வந்த கலைப்பு தீர சற்று நேரம் ஓய்வெடுத்தபின்,  மதிய உணவு இரு வீட்டாரும்  பொதுவாகவே வெளியே ஆர்டர் செய்திருந்ததால் வந்தவுடன் அனைவரும் சேர்ந்து அமர்ந்து உண்டனர்.

    மதிய உணவிற்குப்பின் பேசிக் கொண்டிருக்கும் போதுதான், கதிரவனின் அப்பா “அவங்க ரெண்டு பேரும் கொஞ்ச நாளைக்கு தனியாவே இருக்கட்டும், எப்போ அவங்களுக்கு எங்களுடைய ஹெல்ப் வேணும்னு தோணுதோ, அப்போ சேர்ந்து இருக்கலாம்”, என்று சொன்னார்.

மற்றவர்களுக்கும் அதுவே சரியான பட அனைவருமே சம்மதித்தனர்.

  இருவருக்கும் இன்னும் 5 நாட்கள் விடுமுறை இருக்க, முதலில் இரண்டு பேரும், இருவர் ஊருக்கும் சென்று விட்டு வருவதாகவும், அதன் பிறகு குலதெய்வம் கோயில் வழிபாடு எல்லாம் முடித்துவிட்டு இருவரும் வேலைக்கு செல்லலாம் என்று பெரியவர்கள் பேசி முடிவு செய்தனர்,

    அதற்கு தகுந்தார் போல் முதலில் யாழினியின் ஊருக்கு சென்று விட்டு, அங்கிருந்தே அனைவரும் சேர்ந்து கதிரவனின் சொந்த ஊருக்கு சென்றனர்,  பிறகு குலதெய்வ வழிபாடு முடித்துக்கொண்டு நேராக சென்னை வந்து அவர்கள் வீட்டில் குடித்தனத்தை தொடங்கினர்.

   யாழினியின் வீட்டில் கதிரவனும் யாழினியும் இருக்க,  அந்த வீட்டில் கதிர்வனின் பெற்றவர்கள் இருந்தனர்.

    அவ்வப்போது நந்தனும் ராதாவும் எட்டிப் பார்த்துக் கொள்வதாக சொல்லிவிட்டனர்.

குழந்தையை பார்ப்பதற்காக ராதாவின் அம்மாவும், யாழினி அம்மா, நந்தன் அம்மா என மூன்று பேரும் மாற்றி மாற்றி அங்கு வந்து இருப்பதாக பேசிக் கொண்டார்கள்,

    ஆறு மாதத்திற்கு பிறகு குழந்தையை அலுவலகத்தில் உள்ள டே கேரில் விட்டுக் கொள்ளலாம் என்று பேசி இருந்தனர். அவர்களுக்கான அலுவலகத்தில் குழந்தைகளை பராமரிப்பதற்கு என்று தனி இடமும் இருந்ததால் அவர்களுக்கு அது வசதியாக போயிற்று.

  தனியாக இருவரும் குடும்பம் நடத்த தொடங்கிய பின்னர் இருவருக்கான அன்பும் அன்னியோன்யமும் அதிகரித்து இருப்பதாகவே அவர்களும் உணர்ந்தனர். அவர்களை சுற்றி இருந்த சொந்தங்களும் உணர்ந்தனர்.

அவன் வேலைக்கு நேரம் காலம் எல்லாம் கிடையாது என்பது அவளுக்கும் தெரியும், என்பதால் அதற்கு தகுந்தார் போல தன்னையும் அவள் மாற்றிக்கொள்ள தொடங்கியிருந்தாள்.

அவன் தான் “நீ எப்போதும் போல இரு, என்னைப் பற்றி எல்லாம் யோசிக்காதே”, என்று சொல்லி இருந்தான்.

    “பக்கத்துல தான் அம்மா இருக்காங்க, வேணும்னா அங்க போய் கூட சாப்பிடுவேன், எனக்காக நீ மெனக்கிட்டு எல்லாம் செய்ய வேண்டாம்” என்று சொன்னாலும் அவள் செய்து வைத்துவிட்டு தான் போவாள்.

    அவன் வருவதற்கு தாமதமாகும் நாட்களில், அவனிடம் வீட்டின் சாவி ஒன்று இருக்க, அவனே திறந்து வந்து கொள்வான். அந்த நாட்களில் இவளை எந்த விதத்திலும் தொந்தரவு செய்வதும் கிடையாது.

   வாழ்க்கை சுமூகமாக சென்று கொண்டு தான் இருந்தது,

    சனிக்கிழமை அவளுக்கு அலுவலகம் எப்போதும் லீவு என்பதால், அன்று மட்டும் இவன் எப்போதும் மெதுவாக தான் தன்னுடைய அலுவலகத்திற்கு செல்வான், முடிந்த அளவு வேலைகளை முதல் நாளை முடித்து விட்டு தான் வருவான், அன்று மதியமும் அப்படித்தான் இருவரும் சேர்ந்து அமர்ந்து  உணவு உண்ணத் தொடங்கும் போது,

அவனுக்கு அலுவலகத்தில் இருந்து அழைப்பு வந்தது, முக்கியமான கேஸ் விஷயம் உடனே வரவும் என்று தகவல் தெரிவிக்கவும், அவனுடைய கார் டிரைவரை அழைத்து அலுவலக காரை எடுத்து வரும்படி சொல்லிவிட்டு இவன் கிளம்ப தொடங்கினான்.

சரியாக சாப்பிடாமல் கிளம்புகிறானே, என்று யோசித்தவள் அவனுக்கு உணவை அள்ளி ஊட்டத் தொடங்கி இருந்தாள்.

அவன் “இல்ல டா சாப்பாட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்க முடியாது” என்று சொன்னாள்.

    இவளோ “நீங்க கிளம்பிட்டே இருங்க, நான் உருட்டி உருட்டி தர்றேன் சாப்பிட்டு போயிருங்க”, என்று சொல்லி அவனை உண்ண வைத்துக் கொண்டிருக்கும் போது தான் அவனுடைய அம்மா வந்தவர்,

   “ஏண்டா உட்கார்ந்து சாப்பிட்டு போக மாட்டியா” என்று கேட்டார்.

  “நேரம் ஆயிடுச்சு மா” என்று சொல்ல,

அவள் தான், “இல்ல அத்த அவங்களுக்கு போன் வந்துருச்சு, இப்ப கார் வந்துரும்”, என்று சொல்லி அவர்கள் இருப்பதையும் பொருட்படுத்தாமல் உணவை அவனுக்கு ஊட்டி கொண்டிருந்தாள்,

   அவன் அப்பாவும், அம்மாவின் சத்தத்தை கேட்டு வெளியே வந்து பார்க்க இவள் ஊட்டிக் கொண்டிருப்பதை தான் அவரும் பார்த்தார், சிரித்து விட்டு தள்ளியே நின்றவர்,

    அவன் கிளம்பவும், அவளை பார்த்து “நீ சாப்பிடு மா” என்று சொல்லி விட்டு அவர்கள் இருவரும் தங்கள் வீடு நோக்கி சென்றனர்.

      கதிரவனின் அம்மாவிடம் சொல்ல தொடங்கி இருந்தார், “நம்ம கூட அவனை இப்படி பார்த்துக் கொண்டது கிடையாது, அவன் வேலைன்னு சொல்லி சாப்பிட டைம் இல்ல, நான் பார்த்துக்கிறேன் சொன்னா நம்ம ரெண்டு பேரும் சாப்பிடுன்னு கட்டாயப்படுத்தவும் முடியாது, இப்படி நீ உருட்டி கொடுக்க முடியாது, அதே அந்த பொண்ணு அவனை கட்டாயப்படுத்தி சாப்பிட்ட வச்சி தான் அனுப்புது. அதுவரைக்கும் சந்தோஷம் தான்,  நமக்கு அவனை நல்ல பாத்துக்கிட்டா போதாதா”, என்று சொன்னார்.

“பரவால்ல அவளும் இவன் வேலையை புரிஞ்சுகிட்டா, அதுவரைக்கும் சந்தோஷம் தான்” என்று அவரும் சொல்லிக் கொண்டிருந்தார்.

   இவளுக்கு உடல்நிலை சரியில்லை என்றாலும்,  அவன் இழுத்து போட்டு செய்ய தயங்குவதெல்லாம் இல்லை, அவனால் முடிந்த அளவு அவளுக்கு செய்து கொடுத்துவிட்டு தான் அவனுடைய வேலை கவனிக்க செல்வான்.

   அவனுக்கும் அதிகமான நேரம் இருக்காது என்பது அவளுக்கும் தெரிந்தது தான், அது போலவே அவனுடைய வேலையை பொறுத்து அவன் ஆரோக்கியத்தை பேணுவதிலும் இவளை மிஞ்ச முடியாது என்பது போல தான் இருந்தது.

    நீண்ட நாட்களுக்கு பிறகு இருவரும் ஒரே நேரத்தில் வேலைக்கு கிளம்ப, கதவை பூட்டிக்கொண்டு இருவரும் லிப்டில் ஏறும் போது அவன் அவளை பார்த்து சிரித்துக் கொண்டே இருந்தான்.

   இவளோ “என்ன சிரிப்பு” என்றாள்.

   அவனும் “சும்மா” என்றவன்,

    “ஒரு அஞ்சு மாசத்துக்கு முன்னாடி, இதே மாதிரி ரெண்டு பேரும் பார்க்கும் போது எப்படி இருந்துச்சு” என்றான்.

    “ஆறு வருஷத்துக்கு முன்னாடி நடந்தது தான் நினைவு வந்துச்சு”, என்றாள்.

   “அப்போ அதெல்லாம் நினைவு வந்துச்சுன்னா, இப்ப என்ன நினைவு வருது”, என்று கேட்டான்.

  “கீழே உங்க கார் வெயிட் பண்ணுது, அது தான் ஞாபகம் வருது கிளம்புங்க என்று சொன்னவள், உதடு குவித்து ரகசிய முத்தம் ஒன்று தந்து விட்டு அவன் கைக்கு எட்டாத தூரத்தில் வந்து நின்று பை என்றாள்.

    அவனோ சிரித்துக் கொண்டே காரை நோக்கி நடந்து சென்றான்.

      இவளோ எப்போதும் போல நடந்து ராதா நிற்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தாள்.

    ராதாவிற்கு இன்னும் விடுப்பு முடியாததால் அவள் வீட்டில் இருக்க, இவள் மட்டுமே கேபில் ஏறி கிளம்பினாள்.

    அன்று மதியம் போல் கதிரவனிடம் இருந்து அழைப்பு வந்தது, “ஒரு வாரத்துக்கு கொஞ்சம் ஒர்க் டைட்டா இருக்கும் டா, திடீர்னு ஏதோ சென்ட்ரல் மினிஸ்டர் வர்றார்னு, அங்கங்க செக்கிங் வச்சுட்டாங்க, மீட்டிங் அரேஞ்ச் பண்ற இடத்துக்கு செக்யூரிட்டி போட சொல்லி இருக்காங்க, சோ எல்லாம் எங்க டிபார்ட்மெண்ட் தலையில தான் விழும், சோ நான் வரதுக்கு கொஞ்சம் லேட் ஆகும், வரும் போது நான் பாத்துக்குறேன், என்னை பத்தி யோசிக்காத, நீ உன் வேலையை பாரு, ஒழுங்கா சாப்பிடு” என்று சொன்னான்.

     “நான் பாத்துக்குறேன், நீங்க ஹெல்த்த பாத்துக்கோங்க”, என்று சொல்லிவிட்டு அதற்கு மேல் அவனிடம் அவள் கேள்வி கேட்கவும் இல்லை,

     அது போலவே மத்திய அமைச்சரின் வருகையை ஒட்டி அந்த ஒரு வாரமும் அவனுக்கு வேலை அதிகமாக தான் இருந்தது,