ஊட்டி மலை மீது டிரெயின் ஏறி கொண்டிருந்தது. மீனா தன் எதிரில் இருந்த குழந்தையை பார்த்து ரசித்து கொண்டிருந்தாள்.
குழந்தையும் அவளை பார்த்து சிரிப்பதும் தாயின் தோளில் முகத்தை புதைத்து கொள்வதுமாக இருந்தது.
இயற்கை படைப்பை தன்னை மறந்து ரசித்து கொண்டிருந்த சத்யா எதேச்சையாக மனைவியை பார்க்க, அவள் கவனம் முழுதும் எதிரில் இருந்த குழந்தை மீதுதான் இருந்தது. அதை கண்டு தனக்குள் சிரித்து கொண்டவன் அவள் காதோரம் குனிந்து ரகசிய குரலில் “குழந்தைன்னா ரொம்ப பிடிக்குமோ” என்க,
அவளும் பார்வையை திருப்பாமல் தலையை மட்டும் ‘ஆமாம்’ என்பது போல் ஆட்டினாள்.
“அப்போ நான் வேணும்னா அதுக்கு ஹெல்ப் பண்ணவா”என்க, அதிர்ந்து போனவள் கணவன் புறம் திரும்பி, தன் முட்டை விழிகளை விரித்து அதிர்ச்சியாக பார்க்க,
“என்ன பேசுனாலும் இப்படியே முட்ட கண்ண உருட்டி உருட்டி பார்த்தா என்ன அர்த்தம். உனக்கு ஹெல்ப் பண்ணதானே கேட்டேன். என்ன என் ஹெல்ப் உனக்கு வேண்டாமா” என்று ரகசியமாக கேட்க,
அவளோ அவன் பேச்சில் உண்டான வெட்கத்தை மறைக்க தலை குனிந்து கொண்டு ‘வேண்டாம்’ என்பது போல் தலையசைக்க,
“என்னம்மா சொல்ற.வாய திறந்து பேசினாதானே எனக்கு புரியும். பதில் சொல்லு” என்று மேலும் அவளை சீண்ட, கணவனின் சேட்டையை கண்டு தலையில் அடித்து கொண்டவள் “உங்க உதவி இப்போதைக்கு தேவை இல்ல. உங்க அக்கறைக்கு நன்றி”என்று நக்கல் குரலில் சொல்ல,
“ஹேய் ஊமை குசும்பி உன்னை….. இப்போ இருக்க இடம் சரியில்ல. எனக்கு ஒரு டைம் வரும் அப்போ பார்த்துக்கறேன் உன்னை” என்றவன் அவள் மூக்கை பிடித்து செல்லமாக ஆட்ட, அவளோ நாக்கை துருத்தி, மூக்கை சுருக்கி அவனுக்கு ஒழுங்கு காட்ட அதை கண்ட எதிரில் இருந்த குழந்தையும் அதை போல் செய்ய முயற்சிக்க,
குழந்தையை கவனித்த மீனா சத்தமாக சிரிக்க, மனைவி சிரிப்பின் காரணத்தை அறிந்த சத்யாவும் சிரிக்க அந்த இன்பமான மனநிலையோடே ஊட்டி வந்தடைந்தனர்.
ஊட்டியின் பிரபலமான பைவ் ஸ்டார் ஹோட்டலில் அறை புக் செய்திருந்ததால் டேக்சியில் சென்றடைந்தனர்.
அறையின் ஸ்க்ரீனை விலக்கி ஊட்டியின் அழகை கண்ட சத்யாவிற்கு மனம் உற்சாகமாக மாறியது. மீனா வந்த களைப்பு தீர குளிக்க சென்றாள். அவள் வருவதற்குள் காபி ஆர்டர் செய்த சத்யா அந்த அதிகாலை குளிரை ரசித்தபடி பால்கனியில் அமர்ந்து காபியை குடித்து கொண்டிருக்க, மீனா தலையை துவட்டியவாறு அவன் எதிரில் வந்து அமர்ந்தாள்.
முகத்தில் எந்த ஒப்பனையும் இல்லாமல் பனியில் நனைந்த ரோஜாவாக மலர்ந்த முகத்துடன் இருந்த மனையாளை கண் இமைக்காமல் பார்த்த சத்யா பார்வை சொன்ன சேதியில் மீனா முகம் செந்தாமரையாக சிவந்துதான் போனது.
கணவனின் தொடர் பார்வை அவளுள் ஏதேதோ எண்ணங்களை உருவாக்க, காபி கப்பை எடுத்தவளின் கரம் கப்பை தவற விட, அந்த சத்தத்தில் தன்னிலை அடைந்தவன் தலையை கோதி தன்னை சமாளிக்க, அவளோ பதறிய குரலில் “சாரிங்க…. அ…. அது…. அது…. வந்து….. கை தவறி….”
“அம்மா தாயே நீ வந்ததும் போதும். அது வந்ததும் போதும். எப்போ பாரு அது…. வந்துன்னு…. இழுத்துட்டே…….. இப்படியே இழுத்துட்டு இருந்தா…. எப்போதான் என் பக்கத்துல வர போற” என்று கேட்டு கண்ணடிக்க, அவளோ அதற்கு மேல் அங்கு அமர முடியாமல் எழுந்து ஓடி விட,
“எவ்ளோ நேரம் ஓடுவன்னு பார்க்குறேன். என்கிட்ட எப்படியும் நீ மாட்டதான் போற. அப்போ இருக்கு உனக்கு” என்றுவிட்டு தானும் குளிக்க சென்றான்.
அதன் பின் இருவரும் சேர்ந்து சாப்பிட செல்ல மீனாவோ அமைதியாகவே வந்தாள். அவளுக்கும் சேர்த்து சத்யா பேசி கொண்டே வந்தான். அவர்கள் செல்லும் இடம் பற்றியும்,கல்லூரி சுற்றுலா வந்த போது நடந்த சுவரசியமான விஷயங்களையும் சொல்லி சிரிக்க, வழக்கம் போல் அவனை சைட் அடித்து கொண்டே கேட்டு கொண்டிருந்தாள் மீனா.
அதன்பின்னான நேரம் மீனாவிற்கு கணவனை ரசித்து கொண்டும், சத்யாவிற்கு மனைவியிடம் பேசி கொண்டும் சென்றது.
ரோஸ் கார்டனில் அழகிய பூக்களை ரசித்தும், பொட்டானிக்கல் கார்டனில் இருக்கும் இளம் ஜோடிகளின் சில்மிஷங்களை ஓர கண்ணால் கண்டு சிவந்து கொண்டும் இருந்த மீனாவின் கரங்கள் கணவனின் கரங்களோடு இணைந்தே இருந்தது.
ஊட்டியின் காலநிலையும் அங்கிருந்த இயற்கை அழகும் மீனாவை தன்னிலை மறக்க செய்ய, கணவனின் தோளில் சாய்ந்து கொண்டவள் கணவனுக்கு இணையாக தானும் மனம் திறந்து பேச துவங்கினாள்.
பேசி கொண்டே அறைக்கு வந்தவர்கள் உணர்வுகளின் தாக்கத்தில் ஆட்கொண்டு இருந்தனர். இருந்தாலும் ஒருவர் மற்றொருவரின் மனநிலை அறிந்து அமைதியாக இருந்தனர். அந்த அறை முழுதும் அமைதியே நிறைந்திருந்தது.
சத்யாதான் முதலில் தன்னை சமாளித்து கொண்டான். மனைவியை அழைத்து கொண்டு இரவு உணவு உண்ண சென்றான். அப்போதும் இருவர் இடையே அமைதியே இருக்க, அது ஏனோ மீனாவிற்கு சங்கடமான உணர்வை ஏற்படுத்தியது. அதனால் அவளே பேச்சை துவங்கினாள்.
ஓரளவுக்கு மேல் அவளுக்கும் என்ன பேசுவது என்று தெரியாமல் பேச்சை நிறுத்திவிட்டு, கணவனை பார்க்க, அவனும் அவளைதான் பார்த்து கொண்டிருந்தான்.
ஆணவன் பார்வை அவளுள் ஏதேதோ உணர்வுகளை உண்டாக்க,முதுகு தண்டு சில்லிட்ட உணர்வு ஏற்பட்டது, அவன் பார்வையை சந்திக்க முடியாமல் தலை குனிந்தவளின் முகம் வெட்கத்தில் சிவந்து போனது.
உணவு உண்டு முடித்த பின்னும் அமைதியாக அமர்ந்திருந்தவளின் முன் தன் கரங்களை நீட்டியவன் கரங்களை இறுக்கமாக பிடித்து கொண்டாள் மீனா.
அறைக்கு வந்த பின் அமைதியாக முன்னால் சென்றவள் காதில் கதவு தாளிடும் சத்தம் கேட்க, அப்படியே சிலையாக நின்றாள்.
சற்று நேரத்திலேயே அவள் காதோரம் சூடான மூச்சு காற்று பட, உடல் சிலிர்த்து போனவளின் காதோரம் இருந்த பூனை முடிகள் கூட குத்திட்டு நிற்க, உரோமங்கள் நிறைந்த வலிய ஆண் கரம் அவள் இடையை இறுக்க, கண்களை மூடியவளுக்கு மூச்சு தாறுமாறாக வாங்கியது. அப்போது எங்கோ பட்டாசு வெடிக்கும் சத்தம் கேட்க, தன்னுணர்வு அடைந்தவள் விழிகளை திறக்க, அனைத்தும் கனவு.
‘அட கடவுளே. என்னடி மீனா உனக்கு என்ன ஆச்சு’ என்று தனக்குள்ளே நொந்து கொண்டவள் திரும்பி கணவனை பார்க்க, அவனோ கைகளை கட்டியவாறு கதவில் சாய்ந்து நின்று அவளைதான் ஆழ்ந்து பார்த்து கொண்டிருந்தான்.
இருவரின் பார்வை ஒருவரை ஒருவர் தாங்கி நிற்க, என்ன நினைத்தானோ கரங்களை விரித்து பெண்ணவளை கண்ணால் அழைக்க, அவளும் வில்லில் இருந்து புறப்பட்ட அம்பாக ஓடி கணவனின் கை சிறையில் அகப்பட, இறுக்கி அணைத்து கொண்டான் தன்னவளை.
எவ்வளவு நேரம் அப்படியே நின்றார்களோ, சத்யா அவனவளின் காதில் ஏதோ ரகசியம் பேச, அவளோ வெட்கத்தில் அவன் மார்பிலேயே முகத்தை அழுத்தி பதித்தாள்.
அவள் முகவாயில் கை வைத்து நிமிர்த்தி தன்னை பார்க்க வைத்தவன் கண்களால் சம்மதம் கேட்க, “ம்ம்…” என்றவளின் விழிகள் நாணத்தில் குடையாக மடிய, சத்யாவிற்கு ஆகாயத்தை தொட்டு மீண்ட உணர்வு.
அவளை மெல்ல படுக்கையில் கிடத்தியவன் அவள் இதழில் மென்மையாக முத்தமிட, மீனுவோ முதல் முதலில் கற்கும் தாம்பத்ய பாடம் புரியாமல் வெட்கமும், பயமுமாக விழிக்க, அதுவே ஆணவன் ஆசைகளை தூண்ட போதுமானதாக இருந்தது.
“இந்த பார்வைதான்டி பொண்டாட்டி என்னை மயக்குது” என்றவாறு அவள் கண்களில் இதழ் பதித்தவன் கரங்கள் பெண்மையின் மென்மையில் பதிய, துடித்து எழ முயன்றவளை தடுத்தவன் கரங்கள் கழுகு இறகாக விரிய, அதற்குள் கோழி குஞ்சாக அடங்கி போனாள் பெண்.
வேகமும் மோகமுமாக ஆணவன் கரங்கள் காரிகையின் உடலில் அத்துமீற, அதில் சிலிர்த்து போனவள், அவன் வேகம் கண்டு அரண்டுதான் போனாள்.
இதழ் அமுதம் பருகி முடித்தவன் அவளுடைய கழுத்தடியில் மீசை உரச குட்டிக் குட்டி முத்தம் பதிக்க, அவள் மேனி சிலிர்த்து, உடல் நடுங்க துவங்கியது .
மனையாளின் உடல் சிலிர்ப்பையும் நடுக்கத்தையும் உணர்ந்து நிமிர்ந்து முகம் பார்த்தவனின் இதழில் எதையோ சாதித்த புன்னகை தோன்றியது.
ஏனென்றால் அவனால் உண்டான உணர்வுகளின் தாக்கத்தால் கண்கள் மூடி முகம் சிவந்து, இதழ் துடிக்க படுத்திருந்தாள். அவன் மனைவி கணவனின் அமைதி எதனால் என்பது போல் கண்களை திறக்க, அவனோ தலை கலைந்து, உணர்வுகளின் தாக்கத்தால் கண்கள் சிவந்து வசீகர சிரிப்பு சிரிக்க, அது அவளுள் வெட்கத்தை உருவாக்க முகத்தை கரங்களால் மூடியவளை கண்டு சத்தமாக சிரித்தவன் அவளுள் மூழ்க துவங்கினான்.
ஆணவன் வேகத்தில் நடுங்கியவளின் காதில் ரகசியம் பேசி அவள் பயத்தை போக்கியவன் தாம்பத்ய கடலில் மனைவியோடு மூழ்க துவங்கினான்.
இடைவிடாத இம்சை அங்கே அரங்கேறத் தொடங்கியது.
ஆதவன் தன் பணியை துவங்க ஆரம்பிக்கும் காலை வேலை வெயில் சுளீர் என முகத்தில் பட தூக்கம் கலைந்த சத்யா கண்களை தேய்த்து கொண்டே எழ, அருகில் மீனா வயிற்றில் கை வைத்தவாறு சுருண்டு படுத்திருந்தாள்.அதை கண்டு பதறி போனவன் “ஹேய் மீனுமா என்னடா என்ன ஆச்சு” என்க,
அவளோ முகம் சுருக்கி “வலிக்குது…” என்று கண்கள் கலங்க சொல்ல, எதனால் என்பதை நொடியில் புரிந்து கொண்டவன் தன் தலையில் அடித்து கொண்டு “சாரிடா…. ரொம்ப வலிக்குதா? இரு டாக்டர வர சொல்றேன்” என்று சொல்ல,
அவளோ “இல்ல…. இல்ல…அதெல்லாம் வேண்டாம். கொஞ்ச நேரம் படுத்துருக்கேன் சரியா போயிடும்” என்றாள் தயங்கியபடி. வருபவரிடம் எதை எப்படி சொல்வது என்று .
உடனே அவளை முறைத்தவன் “சொன்னா கேளுடா முகமே வாடி போய் இருக்கு. டாக்டர் வந்து பார்க்கட்டும்”
“இல்ல…. இல்ல முதல் டைம்ல அதான் வலி. வேற ஒன்னும் இல்ல. சரியாகிடும். ப்ளீஸ் டாக்டர் எல்லாம் வேண்டாமே” என்று கெஞ்சலாக கேட்க, வேறு வழி இல்லாமல் அப்போதைக்கு அமைதியானவன்,மீனா பாத்ரூம் மெதுவாக நடந்து செல்வதை கண்டு வாடி, தனக்கு தெரிந்த லேடி டாக்டருக்கு போன் செய்து மேலோட்டமாக விஷயத்தை சொல்லி கேட்க,
அவரும் முதல் முறை என்பதால் வலி இருக்கும் என்றுவிட்டு ஒரு ஆயின்மண்ட்டை சொல்லி போட சொன்னார்.
உடனே மெடிக்கல் தேடி ஓடியவன் அந்த மருந்தை வாங்கி வந்து கொடுத்து போட சொல்லி, நிமிடத்திற்கு ஒரு முறை இப்போ ஓகேவா இப்போ ஓகேவா என்று கேட்க, அவனுக்கு பதில் சொல்லியே சலித்து போனாள் பெண்ணவள்.
அன்று வெளியே எங்கேயும் போக வேண்டாம் என்றவன் ஹோட்டலை சுற்றி நடக்க வைத்து, அன்றைய நாளை அவளின் கை கோர்த்து அங்கிருக்கும் பூக்களைபற்றியும், சுற்றுலா தளங்களைபற்றி சொல்லி கொண்டும் போக்கினான்.
அடுத்த நாள் மீனா எந்த பிரச்சனையும் இல்லை என்ற பின்தான் போட்டிங் கூட்டி சென்றான். அன்று இரவே இருவரும் கோயம்புத்தூர் கிளம்பிவிட்டனர்.
திங்கள் காலை ஓய்வு கூட எடுக்காமல் வேலை என்று ஓடியவனை கண்டு மீனாவிற்கு கஷ்டமாக இருந்தது. அதை மாமியாரிடம் சொல்லவும் செய்தாள். அவரோ “அவன் அப்படிதாம்மா வேலைனு வந்துட்டா சாப்பாட்ட கூட மறந்துருவான்” என்றுவிட்டு சென்றார்.
அதே நேரம் ஆபிசில் பைலை பார்த்து செய்து கொண்டிருந்த சத்யாவிற்கு திடீரென்று உடல் எல்லாம் நடுங்கி வியர்க்க துவங்கியது. வயிற்றில் வலிப்பது போல் இருக்க, பார்த்து கொண்டிருந்த பைலை மூடியவன் அப்படியே வயிற்றை அழுத்தி பிடித்தவாறு சற்று நேரம் அமர்ந்திருக்க, பிறகு சரியானது போல் இருந்தது.
மணியை பார்க்க அது மூணறை என்று காட்டியது. அப்போதுதான் அவனுக்கு சாப்பிடவில்லை என்பது நினைவு வர தன் டிபனை எடுத்து சாப்பிட துவங்கினான்.
மரத்தில் இருந்து உதிரும் இலை போல் நாட்கள் சென்று கொண்டிருந்தது. மீனா -சத்யா திருமணம் முடிந்து இரண்டு மாதம் முடிந்திருந்தது.
கணவன் மனைவி இருவரும் தங்கள் திருமண வாழ்க்கையை மகிழ்வாக வாழ்ந்தனர். மீனா கணவன் வேலை அறிந்து பொறுப்பாக நடந்து கொண்டாள். மாமனார் மாமியாருடன் அவளது நாட்கள் அழகாக சென்றது.
சத்யா வேலையும் ஒருவழியாக முடிய, அடுத்த நாளே மீனாவின் வீட்டிற்கு விருந்துக்கு சென்றனர். திருமணம் முடிந்து வர வேண்டிய விருந்து என்று முணு முணுத்த சென்னப்பனிடம் சிரித்த முகமாக பேசியே சமாளித்தான் சத்யா. இதற்கிடையில் அவனுக்கு அடிக்கடி வயிற்று வலி வந்து போக ஊருக்கு சென்ற பின் புல் பாடி செக் அப் செய்ய வேண்டும் என்று முடிவெடுத்து கொண்டான்.
மீனா அவர்கள் வீட்டில் எப்போதையும் விட மிகவும் அமைதியாக இருப்பது போல் தெரிந்தது சத்யாவிற்கு.
ஏழுமலையும், கண்ணமாவும் சத்யாவுடன் நன்றாக பேசினர். வீட்டிலேயே இருப்பது ஒரு மாதிரி தோன்ற சத்யா நால்வரையும் அழைத்து கொண்டு பக்கத்து டவுனில் இருக்கும் தியேட்டருக்கு அழைத்து சென்று, அப்படியே அங்கிருந்த ஹோட்டலுக்கு சாப்பிட சென்றனர்.
கண்ணம்மா, “ஹப்பாடா வாழ்க்கைலயே இப்போதான் மாமா நான் முதல் முதல்ல படத்துக்கு வந்துருக்கேன். அப்பா எங்கயும் போக அலோவ் பண்ணவே மாட்டாரு. சரியான ஹிட்லர்” என்று சொல்ல,
ஏழுமலையோ “ஆமா. என்னையே எங்கயும் போக விட மாட்டாரு. உன்னை எங்க விட போறாரு” என்றான். அவனை யோசனையாக பார்த்த சத்யா “அது என்ன மலை எனக்கேன்னு சொல்ற. உனக்கு என்ன ரெண்டு கொம்பு முழச்சு இருக்கா என்ன”.
“அப்படி இல்ல மாமா நான் பையன் என்னையவே எங்கயும் விடலன்னு சொன்னேன்”.
“பையன்னா என்ன பொண்ணுன்னா என்ன ரெண்டு பேரும் ஒன்னுதான். உங்க அப்பா அம்மா எல்லாம் படிக்காதவங்க அவங்கதான் அப்படி யோசிக்கறாங்கன்னா, நீ அடுத்த ஜெனரேசன் நீயும் இப்படி யோசிக்கலாமா. ஆண், பெண் ரெண்டு பேரும் சமம்னு மனசுல பதிய வை. இருவரையுமே விடலன்னு சொல்லி பழகு சரியா”.
“ம்ம்….. சரி மாமா அண்ட் சாரி”.
“சாரி எல்லாம் வேண்டாம் உன் மனசுல உன் தங்கையும், நீயும் ஒண்ணுதான்னு நினை அது போதும்”.
“மாமா நான் அவனுக்கு அக்கா. நான்தான் பர்ஸ்ட் பிறந்தேன்” -கண்ணம்மா.
“ஹேய் உனக்கு இப்படி ஒரு எண்ணம் எல்லாம் இருக்கா? நல்லா கேட்டுக்கோ நான்தான் உனக்கு அண்ணன். நீ என் தங்கச்சி. புரிஞ்சுதா குட்டி தங்கச்சி” என்று அவளுக்கு ஒழுங்குகாட்ட,
அவளோ “டேய்…. நான்தான்….” என்று கண்ணம்மா மேலும் ஏதோ பேசுவதற்குள் “போதும்…. போதும் வெளில வந்தும் உங்க சண்டை நின்னபாடு இல்ல. பேசாம சீக்கிரம் சாப்பிடுங்க. லேட் ஆச்சு அப்பா என்ன பண்ணுவாருனு தெரியும்ல. ம்ம்…. டக்குனு சாப்பிடுங்க” என்றாள் மீனா.அதன்பின் உடன்பிறப்புகள் இரண்டும் ஒருவரை ஒருவர் முறைத்து கொண்டே அமைதியாக சாப்பிட துவங்கினர்.
“ஹேய் மீனுக்குட்டி எப்படிடி ஒரே வார்த்தைல இந்த ரெண்டு பேர் வாயையும் அடக்கின. பயங்கரமான ஆளுடி நீ. நான்கூட இவங்க சண்டையை நிறுத்த போலீசை கூப்பிடணுமோனு நினைச்சிட்டேன்” என்று ரகசியம் கூறி சிரிக்க,
மீனா முறைக்க, சத்யா அசடு வழிய கணவன் மனைவியை கண்டு மற்ற இருவரும் சிரிக்க என்று அவர்களது நேரம் சுவாரசியமாக சென்றது.
வீட்டில் சென்னப்பன் தனத்திடம் பொரிந்து கொட்டி கொண்டிருந்தார்.
“என்ன இது புது பழக்கம் வீட்டு பொட்ட புள்ளைய வெளிய படத்துக்கு அனுப்புறது. வெளிய சாப்பிடவிடறதுனு எல்லாம் நீ குடுக்கற இடமா. இதே வழக்கமா வச்சுக்கிட்டு நாளைக்கு மறுபடியும் படத்துக்கும் போகணும்னு கேட்டா என்ன பண்ணுவ, தோலை உரிச்சு உப்பு கண்டம் போட்றுவேன் பாத்துக்கோ” என்று மீசையை முறுக்கியவாறு பேச,
தலை குனிந்தவாறு கையை பிசைந்து கொண்டிருந்த தனம் “இல்லைங்…. மாப்பிள்ளை பிடிவாதமா நின்னாரு. வீட்லயே இருக்கறது ஒரு மாதிரி இருக்குதுன்னு சொன்னாருங்…அதான் உங்ககிட்ட கேட்கணும்னு சொன்னேன். ஆனா…. அவரே போன் போட்டு கேட்பாருன்னு எதிர் பார்க்கலைங்…” என்னும்போதே அவர் கன்னத்தில் ஓங்கி அறைந்த சென்னப்பன்.
“கழுத…வாய்க்கு வாய் பேசுதியோ என்ன எதிர் பார்க்கல. அவரு விட மாட்டாரு போக வேண்டாம்னு வெட்டு ஒன்னு துண்டு ரெண்டுன்னு பேசி நீயே முடிக்கறதை விட்டுட்டு என்கிட்ட வரைக்கும் கொண்டு வருவியா. இந்த சின்ன விஷயம்கூட உன்னால பார்க்க முடியாம வீட்ல என்னதான் பண்ணிட்டு இருக்க, போ…. என் முன்னாடி நிற்காத” என்று அதட்ட, வழிந்த கண்ணீரை துடைத்து கொண்டே அவரது ராஜாங்கமான சமையல் அறைக்கு சென்றுவிட்டார்.
அடுத்த நாள் காலை தம்பதிகள் கோயம்புத்தூர் கிளம்பினர்.சத்யா கிளம்பி காரில் அமர்ந்திருக்க, மீனா கண்ணீருடன் தம்பி, தங்கையிடமும் தாயிடமும் விடை பெற்று கொண்டு கிளம்பினாள்.
கோயம்புத்தூர் வந்த இரண்டு நாட்களில் சத்யாவின் உடலில் பல மாற்றம் ஏற்பட்டது. கை, கால், முகம் என அனைத்தும் வீங்க துவங்கியது.
மகனின் முகத்தை கண்டு அரண்டு போன பெற்றோர் இருவரும் மருத்துவமனைக்கு அழைக்க, அவனோ நாளை செல்லலாம், மாலை செல்லலாம் என்று தள்ளி போட அவர்களோ பிடிவாதமாக மருத்துவமனை அழைத்து சென்று செக் செய்தனர்.
சத்யாவிற்கு எல்லா டெஸ்டும் எடுத்த மருத்துவர் இறுதியாக அந்த ரிப்போர்ட்டை பார்த்து சொன்ன விஷயம் அவர்கள் தலையில் இடியாக இறங்கியது.
அப்படி சத்யாவிற்கு என்னதான் ஆனது அடுத்த எபியில் பார்க்கலாம்…..