

தோழி தனக்கு தானே சிரித்தபடி வருவதை கண்ட கோபி, ‘வரும் போது நல்லா தானே இருந்தா. இப்போ என்ன லூசு மாதிரி தானா சிரிச்சிட்டு இருக்கா.’ என்றவன் அவள் அருகில் வந்ததும் தலையில் தட்டி, “பைத்தியம்… எதுக்கு தனியா சிரிச்சிட்டு இருக்க?’’ என்றான்.

ஒன்றுமில்லை என்பதாய் தலை அசைத்தவள், தன் வண்டியை எடுத்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பினாள். அவளுக்கு பின்னால் தலையை உலுக்கிக் கொண்ட கோபியும் தன் வண்டியை எடுத்துக் கொண்டு தோழியை பின் தொடர்ந்தான்.

அப்போது மித்ரா அறியவில்லை. ஒரு காதலியாய் அவளை நேருக்கு நேர் பார்த்து உன்னை எனக்கு பிடித்திருகிறது என சொல்லும்  வாய்ப்பு இனி தனக்கு கிடைக்கப் போவதில்லை என்பது.

பால் வீதி வளரும்.