“ஹேய் ஸ்ரீ…. கங்கராட்ஸ். இப்பதான் ப்ராக்டீஸ் முடிச்சு, குளிச்சிட்டு வந்தேன். உன் மெசேஜ் பார்த்தேன். “, உற்சாகமாக வந்தது நவீனின் குரல்.
“தாங்க்ஸ் நவீன்.”, இவள் வேலை கிடைத்துவிட்டதாக போட்ட மெசேஜிற்கு வாழ்த்து செய்தி வரும் என்று நினைத்தவளுக்கு அவனே கூப்பிட்டு பேசவும், உள்ளம் பூரித்தது.
“என்ன வேலை ? நீ எதுவும் இன்டெர்வ்யூ போனதா கூட சொல்லலையே ?”
“ம்ம்.. அதுக்கும் நான் உங்களுக்கும், அஷ்வின் அண்ணாக்கும்தான் தாங்க்ஸ் சொல்லணும். அன்னிக்கு பெங்களூரு மாட்ச் பார்க்க வந்தபோதுதான் சித்தார்த் சர் மீட் பண்ணேன். அப்ப, அவர் கம்பனில கூட அப்ளை பண்ணிருந்தேன்னு சொல்லியிருந்தேன். அப்பதான் விசாரிச்சிட்டு ஹெச்.ஆர். ஹெட் மீட் பண்ண சொல்லி அவர் கார்ட் குடுத்தார். அப்படித்தான் இன்டெர்வ்யூ கிடைச்சது நவீன்.”, பின்னணியை ஸ்ரீ சொல்ல,
“ஒஹ்… அவர் இன்டெர்வ்யூக்கு சான்ஸ் குடுத்தாலும், அதை வேலையா மாத்திக்கிட்டது உன் திறமைதானே. குட் வொர்க்.”, என்று பாராட்டினான். ஸ்ரீக்குத்தான் சங்கடமாக இருந்தது.
அவளது எந்தத் திறமைக்கு வேலை கிடைத்தது என்று யாருக்குமே அவள் சொல்லவில்லை. தாய்க்குத் தெரிந்தால் கண்டிப்பாக முடியாதென்றிருப்பார். ராகுல் கூட அதைத்தான் சொல்லியிருப்பான். அப்பா, நேராக சித்தார்த்திடம் சண்டைக்கே போயிருப்பார். வாழ்க்கையில் முதல் முறையாக ராகுலுக்குக் கூட தெரியாத ஒரு தகிடுதத்தம். நினைக்கையில் சற்று நடுக்கமாகத்தான் இருந்தது.
ஆனாலும், சித்தார்த் சொன்னது போல இதுவும் ஒரு திறமை. சும்மா கிடப்பதற்கு, உபயோகப் படுத்திக் கொள்ளலாமே. தெரிந்தால் சொல்லப் போகிறோம். இல்லையென்றால், என்ன பெரிதாக ஆகிவிடும் ? மிஞ்சிப் போனால், வேலை போய்விடும். அதைத்தாண்டி ஒன்றும் பெரிதாக இல்லை. ஒரு ஆறு மாதம் இருந்தால் போதும் என்று பலவாறாக மனதில் உருப் போட்டு தைரியப் படுத்திக் கொண்டாள்.
“ஸ்ரீ ?”, அவளிடம் பதில் வரவில்லை என்று நவீன் மீண்டும் அழைக்க,
“ஹா… இருக்கேன். சொல்லுங்க நவீன். நாளைக்கு மேட்ச்க்கு ரெடியா?“
“ம்ம்… நீ சொல்லு. எப்ப வேலையில சேரணும் ? என்ன வேலை ?”, என்று அவளைக் கேட்க மெல்ல கதை ஓடிக்கொண்டிருந்தது.
என்ன சாப்பிட்டான், வீட்டிற்கு பேசினது, நேற்று யூ ட்யூபில் பார்த்த மொக்கை வீடியோ என்று அது பாட்டு பல விஷயங்களுக்குத் தாவிக்கொண்டிருக்க,
“டேய்…. யாரோட அங்க கடலை… டைம் பார்த்தியா ?”, அஷ்வினின் குரல் தெளிவாகக் கேட்டது.
“ஹோ… “, என்று நவீனின் திகைப்பு தெரிந்தது.
“என்ன…. என்னாச்சு நவீன் ?”
“ம்ம்…. டீம் மீட்டிங் கூட மறந்துட்டு உன் மாமன் உன் கூட கடலை போட்டுகிட்டு இருக்கான். அதான் நடந்துச்சு. நீ வைம்மா நைட் பேசுவான்.”, என்று சொன்ன அஷ்வின் போனை அணைத்தான்.
“என்ன நவீன் இது? நல்ல வேளை, உன்னைக் காணோம்னு கருண் போன் பண்ணான். அதான் பார்த்துட்டு போலாம்னு வந்தேன். இன்னேரம் கோச் கூட வந்துட்டு இருப்பாங்க. நீ முதல்ல ஓடு.”, என்று கடிந்தான்.
போகும் வழியெல்லாம் தன்னையே திட்டிக்கொண்டிருந்தான். ‘என்னடா… எப்படி டீம் மீட்டிங் கூட மறந்துட்டுபோய் வெட்டி கதை பேசிட்டு இருப்ப ? உன் லட்சியம் என்ன? நீ பண்ணிகிட்டு இருக்கறது என்ன? இடியட். கவனம் நாளைக்கு கேம் மேல இருக்கணும். அதை விட்டுட்டு….”.
மீட்டிங் அறைக் கதவு திறந்திருந்தது. கூட்டத்தோடு சேர்ந்து கொண்டான். கோச் இரண்டு நிமிடங்களில் அறைக் கதவை சாற்றிவிட்டால், அடுத்த இரண்டு மணி நேரமும் யாருக்கும் அனுமதி இருக்காது. கருணைப் பார்த்து, கையாட்டி தன் நன்றியை தெரிவித்துக் கொண்டான். அஷ்வின் , ஃபீல்டிங் கோச்சுடன் உள்ளே வர, அறைக் கதவு சாத்தப்பட்டது.
இங்கே ஸ்ரீக்கு சங்கடமாகிப் போனது. ‘சே… உப்பு சப்பில்லாத விஷயத்தையெல்லாம் பேசி, அவர் டைமை வேஸ்ட் பண்ணிட்ட. இப்ப என்ன சிக்கல்ல மாட்டியிருக்காரோ. இடியட். இனி பேசினா அவருக்கு அடுத்து என்ன வேலைன்னு கேட்டுட்டு பேசு. உன்னாட்டமே அவரும் வெட்டியா இருப்பாருன்னு நினைப்பு. தத்தி..தத்தி… இனி மனுஷன் பேசுவாரா பாரு. ‘, என்று அவளை அவளே அர்ச்சித்துக் கொண்டாள்.
இரவு பத்து மணி வரை போனைப் பார்த்துக்கொண்டிருந்தாள். ஆனாலும் நவீனிடமிருந்து ஒரு மெசேஜ் கூட வரவில்லை. அவனை சிக்கலில் மாட்டி விட்டதற்கு மன்னிப்பு கேட்டும் மறு நாள் நன்றாக விளையாட வாழ்த்து சொல்லியும் ஒரு மெசேஜை தட்டிவிட்டாள். அடுத்து அரை மணி நேரம் போனை முறைத்துப் பார்த்தும் ஒரு புண்ணியமும் இல்லை. அவன் பார்த்ததற்கான அறிகுறி இல்லை. ஆனால் அவனிடமிருந்த ஐ-போனில் நோஃபிஃபிகேஷன் மூலமாகவே படித்துவிட முடியும், திறந்து பார்க்க வேண்டிய அவசியமில்லை. பார்த்துவிட்டு பதில் அனுப்பவில்லையா இல்லை பார்க்கவேயில்லையா என்று தெரியவில்லை.
மணி பதினொன்றை நெருங்க, ‘இன்னேரம் தூங்க போயிருப்பார். நாளைக்கு வேலைக்கு போகணும். இன்னும் முழிச்சிகிட்டு இருந்தா, காலையில தூங்கி வழிவ. ஒழுங்கு மரியாதையா போனை வை.’, என்று அறிவு துப்ப, ஒரு பெருமூச்சுடன் விளக்கை அணைத்து படுக்கப் போனாள். போனை தொடுவதில்லை என்ற வைராக்கியத்தோடு அங்கே ஒருவன் முயன்று நித்திரையை வரவழைத்துக் கொண்டிருந்தான் என்று தெரிந்திருந்தால் கொஞ்சம் சமன்பட்டிருப்பாளாகிருக்கும்.
காலையில் விழித்ததும் போனைத்தான் பார்த்தாள். மெசேஜையும் பார்க்கவில்லை, பதிலும் வரவில்லை என்றதும் சற்று வாடிப்போனாள். குளித்து கிளம்பி, சாப்பிட வரும்போதுதான் அடுத்து போனைப் பார்க்க நேரமிருந்தது ஸ்ரீக்கு.
“ஒன்னும் பிரச்சனையில்லை. உன் வாழ்த்துக்கு நன்றி. புது வேலைக்கு என் வாழ்த்துகள்.”, என்று பூங்கொத்து எமோஜியுடன் ஒரு மெசேஜ் நவீனிடமிருந்து வந்திருந்தது. சாதாரண மெசேஜ்தான் ஆனாலும், அழுதுவடிந்து கொண்டிருந்த மனது மகிழ்ச்சியானது. முகத்திலும் பிரதிபலித்தது. ஒரு புன்னகையை மட்டும் பதிலாக அனுப்பினாள் ஸ்ரீ.
“அவளா தேடிகிட்ட வேலை. அதுவும் அவ கேட்ட மாதிரியான வேலை. நல்ல கம்பனி, நல்ல சம்பளம். ஜொலிக்கலாம். தப்பேயில்லை. நீ ஏன் வீங்கி வெடிக்கற?”, ஸ்ரீயின் தந்தை பாண்டியன் மனைவியை கலாய்த்தார்.
அப்பாவின் பெருமையைக் கண்டு ஸ்ரீ புன்னகைத்தாலும், உள்ளுக்குள் ஒரு சிறு குற்ற உணர்வு ஓடியதை தடுக்க முடியவில்லை. ‘உன் திறமையை வேலையில காட்டி, அதை தக்க வை ஸ்ரீ. இது ஒரு ஓபெனிங் குடுக்க மட்டும்தான். உன் மேல நம்பிக்கை வை.’, என்று தனக்குள்ளேயே சொல்லிக்கொண்டு அமர்ந்தாள்.
“என்னடாம்மா? முதல் நாள்னு டென்ஷன் இருக்கா? இன்னேரம் அம்மா சொன்னதுக்கு நாலு பதில் சொல்லியிருப்ப. ரிலாக்ஸ். இப்பதான் காலேஜ் முடிச்சு முதல் வேலைக்கு சேர்ந்திருக்கன்னு அவங்களுக்கும் தெரியும். நீதான் எல்லாரோடவும் ஃப்ரெண்ட்லியா பழகுவியே. அப்பறம் என்ன? போக போக வேலையை கத்துக்க. டவுட் இருந்தா கூச்சப்படாம கேளு.”, தந்தையாக அறிவுரை செய்தார்.
“உங்க பொண்ணு ஆஃபீசையே அவ இஷ்டத்துக்கு ஆட விடுவா ஒரு மாசத்துல. நீங்க வேணா பாருங்க.”, அன்னை அவர் பங்குக்கு அவர் பாணியில் தைரியமூட்டினார்.
“அம்மா… ஆனாலும் உன் பொண்ணு திறமைமேல உனக்கு இம்புட்டு நம்பிக்கையா? அங்க கிட்டதட்ட இருனூறு பேர் வேலை பார்க்கறாங்க. அத்தனை பேரையும் ஒரு மாசத்துல ஆட விட முடியாதுமா. கூட ஒரு மாசம் தாங்க. முடிச்சிருவோம்.”, கண்ணடித்து சவடால் பேசினாள்.
அன்று மதியம் அலுவலக சாப்பாட்டு அறையில் அனேகம் பேர் கூடியிருந்தனர். அனைவருக்கும் பொதுவாக இரண்டாவது மாடியில் இருந்தது.நான்கு ஐந்து பேர் குழுக்களாக அமர்ந்து சாப்பிட வசதியாக மேசை நாற்காலிகள் போடப்பட்டு, கூடவே ஒரு பெரிய டீ.வி.யும் இருந்தது. அதன் எதிரேவும் சில சோபாக்கள் இளைபாற .
ஐ.பி.ல் என்பதால் நேற்றைய மேட்ச் மறுஒலிபரப்பாக ஓடிக்கொண்டிருந்தது. . ஸ்ரீ புதிதாக பிடித்த நண்பி மைதிலியுடன் வந்து அமர்ந்தாள். அன்னை கட்டிக்கொடுத்த முட்டை ஃப்ரைட் ரைஸ் திறந்து, மைதிலிக்கு கொஞ்சம் கொடுத்தபடியே டீ.வியில் ஒரு கண்ணை வைத்தாள்.
“நீயும் கிரிக்கெட் பார்ப்பியா ஸ்ரீ? இந்த ஐ.பி.ல் நடந்தாலே டீ.வில வேற எதையும் போட விடமாட்டாங்க. இதேதான் ஓடும். வீட்லதான் அப்படின்னா, இங்கயும் இதே தொல்லை.”, மைதிலி சலித்துக்கொண்டாள்.
“இல்லைக்கா. பெருசா பார்க்கமாட்டேன். ஒன்னு இரண்டு ப்ளேயர்ஸ் மட்டும் ஆடினா பார்ப்பேன்.”, என்றாள் கண் சிமிட்டியபடி.
“ஹா ஹா… உன் வயசு அப்படி. இப்பவே இதெல்லாம் பார்த்துக்கோ. கல்யாணம் பண்ணா, அப்பறம் எங்க பார்க்க ?”, ரோஜாவின் சாப்பாட்டை ஒரு வாய் சாப்பிட்ட மைதிலி, “ஹே சூப்பரா இருக்கு. இது ரெசிபி சொல்லேன்.” என்றாள்.
“குடுமபஸ்த்ரின்னு ப்ரூவ் பண்றீங்களேக்கா. சாப்பிட்டா நல்லாருக்குனு போகாம, ரெசிபி கேட்கறீங்க, அதுவும் தப்பான ஆள்கிட்ட. நமக்கெல்லாம் வக்கணையா சாப்பிட வரும், பேச வரும். செய்யல்லாம் வராது.”
“அது சரி. அம்மா வீட்ல இருக்க வரைக்கும் நானும் இப்படியெல்லாம் பேசினவதான். உன் வயசுல கல்யாணத்தை பண்ணி வெச்சிட்டாங்க. அதுலர்ந்து குஷியெல்லாம் காணாம போச்சு.”, உதட்டை சுழித்தாலும், சாப்பாட்டை உள்ளே தள்ளினாள் மைதிலி.
“அட என்னக்கா இப்படி சலிச்சிக்கறீங்க ? மாமியார் படுத்துவாங்களா ?“ , என்று கதை கேட்டாள் ஸ்ரீ.