“இப்ப எவ்ளோ அழகா இருக்கு பாரு.’’ என கண்ணாடியை மல்லி முன் திருப்பி காட்டிக் கொண்டிருந்தாள் ரேணு. அவர்கள் கல்லூரியில் இணைந்து ஒரு மாதம் கடந்த பிறகே அவர்களுக்கு வரவேற்பு விழா (வெல்கம் பார்ட்டி) ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அதன் பொருட்டு இன்றைக்கு மதிய வகுப்புகளுக்கு விடுப்பு வழங்கப்பட்டிருந்தது. அதோடு மாணவிகள் வண்ண உடைகளில் கல்லூரிக்கு வரவும் அனுமதிக்கப்பட்டிருந்தனர். பேசிக் பி.எஸ்.சி என்று சொல்லப்படுகின்ற பனிரெண்டாம் வகுப்பை முடித்து நேரடியாக செவிலிய பட்டப்படிப்பில் இணைந்த மாணவிகளுக்கும் அன்றைக்கு தான் வரவேற்பு விழா என்பதால் கல்லூரி வளாகம் முழுக்க ஏதோ திருவிழா வைபவம் போல மின்னிக் கொண்டிருந்தது.
வாயிலில் வரவேற்பு வர்ண கோலங்கள் துவங்கி, தோரணங்கள் வாயில் முகப்பை நிறைக்க, வர்ண வர்ண ஊதற் பைகள் (பலூன்௦) சுவர்களை அலங்கரிக்க அந்த இடமே பண்டிகைக் கோலம் கண்டிருந்தது. மல்லி வழக்கம் போல ஏனோ தானோவென்று புடவையை அணிந்து வர, அவர்களின் வகுப்பறையில் அமர்ந்திருந்த தோழிகள் அவளை சீர்திருத்திக் கொண்டிருந்தார்கள்.
அப்படி சீர்திருத்தல் முடித்து, மல்லியின் கண்களில் அஞ்சனம் தீட்டி, இதழ்களில் ரோஜா நிற இதழ் சாயம் தீட்டிய ரேணு தன் கைப்பையில் வைத்திருந்த கையடக்க முகம் பார்க்கும் கண்ணாடியை மல்லியிடம் கொடுத்து அவள் முகத்தை பார்க்க சொல்லிக் கொண்டிருந்தாள்.
உருவங்காட்டியில் தென்பட்ட தன் புதிய தோற்றத்தில் மல்லியே சற்று திகைத்து தான் போனாள். பிறந்து வளர்ந்த இடம் கிராமம் என்பதால் அலங்காரங்கள் அத்தனை அறியாதவள். திருமணம், வளைகாப்பு போன்ற வைபவங்களுக்கு மட்டும் அலங்காரப் பெண்கள் துணையோடு அலங்கரித்து கொண்டவள்.
அதுவும் மூன்று பிள்ளைகளுக்கு தாயான பிறகு, நீண்ட தலையை சீராக பின்னி முடிவதே அபூர்வம் என்ற நிலை தான். வீட்டில் கோடாலி கொண்டை என்றால், கல்லூரிக்கு பின்னல் கொண்டை. வேகமாய் ஒற்றும் லேசான முகபூச்சு. புருவ மத்தியில் வட்ட வடிவ சிகப்பு நிற ஒட்டு பொட்டு. இவ்வளவு தான் மல்லியின் ஒப்பனை.
ஆனால் இன்று சங்கரி அவள் தலையின் முன் பக்க முடியை பப் வைத்து, அழகாய் பின்னியிருக்க, ரேணு அமைப்பாய் அவள் உடலில் புடவையை நிலை நிறுத்தியிருக்க, மதி வாங்கி வந்த நெருக்க தொடுத்த முல்லையை அவள் கூந்தல் அலங்கரிக்க, மகிழின் குடை ஜிமிக்கிகளில் ஒன்று அவள் காதில் குடியேறியிருக்க, இத்தனைக்கும் மேல், ரேணு தன் வசமிருந்த அழகு சாதங்களை தேவையான இடங்களில் தீற்றியிருக்க, மல்லி முழுக்க முழுக்க வேறு ஒரு பெண்ணாகிப் போயிருந்தாள்.
கண்ணாடியில் தன்னை கண்டு தானே வியந்து நின்று கொண்டிருந்த மல்லியை நெருங்கிய மகிழ், “மல்ஸ்…! அச்சோ அழகா இருக்க…! பையனா இருந்தா நானே உன்ன சைட் அடிச்சி இருப்பேன். வா செல்பி எடுக்கலாம்.’’ என்று அவளை வெளியே இருந்த தோட்டத்திற்கு இழுத்து கொண்டு நடந்தாள்.
“அது என்ன அவளை மட்டும் தான் கூப்பிடுவியா…? நாங்க எல்லாம் உனக்கு தொக்கு தக்காளியா…?’’ என்று சிலிர்த்துக் கொண்டு வந்தாள் ரேணு.
“ஏய்…! எல்லார் கூடவும் எடுத்துட்டேன்டி…! அவ இப்ப தான ரெடி ஆனா. ஆனா ஊன்னா இப்படி ஏதாச்சும் பேசி என்னை இரிடேட் செய்யாத.’’ என்றவள் நிற்காமல் நடக்க, “வாடா குபிட். நாம செல்பி எடுக்கலாம்.’’ என ரேணுவை தள்ளிக் கொண்டு நடந்து கொண்டிருந்தாள் மதி.
அப்போது தான் தண்ணீர் குடித்த சங்கரி, தன் இதழ் சாயம் அழிந்திருக்குமோ என்ற கவலையில், ரேணுவின் கைப்பையிலிருந்த இதழ் சாயத்தை எடுத்து மீண்டும் இதழ்களில் தீற்றிக் கொள்ள துவங்கியிருந்தாள்.
பூத்து குலுங்கிய செம்பருத்தி செடியின் அருகில் மகிழ் மற்றும் மல்லி இருவரும் நிறைய சுயமிகள் எடுத்து கொண்டனர். அதற்குள் சங்கரியும் தோட்டத்திற்கு வர, ஐவரும் விதவிதமாக சுயமிகள் எடுத்து கொண்டனர்.
அத்தனை புகைப்படங்களும் அழகாக இருக்க, அங்கேயே நின்று எடுத்த புகைப்படங்களை இரசித்துக் கொண்டிருந்தனர். அப்போது ரேணு, “ஏய்…! என்னடி இவ்ளோ நேரம் ஆச்சு. இன்னும் பங்கசன் ஹாலுக்கு கூப்பிட மாட்டேங்கிறாங்க. எங்க மாமா வேற இன்னைக்கு வீட்டுக்கு வறேன்னு சொல்லியிருக்கார். நான் சீக்கிரம் வீட்டுக்கு போகணும்.’’ என்று தன் புலம்பலை துவக்கினாள்.
உடனே மகிழ், “ஓ…! வாத்தி லீவுக்கு வரப் போறாரா. அதனால பிள்ள பாடம் படிக்க சீக்கிரம் கிளம்பி போகணுமா. போமா… போ…!’’ என்று இழுக்க, மற்ற மூவரும், “ஓ…’’ என்று ராகம் போட, லேசாக முகம் சிவந்த ரேணு, “ஷ்…! மானம் போகுது. மெதுவா தான் பேசுங்களேன்டி…! வேற யார் வீட்டுலயும் குடும்பம் நடக்குறது இல்ல பாரு.’’ என்றவள் தன் புடவை மடிப்பை சரி செய்பவள் போல திரும்பி நின்று கொண்டாள்.
“நடக்குது நடக்குது. யார் இல்லைன்னு சொன்னா…? ஆனாலும் உன்ன மாதிரி முடியுமா…? உங்க மாமா யாரு…? அந்த குபிட்கே அம்புவிட்ட ஆள் ஆச்சே.’’ என்றாள் மதி விஷமமாய்.
ஒருநாள் மகிழின் வீட்டில் தோழிகள் ஐவரும் தங்கள் காதல் கதைகளை பகிர்ந்து கொண்டிருந்த போது, ரேணு தன் கணவனோடான காதல் வாழ்கையை வாய் தவறி உளறிவிட்டிருந்தாள். அன்றிலிருந்து தோழிகள் அவளை குபிட் என்று அடைமொழி வைத்து அழைப்பதும், அவள் வீடு என்ற வார்த்தையை எடுத்தாலே அவளை காலாய்ப்பதும் வாடிக்கை என்றாகிப் போனது.
“ஏய்…! அவ வெட்கப்படுறாளாம்டி. ஏய் குபிட் எங்க மாமா மேலையும் எப்படி அம்பு விடணும்னு எனக்கும் கொஞ்சம் சொல்லி தான் தாயேன்டி. எப்பவும் மூணடி கேப்ல நடக்குற மனுசனை கூட்டிட்டி நான் எப்ப மூன் வாக் போறது.’’ என்று மல்லி புலம்புவதை போல ரேணுவை கிண்டல் செய்தாலும் அதில் ஒளிந்திருந்த வலியை மற்ற தோழிகள் இனம் கண்டு கொண்டனர்.
காதல், கணவன் மனைவியின் அன்பு பகிர்தல் குறித்த பேச்சு வார்த்தையின் போதெல்லாம் மல்லியின் முகம் ஆம்பலாய் சுருங்கும். அதுவும் ரேணு ஒருமுறை அவள் கணவர் கைகளில் மருதாணி வைத்து விட்டு, இரவு உணவை அவளுக்கு தானே ஊட்டிவிட்ட கதையை சொல்லி சிரித்த போது, “நிஜமா அண்ணா வீட்ல எல்லாரும் இருக்கும் போது உனக்கு ஊட்டிவிடுவாங்களா…?’’ என்று மல்லி அதிசயித்து போனாள்.
அவள் அறிந்து அவள் கணவன் அவர்களின் திருமண பந்தியில் புகைபடம் எடுக்க, அவளின் இதழருகே ஒரு ஜிலேபியை லேசாக வைத்திருந்தான். அவ்வளவே. மல்லி அப்படி கேட்டதும் பெரிதாய் சிரித்த ரேணு, “ஏய்…! ஊட்டி விடுறது எல்லாம் பெரிய விசயமா. எங்க மாமா நான் கால்ல மருதாணி வச்சிட்டா அது காயுற வரை மாடி ரூமுக்கு தூக்கிட்டு கூட தான் போவாங்க.’’ என்றாள் பெருமையாய்.
அதில் மல்லி நம்ப முடியாமல் வாயைப் பிளக்க, சங்கரி தான் நடுவில் புகுந்து, “ஆமா நாளைக்கு பீடியாட்ரிக் டெஸ்ட்ல இதெல்லாம் தான் கேக்கப் போறாங்க. நாட்டுக்கு ரொம்ப முக்கியமான டாபிக். ஏய் காதர்பாய் நீ வந்து அந்த க்ரோத் அண்ட் டெவலப்மென்ட்டை காத்தடி வா.’’ என்று உரையாடலின் திசையை மாற்றுவாள்.
தனிமையில் ரேணுவிடம், “ஏய்…! வீட்ல நடக்குறது எல்லாம் வெளிய சொல்லணும்னு அவசியம் இல்ல. மகிழ் மாசம் ஒருமுறை தான் ஊருக்கு போறா. மல்லி வீட்டுக்காரர் ஸ்ட்ரிக்ட் ஆபிசர் போல. நீ உன் கதையெல்லாம் சொன்னா அவங்களுக்கு கஷ்டமா இருக்காதா…?’’ என்று அறிவுரை சொல்வாள்.
“அவங்க பேசினாங்க. நானும் பதில் பேசினேன். நீ அவங்களை ஒன்னும் சொல்ல மாட்ட. என்னை மட்டும் கேளு.’’ என்று ரேணு சங்கரியிடம் எகிறினாலும், அதன் பிறகு வீட்டு பேச்சை தவிர்த்து வந்தாள்.
ஆயினும் சமயம் வாய்க்கும் போதெல்லாம் தோழிகள் அந்த பேச்சை வைத்து அவளை ஓட்டி தள்ளிக் கொண்டிருந்தனர். மல்லியின் மனதை திசை திருப்ப மதி, “ஏய் ஜாஸ்…! செல்லாகுட்டி. நான் உன்ன கூட்டிட்டு போறேன்டா ‘சாய்’ வாக். சாயங்காலம் ஏற்காடு டீ ஷாப்ல சூடா ஏலக்கா டீ வாங்கித்தரேன் டார்லிங்.’’ என்று சொன்னதும் ஆம்பல் முகம் அல்லியானது.
“சூடா ஏலக்காய் டீயா. சூப்பர். கூடவே வெங்காய பஜ்ஜியும் நீ தான் வாங்கித் தரணும்.” என்று மல்லி வேட்டு வைக்க, “பஜ்ஜி எல்லாம் உன் அக்கௌன்ட்.’’ என்று மகிழிடம் கண் ஜாடை காட்டியவள், “நின்னு நின்னு கால் வலிக்குது. அந்த டீன் எப்ப தான் வருவாரோ. வாங்கடி போய் உட்காரலாம்.’’ என்று வகுப்பை நோக்கி நடந்தாள் மதி.
அதே நேரம், “ஏய்…! பிரசர்சை லைன்ல நிக்க சொல்றாங்கப்பா. டீன் வந்தாச்சு போல.’’ என்று பேச்சு குரல்கள் ஒலிக்க, அவர்கள் தங்களுக்கான வரிசையில் போய் நின்றார்கள்.
வரவேற்பு விழா நடக்கவிருந்த விழா அரங்கம், முதல் தளத்திலிருந்தது. புதிதாய் கல்லூரியில் இணைந்திருந்த மாணவிகள் விழா அரங்கிற்கு செல்ல, முதல் படியருகில் வரும் போதே, ‘டப்… டப்..டப்…’ என்று மேலிருந்து ஊதற்பைகள் வெடிக்கும் ஓசையை தொடர்ந்து ரோஜா இதழ்கள் இவர்கள் மீது பூ மழையென மேலிருந்து பொழிந்து மேல் நோக்கி நடந்து கொண்டிருந்த மாணவிகளை மலர் குவியலில் நீந்த வைத்தது.