Advertisement

அத்தியாயம் இருபது :
விஷேஷ வீட்டில் எல்லோரும் கண்ணனையும் அபியையும் பார்த்ததும் “சுந்தரி எங்கே” என்று கேட்க,
அவளின் பாட்டிக்கு உடம்பு சரியில்லை, விட்டு விட்டு வர முடியவில்லை என்று ஒரு காரணம் சொல்லி “கடவுளே, அவங்க ஹெல்த் பொய் சொல்றேன். அவங்களுக்கு எதுவும் ஆகக் கூடாது” என்று வேறு வணங்கிக் கொண்டான்.
ஆனாலும் மனது சலிப்பாய் உணர்ந்தது. அதற்கு குறையாத சலிப்பு சுந்தரியிடமும்.
எல்லாம் முடிந்தது என நினைத்தது, மீண்டும் சரியாகி, மீண்டும் சரியாகவில்லை என்று தோன்ற, குழம்பிப் போனாள்.
வாழ்க்கையில் தனியாய் நின்ற போது கூட எல்லாம் பக்குவமாய் கையாண்ட சுந்தரிக்கு, கண்ணனிடம் சரியாய் நடந்து கொள்ள தெரிய வேண்டும்.
அவளுமே உரிமையாய் சண்டையிட்டு இருக்கலாம், முறுக்கிக் கொள்ளாமல், அது அவளுக்கு வரவில்லை.. பொறுமையாய் கூறியிருந்தால் கண்ணனும் நிச்சயம் கேட்டு இருப்பான்.  
அப்பாவும் மகனும் மட்டும் விசேஷத்திற்கு சென்ற பிறகு, வடிவுப் பாட்டி அவளை பிடித்து கொண்டார், தனியாய் என்றால் ஏய்த்து விடுவாள் என்று புரிந்து சிந்தாமணியை துணைக்கு நிறுத்திக் கொண்டார்.
“பாரு சிந்தா இவ பண்றதை, ராசா கூட பொழைக்க மாட்டா போலயே , இங்க வந்து ஒரு பத்து நாள் தான் ஆகுது. ஆனா பொழுதுக்கும் சண்டை, சரியா பேசறதில்லை, ராசா சொல்றதை செய்யறதில்லை, ராசாவை கவனிக்கறதில்லை”
“வயசாகிப் போனாலும், ஒத்தை புள்ளை பெத்திருந்தாலும், பிள்ளையை நான் தானே பெத்தேன், புருஷன் பொஞ்சாதி ஆசாபாசமா இருக்குறது எனக்கு தெரியாதா?”
“ஆளுக்கு ஒரு பக்கம் நிக்குதுங்க, இன்னைக்கு இவ நாத்தானார் வீட்ல விஷேஷம், இவ போகலை, இப்படி பண்ணினா எப்படி, திரும்ப ராசா போயிடுமோ போயிடுமோன்னு எனக்கு மனசுக்கு பயமா இருக்கு, இதுலயே போய் சேர்ந்துடுவேன் போல”
“எனக்கு போறதை பத்தி ஒண்ணுமில்லை, இவ புருஷனோட பொழைப்பான்னு தெரிஞ்சா இந்த நிமிஷம் கூட போய்டுவேன், இவ என்ன பண்றாளோ தெரியலயேன்னு மனசு பக்கு பக்குன்னு இருக்கு” என்று பேசிக் கொண்டே போக,
“ஆயா, சும்மா புலம்பாத பேசாம இரு, என் புருஷனோட எனக்கு பொழைக்கணும்னு விதி இருந்தா பொழைக்கறேன், இல்லைன்னா இல்லை. சும்மா சாவு கீவுன்னு பொழைக்கற இடத்துல அச்சாணியமா பேசிட்டு இருந்த, தொலைச்சு போடுவேன். ஏற்கனவே யாரும் நமக்கு கிடையாது. இதுல சும்மா சாவு சாவுன்னு பேசிகிட்டு”
“பொறந்தவங்க எல்லாம் ஒரு நாள் சாகத் தான் போறோம், இனி பேசின?” என்று ஆயாவிடம் சண்டையிட,
அதுவரையிலும் அமைதியாக இருந்த சிந்தா “என்ன பிரச்சனை?” எனவும்,
“என்னவோ பிரச்சனை? நான் யார் கிட்டயும் சொல்ல மாட்டேன்” என்றாள் பிடிவாதமான குரலில்.
“சரி சொல்லாத, இன்னைக்கு ஏன் போகலை? அதை மட்டும் சொல்லு, நீ சொல்லலை உன் வீட்டுக்காரர்க்கு ஃபோன் பண்ணிக் கேட்பேன்”
“கேளேன்” என்று அதற்கும் அசராமல் சுந்தரி சொல்லி போக,
“இரு, நீயா நானா பார்த்துடலாம்” என்று நினைத்த சிந்தா,
நிஜமாகவே கண்ணனுக்கு அழைத்து விட்டாள். அவன் எடுக்கவும் “ஏன் சுந்தரியை விட்டுட்டு போனீங்க, கேட்க ஆளில்லைன்னு நினைச்சீங்களா? உங்க வீட்டு சொந்தம்னா இவளை விட்டுட்டு போயிடுவீங்களா?” என்று கேட்க வேறு செய்தாள்.
அவன் அதற்கும் மேலே “நீங்க என்ன வேணா கேளுங்க, ஆனா நான் பதில் சொல்ல மாட்டேன்” என்று சொல்ல,
“நல்லா சேர்ந்தீங்க புருஷனும் பொஞ்சாதியும் ஒரே மாதிரி” என்று சலித்தாள்.
“நான் பார்த்துக்கறேன் வைங்க” என்று சொல்லிவிட, வேறு என்ன பேச முடியும் வைத்து விட்டாள்.
“என்னவாம் அவருக்கு?” என்று சுந்தரி கேட்க,
“உன்கிட்ட சொல்ல முடியாது போடி” என்று சிந்தாவும் கிளம்பி விட,
வடிவு பாட்டி அப்படி ஒரு அழுகை, “கைல கிடைச்ச வாழ்க்கையை திரும்பும் தொலைச்சிடுவா போலயே” என்று..
எதற்கும் சுந்தரி அசைந்து கொடுக்கவில்லை, நான் இப்படி தான், இஷ்டமிருந்தால் இருக்கட்டும் இல்லாவிட்டால் போகட்டும் என்ற எண்ணம் ஸ்திரமாய் அமர்ந்தது.
மாலை விஷேஷ வீட்டில் இருந்து வந்ததும், காலையில் அவசரமாய் போனதால் எதுவும் பேச முடியாமல் போய் விட, பொறுமையாகவே “என்ன சுந்தரி இப்படி பண்ற? என்ன உனக்கு பிரச்சனை? நான் பண்றது எதுவும் உனக்கு பிடிக்கலையா? நான் உன்னை குறைச்சு மதிப்பிடலை, யாரும் உன்னை குறைவா நினைச்சிடக் கூடாதுன்னு தான் சொன்னேன்” என்ற கண்ணனின் கேள்விக்கு சுந்தரி பதிலே சொல்லவில்லை.
“பதில் சொல்லுடி” என,
சுந்தரி எதுவும் பேசவில்லை.
கண்ணனுக்கும் இதற்கு மேல் என்ன செய்யவென்று தெரியவில்லை, “நீ எப்படியோ போ” என்று விட்டு விட்டான். உண்மையில் இப்போது சுந்தரியிடம் வேலை செய்கிறான் அவ்வளவே, அவளை பற்றி எதுவுமே கண்டு கொள்வதில்லை.
அவளும் கண்ணனை கண்டு கொள்ளவில்லை.
ஆனால் இனி விட்டு போனால் சண்டை சச்சரவு என்று வெளியில் தெரிந்தால் அது அசிங்கம் என்று புரிந்தவனாக வீட்டை விட்டு அம்மா வீட்டிற்கு செல்வதை யோசிக்க கூட முயலாமல் விட்டு விட்டான்.
அவனால் சகிக்க முடியாத மற்றொன்று சுந்தரியின் சமையல். அவனுக்கு அது இறங்கவே இல்லை, எப்போதும் சுந்தரியின் சமையல் சுமார் தான். ஆனால் என்னவோ அது இன்னம் மோசமாகிவிட்டது.. அவளுக்கு சமைக்க வரவில்லை, அதை கூட உண்டு விடுவான் ஆனால் சமைப்பது எல்லாம் அவனுக்கு பிடிக்காதவையே.  
அவனுக்கு என்ன பிடிக்கும்? என்ன பிடிக்காது? என்பது சுந்தரிக்கு தெரியாது, அவளும் கேட்கவில்லை, அவள் எப்போதும் சமைக்கும் பதார்த்தங்கள் அவனுக்கு பிடிக்காதவையாய் போய்விட, அவனின் உடல் உழைப்புக்கு ஏற்ற உணவு இல்லாமல் போக ஒரே மாதத்தில் ஆள் பொலிவிழந்து விட்டான்.
சுந்தரி எப்போதும் போல தான் அவளுடையது எப்போதும் மங்கிய தோற்றம் தானே!
இதுவரையிலும் அவன் பணம் என்று வாங்கவில்லை,
“அவர் பணம் நம்மகிட்ட கேட்கவேயில்லை, நாம பணம் கொடுக்கறோம்ன்னு சொல்லிட்டோம்” என்று நினைத்தவளுக்கு எப்படி பணம் கொடுப்பது என்று தெரியவில்லை.
ஏனென்றால் அவளிடமும் பணம் இல்லை, கணக்கு வழக்கு எல்லாம் அவன் தனதாக்கி கொண்டான், தேவைக்கு பணம் பீரோவில் வைப்பான், எதற்கும் பணம் வேண்டுமென்றால் அவள் கேட்பாள், அவளின் ஏ டி எம் உபயோகித்தோ இல்லை செக் மூலமாகவோ எடுத்து கொடுப்பான்.
அவன் தனியாக இருந்ததற்கும் இப்போதைக்கு ஒரு வித்தியாசமும் அவனிற்கு இல்லை..
ஏற்கனவே அவனுடன் சண்டை, இதோ இந்த மாதமாக வெளியில் படுத்துக் கொள்கிறான். சற்று மனதை உதைக்க ஆரம்பித்தது.. 
முன்பிருந்த கோபமும் விறைப்பும் அவளிடம் இல்லை. ஒரு பயம், தயக்கம் என்ன வென்று சொல்ல முடியாத ஒன்று அமர்ந்து கொண்டது.
கண்ணன் சண்டை பிடித்திருந்தால் தெரியாதோ என்னவோ? அவன் தான் அப்படியே ஒதுங்கி விட்டானே. இவளுக்காய் உரிமையாய் சென்று பேசவும் வரவில்லை. இந்த ஒரு மாத கண்ணனின் அமைதி சுந்தரியை வெகுவாக பாதித்து இருந்தது.
“ஒரு புடவை தானே கட்ட சொன்னான், அதுக்கு எதுக்குடி அவ்வளவு பிரச்சனை செஞ்சி முறுக்குன?” என்று மனசாட்சி பேச,
“நான் நல்லா இல்லைன்னு தானே மாற சொல்றாங்க, நான் நல்லா இல்லாமையே போறேன் போ” என்று மனம் இன்னொரு புறம் முறுக்கியது.
கண்ணன் கண் முன் திரிந்ததினால் சற்று நிம்மதி, இல்லையேல் உடைந்து போயிருப்பாள்..      
ஒரு மாலை நேரம் அபியை தூக்கி கொண்டு அம்மா வீடு சென்றிருந்தான்.
“என்ன கண்ணா, அந்த தோப்பு சொன்னேனே வாங்குறீங்களா இல்லையா?”
“யோசிக்கலாம் பா, இப்போ இருக்குறதை பார்க்கவே சரியா இருக்கு”
“என்ன கண்ணா இப்படி சொல்ற? ஆள் வெச்சு பார்த்தா போச்சு, சலீசா வருதுடா, அவங்க பசங்க எல்லாம் அமெரிக்கால செட்டில் ஆகிட்டானுங்க, அவனுங்களுக்கு அந்த பூமியோட மதிப்பு தெரியலை, அவனுங்களே குறைச்சு தான் சொல்றாங்க தள்ளி விட்டா போதும்னு”  
“நல்ல இடம் விடாதே, நம்ம கிட்ட அவ்வளவு பணமெல்லாம் இல்லை, சுந்தரி கிட்ட நிச்சயம் இருக்கும், யோசி” என்றார்.
“சரிப்பா” என்றவனுக்கு இதற்காக சுந்தரியிடம் பேச வேண்டுமா என்றிருக்க, “பா, முதல்ல தோப்பை பார்க்கலாம் பார்த்துட்டு முடிவு பண்ணலாம்” என்றான்.
“ம்ம், நாளைக்கு காலையில போகலாம், சுந்தரி கிட்டயும் சொல்லிடு, அவளையும் அழைச்சிட்டு வா, ஒரேதா பார்த்து முடிச்சிடலாம்”  
“ம்ம்” என்று தலையசைக்க,
அவனின் அம்மா சூடாக வெங்காய பக்கோடா போட்டு கொண்டு வந்து கொடுக்க..
அதை உண்ண ஆரம்பித்தவனிடம், “என்ன கண்ணா? சுந்தரி சமையல் பிடிக்கலையா, சரியா சாப்பிடறது இல்லையா, மெலிஞ்சிட்ட” என்று கேட்க,
அவ்வளவு தான் சந்திரனுக்கு வந்ததே கோபம், “என்னடி திரும்ப புருஷன் பொஞ்சாதிய பிரிக்க பார்க்கறியா? நீ திருந்தவே மாட்டடி, திருந்த மாட்ட, அந்த பொண்ணு எல்லாம் உழைக்க பொறந்து இருக்குடி, உன்னை மாதிரி கொட்டிக்க இல்லை” என்று சொல்ல,
“பா” என்று கண்ணன் நிறுத்த நிறுத்த பேசிக் கொண்டே போக,
“அப்பா” என்று கண்ணன் ஓங்கி குரலை ஒலிக்க விட அதன் பிறகே சற்று தணிந்தார்.
அதற்குள் விமலா விம்மி விம்மி அழ ஆரம்பித்து விட, “அம்மாவை பேசிக்கிட்டே இருந்தீங்கன்னா நான் என் கூட கூட்டிட்டுப் போயிடுவேன், அப்புறம் உங்களுக்கும் எனக்கும் எந்த பேச்சு வார்த்தையும் இருக்காது” என்று கடினமாக உரைத்தான்.
“எதுக்குடா சுந்தரியை இழுக்குறா?”  
“அப்படி தான் இழுப்பாங்க, உங்களுக்கு என்ன அதைப் பத்தி, நானும் சுந்தரியும் பிரிஞ்ஜோம்னா அது என்னால, நான் சரியில்லை, பிரிஞ்சோம். அவ்வளவு தான், எப்பவும் இனி அம்மாவை இதுக்காக நீங்க பேசக் கூடாது. ஏன் எதுக்காகவும் பேசக் கூடாது. நீங்க முதல்ல உங்க பொண்டாட்டியை நல்லா வெச்சிக்கோங்க. இந்த வயசுல இவ்வளவு பெரிய பையன் நான் இருக்கும் போது வேலை ஏதாவது இருக்குமான்னு தேடறாங்க, எதுக்கு? அப்போவாவது நீங்க அவங்களை மதிச்சு பேசுவீங்கலான்னு?”
“இனி ஒரு தடவை அம்மாவை பேசுனீங்க, நிச்சயமா அவங்களை நான் தனி வீடு பார்த்து கூட்டிட்டு போயிடுவேன். நானும் அவங்களோட போயிடுவேன். அப்புறம் சுந்தரி தனியா தான் நிற்பா” என்று ஒரு குண்டை தூக்கி அவர் தலைமேல் அசையாமல் போட,
“டேய், டேய், அப்படி எல்லாம் செஞ்சிடாத. இனி நான் உங்கம்மாவை பேசவே மாட்டேன்” என்று வாக்குறுதி கொடுத்தார்.
ஆனாலும் விமலாவின் அழுகை வெகு நேரம் இருக்க, கூடவே அவரினுள், என்ன வாழ்க்கை இது என்ற சலிப்பும்.
கண்ணன் அவரிடம் வந்தவன் “அவர் பேசிட்டார் இவர் பேசிட்டார்ன்னு கிணத்தை தேடி ஓடினீங்க, நீங்க விழவும், பின்னாடியே உங்க புருஷனையும் தள்ளி விட்டுடுவேன்” என்று மிரட்டலாய் பேசினான்.
அதற்குள் அபி “பாட்டி” என்று அவரிடம் தாவ, சற்று அமைதியாகவும், அந்த ஆறிப்போன பக்கோடாவை உங்க வீட்டுக்காரர் சாப்பிடட்டும், நீங்க எனக்கு சூடா செஞ்சிக்குடுங்க, போங்க” என்று அவரை பேசி அனுப்பி, தேற்றி என அவன் வீடு வந்த போது எட்டு மணியாகிவிட,
அபி சுந்தரியை பார்ததும் தாவியவன்.. அவள் முகம் முழுக்க முத்தமிட்டு எச்சில் செய்ய, “டேய். டேய், என்ன இது?” என்று சுந்தரி அவனை தன்னிடமிருந்து பிரிக்க,
அபியோ விடுவேனா என்று அம்மாவின் கழுத்தை கட்டிக் கொண்டான்.
“உங்கப்பா வந்ததும் உனக்கு ரொம்ப ஆகிடுச்சுடா, கீழயே இறங்காம யாராவது தூக்கி வெச்சிட்டே சுத்தணும் நினைக்கிற” என்று மகனை அதட்டியபடி பேச,
கண்ணன் அம்மாவும் மகனும் கொஞ்சிக் கொள்வதை பார்த்திருந்தவன் “அவனுக்கு சாப்பாடு ஊட்டிட்டு வா, பேசணும்” என்று சொல்ல,
என்னவாக இருக்கும் செல்கிறேன் என்று சொல்லப் போகிறானோ என்று மனம் பதைக்க ஆரம்பிக்க..
சுந்தரி அபிக்கு ஊட்டவும், இவனாய் சமைத்திருந்த இட்லி சாம்பார் போட்டு உண்டு வெளியில் திண்ணையில் சென்று அமர்ந்து கொண்டான்.
வடிவு பாட்டி உறவில் யார் வீட்டிலோ காரியம் ஆகிவிட்டது என்று அங்கே சென்றிருந்தார். ஒரு மூன்று நாள் அங்கே இருந்து விட்டு வருகிறேன் என்று கூறியே சென்றிருந்தார்.  
என்னுடைய வாழ்க்கை முறை இந்த ஆறுமாதங்களில் எவ்வளவு மாறி விட்டது என்று அவனுக்கு அவனே வியப்பு தான்.
இதோ கயிற்று கட்டிலும், வெளி வாசல் தூக்கமும் எப்படி பழகி விட்டன.
இதோ அந்த மாட்டு தொழுவத்தின் வாசனை கூட பழகி விட்டது…
பெருமூச்சோடு அமர்ந்தான்..  
அங்கே உள்ளே அம்மாவின் பேச்சும் மகனின் பொருட்களின் உருட்டலும் கேட்டுக் கொண்டே இருக்க, அதனை கேட்ட படி அமர்ந்திருந்தான்.
உணவு உண்பதற்கு பெரிய கலாட்டா செய்து கொண்டிருந்த மகனிற்கு ஒரு வழியாய் ஊட்டி உடல் துடைத்து பௌடரிட்டு உடை மாற்றி, கையோடு பாலும் விட்டு, ஒரு க்ளாசில் ஊற்றி கொண்டு வெளியே படியில் அவனை குடிக்க வைக்கவென அமர,
“அப்பா” வென கண்ணனிடம் தாவினான்,
அவன் திண்ணையில் இருந்ததை அமர்ந்த பிறகு தான் கவனித்தாள், இனி எழுந்து சென்றால் சரி கிடையாது என்று புரிந்து, “டேய் வாடா அபி” என்று கூப்பிட,
“குடு” என்று கிளாசிற்காய் கண்ணன் கை நீட்ட,
அவனிடம் கொடுக்க, அபியை குடிக்க வைத்தான். கொஞ்சம் பால் இருக்கும் போதே “நானு, நானு” என்று அவனே குடிக்க கலாட்டா செய்ய,
சரி, கொஞ்சம் தான் இருக்கிறதே என்று அவனும் கொடுக்க,
குடித்துக் கொண்டே அம்மாவின் மடியை நோக்கி போனவன், அங்கே அம்மாவின் மடியில் அமர்ந்ததும், அப்படியே டம்ளரை கவிழ்க்க, அவன் மீது கொட்டி பின்பு அவள் மீதும் கொட்டியது.
“டேய், என்ன பண்ற?” என்று சுந்தரி அலற,,
“ஷ், ஏன் கத்துற? பிள்ளை பயப்பட போறான்” என்று கண்ணன் சொல்லும் போதே என்னவோ ஏதோவென்று அபி வீரிட்டு அழ,
“ஒன்னுமில்லை, ஒன்னுமில்லை” என்று மகனை அணைத்துக் கொண்டவள், இப்போ தான் அவனுக்கு உடம்பு துடைச்சி துணி மாத்தினேன்” என்று அவளுக்கு அவளே சலிக்க,
“போடா போ, உங்கம்மாவை போய் துணி மாத்திக்க சொல்லு, நாம மாத்திக்கலாம்” என்று மகனை தூக்கி கொண்டு தோட்டத்தின் புறம் சென்றவன்,
மோட்டார் போட்டு அங்கிருந்த தொட்டியில் இறக்கி அவனை அப்படியே குளிப்பாட்ட, “பா, வா, வா” என்று அப்பாவையும் மகன் இறங்க சொல்ல,
இதோ இருவரும் தொட்டிக்குள்! 
“நேரம் ஆகிருச்சு, அவனுக்கு குளிரும்” என சுந்தரி சொல்லவும்,
“போடி நீ” என்று அவளிடம் நேரடியாய் சொல்லி விட்டு அப்பாவும் பையனும் அங்கே தண்ணீரில் ஆட்டம் போட,
அவர்களுடன் தானும் சென்று நிற்க முடியவில்லை என்ற எண்ணம் மனம் முழுவதும் இருக்க, அவர்களை திரும்பி திரும்பி பார்த்த படி சென்றாள்.
“இவளா தானே தள்ளி நின்னா, தள்ளி நிறுத்தினா, கல்யாணமாகி ஒரு குழந்தை பொறந்த பிறகும் பிரம்மச்சாரி மாதிரி சுத்தறேன், என்ன செஞ்சு பிள்ளை உண்டானான்னு கூட எனக்கு மறந்து போச்சு? வேற யார் கிட்டயாவது ஞாபகப் படுத்தவா முடியும்? லூசு பக்கி என் உயிரை எடுக்கறா?”   என்று நினைத்தவன் செல்லும் சுந்தரியை தான் பார்த்திருந்தான்..
அப்பாவும் மகனும் விளையாட, எப்போதும் போல நான் தனியோ என்று தோன்ற சுந்தரிக்கு அழுகை பொங்கியது..
கண்ணனுக்கு அது தெரிய வேண்டாம் என்று நினைத்தவள், வேகமாய் வீட்டிற்குள் சென்று அவளும் குளிக்க, ஞாபகமில்லாமல் அந்த நேரத்தில் தலைக்கும் ஊற்றிக் கொண்டாள்,
குளித்து முடித்து குளியலறையிலேயே புடவையை வேறு கட்ட,
“மா” என்று விடாமல் அதற்குள் அபி கதவை தட்ட, அப்படியே சுத்திக் கொண்டு தான் வந்தாள்.
வந்து பார்த்தால் அப்பாவும் மகனும் ஒன்று போல் துண்டை கட்டிக் கொண்டு நிற்க,
“பார்த்துட்டியாடா உங்கம்மாவை? சும்மா நொய் நொய்ன்னு மா மான்னு” என்று சலிப்பது போல பேசியவன்,
“இருடா உங்கம்மாக்கிட்ட இருந்து உன்னை கடத்திட்டு போயிடறேன்” என்று மகனை செல்லம் கொஞ்சியபடி துவட்ட,
அவ்வளவு தான் அப்படி ஒரு அழுகை பொங்கிவிட “அவன் தான் எனக்கு இருக்குறான், அவனையும் என்கிட்டே இருந்து பிரிக்க பார்க்கறீங்களா?” என்று தேம்பி தேம்பி அழ ஆரம்பித்தாள்.
     
                     
                                   

Advertisement