முன்னைப் போல காதல் வாழ்க்கை தனக்கு வாய்க்கவில்லை என்ற வருத்தம் அவளிடமிருந்து விடை பெற்று போயிருந்தது. கை வழமை போல பாத்திரங்களை தேய்த்து கொண்டிருக்க, அவள் மனமோ நித்தி கூறிய வார்த்தைகளில் மூழ்கியிருந்தது. 

“அப்ப தான் நாங்க டிப்ளோமோ முடிச்சிட்டு, கரஸ்ல பி.சி.ஏ படிச்சிட்டு இருந்தோம். ரெண்டு பேருமே லோக்கல்ல இருந்த ஒரு சின்ன ப்ரைவேட் ஹாஸ்பிட்டல்ல வொர்க் செஞ்சிட்டு இருந்தோம். மகிழ் அவ வீட்ல எல்லாருக்கும் ரொம்ப செல்லம். முக்கியமா அவங்க அப்பாவுக்கு. அவ பாதம் தரையில படாத அளவுக்கு அவளை பார்த்துப்பாங்க. அவ்ளோ பாசம். அதோட அவ ரெண்டு அண்ணனுங்களுக்கும் அவளை ரொம்ப பிடிக்கும்.

நைட் டியூட்டி முடிச்சிட்டு போனா மாறி மாறி அவளை எழுப்பி அவளுக்கு எல்லாரும் ஊட்டி விடுவாங்க. நாங்க நர்சிங் படிக்கும் போது அவளுக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லாம போச்சு. அப்போ அவங்க அப்ப டெய்லி அவளுக்கு நான் வெஜ் சமச்சி எடுத்துட்டு வந்து பார்க்க வருவாங்க. 

அவளோட எங்களுக்கும் சேர்த்து ப்ரூட்டஸ் ஸ்நாக்ஸ் இப்படி நிறைய வாங்கிட்டு வந்து கொடுப்பாங்க. எங்க ரூம்ல இருந்த எல்லாரும் அவரை அப்பான்னு தான் கூப்பிடுவோம். 

மகிழ் லவ் பண்ணுவான்னு நான் கனவுல கூட எதிர்பார்த்தது இல்ல. எங்க கிளாஸ்ல இருந்த ஒரு பொண்ணோட அண்ணா பிரண்ட் தான் மதுரவன். பாக்க அப்படி ஒரு சார்மிங்கா இருந்தாரு. அவங்க ஒரு ரெண்டு மாசம் கூட லவ் செஞ்சி இருக்க மாட்டாங்க. 

மதுரவன் வீட்ல உடனே  பத்திரிக்க அடிச்சி மேரேஜுக்கு ஏற்பாடு செஞ்சிட்டாங்க. மகிழ் வீட்ல உண்மை தெரிஞ்சதும், அவங்க அப்பாவால அதை ஏத்துக்கவே முடில. இந்த கல்யாணம் வேண்டாம்னு எல்லாரும் நிலையா நின்னாங்க. 

ஆனா நாங்க எல்லாருக்கும் பத்திரிக்கை அடிச்சி கொடுத்துட்டோம், இனி கல்யாணம் நடக்கலைனா குடும்பத்தோட சூசைட் தான் செய்யணும், அப்படி இப்படின்னு சொல்லி அவ மனசை கரச்சி கல்யாணத்துக்கு சம்மதிக்க வச்சிட்டாங்க. 

அதுக்கு அப்புறம் அவள் வாழ்க்கை ஆழகான குருவி கூட்ல தாய் சிறகுல கதகதப்பா இருந்த குஞ்சு பறவையை சுடு மணல்ல எரிஞ்சதை போல ஆயிடுச்சு. அவங்க வீட்டுக்காரருக்கு குடிப் பழக்கத்தோட போதை மருந்து பழக்கம் இருக்குறதும் அவளுக்கு அதுக்கு அப்புறம் தான் தெரிஞ்சது. 

அதனால தான் மதுரவனுக்கு ஏமாளியா ஒரு பொண்ணு கிடைக்கவும் வேக வேகமா கல்யாணத்துக்கு ஏற்பாடு செஞ்சிட்டாங்க. கல்யாணம் முடிஞ்ச நைட்டே தான் செஞ்ச தப்பை மகிழ் உணர்ந்துட்டா. 

தன் பொண்டாட்டியை கூடின எந்த புருசனும் கேட்க கூடாத கேள்வியை மகிழை பார்த்து அந்த மானம் கேட்டவன் கேட்டான். தான் வாழ்கையில எவ்ளோ தப்பான முடிவை எடுத்துட்டோம்னு மகிழ் அன்னைக்கே உணர்ந்துட்டா. 

அது என்ன மாதிரியனான கேள்வியாக இருக்கும் என்பதை உணர்ந்த மல்லியின் இதயம் ஒரு நொடி நின்று துடித்தது. மறுபடி அவளின் மனம் நித்தியின் வார்த்தைகளை கிரகிக்க முயன்றது. 

ஒரு வாரம் தான். ஒரே வாரத்துல நரகம் எப்படி இருக்கும்னு அவ புருஷன் அவளுக்கு காட்டிட்டான். போதை பழக்கத்தோட சந்தேக புத்தியும் அவனுக்கு இருந்து இருக்கு. இவ தன்னோட தப்பை உணர்ந்து அவ குடும்பத்தை தேடி போனா. 

ஆனா அவங்க இவ மூஞ்சில முழிக்க கூட விரும்பல. எந்த அப்பா இவ பாதம் தரையில விழாம பாசம் காட்டி வளர்த்தாரோ அவர் இவ செஞ்ச தப்பை மன்னிக்க தயாரா இல்ல. அந்த நிமிஷம் அவ மனசு எப்படி துடிச்சி இருக்கும்னு கொஞ்சம் நினச்சி பாருங்க மல்லி. 

எல்லாரும் இருந்தும் தனக்குன்னு யாருமே இல்லாத மாதிரி உணர்ந்தவ, வேற வழி இல்லாம தன் கணவன் வீட்டுக்கே திரும்பிப் போனா. வேற வழி இல்லாம தனக்கு கிடச்ச வாழ்கையை வாழ பழகிகிட்டா. 

போதையில இருக்கும் போது அரக்கனா இருக்கும் மதுரவன், தெளிவா இருக்கும் போது, மகிழை நல்லபடியா பார்த்துகிட்டார். அந்த நல்ல நினைவுகளை சேர்த்து வச்ச மிச்ச நாட்களை வாழ கத்துகிட்டா. 

கல்யாணம் முடிஞ்சி ரெண்டே மாசத்துல மகிழ் பிரக்னட் ஆனா. அந்த நேரத்துல அவங்க வீட்டுக்காரர் போதையில வந்து அவளை அடிச்சி, தள்ளி விட்டதுல வயித்துல இருந்த கரு கலைஞ்சி போச்சு. 

அதுக்கு அப்புறம் அந்த வரம் அவளுக்கு கிடைக்கவே இல்ல. எங்க ரெண்டு பேருக்கும் பக்கத்துல இருந்த கிராமத்துல பஸ்ட் டெம்ப்ரவரி கவர்மென்ட் போஸ்டிங் கிடைச்சது.  கிட்ட தட்ட எட்டு வருசம் அவ தன் வாழ்கையில நிறைய போராடி பார்த்துட்டா. பரம்பரை சொத்தை வச்சிட்டு வேலைக்கு போகாம வெட்டி பந்தா காட்டுற புருஷன். 

தான் சம்பாரிச்ச கொஞ்ச பணத்தையும்,டீ அடிக்சன் சென்டருக்கு கட்டிட்டு, பல நாள் சாப்பிடாம பட்னி இருந்து இருக்கா. வருசத்துல பாதி நாள் விரதம்னு தன்னை வருதிட்டு இருக்கா. எனக்கு தெரிஞ்சி ரெண்டு முறை பழனிக்கு பாத யாத்திரை போய் காலை எல்லாம் பொத்துட்டு வந்து நின்னு இருக்கா. 

ஆனா அவ வாழ்கையில எதுவுமே மாறல. கடைசியா சேலத்துக்கு ரெகுலர் ஆகி வந்தப்ப, ஹவுஸ் ஓனர் வீட்ல இருந்த எட்டாவது படிக்கிற பையன் இவ சமையலை ரசிச்சு சாப்பிட ஏதாவது ஸ்பெசலா செய்யும் போது அவனுக்கு கொடுத்து இருந்து இருக்கா. 

ஒரு நாள் அவங்க வீட்டுக்காரர் அந்த சின்னப்பையனோட கூட அவளை சேர்த்து வச்சி மோசமா பேசிட்டார். அதுக்கு அப்புறம் தான் மகிழுக்கு இனி அவரோட தான் சேர்ந்து வாழ முடியாது அப்படிங்கிற உண்மை தெரிஞ்சது. 

நிறைய மனநல மருத்துவர்கள் இனி அவரை திருத்த முடியாதுன்னு சொன்னப்ப கூட மகிழ் அதை நம்பலை. தன்னால முடிஞ்ச அளவுக்கு அவ வாழ்க்கையோட போராடி பார்த்தா. ஆனா இன்னும் ரெண்டு வயசு கம்மியா இருந்து இருந்தா, தன் முதல் கருவுல உருவான குழந்தை வயசு இருக்க பையனோட தன்னை சேர்த்து வச்சி பேசினதை அவளால மன்னிக்கவே முடியலை. 

இந்த சித்ரவதைகள் போதும்னு முடிவெடுத்தவ, கடைசியா விவாகரத்து கேட்டு விண்ணப்பிச்சா. மறுபடி அவ வீட்டுக்காரர் தன்னோட நாடகத்தை ஆரம்பிச்சார். நிறைய நாடக கண்ணீர், போலியான தற்கொலை மிரட்டல் இன்னும் என்ன எல்லாமோ செஞ்சி பார்த்தார். 

ஆனா மகிழ் இந்த முறை கரையவே இல்ல. திடமா துணிஞ்சி நின்னா. இவ விஷயம் கேள்விப்பட்டு இவ மூத்த அண்ணனும் உதவிக்கு வந்தார். விவாகரத்துக்கு அப்ளே செஞ்சிட்டு தான் அவ போஸ்ட் பேசிக் அப்ளிகேசனே போட்டா. 

ஒரு மாசத்துக்கு முன்னாடி தான் அவளுக்கு அவ கேட்ட விவாகரத்து கிடைச்சது. அப்படியும் அவ மாமியார் வீட்டு ஆளுங்க, கல்யாண செலவு அது இதுன்னு கேட்டு ரெண்டு லட்ச ரூபா பணத்தை அவகிட்ட இருந்து கறந்துட்டு தான் அவளை விட்டாங்க. 

அந்த மனுஷன் ஆக்சிட்டன்ட் ஆகி கை, காலை உடச்சிட்டு வந்தப்பவும், டீ அடிக்சன் சென்டருக்கும் அவ எத்தனை எத்தனனை பணம் கட்டியிருப்பா. அதையெல்லாம் அவங்க கொஞ்சம் கூட நினச்சி பார்க்கவே இல்ல.                      

       

ஆனா தன்னோட வாழ்க்கை நிம்மதியா இருந்தா போதும்னு அவங்க கேட்ட பணத்தை விசிறடிசிட்டு தன் காலை கட்டியிருந்த சங்கலியை உடச்சிட்டு வந்தா. அதுக்கு பின்னாடி கூட அவங்க வீட்ல அவளை ஏத்துக்கலை. 

ஆனா அவங்க அம்மாவும், மூத்த அண்ணாவும் மட்டும் அப்பப்ப போன்ல பேசுவாங்க. இன்னும் அவங்க அப்பா அவகிட்ட பேசுறது கிடையாது. அத்தனை சொந்தங்கள் இருந்தும், அவ தனியா தான் இப்ப தன் வாழ்கையை வாழ்ந்துட்டு இருக்கா. 

ஒரு பொண்ணு, அதுவும் நம்ம பீல்ட்ல தனியா வாழ்றது எவ்ளோ கஷ்டம். அவ புருசனோட வாழ்ந்த வரை தங்கச்சின்னு கூப்பிட்டுட்டு இருந்த தறுதலை எல்லாம், நான் உனக்கு ஆறுதலா இருக்கேன்னு கண்டபடி மெசேஜ் செய்ய ஆரம்பிச்சானுங்க. 

அவனுங்க தான் அப்படின்னா, கூட வேலை செஞ்ச பொண்ணுங்க எல்லாம், இவளை முதுகுக்கு பின்னாடி வேற மாதிரி பேசிட்டு இருந்தாங்க. ஆனா அதையெல்லாம் கண்டுக்காம அவ இன்னும், இன்னும் தன்னை திமிரான, தைரியமான பொண்ணா வெளி காண்பிச்சுக்க ஆரம்பிச்சா. 

நீங்க இப்ப பார்த்துட்டு இருக்க மகிழ் அவ தான். தன்னோட வலிகள் மூலமே தன் வாழ்கையை செதுக்கிகிட்டவ. இப்ப அவளை பொறுத்தவரை அவ வாழ்க்கை லட்சியம் என்னன்னா கடவுள் தனக்கு கொடுத்து இருக்க இந்த வாழ்க்கையை முடிஞ்ச அளவு சந்தோசமாவும், அனுபவிச்சும் வாழ்றது தான்.’’ என்று நித்தி பேசிய ஒவ்வொரு வார்த்தைகளும் அச்சு மாறாமல் மீண்டும் அவள் மனதில் எதிரொலித்து கொண்டிருந்த அதே நேரம், அவள் அத்தை பாரி அவளை உரக்க அழைத்து கொண்டு அங்கு வந்து சேர்ந்தார். 

“எத்தனை தடவை கூப்பிடுறேன். அப்படி என்ன யோசனையில நிக்குற. பையன் அழறான் பாரு. அவனை தூக்கு.’’ என்று சொல்ல, மல்லி தான் இறுதியாய் கழுவி கொண்டிருந்த பாத்திரத்தை மேடையில் கவிழ்த்துவிட்டு, மகனை தூக்கிக் கொண்டாள். 

தன் கல்லூரி வேலையாக வெளியே சென்றிருந்த சுந்தர் அன்றைக்கு இரவு வெகு தாமதமாக தான் வீட்டிற்கு வந்தான். அவனுக்கு மல்லியை எதிர்கொள்வதில் பல குழப்பங்கள் இருந்தன. பேசாமல் அவளிடமே பேசிப் பார்ப்போமோ என்று அறிவு சொல்ல, தன்மானம் அதை தடுத்து, “அவ வாயால அவங்க சித்திகிட்ட எதுக்கு அவ உன்னை கல்யாணம் செஞ்சிக்க சம்மதம் சொன்னான்னு சொல்லிட்டு இருந்தா. அதை என்னைக்காவது உன்னால மறக்க முடியுமா…?’’ என்று அவள் தலையில் தட்டி வைத்தது. 

இப்படி அவன் குழப்பத்தோடு வீட்டை அடைய, உறங்காமல் புரண்டு கொண்டிருந்த மல்லி, கணவன் அறைக்குள் வரவும், அவனை பாய்ந்து சென்று அணைத்து கொண்டாள். அவள் கண்ணீர் கசியும் விழிகளை கொண்டு ஏதோ பிரச்சனை என்று உணர்ந்தவன், அவள் முதுகை நீவி கொடுத்தபடி, “அச்சு…! என்ன ஆச்சு. ஏன் அழுதுட்டு இருக்க…?’’ என்று கனிவுடன் கேட்டான். 

மனதில் இருக்கும் அழுத்தத்தை வெளியே கொட்டினால் தான் தெளிவோம் என்று முடிவெடுத்த மல்லி, தோழியின் வாழ்வில் நடந்த சம்பவங்களை ஒரு கோர்வையாய் சொல்லி முடித்துவிட்டு, “எறும்பு புத்துக்கு சர்க்கரை போடுற ஆளை பார்த்து இருக்கீங்களா…? அவ போடுவா. அப்படி சின்ன சின்ன உயிர் கூட நல்லா இருக்கணும்னு ஆசைப்படுற அவ வாழ்கையில கடவுள் ஏன் இப்படி கொடூரமா விளையாடி இருக்கார் மாமா.’’ என்றவள் தேம்பி அழ, சுந்தர் அவனை நெஞ்சோடு சேர்த்து அணைத்து கொண்டான்.  

அவள் அழுது முடிக்கும் வரை பொறுமை காத்தவன், “இன்னைக்கு நம்ம நாட்ல பாதி பொண்ணுங்க நிலைமை இது தான். அந்த நரகத்துல இருந்து வெளிய வர துணிச்சல் உன் பிரண்டுக்கு இருக்குன்னு நினச்சி நீ சந்தோசப்படணும் அச்சு. குழந்தை குட்டின்னு ஆகியிருந்தா உன் பிரண்டுமே அந்த வாழ்கையில இருந்து வெளிய வந்து இருப்பாங்களாங்கிறதே பெரிய கேள்வி தான். சரி வா… வந்து தூங்கு.சில விசயங்களை அந்தகாதுல வாங்கி இந்த காதுல விட்ரனும். இப்ப உன் பிரண்ட் சந்தோசமா தானே இருக்காங்க. அதை மட்டும் மனசுல வச்சிக்கோ.’’ என்றான். 

“ஆனாலும்…’’ என்று மல்லி இழுக்க, “ஷ்…!’’ என்று அவள் உதட்டின் மீது விரல் வைத்து தடுத்தவன், “வா… வந்து தூங்கு.’’ என்று அவளை பாயின் அருகே அழைத்து சென்றான். அவளை படுக்க வைத்ததும், தானும் அவள் அருகில் படுத்துக் கொண்டவன், “தூங்கு…” என்றுவிட்டு அவள் தலையை கோதிக் கொடுத்தான். 

சற்று நேரத்தில் மல்லி உறங்கிவிட்டாள். ஆனால் சுந்தர் தன் உறக்கத்தை தொலைத்து இருந்தான். அன்றைக்கு ‘அண்ணா’ என்று அழைத்து தன்னை பார்த்து புன்னகைத்த சாந்தமான முகம் நினைவிற்கு வந்தது. 

அவள் வாழ்வில் இதற்கு முன் என்ன நடந்து இருந்தாலும், இனிமேலாவது அவள் வாழ்வில் மகிழ்வும், நிறைவும் பொங்க வேண்டும் என்று சுந்தர் மனமார நினைத்து கொண்டான். எதிர்பார்ப்பில்லா அன்பிற்கு மட்டுமல்ல வேண்டுதல்களுக்கும் பலன் அதிகம் என்பதை இனி வரும் நாட்கள் தெரிவிக்கப் போகிறது என்பதை சுந்தர் அப்போது அறியவில்லை. 

“ஏய்…! எந்திரிடி. கோயம்பத்தூர் வந்துருச்சு.’’ என்று சங்கரி உலுக்கி எழுப்ப, மல்லி மெதுவாக தன் கண்களை பிரித்தாள். அவளுக்கு முன் மகிழ் முகம் நிறைந்த புன்னகையுடன், “ஹே ஸ்லீபிங் பியூட்டி. ட்ரைன் நின்னு பத்து நிமிஷம் ஆச்சு. போலாமா…?’’ என்று கேட்டு கொண்டிருந்தாள். 

மல்லி சரி என்றுவிட்டு எழுந்து கொள்ள, தோழிகள் நால்வரும் சங்கேதமாய் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர் மகிழை தவிர. அதே நேரம் ரயில் நிலைய வாயிலில், தன் நண்பனின் மகிழுந்தை இயக்க வந்திருந்த மாறவர்ம பாண்டியன், காற்றில் பறக்கவிருந்த பொறுமையை இழுத்து பிடித்தபடி கைக்கடிகாரத்தில் நேரம் பார்த்துக் கொண்டிருந்தான். 

பந்தமாகும்.