அத்தியாயம் – 16
கைலாஷ் அலுவலகம் வந்து அரை மணி நேரம் ஆகியும், மாற்றி மாற்றி போனில் இருந்தான். அவன் பேசியதில் நாலைந்து இடங்களில் ஸ்ரீயை கடத்துபவனைத் தேடும் வேலை நடக்கிறது என்பது வரையில் புரிந்தது.
நேரம் நடு நிசியைத் தாண்டியும் கைலாஷ் சோர்வடையவில்லை. மும்பையில் யாரையோ எதற்கோ சம்மதிக்க சரளமான இந்தியில் பேசிக்கொண்டிருந்தான்.
“எதோ கிரிக்கெட் பெட் கட்டற கூட்டம் பத்தின விவரமெல்லாம் வெச்சிருப்பாங்க போல. அதிலருந்து அந்த போன் நம்பர் கிஷோர் குடுத்தானே, அதைப் பத்தின விவரம் எடுத்து தர சொல்றார். அங்கிருக்கவன், பெர்மிஷன் ஆர்டர் வேணும்னு படுத்தறான்.”, மெல்லிய குரலில் நவீன் ராகுலுக்கு மொழி பெயர்த்துக்கொண்டிருந்தான்.
“நல்லா இந்தி பேசுவியா நவீன் ?”
“ம்ம்… கிரிக்கெட் ஆடணும்னா, இந்தி தெரிஞ்சுக்கறது நல்லதுன்னு ஸ்கூல்லயே அம்மா ஹிந்தி சேர்த்து விட்டாங்க. அப்பறம் மாட்ச் ஆட போகும்போது பேசி பேசி பழகிக்கிட்டேன்.”, நவீன் சொல்ல,
“பரவாயில்லை, உங்க அம்மாக்கு தொலை நோக்கு பார்வை. எங்க அம்மா அப்பாக்கு அதெல்லாம் தோணலை, இப்ப காம்பஸ் இன்டர்வுயூல நார்த்துல வேலைன்னு பார்த்தாலே கண்ணை கட்டுது.”, ராகுல் அவன் கவலையை பகிர்ந்து கொண்டான்.
அனைவருக்கும் சூடாக டீ வந்தது. பருகியவர்கள், கைலாஷ் போனை கீழே வைத்தது கண்டு, “சர்…எதாவது ப்ரேக் கிடைச்சுதா சர் ? “, என்றான் ராகுல்.
ஒரு புன்முறுவலை சிந்திய கைலாஷ், “எல்லாம் உடனே நடக்காது ராகுல்.  போட்டிருக்கற தூண்டில்ல எப்ப எந்த தகவல் மாட்டும், அது நமக்கு எப்படி பொறுந்தி வரும்னு சொல்ல முடியாது. இந்த வேலையில பொறுமை அவசியம்.  ஸ்ரீ எப்படி பட்ட பொண்ணு? தைரியமானவளா? இந்த மாதிரி ஒரு சிச்சுவேஷன்ல எப்படி ரியாக்ட் பண்ணுவான்னு உன்னால கெஸ் பண்ண முடியுமா?”
ராகுல் சொல்வதற்கு முன்னரே, “ தைரியமானவ சர். அதோட ப்ரசென்ஸ் ஆஃப் மைண்ட் அதிகம். ஒன்னு முடிவு பண்ணிட்டா, தடதடன்னு நடத்துவா.”, என்று நவீன் கூறினான்.
கைலாஷ் நவீனை யோசனையாக பார்க்கவும், அவள் அவனை மாலில் சிக்கியபோது புடவையை சுற்றி, ரசிகைகளை திசை திருப்பி என்று நடந்ததை ரசனையாகக் கூறினான். கைலாஷ் ஒரு அரை புன்னகையுடன், “ஸ்ரீ உங்க ஃப்ரெண்டு மட்டும்தானா நவீன்? ஆர் யூ ஷூர்?”, என்று கேட்கவும் நவீனிடம் ஒரு வெட்கப் புன்முறுவல். தோளைக் குலுக்கியவன், “தெரியலை… ‘, என்றான்.
பார்த்துக்கொண்டிருந்த ராகுலுக்கு விசில் அடிக்கத் தோன்றியது. ‘ஸ்ரீ… வொர்க் அவுட் ஆகுதுடீ’, என்று உடனே சொல்ல ஆசை. ஆனால் அவள்… நினைக்கவும் சோகமானான்.
“என்ன ராகுல் ? அவளை சின்ன வயசுலர்ந்து உனக்குத்தான் தெரியும். நீ சொல்லு?”, என்று கைலாஷ் கேட்டான்.
“ம்ம்… நவீன் சொன்னது உண்மைதான். அவ படிச்சிருக்க சைக்காலஜி அவளுக்கு உதவும்னு நம்பிகிட்டு இருக்கேன் சர். அப்படி சட்டுனு மனசு விட்டுடமாட்டா. கொஞ்சம் போர் குணம் உண்டு. ஆனால் சாப்பிட குடுக்காம பட்டினி போட்டுட்டா, எதுவும் வேலை செய்யாது அவளுக்கு. அதுதான் கவலை.”
அவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே மும்பையிலிருந்து மெயில் வந்தது. அதைப் பார்த்தவன் மீண்டும் கணினியில் தீவிரமானான். அடுத்து கைபேசியில், “கர்ணன், சந்தேகப்படற அந்த கூட்டத்தோட போன் நம்பர் லிஸ்ட் அனுப்பியிருக்கேன். எல்லாத்தையும் உங்க ரேடார்ல வைங்க. நம்ம மார்க் பண்ணியிருக்க அந்த ஏரியா பக்கம் எதுவும் கால் வருதா பாருங்க. சந்தேகமாக இருந்தாக்கூட சொல்லுங்க. அங்க மஃப்டில நம்மாளுங்க சில பேர் சுத்திக்கிட்டு இருக்காங்க.”, என்று சொல்லி அழைப்பை துண்டிக்க,
எதிரில் ஆவலாக இருந்த இருவரையும் கண்டு, “ ஒரு ப்ரேக் வரணும். வர வரை பொறுமை வேணும். ஒரு போன், இல்லை அங்க இருக்கற பேட்ரோல் சந்தேகப் படற மாதிரி ஒரு மூவ். வரும்… வரும்…”, அவர்களுக்கு சொல்வது போல தனக்கும் சொல்லிக் கொண்டான்.
மயக்க மருந்தின் உபயத்தில் தூங்கியதாலோ, இல்லை கடத்தப்பட்டதால் இருந்த பயமோ… கொட்ட கொட்ட விழித்திருந்தாள் ஸ்ரீ. ஆன மட்டும் அணைக்கப்பட்டிருந்த டீவியை, எதிரில் இருந்த சுவரை என்று முறைத்துப் பார்த்து சலித்திருந்தாள்.
“இப்படி சிக்கல்ல மாட்டிவிட்டிருக்க. எதையாச்சம் காட்டி தொலையாம்ல ஜக்கி? அந்த சித்தார்த் கடங்காரன் கிட்ட இருந்தபோது அத்தனை ஓவர்டைம் பார்த்து அத்தனை விஷயம் காட்டின. இப்ப என்ன தூங்க போயிட்டியா? அட இப்படி கடத்தப் போறாங்கன்னாச்சம் காமிச்சியா ? எனக்குன்னு இதுவரைக்கும் எதாச்சம் உருப்படியா பண்ணிருக்கியா ஜக்கி நீ? எதோ வேலை வாங்கிக் குடுத்தன்னு நினைச்சேன், அதுக்கும் வச்சிட்டியே ஆப்பு !”, மடக்கி வைத்திருந்த கால் முட்டிகளில், தலையை இடித்தவாறு முனகிக்கொண்டிருந்தாள் அவள் ஆற்றாமையை.
படாரென்று கதவு திறக்கவும், தூக்கி வாரிப் போட, உடல் அதிர நிமிர்ந்தாள். அவன் தான் , கரண், உள்ளே வந்தான். பின்னோடு சன்னி, வாசலில் நின்றான் காவலாக.
“என்ன ? சாப்பிட்டியா? “
“ஊஃப்… விஷன் ஒன்னு தெரிஞ்சுது… நீ படார்னு உள்ள வரவும், கலைஞ்சிருச்சு.”, கரண் மீது பழி சொன்னாள். ஒரு விஷனும் தோன்றவில்லை. ஒரு ஐடியாதான் தோன்றியிருந்தது.
அதை பொருட்படுத்தாதவன், “என்ன…. என்ன பார்த்த ?”, என்றான் ஆவலாக.
என்னவோ ஒரு குருட்டு யோசனை, வேலை செய்யுமா என்று கூட தெரியவில்லை. ஆனால் முயற்சி செய்ய வேண்டுமே !
“எதோ ஒரு குழந்தை மூச்சு திணறுது. டாக்டர்ஸ் பாக்கறாங்க. குழந்தை பொண்ணா பையனான்னு கூட தெரியலை. பயத்துல கண்ணு விரிய காத்துக்கு அல்லாடுது.”, கைகள் விரித்து, ஆங்கிலத்தில் விவரித்தபடியே நடித்தும் காட்டினாள்.
அதைக் கேட்டவன் ஆர்வம் சற்று வடிந்தவனாக, “யார் குழந்தை?”, என்றான்.
“தெரியலை.. நான் சுத்தி எதுவும் பார்க்கறதுக்குள்ள நீ உள்ளே வந்த சத்தத்துல போயிடுச்சு.”, வருத்தமாக முகத்தை தொங்கப் போட்டவள், லேசாக சன்னியைப் பார்த்தாள். இந்த நாடகமெல்லாம் அவனுக்காகத்தான். குழந்தை என்று பிட்டைப் போட்டால் அவன் நம்புவானா ? அதற்காக தன்னிடம் மேலும் விவரம் கேட்டு கொஞ்சம் பேசுவானா? அதில் நட்பு பாராட்டினால், எப்படியாவது அவனது போன் கிடைக்குமா என்று பேராசை.
அவள் எதிர்பார்த்தபடியே, சன்னி அவளை திகைப்பாய் பார்த்துவிட்டு, கரணிடம், “சாப்….. என் குழந்தைக்கு வீசிங் இருக்கு சாப். இந்த பொண்ணு சொல்ற மாதிரி ஹாஸ்பிட்டல்ல இருக்கறது என் பிள்ளையான்னு பயமா இருக்கு சாப்.”, என்று இந்தியில் கெஞ்சினான்.
“டேய்… அதெல்லாம் இல்லைடா…”, என்று கரண் சொல்லவும், நம்பிக்கை இல்லாமல், “ஒரு வாட்டி உறுதி படுத்திக்கறேன் சாப். என்னவோ பயமா இருக்கு. அந்த பொண்ணு சொல்ற மாதிரிதான் என் பையன் மூச்சு கிடைக்காம பயப்படுவான். நான் கூட இருந்து தைரியம் சொன்னா கொஞ்சம் அமைதியாவான் சாப். “, சன்னி கெஞ்ச ஆரம்பித்தான்.
“சன்னி… இப்ப ஒன்னும் பண்ண முடியாது. காலையில ஜீத் வருவான். அப்பறம் நீ போ.”, என்று கரண் வள்ளென்று விழ, சன்னி அடங்கினான்.
ஸ்ரீயப் பார்த்து, “உருப்படியா எதாவது சொல்லு. இந்த மாதிரி விஷன் என்ன யூஸ்?”, என்றான் கடுப்பாக.
தோளை குலுக்கியவள், “சித்தார்த் கான்டீன்ல டீ.வி வெச்சிருந்தார். அதுல ஐ.பி.எல் மாட்ச் போய்கிட்டு இருக்கும்போதுதான் ஃபைனல்ஸ் பத்தின விஷன் வந்துச்சு. அவர் ஆஃபீஸ்ல இருந்த டீவில ஸ்டாக் மார்க்கெட் சானல் ஓடிகிட்டு இருந்துச்சு, அப்பதான் அது சம்பந்தமா விஷன் வந்துச்சு. இங்க வெறும் சுவரை பார்த்தா என்ன தெரியுதோ, அதான் சொல்ல முடியும்.”, என்றவள்,
“ஆனாலும் ஒரு பிள்ளை உயிருக்கு போராடுது. பாவம்.”, என்று மறைமுகமாக சன்னியை இன்னும் கொஞ்சம் ஏற்றிவிட்டாள்.
“ஹம்ம்ம்… அதையும் பார்க்கலாம்.”, என்று உறுமிவிட்டு , “அப்பப்ப வந்து பார்த்துக்கோ…”, என்று சன்னியிடம் சொல்லிவிட்டு சென்றான்.
திரும்பவும் சன்னி தன்னைத் தேடி வருவான் என்ற ஆசையில் காத்திருந்தாள் ஸ்ரீ,
காத்திருந்து சலித்து அவளையும் மீறி உறக்கம் வர, படுக்கையில் சாய்ந்த படியே கண் மூடினாள். எவ்வளவு நேரம் சென்றதோ? கதவு திறக்கும் ஓசை கேட்டு விழித்தாள். சன்னி உள்ளே வந்தான். அவனையே அமைதியாகப் பார்த்திருந்தாள்.
“நீ … நீ என்ன பார்த்த ? அந்த குழந்தை எப்படி இருந்துச்சு ?”, என்று கேட்கவும், மீண்டும் தான் பார்த்ததாக சொன்ன கதையை ஆங்கிலமும், அவளுக்குத் தெரிந்த சில இந்தி வார்த்தைகள் கொண்டும் அவனுக்கு விளக்கினாள்.
புது தகவல் ஒன்றும் இல்லாததில் சன்னி முகத்தில் அதிருப்தி. அதைப் பார்த்தவள், “சாரி சன்னி… அந்த குழந்தை ரொம்ப கஷ்டப்பட்டுகிட்டு இருந்துச்சு. அதை தாண்டி என்னால பார்க்க முடியலை. ஒரு ஓரமா ஒரு லேடி இருந்த மாதிரி இருந்துச்சு. அந்த குழந்தையோட அம்மாவா தெரியலை. அதுக்குள்ள நீங்க வரவும் விஷன் கலைஞ்சு போச்சு.”, என்று தோளை குலுக்கினாள் வருத்தமாக.
“ நீ வேணா போன் பண்ணி பார்க்கறியா? அட்லீஸ்ட் உன் பிள்ளை இல்லைன்னா நிம்மதியாகிரும்.”, அவனிடம் போன் இருக்கா என்று தெரிந்து கொள்ள தூண்டில் போட்டாள்.
நெற்றியை தேய்த்து யோசனை செய்தவன், ஒன்றும் சொல்லாமல் போய்விட்டான். “டேய் முண்டம்…. எதாச்சம் சொல்லிட்டு போடா…. என் நேரம் உங்கிட்ட கெஞ்ச வேண்டியிருக்கு.”, என்று உள்ளுக்குள் கத்தினாள். யாருக்குத் தெரியும் எதாவது காமெரா வைத்து தொலைத்தாலும் தொலைத்திருப்பார்கள்.
“சரி… இந்த கடங்காரன் இல்லாட்டா, காலையில எவனோ ஜீத் வரானே. அவனை காக்கா புடிப்போம்…”, என்று முனகிய படியே மீண்டும் கட்டிலில் சாய்ந்தாள்.
நேரம் விடியற்காலையை நெருங்கிக் கொண்டிருந்தது. உட்கார்ந்தபடியே கண்கள் மூடி ஓய்வில் இருந்தான் கைலாஷ். கடந்த ஒரு மணி நேரமாக எந்த முன்னேற்றமும் இல்லை. வீட்டுக்கு போகச் சொல்லியும் ராகுலும், நவீனும் ஏற்றுக் கொள்ளவில்லை.
விடியற்காலையில், ஒரு வேளை ஸ்ரீயை இடம் மாற்றலாம். அப்படி இருந்தால், எதாவது ஒரு ப்ரேக் கிடைக்கலாம் என்ற அனுமானத்தில் காத்திருந்தான் கைலாஷ். அப்போதும் ஒன்றும் நடக்கவில்லை என்றால், தன் உடன் பணிபுரிபவனிடம் கை மாற்றிவிட்டு, இவன் வீடு செல்ல வேண்டும்.
அமைதியாக இருந்த அந்த அறையில், கைலாஷின் கை பேசி சத்தமாக அடித்தது. எதிரே மேசை மீது தலை வைத்து படுத்திருந்த இருவரும், படக்கென்று எழுந்தார்கள். கைபேசியை எடுத்து,
“சொல்லுங்க கர்ணன்.”, என்றான் கைலாஷ்.
“…”
“சூப்பர், லோகேஷன் அனுப்புங்க. நான் பேட்ரோல் அலர்ட் பண்றேன்.  ஸ்பாட்டுக்கு போறேன்.”, என்று சொன்னவன், கையோடு வேறு ஒருவருக்கு அழைத்து உத்தரவிட்டான்.
“சர்…?”, நவீன் கேட்க,
“ம்ம்… ப்ரேக்கா இருக்கலாம். நம்ம குடுத்த போன் நம்பர்லர்ந்து ஒரு கால் போயிருக்கு. அது, நாம ஸ்ரீ வேன் இருக்கக்கூடிய ஏரியான்னு நினைச்ச அந்த எல்லைக்குள்ளர்ந்துதான் போயிருக்கு. லோகேஷன் தெரிய வரும். போய் பார்க்கலாம். ஸ்ரீ இல்லைனாலும், பேசினவனை பிடிச்சு விசாரிக்கலாம். வாங்க.”, என்று தன் பொருட்களை சேகரித்த கைலாஷ் இறங்க, பின்னோடே ராகுலும் நவீனும் வந்தார்கள்.
அவன் தோள்பையை மடியில் வைத்து பின்னாடி நவீன் ஏறிக்கொள்ள, உடன் ராகுல். முன்னால் ட்ரைவருக்கு அருகில் கைலாஷ் என்று அந்த போலீஸ் வண்டி ஈ.சி.ஆர் சாலை நோக்கி பறந்தது.
ஸ்ரீ இருக்கலாம் என்று கருதிய பகுதிக்கு முன்பாகவே நிறுத்தியவர்கள், அங்கே இருந்த மற்றொரு சாதாரண காருக்கு மாறிக்கொண்டார்கள்.
“இன்னும் எதுவும் நடமாட்டம் தெரியலை சர். அந்த  தெரு அமைதியாத்தான் இருக்கு.”, காரைக் கொடுத்த நபர் சொல்லவும், கேட்டுக் கொண்டான் கைலாஷ்.
“இரண்டு பக்கமும் நம்ம ஆளுங்க இருக்காங்க சர். அந்த தெருவில இருக்க வீடுங்க ஓனர்ஸ் லிஸ்ட் ரெடி பண்ணிகிட்டு இருக்காங்க. கர்ணன் சர் அனுப்பியிருக்க லொகேஷன்ல இருக்க வீடு இருட்டாத்தான் இருக்கு. யாரும் உள்ள இருக்க மாதிரி தெரியலை. “, என்ற அவனது செய்தியில்,
“ம்ம்…. பின்னாடி தெரு வழியா ஒரு வாட்டி பார்க்கலாம். தெரியாம தடதடன்னு உள்ள போக வேணாம். “, கைலாஷ் சொல்லவும், கார் மெல்ல நகர்ந்தது.
பின் புறமிருந்து அந்த பெரிய பங்களாவைப் பார்க்க இரண்டு மாடிகள் கொண்டதாக இருந்தது. எங்கேயும் வெளிச்சம் இல்லை. ஒன்றிரண்டு மரங்கள் இருந்தது. சுற்றி இருந்த மதில் சுவரின் உயரம் ஏழு அடி போலத்  தெரிந்தது . கார் நிற்காமல் கடந்துவிட்டது.