19

  திருமண பத்திரிகைகள் அடித்து அனைவருக்கும் விநியோகம் செய்யப்பட்டு கொண்டிருந்தது.

     இரு வீட்டிலும் சிறு சிறு புலம்பல்கள் இருந்தாலும், சம்பந்தப்பட்டவர்கள் இருவரும் கண்டு கொள்ளவே இல்லை.

ஒரு நாள் வீட்டில் யாரும் இல்லாத சமயம் ராதா குழந்தையை தூங்க வைத்து விட்டு ஹாலில் வந்து அமர்ந்தவள், “ஏன்டி வீட்டில் ஆள் ஆளுக்கு புலம்புறாங்களே, எதுவும் சொல்லாமல் நீ பேசாம உட்கார்ந்திருக்க” என்று கேட்டாள்.

    அவளோ “இவங்களை யாரு இவ்வளவு கஷ்டப்பட்டு மேரேஜ் நடத்த சொன்னா,  ரெண்டு பேர் வீட்லயும் ஏன் பிரச்சனை வருது, என் முறைப்படி பண்ணு, உன் முறைப்படி பண்ணு ன்னு, போட்ட என்ன,  ரெண்டு பேரும் வேற வேற மதமா, இல்ல இல்ல, ஒரே மதம் தானே, **  மட்டும் தானே வேற, அப்புறம் என்ன, எந்த முறைப்படி பண்ணினா என்ன, ஒரு முறைப்படி பண்ண வேண்டியது தானே,  அதை விட்டுட்டு நாங்க இப்படித்தான் பண்ணுவோம், நாங்க இப்படித்தான் பண்ணுவோம் ன்னு ஏன் சண்டை போடணும், அதுக்கு தான் அவங்க அப்படி முடிவு பண்ணிட்டாங்க, ரெண்டு பேர் பேமிலியும், இப்ப என்ன பண்ண முடியும்”, என்றாள்.

    “ஆனாலும் எஸ் பி பயங்கரமா முடிவெடுக்காருடி, பட்டு பட்டுன்னு யாரைப் பற்றி யோசிக்க மாட்டார் போல,  அவர் யோசிப்பது தான் கரெக்ட்டுன்னு முடிவு பண்ணிட்டு போயிடறாரு இல்ல”, என்றாள்.

      இவளோ “சரிதான அப்படி சொல்லப் போய் தானே, எல்லாரும் இப்ப அமைதியா இருக்காங்க, இல்லாட்டி இதுலயும் ஒரு பிரச்சனை வந்திருக்கும் இல்ல, கோயில்ல வச்சு கல்யாணம், கோவிலிலேயே ரெஜிஸ்டர் பண்ணிடறாங்க, மண்டபத்துல  ரிசப்ஷன் மாதிரி அவ்வளவு தான்,  ஒரே ரிசப்ஷன் தான்,  ரெண்டு பேமிலில உள்ளவங்களும் வந்துட்டு போக சொல்லுங்க அவ்வளவுதான்” என்று சொன்னாள்.

  “அடியே நீயும் அந்த எஸ் பி மாறியே பேச ஆரம்பிச்சுட்டடி”, என்று சொன்னாள்.

    “நான் வேணா, போன் போட்டு தரேன், நீ வேணும்னா பேசி பாரேன் அவர்கிட்ட”, என்றாள்.

   ” நான் பேசமாட்டேன் சாமி”, என்று சொன்னாள்.

   “பின்ன என்ன அவ்வளவு தான் விடு, தன்னால சரியாவாங்க, விடு விடு இவங்க சம்மதிச்சு இப்ப பண்றதும், நாங்களா போய் கோயிலில் பண்ணிக்கிறதுக்கும் வித்தியாசம் இருக்குல,  அதனால அதை வச்சு சந்தோஷப்படுவோம், ரெண்டு வீட்லயும் சம்மதிச்சாங்க, அப்படி ன்னு நானே சந்தோஷப்பட்டு இருக்கேன் விடு”, என்று சொன்னாள் யாழினி,

    ராதாவோ “ஏண்டி ரெண்டு வீட்டிலும் சம்மதிசாங்க இல்ல, கொஞ்சம் கிராண்டா மண்டபத்தில் வைத்து ஒவ்வொரு சடங்கையும் முறைப்படி செய்து, சம்பிரதாயம் முறைப்படி பண்ணுனா அது அழகா இருக்கும் இல்ல”, என்று சொன்னாள்.

    “அழகாத்தான் இருக்கும், ஆனா ரெண்டு பெருசுகளும் விட்டுக் கொடுக்க மாட்டேங்குது இல்ல, அம்மா எங்க முறைப்படி தான் பண்ணனும்ங்கறாங்க, அவங்க அம்மா எங்க முறைப்படி தான் பண்ணனும்றாங்க, சரி நீங்க ரெண்டு பேரும் உங்க உங்க முறைப்படி யாருக்கும் பண்ணி வையுங்க, அப்படின்னு சொல்லிட்டு தான், இப்போ நாங்க எங்க முறைப்படி பண்ணிக்கிறோம், அவ்வளவுதான்”, என்றாள்.

     “அது என்னடி உங்க ஆளு, கல்யாணத்துக்கு பெரியவங்க எல்லாம் சேர்ந்து டைம் எல்லாம் குறிச்சுட்டு வரும் போது மத்த விஷயங்களுக்கெல்லாம் டைம் குறிச்சா, இவர் என்னமோ இல்ல நாங்க கல்யாணம் முடிஞ்ச மறுநாள் பாண்டிச்சேரி கிளம்புறோம், அப்படின்னு சொல்லிட்டு இருக்காரு, மறுவீடு இருக்கு, விருந்து இருக்கு”, என்றாள்.

      “அடுத்தடுத்த வீட்ல உக்காந்துட்டு, மறு வீடு வைக்க போறீங்களா, நல்ல ஆட்கள் தான்பா நீங்க எல்லாம்”, என்றாள்.

     “ஆனாலும் இருக்கீங்க பாருங்க, ரெண்டு பேரும் ஜாடிக்கேத்த மூடியா, அவர் என்ன சொன்னாலும் நீ ஆமாம் சாமி போடுற, அதுக்கு ஒரு காரணமும் நீயே கண்டுபிடிச்சுகிற”, என்று சொன்னாள்.

     யாழினியோ அவளையே பார்த்துக் கொண்டிருந்தவள், “வேற என்ன தான் பண்ண சொல்ற, ரெண்டு வீட்டைலையும் சண்டை போட முடியாது, அவங்க முறைப்படி போனா, இவங்க கோவிச்சுக்குவாங்க, இவங்க முறைப்படி  போனா அவங்க கோவிச்சுக்குவாங்க, இதுக்கு நாங்க எங்க இஷ்டப்படி போய்ட்டா பிரச்சினையே வராது இல்ல”,என்று சொன்னாள்.

    “அது சரி நடத்துங்க நடத்துங்க” என்று சொல்லிவிட்டு “சரி இதெல்லாம் உங்க இஷ்டப்படி பண்றீங்களே, அப்போ” என்றவள் நிறுத்தவும்,

    “அப்போ என்ன”, என்றாள் யாழினி,

     “இல்ல நான் வேற ஒன்னு கேட்க வந்தேன், நான் ஏதாவது தப்பா கேட்டு, நீ அதை போய் எஸ். பி ட்ட சொல்லிக் கொடுத்துட்டேனா,  எஸ்பி வேற அதுக்கப்புறம் என்ன பார்த்தா, எதுவும் கேட்டுற கூடாது, அதனால வேண்டாம், நான் ஸ்டாப் பண்ணிக்கிறேன்”, என்று சொன்னாள்.

இவளோ சிரித்துக் கொண்டே, “முதல்ல அவரை எஸ் பி யா பாக்குறத நிப்பாட்டுங்க, இந்த வீட்டு மாப்பிள்ளையா பாருங்க, என்னோட ஹஸ்பண்ட் ஆ பாருங்க, அப்படின்னா உங்களுக்கு இந்த மாதிரி அவர்கிட்ட எப்படி பேசுறது, எப்படி சொல்றது அப்படி எல்லாம் தோணாது, சரியா, ஏன் அவரோட பதவியை வச்சு பாக்குறீங்க, என்னோட சரிபாதியா ஏன் உங்களுக்கு பார்க்க தோனல”, என்றாள்.

    “அப்படி ஒன்று இருக்கோ” என்று ராதா கேட்க,

    “அடியே உன்ன கொன்னுடுவேன், பாத்துக்கோ”, என்றாள்.

   “ஆமாடி நீ  கொலையும் பண்ணுவ, எல்லாம் பண்ணுவ, ஏன்னா நீ தான்”, என்று சொல்ல வந்தவள்,

“சாரி சாரி நிப்பாட்டிட்டேன், நிப்பாட்டிட்டேன், நீ தான் அவரோட சரிபாதியா ஆகப் போற இல்ல அந்த தைரியத்துல சரியா, அப்படியே மாத்திட்டேன்”, என்று ராதா சொன்னாள்.

   “பார்றா உடனே ஒத்துக்கிட்டா” என்று சொல்லி சிரித்துக் கொண்டிருந்தாள்.

    இன்னும் இரண்டு நாட்களில் கல்யாணம் எனும் போது தான், இவளும் அலுவலகத்திற்கு விடுமுறை எடுத்துக் கொண்டாள்.

     ராதா பார்லர் ஆட்களை வர வைத்து இரண்டு கைகளிலும் மெஹந்தி வைத்து விட, ராதாவும் அவளையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

   அதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு  தான்  பார்லருக்கு கூட்டி சென்று பேஷியல் எல்லாம் செய்து விட்டிருக்க, ஏற்கனவே அழகாக தெரிபவள் இன்னும் அழகாக தெரிந்தாள்.

    லீவு எடுத்துவிட்டு வீட்டில் இருந்த பிறகு, அவளை லேசாக கூட பார்க்க முடியாத கதிரவன், அன்று அலுவலகம் முடிந்து வந்து உடையை மாற்றிக் கொண்டவன்,

   நேராக யாழினி வீட்டு கதவை தட்டிக் கொண்டிருந்தான்,

      கூடவே வந்த கதிரவன் அக்கா, “ஏன்டா மானத்தை வாங்குற”, என்றாள்.

     “என்ன மானத்தை வாங்குகுறேன்,  என் பொண்டாட்டிய  நான் பாக்க போறேன்,  நீ உன் புருஷனை பார்க்கவே மாட்டயா”, என்றான்.

“டேய் கல்யாணத்துக்கு முன்னாடி, நான் என்ன பாத்துகிட்டா டா இருந்தேன்”, என்று கேட்டாள்.

“அது உன் பாடு, உன்ன பார்க்க விடலை என்றால், அதற்கு நான் என்ன பண்ணுவேன்”, என்று சொன்னான்.

     “அது சரி தான் டா” என்று சொல்லவும், ராதா வந்து கதவை திறந்தவள், இவர்கள் பேசுவதை கேட்டுக் கொண்டே தான் கதவை திறந்தாள்

சிரித்த வண்ணம் கதவை திறக்க,  அவனும் “ஏன் சிரிக்கிறீங்க” என்று கேட்டான்.

“இல்ல இப்பதான்  ஒரு வாரத்துக்கு முன்னாடி, உங்க ஆளு எனக்கு கிளாஸ் எடுத்துச்சு, அதை கேட்கிற மாதிரியே இருந்தது, அது எப்படி ரெண்டு பேரும் சொல்லி வச்சு பேசுவீங்களா, இல்ல ரெண்டு பேரோட மைண்ட் செட் ஒன்னு போல இருக்கா எப்படி”, என்று கேட்டாள்.

அவனும் சிரித்துக்கொண்டே “அதெல்லாம் நாங்க ஃபர்ஸ்ட் டியூஷன் வச்சி படிச்சிக்கிட்டோம், நீங்களும் தனியா டியூஷன் வச்சு படிச்சுக்கோங்க”, என்று சொல்லிக் கொண்டே அவளை பார்க்க வர,

அவளோ கையில் மெஹந்தி வைத்து உட்கார்த்திருந்தாள். அவனும் “ஆஹா கைல மெஹந்தி எல்லாம் வச்சிருக்கீங்க, இப்போ உங்ககிட்ட வம்பு பண்ணா ஒண்ணுமே பண்ண முடியாது போலயே”, என்று சொல்ல இவளோ மிரட்டி கொண்டிருந்தாள்.

     அதேநேரம் நந்தனும் வந்து சேர,  வீட்டில் உள்ள பெரியவர்கள் அவனும் அவன் அக்காவும் வந்திருக்க “காபி கொண்டு வரட்டுமா” என்று கேட்டனர்.

கதிர்வனின் அக்காவோ, “இப்ப தான் ஆன்ட்டி குடிச்சேன், உனக்கு வேணுமாடா, இன்னொரு கப்” என்று கேட்டாள்.,

“இல்ல  வேண்டாம்” என்று சொன்னவன்.

    அவளிடம் ஏதோ மெதுவாக பேசிக் கொண்டிருந்தான்.

அவளும் அவனுக்கு தகுந்தார் போல, மெதுவாக பதில் சொல்ல கதிர்வனின் அக்கா “எப்படித்தான் இப்படி மெதுவா பேசுறாங்களோ, எனக்கும் தெரியல, நானும் பேசி தான் பார்த்தேன், வரமாட்டேங்குது, தன்னால சவுண்டு கூடுது”, என்று சொல்லிக் கொண்டிருந்தார்.