21

    யாழினிக்கே தன்னை நினைத்து ஆச்சரியமாக இருந்தது.  இதுவரை இப்படி இருந்ததில்லை.

    போன் செய்து அவனுடன் பேச முடியாத ஒரு சின்ன சிடுசிடுப்பு மனதளவில் இருந்தாலும், எதுவும் சொல்லாமல் அமைதியாக தன் வேலையை பார்த்தவள் தன் மனதை சமப்படுத்தி கொண்டாள்.

   அவனது வேலை தெரியும், அவனது நிலை தெரியும், இருந்தும் ஏன் இந்த சிடுசிடுப்பு,  மனதில் தோன்றிய சிறு சிறு எண்ணங்களை தவிர்த்தவள்.,

    ‘சரி சரி எல்லாம் சரியா போயிடும், யோசிக்க கூடாது, இன்னைக்கு என்ன திடீர்னு’

என தன்னை தானே திட்டிக் கொண்டவள், எப்போதும் செல்லும் கேப் ல் செல்லாமல் தனியாக ஓலோ  புக் செய்தாள்,

    ராதா வந்திருந்தால் ஏன் என்று கேள்வி கேட்டிருப்பாள், ஆனால் இவளாக வந்ததால் தனியே புக் செய்து சென்றவள், போகும் போதே வழியில் நிறுத்தி வீட்டிற்கு தேவையானது, தனக்கு தேவையான பொருட்களையும் வாங்கிக் கொண்டே வீடு வந்து சேர்ந்தாள்.

    சரியாக அவள் கேப் ல் அப்பார்ட்மெண்டிற்குள்ளே வந்து இறங்க,  கதிரவனின் அம்மா அப்பா இருவரும் அந்த நேரம் பார்க்கில் நடந்து விட்டு வீட்டிற்கு செல்வதற்காக வந்தனர்.

    இவளை பார்த்தவர்கள் “என்னம்மா வெளி கேப் புக் பண்ணி வந்திருக்க, ஆபீஸ் கேப்ல வரலையா”, என்று கேட்டனர்.

     “இல்ல கொஞ்சம் ஒர்க் இருந்துச்சு, அதான் புக் பண்ணி வந்தேன்” என்று சொல்லிவிட்டு தான் வாங்கி வந்த பொருட்களை இறக்கினாள்.

    அவர் தான் “ஏன் மா சொல்லி இருந்தா, நான் போகும் போது வாங்கிட்டு வந்திருப்பேன்ல”, என்று சொன்னார்.

    “இல்ல ரெண்டு பேருக்கும் சேர்த்து தான் வாங்கிட்டு வந்தேன், எப்படியும்  நீங்க நாளைக்கு மார்னிங் தான் மார்க்கெட் போவிங்கன்னு தெரியும், இன்னைக்கு நைட்டுக்கும் வேணும்ல, அது தான்”, என்று சொன்னவள்

     பொருட்கள் இருந்த பையை எடுத்து வைக்கவும், ஆளுக்கு ஒரு பையாக எடுத்துக் கொண்டு, வீட்டினை நோக்கி சென்றனர்.

அவளை பார்த்து விட்டு “ஏன்  ஒரு மாதிரி இருக்க, டல்லா இருக்கே முகமும்” என்று கதிரவனின் அம்மா கேட்டார்.

“அதெல்லாம் ஒன்னும் இல்ல அத்தை, கொஞ்சம் ஒர்க் ஜாஸ்தி” என்று சொன்னவள்,

    வீட்டை திறக்கும் போது பையை கதிரவன் அம்மா கையில் கொடுத்தவள், “நீங்க எடுத்துட்டு போங்க,  என்னென்ன காய் வேணுமோ எடுத்துட்டு, அதுக்கு அப்புறம் இங்க கொடுத்து அனுப்புங்க”, என்று சொன்னாள்.

அவரும் எடுத்துக் கொண்டு  அவளிடம் நின்று, “நீ காபி போடாதம்மா, நான் உனக்கு காபி கலந்து கொண்டு வாரேன்”, என்று சொன்னவர்,

      “நீ முதல்ல போய் முகத்தை கழுவி கொஞ்சம் பிரஷ்ஷாகு, டிரஸ் மாத்திக்கோ,  நான் காபி போட்டு எடுத்துட்டு வரேன்”, என்று சொல்லிவிட்டு போனார்.

   அவர்களைப் பார்த்தவள், ‘இந்த மனுஷனோட தொல்ல தாங்கல, இல்லாட்டி ஒண்ணாவே இருந்து இருக்கலாம்,

நான் பேசாம சாப்பிட்டேனா, வேலைக்கு போனனா, வந்து ரெஸ்ட் எடுத்தேனா ன்னு இருந்திருக்கலாம், இப்ப பாரு’, என்று தோன்ற அவளே அவளை நினைத்து சிரித்துக்கொண்டாள்,

   ‘திருமணம் ஆகி நான்கு மாதம் தான் ஆகப்போகிறது, அதற்குள் என்னென்ன எல்லாம் நினைக்க தோன்றுகிறது’, என்று யோசித்துக் கொண்டவள் ராதாவை நினைத்து பார்த்துக் கொண்டாள்.

‘இவ எப்படி சமாளிக்கா’ என்று யோசித்தவள்,  ‘இவன் வேலை செய்து கொடுப்பான், கண்டிப்பா இவன் அவளுக்கு எல்லா வேலையும் செஞ்சு கொடுப்பான், இப்ப பேபி வேற வந்துருச்சா, அதனால நல்லாவே செய்து கொடுப்பான்’, என்று நினைத்துக் கொண்டே தன்னை ரெஃப்ரெஷ் செய்தவள், உடை மாற்றிக் கொண்டு, தனக்கென வாங்கி வந்த பொருளை எடுத்து எதற்காக வாங்கி வந்தாலோ அதை செய்தாள்.

முதலில்  அதை பார்த்தவுடன் அவளுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை, ‘இதை முதலில் யாரிடம் சொல்வது, எப்படி சொல்வது, என்று தயக்கமாகவும் இருந்தது’, அதே நேரம் மதியம் அலுவலகத்தில் தனது மனநிலையும் நினைத்து பார்த்துக் கொண்டாள்,

   அப்போது தான் அவளுக்கு தோன்றியது, ‘மதியம் போல் தான் ஏன் இப்படி இருக்கிறோம், எதுவும் வேலையே ஓட மாட்டேங்கிறது, தூங்க வேண்டும் போல இருக்கிறது’ என்று யோசனையுடன் இருக்கும் போது தான், நாள் கணக்கை பார்த்தவளுக்கு நாட்கள் தள்ளி போயிருப்பதை உணர்ந்தாள்.

    அதை சொல்வதற்காக அவனிடம் ‘எப்போ வீட்டுக்கு வருவீங்க, என்ன கூட்டிட்டு போறீங்களா’ என்று கேட்பதற்காக தான் அத்தனை போன், ஆனால் எடுக்கவில்லை, இவள் அனுப்பிய  மெஸேஜ் ‘பிக் மை போன்’ என்று மட்டுமே அனுப்பி இருந்தாள்.

அவனும் ‘பிஸி இப்ப பேச முடியாது, நான் கூப்பிடுறேன்’ என்று மட்டுமே அனுப்பி இருக்க,

  இவன வச்சுக்கிட்டு என்று யோசித்தவள் சிரித்துக் கொண்டே, இதை எப்படி கன்ஃபார்ம் செய்வது என்று தயங்கியவள், வீடு வரும் போது டெஸ்ட் கிட் வாங்கிக் கொண்டே வந்தாள்,

    ‘அலுவலக கேபில் வந்தால் மெடிக்கல் ஸ்டோர் ல் நிப்பாட்ட முடியாது, காய்கறி கடையிலும் நிப்பாட்ட முடியாது’, என்ற எண்ணத்தோடு தான் தனியே கேப் எடுத்து வந்திருந்திருந்தாள்.

  அதை இப்போது நினைத்து பார்த்துக் கொண்டவளுக்கு ஒருபுறம் சிரிப்பு வந்தாலும், கண்ணும் கலங்கியது, யாரிடம் சொல்ல வேண்டும் என்ற தயக்கத்தோடு, அதை அப்படியே அதே கவரில் போட்டு பெட்ரூமில் வைத்தவள்,

   முகத்தை சரி செய்து கொண்டு வெளியே வரவும், கதிர்வனின் அம்மாவும் பால்கனி வழியாக அவர்களுக்கு காபியை கொண்டு வந்து வைத்தார்,

“ரொம்ப ஒரு மாதிரி இருக்கீயே” என்று கேட்டார்.

    “ஒன்னும் இல்லை அத்த கொஞ்சம் ஒர்க் ஜாஸ்தி, டயர்டா இருக்கு வேற ஒன்னும் இல்ல”, என்று சொன்னாள்.

  “தூக்கம் வருதா மா, நீ வேணா தூங்கு, நான் நைட் டிபன் செய்றேன்”, என்று சொன்னார்.

    “இல்லத்தை, நான் வாரேன் உங்களுக்கு ஹெல்ப் பண்றேன், அங்கேயே கூட நான் வந்து ஹெல்ப் பண்ணி தரேன், செய்யலாம்”, என்று சொன்னாள்.

      அவர் தான் “அதெல்லாம் ஒன்னும் இல்ல, ஒரு சட்டி இட்லிய வச்சு, ஒரு சட்னி வைப்பதற்கு எவ்வளவு நேரம் ஆக போகுது, நீ கொஞ்ச நேரம் தூங்கு, நான் அப்புறமா எழுப்புறேன்”, என்று சொல்லவும்,

காபியை குடித்தவள், கதவை பூட்டி இருக்கேன் அத்த, அவங்க வந்தா அந்த பக்கமாக வர சொல்லுங்க” என்று சொல்லி விட்டு,

  அவர் சரிமா என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே பெட்ரூமுக்கு சென்று விட்டாள்.

    ‘இந்த பிள்ளை ஏன் இப்படி இருக்கு, எப்பவும் இப்படி இருக்காதே’ என்று யோசித்தவர் பெட்ரூம் எட்டி பார்த்தார்.

     கட்டிலில் சாய்ந்தவள் சற்று நேரத்தில் தூங்கி இருந்தாள், அப்போது தான் யோசித்துக் கொண்டார் திருமணத்தின் போதும் இப்படித் தானே இருந்தாள்,  அவ்வளவு களைப்புடன் இருக்க போய் தானே, அவன் இங்கே அனுப்பி வைத்தான், அதிக அலுப்பு இருந்தால் உடனே தூங்கி விடுகிறாள்’ என்று நினைத்துக் கொண்டே “தூங்கட்டும்” என்று சொல்லி வீட்டில் லைட்டை எல்லாம் போட்டு வைத்தவர்,

    அவள் வீட்டிலும் விளக்கு ஏற்றி வைத்து விட்டு, அவர் வீட்டில் சென்று கதிரவனின் அப்பாவிடம் சொல்லிக் கொண்டிருந்தார்,

“எதுவும் உடம்பு முடியலையா என்னன்னு தெரியல, வேலை கொஞ்சம் ஜாஸ்தி போல,  சரி தூங்கு நான் டிபன் பாத்துக்குறேன் சொல்லிட்டு வந்துட்டேன்”, என்று சொன்னார்.

   “சரி சேர்த்து செஞ்சுக்கலாம்,  இப்ப என்ன அவன் வரதுக்கு எப்படியும் லேட் ஆகும் இல்ல, கொஞ்ச நேரம் தூங்கி எந்திரிக்கட்டும்”, என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே இரவு உணவுகளுக்கான ஏற்பாடு செய்து கொண்டிருந்தவர்,

அவள் வாங்கி வந்த காய் மற்றும் பழங்களையும்  பிரித்து எடுத்து வைத்துக் கொண்டிருந்தார்.