சக்தி-மீனாட்சியின் திருமணம் முடிந்து அத்தனைப் பேரும் வீடு திரும்பிய பின்னும் கூட, வள்ளியம்மை மகளை வந்து பார்க்கவில்லை. முத்தையன் கோவிலில் இருந்து மனைவியின் பின்னே ஓடியவர் தான். அவரும் இதுவரை வந்து சேரவில்லை.
இதோ அதோ என்று நேரம் கடந்து கொண்டிருக்க, மதியம் முடிந்து மாலை ஆரம்பித்த நேரம் முத்தையன் மட்டும் வந்து நிற்க, மொத்த குடும்பமும் அவர் முகத்தைத் தான் பார்த்து நின்றது.
“உனக்கு கண்டிப்பா வரவேற்பு நடக்கணுமா?” என்று மீனாட்சியிடம் கேட்டான் சக்தி.
அவள் மறுப்பாக தலையசைக்க, “அத்தை இல்லாம எதுவும் செய்ய வேண்டாம் மாமா. நீங்க ஏற்பாடெல்லாம் நிறுத்த சொல்லிடுங்க” என்றுவிட்டான் சக்தி.
“டேய் என்னடா சொல்ற நீ. அதெல்லாம் எதையும் நிறுத்த முடியாது” என்று சொக்கநாதர் ஆரம்பிக்க,
“இப்போவாவது என் பேச்சை கேளுங்க தாத்தா. உங்களுக்கு என்ன? அதுதான் கல்யாணம் பண்ணிக்கிட்டோம் இல்ல. அதோட விடுங்க. வேற எதுவும் பேசக்கூடாது நீங்க” என்று அதட்டினான் அவரையும்.
“எல்லா ஏற்பாடும் பண்ணிட்டு இப்போ நிறுத்தினா, கேக்குறவனுக்கு என்ன பதில் சொல்றது. என் குடும்ப கசப்பை ஊருக்கே தெரியப்படுத்தணும்னு நினைக்கறியா.” என்றார் சொக்கநாதர்.
“ஆமா சக்தி. மாமா சொல்றது தான் சரி. கடைசி நேரத்துல விசேஷம் நின்னுப் போனா, அதைக்கொண்டு ஆயிரம் கேள்வி வரும்.பார்க்கிறவங்களுக்கு இன்னும் இளப்பமா போயிடும்” என்று முத்தய்யனும் எடுத்துக் கூற,
“அத்தை எங்கேன்னு கேட்கிறவங்களுக்கு என்ன பதில் சொல்லுவீங்க மாமா. அதோட இத்தனை நடந்த பிறகு வெற்றியும் நிச்சயமா அந்த பக்கம் வரமாட்டான். இப்படி இவங்க ரெண்டு பேரையும் தள்ளி நிறுத்திட்டு, மாலையும் கழுத்துமா நின்னு என்ன செய்ய போறோம் ரெண்டு பேரும்.” என்றான் சக்தி.
“தாத்தாவுக்கு கொஞ்சம் உடம்பு முடியல. அதனால வரவேற்பு இன்னைக்கு இல்ல. கூடிய சீக்கிரமே, பெரிய விருந்து கொடுத்திடுவோம்னு நீங்களே எல்லாருக்கும் அழைச்சு சொல்லிடுங்க” என்று முடித்தவனிடம் என்ன பேசுவது என்று புரியவில்லை முத்தையனுக்கு.
தங்கவேல் எதிலும் கலந்து கொள்ளாமல் அமைதியாகவே அமர்ந்திருக்க, “நீ எதையாவது சொல்லேன்ப்பா” என்று முத்தையன் அவரின் எண்ணத்தை கேட்க,
“இப்போ யாருக்கும் விசேஷம் நடத்துற மனநிலை இல்ல மச்சான். வள்ளியம்மை இல்லாம அவ பொண்ணுக்கு எப்படி விசேஷம் வைக்க முடியும். நீ அவன் சொன்னபடியே செய். அதுதான் சரி.” என்றார் அவரும்.
சக்தி அமைதியாக எழுந்து விட, “பிள்ளைகளைப் பாரு வடிவு. சாப்பிட கொடு. அடுத்து என்ன நடக்கணுமோ, அதை கவனி.” என்று தங்கவேலுவே அத்தனைப் பேரையும் அங்கிருந்து நகர்த்தினார்.
சொக்கநாதர் வாய் திறக்காமலே இருக்க, ” என்னப்பா…” என்று அவரிடமும் தங்கவேல் பேச முயற்சிக்க, மனிதர் அமைதியாக எழுந்து தன் அறைக்குச் சென்றுவிட்டார்.
மனோன்மணி, “கொஞ்ச நேரம் படுக்கட்டும் தங்கம். அசந்து போயிருக்காரு. நாளைக்கு பேசிக்கலாம். நீயும் மருமகனும் ஆக வேண்டியதைப் பாருங்க” என்று முடித்துவிட்டு, அவரும் பூஜையறையில் சென்று அமர்ந்துவிட, வேல்விழி மீனாட்சியை சக்தியின் அறைக்கு அழைத்துச் சென்றாள்.
மீனாட்சியை அறையில் விட்டவள், அன்னைக்கு உதவும் எண்ணத்தில் கீழே இறங்கிவிட, இதற்குள் வீட்டில் இருந்த ஒன்றிரண்டு சொந்தங்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
அத்தனைப் பேரும் வள்ளியம்மையை நினைத்து நொந்தபடி, ஒவ்வொருவராக கலைந்து கொண்டிருக்க, வடிவு எதையும் வெளிகாட்டிக் கொள்ளாமல், இரவு உணவுக்கு தயார் செய்ய தொடங்கி இருந்தார்.
சக்தி தனது அலைபேசியுடன் வீட்டின் பின்புறம் வர, வெற்றியும் சரியாக அழைத்துவிட்டான்.
“சொல்லுடா” என.
“பிழைச்சுட்டாளாம்டா. கொலைகாரப் பாவி. எவ்ளோ நல்ல எண்ணம்டா அவளுக்கு. செத்தே தொலைச்சிருக்கலாம்டா அவ” என்று இடைவிடாமல் ஸ்வேதாவை திட்டித் தீர்த்துக் கொண்டிருந்தான் வெற்றி.
“விட்டு தொலைடா. இப்போ அதைப்பத்தி என்ன பேச்சு” என்று சக்தி அந்த பேச்சை தவிர்க்க நினைக்க,
“விடுறதா… அவளை அங்கேயே சாக விட்டு இருக்கணும்டா” என்று அப்போதும் ஆத்திரம் குறையாமல் கத்திக் கொண்டிருந்தான் வெற்றி.
நடந்தது இதுதான். ஸ்வேதா தற்கொலைக்கு முயன்று இருந்தாள். அதுவும் சக்தியின் திருமணத்தை நிறுத்திவிடும் நோக்கில், அன்று காலையில் அளவுக்கதிகமான மாத்திரைகளை உட்கொண்டு இருந்தவள், காரை எடுத்துக்கொண்டு சக்தியின் திருமணம் நடந்த கோவிலுக்குத் தான் கிளம்பி இருந்தாள்.
ஆனால், அவள் ஒன்று நினைக்க, நடந்தது வேறு. அவள் எடுத்துக்கொண்ட மாத்திரைகளின் வீரியம் அதிகமாக இருந்ததில் கோவிலுக்கு செல்லும் வழியில் நினைவு தப்பியிருந்தது அவளுக்கு. அவள் ஒட்டி வந்த கார் தன் கட்டுப்பாட்டை இழந்து, வழியில் இருந்த ஒரு புதரில் மாட்டியிருக்க, ஆள் அரவம் அற்ற இடம் என்பதால் யார் கண்ணிலும் படவில்லை அவள்.
அப்படியே விட்டிருந்தால் இறந்தும் போயிருப்பாள். அவளின் நல்ல நேரமோ, என்னவோ, சக்தியின் திருமணத்திற்கு வந்த வெற்றியின் கண்களில் அவள் பட்டுவிட, அவளை சரியான நேரத்தில் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்து இருந்தான் வெற்றி.
அதோடு நிற்காமல், அவள் குடும்பத்திற்கும் அழைத்து தகவல் கூறியவன், அங்கிருந்து அடித்துப் பிடித்து திருமணத்திற்கு வந்து சேர்ந்திருந்தான்.
மீனாட்சி தான் ‘வந்தே ஆக வேண்டும்’ என்று மிரட்டி இருந்தாளே. அவளுக்கு பயந்து வெற்றி ஓடிவர, வள்ளியம்மை அவனைக் காணவும், ஆடி தீர்த்து இருந்தார்.
காலையில் நடந்த கலவரத்தில் அப்போது சக்தியிடம் தகவல் தெரிவிக்காமல் போனாலும், அதன் பின்னே அலைபேசியில் அழைத்து அவனுக்கு விவரம் சொல்லி இருந்தான் வெற்றி.
ஸ்வேதாவின் செயல் சக்திக்கும் அதிர்ச்சிதான் என்றாலும், வெற்றி அளவுக்கெல்லாம் இல்லை. ஸ்வேதாவிடம் இருந்து நிச்சயம் எதிர்வினையை எதிர்பார்த்து தான் இருந்தான் அவன். ஆனால், இந்த அளவுக்கு இறங்குவாள் என்று அவனும் நினைக்கவில்லை.
ஏற்கனவே அவன் குடும்பத்தில் இருக்கும் பிரச்சனைகளே அவனை ஓயாமல் விரட்டிக் கொண்டிருக்க, இதில் இவள் வேறு என்று அலுப்பு தான் தோன்றியது சக்திக்கு.
வெற்றியிடம் பேசி முடித்தவனுக்கு, அதற்கு மேலும் ஸ்வேதாவைப் பற்றி யோசிக்கும் எண்ணமெல்லாம் இல்லை. அப்போதைக்கு அவன் கண்களும், உடலும் ஓய்வுக்கு கெஞ்ச, சற்று நேரம் உறங்கும் எண்ணத்தில் தான் அவன் அறைக்கு வந்தது.
ஆனால், அவன் அறையில் ஏற்கனவே அவன் மனைவி உறங்கி கொண்டிருக்க, அவளைக் காணவும், வாயில் கைவைத்து மூடிக் கொண்டவன் சிறு சிரிப்புடன் சில நிமிடங்கள் அப்படியே நின்றுவிட்டான்.
“என் மனைவி இவள்” என்று மனம் ஆழ்ந்து அவனிடம் ரகசியம் பேசியதில் சிறு வெட்கம் வந்து ஒட்டிக் கொண்டது அவனிடம்.
இத்தனைப் பிரச்சனைகளுக்கும் அயர்ந்து போய் கண்ணீர் வடிக்காமல், உடையை மாற்றிக்கொண்டு, மணப்பெண் வேடம் எல்லாம் களைத்து, இயல்பாக ஒரு இரவு உடையுடன் உறங்கி கொண்டிருந்தவளை நினைத்து புன்னகை தான் வந்தது சக்திக்கு.
“என்ன மேக்டா இவ” என்று தனக்குத்தானே பேசிகொண்டவன், அமைதியாக கட்டிலின் மறுபுறம் வந்து விழுந்தான்.
சில நிமிடங்கள் மீனாட்சியின் முகம் பார்த்தது தான் நினைவில் இருந்தது அவனுக்கு. அதற்குமேல் அவனும் உறங்கிவிட, கதவைகூட மூட மறந்து உறங்கிப் போயிருந்தனர் மணமக்கள்.
வேல்விழி இவர்களை உணவுக்கு அழைக்க வந்தவள் இவர்கள் உறங்கும் அழகைப் பார்த்து, அமைதியாக கதவை மூடிக்கொண்டு கீழிறங்கி விட்டாள்.
அதன்பின்னரும் யாரும் அவர்களை இடையூறு செய்யாமல் அவள் பார்த்துக்கொள்ள, இரவு ஒன்பது மணிக்கு மீனாட்சி தான் உறக்கம் களைந்து எழுந்தாள் முதலில்.
அருகில் உறங்கிக் கொண்டிருந்தவனை கண்டு முதல் நொடி குழம்பியவள், அடுத்தநொடி அவன் கன்னக்குழியில் விரல் வைத்து விளையாட ஆரம்பித்துவிட்டாள்.
உண்மையில், உறங்கி எழுந்தது கொஞ்சம் புத்துணர்ச்சியாக இருக்க, இருக்கும் அத்தனை சச்சரவுகளும் சற்றே மறந்து போயிருந்தது போல.
அந்த நொடி அவளின் இயல்பான விளையாட்டுத்தனம் தான் தலை தூக்கியது.
அவன் கன்னத்தில் விறல் வைத்து அழுத்தி விளையாடியவள், லேசாக அந்த குழியை வருடிவிட, தூக்கத்தில் அவள் கையைத் தட்டிவிட்டு மீண்டும் உறங்கினான் சக்தி.
அதில் சிரித்தவள், அவனது தலைமுடியை கலைத்து விளையாடி, பின் அவனை உறங்கவிட்டு அறையை விட்டு வெளியே வந்தாள்.
வேல்விழி மாடி ஹாலில் இருந்த சோஃபாவில் அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டிருக்க, அவள் அருகில் சென்று அமர்ந்தாள் மீனு.
“ஹே முழிச்சிட்டியாகும்பகர்ணி…” என்று இவளைக் கண்டதும் அவள் கத்த,
“பசிக்குதுடி” என்றாள் மீனு.
வேல்விழி உருகிப்போக, “வா வா… சாப்பிடு முதல்ல” என்று அவள் கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு கீழே வந்துவிட்டாள்.
வடிவு ஏற்கனவே இவர்களுக்காக காத்திருக்க, அவரின் பார்வையில் இருந்த தேடலில், “உங்கப்பையன் தூங்குறார் அத்தை” என்றாள் புது மருமகள்.
வடிவு மெல்ல சிரித்தவராக, “நீ வா.. சாப்பிடு” என்று அவளுக்கு உணவைப் பரிமாற, பெண்கள் இருவரும் உண்டு முடித்தனர்.
வடிவு மீண்டும் அதே உணவு மேசையில் அமர, மீனுவும் அவருடன் அமர்ந்து கொண்டாள்.