அத்தியாயம் -9

“முனிஷ் ஸ்ரீக்கு என்ன ஆச்சு?எங்க போறாங்க?

அய்ய…. என்னம்மா நீ. நானும் உன்கூடதானே இருக்கேன். எனக்கு எப்படி தெரியும். இரு போன்பண்ணி பார்க்கறேன்”என்றவாறு உள்ளே சென்றவர் ஸ்ரீக்கு அழைக்க, அது பிசி என்றே வந்தது.

மீனா முனிஷ் முகத்தையே பார்க்க. அவரோ உதட்டை பிதுக்கி “போன் எடுக்கல, உள்ள இருக்க புள்ள பிசினு சொல்லுது. சரி நீ எதாவது சாப்பிடறியா? என்று கேட்க,

அவளோ “இல்லங்க வேண்டாம்”என்றாள்.

“ என்னம்மா வயித்து புள்ளக்காரி பசியோட இருக்க கூடாது. இரு தோசை ஊத்தி எடுத்துட்டு வரேன்” என்று செல்ல,

மீனாவோ அங்கிருந்த சோபாவில் கண்களை மூடி சோர்ந்து அமர்ந்துவிட்டாள்.

முனிஷ் கிச்சனில் இருந்தாலும் அவரது சி ஐ டி மூளை சொரண்டியதால் பார்வை முழுக்க மீனா மீதே இருந்தது.

‘என்ன இந்த புள்ள கண்ண மூடிட்டு உட்கார்ந்து இருக்கு, ஒரு வேலை அடுத்து என்ன பண்ணலாம்னு யோசிக்கிதோ…. நீ என்ன பிளான் வேணா பண்ணு. ஆனா இந்த முனிஷ்கிட்ட உன் பப்பு வேகாது’ என்று நினைத்து கொண்டே தோசையை ஊத்தி எடுத்து வந்தார்.

மீனா அருகில் வந்தவர் அவளை அழைக்க அவளோ கணவன் நினைவில் மூழ்கி இருந்தாள்.

“எம்மா பொண்ணு…. மீனு…. மீனு…”என்று கத்த,

“ஹா…. சொ…. சொல்லுங்க அக்கா…”

“எதே…. அக்காவ என்னம்மா பொசுக்குன்னு அக்கானு சொல்லிட்ட உன் வயசவிட ஒன்னு இல்ல ரெண்டு வயசுதான் எனக்கு அதிகம் அதனால என்னை பேர் சொல்லியே கூப்பிடு” என்றார் அந்த நாற்பத்து ஐந்து வயது பெண்.

அவரை ஆச்சர்யமாக பார்த்த மீனா. உங்க வாயா இருந்தா என்ன வேணா பேசுவீங்களா. என்னைவிட ரெண்டு வயசுதான் அதிகமாமுள்ள, உலக மகா உருட்டால்ல இருக்கு’என்று மனதில் நினைத்து கொண்டு,
வெளியே “சரி முனியம்மா….” என்க,

“அட என்னம்மா நீ என் பேர் முனிஷ். இவ்வளவு நேரம் அப்படிதானே கூப்பிட்ட அப்படியே கூப்பிடு. வேற எதாவது பேர் சொல்லி கூப்பிட்ட அப்புறம் எனக்கு செம்ம கோபம் வரும் பார்த்துக்கோ.ம்கூம்…” முகத்தை தோளில் இடித்து கொண்டு செல்ல, அந்த நிலையிலும் மீனா இதழ்களில் மென் சிரிப்பு மலர்ந்தது.

நீர் எடுத்து வந்து அவள் அருகில் வைத்த முனிஷ். ஆமா குழந்தைக்கு ஆபத்துனு சொன்னியே…. யார்னால? உன் புருஷனலாயா…ஏன் அவனுக்கு புள்ளைங்கன்னா பிடிக்காதா? பிள்ளைங்கள பிடிக்காதவங்க கூட இருக்காங்களா என்ன? என்க,

அவளோ அமைதியாக இருந்தாள்

“என்னதான் புள்ளைய பிடிக்கலைனாலும் கொல்ற அளவுக்கா போவாங்க. மனுஷனா அவன்…. அவன் வாய்…. இழுத்துட்டு போக, கை வெலங்காம போக…..” என்று மேலும் திட்டி கொண்டே போனவர் , மீனாவின் “நிறுத்துங்க…..” என்ற கத்தலில் நின்று போனது.

“இதுக்கு மேல ஒரு வார்த்தை அவரைபத்தி தப்பா பேசுனீங்க அவ்வளவுதான் சொல்லிட்டேன். அவரைபத்தி உங்களுக்கு என்ன தெரியும்னு இப்படி பேசுறீங்க. இல்ல என்னைப்பத்திதான் உங்களுக்கு என்ன தெரியும். ஏதோ வண்டில விழுந்த எனக்கு உதவி செஞ்சீங்க, அதுவும் நீங்க செய்யல ஸ்ரீதான் செஞ்சாங்க. அதுக்காகஎத்தன தடவை வேணா நன்றி சொல்றேன்.

ஆனா…. என் புருஷனைப்பத்தி எதாவது பேசுனீங்க நான் மனுஷியா இருக்க மாட்டேன் சொல்லிட்டேன்” என்று ஆக்ரோஷமாக பேசியவள் சாப்பிடாமலே எழுந்து சென்றுவிட,

‘அம்மாடியோவ்….. அம்மாஞ்சி மாதிரி இருந்துட்டு இந்த புள்ளைக்கு என்ன இம்புட்டு கோவம் வருது. அந்நியன் மாதிரில மாறுது.

எப்படியோ நமக்கு பதில் கிடைச்சுருச்சு. இந்த புள்ள வீட்ல இருந்து வர காரணம் புருஷன் இல்ல. அது மட்டும் இல்லாம புருஷன் மேல உயிரா இருக்கு, என் அளவுக்கு இல்லைனாலும் ஓரளவு பார்க்கற மாதிரிதான் இருக்கு அப்புறம் எதுக்கு என் மேல பொறாமைப்பட போறா…. என் சி ஐ டி மூளைக்கு எட்டுன பதில் சிரி பாப்பா நம்மகிட்ட விளையாடி இருக்கு. அதான் எனக்கு வில்லினு சொல்லியிருக்கு”ஐ…. கண்டுபுடிச்சிட்டேன்” என்று குதிக்க,

“சிரி பாப்பா நான் கண்டுபிடிச்சிட்டேன். எப்போ பாரு என்கிட்ட விளையாடிட்டே இருக்கறது” என்று தனக்குள் அவர் பேசி கொண்டிருக்கும்போதே, மீனா முகம் எல்லாம் கழுவி வெளியே செல்வதற்கு ஏதுவாக அறையில் இருந்து வெளியில் வந்தாள்.

அவள் எதிரில் போய் நின்ற முனிஷ் “ஆமா மீனு…. இப்போ நீ எங்க கிளம்பிட்ட,

“நீங்க எப்போ என் புருஷனைபத்தி பேசிட்டீங்களோ இனி நான் இங்க இருக்க மாட்டேன். நான் போறேன். என்னோட ஒரு பை எடுத்துட்டு வந்தேன் அதை குடுங்க நான் போறேன். அதுலதான் என்னோட சர்டிப்பிக்கெட் எல்லாம் இருக்கு” என்று முகத்தை தூக்கி வைத்து கொண்டு சொல்ல,

முனிஷோ “ஆத்தி…. என்னம்மா நீ இம்புட்டு கோபப்படுற. நான் சும்மா தெரிஞ்சுக்கலாம்னு கேட்டேன். பிடிக்கலைனா விடு. இனி நான் வாய திறக்கல, அப்படி மீறி எதாவது என்ன மீறி நான் கேட்டாலும், ஏன்னு கேளு. இப்போ நல்ல புள்ளையா உள்ள போய் உட்காருடாமா. சிரி பாப்பா வந்தா என்னதான் திட்டும். அது வந்ததுக்கு அப்புறம் என்ன முடிவெடுக்கறியோ எடுத்துக்கோ. நான் எதுவும் சொல்ல மாட்டேன்”என்று கெஞ்சுவது போல் சொல்ல,

மீனா அவரையே சற்று நேரம் பார்த்தவள், அவர் முகத்தில் இருந்த கெஞ்சலை கண்டு பெரு மூச்சுவிட்டு அப்படியே அங்கிருந்த சோபாவில் அமர்ந்துவிட்டாள்.

“ஹப்பாடா உட்கார்ந்துட்டியா. அந்த தோசைய சாப்பிடு. நான் கஷ்டப்பட்டு நின்னு மாவு எடுத்து தோசை கல்லுல ஊத்தி வேக வச்சு எடுத்துட்டு வந்துருக்கேன்ல”என்று பெரிய சாதனை செய்தது போல் தோசை ஊற்றியதை சொல்ல,

‘அய்யய இது டம்மி பீசுடா….” என்ற லுக்கை முனிஷின் மீது செலுத்திய மீனா அந்த தோசையை எடுத்து சாப்பிட துவங்கினாள்.

உணவை முடித்துவிட்டு மீனா அடுத்து என்ன செய்வது என்று யோசிக்க ஆரம்பித்தாள். பரவால்ல ஸ்ரீயே வேலை தரேன்னு சொல்லிட்டாங்க. அவங்களும் பார்க்க நல்லவங்க மாதிரிதான் இருக்காங்க. பேசாம இங்கயே இந்த ஊர்லயே இருந்திடலாம்.

தனி வீடு பார்க்கணும். ஸ்கூல் போக முன்னாடி வீடு பார்த்து பால் காய்ச்சி வச்சிடலாம். எவ்வளவு நாள் இங்கயே இருக்கறது. அவங்களுக்கு சிரமம் குடுக்க கூடாது’ என்று தனக்குள் எண்ணி கொண்டு இருந்த சமயம் , வீட்டின் போன் மணி அடித்தது.

முனிஷ் வந்து அதை எடுத்து பேசியவர் “என்னங்க மருமகன் சொல்றீங்க” என்று அதிர்ந்து மேலும் “சரி…. சரிங்க .. நான் உடனே வரேன்” என்று சொல்லிவிட்டு போனை வைத்துவிட்டு ஸ்ரீக்கு அழைக்க, அவளோ போன் எடுக்கவே இல்லை.

மீண்டும் மீண்டும் ஸ்ரீக்கு அழைத்தவர் “சிரி பாப்பா சீக்கிரம் போன எடு. முக்கியமான விஷயம்……” என்று புலம்பி கொண்டு இருந்த சமயம் அந்த பக்கம் அழைப்பு ஏற்கப்பட்டது.

ஸ்ரீ சோர்ந்த குரலில் “ஹலோ….” என்று சொன்ன அடுத்த நிமிடம் “சிரி பாப்பா சிரி பாப்பா எங்க இருக்க. ஏன் போன் எடுக்க ரொம்ப நேரம்” என்று கேட்டவர் அவள் பதில் சொல்லும் முன்பே “சரி நான் சொல்ல வந்ததை சொல்றேன்.என் மகளுக்கு குழந்தை பிறக்க சொன்ன நாளைக்கு முன்னாடியே வலி வந்துடுச்சாம். ஆஸ்பத்திரில சேர்த்துருக்காங்க. என்னை உடனே வர சொல்லி மருமகன் போன் பன்னுன்னாரு. நான் உடனே ஊருக்கு கிளம்பனும் பாப்பா”என்க,

“அந்த பக்கம் தன் குரலை செருமி சரி செய்து கொண்ட ஸ்ரீ “ஒன்னும் பிரச்சனை இல்ல முனிஷ். நா…. நா…ன் மீட்டிங்ல இருக்கேன். அதான் போன் எடுக்கல. நீங்க கிளம்புங்க. பணம் உங்களுக்கு ஜி பே ல அனுப்பவா”.

“இல்ல சிரி பாப்பா. நீ குடுத்த காசே என்கிட்ட இருக்கு”.

“சரி முனிஷ் போயிட்டு போன் பண்ணுங்க. பொண்ண நல்லா பார்த்துக்கோங்க. சரி நான் வைக்கறேன். முக்கியமான வேலை இருக்கு” என்றுவிட்டு அழைப்பை துண்டித்தவள் அப்படியே அந்த மருத்துவமனை சேரில் சோர்ந்து போய் அமர்ந்தாள்.

முனிஷ் மீனாவிடம் சொல்லிவிட்டு அவசர அவசரமாக கிளம்பிவிட, அந்த பெரிய வீட்டில் மீனா தனியாக இருந்தாள்.

மருத்துவமனையில் அமர்ந்திருந்த ஸ்ரீ ஐ சி யூ வாசலையே பயத்துடன் பார்த்து கொண்டு இருந்தாள்.

ஆம், மீட்டிங்கில் பேசி கொண்டிருந்த ஸ்ரீயின் தந்தை நந்த குமார். திடீரென்று நெஞ்சை பிடித்து கொண்டு விழுந்துவிட, அவரை மருத்துவமனையில் அனுமதித்திருப்பதாக போன் வர, அதனால்தான் ஸ்ரீ அரக்க பரக்க ஓடி வந்தாள்.

அவளின் காத்திருப்பிற்கு முடிவு கட்டுவது போல் ஐ சி யூ அறை கதவை திறந்து கொண்டு வெளியில் வந்தார் மருத்துவர். அவரிடம் வேகமாக சென்ற ஸ்ரீ “அங்கிள் எங்க அப்பா….. இப்போ நல்லா இருக்காருதானே?ஒன்னும் பிரச்சனை இல்லையே? வீட்டுக்கு கூட்டிட்டு போகலாம்தானே?” என்று பட படவென கேள்விகளை அடுக்கினாள்.

நந்த குமாரின் நெடு நாள் நண்பரான டாக்டர் சுரேஷ், ஸ்ரீயிடம் மறுப்பாக தலையசைத்து “இல்ல நித்தி. பெரிய பிரச்சனை ஹார்ட் அட்டாக் வந்துருக்கு அதுவும் அவனுக்கு இது ரெண்டாவது அட்டாக்” என்று சொல்ல, ஸ்ரீ திகைத்து போனாள்.

“அவனோட கவலை என்னனு உனக்கே தெரியும். இனி அவனை அதிகம் ஸ்ட்ரெஸ் ஆகாம பார்த்துக்கோ. இப்போ ஓகே நீ போய் பார்க்கறதுனா பாரு”என்றுவிட்டு செல்ல,

ஸ்ரீ அரண்டு போனாள். தந்தை நிலையை எண்ணி. பயத்துடனே அறையின் உள்ளே சென்றாள்.

“மருத்துவ உபகரணங்கள் சூழ, சோர்ந்து போய் படுத்திருந்தார் நந்தா. அவர் அருகில் சென்றவள் நடுங்கிய கரங்களை அவரது குளுக்கோஸ் ஏறி கொண்டிருந்த கரங்கள் மேல் வைக்க, அவரோ மெதுவாக கண்களை திறந்தார்.

“ப்பா…..” என்று அழுகையோடு அழைத்த மகளை பார்த்தவர். சிரிக்க முயன்று பின் தோற்று “என்னடா பயந்துட்டியா. கவலைப்படாத அப்பாக்கு ஒன்னும் இல்ல. உன்னோட கல்யாணத்தை பார்க்கற வரை எனக்கு எதுவும் ஆகாது” என்று பேச முடியாமல் பேச,

அவளுக்கோ கண்களில் இருந்து கண்ணீர் வடிந்து கொண்டே இருந்தது. அவளது கண்ணீரை துடைத்தவர் “அழாதடா…நீ அழுதா அப்பாவால தாங்க முடியாது” என்று வருத்தமாக சொல்ல,

வழிந்த கண்ணீரை துடைத்தவள் “இல்ல…இல்ல….. நான் அழல. பாருங்க நான் சிரிக்கறேன்” என்று கண்ணீரோடு சிரித்தவளை கண்டு தானும் சிரித்த நந்தா “ம்ம்ம்….” என்றவர் கண்கள் தானாக மூட, பதறி போனவள் “ப்பா……” என்று அழைக்க,

அப்போது உள்ளே வந்த நர்ஸ் “பயப்படாதீங்க மேடம். மெடிசினோட எபெக்ட்டால தூங்க ஆரம்பிச்சிட்டாரு அவ்ளோதான். சார் உங்களை வர சொன்னாரு. போய் பாருங்க” என்று சொல்ல, அவளும் வேகமாக மருத்துவர் அறை நோக்கி ஓடினாள்.

“வாமா நித்தி . அப்பாக்கு குடுக்க வேண்டிய டேப்லெட் லிஸ்ட் இது. அப்புறம் ஈஸியா செரிமானம் ஆக கூடிய புட்டா அவனுக்கு குடு.

வீட்ல இருந்து சமைச்சு எடுத்துட்டு வா. அப்புறம் வேற என்ன சொல்றது. நீயே டாக்டர்தான் உனக்கு தெரியாததா. பார்த்துக்கோ. நைட் நீ இங்க தனியா ஹாஸ்பிடல இருக்க வேண்டாம்.

நீ இப்போ வீட்டுக்கு போய் அப்பாக்கு சாப்பிட எதாவது செஞ்சு எடுத்துட்டு வா. ஹாஸ்பிடல் சாப்பாடு எல்லாம் அவனுக்கு வேண்டாம்”.

“இல்ல அங்கிள். நானே அப்பாவ……”

“சொன்னா கேளுடா. நான் எக்ஸ்ட்ரா ஒரு நர்ஸ் போட்டு அப்பாவை பார்த்துக்கறேன். அவனைப்பத்தி நீ கவலைப்பட வேண்டாம். நீ போய் சமைச்சு எடுத்துட்டு வா. வேற எதுவும் கேட்கணும்னாலும் போன் பண்ணு”என்று சொல்ல, அவளும் பெரு மூச்சுடன் எழுந்து கொண்டாள்.

வீட்டில் மீனா தனியாக மொட்டு மொட்டு என்று அமர்ந்திருந்தாள். ‘என்னடா ஆளுங்க இவங்க. நைட் பார்த்த என்ன நம்பி மொத்த வீட்டையும் விட்டுட்டு அவங்க பாட்டுக்கு ஆளாளுக்கு கிளம்பி போய்ட்டாங்க. இப்போ நான் என்ன பண்றது’ யோசித்து கொண்டு இருந்தவள் அப்படியே உறங்கி போனாள்.

கிச்சனில் பாத்திரம் உருட்டும் சத்தத்தில் உறக்கம் கலைந்த மீனா, எழுந்து சென்று பார்க்க ஸ்ரீதான் பாத்திரங்களை உருட்டி கொண்டிருந்தாள்.

“என்னங்க பண்றீங்க. எங்க போய்ட்டீங்க” என்று மீனா கேட்க,

ஸ்ரீயோ “அ….அ…. அது அப்பாக்கு உடம்பு முடியலைன்னு போன் வந்துச்சுங்க. அதான் எதுவும் சொல்லாம ஓடிட்டேன். சாரி….”

“ஹையையோ நீங்க எதுக்குங்க என்கிட்ட சாரி கேட்குறீங்க. அப்பாக்கு என்னங்க ஆச்சு? இப்போ நல்லா இருக்காரா? நீங்க என்ன செஞ்சுட்டு இருக்கீங்க?”

“ம்ம்ம்…. இப்போ நல்லா இருக்காரு. அவருக்கு சமைச்சு எடுத்துட்டு போகலாம்னு……” என்று இழுத்தவள். இட்லி மாவு காலி போல, என்ன செஞ்சு எடுத்துட்டு போகணும்னு தெரியல” என்று சோர்வாக சொல்ல,

அவளை பார்த்து சிரித்த மீனா “உங்களுக்கு சமைக்க தெரியாதா…” என்று கேட்க,

எல்லா பக்கமும் தலையசைத்தவள் பின் கண்களை சுருக்கி பாவமாக முகத்தை வைத்து “ம்ம்…..” என்று சம்மதமாக தலையசைக்க, அந்த செய்கை ஏனோ அவளுக்கு தங்கை கண்ணம்மா நினைவை ஏற்படுத்தியது.

உடனே கலங்கிய கண்களை இறுக மூடி திறந்தவள் “தள்ளுங்க நான் செஞ்சு தரேன்”.

“இல்ல….. உங்களுக்கு எதுக்கு சிரமம்”.

“நான் உங்களுக்கு குடுக்கற சிரமத்த விடவா”

“ச்ச…ச்ச…. நீங்க எனக்கு சிரமம் இல்லங்க. உங்களை பார்த்தா என்னோட தங்கச்சி நியாபகம் வருது அவ சின்ன வயசுலயே இறந்துட்டா. நீங்க அவளை மாதிரியே இருக்கீங்க. லைக் தட் முட்டை கண்ணு….. லாங் ஹெயர்….” என்று சொல்லி சிரிக்க,

“தங்கச்சினு சொல்றீங்க. அப்புறம் வாங்க போங்கன்னு சொல்றீங்க. சும்மா மீனானே சொல்லுங்க அக்கா…”

“அக்காவா…… ம்ம்…. சரிதான்”.

“ஆமா அப்பாக்கு என்ன ஆச்சு. எப்படி சமைக்கணும்”.

“அப்பாக்கு ஹார்ட் அட்டாக். இப்போ பரவால்ல. ரெஸ்ட் எடுக்க சொல்லியிருக்காங்க. லைட் புட்டா குடுக்கணும். இட்லி இடியாப்பம் இப்படி…” என்று சொல்ல,

கட்டியிருந்த புடவை முந்தானையை எடுத்து இடுப்பில் சொருகிய மீனா “அவளோதானே…நீங்க போய் குளிச்சிட்டு கிளம்பி வாங்க அதுக்குள்ள நான் எல்லாம் ரெடிபண்ணி வைக்கறேன்”

“இல்ல மீனா உனக்கு ஹெல்ப் பண்ணிட்டே. நான் கிளம்ப போறேன். நீ தனியா எப்படி சமாளிப்ப”

“அட என்னக்கா. நான் என்ன விருந்தா சமைக்கறேன். ரொம்ப ஈஸியான வேலை நீங்க போங்க” என்றவள் வேலையை ஆரம்பித்துவிட,

சற்று நேரம் நின்று பார்த்தவள் மீனா தன்னை கண்டு கொள்ளாமல் வேலையில் இறங்கியதை கண்டு பெரு மூச்சு விட்டவள் தன் அறைக்கு சென்றுவிட்டாள்.

அரை மணி நேரம் கடந்து வந்த ஸ்ரீ கையில் உணவு பையை கொடுத்தவள் “அக்கா அப்பாக்கு இடியாப்பம், தேங்க பால் வச்சுருக்கேன். தேங்காய் சேர்க்க கூடாதுனா சர்க்கரை வச்சிருக்கேன். போதுமா. இல்ல வேற எதுவும் செய்யட்டுமா” என்க,

கண்ணீர் மல்க அவளை அணைத்து கொண்ட ஸ்ரீ “ரொம்ப…. ரொம்ப நன்றி மீனா. முனிஷும் இல்லாம சமைக்க தெரியாம என்ன பண்ண போறோம்னு பயந்துட்டு இருந்தேன். எனக்கு உதவி பண்ணவே நீ என்கிட்ட வந்த மாதிரி இருக்கு” என்று சொல்ல,

மீனாவோ “இல்லக்கா. நீங்க எனக்கு எவ்ளோ பெரிய உதவி செஞ்சுருக்கீங்கன்னு உங்களுக்கே தெரியாது. எனக்கு இன்னொரு வாழ்க்கையே அமச்சு குடுத்துருக்கீங்க” என்றவள்,

“சரி போதும்…. போதும் போய் அப்பாக்கு சாப்பாட குடுத்துட்டு வாங்க. இப்படியே ரெண்டு பேரும் மாறி மாறி நன்றி சொல்லிக்கிட்டு இருந்தா நேரம் போயிடும்” என்று சொல்ல,

ஸ்ரீயும் சிரித்துவிட்டு “தனியா பத்திரமா இருந்துப்பியா. கவனமா இரு. இது என் நம்பர் எதுவும் வேணும்னா எனக்கு போன்பண்ணு” என்றுவிட்டு ஹாஸ்பிடல் கிளம்பிவிட்டாள்.

மீனாவிற்கு ஸ்ரீயிடம் பேசிய பின்புதான் மனம் கொஞ்சம் தெளிவாக இருந்தது.

இரவு உணவை தந்தைக்கு கொடுக்க சென்ற ஸ்ரீ வீட்டிற்கு வரும்போது அவள் முகம் கலக்கமாகவும், குழப்பமாகவும் இருக்க மீனா அவள் அருகில் அமர்ந்து “என்னாச்சுக்கா…” என்று கேட்ட நிமிடம் அவளை அணைத்து கொண்ட ஸ்ரீ அழ ஆரம்பித்துவிட்டாள்.

ஹாஸ்பிடல் சென்ற ஸ்ரீக்கு என்ன ஆனது அடுத்த எபியில் பார்க்கலாம்….