மதிய உணவை அங்கே எடுத்துக் கொள்ளலாம் என்று சொல்லிக் கொண்டிருந்தவன், பீச்சில் அமர்ந்து அவளோடு கைகோர்த்து கதை பேசியபடி தன் எண்ணங்கள், தன்னுடைய படிப்பு, வேலை சமயம் தான் நினைத்தது, என அவ்வளவு விஷயங்களையும் அவளோடு பகிர்ந்து கொண்டதோடு மட்டுமின்றி,
இனி திருமணம் என்று வரும் போது எப்படி இரு வீட்டினரையும் சம்மதிக்க வைக்க முயற்சி செய்யலாம் என்பது பற்றியும் பேசிக்கொண்டிருந்தான்.
பின்பு “இரண்டு வீட்டிலும் சம்மதிக்கவில்லை என்றால்,ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணிடலாம், எதை பத்தியும் யோசிக்க வேண்டாம், கோயில்ல தாலி கட்டிக்கலாம்”, என்று சொன்னான்.
அவளோ அவனேயே பார்த்துக் கொண்டே இருந்தாள்.,
“என்ன” என்றான்.
“இல்ல நிஜமாகவே சொல்றீங்களா, இப்படித்தான் நடக்குமா”, என்று கேட்டாள்.
“பார்ப்போம் யாராவது ஒரு வீட்ல சம்மதித்தால் கூட போதும்னு தான் நினைக்கிறேன், ஆனா ரெண்டு பேர் வீட்லயுமே பிரச்சினை வருமோ ன்னு தோணுது எனக்கு, பார்ப்போம், இனிமேல் தான் தெரியும்”, என்று சொன்னவன்.
“ஆமா உங்க வீட்ல பிரச்சனை வந்துச்சுன்னா, என்ன பண்ணுவ”, என்று கேட்டான்.
“என்ன பண்ணுவேன், பிடிவாதம் பிடிச்சு கல்யாணம் பண்ண பார்ப்பேன், அதையும் மீறி சம்மதிக்க மாட்டேன் னா, என்ன நீங்க சொன்ன மாதிரி வந்துடுறேன்”, என்று சொல்லிக் கொண்டிருந்தாள்.
பீச்சில் சற்று நேரம் கால்நனைத்து, ஓடி விளையாடி விட்டு மதிய உணவை எடுத்துக் கொண்டனர்,
பின்பு இவள் “இப்போதே கிளம்பலாமா” என்று கேட்டாள்.
அவனும் “இப்ப வேண்டாம் கொஞ்சம் பொறு, ஒரு நாலு மணிக்கு மேல கிளம்புவோம்”, என்று சொன்னவன்.
அங்குள்ள ஒரு மரத்தில் சாய்ந்தமர இவளோ அவன் அருகில் அமர்ந்தவள், அவன் தோளில் சாய்ந்து அமர்ந்திருந்தாள்.
அப்போது தான் அவன் அவளிடம் கேட்டான், “என்னை நம்பி இவ்வளவு தூரம் வந்திருக்கியே, நான் உன்ன ஸ்வாகா பண்ணிட்டா என்ன பண்ணுவ”, என்று கேட்டான்.
இவ்ளோ சிரித்துக் கொண்டே நீங்க அப்படி எல்லாம் பண்ண மாட்டீங்க, எனக்கு ப்ராமிஸ் பண்ணி இருக்கீங்க, மறந்துடாதீங்க”, என்றவள், “நைட் போன் பண்ணி ஏதோ சொல்லனும் ன்னு சொன்னீயே ன்னு ஞாபக படுத்துங்க, நான் ஒரு விஷயம் சொல்லுறேன்”, என்றாள்.
“அப்படி என்ன விஷயம்” என்றவன், “ப்ராமிஸ் வேற வாங்கிட்ட, இல்லாட்டி இவ்வளவு அழகான பீச் ரெசார்ட் பாரேன், என்ன அழகா இருக்கு, ரூம்ஸ் எல்லாம் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம்”,என்றான்.
“இங்க எங்க ரூம் இருக்கு”, என்று திரும்பி பார்த்தாள்.
“அங்க பாரு தனித்தனியா குடில் இருக்கா, ஒவ்வொரு குடிலும் ஒவ்வொரு விதத்துல அழகா இருக்கும்”, என்று சொல்லிக் கொண்டிருந்தான்.
“வாவ் அப்படியா” என்றாள்.
“என்ன அப்படியா ன்னு இவ்வளவு ஆச்சரியம், ஒன்னு பண்ணுவோமா வரியா போய் பாத்துட்டு வருவோமா”, என்று கேட்டான்.
“கொன்னுருவேன் இப்ப தான் ஸ்வாகா பண்ணிட்டா என்ன பண்ணுவ ன்னு கேட்டுட்டு வர்றீயா போவோமாவா”, என்று திட்டிக் கொண்டிருந்தாள்.
“சரி நீங்க சொன்னீங்களே, வீட்ல சம்மதிக்காட்டி நீங்க என்ன பண்ணுவீங்க, உங்க வீட்ல இப்பவே பிரச்சினை ஆரம்பிச்சிருச்சு, எங்க வீட்ல அடுத்த வாரம் பிரச்சினை ஆரம்பிக்கும், என்ன பண்ணலாம்”, என்று கேட்டாள்.
அவனும் “பார்ப்போம் பிரச்சனை எந்த லெவலுக்கு வருதுன்னு தெரிஞ்சா தானே முடிவு பண்ண முடியும்” என்று சொல்லிக் கொண்டிருந்தான்.
இருவரும் மீண்டும் கடல் அலையில் கால் நனைத்து விளையாடி விட்டு கிளம்பும் போது, அவன் கேட்டான்.
“சரி இப்ப நான் எத்தனை தடவை உன்னை ஹக் பண்ணி, எத்தனை தடவை உன்னை கிஸ் பண்ணினேன் ன்னு சொல்லு”, என்று கேட்டான்.
“நான் பண்ணது வெளியே ஆடா தெரிஞ்சதா”, என்று கேட்டவன்.
“நெத்தில மட்டும் தான் முத்தம் கொடுப்பேன், நீ எப்ப பெர்மிஷன் கொடுக்குறீயோ அப்போ தான்”, என்று சொல்ல,
இவள் அவனை நிமிர்ந்து பார்த்து முறைக்க, “ஓகே கல்யாணத்துக்கு அப்புறம், கல்யாணத்துக்கு அப்புறம், ன்னு நானே சொல்லி இருக்கேன், கல்யாணத்துக்கு அப்புறம் தான், நான் உன்கிட்ட எந்த விதமா சொல்லணும்னு நினைச்சேனோ, அந்த விதமா சொல்லுவேன், அதுக்கு அப்புறம் தான் மத்ததெல்லாம்”, என்று சொன்னான்.
“புத்தி போறத பாரு, உங்கள மேனேஜ் பண்ணுறது ரொம்ப கஷ்டம் போல”, என்று சொல்லி அவன் கையில் கிள்ளியவள், அவன் கையைப் பிடித்த படியே நடந்து சென்றாள்.
அவன் வண்டி எடுத்துக்கொண்டு கிளம்பும் போது வேறு பக்கமாக செல்லவும், “ஏன் இந்த பக்கமா போறோம்” என்று கேட்டாள்.
“இந்த பக்கம் டிராபிக் இருக்காது, உனக்கு வண்டி ஓட்ட சொல்லி தரேன்னு சொன்னேன் இல்ல”, என்று சொன்னான்.
இவளோ “இல்லை இப்ப வேண்டாமே” என்றாள்.
“அதெல்லாம் கிடையாது, நீ ஓட்டுற” என்று சொன்னவன்.
ஆளில்லா இடத்திற்கு சென்ற பிறகு, அவளை வண்டியில் கட்டாயப்படுத்தி உட்கார வைத்தவன், பின்னாடி அமர்ந்து ஒழுங்கான பயிற்சியாளராக அவளுக்கு வண்டி ஓட்ட கற்றுக் கொடுக்க துவங்கினான்,
ஏற்கனவே ஸ்கூட்டி நன்றாக ஓட்டுபவள் என்பதாலும், ஓரளவுக்கு அவளால் பேலன்ஸ் பண்ண முடிந்ததாலும், எளிதாக வண்டி ஓட்ட கற்றுக் கொண்டாள்.
கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்குள்ளாக வண்டி ஓட்ட கற்றுக் கொண்டவள், “டைம் ஆகுது வாங்க போகலாம்”, என்று சொன்னாள்.
“அதெல்லாம் கிடையாது, நீ தான் இன்னைக்கு கொஞ்ச தூரம் ஓட்டுற, அதுக்கப்புறம் நான் ஓட்டுறேன்”, என்று சொன்னவன்.
ஆளில்லா இடத்தை தாண்டும் வரை, அவளிடம் சேட்டை செய்து, கிண்டலோடு அவளை சிவக்க வைத்தவன் அவளே ஓரிடத்தில் வண்டி நிறுத்தி, “நோ நான் ஓட்டவே மாட்டேன், நீங்க சரியே இல்லை, நல்ல பையனா இருப்பேன்னு ப்ராமிஸ் பண்ணிட்டு, கொஞ்சம் கொஞ்சமா உங்க ப்ராமிஸ் மீறுற மாதிரியே எனக்கு தோணுது, நீங்க ஓட்டுங்க”, என்று சொல்லி அவனை ஓட்ட வைத்தாள், இவள் பின்னால அமர்ந்து சென்னை நோக்கி அவர்கள் பயணம் தொடர்ந்தது.
அவர்கள் பிரச்சினை வீட்டில் இருந்து வரும் என்று எதிர்பார்க்க, பிரச்சனையோ வேறு ரூபத்தில் வந்து கொண்டிருந்தது.
ஏற்கனவே மழைக்காலம் நெருங்கிவிட்டது, என்பதை உணர்த்த அவ்வப்போது மழை பெய்து கொண்டிருந்தது, இருவரும் லேசான சாரலில் நனைந்தபடியே சென்னைக்குள் வந்து சேர்ந்தனர்.
பின்பு அவளை ஒரு இடத்தில் இறக்கி விட்டவன், “ஆட்டோ பிடிச்சு வீடு போய் சேரு , நான் வேலைய முடிச்சுட்டு சீக்கிரம் வந்துடுறேன்”, என்று சொல்லி ஹெல்மெட்டை வாங்கிக்கொண்டு ஆட்டோவில் ஏற்றி விட்டவன்,
ஆட்டோ டிரைவரிடம் நம்பர் கேட்டான்.
அவரும் “என்ன சார் நம்பிக்கை இல்லையா”, என்று கேட்டார்.
“எந்த ஏரியா” என்று கேட்டுக் கொண்டவன், ஆட்டோ டிரைவரின் நம்பரை வாங்கிக் கொண்டே அவளை ஏற்றி அனுப்பினான்.
ஆட்டோ டிரைவர் “சார் என்னமா போலீஸ் டிபார்ட்மெண்ட்டா”, என்று கேட்டார்.
“ஆமா”, என்றாள்.
“நினைச்சேன், பொண்டாட்டிய அனுப்பும் போது எல்லோரும் இது மாதிரி கேட்க மாட்டாங்க, சிலர் தான் கேட்டு அனுப்புவாங்க”, என்று சொல்லவும் சிரித்துக் கொண்டே வந்தாள்.
அவள் அப்பார்ட்மெண்டில் வந்து இறங்கிக் கொண்டாள் பின்பு வீட்டிற்கு சென்று அவளது வேலைகளை பார்த்துக் கொண்டிருந்தவள் ராதாவிடம் எப்படி விஷயத்தை சொல்வது என்பதை பற்றி யோசித்துக்கொண்டே அமர்ந்திருந்தாள்.