இரண்டு நாட்கள் மருத்துவமனை வாசம் முடிந்து வீடு திரும்பியிருந்தார் மனோன்மணி. சுந்தரவடிவு அவரை வாசலில் நிறுத்தி ஆரத்தி எடுக்க, “அப்படியே உங்க மருமகளுக்கும் எடுங்க அத்தை. அவளும் இப்போ தானே வீட்டுக்கு வர்றா” என்ற மீனாட்சியை பொதுவில் வைத்து எதையும் சொல்ல முடியாமல், ஆரத்தி தட்டை அவள் கையிலேயே திணித்துவிட்டு சென்றார் வடிவு.
மீனுவும், வேல்விழியும் இதற்கெல்லாம் கவலைப்படாமல், இருவருமாக சேர்ந்து ஆரத்தி சுற்றியவர்கள், வெற்றியிடம் பலமாக ஒரு தொகையை வாங்கிக்கொண்டே அவனை வீட்டிற்குள் அனுமதித்தனர்.
மனோன்மணியின் கண்ணசைவில் தேனருவியை பூஜையறைக்கு அழைத்துச் சென்ற மீனாட்சி அவளை விளக்கேற்ற வைத்து அழைத்து வர, மனோன்மணி பேத்திகளை தன்னுடன் இருத்திக் கொண்டார்.
இரண்டு நாட்களாக இதுதான் நடக்கிறது. வேல்விழியும், மீனாட்சியும் எங்கும் விலகாமல் பாட்டியை அடைகாத்துக் கொண்டிருந்தனர்.
சக்தி பார்க்கும் நேரமெல்லாம் அவரை முறைத்தபடியே சுற்றிவர, அவனிடம் தனியே சிக்கிக்கொள்ள கூடாது என்று தான் இந்த போராட்டம்.
சொக்கநாதர் வேறு உண்மை நிலவரம் புரியாமல், மனைவியை விழுந்து விழுந்து கவனித்துக் கொண்டிருக்க, “இவர் வேற” என்று அதற்கும் சேர்த்து முறைத்தான் பேரன்.
இன்னும் மீனாட்சியிடமும் பேசவில்லை சக்தி. ஆனால், அவளும் அதற்காக கவலைப்பட்டதாக காண்பித்துக் கொள்ளாமல், இயல்பாகவே சுற்றிக் கொண்டிருந்தாள்.
சுந்தரவடிவு சமையல் வேலையை பார்த்துக் கொண்டிருக்க, மீனாட்சி அவருடன் சென்று நின்றாள். அவர் கொடுத்த வேலைகளை செய்து முடித்தவள், உணவை எடுத்து வைக்க, வடிவு பரிமாறுவதற்கு கூட சமையல் அறையை விட்டு வெளியே வரவில்லை.
என்னவோ, மற்றவர்களைப் போல் மகனை அவரால் இயல்பாக கடந்துவிட முடியவில்லை அவரால். வெற்றி அவரின் வளர்ப்பு. அவன் தப்பி போனதை இன்று வரையும் அவரால் ஏற்க முடியவில்லை.
சக்தி எப்போதுமே அதிகம் ஒட்டிக் கொள்ளமாட்டான். ஆனால், வெற்றி அப்படி இல்லையே. எப்போதும் அன்னையின் முந்தானையைப் பிடித்தபடி சுற்றி வந்தவன். பள்ளி, கல்லூரியில் நடப்பது மொத்தமும் அந்த நாள் இரவுக்குள் எப்படியும் அவர் காதுக்கு வந்துவிடும். சொல்லிவிடுவான் மகன்.
இல்லாவிட்டால், அன்றிரவு தூக்கமே கொள்ளாது என்பதுபோல் அன்னையை சுற்றி வந்தவன் அவன். அப்படியிருக்க, இத்தனை பெரிய விஷயத்தை மகன் செய்து வைத்திருக்க, அதிலிருந்து மீள முடியாமல் தான் தவித்துக் கொண்டிருக்கிறார் சுந்தரவடிவு.
அவருக்கும் மகன் மீது எல்லையற்ற பாசம் இருக்கிறது தான். இப்போதும் வெகுவாக முயன்று தான் தன்னை கட்டுப்படுத்திக் கொண்டிருக்கிறார். ஆனால், மகன் கொடுத்த காயம் பெரிதாக இருக்க, அவரால் அந்த வலியை தாங்கவே முடியவில்லை.
இப்போதும் மகனின் முகத்தை பார்க்க பார்க்க, எங்கே உடைந்து விடுவோமோ என்ற அச்சம் பிரவாகம் போல் பொங்க, அதிலிருந்து தப்பிப்பவராக சமையல் அறைக்குள் ஒளிந்து கொண்டிருக்கிறார்.
வெற்றி – தேனுவை வேல்விழி உணவுண்ண அழைத்து வர, வெற்றியின் கண்கள் அம்மாவைத் தான் தேடியது. பலநாள் கழித்து அன்னையின் கையால் சாப்பாடு என்று உள்ளுக்குள் பூத்திருந்தவன், அன்னையை காணாமல் முகம் சுருங்க, மீனாட்சி சமையல் அறையை கண் காட்டினாள்.
வெற்றி சாப்பாட்டு மேசையை கடந்து, சமையல் அறைக்குள் கால் எடுத்து வைக்க, சமையலறையின் பின்பக்க படிக்கட்டில் தொய்ந்து அமர்ந்துவிட்டிருந்தார் சுந்தரவடிவு.
“அம்மா” என்று வெற்றி அவரின் பின்னே சென்று நிற்க, சட்டென எழுந்து விட்டார்.
அவன் முகம் பார்க்காமல், அவனை தாண்டிக் கொண்டு அவர் நடக்க, அவரின் சேலை முந்தானையை பிடித்துக் கொண்டான் வெற்றி.
இது எப்போதும் உள்ள வழக்கம் தான். பல நேரங்களில் அன்னையின் முந்தானையை பிடித்து விளையாடிக் கொண்டிருப்பான் அவன். இதற்காக தங்கவேல் கூட மகனை கேலி செய்வார்.
அதே நியாபகத்தில் அவன் இப்போதும் அம்மாவின் முந்தானையை பிடித்திருக்க, அங்கே நிற்க பிடிக்காமல் முந்தானையை இழுத்துக் கொண்டவர், வேகமாக தனது அறைக்குள் நுழைந்து கொண்டார்.
“ம்மா ப்ளீஸ்மா” என்று வெற்றி அவரின் பின்னோடு செல்ல, மகன் நெருங்குவதற்குள் அறைக்கதவை மூடி தாழிட்டு கொண்டார்.
வெற்றி அந்த அறையின் வாசலில் நின்றவன், “ம்மா… என்கிட்டே பேசும்மா… நான் ஏன் இப்படி பண்ணேன்னு கேட்டு என்னை திட்டும்மா. அடிக்க கூட செய். ஆனா, என்கிட்டே பேசேன்” என்று அவன் கண்ணீர் குரலில் பேச, காதுகளை பொத்திக்கொண்டு கட்டிலில் அமர்ந்து விட்டிருந்தார் சுந்தரவடிவு.
தங்கவேல் அன்னையை வீட்டில் விட்டு ஏதோ அவசர வேலையாக கிளம்பியிருந்தவர், அப்போதுதான் வீட்டிற்குள் நுழைய, மகனின் கண்ணீரை கண்ட நிமிடம் உருகத்தான் செய்தது அவருக்கு.
ஆனால், மனிதர் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. அவன் மீது இருந்த கோபத்தை இழுத்து பிடிப்பவராக, “டேய்… அங்கே என்னடா பண்ற?” என்று கத்திகொண்டே மகனை நெருங்க, கண்களில் வழிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டு எழுந்து நின்றான் மகன்.
ஏக்கம் நிறைந்த அவன் முகம் பெற்றவரை உலுக்கினாலும், அவனால் நடந்த அத்தனை விஷயங்களையும் நினைவுபடுத்திக் கொண்டவர் முகத்தை திருப்பிக் கொண்டார்.
மேலும், “மீனாட்சி” என்று மருமகளை அவர் அழைக்க,
“மாமா” என்று அவள் இடையிட,
“இவன்கிட்ட சொல்லி வை. என் கண்ணுல இவன் படவே கூடாது. என் அம்மாவுக்காக இவனை இந்த வீட்டுக்குள்ள விட்டு இருக்கேன். அவ்ளோதான். மத்தபடி, இன்னும் எதுவும் மாறல. அப்பன் பிள்ளைன்னு உறவு கொண்டாடிட்டு என் முன்னாடி வர வேண்டாம்னு சொல்லி வை இவன்கிட்ட” என்றவர் வந்தவழியே திரும்பி விட்டார்.
வெற்றி சில நிமிடங்கள் அங்கேயே தேங்கிவிட்டவன், அதற்குமேல் அங்கு நிற்க மனமில்லாமல் அவன் அறைக்கு சென்றுவிட, “வெற்றி” என்று மனோன்மணியும் எழுந்துவிட்டார்.
“பாட்டி” என்று அவர் கைப்பிடித்து அமரவைத்த மீனாட்சி, “நீங்க சாப்பிடுங்க” என்று அவருக்கு உணவை எடுத்து வைக்க,
“அவன் இப்போ யார் சொன்னாலும் சாப்பிட மாட்டான் பாட்டி. நீங்க சாப்பிடுங்க” என்றாள்.
தேனருவி இதுவரை யாரிடமும் பேசாமல், கண்ணீருடன் சுவற்றில் சாய்ந்து நின்றிருக்க, மீனு அவளை அழைக்கவும், “இல்ல.. அவர்கிட்ட” என்றவள் பேச்சு வராமல் படிகளில் ஏறிவிட்டாள்.
“ஐயோ பிள்ளை அழுதுட்டே போறாளே… வந்த முத நாளே இப்படி என் பேத்தியை அழ வச்சுட்டாளே” என்று மனோன்மணி வடிவை நொந்து கொள்ள,
“நீ சாப்பிடு பாட்டி” என்றாள் மீனு.
“எனக்கு எப்படிடி சோறு இறங்கும். பிள்ளைங்க ரெண்டும் பட்டினியா கிடக்கே.” என்று அவர் மேலும் புலம்ப,
“அது உன் மருமக பாடு. அவங்க தான அவனை சாப்பிட விடாம பண்ணது. அவங்களே அவனை சாப்பிட வைக்கட்டும். நீ சாப்பிடு.” என்றாள் மீனாட்சி.
“எனக்கு பசிக்கவே இல்ல மீனு” என்று பாவமாக கூறியவர், “நீங்க சாப்பிடுங்க” என்று எழுந்துவிட்டார்.
வேல்விழிக்கும் உணவுண்ணும் எண்ணமில்லை என்று அவளும் எழுந்துவிட, சக்தியும், சொக்கநாதரும் இன்னும் வீட்டிற்கு வந்து சேர்ந்திருக்கவில்லை.
இதில் மீனு யாருக்கு சாப்பாடு போடுவது என்று நொந்து போய், வடிவின் அறைக்கதவை தட்டினாள்.
அவர் திறக்க வேண்டுமே. “வெற்றி இல்ல அத்த. நான் மீனாட்சி” என்று அழுத்திக் கூறியவள் அங்கேயே நிற்க, வடிவு கதவை திறக்கவும், “யாருக்கும் சாப்பாடு வேண்டாமாம் அத்த. தாத்தாவும், மாமாவும் இப்போ வந்திடுவாங்க. அவங்களுக்கு மட்டும் நீங்க எடுத்து வச்சிடுங்க ப்ளீஸ்” என்றவள் அவர் பதிலுக்கு காத்திராமல் தனது அறைக்கு வந்துவிட்டாள்.
வடிவுக்கு மருமகளின் குத்தல் புரியாமல் இல்லை. ஆனாலும், மனம் இறங்க மனமில்லை. மீண்டும் அறைக்குள் சென்று அமர்ந்து கொண்டார் அவர். ஒருமணி நேரம் கழிந்த பின்பே, மகனும், மாமனாரும் வந்து சேர, அவர்களுக்கு உணவு எடுத்து வைத்தார்.
சக்தியும், சொக்கநாதரும் உண்டு முடிக்கும் நேரம் தங்கவேலுவும் வந்து சேர, அவருக்கும் பரிமாறியவர், தான் மட்டும் உண்ணவில்லை. சக்தி ஏதோ யோசனையில் இருந்தவன், அவரை கவனிக்காமல் உண்டு முடித்து அறைக்கு வர, மனைவி அலைபேசியில் பாடல் கேட்டுக் கொண்டிருந்தாள்.
காதில் இயர் போனை மாட்டிக் கொண்டிருந்தவள் இவன் வந்ததைக் கூட உணராமல் இருக்க, சக்தி அவள் காதுகளில் இருந்த இயர் போனை எடுத்து விட்டவன் அவளை முறைக்க, “இப்போ என்ன ஆச்சு? நான் அதிகப்பிரசங்கித்தனம் எதுவும் செய்யலையே மாமா” என,
சக்தி, “நான் கேட்டேனா” என்று முறைக்க,
“நீங்க முறைச்சா, எனக்கு பயமா இருக்கே மாமா” என்றாள் கட்டிக் கொண்டவள்.