“ஆமா” என்றவன், “ஆறு வருஷம் நாங்க ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக்கிட்டதே கிடையாது, அவ காலேஜ் ல அஞ்சு நாள் பங்ஷன்ல பார்த்தது தான், ஆனால் எனக்கு அவ்வளவு பிடிக்கும் அவளை, அவளுக்கும் என்ன அவ்வளவு பிடிக்கும், ஆனால் ரெண்டு பேரும் சொல்லிக்கிட்டது கூட கிடையாது, ஏன் இந்த நிமிஷம் வரைக்கும் கூட நாங்க ரெண்டு பேரும் சொல்லிக் கொண்டது கிடையாது, ஆனால் என்னைத் தவிர அவளால வேற யாரையும் கல்யாணம் பண்ணிக்க முடியாது, அவளைத் தவிர இன்னொருத்தி என் லைஃப்ல வரவே முடியாது”, என்றான்.
இரண்டு குடும்பத்தினரும் அதிர்ச்சியில் உறைந்திருக்க யாழினி குனிந்த தலை நிமிராமல் கதிரவனை பார்த்தே நின்றாள், கதிரும் யாழினியை பார்த்தே தான் நின்றான்,
மற்றவர் யாரையும் அவன் பார்க்கவும் இல்லை, வேறு எதுவும் சொல்லவும் இல்லை, யாழினி கையோ கதிரின் கைப்பிடிக்குள் இருந்தது.
இரு குடும்பத்தில் முதலில் அதிர்ச்சியில் இருந்து மீண்டது, நந்தனும், ராதாவும் தான். அவர்கள் பேசலாம் என்று அவர்களுக்குள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே,
யாழினி அம்மா தான் வேகமாக சென்று யாழினி கையை பிடித்து இழுக்க முயற்சி செய்தார். ஆனால் அவரிடம் இருந்து வெகு எளிதாக அவளை பிரித்து தள்ளி நிறுத்தியவன், “என்ன விஷயம் ஆன்ட்டி, எதுவா இருந்தாலும் என்கிட்ட பேசுங்க”, என்றான்.
“அவ என் பொண்ணு தம்பி, அவ கிட்ட நான் பேசுவேன்” என்று சொன்னார்.
“தாராளமா பேசுங்க”, என்று சொல்லவும்,
யாழினி அம்மாவோ, “என்னடி இது என்ன நடக்குது” என்று கேட்டார்.
அவளோ “அவங்க சொன்னாங்களே, ஆறு வருஷ லவ், நான் காலேஜ் செகண்ட் இயர் படிக்கும் போதுல இருந்தே, நான் அவங்களை பார்த்தது காலேஜில் வைத்து தான், ஒரு அஞ்சு நாள் தான், அதுக்கப்புறம் நான் அவங்களை பார்த்ததில்லை, அதுக்கப்புறம் நான் அவங்களை பார்த்தது இங்க, அவங்க வீடு கிரகப்பிரவேசம் அப்ப தான்”, என்று சொல்லவும்,
“இதுக்கு பேரு லவ்வா” என்று கேட்டார்,
“நிச்சயமா, என்னால இவங்க இடத்தில் இன்னொருத்தரை நினைக்க கூட முடியாது, அப்போ அதுக்கு பேர் என்னம்மா”, என்றாள்.
அதே நேரம் சாராவும் யாழினியிடம் சண்டைக்கு வருவது போல பேச தொடங்கினாள், “நான் உன்கிட்ட ஜெர்மனியில் வைத்து என்னோட சீனியர், என்னோட லவ் அப்படின்னு நான் கதை சொல்லும் போது கூட நீ எதுவும் சொல்லலையே”, என்று கேட்டாள்.
இவளோ நிதானமாக அவளை திரும்பி பார்த்தவள், “என்னை பார்த்தா லூசு மாதிரி இருக்கா”, என்றாள்.
அவளோ அதிர்ச்சியாக இவளை பார்க்க “நான் யாரிடமும் சொல்லணும் ன்னு எனக்கு அவசியம் கிடையாது, என்னோட லவ் எனக்கு பிரீஷியஸ், நான் ஏன் அதை எல்லாருக்கும் கதை சொல்லணும், யாருக்கும் ஒளிபரப்பனும்னு அவசியம் கிடையாது, ஏன் என்னோட க்ளோஸ் ஃப்ரெண்ட் ராதா, அவ எங்க அண்ணன கல்யாணம் பண்ணி இருக்கா, நான் அவகிட்ட என்னைக்கு சொன்னேன் தெரியுமா, ஜஸ்ட் இப்ப தான் அவ வளைகாப்புக்கு முன்னாடி சொன்னேன், ஆனா அவ நம்பவே இல்லை, நான் அவளை ஏமாத்துறேன் நினைச்சிட்டு இருந்தா”, என்றவள்.
“என்னோட கேரக்டர் அதுதான், நான் யாரிடமும் எந்த விஷயத்தையும் அவ்வளவு சீக்கிரத்தில் சொல்ல மாட்டேன், ஏன் எங்க அண்ணன் கூட இத்தனை வருஷத்துல நான் லவ் பண்ணி இருப்பேன் ன்னு நினைச்சு இருக்கவே மாட்டான், அதான் உண்மை,
நான் அந்த அஞ்சு நாள் தான் இவரை பார்த்தேன், அவரும் என்கிட்ட ப்ரொபோஸ் பண்ணல, நானும் அவர்கிட்ட ப்ரொபோஸ் பண்ணல, ரெண்டு பேரும் இப்ப வரைக்கும் ப்ரொபோஸ் பண்ணிக்கல, ஆனா எனக்கு தெரியும், அவருக்கு என்ன பிடிக்கும், எனக்கு அவரை பிடிக்கும், இதை நாங்க வெளியே சொல்லணும்னு அவசியம் கிடையாது”, என்று சொன்னாள்.
யாழினி அம்மாவோ, “எவ்வளவு தைரியமா சொல்றடி, நான் இந்த கல்யாணத்துக்கு சம்மதிக்க மாட்டேன், ஒழுங்கா வீட்டுக்குள்ள வா” என்று கையை பிடித்து இழுக்க போக,
அவள் கையை நகர்த்திக் கொள்ளவும், அதுவரை அமைதியாக இருந்த கதிரவன் பட் என்று அவள் தோளில் கையை போட்டு தன்னோடு சேர்த்து பிடித்துக் கொண்டவன்,
“நீங்க எல்லாம் சம்மதிச்சீங்கன்னா, அதாவது எங்க வீட்டுக்கும் சேர்த்து தான் சொல்றேன், எங்க வீட்லயும் உங்க வீட்டிலயும் சம்மதிச்சீங்கன்னா, முறைப்படி கல்யாணத்தை பேசி முடிப்போம், இல்லையா சொல்லுங்க, நாங்க கோயில்ல வச்சி கல்யாணம் பண்ணிக்கிறோம், நாங்க ஒன்னும் டீன் ஏஜ் பிள்ளைங்க கிடையாது”,என்றான்.
அதே நேரம் கதிரவனின் அம்மா கோபப்பட்டு கதிரவனிடம் “இப்படி ஒரு விஷயத்தை நான் எதிர்பார்க்கல, இந்த கல்யாணத்துக்கு நான் சம்மதிக்கவே மாட்டேன்”, என்று சொன்னார்.
“அது உங்க இஷ்டம், நான் எதுவும் சொல்ல போறது இல்ல, நீங்க சம்மதிக்கல என்றால், நான் ரிஜிஸ்டர் ஆபீஸ்ல கல்யாணம் பண்ண போறேன் அவ்வளவு தான்”, என்று சொன்னான்.
யாழினி அம்மாவோ “பாருடி இப்படி ஒரு லைஃப் தேவையா, உனக்கு நாங்க பார்த்து வச்சோம் னா”, என்று சொல்ல தொடங்கவும்,
யாழினி அவள் அம்மாவை திரும்பி பார்த்தவள், “நந்தனோட லவ் மட்டும் சப்போர்ட் பண்ணுனீங்க இல்ல, ராதா வீட்டில் பொண்ணு கேட்க போனது நீங்க தானே, முதல்ல பெரியம்மாவை பேசி சம்மதிக்க வச்சீங்க, இப்ப மட்டும் மாத்தி பேசுறீங்க, பையன் லவ் பண்ணினா சரி, பொண்ணு லவ் பண்ணினா தப்பா, எனக்கு இவரை தான் புடிச்சிருக்கு, எனக்கு பிடிச்ச லைஃப் தான் என்னால வாழ முடியும், உங்க ஆசைக்காக யாருன்னு தெரியாதவங்களோட என் லைஃபை ஷேர் பண்ண முடியாது”, என்றாள்.
“ஓஹோ, நான் உங்க அப்பாக்கு போன் பண்ணி சொல்றேன்”, என்றார்.
“சொல்லுங்க, எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல”, என்று சொன்னாள்.
“படிச்சிருக்கோம், வேலை பார்க்கிற ன்னு திமிரு” என்று சொன்னார்.
“இல்ல என்னோட லவ் உண்மையானது, அப்படிங்கிற தைரியம் நீங்க என்ன வேணாலும் முடிவு பண்ணுங்க, நான் என்னோட முடிவுல இருந்து மாற மாட்டேன்”, என்று சொன்னாள்.
நந்தனும் ராதாவும் அவளை அதிர்ச்சியாக பார்த்துக் கொண்டிருந்தனர்.,
அதே நேரம் கதிரவன் அவள் தோளை பிடித்த படியே இருந்தவன், “ஓகே இரண்டு வீட்டிலும் முடிவு சொல்லிட்டீங்க, உங்களால சம்மதிக்க முடியாது ன்னு சொன்னீங்க, ரொம்ப தேங்க்ஸ்”, என்று சொன்னவன்,
அவளிடம் “உன்னோட ஆபீஸ் லேப்டாப், போன் இது தவிர வேற எதுவும் எடுக்காத வா போலாம்”, என்றான்.
அவள் திரும்பி அவனை பார்த்தபடி, ஒட்டி நின்று கொண்டு அவன் சட்டையை மெதுவாக இழுக்க, அவன் குனிந்து என்னவென்று கேட்டான்.
இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த ராதா நந்தனிடம் “லேசா செய்கை காமிச்ச உடனே புரிஞ்சுக்கிறார், அப்படி ஒரு லவ், நம்மளும் தான் லவ் பண்ணினோம், சொன்னா என்னைக்காவது புரிஞ்சு இருக்கீங்களா, ஃபர்ஸ்ட் ஒரு நாள் சந்தேகமா இருக்குன்னு சொல்லும் போது இல்லவே இல்லைன்னு சொல்லிட்டீங்க, அப்புறம் அவளே வந்து சொல்லும் போது இருக்க வாய்ப்பே இல்ல, அவ ஏமாத்துறா ன்னு சொன்னீங்க, இப்ப பாருங்க”, என்று சொன்னாள்.
“இப்ப நீ அவளுக்கு சப்போர்ட் பண்ணி பேசுறீயா, இல்ல அவளை எதிர்த்து நிற்கிறயா”, என்று கேட்டான்.
“எதிர்த்து எங்க நிக்க, என்னைய நாளைக்கு தூக்கிப்போட்டு மிதிக்க வா” என்றாள்.
“அந்த பயம் இருக்குல்ல, அப்ப பேசாம இரு” என்றான்.
“என்ன” என்று கேட்டான்.
“நான் இப்ப லேப்டாப் போன் எடுக்க உள்ள போனா, இவங்க பிடித்து வைத்துக் கொண்டாங்கன்னா” என்று மெதுவாக அவனிடம் ரகசியமாக கேட்டாள்.
சுற்றி இருந்த அனைவரும் என்ன பேசுகிறார்கள், என்பது தெரியாமல் அமைதியாக பார்த்திருந்தனர். ஆனால் எந்த சத்தமும் கேட்கவில்லை.
இவனோ போலீஸிடம் “ரெஜிஸ்டர் ஆபீஸ்ல கொஞ்சம் விசாரிச்சு சொல்ல முடியுமா, நாளைக்கே கூட மேரேஜ் வைக்க முடியுமான்னு கேளுங்க”, என்று சொன்னான்.
“அதுக்கு என்ன சார் கேட்கலாம், அப்படியே வடபழனி முருகன் கோயிலையும் விசாரிச்சிடலாம் சார்”, என்று சொன்னார்கள்.
இரு வீட்டினரும் அதிர்ந்து போய் பார்த்துக் கொண்டிருந்தனர்.
அவன் பதவிக்கு அவனால் இந்த நிமிடமே திருமணம் செய்ய முடியும் என்பதும் அனைவரும் அறிந்தது தான்.
கதிரவனின் அக்கா தான் “டேய் கதிர் அவசரப்படாத, பொறு, நான் அம்மாட்ட பேசுறேன்” என்று சொன்னவள்,
அவள் அப்பாவிடம் திரும்பி, “நீங்க என்னப்பா சொல்றீங்க” என்று கேட்டாள்.
“நம்ம அட்வைஸ் பண்ற லெவல்ல உன் தம்பி இல்ல, அவனுக்கு எல்லா விஷயமும் தெரியும், அப்படி இருக்கும் போது அவனுக்கு அட்வைஸ் பண்ணவும், அவனை இப்படி பண்ணாத ன்னு சொல்லுறதுக்கோ அவசியம் இல்லை, அவனுக்கு தெரிஞ்ச விவரத்தோட கம்பேர் பண்ணும் போது நமக்கு தெரிஞ்சது கம்மி தான் மா, அவன் இஷ்டம் நான் இதுல தலையிட போறது இல்ல, ஆனா உங்க அம்மா போகலைன்னா, நானும் போக முடியாது அவ்வளவு தான்”, என்று சொன்னவர் அமைதியாகி விட்டார்.
அதற்குள் யாழினி அம்மா அவள் அப்பாவிற்கு ஃபோன் செய்து சொல்லி இருந்தார்.
அவரோ கிளம்பி வருவதாக சொன்னார்.
யாழினி அம்மாவோ “உங்க அப்பா கிளம்பி வந்துட்டு இருக்காரு இரு” என்றார்.