“மல்ஸ் குட்டி…! சட்னி சூப்பர்டி…!’ என்று அவளின் கன்னம் கிள்ளி முத்தம் வைத்த மதி, ஜன்னலில் கை கழுவி முடிக்கவும், மற்ற மூவரும், ‘ஹுக்கும்…’ என்று முணகி தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர். 

ஒரு அசட்டு சிரிப்பை சிந்திய மல்லி, அலைபேசியை பார்ப்பவள் போல குனிந்து கொண்டாள். ‘மகளே… உன்ன அவளோ ஈசியா விட்ருவேனா…’ என்று மனதிற்குள் சூளுரைத்த மகிழ், “ஏன் மதி உன் ஹப்பி சாப்ட்வேர். அவர்கிட்டயே  நீ இப்படி ஒரு கத சொல்லிட்டு வந்திருக்க. மல்லி வீட்டுக்காரர் வேற ரொம்ப ஹார்ட்வேர். இவ என்ன சொல்லிட்டு வந்தான்னு தெரியலேயே.’’ என்று மீண்டும் ஒரு விசாரணையை ஆரம்பித்து வைத்தாள். 

முதலில் போட்டிக்காக விசாரணையை துவக்கியிருந்த மதி, இப்போது கரிசனையில் விசாரணையை தொடர்ந்தாள். “அட ஆமாம் இல்ல. இவளுக ரெண்டு பேரும் வீட்ல சொல்லிட்டே வந்து இருப்பாளுக. நீ என்னடி கதை அடிச்சிட்டு வந்த…?’’ என கேட்டாள். 

“அது… நான்… நாளைக்கு ப்ராக்டிகல் எக்ஸாமுக்கு ப்ரிபேர் செய்யணும்னு சொல்லிட்டு வந்துட்டேன்.’’ என்றாள் குனிந்த தலையை நிமிர்த்தாமல். ‘இவகிட்ட என்னமோ தப்பா இருக்கே.’ என்று மதியின் மனதில் ஒரு அலாரம் அடித்தாலும், ‘சரி எங்க போக போறா. பஜ்ஜி வாங்கி தாடின்னு புஜ்ஜி நம்ம பின்னாடி தான வந்தாகணும். அப்ப பார்த்துக்கலாம்.’ என்று முடிவெடுத்தவள் அதன் பிறகு அமைதியாகிவிட, அதிகாலை நேரமே கிளம்பியவர்களுக்கு உறக்கம் கண்களை அழுத்த துவங்கியிருந்தது.

ரயில் அசையும் விதம், தாலாட்டு போலிருக்க, அமர்ந்த வாக்கில் தங்கள் உறக்கத்தை தொடர்ந்தனர் நால்வரும். ஏனோ மல்லிக்கு மட்டும் உறக்கம் வருவதாயில்லை. அன்றைக்கு கணவன் கொடுத்த முத்தத்தை சுமந்த மயக்கத்தில் இருந்தவள் முகத்தில் ஒரு வாளி சுடு நீரை பிடித்து ஊற்றியதை போன்ற அதிர்வை கொடுத்தது மகிழின் பெயர் இருந்த விவாகரத்து பத்திரம். 

மொத்த உலகமும் தட்டாமாலை சுற்ற, எத்தனை நேரம் அதிர்ச்சியில் இருந்தாளோ, “ஏய்…! குளிக்க வாடி…” என்ற மகிழின் குரலில் நடப்பிற்கு திரும்பியவள், அந்த பத்திரத்தை அதே இடத்தில் வைத்துவிட்டு, வேக வேகாமாக வெளியே வந்தாள். 

“என்ன டல்லா இருக்க. கொஞ்சம் முன்னாடி நல்லா தானே இருந்த.’’ என்ற மகிழின் கேள்விக்கு, “லேசா தலைவலி.’’ என்று பொய் சொன்னவள், வேகமாக குளியலறைக்குள் நுழைந்தாள். யோசிக்க யோசிக்க மெய்யாகவே தலை வலிக்க துவங்கியிருந்தது. 

இத்தனை நாட்கள், அவளின் கணவர் வெளியூர் பணியில் இருப்பதாகவும், இவள் வாரம் ஒருமுறை சொந்த ஊருக்கு பயணப்படும் போதெல்லாம் அவரும் அங்கு வந்து செல்வதாக மட்டுமே மற்ற நால்வரிடமும் தெரிவித்து இருந்தாள். 

ஆனால் இவள் பெயர் இருந்த விவாகரத்து பத்திரத்தை கண்டதும், மல்லியால் அதை ஜீரணிக்கவே முடியவில்லை. குளியலறையில் குளிக்கும் போது, கண்ணில் உற்பத்தியான உவர் நீர் துளிகள் வெந்நீருடன் கலந்து மறைந்தன. 

குளித்து வெளியே வந்தவள், அமைதியாக உண்டு படுத்து கொள்ள, ‘அவளுக்கு உடல்நிலை சரியில்லை போல’ என்று ஊகித்த மகிழ், அமைதியாக கழுத்து வரை அவளுக்கு போர்வையை போர்த்தி விட்டு, கழுத்திலும், நெற்றியிலும் தைலத்தை தேய்த்து விட்டாள். 

அந்த கரிசனை மல்லியின் கண்களை மேலும் கலங்க வைத்தது. முயன்று கட்டுப்படுத்திக் கொண்டாள். ‘என்ன நடந்தது என்று கேட்டுவிடலாமா…?’ என்று உள்ளுக்குள் ஒரு குரல் உந்தினாலும், ‘வேண்டாம்… அவன் வேதனையை என்னால் பார்க்க முடியாது.’ என்று மற்றொரு குரலும் மனதிற்குள் பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருந்தன. 

இறுதியில் ‘வேண்டாம்’ என்ற குரல் வெற்றி பெற, உறங்குவதை போல பாசாங்கு செய்து கொண்டிருந்த மல்லியை மெய்யான உறக்கம் ஆட் கொண்டது. அடுத்த நாள் காலை இவர்கள் பரபரப்பாக விழாவிற்கு கிளம்பிக் கொண்டிருக்கும் போது, மகிழின் அலைபேசி இசைத்தது. 

“சொல்லுடி நித்து. எங்க காலேஜ்ல பங்கசன். கிளம்பிட்டு இருக்கேன். நான் ஈவ்னிங் வந்து கூப்பிடவா…?’’ என்றவள் அலைபேசியை துண்டித்து விட, அப்போது தான் மல்லிக்கு அந்த யோசனை தோன்றியது. 

நித்யா மகிழுடன் டிப்ளோமாவில் இருந்து ஒன்றாக பயின்றவள். ஒரே ஊர். இருவரும் ஆருருயிர் தோழிகள். நித்யாவின் திருமணம் வரை இருவரும் ஒரே ஊரில் ஒன்றாக பணியாற்றவர்கள் என்பது வரை மகிழ் கேள்விப்பட்டு இருந்தாள். 

ஆக அவளுக்கு மகிழின் வாழ்வு குறித்து நிச்சயம் அனைத்தும் தெரிந்திருக்கும் என்ற முடிவிற்கு வந்தவள், கல்லூரியில் அனைவரும் உற்சாகமாய் பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்த போது, மகிழின் அலைபேசியில் இருந்து, நித்யாவின் அலைபேசி எண்ணை தேடி எடுத்தவள், அதை தன் அலைபேசியில் சேமித்து கொண்டாள். 

கொண்டாட்டங்கள் ஓய, அன்று மாலை சீக்கிரமாகவே கல்லூரி முடிந்தது. மாலை வழக்கமாக அவர்கள் தேநீர் அருந்தும் கடைக்கு மற்ற தோழிகள் அழைக்க, “குழந்தைங்க தேடுவாங்க. இன்னொரு நாள் வறேன்.’’ என்றவள் யார் பதிலுக்கும் காத்திருக்காமல், விரைந்து அங்கிருந்து கிளம்பினாள். 

“நேத்துல இருந்தே இவ மூஞ்சி சரியில்ல.’’ என்று மகிழ் கவலைப்பட, “அவ மிலிட்டரி வீட்டுக்காரர் இப்போ போனதும் என்ன சொல்லுவாரோ அப்படிங்கிற கவலையில இருப்பாளா இருக்கும். தானா சரியாயிடுவா.’’ என்று மற்றவளை தேற்றினாள் மதி. 

அன்றைக்கு மாலை வீட்டை அடைந்தவள், ஆர்பரிப்புடன் தன்னை நெருங்கிய குழந்தைகளிடம் சிறிது நேரம் செலவழித்து விட்டு, “அத்த… அம்மா வீட்டுக்கு போயிட்டு வறேன்.’’ என்றுவிட்டு தன் வீட்டு தோட்டத்தை நோக்கி ஓடினாள். 

மல்லியை கண்ட சீதைக்கு பேரானந்தம். மகள் நூறடி தொலைவில் இருந்தாலும், அவள் தானாக வீட்டை தேடி வரும் நாட்கள் மிக அரிது. “பசங்களை கூட்டிட்டு வந்து இருக்கலாம் இல்ல…?’’ என்றவரின் இடுப்பில் மூத்த தம்பியின் புத்திரன் மகேந்திரன் இடம் பிடித்திருந்தான். 

“எப்படியும் தினம் நாலுமுறை வேலிகிட்ட நின்னு பண்டம் கொடுத்துட்டு தான இருக்க. அப்புறம் என்ன. போ போய் தவள போண்டா சுட்டு பொதினா சட்னி அரை.’’ என்றவள் தன் பாட்டிற்கு வீட்டின் பின்புறம் அமைந்திருந்த தோட்டத்தை நோக்கி நடந்தாள். 

‘என்ன ஆச்சு இவளுக்கு…’ என்று சீதையின் மனம் முணுமுணுத்தாலும் மகள் கேட்ட சிற்றுண்டியை தயார் செய்ய வேகமாக அடுக்களைக்குள் நுழைந்தாள். தோட்டத்தில் இவர்களின் தென்னை ஒன்று வளரும் போதே வளைந்திருந்தது. 

பார்ப்பதற்கு பெரிய மர ஊஞ்சல் போன்ற அமைப்பில் இருக்க, தன் அலைபேசியை கையில் எடுத்து கொண்ட மல்லி அதில் தாவி ஏறி அமர்ந்தாள். அருகிலிருந்த மலர் செடிகள் மலர்ந்து மணம் பரப்பிக் கொண்டிருக்க, அதையெல்லாம் கவனிக்கும் மன நிலையில் அவள் இல்லை. 

பதட்டமாய் நித்யாவின் அலைபேசிக்கு அழைத்தவள், ‘அலைபேசியை ஏற்பவள் பேசும் சூழலில் இருக்க வேண்டுமே’ என்று கடவுளிடம் அவசர அவசரமாய் மனு போட்டாள். அப்புறம் அலைபேசி அழைப்பு ஏற்கப்பட, “ஹாய் நான் மல்லி. மகிழோட பிரண்ட்.’’ என்று தயக்கத்தோடு தன்னை சுய அறிமுகம் செய்து கொண்டாள். 

ஆனால் அந்தப் பக்கம் நித்யாவின் குரலில் எந்த தயக்கமும் இல்லை. “ஹாய் சொல்லுங்க மல்லி. மகிழ் உங்களைப் பத்தி நிறைய சொல்லி இருக்கா…’’ என்று மகிழ்வோடு தன் உரையாடலை துவங்கினாள். 

“அது… இப்ப உங்களுக்கு பேச டைம் இருக்குமா. நான் கொஞ்சம் மகிழ் பத்தி உங்ககிட்ட பேசணும்.’’ என்றாள் மல்லி அப்போதும் தயக்கத்தோடு. 

“நமக்குள்ள என்ன பார்மாலிடீஸ் வேண்டி இருக்கு. சும்மா நித்துன்னு கூப்பிடுங்க மகிழ். வீட்ல ப்ரீயா தான் இருக்கேன். சொல்லுங்க. எங்க வீட்டுக்காரர் வேலை முடிச்சி வர நைட் எட்டு மணிக்கு மேல ஆகும். அதுவரை வெட்டியா தான் இருப்பேன். அதனால நீங்க இப்ப தாராளமா பேசலாம்.’’ என்றதும், மல்லி விடுதலையாக உணர்ந்தாள். 

“தாங்க்ஸ் நித்து. மகிழ் பத்தி உங்களுக்கு எல்லாமே தெரியுமா…? ஈவன் அவ மேரேஜ் லைப் எல்லாமே.” என கேட்டாள் மல்லி. 

சற்று நேரம் மறுபக்கம் மௌனம் மட்டுமே. எதையாவது தவறாக கேட்டு விட்டோமோ என்று மல்லி மனதிற்குள் மறுகிக் கொண்டிருக்கும் போதே, “நீங்க அதை அவகிட்டயே கேட்டு இருக்கலாமே.’’ என்றாள் உள் சென்ற குரலுடன் நித்தி. 

“இல்ல. இதெல்லாம் அவ முகத்தை பார்த்து கேட்க முடியும்னு எனக்கு தோணல நித்தி. அவளை எப்பவும் கம்பீரமாவே பார்த்து பழகிடுச்சி. அவ முகத்துல வருத்தம், அழுகை, சோகம் இப்படி எதையும் பார்க்க முடியும்னு எனக்கு தோணல.’’ என்றாள் மல்லி உள்ளார்ந்த வருத்ததுடன். 

ஒரு பெருமூச்சை இழுத்து விட்டு தன்னை நிலைபடுத்திக் கொண்ட நித்தி, தன்னை அழைத்திருப்பவள், மகிழின் வருத்தத்தில் தானும் மருகுபவள் என்ற உண்மை உணர்ந்த பின்பே, தான் அறிந்தவரை மகிழின் வாழ்வில் நடந்த சம்பவங்களை விவரிக்க துவங்கினாள். 

மறுபுறம் அவளின் வார்த்தைகளுக்கு செவிகளை கொடுத்திருந்தவளோ, விழி நீர் கசிந்து கன்னம் நனைத்து தரையில் விழுவதை கூட உணரமால் இதயம் கனக்க நின்றிருந்தாள். 

நித்தி தான் சொல்ல வேண்டியவற்றை சொல்லி முடித்ததும், மல்லியிடமிருந்து பதிலின்றி போகவும், “ஹலோ… ஹலோ…!’’ என்று உரக்க அழைத்தாள். அதில் கலைந்த மல்லி, தொண்டை அடைக்க, “ஹலோ…’’ என்றாள். 

அப்போது தான் அவள் அழுவதையே உணர்ந்த நித்தி, “மல்லி கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகுங்க ப்ளீஸ்…! இதெல்லாம் இப்ப மகிழ் கடந்து வந்துட்டா. இனி நாம யோசிக்க வேண்டியது எல்லாம்… இனி மேற்கொண்டு அவ வாழ்க்கை நல்லா அமையணும்னு கடவுள்கிட்ட வேண்டுதல் வைக்குறது மட்டும் தான்.’’ என்று மல்லியை தேற்ற துவங்கினாள். 

“ம்…!’’ என்று மட்டும் மல்லி பதில் கொடுக்கவும், “சரி… நான் அப்புறம் கூப்பிடுறேன். ரொம்ப யோசிச்சி உங்களை வருத்திக்காதீங்க. நடந்ததை நினச்சி கவலைப்படுறதை விட்டுட்டு இனி நடக்குறது நல்லதா இருக்கும்னு நம்புவோம். பை மல்லி.’’ என்றவள் அழைப்பை துண்டிக்க, மல்லி பதுமை போல தன் வீட்டிற்குள் நுழைந்தாள். 

அங்கே சமயலறையில் இவளுக்காக போண்டா சுட்டுக் கொண்டிருந்த சீதை, “எவ்ளோ நேரம்டி தோட்டத்துல நிப்ப. பனி இறங்குறது கூடவா தெரியல. சரி இந்தா… வந்து போண்டா எடுத்துக்கோ.’’ என்று மகளை அழைத்தார். 

“வயிறு ஒரு மாதிரி இருக்கு. டப்பால போட்டு கொடு. நான் நைட்டு சாப்பிட்டுகிறேன்.’’ என்று மல்லி பதில் சொல்ல, ‘வரும் போது நல்லா தானே வந்தா. என்ன ஆச்சு இவளுக்கு…?’ என்று குழம்பிப் போன சீதை, மகள் சொன்னபடி பண்டங்களை டப்பாவில் அடைத்து கொடுத்தார். 

பணியில் இருந்து அப்போது தான் வீட்டுக்கு திரும்பிய மூத்த மருமகள் வெண்பா, “வாங்க அண்ணி…!’’ என்று அழைத்து கொண்டே உள்ளே வர, தலை அசைப்பை மட்டும் பதிலாய் கொடுத்தவள், அம்மா நீட்டிய பாத்திரத்தை பெற்று கொண்டு அங்கிருந்து கிளம்பினாள். 

“ஏன் அண்ணி ஒரு மாதிரி இருக்காங்க..?’’ என்று அவள் தன் மாமியாரிடம் வினவ, “என்கிட்ட யார் எதை சொல்றா…?’’ என்று ஒட்டு மொத்தமாக சலித்து கொண்டவர் மீண்டும் அடுக்களைக்குள் நுழைந்தார். 

‘எனக்கு இது தேவை தான்.’ என்று மனதிற்குள் அலுத்து கொண்ட வெண்பா, சுத்தமாகி வர தன் அறையை நோக்கி நடந்தாள். சில நிமிடங்களில் வீட்டை அடைந்த மல்லி, தான் கொண்டு வந்திருந்த பாத்திரத்தை மகள்களை அழைத்து கொடுத்துவிட்டு, பாத்திரம் துலக்க ஆரம்பித்தாள். 

ஆனால் நித்தி பேசிய வார்த்தைகளே அவள் காதில் ரீங்காரமிட்டுக் கொண்டிருந்தன. எத்தனை வலி, எத்தனை வேதனை அத்தனையும் தாண்டி நிற்கும் அவள் மன உறுதி உண்மையில் மல்லியை சிலிர்க்க வைத்தது. 

தன் மண வாழ்வில் பிரச்சனை என்று மறுகிக் கிடந்தவள், மகிழின் பிரச்சனைகளை கேட்டதும், தன் வாழ்வு எத்தனையோ ஆசிர்வதிக்கப்பட்டது என உணர்ந்தாள். சுந்தர் எத்தனை கோபத்தை காட்டினாலும், தரம் தாழ்ந்து ஒரு வார்த்தை அவளை காயப்படுத்தும் படி பேசியதில்லை. 

அவன் தீண்டலில் எப்போதும் ஒரு மென்மையை மட்டுமே உணர்ந்து இருக்கிறாள். திருவிழா நாட்களில் ஊரே கள் போதையில் மூழ்கியிருக்க, இவனோ களத்து மேட்டில் களை எடுக்கும் வேலையில் இருப்பான்.