வரவேற்பு விழா முடியும் போது மணி மாலை ஏழை தொட்டிருந்தது. ரேணுவும், சங்கரியும் அன்றைக்கு ஒருநாள் மகிழின் வீட்டில் தங்குவதாக, தம் தம் வீட்டிற்கு அழைத்து தகவல் சொல்லியிருந்தனர்.
மதி விழா முடியும் முன்பே மற்றவர்களுக்கு கல்தா கொடுத்துவிட்டு வீட்டிற்கு கிளம்பியிருந்தாள். மல்லி கிட்ட தட்ட ஒன்றரை மணி நேரம் பயணம் செய்து தான் வீட்டை அடைய முடியும் என்றாலும், அவளை புதிய பொழுது போக்கு சங்க நிர்வாகியாய் தேர்ந்தெடுத்து இருந்தபடியால், அவளால் அங்கிருந்து கிளம்ப முடியவில்லை.
ஒருவழியாய் தேசிய கீதம் இசைத்து, அவர்கள் கல்லூரி வளாகத்தை விட்டு வெளி வரும் போது, மணி ஏழரை ஆகியிருந்தது. மல்லி என்னதான் இரு சக்கர ஓட்டி என்றாலும், பேருந்து நிறுத்தத்தில் வண்டியை போட்டு விட்டு, அங்கிருந்து ஊருக்குள் செல்ல பேருந்தில் தான் பயணிப்பாள்.
இப்போது கிளம்பினால் ஊருக்கு செல்ல ஒன்பது மணிக்கு மேல் ஆகிவிடும் என்பதோடு, இரவு ஒன்பது மணிக்கு மேல் அவர்கள் வீடு வரை செல்லும், சிற்றுந்து கிடையாது என்பதும் அவளுக்கு கூடுதல் கவலையை அளித்துக் கொண்டிருந்தது.
மல்லியின் முகத்தில் குழப்பத்தின் ரேகைகளை கண்ட மகிழ், “என்ன ஆச்சு மல்லி. ஏன் இப்படி டென்சனா இருக்க. பேசாம நீயும் இன்னைக்கு ஒரு நாள் என் வீட்ல தங்கிடு. அண்ணாவுக்கு போன் போட்டு சொல்லிடு.’’ என்றாள் சுலபமாய்.
சுந்தரேசனை அழைத்து சொல்ல வேண்டும் என்று எண்ணமே அவளுக்கு பதட்டத்தை கொடுத்தது. அவளின் கடைக்குட்டி கடந்த நான்கு நாட்களாக தான் இரவில் தாய் பாலை தவிர்த்து தன் பாட்டியிடம் உறங்கி வருகிறான்.
ஆக ஒருநாள் மட்டும் மகிழின் வீட்டில் தங்குவதற்கு மல்லிக்கு எந்த தயக்கமும் இல்லை. ஆனால் இந்த செய்தியை சுந்தரேசனிடம் எப்படி பகிர்வது என்ற தயக்கமே அவளை நிறுத்தி வைத்து கொண்டிருந்தது.
அவளும் மகிழின் வீட்டில் தங்கினால் மிகவும் குதூகலமாக இருக்கும் என்று உணர்ந்த சங்கரி, “ஏய்…! ப்ளீஸ் வாடி. சிக்கன் ரைஸ் வாங்கி சாப்பிட்டு குத்து பாட்டு போட்டு ஜாலியா மகிழ் வீட்ல டான்ஸ் ஆடலாம்.’’ என்று மல்லியை கரைக்க முயன்று கொண்டிருந்தாள்.
உடலை ஆட்டிப்படைத்த சோர்வு, மல்லியை சரியென்று தலையாட்ட வைத்தது. நேராக தன் மாமியாரின் எண்ணுக்கு அழைத்தவள், இன்று நடந்த விழாவில் தாமதமாகியதால், தோழி ஒருத்தியின் வீட்டில் தங்கிவிட்டு, மறுநாள் கல்லூரி முடிந்து வீட்டிற்கு வருவதாக சொன்னாள்.
பாரியும் உடனே மருமகளுக்கு சம்மதம் சொல்லிவிட, மல்லியின் முகம் அப்போது தான் தெளிவிற்கு வந்தது. பாரி அலைபேசியை மகிழிடம் கொடுக்க சொல்ல, மகிழிடம் பேசியதும் பாரிக்கு மல்லியின் பாதுகாப்பு குறித்து முழு திருப்தி பிறந்து விட்டது.
இவர்கள் பேசிவிட்டு அலைபேசியை வைத்ததும், நால்வரும் இருசக்கர வாகனத்தில் மகிழின் வீடு நோக்கி விரைந்தனர். வழியில் தங்களுக்கு தேவையான துரித உணவுகளையும் வாங்கிக் கொண்டனர்.
வீட்டிற்குள் நுழைந்ததும், மகிழின் இரவு உடையை அணிந்து கொண்டவர்கள், தொலைக்காட்சி பெட்டியில் பாடல்களை ஒலிக்க விட்டனர். மக்கள் செல்வனின், ‘மக்க கலங்குதப்பா மடி புடுச்சி இழுக்குதப்பா’ என்ற பாடல் கசிய துவங்க, நால்வரும் கும்மி அடிப்பதை போல குழுவாக சுற்றி வந்து அந்த ஒப்பாரி இசைக்கு ஏற்றவாறு நடனமாட துவங்கினர்.
பாடலில் சோகம் இழைந்து கொண்டிருக்க, சுற்றி சுற்றி ஆடிக் கொண்டிருந்தவர்கள் முகத்திலோ அப்படி ஒரு சிரிப்பு. முழங்கால்கள் நோகும் வரை, வெவ்வேறு பாடல்களுக்கு ஆடி முடித்தவர்கள், இறுதியாக மகிழ்வாய் சோர்ந்து வரவேற்பறையை சுற்றி அமர்ந்தார்கள்.
மகிழ் வாங்கி வந்திருந்த உணவுகளை சூடு செய்து கொண்டுவர, நால்வரும் திருப்தியாய் உண்டனர். உணவு வேளை முடிந்ததும், தன் சிறுவயது பள்ளிக் காலத்தில் நடத்த நகைச்சுவை நிகழ்வுகளை மல்லி மூவருக்கும் சொல்லிக் கொண்டிருந்தாள்.
அவள் வாயை திறந்தாலே மற்றவர்களுக்கு வயிற்று வலி நிச்சயம் என்ற அளவிற்கு மற்றவர்களை சிரிப்பில் தள்ளும் ஹாஸ்ய உணர்வு அவளுக்கு கை வந்த கலையாய் இருந்தது.
இப்படி அவர்கள் கும்மி அடித்துவிட்டு படுக்கும் போது, நேரம் இரவு பதினொன்றை நெருங்கி இருந்தது. சரி இனி உறங்குவோம் என்று அவர்கள், மின் விளக்கை அணைத்து விட்டு படுக்கையில் விழுந்த நேரம் மல்லியின் அலைபேசி அழைத்தது.
பின் இரவில் வந்த அழைப்பு என்றதால், மல்லி வேகமாக எழுந்து சென்று அந்த அழைப்பை ஏற்றாள். மற்ற மூவரும் கூட என்னவோ ஏதோவென்று எழுந்து அமர்ந்துவிட்டனர்.
“உங்க காலேஜ்கிட்ட இருக்கேன். இப்ப எங்க இருக்க நீ…?’’ என்ற சுந்தரின் கடின குரல் காதுகளை அடைய, மல்லி ஒருநொடி உறைந்து போனாள்.
“இந்நேரத்துல…?’’ என்று மல்லியின் வார்த்தைகள் தந்தி அடிக்க, “உன் பிரண்ட் முழிச்சிட்டு இருந்தா அவங்ககிட்ட போனை கொடு.’’ என்று வார்த்தைகளை கடித்து துப்பினான்.
“எங்க வீட்டுக்காரர்…’’ என்று தயங்கியபடியே மல்லி மகிழிடம் அலைபேசியை நீட்ட, “சொல்லுங்க அண்ணா…’’ என்று கேட்ட மகிழ், அதை தொடர்ந்து தன் வீட்டிற்கான வழியை சொல்லிவிட்டு, அலைபேசியை துண்டிக்க, மல்லி பேயறைந்தவள் போல அமர்ந்திருந்தாள்.
“ஏய் லூசு… பூரணன் தூங்காம அட்டகாசம் செஞ்சிட்டு இருக்கானாம். அதான் அண்ணா உன்ன கூட்டிட்டு போக உன் தம்பி காரை எடுத்துட்டு வந்திருக்காங்களாம். நீ ஏன் இப்படி பேஸ்த் அடிச்ச மாதிரி இருக்கு. எழு, எழுந்து புடவையை மாத்து.’’ என்று தோழியை ஊக்கினாள்.
“இன்னைக்கு ஒரு நாள் மல்லி கூட ஜோடி போட்டு தூங்கலாம்னு பார்த்தேன் போச்சா…!’’ என்று ரேணு புலம்ப, “அதெல்லாம் அவ அவங்க மாமா கூட தான் ஜோடி போட்டு தூங்குவா.’’ என சங்கரி ராகம் பாட, தோழிகளின் கிண்டலில் கூட மல்லியின் முகம் இயல்பாகவில்லை.
அவள் அப்படியே அமர்ந்து கொண்டிருப்பதை கண்ட மகிழ், “ஏய்…! இன்னும் அஞ்சி நிமிசத்துல அண்ணா வந்துருவாங்க. எழுந்து கிளம்புடி.’’ என்றாள் குரலில் அழுத்தத்தை கூட்டி.
அந்த குரல் மல்லியிடம் நன்றாக வேலை செய்தது. அவள் வேகமாய் எழுந்து உடை மாற்ற, ஓரமாய் எடுத்து வைத்திருந்த முல்லையை ரேணு மறுபடியும் மல்லியின் கலைந்திருந்த கூந்தலை மேலாக சீர்படுத்தி சூட்டிவிட்டாள்.
“பூ எல்லாம் வச்சி அனுப்புறேன்.’’ என்று ரேணு காதருகில் ரகசியம் பேசி கண்ணடிக்க, மல்லிக்கு தலையை எங்கேனும் கொண்டு போய் முட்டிக் கொள்ள வேண்டும் போல இருந்தது.
சரியாய் பத்து நிமிடங்கள் கழித்து வாயிலில் ஹாரன் ஒலிக்க, தோழிகள் மூவரும் வாயில் கதவை திறந்து வெளியே வந்தனர். மல்லி தன் தோள் பையை எடுத்துக் கொண்டு முதல் நாள் பள்ளிக்கு வேண்டா வெறுப்பாக கிளம்பும் சிறுமி போல வந்து நின்றாள்.
சுந்தர் புன்னகை மன்னனாய் அங்கு நின்றிருந்தான். மற்ற தோழிகள் அவர்களை அறிமுகப்படுத்திக் கொள்ள, அனைவரையும் ஒரு புன்னகையோடு நலம் விசாரித்தான். அதிலும் மகிழ், “பேசாம நீங்க பையனை இங்க தூக்கிட்டு வந்து இருக்கலாம். கார் தான அண்ணா…?’’ என்று உரிமையோடு கேட்கும் போது கூட, “நைட் பனி அவனுக்கு ஒத்துக்காது சிஸ்டர்.’’ என்று அடக்கமாக பதில் கொடுத்தான்.
“பாத்து போங்க…’’ என்று அவர்கள் விடை கொடுக்க, தோழிகள் முன்னிலையில் பின் இருக்கையில் அமர முடியாது என்பதால், மல்லி தன் தோள் பையை பின்னால் வைத்துவிட்டு, தானும் முன்னால் ஏறி அமர்ந்தான்.
மகிழின் தெருமுனை தாண்டும் வரை மட்டுமே சுந்தர் அமைதியாக வந்தான். விரைவு சாலையை எட்டிய அடுத்த நொடி, “இது என்ன புதுசா….? பார்ட்டி கல்ச்சரா…? உங்க அம்மா வேண்டாம் வேண்டாம்னு சொல்லும் போது நானும் சரின்னு சொல்லியிருக்கணும். காலேஜ் போற திமிரை காட்ற இல்ல நீ…? ஆப்டர் ஆல் ஒரு டிப்ளோமோ கேண்டிடேட்டா இருக்கும் போதே உனக்கு தலை கால் புரியாது. இப்ப டிகிரி வேற வாங்கப் போற. நான் எல்லாம் உனக்கு ஆளாவா தெரியப் போறேன்.’’ என்றவன், “எல்லாம் என் நேரம்…’’ என்று வார்த்தை வாளால் அவளை சிதைக்க, மல்லி கண்களை இறுக மூடிக் கொண்டு இருக்கையில் தலை சாய்த்து கொண்டாள்.
கணவன் பேசிய பேச்சின் வீரியத்தில் அவள் இதயம் ஊமைக் கண்ணீர் வடித்தது. விழிகளில் தேங்கியதை முயன்று உள் இழுத்தாள். கண்ணீர் வெளியே சிந்தினாள், ‘நாடகம்… அது இதுவென்று’ அதற்கும் பேச்சு கிடைக்கும் என்பதை அறியாதவளா என்ன…?
மனைவியின் இறுகிய உடல்மொழியில் தன் பேச்சு அவளை பாதிக்கிறது என்பதை சுந்தர் உணர்ந்தான். ஆனாலும் அவளுக்காய் தற்சமயம் அவனால் இரங்க முடியவில்லை. இரவு வீட்டிற்கு வரமாட்டேன் என்று தனக்கு ஒரு குறுஞ் செய்தி அனுபியிருந்தால் கூட அவன் மனம் ஆறுதல் அடைந்திருக்கும்.
அவளும் தன் தாயும் ஆற்றிய உரையாடல்கள் மூலம் அவள் கல்லூரியில் இன்றைக்கு வரவேற்பு விழா என்பதை சுந்தர் அறிந்திருந்தான். புது மாணவர்களை பழைய மாணவர்கள் கலாய்த்து கலங்கடிப்பார்கள் என்பதையும் அவன் அறிவான்.
ஆனால் அது குறித்து அறியாது, பொங்கலுக்கு வாங்கிய பட்டுப் புடவை ஒன்றை தோள் பையில் சுமந்து சென்ற மனையாளை காண்கையில் உள்ளுக்குள் சிரிப்பு தான் பொங்கியது அவனுக்கு.
‘அச்சோ … இந்த அச்சு இன்னைக்கு எப்படியெல்லாம் பல்பு வாங்கப் போறாளோ…!’ என்று மனதிற்குள் எண்ணிக் கொண்டவன் வெளியே சாதரணமாக முகத்தை வைத்துக் கொண்டான்.
மாலை தன் மகள்களுக்கு படிப்பு சொல்லிக் கொடுத்து விட்டு, தொழுவத்தில் மாடுகளுக்கு இரவு நேர தண்ணீர் காட்டி, ஆடுகளை பட்டியில் அடைத்து, தோப்பில் இரவு காவல் பணிகளை சரி பார்த்து விட்டு, அவன் வீட்டுக்கு வரும் போது இரவு மணி எட்டு ஐம்பது.
இன்றைக்கு கல்லூரியில் விழா என்பதால், மனையாள் வீட்டிற்கு தாமதமாக தான் வருவாள் என்பதாக அவன் எண்ணியிருந்தான். ஆனால் மணி இரவு ஒன்பதை எட்ட ஊருக்குள் வரும் கடைசி சிற்றுந்தை ஒருவேளை தவறவிட்டு விட்டால் என்ன செய்வாளோ என்ற பதட்டத்தில் சீனுவிற்கு அழைத்து அவன்மகிழுந்தை கொண்டு வர சொன்னான்.
சீனு வண்டியோடு வாசலில் வந்து நிற்க, இவர்கள் இருவரும் ஒன்றாக வெளியே கிளம்புவதை கண்ட பாரி, “எங்கடா மாமன் மச்சான் ரெண்டு பேரும் ஜோடி போட்டு கிளம்பிட்டீங்க…?’’ என்று கேட்டு வைத்தார்.
மருமகள் மகனுக்கும் தகவல் சொல்லியிருப்பார் என்பது அவர் எண்ணம். “அக்கா பஸ்ஸை விட்ருந்தா… அதான் பிரிவு ரோடு வரைக்கும் போய் அவளை கூட்டிட்டு வரப் போறோம்.’’ என்று அறிவித்தான் சீனு.
பாரிக்கு அப்போது எதுவும் விகல்பமாக தோன்றவில்லை. “மருமவ நாளைக்கு வரதா ஏழு மணிக்கு எனக்கு போனை போட்டு சொல்லிட்டாளேப்பா. அவ கூட படிக்கிற பிள்ளை வீடு ஒன்னு காலேஜ் பக்கத்துல இருக்குதாமே. அங்க தான் இன்னைக்கு நாலு பிள்ளைகளும் ஒண்ணா தங்கி இருக்க போகுதுகளாம்.’’ என்று விசயத்தை போட்டு உடைத்தார்.