அத்தியாயம்- 2

அதோ…. இதோ…. என்று நாட்கள் அதன் போக்கில் செல்ல, மீனா கமிஷனையும் வெற்றிகரமாக முடித்துவிட்டாள்.

அவள் மட்டும் இல்லாமல் தங்கை, தம்பி என மூவரும் சேர்ந்துதான்
சாட் வரைவது, நான்காம்,ஐந்தாம் வகுப்பு பாடத்திற்கு ஏற்ற வகையில் ஒர்கிங் மாடல், நான் ஒர்கிங் மாடல் செய்வது, எண்களை எழுதி அட்டையில் ஒட்டி மாணவர்களுக்கு விளையாட்டு வாக்கில் சொல்லி தருவதற்கான மாடலை செய்வது என்று அனைத்தையும் செய்தனர்.

இதற்கிடையில் சத்யா, மீனாவிடம் பேச எண்ணி போன் செய்ய, சென்னப்பனின் முகம் தன் பிடித்தமின்மையை அப்பட்டமாக வெளிப்படுத்தியது.

“என்ன இது கல்யாணத்துக்கு முன்னாடி போன்ல பேசற பழக்கம்” என்று முணகினாலும் மகளை பேச அனுமதித்தார் அதுவும் இரண்டு வார்த்தைகள்தான்.

நல்லா இருக்கீங்களா…சாப்பிட்டீங்களா…அதற்கு மேல் பேசவிடாமல் போனை வாங்கி கொண்டு வேலை இருப்பதாக சொல்லி வெளியே சென்றுவிடுவார்.

அதில் கோபமானவன் மீனாவிடம் புது போன் வாங்கி தருவதாக சொல்ல, அவளோ தந்தைக்கு பயந்தே மறுத்துவிட்டாள். இப்படியே நாட்கள் செல்ல புடவை எடுக்கும் நாளும் வந்தது. சென்னப்பன், தனலட்சுமி, மீனாட்சி மூவரும் கிளம்பி சென்றனர்.

மற்றவர்களுக்கு உடை எடுக்கும்போதாவது மீனாவிடம் பேசலாம் என்று நினைத்தவன் அவள் அருகில் செல்ல முயற்சிக்க, அவளோ குனிந்த தலை நிமிராமல் தாயைவிட்டு பிரியாமல் நின்றிருந்தாள். அதில் கடுப்பானவன் வேண்டுமென்றே அவள் ஜடையை பிடித்து இழுத்து விடுவது, கைகளை இறுக்கி கோர்த்து பின்விடுவது, தன் உடல் உரச அவளை இடித்து கொண்டு “இந்த புடவை பாருங்க…. இந்த புடவை பாருங்க……” என்று சொல்வது என சேட்டை செய்து கொண்டு இருக்க, பெண்ணவளோ ஆணவனின் செய்கையில் வெட வெடத்து போனாள்.

சென்னப்பன் வாங்க வேண்டியதை வாங்குங்கள் என்று சொல்லிவிட்டு சேரில் ஒரு ஓரமாக போய் அமர்ந்துவிட, தனமும் புடவை எடுப்பதில் கவனமாக இருக்க, ஆணவனின் சேட்டைகளில் பெண்ணவள் விழி பிதுங்கி போனாள்.

லதா மகனின் குறும்பையும், அவனை சமாளிக்க முடியாமல் மீனா திரு திருப்பதையும் கண்டு தனக்குள் சிரித்து கொண்டார். அன்றைய நாள் அப்படியே செல்ல , அவர்கள் கிளம்பும் நேரமும் வந்தது.

தாய், பின்னோடு வால் பிடித்து கொண்டு போனவளின் கையை பிடித்து அருகில் இழுத்தவன் தன் பாக்கெட்டில் இருந்து ஒரு போனை எடுத்து அவள் கையில் கொடுத்து “இனி தினமும் நான் நினைக்கற நேரம் போன் பண்ணுவேன் பேசு” என்று மென் குரலில் சொல்ல.

ஆணின் அந்த குரலும், தொடுகையும் அவளுள் பதட்டத்தையும், நடுக்கத்தையும் உண்டாக்கியது.

மீனாவை பொறுத்த வரை திருமண கனவுகள் என்று எதுவும் இல்லை. பத்தொன்பது வயது வரை தந்தையின் கட்டுப்பாட்டில் இருந்தவள். என்ன படிக்க வேண்டும், எங்கு படிக்க வேண்டும், என்ன செய்ய வேண்டும், என்ன பார்க்க வேண்டும் என அனைத்தையும் அவள் தந்தைதான் முடிவெடுப்பார். அவை அனைத்திற்கும் சரியென்று மண்டையை ஆட்டி கொண்டு இருந்தவள், திருமணம் என்று சொல்லவும் முதலில் பயந்தாலும் பின் சரி எப்போதென்றாலும் கல்யாணம் செய்து கொள்ள போவதுதானே என்று தலையை ஆட்டிவிட்டாள். அவளின் சம்மதம் அங்கு யாரும் கேட்கவில்லை என்பது சோகமான உண்மை.

திருமணத்தின் மீதும் கணவனாக தந்தை கொண்டுவந்து நிறுத்தியவன் மீதும் அவளுக்கு எந்த விருப்பமும் இல்லாமல் இருந்தது. பின் நாட்கள் செல்ல செல்ல அவனுடன் பேசியதில் அவனது பேச்சு குணம் அனைத்தும் அவளுள் பிடித்தத்தை உண்டாக்கியது. அது ஈர்ப்பாகவும் மாறியது.அவன் மேல் ஈர்ப்பு வந்த உடன் அவன் முகத்தை நினைவு கூர்ந்து பார்த்தவளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. பெண் பார்க்க வந்த அன்று பார்த்ததோடு சரி. அதன் பின் இருவரும் சந்தித்து கொள்ளவே இல்லை. இப்போது இவ்வளவு அருகில் அவனை கண்டவுடன் மலைத்து போய்தான் நின்றாள் .

பேதையின் இமை சிமிட்டாத பார்வையில் ஆணவனின் காதுகள் வெட்கத்தில் சிவக்க, அதை கூட உணர்ந்து கொள்ள முடியாதவள் அவன் காது மடல் சிவப்பை ஆச்சர்யமாக பார்த்து கொண்டிருக்க, அப்போது அங்கு வந்த லதா “ச்சு….. ச்சு….. இந்த காக்கா தொல்லை வேற…. தாங்க முடியல”என்க,

உடனே சத்யாவிடமிருந்து விலகியவள் வேகமாக தாயை தேடி ஓடிவிட்டாள். அவளது தந்தை காரை எடுத்து வர சென்றதால் அப்போது தப்பித்தால் இல்லையேல் அதற்கும் ஒரு முறைப்பை பார்சல் அனுப்பியிருப்பார் மனுஷன்.

தாயுடன் நின்றவள் அனைவரிடமும் விடை பெற்று கொண்டு கிளம்பிவிட்டாள். ஆணவனை திரும்பி திரும்பி பார்த்து கொண்டே.

புடவை எடுத்து வந்த பின் மீனாட்சி சத்யாவிடம் பயம் தெளிந்து சாதாரணமாக பேச துவங்கினாள். அவனும் அன்றைக்கு நடந்த விஷயங்கள், அவனது தனிப்பட்ட விருப்பங்கள் என அனைத்தையும் சொல்வான் , அனைத்தையும் அவள் அமைதியாகவும் மென் சிரிப்புடன் கேட்டு “ம்ம்….” கொட்டி கொண்டிருப்பாளே ஒழிய, அவளாக எதுவும் பேசமாட்டாள்.

போன் விஷயம் தந்தைக்கு தெரியாமல் பார்த்து கொண்டாள். தனமும் இருவரும் பேசி ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளட்டும் என்று அமைதியாக இருந்துவிட்டார்.

இரு குடும்பமும் இணைந்து நியமித்த திருமண நாள் அழகாக புலர்ந்தது.

அந்த ஊரே ஆச்சர்யபடும் அளவிற்கு திருமண ஏற்படுகளை செய்திருந்தார் சென்னப்பன். ஒரு வாரம் அனைவருக்கும் சாப்பாடு அவர் வீட்டில்தான். திருமணத்திற்கு முதல் நாள் வானவேடிக்கை, குதிரையில் மாப்பிள்ளை அழைப்பு என அமளி துமளி பண்ணினார்.

சத்ய தேவ் மணமேடையில் கம்பீரமாக அமர்ந்து ஐயர் கூறும் மந்திரங்களை கூறி கொண்டிருக்க, ஆகாய நீல நிற புடவை அணிந்து மயிலாக நடந்து அவன் அருகில் அமர்ந்தாள் மீனாட்சி.

ஒரு நிமிடம் இரு ஜோடி விழிகளும் சந்தித்து மீண்டது. பெண்ணின் காதோரம் குனிந்தவன் “அழகா இருக்கடி பொண்டாட்டி” என்று சொல்ல, அவனது அந்த அழைப்பு அவளுள் சிலென்ற உணர்வை ஏற்படுத்தியது.

கண்கள் மின்ன நாணத்தில் முகம் சிவந்தவள் தலை குனிந்து கொண்டாள்.

மங்கள நாதங்கள் முழங்க, ஐயர் மந்திரம் ஓத, சொந்தங்கள் சூழ மீனாட்சி கழுத்தில் மங்கள நாணை கட்டி தன் மனையாள் ஆக்கி கொண்டான் சத்ய தேவ்.

திருமணத்திற்கு பின்னான சடங்குகள் அனைத்தும் சிறப்பாக நடைபெற, மாப்பிள்ளை வீட்டிற்கு கிளம்பும் நேரமும் வந்தது. கண்களில் கண்ணீர் நிறைய அம்மாவிடமும், உடன் பிறந்தவர்களிடமும் விடை பெற்று மனதில் பல குழப்பங்களுடன் சென்னை நோக்கி தன் திருமண வாழ்க்கையை துவங்க கிளம்பினாள் மீனாட்சி சத்ய தேவ்.

காரின் முன் பக்கம் ஜெகன் டிரைவருடன் அமர்ந்து கொள்ள லதா, சத்யா, மீனா, மூவரும் பின் சீட்டில் அமர்ந்தனர். லதா பெரிய உருவாமாக இருப்பதால் மணமக்கள் இருவரும் இடித்து கொண்டு அமரும் நிலை.

அருகில் அமர்ந்திருந்தவனின் பாதி உடல் அவள் மேல் இருந்தது. அத்தோடு அவன் மேல் இருந்து வந்த ஆணிற்கே உரிய மணம் வேறு அவளுள் நடுக்கத்தை உண்டாக்க கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து அமர்ந்தாள்.

சத்யாவும் வேண்டுமென்றே அவளை நெருங்கி அமர்ந்தான். மேலும் இவள் நகற இவன் நகற என கார் கதவை இடித்து கொண்டு அமர்ந்திருந்தவள் காதோரம் குனிந்தவன் “அப்படியே கதவை உடச்சுட்டு விழுந்தறாத பொண்டாட்டி” என்று மென்மையாக சொல்லி, அவள் இடையை வருட, அவளோ விக்கித்து போனாள்.

அதிர்ந்து போய் அமர்ந்திருந்தவளை கண்டு சத்யாவிற்கு சிரிப்பு சிரிப்பாக வந்தது. அவளை சுயநினைவு அடைய செய்ய, அப்படியே அழுத்தமாக கிள்ள,

“ஈஸ்வரா……” என்ற கத்தலோடு தன்னிலை அடைந்தவளை கண்டு குறும்பாக சிரித்தவன் “என்ன கண்ண திறந்து வச்சுட்டு கனவு கண்ணுறியா. தப்புமா… தப்பு…. உன்னை சொல்லி ஒன்னும் இல்ல. எல்லாம் வயசு பண்ற சேட்டை. கண்டதை நினைக்காம வீட்டுக்கு போக நேரம் ஆகும். அதுவரை தூங்கு” என்று சொல்லி கண்ணடிக்க,

மீனாவோ ‘எதே நான் கனவு கண்டனா என்னடா இப்படி இறங்கிட்டீங்க. இல்லாத சேட்டை எல்லாம் பண்ணிட்டு, நான் கனவு கண்டனா? நான்பாட்டுக்கு சிவனேன்னுதானேடா இருந்தேன்” என்று அவனையே அப்பாவியாக பார்த்து கொண்டிருந்தாள்.

லதாவோ “கண்ணா நானும் இங்கதான் இருக்கேன்” என்று குரல் கொடுக்க,

மகனோ “ஹோ……நீங்க இங்கதான் இருக்கீங்களா, எனக்கு நாங்க ரெண்டு பேர் மட்டுமே இருக்க மாதிரி ஒரு பீலு…..” என்று கிண்டலாக சொல்ல,

மீனாவோ அத்தை தன்னை தவறாக நினைத்துவிட்டாரோ என்று பயந்து போய் பார்த்தாள்.

மருமகளின் முகத்தை வைத்தே அவள் மன ஓட்டத்தை புரிந்து கொண்டவர். அவளை சீண்ட எண்ணி “என்னம்மா மருமகளே வந்தவுடனே என் மகனை மாத்திட்ட இல்ல. நான் என் மகனை எப்படி அருமை பெருமையா வளர்த்தேன் ” என்று கோவம் போல் சொல்ல,

மீனாவோ பதறி “இல்லைங்க அத்த…அப்படி எல்லாம் எதுவும் இல்லைங்க. அவர்தான்…” என்று மேலும் ஏதோ சொல்ல வர,

சத்யாவோ “நீ ஏன் பயப்படுற. ஆமா என் புருஷன் நான் மாத்துறேன். அதுல உங்களுக்கு என்ன பிரச்சனை. நீங்க வேணா உங்க புருஷன மாத்திக்கோங்கன்னு சொல்லு பொண்டாட்டி” என்று சொல்ல,

‘இவர் என்ன இப்படி பேசுறாரு. தெரிஞ்சு பேசறாரா, தெரியாம பேசறாரா. ஆரம்பத்துலயே மாமியார் மருமக குடுமி பிடி சண்டை ஆரம்பிச்சுரும் போலயே. இவரே பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பிச்சும் வைப்பாரு போல, ஹையோ நமக்கு சண்டை போட வேற தெரியாதே’என்று மனதில் புலம்பியவள் மேலும் ‘போதும்மா போதும். என்ன விட்டுரு. எதா இருந்தாலும் அம்மா டூ மகன். மகன் டூ அம்மா நீங்களே பேசி டீல் பண்ணி கோங்க என்னை விட்ருங்க’ என்னும் ரீதியில் பார்த்து வைக்க, தாய், மகன் இருவரும் அவள் விழிப்பதை கண்டு வயிற்றை பிடித்து கொண்டு சிரிக்க துவங்கினர்.

ஜெகன்தான் மருமகளை பார்க்க பாவமாக இருப்பதை உணர்ந்து “போதும் விடுங்க. பாவம் அது எப்படி முழிக்குது பாருங்க. காலேஜ்ல புது புள்ளைங்கள ராக்கிங் பண்ற மாதிரி அம்மாவும் புள்ளையும் ஓவரா பண்ணிட்டு இருக்கீங்க” என்று சொல்ல, இருவரும் அடுத்த டார்கெட்டாக ஜெகனை தாக்க அவர் ஒருவர் இருவருக்கும் ஈடு கொடுத்து வம்பலந்து கொண்டு வர, ஆண்கள் இப்படி எல்லாம் சிரிப்பார்களா…. பேசுவார்களா என்று வாயை பிளந்து பார்த்து கொண்டு வந்தாள்.

ஒரு வழியாக கோவையில் இருக்கும் அவர்கள் இல்லத்திற்கு வந்து சேர்ந்தனர். காரில் இருந்து இறங்கிய மீனா வீட்டை பார்த்து ஆச்சர்யப்பட்டு போனாள்.

இரண்டடுக்கு மாளிகை போன்ற வீடு. முன் பக்கம் அழகாய் ஒரு சின்ன தோட்டம் என்று பார்த்தவுடனே அந்த இடம் அவளுக்கு பிடித்து போனது.

மருமகளை வீட்டின் உள்ளே அழைத்து சென்ற லதா விளக்கு ஏற்ற சொல்லி, சாமி கும்பிட்டனர்.

மணமக்கள் இருவரையும் பால், பழம் சாப்பிட்டுவிட்டு ஓய்வெடுக்க சொல்ல சத்யா தன் அறைக்கு சென்றுவிட்டான். மீனாவை கீழே இருக்கும் அறையில் தங்க சொன்னார் லதா.

வீட்டில் அவர்கள் நால்வர் மட்டுமே இருந்தனர். இயந்திர உலகில் திருமணம் முடிந்தவுடன் அனைவரும் கிளம்பி இருக்க, வீட்டின் அமைதி, புதிய சூழல் இரண்டும் மீனாவின் உறக்கத்தை தடுத்தது.

நேரம் வேகமாக செல்ல இரவும் வந்தது. நால்வரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டனர். மீனாவிற்கு நெஞ்சம் பட படவென அடிக்க நடுக்கத்துடனே அமர்ந்திருந்தாள்.

ஆண்கள் இருவரும் அறைக்கு சென்றுவிட மீனாட்சி கையில் பால் சொம்பை கொடுத்த லதா காலில் விழுந்தவளை தூக்கி நிறுத்தியவர் “நல்லா இருடா….. போடா …மாடில ரெண்டாவதா இருக்கறதுதான் உங்க ரூம். நான் போய் படுக்கறேன். மாத்திரை போட்டது தூக்கமா வருது” என்று சொல்லி சென்றுவிட்டார்.

மனதில் எழுந்த பட படப்புடனும் பயத்துடனும் சத்யாவின் அறைக்குள் நுழைந்தாள். உள்ளே யாரும் இல்லாமல் இருப்பதை கண்டு “இவர் எங்க போனார்” என்று புருவம் சுருக்கியவள் சுற்றி முற்றி பார்க்க திடீரென்று கதவு பின் இருந்து வந்தவன் அவள் கையை சுழற்றி தன் அருகில் இழுக்க, அவன் மார்பில் மோதி நின்றவள் “ஆஆ….” என்று அலற,

அவள் வாயில் கை வைத்து மூடியவன் “ஹேய் மீனுக்குட்டி நான்தான் கத்தி மானத்த வாங்காத” என்றவுடன்தான் ஆசுவாசமானவள்,

“நீங்கதானா. நான் பயந்துட்டேன்”.

“அடியே மீனுக்குட்டி. நம்ம ரூம்ல என்ன தவிர வேற யாரு வர போறா. சரி சரி வா போய் உட்காருவோம்” என்று அழைத்து சென்று அமர வைத்தான்.

மீனாவிற்கு அனைத்தும் புதிதாகவும், பயமாகவும் இருக்க ‘டேய் என்னை விட்டுடுங்கடா நான் எங்க அம்மாகிட்ட போகணும்’ என்ற எண்ணம் தோன்ற, அவள் கண்கள் கலங்க துவங்கியது.

மனையாளின் கண்ணீரை கண்டு அரண்டு போனவன் “ஹேய் என்ன ஆச்சு. ஏன் அழற? நான் சும்மா விளையாட்டுக்கு அப்படி பண்ணுனேன். அழாத. என்ன ஆச்சு சொல்லு” என்க,

அவளோ “நான் எங்க அம்மாட்ட போகணும்”என்று அழ,

சத்யாவிற்கு சிரிப்பு வர அதை கஷ்டப்பட்டு அடக்கியவன் புரியாதது போல் “என்ன சொன்ன? எனக்கு புரியல? என்க,

பெண்ணவளோ மீண்டும் அழுகையோடு “நான் அம்மாட்ட போகணும்” என்று சொல்லி, சிறுபிள்ளை போல் கண்களை தேய்த்து கொண்டு அழ, அதற்கு மேல் அடக்க முடியாமல் சிரிக்க துவங்கினான் சத்யா.

கணவனின் சிரிப்பை இமைக்காது பார்த்தவள் அழுகையையே மறந்து போனாள். அவளது பார்வையை கவனிக்காதவன் “நீ என்ன குட்டி பாப்பாவா அம்மாட்ட போகணும்னு அழற. என் பக்கத்து வீட்டு பாப்பா பிங்கி கூட இப்படி அழமாட்டா. நீ அவளைவிட குட்டி பாப்பாவோ அதான் இப்படி அழறியா” என்று சொல்ல,

அதில் ரோஷம் வர பெற்றவள் “நான் ஒன்னும் பாப்பா இல்ல. சும்மா அம்மாட்ட இட்லி வெந்துருச்சானு எப்படி கண்டுபிடிக்கறதுனு கேட்கணும் அதான் அம்மாட்ட போகணும்னு சொன்னேன்”

சத்யா, “ஹோ…. அப்படியா அப்புறம்….. கண்ணுல ஏன் தண்ணி….”

“அ…. அ…. அது கண்ணு தண்ணி இல்லங்க வியர்வை பாருங்க வேர்க்குது” என்று ஏசி அறையில் இருந்து கொண்டு பொய் சொன்னவளை கண்டு மேலும் சிரிப்பு வர சத்தம் போட்டு சிரிக்க துவங்கினான்.

சத்யாவின் சிரிப்பை இமைக்காது பார்த்தவளின் பார்வையை , இந்த முறை சத்யா கவனித்துவிட்டான்.

“என்ன? நான் அழகா இருக்கனா? பார்த்து முடிச்சுட்டியா” என்க,

அவளோ ஹையோ கண்டுபிடிச்சுட்டாரே. இப்போ எப்படி சமளிக்கறது’ என்று யோசித்தவள் பின் “இல்லங்க நான் உங்களை பார்க்கல. உங்க பின்னாடி இருந்த பொம்மைய பார்த்தேன்” என்று அப்பாவியாக சொல்ல,

அவளையே குறும்பாக பார்த்தவன் “நம்பிட்டேன்…. நம்பிட்டேன். நீ மீனு குட்டி இல்லடி. சரியான பூனகுட்டி. பண்றதெல்லாம் பண்ணிட்டு, அப்பாவி புள்ள மாதிரி மூஞ்ச வச்சிக்கற ம்ம்…” என்க, அவளோ திரு திருவென விழித்தாள்.

மனையாளின் விழி அழகில் மயங்கியவள் தன்னையும் அறியாமல் அவள் இதழில் மென் முத்தம் பதிக்க, அவளோ திகைத்து போய் அமர்ந்திருந்தாள்.

தன்னையும் அறியாமல் நடந்த நிகழ்வில் வெட்கம் கொண்டவன், தன் முடியை அழுந்த கோதி, அவளை பார்க்க, அவளோ சிலையாக அமர்ந்திருந்தாள்.

“மீனு….. மீனு” என்று அழைத்து பார்த்தவன் அவளிடம் பதில் இல்லை என்றவுடன் தன் அவசர செயலை எண்ணி தலையில் அடித்து கொண்டவன். அவள் தோளை பிடித்து உளுக்கி சுய நினைவு அடைய செய்ய அவளோ திருவிழாவில் தொலைந்து போன குழந்தை போல் விழித்தாள்.

உடனே சத்யா பேச்சை மாற்ற எண்ணி “எதுக்கு அம்மாட்ட போகணும்னு சொன்ன. உன்ன இங்க யாரவது எதாவது சொன்னாங்களா” என்று கேட்க,

பதறியவள் “இல்லங்க அப்படி எல்லாம் இல்ல. புது இடம், புது மனுஷங்க” என்றவள் தயங்கி “நீங்க…. நீங்க….” என்று தயங்க,

சத்யாவோ “பாரு மீனு. கணவன் மனைவிக்குள்ள இது சாதாரண விஷயம்தான். கல்யாணம்னா எல்லாமே இருக்கும்” என்றவன் ‘எல்லாமே….’ என்பதில் அழுத்தம் கொடுத்து சொல்ல, அவளோ மிரண்டு விழித்தாள்.

“சாரி. நீ அப்படி பார்க்கவும்…. சரி உனக்கு டைம் வேணுமா? என்று கேட்க, அவள் ஆமாம்…. இல்லை…. என்று இரு புறமும் மாற்றி மாற்றி ஆட்ட, அவளை அமைதியாக பார்த்தவன் “எதுக்கு பயம். நான் உன் புருஷன்தான். வாழ்க்கை முழுக்க நாம ரெண்டு பேர் மட்டும்தான் ஒன்னா இருக்க போறோம். நாம பெத்தவங்களாலையும் அதை மாத்த முடியாது. நாம பெக்க போறவங்களாலயும் மாத்த முடியாது. உனக்கு என்கிட்ட எதாவது சொல்லனும்னா பயப்படாம சொல்லு” என்றான்.

அவளோ அவனையே பார்த்து கொண்டு என்ன சொல்வது என்று புரியாமல் இருக்க, ஓரளவுக்கு அவள் மன நிலையை புரிந்து கொண்டவன் சாதாரணமான பேச்சை துவங்கினான்.

“நீ என்ன படிச்சிருக்க? என்ன பிடிக்கும்?” என்று அவளைபற்றி கேட்க துவங்கினான். அவளும் ஒன்று, இரண்டு வார்த்தைகளாக ஆரம்பத்தில் பேசியவள் பின் தயக்கம் விடுத்து சரளமாக பேச துவங்கினாள்.

பேசி பேசியே அவள் மன நிலையை மாற்றியவன், ஒன்றை தெளிவாக புரிந்து வைத்திருந்தான். அது அவள் தந்தை. அவளின் ஒவ்வொரு பேச்சிலும், செயலிலும் அவர் மட்டுமே இருந்திருக்கிறார். அவளுக்கு என்று தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளுக்கு எந்த இடமும் அவர்கள் வீட்டில் இல்லை என்பதை உணர்ந்து கொண்டான்.

மனைவியின் குண்டு விழிகள் உருளும் அழகையும், கை அசைத்து அவள் பேசும் அழகையும் கன்னத்தில் கை வைத்து கேட்டு கொண்டிருந்தான்.

கணவன் மனைவி இருவரும் பேசி ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வதுதான் மணவாழ்க்கையின் முதல் படி.

சத்யா மனைவியை புரிந்து கொள்வானா…….