“நான் ஏதோ நீ சைட் அடிக்கிறன்னு நினைச்சேன்டி. ஆனா, இவ்வளவு சீரியஸா இருப்பேன்னு நினைக்கலை ஆரா” என்றாள் கவலையுடன். அவர்கள் பேசிக் கொள்வதும் ஆரா கண்களில் இருந்து கண்ணீர் வருவதும், அதை அவள் யாரும் அறியாமல் துடைத்தபடி பேசிக் கொண்டிருப்பதையும் பார்த்தவனின் கண்கள் யோசனையில் சுருங்கியது.
யோசனையுடன் அவர்கள் அருகில் சென்று டிக்கெட்டை நீட்ட,
“எப்போதும் மித்ரா தான் டிக்கெட்டை வாங்குவாள். அன்று அவன் ஆராவிடம் நீட்ட, விழி விரித்து பார்த்தவள் அதை வாங்கிக் கொள்ள, மித்ராவோ பணத்தை நீட்டினாள். அவனோ அதை வாங்காமல் மற்றவர்களுக்கு டிக்கெட் கொடுக்கும் பணியை செவ்வனே செய்ய,
“கதை அப்படி போகுதா?” என்றாள் மித்ரா.
“எப்பவும் என்கிட்டே தான குடுப்பாங்க அந்த அண்ணா? இன்னைக்கு என்ன உன்கிட்ட குடுத்திருக்காங்க?” என்றாள் மித்ரா.
“எனக்கென்ன தெரியும்?” என்றாள்.
“ஏதோ இருக்கு” என்றவள் அதை வாங்கி முன்னும் பின்னும் திருப்பிப் பார்க்க, அதில் பின்னால்,’டோன்ட் க்ரை’ என்று எழுதியிருந்தான்.
“வார்ரே வா..! அந்த அளவுக்கு போய்டுச்சா?” என்று மித்ரா கேட்க, ஆராவும் அவன் எழுதியதைத் தான் ஆச்சர்யமாய் பார்த்துக் கொண்டிருந்தாள்.
ஆரா அவனை நிமிர்ந்து பார்க்க, அவனோ அவ்வளவு நேரம் அவளை காதலுடன் பார்த்துக் கொண்டிருந்தவன், சட்டென்று அவள் பார்வை தன்னை நோக்கவும், கண்களில் சிரிப்புடன் இமைகளை மூடித் திறந்தான். அவனின் செயலில் ஆரா சட்டென்று சுற்றும் முற்றும் பார்க்க, யாரும் அவர்களை கவனிக்கவில்லை, மித்ரா ஒருத்தியைத் தவிர.
‘இந்த விஷயம் மட்டும் இவ பாட்டிக்கு தெரிஞ்சது, பர்ஸ்ட் பரலோக டிக்கெட் எனக்காத்தான் இருக்கும்’ என்று மித்ரா மனதிற்குள் நினைத்து சிரித்துக் கொண்டாள்.
கார் சடன் பிரேக் போட்டு நிற்க, நினைவில் இருந்து மீண்டாள் ஆரண்யா.
கண்மண் தெரியாத அளவிற்கு கோபத்துடன் வந்திருந்தாள். அவள் அப்படித்தான் வருவாள் என்று ரவிக்குமாரும், காயத்ரியும் முன்னமே கணித்திருக்க வேண்டும். அவர்கள் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க, ஹேண்ட்பேக்கை சோபாவில் விட்டு எறிந்தாள் ஆரண்யா.
காயத்ரி அப்போதும் மகளை அமைதியாக பார்க்க,
“நான் தான் நேத்து அவ்வளவு தூரம் சொன்னேன்ல எனக்கு விருப்பம் இல்லைன்னு. அப்பறமும் ஏன் அவங்ககிட்ட அப்படி சொன்னிங்கப்பா” என்றாள் ஆற்றாமையுடன்.
ரவிக்குமார் வாயைத் திறக்கவேயில்லை. ஆனால் அவர் முகத்தில் ஆற்றாமையின் சாயல் இருந்தது.
“இப்ப எதுக்கு ஆரா இப்படி கத்துற? கொஞ்சம் அமைதியா இரு” என்றார் காயத்ரி.
“எப்படிம்மா அமைதியா இருக்க சொல்றிங்க? அந்த சத்ய தேவ் என்னோட ஷாப்புக்கே வந்து ஆர்டர் போட்டு போறான். அவன் யாரு? என்னோட விஷயத்துல முடிவு எடுக்க? அவனுக்கு அந்த அதிகாரத்தை யார் கொடுத்தது? என்னைப் பார்த்தா எப்படி தெரியுது அவனுக்கு. இதெல்லாம் உங்களால தான். நான் நிம்மதியா இருக்கக் கூடாதுன்னு தான் இதையெல்லாம் பண்றிங்களா?” என்றாள் ஆற்றாமையுடன்.
“பெத்த பிள்ளை நிம்மதியா இருக்கக் கூடாதுன்னு எந்த தாய் தகப்பனும் நினைக்க மாட்டாங்க ஆரா” என்றார் ரவி கோபமாக. அவரின் அழுத்தமான வார்த்தைகளில் நிதானத்திற்கு வந்தவள், அவரின் அருகில் சென்று காலடியில் மடங்கி அமர்ந்து விட்டாள்.
“ஐ ஆம் சாரிப்பா..! நான் ஏதோ டென்ஷன்ல கத்திட்டேன். ஆனா, எனக்கு இந்த மேரேஜ் ப்ரோப்போசல்ல விருப்பம் இல்லை. பிளீஸ் என்னை கட்டாயப்படுத்தாதிங்க” என்றாள் கலங்கிய கண்களுடன்.
“எங்க காலத்துக்கு அப்பறமும் நீ இப்படியே இருப்பியா ஆரா? உனக்குன்னு ஒரு துணை வேண்டாமா?” என்றார் காயத்ரி கலங்கிய வார்த்தைகளுடன்.
“நான் இருக்குறது உங்களுக்கு பாரமா இருந்தா சொல்லிடுங்கம்மா. நான் இப்பவே வீட்டை விட்டு போய்டுறேன்” என்றான் விட்டேத்தியான குரலில்.
“இன்னொரு தடவை வீட்டை விட்டு போறேன்னு கால வெளிய எடுத்து வச்சுப் பாரு. கால உடைச்சு அடுப்புல வச்சிடுறேன்” என்ற குரலுடன் வெளியே வந்தார் சுலோச்சனா.
“ஏன்? நான் வராமையே போய்டுவேன்னு நினைச்சியா ஆரா? நான் ஆன்மீக சுற்றுலா தான் போயிருந்தேன். இன்னும் ஒரேயடியா போகலை” என்றார் கடுமையான வார்த்தைகளால்.
“ஏன் பாட்டி இப்படி எல்லாம் பேசுறிங்க?” என்றாள் அழுகையுடன்.
“நான் தான் அவங்களுக்கு சம்மதம் சொன்னேன். உங்கப்பனை நம்பினா ஒரு காரியமும் நடக்காது. எப்ப பார்த்தாலும் என் மக சொல்லிட்டான்னு சொல்லியே உனக்கு ஒரு நல்லதும் பண்ற மாதிரி தெரியலை. நான் அவங்ககிட்ட வாக்கு குடுத்துட்டேன். நீ அதை காப்பாத்துவன்னு நினக்கிறேன்” என்றார் சுலோச்சனா.
“எனக்கெதுக்கு பாட்டி இன்னொரு கல்யாணம்?” என்றாள் மன்றாடிய குரலில்.
“இங்க பார் ஆரா. உன்னை செல்லம் கொடுத்து வளர்த்தது எவ்வளவு பெரிய தப்புன்னு இப்ப நான் உணர்றேன். ஆதிராவை பார்க்க வந்த பையன் உன்னைப் பிடிச்சிருக்குன்னு சொன்னதைக் கேட்டு எனக்கும் கோபம் தான். ஆனா யோசிச்சு பார்த்தா சரின்னு தான் சொல்லுவேன். உனக்கு இன்னொரு வாழ்க்கையை அமைச்சுக் குடுக்காம ஆதிராக்கு பண்ணா நாளைக்கு ஒவ்வொருத்தர் கேட்குற கேள்விக்கும் நாங்க பதில் சொல்ல வேண்டியது வரும். நம்ம சொந்த பந்தம் அளவுக்கு தெரிஞ்ச விஷயம் அப்பறம் எல்லாருக்கும் தெரிய வரும். எல்லாத்துக்கும் ஒரே தீர்வு நீ இன்னொரு கல்யாணம் பண்ணிக்கிறதுல தான் இருக்கு. எங்களோட நிம்மதி, சந்தோசம், நம்ம குடும்ப கௌரவம், ஆதிரா கல்யாணம் இப்படி எல்லாமே. இனி முடிவு உன்னோட கையில தான். இந்த பையனைப் பிடிக்கலைன்னா சொல்லு, வேற வரனைப் பார்க்க சொல்றேன். ஆனா, உனக்கு கண்டிப்பா கல்யாணம் பண்ணியே ஆகணும்கிற முடிவுல உறுதியா இருக்கோம்” என்று பேச்சை முடித்தார் சுலோச்சனா.
அந்த வீட்டில் அவரின் பேச்சுக்கு மறு பேச்சே கிடையாது. அதானால் ரவியும், காயத்ரியும் அமைதியாக இருக்க, ஆதிராவோ ஒரு ஏளனப் புன்னகையுடன் நின்றிருந்தாள்.
அவர்கள் அனைவரையும் பார்த்தவளுக்கு, இனி தன் பேச்சு அங்கே எடுபடாது என்று தெரிந்து போனது.
“உங்க விருப்பம் போல பண்ணுங்க. ஆனா ஒரு கன்டிஷன்” என்றாள் தெளிவாய்.
“என்ன?” என்றார் சுலோச்சனா.
“எதுவா இருந்தாலும் சிம்பிளா தான் நடக்கணும். கிராண்டா எதுவும் நடக்கக் கூடாது.” என்றாள் உறுதியாக.
“அதை எப்படி நாம சொல்ல முடியும். அவங்க ரொம்ப கிராண்டா பண்ணனும்னு சொல்லிட்டு இருக்காங்க” என்றார் ரவி. அவரை அமைதியாய் பார்த்தவள்,
“எனக்கு மிஸ்டர். சத்ய தேவ் நம்பர் வேணும்” என்றாள். அவள் குரலில் உயிர்ப்பும் இல்லை. உணர்வும் இல்லை. வெறுமை மட்டுமே இருந்தது.
“உனக்கு அனுப்பிட்டேன் ஆரா” என்றார் ரவி. அவரின் வேகத்தைப் பார்த்து விரக்தியாய் சிரித்துக் கொண்டாள். பொங்கி வரும் அழுகையை கட்டுப் படுத்த முடியாமல் அங்கிருந்து நகர்ந்தவள், அவள் அறைக்குள் சென்று கதவை அடைத்த மறு நிமிடம் அழுது தீர்த்திருந்தாள்.