“ஸ்ரீ சொன்னாளா? அவளையே நான் வாங்க போங்கன்னு சொல்லாதேன்னு சொல்லிகிட்டு இருக்கேன். ஏன் டா இப்படி மரியாதை குடுத்து தள்ளி வெக்கறீங்க? ஸ்ரீ எனக்கு ரொம்ப இம்பார்ட்டண்ட் ராகுல். புரியுதா?”, நவீன் தீவிரமாய் சொல்ல, ராகுல் புன்னகையோடு ஆமாம் என்று தலை ஆட்டினான்.
“புரியுது நவீன். இல்லாட்டி உங்க .. ஐ மீன் உங்கிட்ட நான் ஸ்ரீ கடத்தினதைப் பத்தி சொல்லியே இருக்க மாட்டேன்.  இப்ப அவ விஷன் பத்தியும் பேசி இருக்க மாட்டேன்.”, ராகுல் இதன் மூலம் ஸ்ரீக்கும் நீ முக்கியமானவன், அதுவும் எனக்குத் தெரியும் என்று சொல்ல வந்த செய்தி நவீனை சென்றடையவும், அவனிடம் ஒரு புன்னகை மலர்ந்தது.
வேகமாக உள்ளே நுழைந்த கைலாஷ், ட்ராவிலிருந்து அவன் பொருட்களை எடுத்தபடியே, “ கைஸ், புக்கீஸ் க்ரூப்லர்ந்து கிஷோர்ன்னு ஒருத்தனை தூக்கியிருக்கோம். விசாரிக்க போறேன். நீங்க என் கூட வரதானா வரலாம். இல்லை இங்க இருங்க. நான் போயிட்டு வர இரண்டு மணி நேரம் ஆகும்.”, என்றான்.
உடனே இருவரும் எழுந்து கொண்டார்கள். “சர்… நாங்களும் வரோம்.”, என்றான் நவீன்.
ஸ்ரீயின் காத்திருப்பு பளீரென்று ஒளிர்ந்த விளக்கில் முடிவுக்கு வந்தது. கூசும் கண்களை மூடி மூடித் திறந்தபடியே, கண்களை சுருக்கி, வந்திருப்பது யார் என பார்க்க முயன்றாள்.
சராசரி உயரம், ஜீன்ஸ், டீ-ஷர்ட்டில், வடக்கத்திக்காரன் என்பது வரையில் தெரிந்தது.  ஸ்ரீ எதுவும் பேசவில்லை. அவள் முழித்திருந்த நேரத்தில் பயந்து பின் சற்று தெளிந்திருந்தாள். அதற்கு அவள் படித்த படிப்பும் கைகொடுத்திருந்தது.
“என்ன பொண்ணு? மயக்கம் போச்சா?”, என்றான் கொச்சை தமிழில்.
“ம்ம்… எதுக்கு என்னை கடத்திருக்கீங்க ? யார் நீங்க ?”, என்றாள் ஸ்ரீ வறண்ட அவள் குரலை சரி படுத்தியபடியே.
“ஹ்ம்ம்… ஹிந்தி மாலும்?”
இல்லை என்று தலை அசைத்தாள்.
“ம்ப்ச்.. ப்ளடி மதராசிஸ்…. “, என்றவன் அடுத்து ஆங்கிலத்தில் உரையாடலை கொண்டு சென்றான்.
“நீ  நடக்கப் போறதை சொல்லுவியாமே? அதுக்குத்தான் உன்னை தூக்கியிருக்கேன். உன்னால எனக்கு நிறைய லாஸ்…. அதை சரி கட்டி, எனக்கு நிறைய லாபம் காட்டப் போற நீ.”, என்றான் அவனது பான் போட்டு கறைபடிந்த பற்களைக் காட்டி சிரித்தபடி.
உள்ளுக்குள் திக்கென்றாலும், புருவத்தை சுருக்கியபடி, “ உனக்கு யாரோ தப்பா சொல்லியிருக்காங்க. இல்லை வேற யாரோ பதிலா என்னை தப்பா தூக்கிட்டு வந்திருக்காங்க. எனக்கு அப்படியெல்லாம் சொல்லத் தெரியாது. இட்ஸ் ரப்பிஷ்,”, என்று ஸ்ரீ ஆங்கிலத்தில் அடித்து விட்டாள் தன் பயத்தை மறைத்தபடி.
“ஹ்ம்ம்… அப்படியா? இங்க பார், அழுது சிவந்து போயிருக்க உன் கண்ணே சொல்லுது உன் பயத்தை. சும்மா டைம் வேஸ்ட் பண்ணாதே. உன்னைப் பத்தின எல்லா டீடெய்லும் தெரிஞ்சிகிட்டுதான் தூக்கினதே.”, என்றவன் தன் மொபைலில் ஒரு விடியோவை ஓடவிட்டான்.
அதில் சித்தார்த் சிரித்துக் கொண்டே… “ஸ்ரீ… ஸ்ரீ நிதி தன் சொன்னா, ப்ளே-ஆஃப் வரதுக்கு முன்னாடியே யார் ஃபைனல்ஸ், அதுவும் சூப்பர் ஓவர் போய் ஃபைனல்ஸ்னு அவ விஷன் பார்த்த உடனே வந்து சொல்லிட்டா சமத்து பொண்ணு. நம்பவே முடியலை இல்ல.. ஆனா இதெல்லாம் விட ஷேர் மார்க்கெட் விழப்போதுன்னு சொன்னதுல கிட்ட தட்ட நாலு கோடி இரண்டு நாள்ல லாபம் பார்த்தேன் கிஷோர் பையா.”, இந்தியும் ஆங்கிலமும் கலந்து சித்தார்த் பேசியதைக் கேட்டவளுக்கு அடி வயறு சில்லிட்டது.
அவள் முக மாற்றத்தைப் பார்த்தவன், “ஹ்ம்ம்… ட்ரான்ஸ்லேஷன் பண்ணாமலேயே புரிஞ்சுது போலருக்கு ? குட். சோ வெட்டி பேச்சு கட் பண்ணிட்டு வேலையை பார்க்கலாம்.”
ஸ்ரீ முடியாது என்பது போல தலையாட்ட, “இங்க பார். எனக்கு நீ சொல்லணும். அது சித்தார்த்க்கு பலிச்ச மாதிரி பலிக்கணும். அது வரைக்கும் நீ சேஃப். இல்லைன்னா, மும்பைல ரெட்லைட் ஏரியால உன்னை வித்துட்டு போயிகிட்டே இருப்பேன். நீ பெருசா ஒன்னும் அழகி இல்லை, பட் புது பீஸ், சோ ஈசியா உன்னை கடத்தினதுக்கு செலவு பண்ண காசு வந்துடும். யோசிச்சு சொல்லு. “, என்று எழுந்து அறையை விட்டு செல்லப் போனான்.
“இரு இரு…. இதுல யோசிக்க என்ன இருக்கு ? ஒத்துக்கறேன்.”, என்றாள் ஸ்ரீ அவசரமாக.
அவளைப் பார்த்து புருவம் உயர்த்தி, புன்னகைத்தவன், “இவ்வளவு சீக்கிரம் சம்மதிப்பன்னு நினைக்கலை. குட். ”, என்று மீண்டும் வந்து அமர்ந்தான்.
“நீ குடுத்த ஆப்ஷன் ஆப்ஷனே இல்லை. வேற எந்த முடிவுக்கு நான் போக முடியும் ? “, என்றவள், “என்ன சொல்லி உன்னை கூப்பிடணும்?”, என்று கேட்டாள். மனம் வேகமாக யோசித்தது.
“கரண்ஜி சொல்லு.”
“கரண்ஜி… அந்த உருப்படாத சித்தார்த் கிட்ட சொன்னதுதான் உன் கிட்டயும் சொல்றேன். நீ வேணா அவங்கிட்டயே செக் பண்ணிக்கலாம்.  எனக்கு வர விஷன் மேல எனக்கு கன்ட்ரோல் கிடையாது. அது எப்ப வரும்னும் தெரியாது. ஆனா நான் சந்தோஷமா இருந்தப்போதான் வந்திருக்கு.”, என்றவள் தான் இறுதி போட்டி பற்றி சொன்னதும், பங்குச் சந்தை பற்றி சொன்ன போதும் இருந்த மன நிலையை சற்று கூட்டியே விவரித்தாள்.
“இப்படி இருந்தா விஷன் வரதுக்கு சான்சே இல்லை.”, என்று தன் சங்கலியை  ஆட்டி, “பசி, தாகம் வேற கண்ணை கட்டுது.”, என்றாள்.
ஸ்ரீ யை யோசனையாய்ப் பார்த்து தாடையை தடவியவன், “ஹ்ம்ம்…. பார்க்கலாம்.”, என்று சொல்லி சென்றுவிட்டான்.
நல்ல வேளையாக லைட்டை நிறுத்தவில்லை. சிறிய அறை. ஒரு டீவி, ஒற்றைக் கட்டில், சிறிய மேசை , நாற்காலி என்று ஒரு சாதாரண ஓட்டல் அறை போல இருந்தது. ஏ. சி இருந்தது, ஆனால் போடவில்லை போல. புழுக்கமாகவே இருந்தது.
தன்னை மாட்டி விட்ட சித்தார்த் மீது சொல்லொண்ணா கோபம். பாவி, அவன் லாபம் பார்க்கற மாதிரிதானே சொன்னேன். எதுக்கு என்னை இப்படி போட்டுக் கொடுத்தான்? சித்தார்த்தை தனக்கு தெரிந்த எல்லா கெட்ட வார்த்தைகளையும் வைத்து திட்டித் தீர்த்தாள். பத்து நிமிடங்கள் கடந்திருந்தது, ஸ்ரீக்கு வெகு நேரம் சென்றது போல் இருந்தது.
கரண் தன்னை நம்பவில்லையா, இல்லை நிஜமாகவே சித்தார்த்திடம் விசாரிக்கின்றானா என்று யோசனை படர்ந்தது. எப்படியும் போலீசிடம் போவார்கள் பெற்றோர். ஆக அவர்கள் வரும்வரை தன்னை காப்பாற்றிக் கொள்ள இவன் சொல்வதற்கு தலையாட்ட வேண்டும் என்பது புரிந்தது. ஆனால் போலீசை மட்டும் நம்பிக் கொண்டு இருக்க முடியாது. தப்பிக்க எதாவது வழி பார்க்கவேண்டும். விழிகள் மீண்டும் அறையை ஒரு முறை வலம் வந்தது. ஜன்னலும் இல்லை, வேறு அறைக்கு போவதற்கான கதவுகளும் இல்லை. ஏ.சி. மூலம் மட்டுமே காற்று.
முதுகு வியர்த்ததில், முடிந்த வரை ஒருக்களித்துப் படுத்தாள். தன் நிலைமை கண்டு தன்னிரக்கம் சூழந்தது. முயன்று அதிலிருந்து மனதை திசை திருப்பினாள். ‘கண்டிப்பா இங்கிருந்து வெளிய போறேன்.’, என்று மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டாள்.  மனது விட்டுவிட்டால் மூளை செயலற்றுவிடும். ‘சோர்ந்து போயிடாதே. பாசிடிவ்வா இரு, பயத்தை காட்டாதே. எல்லாத்துக்கும் டீல் பேசு’, என்று தனக்குத் தானே சொல்லிக்கொண்டாள்.
கைலாஷ் லாக்-அப்பில் இருந்த  கிஷோரை நாலே அடியில் சுருட்டியிருந்தான். இந்தியில் பேசிக் கொண்டிருந்தார்கள். நவீனும் ராகுலும் வெளியே இருபதடி தூரத்தில் நின்று பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
கிஷோர் தனக்கு எதுவும் தெரியாது என்று ஆரம்பித்து , இப்போது அவசர அவசரமாக எதுவோ சொல்லிக்கொண்டிருந்தான்.
“யப்பா… பார்க்க எதோ அமைதியா இருக்காருன்னு நினைச்சா, என்ன இந்த மனுஷன் காட்டடி அடிக்கறார்? “, ராகுல் மெல்லிய குரலில் கைலாஷின் வேகத்தை நவீனிடம் வியந்து சொல்லிக்கொண்டிருந்தான்.
“முதல்ல கேட்டப்போ ஒன்னும் தெரியாதுன்னான். ரிசார்ட்ல, சித்தார்த்தோட பேசினதை வீடியோல காட்டினப்போவும்,  பார்ட்டில நிறைய பேர் இருந்தாங்க. நானும் இருந்தேன். அவ்வளவுதான்னு சாதிச்சான். இப்ப பாரு, வெளுத்து கட்டினதும் கக்கறான்.”
“என்ன சொல்றான் நவீன்? “
“முன்னாடி கத்தினான் கேட்டுது. இப்ப பேசறது தெளிவா கேட்கலையே. கைலாஷ் வந்தாத்தான் தெரியும். “
“இது எந்த போலீஸ் ஸ்டேஷன்னே தெரியலை. போன்ல இருந்தபடியே ரிசார்ட் கிளிப்பிங் எடுத்து, சித்தார்த்கிட்ட காமிச்சு ஆளை அடையாளம் கண்டுபிடிச்சு, வீட்டை ட்ரேஸ் பண்ணி ஆளை தூக்கி, இப்ப ஆக்ஷனுக்கு மட்டும் இவர் இறங்கறார்.”, ராகுல் இன்னும் கைலாஷ் புகழ் பாடிக்கொண்டிருந்தான், இந்த முறை போனில் ஸ்ரீயின் பெற்றோரிடம்.
“…”
“தெரியலை அங்கிள். விட்ட அடியில இப்பத்தான் பேச ஆரம்பிச்சிருக்கான். அவர் வந்து சொன்னதான் தெரியும் எதுவும். எனக்கு தெரிஞ்சதும் உங்களுக்கு சொல்றேன்.”, என்று கூறி போனை அணைத்தான்.
ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் கணேஷிடம் , “கணேஷ், அவன் லாக்-அப்லயே இருக்கட்டும். யாரையும் பார்க்க விட வேணாம். அவனைத் தேடி யாரும் வந்தா, எனக்கு இன்ஃபார்ம் பண்ணுங்க. அவன் சொன்னது எவ்வளவு தூரம் உண்மைன்னு தெரியணும். இன்னும் விஷயம் தேவைப் படலாம். நான் பார்த்துட்டு சொல்றேன்.”, என்ற உத்தரவுகளுடன் நன்றி சொல்லி கிளம்பினான். உடன் ராகுலும், நவீனும்.
வண்டியில் ஏறியதும், “சர், என்ன சொன்னான் அந்த கிஷோர்? ஸ்ரீ எங்க இருக்கான்னு தெரிஞ்சுதா சர் ?”, ராகுலை முந்திக் கொண்டு நவீன் கேட்டான்.
“ம்ப்ச்… சித்தார்த்கிட்ட விஷயத்தை வாங்கி சொன்னது மட்டும்தான் இவன் வேலை. இவனை கேட்டு சொல்லச் சொன்னவன் பத்தி இன்ஃபர்மேஷன் சொல்லியிருக்கான். எங்க டேட்டாபேஸ்ல இருக்கானான்னு பார்க்கணும். ஒரு போன் நம்பரும் கிடைச்சிருக்கு. “, என்பதோடு வேறு போன் பேசுவதில் கவனம் செலுத்தினான் கைலாஷ்.
ஸ்ரீ இருந்த அறை திடீரென்று திறந்தது. உள்ளே ட்ரேயுடன் இன்னொரு வட நாட்டுக்காரன் வந்தான். கட்டையாக இருந்தான், அதே மைதா மாவு முகம். கடுகடு என்றிருந்தது.
கொண்டு வந்ததை மேசையில் வைத்துவிட்டு,  அவளது கை விலங்கை கழட்டியபடியே, “ ஓட்னா…அடிச்சிர்வேன்…. “, என்று தமிழை கடித்துத் துப்பியவன்,  தன் தலையை தட்டி “புரியுதா ?”, என்று இந்தியில் கேட்டான்.
ஆம் என்று வேகமாக தலை ஆட்டியவள், “பாத் ரூம்… டாய்லெட்…”, என்றாள்.
பின்னால் வரும்படி சைகை செய்து கதவைத் திறந்தான். படுக்கையில் எழுந்தவள் சற்றி தள்ளாடி, பின் நின்றாள். அவன் கதவை திறப்பதைப் பார்த்து, வேகமாக முன்னே வந்தாள்.
வெளியேவும் கும்மிருட்டு. ஸ்ரீ இருந்த அறைக்கு நேர் எதிரே ஒரு அறையை திறந்து, “ஜா…. ஜல்தி..”, என்று வார்த்தைகளுக்கு பஞ்சம் போல பேசினான்.
பாத் ரூமை சுற்றி நோட்டம் விட்டவள் அங்கேயும் ஒரு ஜன்னல் கூட இல்லாததைப் பார்த்து சோர்வுற்றாள். ஃபால்ஸ் சீலிங்கில் இருந்தது எக்ஸாஸ்ட் ஃபேன். குறைந்த பட்சம் தான் வீட்டில் இருக்கிறோமா, ஹோட்டலில் இருக்கிறோமா என்று கூட தெரியவில்லை. அட எந்த தளத்தில் இருக்கிறோம் என்று கூட தெரியவில்லை.
ஒரு வழியாக தன்னை சுத்தப் படுத்திக்கொண்டு வெளியே வர, முறைத்துக் கொண்டு நின்றான் மைதாமாவு.
மீண்டும் அறைக்குள் வந்தவள், புழுக்கத்தில் உஸ் உஸ் எனவும் எதையோ முனகிக்கொண்டே ஏ.சியை போட்டுவிட்டான்.
அதற்குள் அவன் எடுத்து வந்திருந்த டால், சுக்கா ரொட்டியையும் ,தண்ணீரையும் காணததை கண்டது போல உண்பதில் கவனமானாள்.
சாப்பிட்டு அரை வயறு நிரம்பியதும், அவனைப் பார்த்து “வெரி குட்…அச்சா ஹை”, என்று சொல்லவும், “ம்ம்…”, என்ற உறுமல் மட்டுமே பதில்.
அடுத்து அவளுக்குத் தெரிந்த சில வார்த்தைகளைக் கொண்டு, “நாம் கியா ? “, என்றாள்
கண்களை சுழற்றியவன், “ சன்னி.”, என்றான்.
“ஒஹ்… கானா சூப்பர் சன்னி பையா. யூ மேட் ?”, என்று வரவழைத்த புன்னகை ஒன்றை சிந்தினாள். இவனை ஃப்ரெண்டு பிடித்தாலாவது எதாவது செய்ய முடியுமா என்ற யோசனை.
பதில் சொல்லாவிட்டாலும் கண்ணில் இருந்த முறைப்பு சற்று குறைந்தார் போலிருந்தது. சாப்பிட்ட எல்லாவற்றையும் சமத்தாக ட்ரேவில் அடுக்கி வைத்தாள். தண்ணீர் பாட்டிலை மட்டும் தனியே வைத்துக்கொண்டாள்.
கை கழுவ வேண்டும் என்று சைகை செய்ய, சன்னி தட்டில் கழுவு என்று சொன்னான். அப்படியே செய்தாள்.
“சன்னி பையா… ஃபாமிலி, பச்சே ஹே ?”, என்று இந்தியில் திடீரென்று கேட்கவும், தனிச்சையாக ஆமாம் என்று தலை யாட்டியவன் பாதியில் உணர்ந்து நிறுத்தி , “ஏன் கேட்கிற?”, என்று இந்தியில் கேட்டான்.
“கரண்ஜி ஃபாமிலி ?” , என்று அவன்  ஆமோதித்ததை கவனிக்காத மாதிரி ஸ்ரீ மீண்டும் கேட்டாள்.
“சுப் சாப் பைட்டோ”, என்று உறுமி விட்டு சென்றுவிட்டான் சன்னி.
அவன் சொன்னது போலவே வாயை மூடிக்கொண்டு அமர்ந்தவள் யோசனை மட்டும் ஓடியது. ‘ஆக சன்னிக்கு குடும்பம் குழந்தை இருக்கிறது. சரி ,இருக்கட்டும். அதுக்கு ?’, என்ற மனதிற்கு, ‘எந்த தகவலும் நல்ல தகவல்தான். உபயோகப்படும். ‘, என்று கூறி மெல்ல எழுந்து அந்த அறையை மீண்டும் சுற்றி வந்தாள்.