“ரொம்ப ரொம்ப நன்றிப்பா நவீன். உன்னாலதான் இது சட்டுனு முடிஞ்சுது. இல்லை போலீஸ் எவ்வளவு நேரம் இழுத்திருப்பாங்களோ… மீடியாக்கெல்லாம் ந்யூஸ் போயிருந்தா ரொம்ப பிரச்சனை ஆகியிருக்கும்.”, என்று பாண்டியன் நவீனுக்கு மீண்டும் தன் நன்றியை கூறிக்கொண்டிருந்தார்.
காபியை பருகி முடித்த நவீன் தான் கிளம்புவதாகக் கூற விடை கொடுத்தனர். ஸ்ரீயிடம் அதிகம் பேச முடியாதவன், அவள் கண்னைப் பார்த்து தலையசைத்து விடை பெற்று கிளம்பினான்.  நவீன் போனதும் கதவை சாத்திவிட்டு உள்ளே வந்த ரோஜா, நேராக ஸ்ரீ அமர்ந்திருந்த சோஃபாவிற்கு வந்தவர், “பளார்”, என்று ஒரு அறை விட்டார்.
யாருமே எதிர்பார்க்கவில்லை. “வனா !”, “ஆன்ட்டி”, “மா…”என்று எல்லா பக்கத்திலும் ரோஜாவை நோக்கி குரல் வந்தது.
“எவ்வளவு நெஞ்சழுத்தம் டீ உனக்கு ? யார்கிட்டயும் சொல்லாம அந்த சித்தார்த் கிட்ட அப்படி ஒரு வேலைக்கு ஒத்துகிட்டு இருக்க ? எத்தனை வாட்டி அப்பா உனக்கு வேலை பார்த்து தரேன்னு சொன்னார். அப்ப எல்லாம் வேணாம்னு ஜம்பமா சொல்லிட்டு…. திருட்டுக் கழுதை எப்படி ஒரு சிக்கல்ல மாட்டியிருக்க ? “, உக்கிர காளியாய் ரோஜா நிற்க, அதிர்ந்து கண்ணில் கண்ணீர் வழிய…. “அம்மா….அது….”
“எவ்வளவு தரம் சொல்லியிருப்பேன்? யாருக்கும் சொல்லிடாதே… பிரச்சனை வரும்னு. அப்பல்லாம் எனக்கு தெரியாதா… சொல்ல மாட்டேன்னு சொல்லிட்டு, இப்படி  சிக்கியிருக்க்யேடி கிறுக்கச்சி…”, மீண்டும் ஆத்திரத்தில் கை ஓங்க,
“வனா….”, என்று அதட்டினார் பாண்டியன்.
“உன் மேல எவ்வளவு நம்பிக்கை வெச்சிருந்தேன் பாப்பா? என் பொண்ணு எங்களுக்குத் தெரியாம எதுவும் செய்யமாட்டான்னு பெருமையா சொல்லுவேன். அப்படி நம்பினது முட்டாள்தனமாம்மா?”, பாண்டியன் வருத்தமாக கேட்க, அவர் மடியில் விழுந்து கதறிய ஸ்ரீ மீண்டும் மீண்டும் மன்னிப்புக் கோரினாள்.
“நான் …தப்புதான் பா… எனக்கு என்னை ப்ரூவ் பண்ணிக்க ஒரு வாய்ப்புன்னு நினைச்சுதான் சரின்னேன்…. ஆனா… இப்படி …இப்படி ஆகும்னு…”, ஸ்ரீ திக்கித் திணறி சொல்ல,
“கிழிச்ச …எதையும் முழுசா யோசிக்கறதே கிடையாது. பார்த்துக்கலாம்னு  அசட்டு தைரியம்,   நீ செய்யறது தப்புன்னு தெரிஞ்சுதான் செஞ்சிருக்க. இல்லாட்டி தோ இவன்கிட்டயாவது சொல்லியிருப்ப. ரொம்ப இடம் குடுத்துட்டோம் உனக்கு, போறும் நீ வேலை பார்த்து கிழிச்சதெல்லாம். முதல்ல உனக்கு ஒரு கல்யாணத்தை பண்ணி பத்தி விடறேன்.”, மூச்சு வாங்க ரோஜா கத்த,
“அப்பா… ப்ளீஸ் பா…. நான் …”, என்று ஆரம்பித்த ஸ்ரீ, அவள் தந்தையின் முகம் பார்த்து அமைதியானாள். அம்மாவின் கத்தலைவிட, தந்தையின் அமைதி எப்போதுமே ஸ்ரீயை கலங்கடிக்கும்.
“ஆன்ட்டி…. ப்ளீஸ்… உட்காருங்க. நீங்க சொன்ன மாதிரி அவ யோசிக்கலை. அவளுக்கு பிடிச்ச மாதிரி ஒரு வேலை தரேன்னு சித்தார்த் டெம்ப்ட் பண்ணவும், மயங்கிப் போய் மண்டையை ஆட்டிட்டா.”, ராகுல் மட்டும் அவளுக்காக பரிந்து பேச ஸ்ரீயின் அழுகை இன்னும் கூடியது. அவள் தப்பே செய்தாலும் விட்டுக் கொடுக்காத நட்பு.
இவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே… ராகுலின் போன் அடித்தது. நவீன் அழைத்தான்.
“சொல்லு நவீன் ?”, ராகுல் கேட்க,
“கிளம்பிட்டியா…இல்லை அங்கதான் இருக்கியா?”, நவீன் அவசரமாய் கேட்க, புரியாமல், “இல்லை… ஸ்ரீ வீட்டுலதான் இருக்கேன்.”, என்றான் ராகுல்.
“டேய்.. அங்கேயே இரு, பிரச்சனை ஆகிருச்சு. லிங்க் அனுப்பறேன்… பாரு… ந்யூஸ் லீக் ஆகிருச்சுடா…. டீவியை போட்டு சொல்றாங்களான்னு பாரு… நான் ஸ்ரீ வீட்டுக்கு வந்துகிட்டு இருக்கேன். ஆன்ட்டி அங்கிள்கிட்ட சொல்லு. “, என்று வைத்துவிட்டான்.
அதிர்ந்த ராகுலின் முகத்தைப் பார்த்த பாண்டியன் “என்ன ராகுல்? என்னாச்சு?”, என்றார்.
அதற்குள் வாட்சப்பில் வந்திருந்த யூட்யூப் லிங்கை திறக்க, “ஈசி.ஆர் வீட்டில் ஒரு கடத்தல் மீட்பு. அத்தை மகளை தைரியமாக மீட்ட கிரிக்கெட் வீரர் நவீன் சக்ரவர்த்தி.” என்ற தலைப்புடன் எவனோ கிரி என்பவன் பேசிக்கொண்டிருந்தான்.
“ஐயையோ….”, என்ற ராகுல் அதற்குப்பின் பேசவேயில்லை.
தெள்ளத் தெளிவாக அந்த வீடு போலீஸ் சூழ இருந்ததில் ஆரம்பித்து ஸ்ரீயை கரண் துப்பாக்கி முனையில் பால்கனியில் கூட்டி வந்தது, ராகுல் கத்தியது என்று ஓட… அப்போதுதான் அனைவருமே பார்த்தார்கள், ஒரு அடி பின்னேசென்று பந்தை நவீன் பக்கவாட்டிலிருந்து வீசுவதும், பறந்து வரும் பந்தினை உணர்ந்து கரண் திரும்ப முன் நெற்றியில் பந்து பட்டு அவன் விழுவதை.
சத்தியமாக சினிமா காட்சியை மிஞ்சுவதாக இருந்தது, பந்தை வீசிய லாவகம். அதைத்தான் சிலாகித்துக் கூறிக்கொண்டிருந்தான் கிரி. அவனும் கிரிக்கெட் விசிறி போல.
கிட்டதட்டி நாற்பதடி தூரம், கஷ்டமான ஆங்கிள், பந்து மேலே செல்ல வேண்டும், வேகம் கூட்ட நவீன் ஒரு அடி பின்னே சென்றது, பவுலிங் போடுவது போல அவன் பந்தை பிடித்திருந்தது ஜூம் செய்து காட்டப்பட்டது. முடிவில் காப்பாற்றப் பட்டது அவன் விசாரித்த வரை  நவீனின் அத்தை மகள் என்ற ருசிகர தகவலும் சொல்லப்பட்டது. ஆனால் ஏன் கடத்தப்பட்டார் என்ற தகவல் இன்னும் கிடைக்கவில்லை. போலீசார் இருவரை கைது செய்திருக்கின்றனர். பந்தில் அடிபட்டவர் ஆம்புலன்சில் ஏற்றி செல்லப்பட்டார் என்பது வரை அனைத்தும் இருந்தது அந்த கால் மணி நேர வீடியோவில்.
ராகுல் எழுந்து சென்று டீ.வியை போட்டு சானல்களை மாற்றிக் கொண்டிருந்தான்.
ரோஜா தலையில் அடித்துக்கொண்டு அழுதார். “இதுக்குத்தானே பயந்தேன். யாரு இந்த அத்தை மகன்? உன்னை ராத்திரி பூரா கடத்தி வெச்சிருந்தாங்கன்னு எல்லாருக்கும் தெரிஞ்சா… என்னல்லாம் கதை கட்டுவாங்க…. பாவி… பாவி….இன்னும் நோண்டி உன்னை எதுக்கு கடத்தினாங்கன்னு கண்டுபிடிச்சு போட்டா வாழ்க்கை பூரா ஆபத்தாச்சே… “, என்று ஏற்கனவே பயத்தில் உறைந்திருந்த ஸ்ரீயின் முதுகில் ஒன்று வைத்தார்.
தாயிடம் அடி வாங்கியிருக்கிறாள்தான், ஆனால் ஒரே நாளில் இத்தனை முறை வாங்கியது இல்லை. அதுவும் வளர்ந்த பின் ஒரு கொட்டு இல்லை கன்னம் கிள்ளுவதுடன் நிறுத்திக்கொள்வார் ரோஜா. கன்னத்தோடு முதுகும் சேர்ந்து எரிந்தது. எப்போதும் தடுக்க வரும் பாண்டியனோ கலவரமான முகத்துடன் யோசனையில் இருந்தார்.
ராகுல்தான் ஓடி வந்து ரோஜாவை அழைத்து எதிர் சோஃபாவில் அமர வைத்தான். “இன்னும் ந்யூஸ்ல வரலை ஆன்ட்டி… மே மீ, அந்த வீடியோ ப்ளாக் பண்ண முடியுதான்னு பார்க்கலாம். பதட்டப்படாதீங்க. நான் கைலாஷ் சர்க்கு போன் பண்ணி ஹெல்ப் கேட்கறேன்.”, என்று சமாதனப்படுத்தும் போதே அவன் போன் அடித்தது.
அழைப்பது கைலாஷ் என்றதும், ஒரு அமைதி.
“சர்…. சொல்லுங்க சர்.”, என்றான் ராகுல் உள்ளே சென்ற குரலில்.
“ராகுல்,  வீடியோ ஒன்னு லீக் ஆகியிருக்கு.  நவீன் லிங்க் அனுப்பினதைப் பார்த்தியா?”
“பார்த்தோம் சர். அதை ரிமூவ் பண்ண வைக்க முடியாதா சர்?”, ராகுல் கேட்க,
“இல்லைடா… இன்னும் நாலைஞ்சு பேருக்கு வீடியோ வித்துருக்கான். இப்ப நிஜமான்னு கேட்டு  டீ.வி, மீடியாலர்ந்து ஆஃபீஸ்க்கு போன் வருது.. இந்த நேரம் நாம சப்ரெஸ் பண்ண ஆக்ஷன் எடுத்தா அதுவே பிரச்சனையை பெரிசாக்கும். நான் ஸ்ரீ வீட்டுக்கு வந்துகிட்டு இருக்கேன். அங்க வெச்சு முடிவு பண்ணலாம். ஆஃபீஸ்ல ப்ரெஸ் மோப்பம் பிடிசிகிட்டு வந்துடுவாங்க.”, கைலாஷ் சொல்லவும், ஒப்புதலோடு  போனை வைத்துவிட்டு மற்றவர்களிடம் விஷயத்தை பகிர்ந்தான் ராகுல்.
என்ன யோசிப்பது என்று கூட புரியாமல் பேதலித்துப் போய் உட்கார்ந்திருந்தார்கள் அனைவரும். வாசலில் மணி அடிக்கவும், ராகுல் சென்று நவீனை அழைத்து வந்தான்.
“வீட்டுக்கு போன் பண்ணி அப்பா அம்மாகிட்ட ப்ரெஸ் கேட்க ஆரம்பிச்சிட்டாங்க.  அங்க செம்ம டென்ஷன்ல இருக்காங்க. “, என்று நவீன் இன்னும் கலவரத்தைக் கூட்டினான்.
“ஐயோ…. என்ன சொன்னாங்க?”, என்று ராகுல் திகைக்க,
“தெரியலை..  நவீன் இன்னும் போன் பண்ணலை. அப்பறம்தான் தெரியும்னு சொல்லிட்டு அப்பா என்னை கூப்பிட்டார். நான் விஷயத்தை சொன்னதும் அவருக்கு பயங்கர கோவம்….”, நெற்றியை தேய்த்தபடியே நவீனும் சோஃபாவில் அமர, எதிர் புறம், அழுது வீங்கிய கண்கள் பயத்தை தாங்கியிருக்க ஒடுங்கிப் போய் தந்தையோடு ஒட்டிக் கொண்டிருக்கும் ஸ்ரீயை பார்த்தவனுக்கு பரிதாபமாகிப் போனது.
“என்னாலதான் ப்ரோ…. உங்கிட்ட விஷயத்தை சொல்லாமலேயே இருந்திருக்கலாம். எங்களுக்காக வந்துட்டு இப்ப நீயும் பிரச்சனையில மாட்டிகிட்டியே…”, , ராகுலுக்கு பெரிய குற்ற உணர்வாகிப் போனது.
“டேய்… இல்லைன்னாலும் எங்கிட்ட விசாரிக்கணும்னு கைலாஷ் சொன்னார்தானே…  நீ அப்ப சொல்லலைன்னாலும் ஒரு மணி நேரம் கழிச்சு அவரே கூப்பிட்டிருப்பார்.  நீ ஃப்ரீயா விடு….”, என்று ஆறுதல் கூறினான்.
ரோஜா, “ ஏன் உன்னை விசாரிக்க கூப்பிடணும்னு சொன்னார் நவீன்? ராகுல் உன்னை துணைக்கு கூப்பிட்டான்னுதான் நான் நினைச்சிருந்தேன் ?”, என்று புருவம் சுருக்க,
‘உளறிட்டோமோ?’, என்று உள்ளுக்குள் நினைத்தாலும், “ ஸ்ரீ போன் ரிகார்ட்ஸ்ல என் நம்பர் நிறைய இருக்க அதனால பேச நினைச்சதா சொன்னார் ஆன்ட்டி.”, என்று உண்மையை கூறினான்.
அந்த நேரத்தில் எதுவும் மேல கேட்க வேண்டாம் என்ற முடிவில் அமைதியானார் ரோஜா.  கைலாஷ் பேசியதைப் பற்றி ஆண்கள் மூவரும் விவாதித்துக் கொண்டிருக்க நவீன் போன் அலறியது.
“மா…”, என்றான் நவீன். அடுத்து சில நிமிடங்கள் பேசவில்லை. அல்லது பேச வாய்ப்பளிக்கப்படவில்லை.
“அம்மா… ப்ளீஸ்… அப்படியெல்லாம் ஒன்னும் இல்லை. நீங்க பயப்பட வேணாம். என் கரியர் பத்தி எனக்கும் அக்கறை இருக்கு. இப்ப கைலாஷ் சர் கூட பேசத்தான் வந்திருக்கேன். நீங்க போனை ஸ்விட்ச் ஆஃப் பண்ணி வைங்க.  முக்கியமா சொந்தக்காரங்ககிட்ட பேசாதீங்க. நான் பேசிட்டு, அப்பா நம்பருக்கு கால் பண்றேன். என் நம்பர் பார்த்தா மட்டும் எடுக்க சொல்லுங்க. கவலைப்படாதீங்கம்மா.. “, என்று பொறுமையாக இன்னும் இரண்டு மூன்று தரம் அதே வார்த்தைகளை மாற்றி சொல்லி ஒரு வழியாக போனை வைத்தான்.
“சாரி… அம்மா ரொம்ப பயப்படறாங்க. அடிபட்டவனுக்கு எதாவது ஆகிருச்சுன்னா, எனக்கு லீகல் பிரச்சனை வந்துடுமா ? இல்லை கரியருக்கு ப்ராப்ளமாகிருமான்னு கவலை.”, என்றான் நவீன் மற்றவர்களைப் பார்த்து.
“அவங்க பயம் நியாமானதுதானேப்பா ? இப்பதான் உன் கிரிக்கெட் லைஃப் சூடு பிடிக்குது. இந்த நேரத்துல இப்படி ஒரு விஷயம்னா…. யாருக்குமே அப்படித்தானே இருக்கும்?”, பாண்டியன் எடுத்து சொல்ல, ஏற்றுக்கொள்வதாக தலையாட்டினான் நவீன்.
அடுத்த அழைப்பு மணி அடிக்க, கைலாஷ் உள்ளே வந்தான். ஆபத்பாந்தவனாக அவனைப் பார்த்து அனைவரும் எழுந்து  நிற்க,
“உட்காருங்க… ப்ளீஸ். “, என்று சொல்ல,
“வாங்க சர். உட்காருங்க, என்று ஸ்ரீ காலி செய்திருந்த இடத்தைக் காட்டினார் பாண்டியன். ரோஜா சென்று தண்ணீர் எடுத்துவந்து தர, நன்று சொல்லி பருகினான் கைலாஷ்.
“ப்ரெஸ்ல பரவ ஆரம்பிச்சிருச்சு. நிறைய கால்ஸ் வருது ஆஃபீஸ்க்கு. கண்டிப்பா இதை இதோட நிறுத்தணும்னா ஒரு ப்ரஸ் மீட் வெச்சு அவங்க கேள்விங்களுக்கு பதில் சொல்லணும். வேற ஒன்னும் சுவாரசியமா இல்லைன்னு தெரிஞ்சா, இரண்டு நாள்ல வேற ந்யூசுக்கு போயிருவாங்க.”, கைலாஷ் விளக்கவும்,
“ஸ்ரீ பேரு வராம பார்க்க முடியாதா சர்? அவ விஷன் பத்தி தெரிஞ்சுதுன்னா வாழ்க்கை முழுக்க பிரச்சனை ஆகிரும் சர்.”, பாண்டியன் அவர்கள் கவலையை முன் வைக்க,
“தெரியும் சர். இதுல ஸ்ரீ முகம் தெளிவா பதிஞ்சிருக்கு. ஸ்ரீ தெரிஞ்ச யாராவது அவளை பத்தின டீடெய்ல் சொல்றதுக்கு நிறைய வாய்ப்பிருக்கு. மூணு வழி யோசிச்சிருக்கேன். அதுல ஒன்னு உண்மையை சொல்றது, பட் அது நீங்க சொல்ற மாதிரி ரொம்ப டாமேஜ் ஆகும்.”, என்று நிறுத்தி அவர்களைப் பார்த்தவன்,
“அடுத்தது, கடத்தினவங்க புக்கீஸ். நவீனை மிரட்ட அவரோட அத்தை பெண் ஸ்ரீயை கடத்தினதா சொல்லலாம்.”, என்றவுடன்,
“சர்… இப்பதான் கரியர் ஆரம்பிச்சிருக்கேன். அதுக்குள்ள இப்படி புக்கீஸ் லிங்க் பண்ணா மொத்தமா காலி ஆகிருவேன் சர். எனக்கும் அதுக்கும் சம்பந்தமேயில்லைன்னு சொன்னாலும், ஒரு அவ நம்பிக்கை இருந்துகிட்டே இருக்கும். இப்ப இல்லைன்னாலும், பின்னாடி எந்த ஒரு ப்ராப்ளம் ஆனாலும் என் மேல சந்தேகமா பார்ப்பாங்க… கறை படிஞ்சிரும்…. ப்ளீஸ் சர்… அது வேணாம். “, நவீன் அவசரமாக மறுத்தான்.
“என் பொண்ணை காப்பாத்தினதுக்காக அந்த பிள்ளைக்கு இந்த தண்டனை வேணாம் சர். இந்த யோசனை ட்ராப் பண்ணிடுங்க.”, என்றார் பாண்டியன் முடிவாக.
அதைக் கேட்டு நவீன் முகத்தில் அப்படி ஒரு நிம்மதி. அதை யாரும் தப்பாகவும் எடுத்துக்கொள்ள முடியவில்லை. ஆனால் நவீனுக்கு அடுத்த நொடியே ஒரு குற்ற உணர்வு. ஸ்ரீ விஷயம் வெளியே தெரிந்தால் அவள் உயிருக்கே ஆபத்தாக முடியலாம். அதற்கு, இந்த யோசனை பரவாயில்லை என்றாலும் இத்தனை வருஷக் கனவு, அவனுக்கும் அவன் பெற்றோருக்கும். அதற்காக எத்தனை உழைப்பு, இழப்புகளை சந்தித்து இருக்கிறார்கள் அவன் குடும்பத்தினர். ஸ்ரீக்காக என்றாலும் எப்படி அவனால் இந்த ரிஸ்க் எடுக்க முடியும்? மனதிற்குள் போராட்டமாக இருந்தது.
“இதுவும் வேண்டாம்னா, அப்ப கடைசியா ஒரு ஆப்ஷன் தான் இருக்கு. “, என்ற கைலாஷை எதிர்ப்பார்ப்போடு பார்த்தார்கள் அனைவரும்.