நீயென் நாயகி -10.1

அத்தியாயம் -10. 1

விஷ்வாவிடம் மன்னிப்பு கேட்கவென ஆதியையும் சித்துவையும் அழைத்துக் கொண்டு வந்திருந்தார் சந்திரன். பெரியவரிடம் முதல் நாளே தகவல் சொல்லியிருந்தார். விரோதத்தை வளர்க்க விரும்பாத சண்முகநாதனும் சரியென அனுமதி வழங்கியிருந்தார்.

 வேதாவுக்கும் காலையிலேயே அழைத்து சொல்லியிருந்தார் சந்திரன். விஷ்வா எப்படி நடந்து கொள்வானோ என அவளுக்கு ஒரே பதற்றம். அறையிலிருந்து வெளியேறும் முன்பே அவனிடம் விஷயத்தை சொன்னாள் வேதா.

“எப்படி கால்ல விழுந்து மன்னிப்பு கேட்பானுங்களா?” என நக்கலாக கேட்டான் விஷ்வா.

“ஏங்க இப்படி இருக்கீங்க? அப்புறம் அப்பாகிட்ட எதுக்கு விஷயத்தை சொன்னீங்க, அவர் இப்படித்தான் செய்வார்” என்றாள் வேதா.

“ம்ம்… என்ன செய்யணும் நான்? அவனுங்களையும் விருந்து சாப்பிட்டு போங்கன்னு வரவேற்கணுமா?” என எரிச்சல் வழியக் கேட்டான்.

“என்கிட்ட நல்லாத்தானே நடந்துக்குறீங்க, அவங்கள பத்தின பேச்சு வந்தா ஆளே தலைகீழா மாறி போயிடுறீங்க, தாத்தாகிட்ட சொல்லிட்டுத்தான் அப்பா வந்திருக்கார், உங்களுக்கு விருப்பம் இல்லைனா தாத்தாவை மட்டும் பார்த்திட்டு போகட்டும்” என அவள் சொல்லிக் கொண்டிருக்க, “அப்படியே செய்ய சொல்லு” என சொல்லி விட்டான்.

வேதாவும் அவனை அதிகம் வற்புறுத்தவில்லை. அவர்களை அவன் ஒன்றும் செய்யாமல் விட்டதே பெரிது, மன்னிக்கவும் வேண்டும் என எதிர்பார்ப்பது அதிகப் படி என நினைத்துக்கொண்டே கீழே வந்தவள் அப்பாவிடம் விவரம் சொன்னாள்.

“கீழ வருவான்தானே ம்மா? நான் பேசுறேனே” என்றார் சந்திரன்.

“வேணாம் ப்பா, சில விஷயத்துல எல்லாம் உடும்பு பிடியா நிப்பார், அதுல இதுவும் ஒன்னு. தாத்தாகிட்டயே ஸாரி சொல்ல சொல்லிடுங்க” என மகள் சொல்ல, மகனையும் மருமகனையும்தான் முறைத்து வைத்தார்.

“இது சரியா வராதுன்னு நான் அப்பவே சொல்லலை மாமா? எதுக்கு அழைச்சிட்டு வந்து எங்களை அசிங்க படுத்துறீங்க?” என கோவப் பட்டான் சித்தார்த்.

“சும்மான்னு இரேன் டா, வேதாவை நினைச்சு பார்க்க மாட்டியா?” என கடிந்து கொண்டான் ஆதிரன்.

“அவ எங்க நம்மள நினைச்சு பார்க்கிறா?” என வேதாவை பார்த்துக் கொண்டே சொன்னான் சித்து.

வேதா அவனை முறைக்க, சந்திரனும் அவனை கண்டிக்க, இன்னும் பேசினான்.

 பொறுக்க முடியாத வேதா, “உன்னாலதான்டா எல்லா பிரச்சனையும், விருந்து அன்னிக்கு என் கண் முன்னாடியே அவரை தண்ணி கேனால இடிச்சு விட்ட, அவர் உன்னை ஒன்னும் பண்ணாம விட்டாரேன்னு நினைச்சுக்க” என்றாள்.

“ஏய் என்ன அவனெல்லாம் எனக்கொரு ஆளா?” என கோவப் பட்ட சித்து எழுந்து நிற்க, தாத்தா வந்தார்.

சந்திரன் சித்துவை அடக்கி அமர வைத்தார். தாத்தாவிடம் மனமாற மன்னிப்பு கேட்ட ஆதி, அவரது கால்களிலேயே விழுந்து விட்டான். சந்திரன் சித்துவை முறைக்க, மனமே இல்லாமல் அவனும் தாத்தாவின் பாதத்தை தொட்டு எழுந்தான்.

தாத்தாவோ அவர்களின் தவறு எப்பேர்ப்பட்டது என்பதை சொல்லிக் காட்டி விட்டே பெருந்தன்மையாக மன்னித்து விட்டதாக சொன்னார். பின் அவரே என்ன செய்கிறீர்கள் எனவும் அக்கறையாக விசாரித்தார்.

ஆதி அப்பாவுடன் ஜவுளிக்கடையை கவனிக்கிறான். சித்துவின் அப்பாவுக்கு தனியாக தொழில் இல்லை, ஆரம்ப காலத்திலிருந்தே சந்திரனின் ஜவுளிக்கடையில் முக்கிய பொறுப்பில் இருக்கிறார். சித்துவையும் அங்கேயே வா என சந்திரன் சொல்கிறார்தான், அப்பா போலவே தனித்தன்மை இல்லாமல் நின்று விடுவோமோ என அவனுக்கு பயம், ஆகவே விருப்பமில்லை என சொல்லி விட்டான்.

தற்சமயம் நண்பன் ஒருவனின் ஃபோட்டோ ஸ்டூடியோவிற்கு சென்று வருகிறான், எடிட்டிங் வேலையெல்லாம் அவன்தான் பார்க்கிறான் என்பதை கேட்டவுடன், தங்களின் நட்சத்திர விடுதியில் மேலாளர் பதவி காலியாகிறது, அங்கு வந்து சேர்ந்து கொள் என்றார் தாத்தா.

கேட்டவுடன் வேதாவுக்குத்தான் ‘பக்’ என்றானது. ‘சின்ன மகனுக்காகத்தான் என்னுடன் உறவை புதுப்பிக்க நினைக்கிறார் உன் அத்தை’ என விஷ்வா ஏற்கனவே குற்றம் சுமத்தி பேசியிருப்பது அவளின் நினைவுக்கு வந்தது. அதைவிட விஷ்வாவுக்கும் சித்தார்த்துக்கும் உறவுநிலை சீர்கெட்டு இருக்கும் நிலையில் இது இன்னும் மோசமாக்கும் என்பதுதானே நிதர்சனம்.

தாத்தாவுக்கோ வேலை கொடுத்து உதவினால் வெறுப்பை விட்டு விட்டு நன்றாகி விடுவான், விஷ்வாவிடம் சொல்லும் விதத்தில் சொல்லி ஏற்றுக்கொள்ள செய்யலாம் என எண்ணம்.

சித்தார்த் குணம் பற்றி முழுமையாக அறிந்தவள் வேதாதானே, சித்தார்த்தும் இதை விரும்ப மாட்டான் என அவளுக்கு தெரியும், ஆனால் தாத்தாவிடம் மறுக்க சங்கடம் கொள்வானோ என நினைத்து அவளே, “இல்லை தாத்தா, சித்து தானா ஏதாவது ஷாப் ஓபன் பண்ற ஐடியால இருக்கான், அவனுக்கு இன்ட்ரெஸ்ட் உள்ளதை செய்யட்டும்” என்றாள்.

தாத்தா ‘அப்படியா?’ என சித்துவை பார்க்க, “உங்க வீட்டு மருமகள்கிட்ட சொல்லுங்க கோடி ரூபாய் கொடுத்தாலும் உங்கள்ட்ட எந்த வேலையும் பார்க்க மாட்டேன்னு. எங்க வர்றேன்னு சொல்லிடுவேனோன்னு எவ்ளோ பயம்!” என வெறுப்போடு சொன்னான் சித்தார்த்.

சந்திரனும் ஆதியும் தர்ம சங்கடமாக தாத்தாவை பார்த்தனர்.

சிரித்த பெரியவர், “உனக்கும் உன் ஃபிரெண்ட்க்கும் என்ன சண்டைன்னு எல்லாம் நான் கேட்டுக்க மாட்டேன், அது உங்களுக்குள்ள. அதை வெளிப்படையா காட்டி நட்புக்கு இறக்கத்தை ஏற்படுத்தாத. எங்கள்ட்ட வேலை வேணாம்னா விடு, ஆனா ஏதாவது பண்ணி காலா காலத்துல செட்டில் ஆகு, ஏதாவது உதவி வேணும்னா தயங்காம சொல்லுப்பா, நீயும் என் பேரன்தான்” என்றார்.

தாத்தாவின் பேச்சு சித்துவுக்கு எரிச்சலையே கொடுத்தது. வராத அழைப்பை ஏற்று பேசிக் கொண்டே வீட்டுக்கு வெளியில் சென்று விட்டான். அவனை புரிந்தாலும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை தாத்தா.

ஆதிக்கு திருமணம் செய்யவில்லையா என பேச்சை ஆரம்பித்தார் தாத்தா. ஆதி விழிக்க ஆரம்பித்தான். ஒரு வருடம் போகட்டும் என்றார் சந்திரன்.

திருமணம் செய்யலாம் என நினைக்கும் போது என்னிடம் சொல்லுங்கள், ஆதிக்கு ஏற்ற பெண்ணாக பார்த்து நானே சொல்கிறேன் என்றார் பெரியவர். சந்திரனும் “கண்டிப்பாக மாமா” என்றார்.

அண்ணனின் குழப்ப முகம் வேதாவுக்கு சிரிப்பை வரவழைத்தது. உதடுகள் மடித்து தன்னை சமாளித்துக் கொண்டாள்.

ஹாலில் இருப்பவர்களை பார்த்துக் கொண்டே மாடிப் படிகளிலிருந்து இறங்கி வந்தான் விஷ்வா. ‘இவ வீட்டு ஆளுங்கள பார்த்தாலே பிரைட் ஆகிடுவா!’ என வேதாவை செல்லமாக நொடித்தும் கொண்டான்.

“வாங்க” என மாமனாரை அழைத்து விட்டு நழுவ பார்த்த பேரனை விடாமல் அங்கேயே அமர வைத்து விட்டார் தாத்தா. விஷ்வாவிடமும் மன்னிப்பு கேட்டான் ஆதி.

விஷ்வாவின் முகம் இளகாமல் இருக்கவும், “பின்விளைவுகள் பத்தி யோசிக்காம செஞ்சிட்டான் மாப்ள, இதெல்லாம் வெட்டி விடுற உறவு இல்லை, மன்னிச்சிட்டு போ” என சமாதானம் போல சொன்னார் சந்திரன்.

“எல்லாம் உன் மாப்பிள்ளைக்கும் புரியும் சந்திரா, விடு விடு. இள ரத்தம் இல்லையா, கொஞ்சமா முறுக்கிக்கிட்டு அப்புறம்தான் சமாதானம் ஆவான்” என்றார் தாத்தா.

சித்துவை அழைத்து வரும் படி சந்திரன் மகனிடம் சொல்ல, “விடு சந்திரா, அவனும் சூடா இருக்கான். இதை இத்தோட விடுவோம்” என சொல்லி அந்த மன்னிப்பு படலத்தை முடித்து வைத்தார் தாத்தா.

அடுத்த வாரம் ஆடி மாதம் துவங்க போவதால் மனைவியுடன் வந்து வேதாவை அழைத்து செல்கிறேன் என்பதை சொன்னார் சந்திரன்.

“என்ன என்ன… புரியலை எனக்கு” என அவசரமாக இடையிட்டான் விஷ்வா.

“புதுசா கல்யாணம் ஆனவங்க ஆடி மாசம் சேர்ந்து இருக்க கூடாதுப்பா, வேதா அவ அம்மா வீட்டுக்கு போய்ட்டு ஆடி முடிஞ்சதும் வருவா, இதெல்லாம் சம்பிரதாயம்” என விளக்கம் சொன்னார் தாத்தா.

அதில் உடன்பாடு இல்லாதவன் போல வேதாவை பார்த்து வைத்தான் விஷ்வா.

“அப்படியே நானும் நீங்களும் ஆதர்ஷ தம்பதி மாதிரிதான்!” என அவனிடம் சின்ன குரலில் சொன்னவள் அனைவருக்கும் பொதுவாக சிரித்து, “இதை பத்திலாம் தெரியலை இவருக்கு” என்றாள்.

“எல்லாம் நீதான் சொல்லி தரணும் வேதா” என்றார் தாத்தா.

அதற்குள் கூகுள் செய்து ஆடி மாதம் பற்றியெல்லாம் தெரிந்து கொண்ட விஷ்வா, “அவங்க என்ன ரீசனுக்காக தள்ளி இருக்க சொல்றாங்களோ அதுப்படிதான் நாம இல்லையே, அப்புறமும் இது அவசியமா?” என வேதாவின் காதை கடித்தான்.

“என்னடா?” என தாத்தா கேட்க, அவன் என்ன சொல்லியிருப்பானோ, முந்திக் கொண்ட வேதா, “பசிக்குதாம் தாத்தா உங்க பேரனுக்கு, சாப்பிட போகவான்னு கேட்கிறார்” என சமாளித்து வைத்தாள்.

கிளம்புவதாக சொல்லி சந்திரன் மகனுடன் எழுந்து கொண்டார். வழியனுப்ப அவர்களுடனே வேதாவும் சென்றாள். சித்தார்த் வெளியிலும் இல்லை, ஆதி அழைத்து கேட்க, முக்கிய வேலையிருப்பதால் கிளம்பி விட்டேன் என காரணம் சொன்னான்.

சந்திரன் மகனை முறைக்க, “அவன் செய்றதுக்கு எல்லாம் என்னை முறைக்காதீங்க ப்பா” என்ற ஆதி, தங்கையை தன் ஆதரவுக்கு அழைத்தான்.

“ஆமாம் ப்பா, அண்ணா என்ன செய்யும்? குணா மாமாகிட்ட சொல்லித்தான் சித்துவை கண்டிக்கனும். நீங்க டென்ஷன் ஆகாதீங்க ப்பா, நடந்தது வச்சு எனக்கு எந்த பிராப்பலமும் இல்லை ப்பா” என்றாள் வேதா.

தங்கையின் கையை பிடித்துக் கொண்ட ஆதி, “ஸாரிடா, அந்த நேரம் நிஜமா மூளை வேலை செய்யல. உனக்காக செய்தாலும் உன்னைத்தான் அது பாதிக்கும்னு புரியாம… ஸாரி” என்றான்.

“தப்புன்னு தெரிஞ்சுதே, விடு ண்ணா” என்றாள் வேதா.

“நிஜமா சொல்லு, விஷ்வா உன்னை எப்படி பார்த்துக்கிறான்?” என அண்ணனாக கவலையோடு கேட்டான்.

“எங்களுக்கு நடுவுல எல்லாம் ஸ்மூத்தாத்தான் போகுது ண்ணா. அவ்ளோ டெரர் இல்லை விஷ்வா” என வேதா சொன்னதில் பொய் இருப்பதாக அவனுக்கு தோன்றவில்லை.

அப்பாவுக்கும் அண்ணனுக்கும் நல்ல விதமாக விடை கொடுத்தனுப்பி விட்டு அவள் வீட்டுக்குள் வரும் போது சாப்பிட்டுக் கொண்டிருந்தான் விஷ்வா. இவளும் சாப்பிட அமர, “இன்னும் சாப்பிடல?” எனக் கேட்டான்.

எங்கே அவளுக்கு பசி உணர்வு தெரிந்தது. பிரச்சனை ஏதுமில்லாமல் இந்த விஷயம் சுமூகமாக தீர வேண்டும் என அதைப் பற்றிய யோசனையிலேயே இருந்து விட்டதாக சொன்னாள்.

“ஹ்ம்ம்… இங்க மட்டும் என்ன ஆடி கணக்கு? வெளிநாட்டுலலாம் யாரும் இப்படி ஃபாலோ பண்றாங்களா?” எனக் கேட்டான்.

“நாம வெளிநாட்டுல இல்லையே! இருந்திருந்தா ஒரு பொண்ணுக்கு வலுக் கட்டாயமா தாலி கட்டியெல்லாம் வீட்டுக்கு அழைச்சிட்டு வர முடியுமா?” என்றவளை முறைத்தான்.