அத்தியாயம் – 12
விருந்து அன்று மாலை அலுவலகத்திலிருந்து சீக்கிரமே வந்தாள் ஸ்ரீ. ராக்கியிடம் முன்னரே பேசியிருந்தது போல, வனரோஜாவிடம்
“மா…ராக்கி நேத்து எதோ சாப்பிடதல ஒத்துக்கலையாம். டிசென்ட்ரி, இன்னிக்கு வர முடியாதுன்னு போன் பண்ணான் மா.”, என்று கூறினாள்.
“அச்சோ… மருந்து மாத்திரை எதாவது போட்டானா ?”
“ம்ம்… எதோ மாத்திரை போட்டிருக்கானாம். இன்னும் சரியாகலைன்னான். சரி… நான் கிளம்பறேன். லேட் ஆகுது.”, என்று பொதுவாக சொல்லிவிட்டு மாடி ஏறப் பார்த்தாள்.
“ஏய்… இருடி… ராக்கி வரலைன்னா… நீ மட்டும் எப்படி போவ ?”, ரோஜா நிறுத்தினார்.
“எப்படின்னா ? என் ஸ்கூட்டிலதான். இங்க பக்கம் தான? நானே போய்க்குவேன்.”, தோளைக் குலுக்கினாள்.
“அதை சொல்லலை. ஸ்டார் ஹோட்டல் வேற. நீயும் நவீனும் மட்டும்னா… அது சரி வராது பாப்பா. நீ இன்னொரு நாள் போலாம்னு சொல்லு நவீன் கிட்ட.”, ரோஜா மறுத்தார்.
“ம்மா… என்னமா… டின்னர்தான போறேன். அதுவும் ஒன்பது மணி வரைதான் டேபிள். டாண்ணு ஒன்பதரைக்கு வந்துடறேன். உனக்கும் நவீனை தெரியுமே.. அப்பறம் என்ன?”
“அது…. நவீன் நல்ல பிள்ளைதான். ஆனால் இப்ப தெரிஞ்ச முகம். யாராவது போட்டோ எடுத்து சோஷியல் மீடியால தேவையில்லாம இட்டு கட்டி பேசினா வேண்டாத தலைவலிடி. வேணா நவீனை இங்க வீட்டுக்கு வர சொல்லு. கொஞ்சம் வெளிய வாங்கிட்டு நானும் எதாவது செய்யறேன்.”, ரோஜா மறுப்புக்கு காரணம் சொல்லி, அடுத்து ஒரு வழியும் சொன்னார்.
இதை எதிர்பார்த்திருந்தவளோ, “மா… இப்பவே மணி ஆறரை ஆகப்போது…. ஒரு மணி நேரத்துக்கு முன்ன போன் பண்ணி இப்படி சொன்னா நல்லாருக்காது. ட்ரீட் குடுக்கறேன்னு கூப்பிட்டிருக்கார். ராக்கிக்கு உடம்பு முடியலை, சரி. ஆனா அதுக்காக நானும் வரலைன்னு சொன்னா தப்பா நினைப்பார். நீ தேவையில்லாம யோசிக்காத… அந்த ஸ்டார் ஹோட்டலுக்கு செலிப்ரடீஸ் நிறைய வருவாங்க. யாரும் தொந்தரவு செய்யாம இருப்பாங்கன்னு நவீன் சொன்னார். “
“எதுக்கு இப்ப உனக்கு ட்ரீட் குடுக்குது அந்தப் பிள்ளை?”
“அது.. ஹாட்ரிக் விக்கெட் எடுத்தா ட்ரீட் வேணும்னு சொல்லியிருந்தேன். அது நடக்கவும் குடுக்கறார்.”, ஸ்ரீ விசாரணையிலிருந்து தப்பிக்க சற்றே உண்மையை சொல்ல,
“உனக்கு எப்படி தெரியும் அந்தப் பிள்ளை ஹாட்ரிக் எடுக்கப்போகுதுன்னு?”, பாயிண்ட்டைப் பிடித்தார் ரோஜா.
ஸ்ரீ முழிக்கவும், “ விஷனா பார்த்தியா ? அதை அவங்கிட்ட சொன்னியா?”, சற்றே கோபம் எட்டிப் பார்த்தது ரோஜாவின் குரலில்.
“மா… எதுக்கு கோவம்? ஆமாம் பார்த்தேன். ஆனா சும்மா ஒரு விஷ் மாதிரிதான் சொன்னேன். மத்தபடி ஒன்னும்மில்லை. அவருக்கு எதுவும் தெரியாது.”, ஸ்ரீ சமாதானப் படுத்தினாள்.
“ம்ப்ச்… முதல் வாட்டி தெரியாது. அடுத்த வாட்டி நீ எதுவும் சொன்னா, மாட்டுவ. யார்கிட்ட என்ன எப்ப சொன்னன்னு நீ ஞாபகமா வெச்சிக்க முடியும் ? இதெல்லாம் எதுக்கு சொன்ன ? நல்லது நடந்தா நடக்கும்போது தெரிஞ்சிக்கட்டும்னு விட வேண்டியதுதான? எதுக்கு சொன்ன ?”, ரோஜாவின் பயம் கோபமாக வெளிவந்தது.
“சரி…. எதோ சொல்லிட்டேன். இனிமே கவனமா இருக்கேன். இப்ப லேட் ஆகுது. நான் கிளம்பறேன்.”, ஸ்ரீ நழுவப் பார்த்தாள்.
“எனக்கு சரியா படலை ஸ்ரீ. வாய வெச்சிகிட்டு நீ சும்மயிருந்திருந்தா இந்த டின்னர் எல்லாம் தேவையே இல்லை. இந்த ராக்கி பய கூட இருப்பான்னு பார்த்தா, அவனுக்கும் முடியலைங்கற…. படுத்தறடி.”, என்ன செய்வது என்று தெரியாமல் எரிச்சலை அவள் மீது காட்டினார்.
“நீதான் படுத்தற. சாதாரண ஒரு டின்னருக்கு ஏன் இப்படி பண்ற? அதுவும் சீக்கிரமே வந்துடப் போறேன். யாருன்னு தெரியறதுக்கு முன்னாடி என் கூட ஸ்கூட்டில வீட்டுக்கு கூட்டிட்டு வந்தேன். அதெல்லாம் ஒன்னும் சொல்லலை. இப்ப என்ன திடீர்னு ?”, ஸ்ரீயும் எகிறினாள்.
“அதான் … அப்ப அந்த பிள்ளை யாருன்னு தெரியாது. நீயும் வீட்டுக்குதான் கூட்டிட்டு வந்த. இப்பவும் நவீன் வீட்டுக்கு வரதுபத்தி எனக்கு எதுவும் இல்லை.இப்படி ஸ்டார் ஹோட்டல், டின்னர்ங்கறதுதான் இடிக்குது.”
ரோஜாவின் கவலை நியாயமானது என்று தெரிந்தாலும், “மா.. இப்ப டூ லேட். நான் கிளம்பணும். அடுத்த வாட்டி நவீன் கூட எங்கையும் வெளிய போகலை. வீட்டுக்கே கூப்பிடறேன். ப்ராமிஸ். இப்ப நீ ரிலாக்ஸ் ஆகிக்கோ. “, என்று சொல்லி பறந்தாள் அவள் அறைக்கு.
அடுத்த முக்கால் மணி நேரத்தில் உறவினர் ஒருவரின் ரிசப்ஷனுக்காக எடுத்த ஒரு கரீம் மற்றும் ஆரஞ்சு வண்ண ஷெராரியில் மிதமான அலங்காரத்துடன் இறங்கினாள் ஸ்ரீ.
கீழே அமர்ந்திருந்த ரோஜா அவளைப் பார்த்து, “அதிசயம்தான், இவ்ளோ சீக்கிரம் ரெடியாகிட்ட. பார்த்து வண்டி ஓட்டு. வேகமா போகாத. எதையாவது பார்த்து தொலைச்சினாலும் வாயை திறக்காத.”, என்றார் அவளை தெரிந்தவராக.
“ம்ம்.. நான் பார்த்துக்கறேன். போயிட்டு மெசேஜ் போடறேன். “, என்று விட்டு கிளம்பினாள்.
ரோஜாவிடமிருந்து தப்பிக்க வேண்டும் என்ற கவனத்தில் இருந்தவளுக்கு, ஹோட்டலை அடையும் தருவாயில்தான் வாழ்க்கையின் முதல் டேட்டிங் அனுபவம் என்ற உணர்வு வந்தது. நவீனுக்கு எப்படியோ, ஆனால் அவளுக்கு புதுமையான அனுபவம்.
வண்டியை பார்க் செய்துவிட்டு, ஹோட்டலின் விசாலமான முன் வரவேற்பு அறையை அடைந்தவள், ரிசெப்ஷன் நோக்கி இரண்டடி வைக்க, அதற்குள் நவீன் அவளைப் பார்த்து மறுபுறத்திலிருந்து கையாட்டினான்.
புன்னகையோடு அவளை நோக்கி வர, ஜீன்ஸ், க்ரீம் டீ-ஷர்ட், மேலே வெளிர் ப்ரவுன் நிறத்தில் ப்ளேசர் என்று அவனது ஆறடி உயரத் தோற்றமும் மாடலைப் போல இருந்தது. புன்னகை முகமாக நவீன் அருகில் வர, கண்டிப்பாக அழகனாகத் தெரிந்தான்.
அவனைப் பார்த்தபடி வந்தவள் நாலு எட்டு வைப்பதற்குள் அவளை அடைந்திருந்தான்.
“ஹே… என்ன ஆன்னு பார்க்கற ஸ்ரீ?”
“இல்ல.. இப்படி உங்களை பார்த்ததில்லை, அதான் மூளை அட்ஜஸ்ட் பண்ணிக்க டைம் எடுக்குது. “, ஸ்ரீ உண்மையை சொல்லவும், இன்னும் விரிந்த புன்னகையை சிந்தியபடியே தலை லேசாய் அசைத்தவன்,
“பாராட்டைக் கூட கிண்டலாதான் சொல்ற. நீயும் அழகா இருக்க. நானுமே இந்த மாதிரி நீ ட்ரெஸ் பண்ணி பார்த்ததில்லை. லவ்லி.”, என்றான் அவள் கண் பார்த்து. ஏனோ வெட்கம் வந்தது ஸ்ரீக்கு. அவளுக்கே ஆச்சரியம்தான். என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் லேசாய் தலையசைக்க,
“வா… நம்ம டேபிள் ரெடியா இருக்கு. போகலாம்.”, என்று அழைத்துச் சென்றான்.
வாய் ஓயாமல் கலாய்ப்பவள். இவன் ஒரு வார்த்தை சொன்னதும், வெட்கத்தில் பதில் பேசாமல் இருப்பது நவீனுக்குள் ஒரு மகிழ்ச்சிக் கீற்றாக ஓளிர்ந்தது. அதை அனுபவித்தபடியே, அவளை அழைத்து வந்து அமர்த்திவிட்டு தானும் அமர்ந்தான்.
“அம்மாக்கு ஒரு மெசேஜ் போட்டுடறேன். உங்களை பார்த்திட்டேன்னு.”, சொல்லிவிட்டு போனில் டைப் செய்தாள்.
“போன் தா… ஒரு செல்ஃபி எடுக்கலாம். “, என்று அவள் கைபேசியை வாங்கியவன் எழுந்து அவள் அருகில் வந்து போட்டோ எடுத்தான்.
“அப்பறமா நீ எனக்கு அனுப்பு. இப்ப ஆன்ட்டிக்கு அனுப்பறதனா அனுப்பு. “, என்று அவள் கைபேசியை கொடுத்தான்.
“வீட்டுக்கு போய் காட்டிக்கறேன்.”, என்ற ஸ்ரீ, போனை உள்ளே வைத்தாள்.
சூப் , ஸ்டார்டர் என்று சொல்லிவிட்டு, மீண்டும் அவளைப் பார்த்தவனுக்கு அடுத்து என்ன பேசுவது என்று தெரியவில்லை. அவனைப் பற்றி அவள் என்ன நினைக்கிறாள் என்று எப்படி கேட்பது என்று யோசனை ஓடிக்கொண்டிருந்தது.
ஸ்ரீ சற்று தள்ளியிருந்த டேபிளைப் பார்த்தவள், உற்சாகமாக, “நவீன்… அந்த டேபிள்ல இருக்கறது… “, என்று ஒரு நடிகர் பெயரை சொல்ல,
“ம்ம்… ஆமாம். உள்ள வரும்போதே பார்த்தேன். குடும்பத்தோட வந்திருக்கார். போய் பேசி டிஸ்டர்ப் பண்ண வேணாம் ஸ்ரீ.”, என்றான்.
முகம் சுருங்கியவள், “தெரியும் நவீன். செலிப்ரடீஸ் வரவங்க யாரும் தொந்தரவு செய்யாம இருக்கத்தான் இங்க வராங்கன்னு சொல்லியிருக்கீங்களே. அதெப்படி நான் போய் பேசுவேன்? எனக்கும் இங்கிதம் தெரியும். “, என்றாள் வேகமாக.
“ஹே… தப்பா எடுத்துக்காத ஸ்ரீ. எனக்கும் இதெல்லாம் புதுசுதான். நடிகரா பார்த்தவங்க, நேர்ல பார்க்கும்போது ஆர்வம் வரது சகஜம்தான். எனக்கும் அப்படித்தான். அதனால சொன்னேன். தப்பா இருந்தா சாரி.”, என்று உடனே மன்னிப்பு கேட்டான்.
அதைக் கேட்டு தலையசைத்தவள், “ இல்லை தப்பில்லை. நீங்க சாதாரணமாத்தான் சொன்னீங்க. நான்தான் தேவையில்லாம ரியாக்ட் பண்ணிட்டேன்.”, என்றவள் சற்று நகர்ந்து முற்றும் அவனைப் பார்த்தபடி அமர்ந்தாள்.
“ஸ்ரீ…?”, அவள் கோபித்துக் கொண்டாளோ என்று நவீன் பார்க்க,
“இல்லை நவீன். நீங்க சொன்னதுதான். என்னை மீறி ஒரு ஆர்வத்துல என்ன செய்யறாங்கன்னு அடிக்கடி பார்க்காம இருக்கத்தான். இட்ஸ் ஓகே.”, என்றாள் ஒரு புன்னகையோடு. பின் அவளே, “சரி உங்க இன்டர்வ்யூ எப்படி போச்சு? எதாவது இன்ட்ரெஸ்டிங்கா கேள்வி கேட்டாங்களா?”, என்றாள்.
“வழக்கமான கேள்விங்கதான். கூடவே சிங்கிளா இல்லை யாரும் கேர்ள் ஃப்ரெண்ட் இருக்கான்னு விசாரிச்சாங்க.”, கிடைத்த வாய்ப்பை விடாமல் அவன் கேட்க ஆசைப்பட்ட விஷயத்திற்கு அருகில் வந்தான்.
கலகலவென்று சிரித்தவள், “ அம்மா திட்டுவாங்கன்னு சொன்னீங்களா?”, என்று கலாய்த்தாள்.
“ஹ்ம்ம்..”, என்று அவளை விளையாட்டாங்க முறைத்தவன், “ கேர்ள் ஃப்ரெண்ட் இருக்கா, கண்டிப்பா சிங்கிள் இல்லைன்னு சொன்னேன்.”, என்றான்.
“ஓ… அப்பறம் அம்மாக்கு போன் பண்ணி, மா கேர்ள் ஃபான்ஸ்கிட்டருந்து தப்பிக்க ஒரு பொய் சொல்லிட்டேன்மான்னு சொல்லி க்ளியரன்ஸ் வாங்கிட்டீங்களா?”, என்று மறுபடி ஓட்டினாள், அதற்குள் வந்திருந்த சூப்பை சுவைத்தபடி.
“ஹே என்ன… ரொம்ப ஓட்டற ? நீதான் உங்க வீட்ல சொல்லிட்டு வந்திருக்க. வந்துட்டேன்னு உங்க அம்மாக்கு மெசேஜ் போடற. உன் கூட டின்னர் வரது கூட எங்க அம்மாக்கு தெரியாது. நான் ஒன்னும் அவங்ககிட்ட எல்லாத்தையும் சொல்றதில்லை !”, என்று கோபித்தான்.
“ஹா… சரி சரி… நீங்க இப்ப வளர்ந்துட்டீங்க. நம்பறேன்…நம்பறேன்.”, என்றாள் ஒரு விரிந்த புன்னகையோடு.
“என்னை பத்தி என்னதான் நினைச்சிட்டு இருக்க நீ? சொல்லு கேட்போம்.”, என்று ஒரு வழியாக கேட்க நினைத்ததை விளையாட்டாக கேட்பது போல கேட்டேவிட்டான்.
“ம்ம்… “, சீஸ் கார்ன் பாலை சுவைத்தவள், நாப்கினால் உதட்டை நாசூக்காய் ஒற்றியெடுத்தாள்.
“சூப்பரா இருக்கு.”, என்று பாராட்டிவிட்டு. “நீங்க ரொம்ப நல்ல பிள்ளை நவீன். கொஞ்சம் ரிசர்வ்ட், அதுலர்ந்து வெளிய வந்து கம்பர்டபிள் ஆகிட்டா, நல்லா பேசுவீங்க. நல்ல ஹ்யூமர் சென்ஸ் உங்களுக்கு. அப்படி போற போக்குல கலாய்ப்பீங்க. அதே நேரம், உங்களைக் கலாய்ச்சாலும், ஜாலியா எடுத்துக்குவீங்க. நேர்மை, உண்மை, உழைப்புன்னு நிறைய நல்ல விஷயங்கள் கடைபிடிக்கறீங்க.”, ஸ்ரீ சொல்லிக் கொண்டே போக,
“ நீ சைக்காலஜி படிச்சத நான் மறந்துபோய் கேட்டுட்டேன்.”, என்றான் கன்னத்தில் கைவைத்து அவளைப் பார்த்தபடி.
முழித்தவள், “ நான் என்ன உங்களை அனைலைஸ் பண்ணேனா?”
“இவ்வளவு நேரம் வேற என்ன பண்ணீங்க மேடம்?”, என்று அவளை கிண்டலடித்தான் மெனுவை கையில் எடுத்த படி.
சற்று நேரம், மெயின் கோர்ஸ் என்ன சாப்பிடுவது என்பதில் சென்றது. ஆர்டரைக் கொடுத்துவிட்டு மீண்டும் பேச முற்பட, லைவ் ம்யூசிக் ஆரம்பித்தது.
கீபோர்ட்டில் ஒருவரும், எலக்ட்ரிக் வயலின் எடுத்து வந்த ஒருவரும் பிரபல் பாடல்களை வாசக்கப் போவதாக சொல்லி, முதல் பாடலே ஸ்ரீவள்ளியை இசைத்தனர்.
மிக மிக அற்புதமாக வாசித்தனர். கிட்டதட்ட அனைவருமே பேச்சை நிறுத்தி இசையின் வசம் கவனம் கொண்டிருந்தனர், நவீன், ஸ்ரீ உட்பட.
பாடல் முடிந்து கரகோஷம் எழ, “ஹையோ…. சான்சே இல்லை நவீன். செம்ம. கலக்கிட்டாங்க. இந்த மாதிரி லைவ் ம்யூசிக் நான் கேட்டதே இல்லை. தாங்க்ஸ்…. தாங்க்ஸ் சோ மச். “, ஆர்வத்தில் அவன் கை பிடித்து ஸ்ரீ ஆர்பரித்தாள்.
அதைப் பார்த்து மலர்ந்து சிரித்தவன், “ வெல்கம். உன்னோட கூட இந்த பாட்டைக் கேட்டது மறக்க முடியாது ஸ்ரீ. எப்ப இதைக் கேட்டாலும் இனி ஸ்ரீவள்ளி இல்லை ஸ்ரீநிதி தான் ஞாபகத்துக்கு வருவா. “, என்று நவீன் லேசாய் தன் மனதை திறக்க,
அவன் பேச்சில் , கண்களை ஒரு முறை விரியத் திறந்து மூடி, ‘இப்ப என்ன சொல்ல வரான்?’, என்று நினைத்தாள் ஸ்ரீ.
மேலும் பேசுவதற்குள் வெய்ட்டர் அவர்கள் உணவைக் கொண்டு வர, அந்த நொடி கலைந்தது.
அடுத்து ஒரு ஹிந்தி பாட்டு வாசிக்க தொடங்கினார்கள். ஆனால் விட்ட இடத்திலிருந்து எப்படி மீண்டும் தொடங்க என்று நவீனுக்குத் தெரியவில்லை. ‘ எதாவது பேசுடா…’, என்று சொல்லிக் கொண்டாலும், அவள் பதில் சொல்லாதது என்னவோ போல் இருந்தது. ‘ நீ என்ன கேள்வியா கேட்ட அவகிட்ட ? என்ன பதில் சொல்லுவா? ‘, என்றது அறிவு. ‘ இதை எதிர்பார்க்காதது மாதிரிதான் முழிச்சா… அப்ப அவளுக்கு மத்தவங்களைப் போலத்தான் நானுமா?’, மனம் குழப்பிக் கொண்டது.
தான் உண்டு கொண்டிருந்த லாசான்யாவை மறுபுறமாகக் காட்டி, “நீங்க கொஞ்சம் டேஸ்ட் பாருங்க நவீன். ரொம்ப நல்லாயிருக்கு.”, என்றாள் ஸ்ரீ.
அவனது முள் கரண்டி கொண்டு ஒரு விள்ளல் லாசான்யாவை எடுத்து உண்டவனுக்கு மனதுக்குள் ஜிவ்வென்று ஒரு உணர்வு. டீமுடன் உணவு உண்கையில் எடுத்து உண்பது வழக்கம்தான். ஆனால் இப்படி மனதுக்குப் பிடிக்கின்ற ஒரு பெண்ணுடன் அமர்ந்து, இப்படி உணவை பகிர்ந்து எடுத்து உண்பது வேறு உணர்வுதான்.