Advertisement

     நிகில் தன் மகிழுந்தில் மிதிவண்டி வேகத்தை கொண்டு ஊர்ந்து வந்து கொண்டிருந்தான். அந்த மாலை அவனின் பொருமையை வெகுவாக சோதித்து பார்த்தது.
     ஏனெனில் அலுவலகத்திலும் அவன் வேலை கழுத்தை நெரிக்க, வீட்டிற்கு சென்று ஓய்வெடுக்கலாம் என்று வந்தால் சாலையோ அவனை நகர தான் விட்டது.
     தலைவலியில் தலையை பிடித்தவன் போக்குவரத்தின் போக்கில் நகர்ந்தான். ஒருவழியாக வீட்டை அடைந்தான் சில மணித்துளிகளில்.
     உள்ளே வந்த உடன் அவன் தொலைபேசி அலறியது. எரிச்சலுடன் எடுத்து பார்த்தவன் வந்த அழைப்பு தாய் அபிராமியிடம் இருந்து என கண்ட பின் எடுத்தான்.
     “ஹலோ நிகில் கண்ணா, வீட்டுக்கு வந்துட்டியா பா” என்றார் வாஞ்சையுடன். அன்னையின் அன்பு அவர் வார்த்தைகளிளே உணர்ந்தவன் தன் எரிச்சலை அடக்கி கொண்டான்.
     “ஹான் வந்துட்டேன் அம்மா. இப்ப தான் வீட்டுக்குள்ள நுழைஞ்சேன். சொல்லுங்க அம்மா” என்றான் நிகில். தனையன் குரலின் வேறுபாட்டிலே அவனை உணர்ந்தாரோ தாய்,
     “என்ன நிகில் உன் குரலே ஒரு மாதிரி இருக்கு. ரொம்ப டையர்டா இருக்கியா பா. அம்மாவேனா அப்புறம் போன் பண்ணட்டா” என்றார் உடனே.
     இந்த அன்னைகளுக்கு எப்படி தான் தன் பிள்ளைகளின் சிறு குரல் மாற்றம் கூட தெரிகிறதோ என்று எண்ணி நிகில் சிரிப்புடன் “அம்மா நான் கொஞ்சம் டையர்ட் தான். ஆனா நீங்க போன் பண்ணின அப்புறம் எல்லாம் பறந்து போச்சு.
     ம்ம். என்ன மா செய்றீங்க. அப்பா என்ன செய்றாங்க” என்றான். தன் மகன் கூறியதை சிரிப்புடன் கேட்ட அபிராமி “இங்க நம்ம மாடு கண்ணு போட்டுருக்கு. அப்பா அங்க இருக்காங்க.
      அதை விடு நான் உன்கிட்ட ஒரு விசயம் பேசலாம்னு தான் போன் போட்டேன் டா” என்றார். உடனே நிகில் “ஹை சூப்பர் மா. என்ன கண்ணுக்குட்டி. சரி என்ன விஷயம் மா. எதுவும் முக்கியமான விஷசயமா” என்றான்.
     “அது பெண் குட்டி டா. அப்புறம் கண்ணா, அடுத்த வாரம் பொங்கல் வருதுள்ள அதான் நீ எப்ப ஊருக்க வரப்போறன்னு கேக்க போன் போட்டேன் டா” என்று தன் கேள்வியை முன் வைத்தார்.
      “ம்ம் வரனும் மா. லீவ் மூனு நாள் தான். நான் ஒரு வாரம் கேட்டுருக்கேன். பார்க்கலாம் மா. ஆனா எப்படியும் வெள்ளிக்கிழமை நைட் கிளம்பிருவேன்” என்று பேசி வைத்தான்.
     அவன் எதிர்பார்த்தது போலவே ஒரு வார விடுப்பு கிட்ட கிளம்பி விட்டான் தன் ஊரை நோக்கி நிகில். நிகிலுக்கு பொள்ளாச்சி தான் சொந்த ஊர்.
     தன் ஊரை பற்றி நினைக்கையிலே அவனுக்கு சொல்லொணா நிறைவு மனதில் தோன்றி விடும். என்ன தான் பிழைப்புக்காக வேற்றிடம் சென்றாலும் சொந்த மண்ணை மிதிக்கையிலே தோன்றும் பரவசத்தை அவன் எங்கும் உணர்ந்தது இல்லை.
     அதுவும் பொங்கல் திருநாள் அவனுக்கு மற்ற விழாக்களை விட அதிகம் ஈர்க்கும் ஒரு விழா தான். ஜாதி மத பேதமின்றி தமிழர் அனைவரும் கொண்டாடும் பெருநாள் அல்லவோ. அவன் நினைவுகளும் சில வருடங்கள் முன் சென்றது.
     நிகில் கல்லூரி படித்துக் கொண்டிருந்த நேரம் அது. அந்த வருடமும் அவன் வீட்டில் மாடு கண்று ஈன்றிருக்க அவர்கள் வீட்டில் அந்த குட்டி கண்று தான் அனைவரையும் கவர்ந்தது.
     பொங்கல் அது முதல் நாள் போகியில் இருந்து தொடக்கம். வீட்டில் இருக்கும் பழைய பொருட்களை எரிப்பதன் மூலம் நம்மிடம் உள்ள பழைய கசந்த நினைவுகளை எரித்து புதிய சந்தோஷங்களை நினைவுகளாய் புகுத்துவதே இத்திருநாள் என்பதே நிகிலின் எண்ணம்.
     அடுத்து தைப் பொங்கல் அதிகாலை வேளை தன் அம்மாவின் சொல்படி துயில் எழும் நாட்களில் அதுவும் ஒன்று. அன்னை வாசலிலே கோலமிட  மற்ற அலங்காரம் எல்லாம் நிகிலும் அவன் தந்தையுமே.
     அது அவனுக்கு பிடித்தமான வேலைகளில் ஒன்று கூட. அலங்கார வேலைக்கு பின் அவன் அன்னை வாசலில் பொங்கலிட, பகலவனிற்கு படைத்து அதை உண்ணும் போது வரும் நிறைவு தான் அவன் என்றும் விரும்புவது.
     பின் நண்பர்களுடன் கழியும் அந்த நாள். அடுத்த நாள் அவனுக்கு மிகுவும் பிடித்த நாள். ஆம் மாட்டுப் பொங்கல். இன்றைய தினம் நமக்காக உழைக்கும் மாடுகளை வணங்க நம் முன்னோர்கள் சொன்ன நாள்‌.
     அவர்கள் வீட்டில் நிறைய மாடுகள் உண்டு. அதை எல்லாம் வேலை ஆட்கள் சுத்தப்படுத்தி தர, அவைகளுக்கு வண்ண திலமிடுவது அவனுக்கு மிகவும் பிடித்தமான வேலை.
      பின் பொங்கல் இட்டு அதை மாடு கண்று என வீட்டில் இருக்கும் அனைத்து ஜீவனுக்கும் அளித்து விட்டு அதன் தலையை அன்புடன் தடவிக் கொடுத்து வருவான்.
     அந்த வாய்யில்லா ஜீவராசிகள் அவர்கள் குடும்பத்தில் என்றும் ஒரு அங்கம் தான். இதுவே நம் ஊரில் பல மக்களின் மனநிலை. ஆம் மாடுகளும் அவர்களின் குடும்ப உறுப்பினரே.
     பொங்கல் திருநாளின் கடைசி நாள் எல்லோருக்கும் பிடித்த நாள் உழவர் திருநாள். சிறுவர் முதல் பெரியவர் வரை அவரவர்க்கு ஏத்தது போல் ஒரு விளையாட்டு கண்டிப்பாக நடைப்பெறும்.
     ஊரே ஒரு திடலில் கூடி எந்த வித பாகுபாடின்றி மகிழ்வுடன் கழிக்கும் ஒரு நாள். ‘அண்ணா…’ ‘மச்சான்…’ ‘மாமா…’ என்று கபடமில்லாது உறவு சொல்லி அழைக்கும் மக்கள் என அவன் ஊரின் நினைவுகள் வெகு அதிகமானது.
     அதுவே அவன் கடைசியாக தங்கள் ஊரில் கொண்டாடிய பொங்கலும் கூட. வேலையின் பொருட்டு வெளிநாட்டில் இருந்த நிகில் இந்த பொங்கலுக்கு தான் ஊர் பக்கம் வருகிறான்.
     எனவே அந்த பழைய மகிழ்ச்சியான நினைவுகளுடன் தன் புதிய சந்தோஷமான நிகழ்வுகளை வாழ்வில் சேர்க்க தன் ஊர் எப்போது வரும் என ஆர்வமாக பயனித்தான் நவீன மனம் கொண்ட தமிழ் மகன்!!
  1. -சாந்தி கவிதா

Advertisement