மறு நாள் காலை ஒன்பது மணிக்கெல்லாம் சேப்பாக்கம் மைதானத்தை அடைந்திருந்தார்கள் ஸ்ரீ நிதியும் ராகுலும். நவீன் அனுப்பியிருந்த குறுஞ்செய்தியைக் காட்டி, அங்கிருந்த ஆஃபீசில் ஐ.டி. ப்ஃரூஃபும் காட்டி, அந்த விருந்தினர் பாட்ஜை வாங்கிக்கொண்டவர்களுக்கு காதில் ரத்தம் வராத குறையாக அறிவுரையும் அளிக்கப்பட்டது. தேவையில்லாமல் ப்ளேயர்சை தொந்தரவு செய்யக்கூடாது என்பதில் ஆரம்பித்து, நிறைய பேசியவனிடம் பயபக்தியாக ராகுல் கேட்டுக்கொண்டிருக்க, ஸ்ரீ வழக்கம்போல பராக்கு பார்த்துக்கொண்டிருந்தாள்.
வந்துவிட்டதாக ஸ்ரீ அனுப்பிய குறுஞ்செய்திக்கு ஒரு ஓகே எமோஜி மட்டும் வந்திருந்தது நவீனிடம். ஒரு வழியாக அங்கிருந்து நகர்ந்து நெட் ப்ராக்டீஸ் செய்யுமிடம் நோக்கி வந்தார்கள். பார்வையாளர்களுக்காக இருந்த இருக்கையில் அமர்ந்தவள் ராகுலைப் பார்க்க, அவனோ அங்கிருந்த கிரிக்கெட் வீரர்களை அடையாளம் பார்த்து பரவசமாக நின்றிருந்தான்.
“டேய்…. மிட்டாய் கடையில பார்க்கறமாதிரி பார்க்காதேடா… , என்று ஸ்ரீ அவன் காதைக் கடிக்க,
“ஹே… அங்க பாரு, சுரேஷ் ஐயர் ப்ராக்டீஸ் ஆரம்பிச்சாச்சு. அந்த பக்கம் எக்சர்சைஸ் பண்றது ரவிச்சந்திரன் அஷ்வின். கூட இருக்கறது யாருன்னு தெரியலையே….“, கைகாட்டி புலம்பிக் கொண்டிருந்தான் ராகுல்.
“நவீன் எங்க ? அதை சொல்லு முதல்ல.”, ஸ்ரீயின் கட்டளை கேட்டு மைதானத்தில் கண்ணைத் துழாவ,
“ஹாய் ஸ்ரீ… பாஸ் வாங்கறதுல எதுவும் பிரச்சனை இல்லைல்ல?”, என்று பின்புறம் கேட்ட குரலில் இருவரும் திரும்பினார்கள். அவ்வளவு கிட்டத்தில் நவீனைப் பார்க்க, பரவசமாக நின்றான் ராகுல்.
ராகுல் விலாவில் இடித்தவள், “ அதை செய்யாதே இதை செய்யாதேன்னு ஒரு பெரிய லெக்சர். அது தாண்டி வேற ஒன்னும் இல்லை. “, என்று நவீனிடம் சொல்லியவள்,
“இவன் என் ப்ரெண்ட் ராகுல். எஞ்சினீயரிங் பண்றான். கிரிக்கெட் பைத்தியம். அதான் இப்படி ஒரு லுக். மத்தபடி நார்மல் ஆளுதான்.”, என்ற அறிமுகத்தில் நவீன் சிரித்தபடியே ராகுலிடம் கைகுலுக்கி,
“ஹே ராகுல்.. சில்… எனக்கும் புரியும் அந்த ஃபீல். டீம் மீட்டிங்ல ஷாருக்கான் பார்த்து நானும் இப்படிதான் ஃபீல் பண்ணேன். ஆனா இந்த அளவு ஃபீலாகறதுக்கு நான் இன்னும் வளரலை. ரிலாக்ஸ். “, என்று தோள் தட்டினான்.
சற்று அசடு வழிந்த ராகுல், “ இல்லை தமிழ் நாடு டீமுக்கு நீங்க ஆடும்போதே பார்த்திருக்கேன். விஜய் ஹாசாரே டோர்ணமென்ட் இந்த முறை கலக்கிட்டீங்க.”, என்று சொல்ல நவீன் முகத்தில் நிஜமான மகிழ்ச்சி.
“ம்ம்… தாங்க்ஸ். அதுதான் இப்ப இந்த ஐ.பி.ல் கதவை திறந்திருக்கு. என்றவன் “ இப்ப நான் போகணும். நீங்க இருந்து பாருங்க. முடிஞ்சா எனக்கு தெரிஞ்ச ஒன்னு இரண்டு பேர் இன்ட்ரோ குடுக்கறேன் அப்பறமா.”, என்று சொல்லிவிட்டு ஸ்ரீயிடம் ஒரு கையசைப்புடன் கிளம்பிவிட்டான்.
அடுத்த ஒரு மணி நேரம் சொர்க்க லோகத்தில் ராகுல் இருக்க, அவனை ஸ்ரீ தான் பார்த்துக்கொள்ள வேண்டியிருந்தது. கிட்டத்தட்ட அனைத்து வீரர்களுமே பயிற்சியில் இருந்தனர். ராகுல் புகைப்படங்களாக எடுத்துக்கொண்டிருந்தான்.
முத்தையா முரளிதரன், ப்ரையன் லாரா என்று புகழ்பெற்ற முன்னாள் வீரர்கள் கோச்சுகளாக அவர்கள் அணியான ஹைதராபாத் வீரர்களுக்குப் பயிற்சி கொடுத்துக்கொண்டிருந்தனர்.
இதற்கு மேல் ராகுலை கட்டி மேய்க்க முடியாது என்று ஒரு ஓரமாக நவீன் சுழற்பந்து போடுவது தெரியும் படியாக ஒரு இடத்தில் அமர்ந்துவிட்டாள் ஸ்ரீ. ஷார்ட்ஸ் போட்டு அவன் ஓடி வந்து பந்து போட, திட காத்திரமான கால்களையும், மற்றவர்களோடு பேசி , கோச் சொல்லும் திருத்தங்களை கவனமாக கேட்பது என்று அவனது நடவடிக்கைகளையும் கண்டு களித்திருந்தாள். ஒரு வழியாக பந்துகளைப் போட்டு முடித்தவன், இவளைப் பார்க்கவும், அஷ்வினுடன் சேர்ந்து இவள் இருக்கும் பகுதிக்கு வந்தான். ஸ்ரீ யின் மேல் ஒரு கண்ணை வைத்துக்கொண்டிருந்த ராகுல், இவர்கள் வருவதைப் பார்த்ததும் அவனும் வந்து சேர்ந்துகொண்டான்.
பரஸ்பரம் அறிமுகப் படலம் முடிக்க, அஸ்வினின் கேள்விக்கு, “ கிரிக்கெட் எல்லாம் அவ்வளவு இன்ட்ரெஸ்ட் இல்லை சர். அதெல்லாம் ராகுல்தான். ஆனா மாட்ச் பத்தின உங்க வீடியோஸ் யூட்யூப்ல பார்ப்பேன். செம்ம ஃபன்னா இருக்கும்,”, என்று புன்னகைத்தாள் ஸ்ரீ.
“என்ன நவீன்… உன் சிஸ்டர் இப்படி சொல்லிட்டாங்க ?”, என்று கலாய்க்கவும்,
“என்னது சிஸ்டரா ? இல்ல இல்ல….”, என்று அதிர்ந்து கூறினாள் ஸ்ரீ.
“ஓ…அப்ப கசின்னு சொல்லித்தானடா பாஸ் வாங்கின கோச்கிட்ட ?”, என்று அஸ்வின் நவீனைப் பார்க்க, தன் தவறை நொடியில் உணர்ந்தவள்,
“அது… நான் நவீனுக்கு அத்தை பொண்ணு சார். இங்லீஷ்ல எல்லாத்தையும் கசின் சிஸ்டர்ங்கறாங்க… “, என்று சமாளித்தாள்.
“ஓ….”, இந்த ஓ வேறு தொனியில் வந்தது அஸ்வினிடமிருந்து. “அப்ப நேத்து மாப்ள அத்தை வீட்லதான் மீன் குழம்பு சாப்பிட்டு வந்தீங்களா?” , என்று கிண்டலாகக் கேட்க, நவீனுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. உறவு என்றால் பெரிதாக கேள்வியில்லாது பாஸ் கிடைக்கும் என்று நினைத்து அவன் ஒன்று சொல்ல, இப்படியாகிவிட்டது.
“ஓ… மீன் குழம்பு வரைக்கும் தெரியுமா?”, என்று அஸ்வினின் கவனத்தை தன்புறமே வைத்தாள் ஸ்ரீ.
“ஹ ஹா… கொஞ்ச நேரம் காணலை இவனை. அப்பறம் வந்தவன், சாப்பாடு வேணாம்னு சொல்லவும், என்னடான்னு பார்த்தா, கையில மீன் குழம்பு வாசம். கண்டுபிடிச்சிட்டோம்ல….”, என்று அஸ்வின் சொல்லி சிரித்தார்.
போட்டோ எடுக்க அடுத்த சில நிமிடங்கள் கரைய, க்ரவுண்டிலிருந்து அழைப்பு வந்தது.
“சரி… கிளம்பறேன் ஸ்ரீ, ராகுல்… நைஸ் மீட்டிங் யூ கைஸ்.”, என்று அஷ்வின் விடை பெறும் தருணம், அவரைப் பார்த்துக் கொண்டிருந்தவள்,
“ அடுத்த மாட்ச் அஞ்சு விக்கெட் உங்களுதுதாண்ணா… “, என்று வாழ்த்தினாள். அதைக் கேட்டு வாய்விட்டு சிரித்த அஷ்வின் , “ஹ ஹா…அப்படியே பலிக்கட்டும். அப்போ… நவீனுக்கு என்ன சொல்லுவ?”, என கேட்டார்.
நவீனைப் பார்த்து முழித்தவளுக்கு ஒன்றும் தோணவில்லை. “என்ன செய்வார்னு தெரியலையே…”, என்று இழுக்க, நவீன் முகம் சுருங்கியது. அவள் கூறிய குழப்ப பாவனையில் அடக்கமாட்டாமல் சிரித்த அஷ்வின்,
“என்னடா… உன் அத்த பொண்ணே உன்னை சப்போர்ட் பண்ணலை ?”, என்று கிண்டலடிக்க,
ராகுல், “இல்ல… போன மாட்ச்ல அவர் சுரேஷ் ஐயர் காட்ச் விட்டப்போ, விக்கெட் உங்களுக்குத்தான்னு கத்தினா… அதே மாதிரி, அவரோட ஃபர்ஸ்ட் பால்ல சுரேஷ் விக்கெட் எடுத்தார்.”, என்று விளக்கினான்.
யாரோ என்று நினைத்திருந்த நவீன், அதை சொல்லியது ஸ்ரீ என்று தெரிந்து அவளை ஆச்சரியமாகப் பார்த்தான். அஷ்வின் பதில் பேசியது கூட அவன் காதில் விழவில்லை.
அஷ்வின் கையசைத்து விடை பெற, “ அத்தனை பேர் அன்னிக்கு காலாய்ச்ச போது கஷ்டமா இருந்துச்சு. நீதான் அதை சொன்னியா ஸ்ரீ? நீ சொன்னதும் அதையே ஒரு சவாலா பிடிச்சிகிட்டேன். அந்த விக்கெட்டை எடுத்தப்பறம்தான் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆச்சு. தாங்க்ஸ்.”, என்றான்.
இரண்டு எட்டு வைத்து செல்ல எத்தனித்தவன், சட்டென்று திரும்பி, “எதுக்கு அவர்கிட்ட இப்படி அத்தை பொண்ணுன்னு சொல்லி வெச்சிருக்க. மனுஷன் கண்டிப்பா ஓட்டுவாரு.”, என்று முறைத்தான்.
அவனை வினோதமாக பார்த்த ஸ்ரீ, “கண்ணு இருக்க எந்த பொண்ணு உங்களை அண்ணான்னு சொல்லுவா? “, என்று கேட்கவும், ஒரு நிமிடம் முழித்த நவீன், பக்கென்று சிரித்து, “ஆனாலும் உனக்கு ரொம்ப கொழுப்புதான். பார்த்துக்கோ ராகுல். “ , என்று சொல்லி மெல்லோட்டமாக ஓடி மற்ற வீரர்களுடன் சேர்ந்து கொண்டான்.
அவள் பதிலில் தலையில் அடித்துக்கொண்ட ராகுல் “சரி விடு… அஷ்வின் அஞ்சு விக்கெட் எடுப்பார்னு சொன்னியே … அது ?”
“ப்ளாஷ் ஆச்சுடா…”, அவர் கைபிடிச்சு குலுக்கும்போது. சொன்னப்பறம்தான் சொன்னதே தெரிஞ்சுது.
“போகுது, நவீனுக்கும் எதையாவது சொல்றதுதான… அவர் முகம் ஒரு மாதிரி ஆகிடுச்சு நீ சொல்லாததுல….”, ராகுல் குற்றம் சொல்ல,
தோளைக் குலுக்கியவள், “ நான் சொன்னாலும் சொல்லலைன்னாலும் அவருக்கு அவர் மேல நம்பிக்கை இருந்தா நல்லா பண்ணுவார். அவரோட வெற்றி அடுத்தவங்க வாக்குல கிடையாது.”, என்றாள் அந்த வாக்கு தேவதை.