“நீ சொல்றதெல்லாம் பார்த்தா, அன்னிக்கு உன்னை பிடிச்சிருக்குன்னு சொல்லத்தான் ட்ரை பண்ணிருக்காரு. நீதான் லாவா கேக் சாப்பிடற குஷியில எதையும் கண்டுக்கலை. சரியான தின்னிப் பிண்டம்… சோத்து மூட்டை….”, ராகுல் அவளை திட்டிக் கொண்டிருந்தான்.
முகத்தை தொங்கப் போட்டவள், “உன் கூட கம்ஃபர்டபிளா இருக்கேன் சொன்னதை எப்படிடா நான் ப்ரபோசல்னு நினைக்க முடியும் ? பிடிக்கற எல்லாரையுமா ப்ரபோஸ் பண்ணிருவோம் ?”, என்று அவள் சந்தேகத்தை முன் வைத்தாள்.
“அந்த மனுஷன் அதுக்கு மேல சொல்றதுக்குத்தான் நீ வாய்ப்பே குடுக்கலையே? “, ராகுல் கண்ணாடியை ஏற்றிவிட்டு அவளை முறைத்தான்.
“சரி , டின்னருக்கு அப்பறம் இப்ப இரண்டு மூணு நாளா பேசிகிட்டுதான் இருக்கீங்க? எதுவும் சொன்னாரா?”, என்று கேட்டான்.
“ம்ம்… வெஸ்ட் இன்டீஸ் டூர் வருதாமே, அதுக்கு இந்தியா டீம் செலக்ஷன் நடக்கப் போகுதாம். அதுக்கு முன்னாடி எதுவோ பண்ணனும்னு போயிருக்கார். கொஞ்சம் ஆளுங்க பார்த்து மஸ்கா அடிக்கணும் போல, எனக்கு சரியா தெரியலை. அது பத்தி கொஞ்சம், அவர் அம்மாக்கு எதோ கால் வலி ட்ரீட்மென்ட், அப்பறம் சாம்ராட் ப்ரித்திவ்ராஜ் இந்தி படம் பார்த்தாராம்.”, ஸ்ரீ அடுக்கினாள்.
“ஷ்… டின்னர் பத்தியோ இல்லை அவர் உன்னைப் பத்தியோ வேற எதுவும் சொன்னாரா? அதை சொல்லு.”, ராகுலில் தொனியில் ஸ்ரீ முகம் சுருங்கினாள்.
“டேய்… ரொமப திட்டற… இல்லை அது பத்தி அப்பறம் ஒன்னும் சொல்லலை.”
“ஸ்ரீ… உண்மையை சொல்லு. அவர் சொல்ல வரது தெரிஞ்சு, அன்னிக்கு நீதான் அவாய்ட் பண்ணியா? அதுக்கு கேக் ஒரு எக்ஸ்க்யூசா ?”, ராகுல் சந்தேகமாக பார்த்தான்.
“இல்லைடா… அது அவர் அந்த ஸ்ரீவள்ளி பாட்டுக்கு ஸ்ரீ நிதிதான் ஞாபகம் வருவான்னு சொன்னதும் கொஞ்சம் ஜெர்க்காச்சு.ஆனா அதுக்காக திசை திருப்பலாம் நான் எதுவும் செய்யலைடா…. சொல்லணும்னா பட்டுனு சொல்ல வேண்டியதுதானே? எங்கிட்ட கம்பர்டபிளா இருக்கறதா மட்டும் எதுக்கு பொதுவா சொல்லணும் ?”, நண்பனிடம் கோபப்பட்டாள்.
“ஓ… அங்க அப்படியே உன் கை பிடிச்சு ப்ரபோஸ் பண்ணிருந்தா? உடனே நீ யெஸ் சொல்லிருப்பியா? “, ஸ்ரீயை அறிந்தவனாகக் கேட்டான் ராகுல்.
“ம்ம்… தெறிச்சு ஓடி வரத்தான் சான்ஸ் அதிகம். “, ஸ்ரீ தன்னையே கிண்டலடித்துக் கொண்டாள்.
“எனக்கும் அதான் தோணுது. இரண்டு பேரும் கமிட் ஆக ரெடி இல்லை, ஆனா விருப்பம் இருக்கான்னு தெரிஞ்சிக்கவும் ஆசை. விடு… பேசி பழகுங்க… ஒரு கட்டத்துல சொல்லியே ஆகணும்னு அவருக்கும் தோணும், உனக்கும் தோணும். அப்ப பார்க்கலாம்.” ராகுல் விடை தர,
“டேய்… என்னடா லவ் குரு மாதிரி அட்வைஸ் பண்ற? எப்படிடா இதெல்லாம்?”, ஸ்ரீ ஆச்சர்யப்பட்டாள்.
“பெஸ்ட்டிக்கு லவ் வந்தா, ஃப்ரெண்டுதான் பிலாசபர், கைட் எல்லாமாகணும்….வேற வழி? ஆனாலும் ஆன்ட்டியை நினைச்சாத்தான் எனக்கு கொஞ்சம் அள்ளுவிடுதுடி ஜக்கி. “, ராகுல் கவலைப்பட,
“ம்ம்…. ஏன்டா தடுக்கலை, எங்கிட்ட வந்து சொல்லலைன்னு ஃபர்ஸ்ட் உன்னைத்தான் தூக்கி போட்டு மிதிப்பாங்க. “, ஸ்ரீ ஏற்றிவிட்டாள்.
“ம்க்கும்… என்னை கேட்டுதான் செய்யற? ஆமாம் ஜக்கி எதுவும் காட்டலையா உனக்கு?”
“இல்லடா… டின்னர் போது எதாவது தெரியுமான்னு நானும் எதிர்பார்த்தேன்… ஒன்னும் வரலை.”
“ உன் ஜக்கி வெத்தா எதையாவது காட்டி வைக்கும். என்னிக்கு நமக்கு உதவற மாதிரி காட்டியிருக்கு ? இத்தனை வருஷம் உன் கூட சுத்திகிட்டு இருக்கேன். என்னை பத்தி ஒரு வாட்டியாவது எதாவது சொல்லியிருக்கா? “, ராகுல் அவள் ஜக்கம்மாவை கரித்தான்.
“வெச்சிகிட்டா வஞ்சனை பண்றேன்…. கிட்டதட்ட இரண்டு வாரமாகப் போது, அமைதியோ அமைதிதான்.”, ஸ்ரீ சிரித்தாள்.
அந்த வார இறுதியில், ஐ.பி.எல் தொடரின் இறுதிப் போட்டி. நவீன் தென்படுகிறானா என்று பார்க்கவே ஸ்ரீ அமர்ந்திருந்தாள். கிரிக்கெட்டுக்காக பாண்டியனும் ராகுலும் இருந்தார்கள். நகம் கடிக்கும் சூப்பர் ஓவர் பற்றி முன்னமே தெரிந்தவள், பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை.
ராக்குலும் அவள் தந்தையும்தான் டீவியுடன் ஒன்றிப் போயிருந்தார்கள். ஜக்கி சொல்லியிருந்தபடியே, கே.கே.ஆர் வெற்றியை தட்டிப் பறிக்க மைதானம் கரகோஷத்தில் அதிர்ந்தது.
மாமல்லபுரத்தில் சித்தார்த்தை அவன் நண்பர்கள் மொய்த்துவிட்டார்கள்.
“டேய்… சும்மா ஒரு ஃபன்னுக்காக கட்டினேண்டா… இப்படி நிஜமாவே நடக்கும்னு கனவுல கூட நினைக்கலை.”, சித்தார்த் அளந்துவிட்டுக் கொண்டிருந்தான்.
ஸ்ரீயின் வாக்குக்கு முக்கால் கோடிக்குகிட்டே இன்று அவனுக்கு வரவு. மற்றவர்களின் பாராட்டிலும் பொறாமைப் பார்வையிலும் திளைத்துக் கொண்டிருந்தான்.
“அதிர்ஷ்ட தேவதை நீ நினைச்ச மாதிரியே உன் கூடத்தாண்டா இருக்கு.”, என்று ஒருவன் சொல்ல,
“ஆமா… மாச சம்பளத்துக்கு வேலைக்கு வெச்கிருக்கேன்.”, சித்தார்த் சொன்னது உண்மை என்று தெரியாமல் அவன் கிண்டலடிப்பதாக நினைத்து சிரித்தது நண்பர் வட்டம்.
திங்கள் காலை ஸ்ரீ அலுவலகம் வந்ததும் சித்தார்த்திடமிருந்து அழைப்பு. இதை எதிர்பார்த்திருந்தவள், அவனை சந்திக்கச் சென்றாள்.
“ஹாய் ஸ்ரீ… நீ சொன்னது அப்படியே பலிச்சுது. நேத்து ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் என்னைப் பார்த்து அத்தனை பெருமை, பொறாமை. ஃபென்டாஸ்டிக் ஃபீல். தாங்க் யூ ஸ்ரீ.”, அவள் கை பற்றி குலுக்கினான்.
“உன் போஸ்ட்டிங் பெர்ம்மனட் பண்ண சொல்லிட்டேன். கொஞ்சம் சீக்கிரம்தான், ஆனா இவென்ட்க்கு சேர்மன் குடுத்த பரிசுன்னு சொல்லிக்கலாம். நான் தனிப்பட்ட முறையில எதுவும் செய்யக் கூடாது. அதான். ஓகேவா… ஹாப்பி ?”, என்றான் சித்தார்த்.
“இவென்ட்க்காகன்னா கண்டிப்பா சந்தோஷம் சர். நான் சொன்ன வாக்குக்காகன்னா, வேணாம்.”, என்றாள் ஸ்ரீ.
“ஹே… எதுக்கு பிரிச்சு பார்க்கணும் ? எந்த ரீசனுக்காக இருந்தா என்ன? முன்னேர சான்ஸ் கிடைச்சா டக்குன்னு பிடிச்சுக்கணும். இரண்டு திறமையும் உன்னோடதுதானே? “, என்றான் சித்தார்த்.
ஆனால் இந்த முறை அவளது விஷன் திறமை என்று அவன் சொன்னது உவப்பாக இல்லை. ஆனாலும் அதற்கு மேல் எதுவும் பேசாதவள், அமைதியாக, “ நன்றி சர்.”, என்று எழுந்தாள்.
“ம்ம்.. ஸ்ரீ… கிட்டதட்ட இரண்டு வாரம் மேல ஆச்சு. நீ எதுவும் விஷன் வந்ததா சொல்லலையே? எதுவும் பார்த்தியா?”, சித்தார்த் ஆர்வமாகக் கேட்டான்.
“இல்லை சர். கடைசியா இராமலிங்கம் சர் மனைவி கீழ விழுந்து கிடக்கற மாதிரி பார்த்தேன். அதை சொல்லாமத்தான் அவரை கிளப்பி கூட்டிட்டு போனேன். அதுக்கப்பறம் ஒன்னும் வரலை சர்.”
“ஓஹ்… நீ விஷனா பார்த்துதான் கரக்ட்டா போனீங்களா? அவருக்கு தெரியுமா?”, என்று வினவினான்.
“இல்லை சர். உங்களைத் தவிர யாருக்கும் தெரியாது. அவர் வைஃப் கிட்ட அவரைப் பத்தி சில கேள்வி கேட்கணும்னுதான் போன் பண்ணச் சொன்னேன்.”, விஷன் பார்த்தேன் உனக்கு உபயோகமாக பார்க்கவில்லை என்பது போல சொல்லவும், சித்தார்த் அப்போதைக்கு மேலே எதுவும் கேட்டுக்கொள்ளவில்லை.
“லன்ச்ல ஸ்டாக் மார்க்கெட் சானல அவசியம் பாரு ஸ்ரீ. எதுவும் தெரியுதா பார்க்கலாம்.”, என்பதோடு அனுப்பிவிட்டான்.
எத்தனை நாளைக்கு இப்படி சொல்லமுடியும் என்று தோன்றியது. இதுவரை எதுவும் வரவில்லை, அதானால் உண்மையாக சொல்லிக்கொண்டு இருக்கிறாள். ஆனால் எதுவும் தெரிந்து தொலைத்தால் ? அப்போதும் பார்க்கவில்லை என்று நம்பும்படி சொல்ல வருமா? ‘சொல்லணும்…. சொல்லித்தான் ஆகணும். ‘, என்று மீண்டும் உறுதியெடுத்துக் கொண்டாள்.
அடுத்த இரண்டு நாட்கள் அமைதியாக சென்றது. அன்று காலை நவீன் சென்னை வந்திருந்தான். மெசேஜ் அனுப்பியிருந்தான். மீண்டும் சென்னை வந்ததும் சந்திக்கலாம் என்று பேசியிருந்ததால், எங்கே போவது என்று யோசித்துக்கொண்டே கிளம்பிக்கொண்டிருந்தாள் ஸ்ரீ.
கண்டிப்பாக இன்னொரு டின்னர்க்கு ரோஜா விடமாட்டார். வீட்டிற்கு அழைத்துச் சென்றால், அவருக்கு எதேனும் பொறி தட்டினாலும் பிரச்சனை. ஏற்கனவே ‘என்ன இப்போதெல்லாம் நவீன் அடிக்கடி பேசுகிறானா?’, என்று கேட்டிருந்தார்.
மால், சினிமா என்று எளிதாக மற்றவர்களைப் போல போக முடியாது. ‘ஹ்ம்ம்…ராக்கியை கேட்கணும்.’, என்று நினைத்துக் கொண்டாள்.
அன்றைய அலுவலகப் பொழுது சற்று மந்தமாகவே சென்றது. அவள் வேலை நிரந்தரமானது குறித்து மற்றவர்கள் வாழ்த்த, மாலை துறையிலிருந்த அனைவருக்கும் கேக் வர வழைத்துக் கொடுத்தாள்.
இராமலிங்கம் கூட, “ பெரியவரே பார்த்து உன்னை சீக்கிரமே நிரந்தரம் பண்ணியிருக்காரு. அதே நல்ல பெயரோட சிறப்பா வேலை பார்க்கணும் ஸ்ரீ.”, என்று வாழ்த்தியது ஆறுதலாய் இருந்தது.
அலுவலகம் முடியும் தருவாயில் ராகுல் அழைக்கவும், அவனிடம் நவீனோடும் எங்கே செல்வது என்று பேசிக்கொண்டிருந்தாள். ஒவ்வொரு இடமாக அலசிக் கொண்டிருக்க, மற்றவர்கள் கிளம்பிப் போயிருந்தார்கள்.
“என்னம்மா ? கிளம்பலையா என்று இராமலிங்கம் கேட்கவும்தான், சுற்றும் பார்த்தவள், “இதோ சர்…”, என்று எழுந்தாள்.
“ராக்கி… நீ யோசிடா… நான் அப்பறம் பேசறேன்..
இராம்லிங்கம் பொறுமையாக தன் மேசையில இருப்பதையெல்லாம் ஒழுங்கு படுத்தி, மதியம் சாப்பாட்டு பாக்ஸ் எடுத்து வைத்து என்று பொறுமையாக கிளம்பி, தன் காரை எடுக்கும் நேரம், ஸ்ரீ துப்பட்டா பறக்க முன்னால் செல்வதைப் பார்த்தார்.
“என்ன பொண்ணு இது, துப்பட்டாவை மடிச்சு கட்டமாட்டாளா?”, என்று முணு முணுத்தபடியே அவளை பிடிக்க பின்னால் சென்றார்.
வாசல் கேட்டிலிருந்து இவர் திரும்புவதற்கும், தெரு முனைக்கு பாதி தூரம் அவள் வண்டி செல்வதற்கும் சரியாக இருந்தது. இவர் முன்னே செல்ல, திடீரென்று ஒரு வேன் இவரை உரசி முன்னே சென்றது.
“சே… “, என்று பிரேக் அடித்து, மீண்டும் நகர, அவரை தாண்டிச் சென்ற வேன் ஸ்ரீயின் ஸ்கூட்டியை ஓட்டி செல்ல, அவள் வேகத்தை குறைத்து ஓரமாக செல்ல முயன்றாள். வண்டி அவளை அண்டை கட்டுவது போல சென்றது. நொடி நேரத்தில் எல்லாம் நிகழ்ந்துவிட்டது.
இன்னமும் இராமலிங்கத்தால் கிரகிக்க முடியவில்லை. ஒரு நிமிடம் வண்டியை ஸ்ரீ ஓட்டிக் கொண்டிருந்தாள், அடுத்த நொடி அவளை காணவில்லை. வேறு ஒரு ஆள் வண்டியை எடுக்க, வேன், ஸ்கூட்டி இரண்டும் தெரு முனையை திரும்பிவிட்டது.