Advertisement
நீ நான் 28
சுவாம்மா, நல்லா தான இருக்க? விக்ரம் மாப்பிள்ள? என அவர் பேச தொடங்க, “வேண்டாம் ஆன்ட்டி. அண்ணாவை பற்றி பேச வேண்டாம்” என்ற மானசா..அண்ணி நீங்க வெளிய இருங்களேன்.
“என்ன பேசப் போற?”
“அதுவா? என்னோட ஸ்டடி சீக்ரெட்” என்றாள்.
“ஓ…மனியா? ஓ.கே பேசிட்டு வா” என சுவாதி நகர்ந்தாள்.
“படிக்க பணம் தேவைப்படுதா?”
இல்ல ஆன்ட்டி. அண்ணி நம்ம எல்லாரிடமும் பேசுவாங்க. ஆனால் உங்க மகனும் அண்ணாவும் கொஞ்ச நாள் அண்ணி முன் வராமல் இருந்தா நல்லா இருக்கும்.
ஆமா, “என்னை வீட்டை விட்டு அனுப்ப நல்லா ப்ளே பண்ற? பண்ணு.. பண்ணு..” என சொல்லிக் கொண்டே விகாஸ் வந்தான்.
ப்ளீஸ்..புரிஞ்சுக்கோங்க. உங்களுக்கு கொஞ்சம் கூடவா குற்றவுணர்ச்சி இல்லையா? தேவையில்லாமல் அண்ணியை காயப்படுத்தீட்டீங்க? அவங்ககிட்ட பேசும் போது ஏதாவது கோபத்தில் கத்தினால் கூட அவங்க பழைய நிலைக்கு செல்லும் அபாயம் இருக்கு. என் மேல நம்பிக்கை இல்லைன்னா தமிழ் மாமாகிட்ட கேளுங்க. மாமா தான் அண்ணியை ட்ரீட் பண்ணாங்க. மாமாவுக்கும் இதுல பங்கிருக்கு ஆன்ட்டி. ப்ளீஸ் விக்ரம் அண்ணா பெயரை கூட சொல்ல வேண்டாம்.
“திலீப் மேரேஜூக்கு வருவார் தான?”
ஆமா ஆன்ட்டி, எப்பொழுதும் போல் அண்ணா வரத் தான் செய்வார். நாம் எதையும் செய்யக் கூடாது. தானாக நடக்கும்.
“தானாகவா? நாம பேசியே நடக்கலையே!” அவர் வருத்தமாக கேட்க, நீங்க எல்லாரும் நினைக்கிற மாதிரி விக்ரம் அண்ணா, அண்ணி மேல கோபத்துல்ல இப்படி நடந்துக்கல. வேண்டுமென்றே தள்ளி வைக்க பாக்குறாங்க. நான் வேணும்ன்னா ஷாப்பிங்கிற்கு அண்ணாவை அழைக்கிறேன். நல்லா கவனிச்சு பார்த்தீங்கன்னா நம்முடன் இருக்கும் அண்ணா..சற்று நேரத்தில் தனியா போவாங்க.. அண்ணியை பார்ப்பாங்க. காரணம் ஏதோ இருக்கு. விலகி இருக்க நினைக்கிறாங்க…
இல்ல..மாம். இவ பேச்ச கேட்காதீங்க. “ஏய், என்னோட அம்மாகிட்ட பேசி ஏமாத்தி சொத்தை எழுதி வாங்க தான பாக்குற?” விகாஸ் கேட்க, அவன் அம்மா கோபமாக..”வீ வாட் ஆர் யூ சேயிங்? மைன்ட் யுவர் வேர்டு”.
பரவாயில்லை ஆன்ட்டி. பேசட்டும். நீங்க தயாராகி வாங்க. எல்லாரும் வெயிட் பண்றாங்க. அப்புறம் டைம் ஆகிடும் என எதையும் காட்டிக் கொள்ளாமல் வெளியேறினாள் மானசா. வீக்கோ..அவளை பார்க்க பார்க்க கோபமாக வந்தது.
வெளியே வந்தவள் மெதுவாக நெஞ்சில் கை வைத்து அழுத்தி சரி செய்ய ரம்யா அவளிடம் ஓடி வந்தாள்.
“எனக்கும் சீக்ரெட் சொல்லு?” என சுருதியும் வந்தாள். உஃப் என ஊதி விட்டு, “அது சீக்ரெட் எப்படி சொல்றது?” என ரம்யாவை பார்த்தாள். சுருதி மானசாவை முறைத்து செல்ல, மானசா புன்னகைத்தாள்.
“நீ ஓ.கே தான மானூ?”
அக்கா, தண்ணீர் வேணும். லேசா பெயின் இருக்கு என அனைவரும் அவர்களை பார்க்கிறார்கள் என சிரித்துக் கொண்டே கேட்டாள்.
“எங்க கிச்சன் இருக்குன்னே தெரியலையே!” என ரம்யா சொல்ல, சுற்றி பார்த்தனர் இருவரும். விகாஸ் கோபமாக வந்தான்.
ஹே மை ப்ரெண்டு, “கிச்சன் எங்க இருக்கு?” ரம்யா கேட்க, “நம்ம வீட்ல என்ன கேள்வி கேக்குற ரம்யா?” என சுவாதி இருவரையும் அழைத்து சென்றாள்.
தண்ணீரை குடித்தும் பெயின் இருக்க, ரம்யா கையை அழுத்தி அவளை அழைத்து செல்லுமாறு கண்ஜாடை காட்டினாள் மானசா.
இருவரும் வெளியேற, தனது பையிலிருந்து அவசர அவசரமாக மாத்திரை எடுக்க, “கையில என்ன வச்சிருக்க?” என விகாஸ் வந்தான்.
கையிலிருந்ததை அவள் பின்னே மறைக்க, வலுக்கட்டாயமாக அவள் கையை இறுக்க, நெருக்கமாக இருவரும் இருந்தனர். மானசாவிற்கு அவனை அணைத்து ஆறுதல் தேடினாலாவது வலி குறையுமோ என எண்ணினாலும் மறுபடியும் பேசியே வலியை இழுத்துக் கொள்ள வேண்டாம் என மாத்திரையை காட்டி, விட்டமின் மாத்திரை என அவன் பார்க்கும் முன் வாயில் போட்டு தண்ணீரை எடுத்து குடித்தாள்.
“நமக்குள்ள நடந்த எதுவும் யாருக்கும் தெரியக் கூடாது” என நடவாத ஒன்றை கூற வேண்டாம் என விகாஸ் சொல்ல, அவள் இதழ்களில் வந்த புன்னகையை பார்த்து எரிச்சலுடன் ஏதோ பேச வந்தான்.
இவன் பேசியே நம்மை சாவடிச்சிருவான் என எண்ணி நகர சென்றாள்.
ஏய்..இது என்னோட பப்ளிம்மா பயன்படுத்தும் பர்ஃப்யூம் வாசனை போல இருக்கு. உண்மையை சொல்லு என அவன் அவள் கையை பிடிக்க, யோவ்..அது பர்ஃப்யூம். எல்லாரும் தான் பயன்படுத்துவாங்க என அவன் கையை உதறி விட்டு வேகமாக சென்று தாத்தா அருகே நின்று கொண்டாள்.
விகாஸ் வருவதை பார்த்து, “பிரச்சனை பண்றானாம்மா?”
இல்ல தாத்தா, தண்ணீர் எடுத்து கொடுத்தார்.
“யாரு அவனா?” தாத்தா கேட்க, “ஆமா தாத்தா” என தலையாட்டினாள். அவளை பார்த்து அவர் புன்னகைக்க. விகாஸ் அம்மா வந்தார். அனைவரும் கிளம்பினார்கள். விகாஸ், விக்ரமும் அவர்களுடன் வந்தனர்.
சுவாதியையும் விக்ரமையும் சுவாதி அம்மா கவனித்துக் கொண்டே இருந்தார். மானசா சொன்னது போல நடக்கவும் விகாஸிற்கும் அவன் அம்மாவிற்கும் அதிர்ச்சியாக தான் இருந்தது.
திலீப்- ரம்யா திருமண நாளும் வந்தது. அவர்களுக்கான அனைத்து சடங்குகளும் நடக்க, மானசா மட்டும் அங்கு இல்லை. ரம்யா கண்கள் அவளை தேடி அலை பாய்ந்தது. நேகனும் அப்சராவும் ஒன்றாக வந்தனர். பின் அவளின் பெற்றோர் வந்தனர்.
அப்சராவை அழைத்து ரம்யா கேட்க எண்ணி கண்ணாலே அழைத்தாள். விகாஸ் அவனை தான் ரம்யா அழைக்கிறால் என்று அவன் மேடை ஏறினான்.
“வழிய விடுங்க” என விகாஸை தள்ளி விட்டு அப்சரா ரம்யாவிடம் ஓடி வந்தாள்.
“மானூ எங்க போனா?” ரம்யா கேட்க, “நோ..பிராபிளம். அவ வந்திருவா” என அப்சரா சொல்லும் போதே, பார்ட்டி வியர் பர்ப்பில் கலர் லெஹங்காவில் அழகான குட்டி தேவதையாக மானசாவும், கோல்டன் கலர் புடவையும் அதற்கேற்ற பிளவுசுடன் திருமணத்திற்கு தயாரான கலையுடன் சுவாதியும் வந்தனர்.
“அண்ணீ, சீக்கிரம் வாங்க” என லெஹங்காவை தூக்கிக் கொண்டு வந்த மானசாவை அங்கிருந்த இளைஞர் கூட்டல் ஜொல்லு விட்டு பார்த்துக் கொண்டிருந்தது. விக்ரமும் அங்கு தான் இருந்தான். அவன் கண்ணுக்கு அவன் தேவதையை தவிர யாரும் கண்ணில் படவில்லை. கண் இமைக்காது சுவாதியையே பார்த்தான்.
மேடையில் ஏறிய இருவரையும் அனைவரும் ரசித்து பார்த்துக் கொண்டிருந்தனர்.
அண்ணீ, நீங்க மாமாவுக்கு வச்சு விடுங்க. எடுங்க என்ற மானசாவிடம் அழகான மலர்க்கீரிடத்தை கொடுத்தாள் சுவாதி..
மானசா புன்னகையுடன் ரம்யாவிற்கு மலர்க்கிரீடத்தை வைத்து விட்டு, “உங்களுக்காக என்னோட பரிசு” என ரம்யாவை நெட்டி முறித்தாள். அவள் கண்களில் கண்ணீர் பெருகியது.
அழாதீங்க..மேக் அப் களையப் போகுது என சுவாதியை பார்த்தாள். அவள் அதே போல இலைகளில் ஜொலிக்கும் கற்கள் வைத்தது போன்ற கீரிடத்தை வைத்து விட்டாள் திலீப்பிற்கு.
“என்னம்மா இதெல்லாம்?”
மாமா, என்னால பணம் செய்ய முடியாது. அதான்..அஜெஸ்ட் பண்ணிக்கோங்க என்றாள்.
சூப்பரா இருக்கும்மா. தேங்க்ஸ் என்றான் அவன்.
அண்ணீ, அக்கா வாங்க என மிருளாலினியையும் இழுத்துக் கொண்டு கீழே இறங்கினாள் மானசா.
ஏப்பா தம்பி, மைக்கை கொடு என மைக் வைத்திருந்த பையனிடமிருந்து வாங்கிய மானசா, சுவாதியிடம் கொடுத்து, அண்ணீ ஸ்டார்ட் பண்ணுங்க என்றாள்.
மானூ..என சுவாதி அவளை பார்த்தாள். அவள் நேகனை அழைக்க, அப்புறம் என்ன? ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் தான். பெரியவர்கள், சிறியவர்கள் என அனைவரும் மகிழ்வுடன் ஆடிக் கொண்டிருந்தனர்.
மானசா மெதுவாக நகர்ந்து விக்ரம் அருகே அமர்ந்து, அவன் தோளில் சாய்ந்து கொண்டாள்.
“நீ போகலையா?” விக்ரம் கேட்க, சதாசிவமும் வனஜாவும் அவர்களிடம் வந்து அமர்ந்தனர்.
இல்லண்ணா, கொஞ்சம் டயர்டா இருக்கு..
அவளை நகர்த்தி, “என்னாச்சு? உன் முகமே சரியில்லை. யாரும் ஏதும் சொன்னாங்களா?” விக்ரம் கேட்க, “இல்லண்ணா எனக்கு தூங்கணும் போல இருக்கு” என அவள சொல்ல, அதனால என்னடா வா.. அறைக்கு போய் தூங்கு சதாசிவம் சொன்னார்.
அங்கிள், எனக்கு..எனக்கு..என தொண்டை அடைக்க, கண்ணீருடன் விக்ரமை பார்த்தான்.
“யாரும் ஏதும் சொன்னாங்களா? வீ எதுவும் பேசினானா?” விக்ரம் கேட்க, “இல்ல அண்ணா..நான் கொஞ்ச நாள் உன்னோட தங்கிக்கவா?”
“ம்ம், நம்ம வீட்டுக்கு வர எதுக்கு கேக்குற? இதை தான் நான் முதல்ல சொன்னேன்” விக்ரம் அவளது தலையை கோதினான்.
விக்ரம், “இவங்க எல்லாரும் சந்தோசமா இருக்காங்க. உண்மை தெரிந்தால் என்ன நடக்கப் போகுதோ?” சதாசிவம் சொல்ல, இல்ல அங்கிள்..கடைசி வரை இவங்க யாருக்கும் ஏதும் தெரியக் கூடாது. அண்ணா யாரிடமும் சொல்லக் கூடாது என்றாள் மானசா.
உன்னோட காதல் டா? என வனஜா கேட்க, ப்ளீஸ் ஆன்ட்டி, எனக்கு என்னோட விக்ரம் அண்ணா போதும். யாருக்கும் ஏதும் தெரியக் கூடாது. அண்ணா எந்த நிலையானாலும் இதை மறக்காத..
அண்ணா, எனக்காக ஒன்றே ஒன்று மட்டும் செய்யேன்..ப்ளீஸ்..
“என்ன?” கேட்பது போல் விக்ரம் பார்த்தான்.
சுவாதி அண்ணியை மேரேஜ் பண்ணிக்கோ. எதுக்கு அவங்கள கஷ்டப்படுத்துன? அவங்க பாவம் அண்ணா..
இல்லடா, அதுக்கும் காரணம் இருக்கு. இந்த உண்மை என்றாவது தெரிய வந்தால் சுவாதியும் நானும் பிரியும் நிலை வந்திரும். அதுக்கு நாங்க சேராமல் இருப்பது தான் நல்லது.
அண்ணா, அண்ணீ புரிஞ்சுப்பாங்க..
ப்ளீஸ்ம்மா, இதை தவிர என்ன வேண்டுமானாலும் கேளு. தாரேன்.
“வேறென்ன அண்ணா எனக்கு வேணும்?”
உன்னோட ப்ளூபெரி கேக்..
இப்ப வேண்டாம் அண்ணா. சரி நான் போறேன். யாருக்கும் சந்தேகம் வந்துறாம..என அகன்றாள் மானசா. தூரத்தில் இருந்து இவர்களையே பார்த்துக் கொண்டிருந்தனர் ஒவ்வோர் இடத்திலிருந்து விகாஸ், அப்சரா நேகனும்..
“இவங்க ரொம்ப க்ளோஸா தெரியுறாங்கல்ல நேகன்?” அப்சரா சிந்தனையுடன் கேட்டாள்.
ம்ம்..தெரியுது..நல்லா தெரியுது.
விக்ரம் அண்ணா, கீர்த்தனாவை தவிர எந்த பொண்ணை பற்றியும் இதற்கு முன் பேசியதில்லை. ஆனால் திடீர்ன்னு இந்த பொண்ணு வந்தா? அவரோட க்ளோஸா இருக்கா? சம்திங் ராங்.
ம்ம்..என அப்சரா மானசாவை பார்க்கும் போது அவள் அவர்களிடமிருந்து எழுந்து வெளியே சென்றாள்.
“எங்க போறா?” என விகாஸ் அவளை பின் தொடர்ந்தான்.
மானசா, தனியாக மரத்தடியில் அமர்ந்தாள். அவளருகே ரசிகா வந்து அமர்ந்தாள்.
“அக்கா” என மானசா எழுந்தாள்.
“என்ன பலத்த யோசனையில இருக்க?”
“நான் உங்களிடம் ஒன்று கேட்கவா?”
கேளு..
“நீங்க மாமாவை காதலிக்கும் போது இடையில உங்களுக்கு உயிரான அக்கா வந்தால் என்ன செய்வீங்க?”
ரசிகா அவளை பார்த்து புன்னகைத்தாள்.
“இவங்க என்ன பண்றாங்க? எல்லாரையும் மயக்கி வச்சிருக்கா” என மானசாவை அர்ச்சித்தவாறு வந்தான் விகாஸ்.
“நீ சொன்ன அக்கா கீர்த்துவா? உன்னோட காதல் வீ யா?” என கேட்டாள்.
இல்லை, என்னோட அக்கா மோனூ. அவ ரொம்ப க்யூட்.ஆனால் பரணி மாமா..
புன்னகைத்த ரசிகா, என் உயிரான அக்காவா? காதலனா? என சிந்தித்தாள். நான் காதலனை தான் தேர்ந்தெடுப்பேன்.
“ஏன்கா? அக்காவுக்கு துரோகம் செய்வது போல் இருக்காதா?”
அக்கா நம்ம வாழ்க்கை முழுவதும் வர மாட்டாங்க. அவங்க ஒரு பார்ட் தான். வாழ்நாள் முழுவதும் காதல் உள்ளவன் தான் வேணும். “இப்ப இல்லை என்றாலும் மனது கண்டிப்பாக ஏங்கும்” என மானசாவை பார்க்க, அவள் கண்ணீருடன் ரசிகாவை பார்த்தாள்.
“அக்காவுக்கு இதுல துரோகம் பண்ண என்ன இருக்கு? நாம முதல்ல பார்த்தால் காதலை சொல்லி சேர்ந்து கொள்ள வேண்டியது தான!”
“ஆனால் அக்காவுக்கும் அவரை பிடித்திருந்தால்?”
பிடித்தால் அவள் சொல்லட்டும். அது காதலன் கையில். யாரை தேர்ந்தெடுக்கிறானோ? அவங்க சேர்ந்து வாழ வேண்டியது தான்.
ம்ம்..என்றாள் சுரத்தை இல்லாமல் மானசா.
மானூ, உனக்கு தெரியுமா? கீர்த்துவிடம் நான் எப்போதும் விலகி தான் இருப்பேன். அவளோட அமைதி என்னை அதிகமாக தொந்தரவு செய்தது. அவகிட்ட ஏதோ தப்பு இருக்கு என ரசிகா சொல்ல, அக்கா அப்படியெல்லாம் இருக்காது. அமைதியாக இருக்கிறவங்க பக்கமிருந்தால் நமக்கு நிம்மதி கிடைக்கும்.
கீர்த்துவை பற்றி ரசிகா சொல்லவும் விகாஸிற்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது.
அண்ணி, “என்ன சொன்னீங்க?” அவன் கத்த, இருவரும் அதிர்ந்து எழுந்தனர்.
சினம் அடங்காமல் விகாஸ் ரசிகாவை அடிக்க கையை ஓங்கினான். அடிக்கவும் வந்து விட்டான். மானசா இடைபுகுந்து அதை வாங்கிக் கொண்டாள்.
மாமா, அக்கா வயித்துல்ல பாப்பா இருக்கா. இப்படி அடிக்க கையை ஓங்குறீங்க? கத்தினாள். மானசாவை அப்சரா தேடி வந்தாள். மானசாவை விகாஸ் அடிக்கவும் அவள் கொதித்து விட்டாள்.
“ஏய், அவள எதுக்கு அடிச்ச?” அப்சரா கேட்டுக் கொண்டே வர, என்னோட கீர்த்துவை பற்றி யாரு என்ன பேசினாலும் கொலை செய்ய கூட தயங்க மாட்டேன் என கத்தினான். அவன் அப்பாவும் நேகனும் அவ்விடம் வந்து, அவன் பேசியதை கேட்டு திகைத்தனர்.
விக்ரம் நேகனிடம் பேச வந்தான்.
சரி, தப்பு தான். அதுக்காக கர்பிணி பொண்ணை அடிக்க வர்றீங்க? குரலை உயர்த்தினாள் மானசா.
“யாருமில்லாத அநாதை நீயெல்லாம் பேசக் கூடாது” என விகாஸ் பட்டென சொல்லி விட, அவள் கண்ணிலிருந்து பொலபொலவென கண்ணீர் வந்தது.
இதை கேட்ட விக்ரம் சீற்றமுடன், “யாரடா அநாதைன்னு சொன்ன?” என விகாஸை அடித்தான்.
“மாம்ஸ், நீங்க சரியில்லை. இவ உங்களை என்னமோ பண்ணீட்டா? இவளால தான் சுவாதியை நீங்க கல்யாணம் பண்ணிக்க மாட்டேங்கிறீங்க?” விகாஸ் கத்தினான்.
“தாலி கட்டுற நேரம் என்னடா பிரச்சனை பண்றீங்க?” என விகாஸ் அப்பா சத்தமிட்டார்.
“சாரி அங்கிள், என்னால தான் எல்லாமே. நான் போறேன்” என மானசா அழுது கொண்டே வேகமாக வெளியே ஓடினாள்.
மானு..நில்லு..என அப்சரா அவள் பின் ஓடினாள்.
பவர்..நில்லு..விக்ரம் சத்தமாக கத்தினான். நின்று அவனை பார்த்து, விக்ரம் இனி என்னை பார்க்கவே வராத என அவள் மீண்டும் ஓட, “ஓடாதடி” என அப்சரா பின்னே ஓடினாள். விக்ரம் அவள் பின் ஓட, கார் ஒன்று அவளை இடிக்க வந்தது. அக்காரின் முன் வந்த பைக்கை அடித்து தூக்கியது..
பைக்கை பார்த்த மானசா அதிர்ந்து பைக்காரன் அருகே சென்றாள். எல்லாரும் அவ்விடம் வந்து பார்த்தனர்.
“மாமா மாமா” என கைகள் நடுங்க பரணியின் இரத்தம் மானசா கையில்.
விக்ரம்..மாமா..மாமா…என மூச்சு வாங்கிய மானசா அங்கேயே மயங்கினாள். அப்சரா பதற, “காட்..” என கத்திய விக்ரம் “நேகா அவனை பிடி” என இருவரையும் காரில் ஏற்றினார்கள்.
அப்சரா ஓடிச் சென்று டிரைவர் சீட்டில் அமர்ந்தாள்.
“நீ இறங்கு” நேகன் சொல்ல, “நான் ஓட்டுறேன்” என வேகமாக காரை இயக்கினாள்.
விகாஸ் அதிர்ந்து நிற்க, விகாஸ் அப்பாவோ அவன் அம்மாவை அலைபேசியில் அழைத்து, திருமணம் நல்லபடியா நடக்கட்டும். பார்த்துக்கோ. யாரும் ஏதும் கேட்டால் ஏதாவது பேசி சமாளி என அவர் காரை எடுக்க, விகாஸ் ஏறினான்.
“நடந்த எல்லாத்துக்கும் காரணம் நீ தான். இறங்குடா நாயே” என இறக்கி விட்டு அவர் காரை செலுத்தினார்.
முகப்பேர் ஹாஸ்பிட்டலில் பரணியை சேர்த்து விட்டு, மானசாவையும் சேர்த்தனர். அவள் எழாமல் இருக்கவும் அனைவரும் பயந்தனர்.
“நான் பார்த்துக்கிறேன்” என அப்சரா அவளுக்கு சிகிச்சை கொடுத்த மருத்துவரை வர சொன்னாள். “அவர் அங்கே இருந்ததும் நல்லதா போச்சு” என அப்சரா அவரிடம் விவரத்தை கூறினார்.
இப்பொழுதாவது ஆப்ரேசன் செய்திடலாம். அவளுக்கு ஹார்ட் அந்த நேரம் கிடைக்கலைன்னா கஷ்டம்..
அவள் விருப்பமில்லாமல் செய்தால் மேலும் அவள் மனபாரத்தால் உடல் பாதிக்கப்படும். வேண்டாம் டாக்டர். இரு நாட்கள் தான..ரம்யா அருகே இருந்து பார்த்துப்பா. இப்ப நல்லா தான இருக்கா?
ம்ம்..ஓ.கே தான். ஆனால் எதையும் அவங்களிடம் பார்த்து பேசணும்..
தேங்க்ஸ் டாக்டர். யாருக்கும் இவள் பற்றி தெரியக் கூடாது என சொல்லி அழைத்து வந்தாள்.
அப்சராவை அவர் பார்க்க, நீங்களே சொல்லுங்க டாக்டர்..
பயத்துல்ல தான் மயங்கிட்டாங்க. அவங்களுக்கு இஞ்செக்ட் பண்ணி இருக்கோம். சரியாகிடுவாங்க. எழுந்தவுடன் அழைச்சிட்டு போங்க என்று சொல்லி விட்டு அவர் சென்றார்.
“பரணி தான் கிரிடிக்கலாக இருக்கான்” என மருத்துவர் கூற, விக்ரம் அலைபேசியில் பரணியின் தாத்தாவிடம் விசயத்தை சொன்னான்.
“இவன் தாத்தா நம்பர் உங்களிடம் எதுக்கு மாப்பிள்ள?”
“தெரிஞ்ச பையன் தான் மாமா” என விக்ரம் நிறுத்தி விட்டு தள்ளி சென்று அமர்ந்து கொண்டான்.
ஒரு மணி நேரத்திலே பரணியின் குடும்பத்தார்கள் வந்து, மானசாவால் என அறிந்து அவளை தூற்ற, இது ஹாஸ்பிட்டல். அமைதியா இருக்கீங்களா? விக்ரம் கத்தினான் சீறலாய். அவனை முறைத்து விட்டு பரணியை பார்க்க சென்றனர்.
திருமணம் நடக்கவிருக்கும் இடத்தில் ரம்யா மானசா, அப்சராவை தேடினாள்.
“நான் பார்த்துட்டு வாரேன்” என சுவாதி செல்ல, அழுது கொண்டிருந்த ரசிகாவையும் அவளை தேற்றும் தன் அம்மாவையும், தவறு செய்தது போல் அங்கும் இங்கும் குட்டி போட்ட பூனையாய் நடக்கும் தமையனையும் பார்த்து குழப்பத்துடன் வந்தாள்.
ரசி, “என்னாச்சுடி?” சுவாதி கேட்க, ஒன்றுமில்லைம்மா. எதையோ பார்த்து பயந்துட்டா..
“பயந்துட்டாளா?” என சுவாதி அவர்களை கடந்து செல்ல, விகாஸ் அம்மா சுவாதி கையை பிடித்தார்.
அம்மா, “இந்த மானூவும் அப்சராவும் காணோம். எங்க போனாங்க?” அப்புறம் விக்ரம்..என ரோட்டில் இரத்தம் இருப்பதை பார்த்து..அய்யோ..அம்மா இரத்தம் என கையை உருவி விட்டு ஓடினாள் சுவாதி.
சுவா தனியா வெளிய போகாத. யாரோ மானுவை கொல்ல காரை அடிக்க வந்தாங்க. அவளோட மாமா அவளை காப்பாதீட்டு அவருக்கு அடிபட்டிருச்சு.. ரசிகா கத்தினாள்.
“என்ன? கொலை செய்யவா?” விகாஸ் கேட்டான்.
ஆமா, நாங்க பேசும் போது அந்த கார் அங்கும் இங்குமாய் சென்று கொண்டிருந்தது. அதில் இருந்தவர்கள் எங்களை கவனிப்பது தெரிந்தது. ஆனால் அது மானுவை என்று அவன் ஓடிச் செல்லும் போது தான் தெரிந்தது என ரசிகா அழுதாள்.
“அவளை எதுக்கு யார் கொல்லணும்? அவ அக்காவை கொன்ன அனைவரையும் போலீஸ் பீடிச்சுட்டாங்கல்ல?” விகாஸ் அம்மா கேட்க, சுவாதிக்கோ மனம் பதறியது.
அம்மா, “நான் பார்த்துட்டு வரவா?” சுவாதி கேட்க, “உன்னோட அப்பா போயிருக்கார்” என விகாஸ் அம்மா சொன்ன நேரம் பதட்டமாக சிம்மாவும், சதாசிவமும் வெளியே வந்தனர்.
விக்ரம் சொன்னது உண்மைதான் சிம்மா. நம்ம ஆளுங்கல்ல வரச் சொல்லு? என இரு பக்கமும் பார்த்தார் சதாசிவம். ஒரு கார் மட்டும் நின்றது.
“இந்த விபத்தை யார் பார்த்தீங்க?” சிம்மா கேட்க, ரசிகா அவனருகே வந்தாள்.
அண்ணா..அண்ணா..அந்த கார்..அதே கார்..நம்ம மானூவை கொல்ல வந்த கார் இது தான் என ரசிகா கத்த, சிம்மா வேகமாக அவனருகே செல்லும் நேரம் கார் உயிர்ப்பித்து சென்றது.
நில்லுடா..நில்லுடா..சிம்மா கத்திக் கொண்டே அவனை தவற விட்டான்.
விக்ரமை அழைத்து, விக்ரம் நம்பர் சொல்றேன். நோட் பண்ணிக்கோ..அவன் அங்கே வர வாய்ப்பிருக்கு. கவனமா இரு என்று சொல்லி அழைப்பை துண்டித்து விட்டு, தப்பிச்சுட்டான் சார்..என சுவற்றில் குத்தினான் சிம்மா..
நோ..வொர்ரி சிம்மா..என கேமிரா அங்கே பொருத்தப்பட்டிருப்பதை காட்டினார் சதாசிவம்.
யாருன்னு சீக்கிரம் பாரு சிம்மா. எனக்கும் ஏதோ மனசு சரியில்லை என்று அவர் தன் மகள் ரசிகாவிடம் திரும்பினார்.
நீ உள்ள போம்மா. யாருக்கும் ஏதும் ஆகாது. உன்னோட அண்ணனுக இருக்காங்கல்ல? என்றார்.
ரசிகா நேராக விகாஸிடம் வந்து, “நான் பேசியது தவறில்லை. உனக்கு தெரியும் போது தெரிஞ்சுக்கோ” என நகர்ந்தாள்.
“என்ன தெரியணும்?” சுவாதி கேட்டுக் கொண்டே அவள் பின் சென்றாள். விகாஸ் அம்மா தன் மகனை முறைத்துக் கொண்டு உள்ளே சென்று விட்டார்.
மானசா விழித்து வெளியே வரவும் பரணிக்கு சிகிச்சை அளித்துக் கொண்டிருந்த மருத்துவர் வெளியே வரவும் சரியாக இருந்தது.
என்னோட மகனுக்கு ஒன்றுமில்லையே! பரணி அம்மா பதற, இல்லம்மா..தலையில பலமான அடி. தையல் போட்டிருக்கோம். இனி ஆபத்து இல்லை. அதிகம் பேசாமல் பார்த்துக்கோங்க என அவர் மருந்தை எழுதி கொடுத்து விட்டு சென்றார்.
மானசாவை பார்த்து, “உன்னால எங்க பிள்ளைக்கு ஏதாவது ஆகி இருந்தால் உன்னை சும்மா விட்ருக்க மாட்டோம்” என ஒருவர் கத்த, தாத்தாவோ, “அமைதியா இருப்பா” என மானசாவை பார்த்தார்.
அண்ணா, எல்லாரும் கிளம்புங்க. ரம்யா அக்கா மேரேஜ்ல்ல எல்லாரும் தேடப் போறாங்க. அங்கிள்..கிளம்புங்க. நான் மாமா விழிக்கவும் பார்த்துட்டு வாரேன் என்றாள்.
“நீ என்னடி பாக்கப் போற? இனி அவன் முன்னாடி நீ வந்த..உன்னை..” என அவன் அம்மா கடிந்தார்.
வா..என விக்ரம் அவளை இழுக்க, விக்ரம் “மாமா என்னோட உயிரை காப்பாற்றி இருக்காங்க”.
ஆமா, அதான்..போடி என அவன் அம்மா அவளை தள்ள, “என்னம்மா இப்படி பண்றீங்க?” அப்சரா கேட்க, இவளுக்கு வக்காளத்து வாங்கிட்டு என்னிடம் வராதீங்க. ஓடிப்போனவ மவளுக்கு எம் மவன் கேக்குதோ? என சொல்ல, சுள்ளென மனம் வலித்தது மானசாவிற்கு
தாத்தாவை பார்த்து, “இப்ப உங்களுக்கு சந்தோசம் தான?” என கேட்டு விட்டு, சாரி மாமா..என்னோட அம்மாவை தப்பா பேசினால் பொறுமையாக என்னால இருக்க முடியாது. நான் மாலை வந்து பார்க்கிறேன் என கிளம்ப, மற்றவர்களும் அவளுடன் சென்றனர்.
திலீப்- ரம்யா திருமணம் முடிந்து அனைவரும் உணவுண்ண சென்றனர்.
தாத்தா, “மானூவை எங்க? ரொம்ப நேரமா காணும்” ரம்யா கேட்க, ஆமால்ல, எல்லாருடனும் ஆடிட்டு இருந்தா. எங்க போனா? திலீப்பும் சுற்றும் முற்றும் பார்த்தான்.
“அவ ஹாஸ்பிட்டல்ல இருக்கா” என ரகசியன் அவர்களிடம் வந்தான்.
ஹாஸ்பிட்டலா? என்னாச்சு? ரம்யா பதற, அவளுக்கு ஒன்றுமில்லை. அவளோட மாமா பரணிக்கு தான் விபத்தாகிடுச்சு..என அவன் சொன்னான்.
திலீப், “நாம பார்த்துட்டு வரலாமா?” ரம்யா கேட்க, இல்லம்மா..நீங்க மட்டும் எங்கும் போகக் கூடாது. சாப்பிடுங்க..நேரா வீட்டுக்கு தான் போகணும்..
துளசி அவளை பார்த்து, ரம்யா..கவலைப்படாத. அந்த பொண்ணுக்கு தான் ஒன்றுமில்லைன்னு சொல்றாங்கல்ல. போங்க சாப்பிடுங்க என்றாள்.
திலீப், ரம்யா உணவுண்ண செல்ல மற்றவர்களும் சென்றனர். தாத்தாவும் பாட்டியும் சாப்பிடாமல் அமர்ந்திருந்தனர்.
“மாமா, சாப்பிடலையா?” விகாஸ் அம்மா கேட்டார்.
“பிள்ளை வந்துறட்டும். பயந்து போயிருப்பா” என தாத்தா வருத்தமாக சொல்ல, அந்த பையனிடம் பேச மாட்டேன்னு சொன்னா. ஆனால் இன்னும் வரலை.
அவ அக்காவை இழந்த பின் அவள் திட்டியும் அவன் அவ பின்னாடியே தான் சுத்துனான்ம்மா..மாமா மகன் வேற..பாசமாவது இருக்கும்ல்ல? தாத்தா கேட்க, அதுவும் சரி தான்..அவளும் மயங்கிட்டா..என்ன பண்றான்னு தெரியல என அவர் வருத்தமாக சொல்ல, பாட்டி விகாஸ் அம்மாவை பார்த்தார்.
“என்ன அத்தை?”
“உனக்கு அந்த பொண்ணை பார்த்து கோபம் வரலையா?”
என்னோட பொண்ணை பழையவாறு திருப்பி கொடுத்துருக்கா அத்தை. இதுக்காக அவளுக்கு என்ன வேண்டுமானாலும் செய்யலாம்..அவள் தான் இப்ப வேண்டாம்ன்னு சொல்லி இருக்கா..
புன்னகைத்த தாத்தா, “அவள் கேட்பதை உன்னால தர முடியலைன்னா என்னம்மா செய்வ?” கேட்டார்.
“மாமா, நம்மிடம் இல்லாததா?”
தெரியலம்மா..பார்க்கலாம்..
விகாஸ் அவர்களிடம் வந்து, நீங்க எல்லாரும் அவளுக்கு அதிகமாக இடம் கொடுப்பது போல தெரியுது. அவ உங்களை மொத்தமாக ஏமாற்றப் போறா. எல்லாரும் அவனை முறைத்தனர்.
விக்ரம், விகாஸ் அப்பா, நேகன், அப்சரா, மானசா மண்டபத்திற்குள் வந்தனர். ரகசியன் வேகமாக அவர்களிடம் ஓடினான்.
“மச்சான், அவனுக்கு ஒன்றுமில்லையே?”
ம்ம்..என விக்ரம் மானசாவை பார்க்க, அண்ணா..நான் அறையில இருக்கேன் என்று அறைக்குள் ஓடி கதவை சாத்திக் கொண்டாள் மானசா.
விக்ரம் அவள் சென்ற அறையையே பார்த்துக் கொண்டிருந்தான்.
விகாஸ் அப்பா மானசா அறை அருகே சென்று கதவை தட்டினார்.
“மாமா, அவள் தனியா இருக்கட்டும்: என விக்ரம் அங்கேயே நாற்காலியை போட்டு அமர்ந்தான். நேகன் அவனருகே அமர்ந்து, “அவள் இன்னும் சாப்பிட கூட இல்லை” என சொன்னான்.
விகாஸ் கோபமாக, “மாமா அவ என்ன செஞ்சா உங்களுக்கு என்ன? சாப்பிட வாங்க” என அழைத்தான் விக்ரமை. அவனை பார்த்த விக்ரம் ஏதும் பேசவில்லை. அலைபேசியை எடுத்து, “எவன்னு பார்த்துட்டீங்களா?” என அவன் தந்தையிடம் கேட்டான்.
கார் நம்பர் பிளேட்டை அவனே தயார் செய்திருக்கான். திருடு போன கார் விக்ரம்.
அப்பா..சிசிடிவில்ல அவனோட முகம் தெரிந்ததா?
சிம்மா அலைபேசியை வாங்கி, முகம் தெரியல விக்ரம். ஆனால் அவன் வலக்கையில் டாட்டூ போட்ருக்கான்.
“டாட்டூவா?” விக்ரம் அதிர்ந்து, அண்ணா..அந்த டான் ஆளுங்க போட்ருந்த டாட்டூ அஜய் அனுப்பினான்ல்ல. “பார்த்திருப்பேல்ல? அது போல இல்லைல்ல?”
விக்ரம்..சிம்மா தயங்க, விக்ரம் டென்சனாக, “இழுக்காம சொல்லித் தொலை”.
அவனோட ஆள் மாதிரி தான் இருக்கு.
வாட்? அவன் எதுக்கு இவளை. நல்லா பார்த்திருக்கக்க மாட்ட. நல்லா பார்த்து சொல்லு. இல்லை அனுப்பு. நான் பார்த்துக்கிறேன்.
சாரிடா, கன்பார்ம்..ஆனால் மானுவை எதுக்குன்னு தெரியல..
விக்ரம் மானசா இருந்த அறையை படபடவென தட்டினான். அவள் கதவை திறந்தாள் கண்ணீருடன்..
“சிம்மா நீ அனுப்பு” என அலைபேசியை துண்டித்தான்.
“மோனூ இறந்த பின் யார் விசயத்துல்லையும் நீ தலையிட்டியா?” விக்ரம் கோபமாக கேட்டான். மானசா அமைதியாக நின்றாள்.
“சொல்லு பவர்?” கத்தினான். அஜய் தியாவும் திலீப் திருமணத்திற்கு வந்திருந்தனர். இவர்களை பார்த்து பேச வந்தவன், அவன் கேட்பதை பார்த்து..”விக்ரம்” என அழைக்க, எல்லாரும் அவனை பார்த்தனர்.
அஜூ..தியா அழைக்க, எல்லாரும் வெளிய இருங்க. நான் விக்ரமோட பேசணும் என்றான் அஜய்.
அவர்களை பார்த்துக் கொண்டே மற்றவர்கள் வெளியேறினார்கள். மானசாவும் உள்ளே இருந்தாள்.
அஜய் சொன்னதை கேட்டு விக்ரம் சீற்றமுடன் அஜய்யை அடித்தான்.
“அண்ணா” மானசா அழைக்க, “நீ என்ன பண்ணி வச்சிருக்க?” என கத்தினான்.
அண்ணா..ப்ளீஸ்..நான் சொல்றதை கேளு மானசா பேச, அவளை பேச விடாமல் அஜய்யை விக்ரம் அடிக்க, அஜய் அவனை கொஞ்சமும் தடுக்கவில்லை.
கதவை திறந்த மானசா, எல்லாரையும் பார்த்து விட்டு தியாவிடம் வந்து, “அண்ணீ..அண்ணனுக சண்டை போடுறாங்க” என அவளை இழுத்து உள்ளே சென்றாள். எல்லாரும் உள்ளே சென்றனர்.
அண்ணா, “அவரை விடுங்க” என விக்ரமிற்கு இடையே தியா செல்ல, அவளையும் தள்ளி விட்டு அஜய்யை விக்ரம் சீற்றமுடன் அடித்தான்.
“என்ன வேடிக்கை பாக்குறீங்க?” தாத்தா தன் உறவுகளை பார்க்க, விக்ரமை அவர்கள் தடுக்கும் முன் மானசா அஜய் முன்னால் நின்று, “சொல்றதை கேளுடா” என கத்தினாள்.
“கேட்கணுமா? என்ன கேட்கணும்?” என கேட்டுக் கொண்டே அவளையும் அடித்தான்.
“விக்ரம்” என அனைவரும் சத்தமிட, விக்ரம் கைகள் நடுங்கியது. சுவாதி அவனை தள்ளி விட்டு, “எதுக்காக இப்படி எல்லாரையும் கஷ்டப்படுத்துறீங்க?” என கத்தினாள்.
“உனக்கு என்ன தெரியும்? எல்லாம் தெரியுற மாதிரி பேசுற.. அவ என்ன செஞ்சிட்டு வந்து நிக்கிறான்னு தெரியுமா? நான் இப்ப என்ன செய்றதுன்னு தெரியல” என தலையை பிடித்து தரையில் அமர்ந்தான்.
“அண்ணா, ஒன்றுமில்லை” மானசா அருகே வர, கோபமாக அவளை முறைத்தான் விக்ரம்.
உதட்டில் வழிந்த இரத்தத்தை துடைத்த அஜய், அவளுக்கு ஏதும் ஆகாது விக்ரம்.
“ஆகாதா?” இப்ப அவ பரணி இடத்துல்ல இவ இருந்திருப்பா.அவன் தான் காப்பாற்றி இருக்கான். “எத்தனை பேர் இப்படி செய்வாங்க?” விக்ரம் கத்தினான்.
ப்ளீஸ் விக்ரம்” மானசா அவனருகே வந்து அமர்ந்தாள்.
என்னாச்சு? ரம்யா உள்ளே வந்து, மானசாவை பார்த்து..உனக்கு ஒன்றுமில்லைல்ல என ரம்யா மானசா முகத்தை நிமிர்த்த, “அக்கா” என அவளை கட்டிக் கொண்டு அழுதாள்.
“என்னால எதையும் மறக்க முடியல. மறக்க எண்ணினாலும் அது தான் முன்னாடி வருது. நான் என்ன செய்றது?” என சொல்லி அழ, யாருக்கும் ஏதும் புரியவில்லை. விக்ரம் சினம் குறைந்து அவளை பார்த்து, “இப்ப என்ன பண்ணப் போற?” எனக் கேட்டான்.
“ஒரு நாள் டைம் எடுத்துட்டு சொல்றேன் அண்ணா” என ரம்யாவை பார்த்து, புன்னகைத்து ஹாப்பி மேரேஜ் வாழ்த்துக்கள் அக்கா என்றாள்.
நீ என்ன பேசுற? ஒண்ணுமே புரியல. இப்ப தான் அழுத. அதுக்குள்ள எனக்கு வாழ்த்து சொல்ற? என ரம்யா விக்ரமை பார்த்தாள்.
வலி, கவலை, பிரச்சனை வாழ்க்கையில வர தான் செய்யும். இன்று உங்களுக்கு ஸ்பெசல் டே. உங்களுக்கு வாழ்த்து சொல்லாமல் இருப்பேனா? என சிரித்தாள்.
“என்னடி ஆச்சு உனக்கு?” அப்சரா கேட்க, எனக்கு என்ன அண்ணி..நான் ரொம்ப நல்லா இருக்கேன். என்னால தான் மாமா ஹாஸ்பிட்டல்ல இருக்காங்க சொல்லி கண்களை மூடினாள்.
நான் கொஞ்சம் தனியா இருக்கணும் என மானசா விக்ரமை பார்த்தாள்.
“என்னமும் செய். வெளிய போகணும்ன்னா சொல்லு. எங்கு வேண்டுமானாலும் நான் அழைச்சிட்டு போறேன்” என விக்ரம் எழுந்தான்.
விக்ரம் கையை பிடித்த மானசா, “நான் கேட்டது?” என சுவாதியை பார்த்தாள்.
விக்ரம் சுவாதியை பார்த்து விட்டு நகர்ந்தான். மானசா முகம் வாடியது.
“மானூ, நீ சாப்பிட வா” தமிழ் அழைக்க, “எனக்கு பசிக்கலை மாமா” என அவள் மீண்டும் படுக்கையில் படுத்துக் கொண்டாள்.
மானூ..எழுந்திரு என அப்சரா அவள் கையை பிடித்து தரதரவென இழுத்து வெளியே சென்றாள். இவ்வளவு நேரம் தன் மகனையே பார்த்துக் கொண்டிருந்த அன்னம். நீ இரும்மா என அப்சராவை நிறுத்தி விட்டு, அவர் சென்று உணவை எடுத்து வந்தார்.
அவர் மானசா அருகே வந்து, அவளுக்கு ஊட்டி விட்டார். அவளோ கண்ணீருடன் அவரை பார்த்தாள். அவள் மனதில் யாரும் எனக்காக ஊட்டியதேயில்லை. முதல் முறையாக என அன்னத்தை பார்க்க பார்க்க கண்ணீர் தானாக அருவியானது.
இதே போல் தான் கீர்த்தனாவிற்கும் அன்னம் ஊட்டி விட்டிருப்பார். இதை பார்த்த விகாஸ் சினமுடன் வெளியேறினான்.
அழாம சாப்பிடும்மா. அழுதுகிட்டே சாப்பிட்டால் வயித்துல ஒட்டாது.
மானசா உண்டு கொண்டே, “நான் இதுவரை என் அம்மாவை பார்த்ததேயில்லை. தேங்க்ஸ்ம்மா..அம்மா சொல்லலாமா?” எனக் கேட்டாள்.
எனக்கு தெரியலம்மா. விக்ரம் என்னோட பிள்ளைம்மா.. அவனிடம் நீ காட்டுற உரிமை எனக்கு பொண்ணு இருந்தா.. அவன் இப்படி தான் நடந்திருப்பான் என மானசாவை பார்த்தார்.
விரக்தி புன்னகையுடன், “ஏம்மா..அதான் உங்க பொண்ணா கீர்த்தனா இருந்தாங்கல்ல?”
ம்ம்..இருந்தாம்மா..இன்னும் எங்க மனசுல தான் இருக்கா..அவ போகலம்மா. ஆனால் உன்னை பார்த்தால் அவளே பக்கம் இருப்பது போல தோணுதும்மா.
விரக்தி புன்னகையுடன், “அவங்கள மாதிரி நான் இருக்கேனா?”
அப்படியில்லை..
வேண்டாம்மா. நான் உரிமையை யாரிடமிருந்து எடுத்துக்க எப்போதும் விரும்பமாட்டேன். அது தானாக கிடைக்கணும். அது உங்க பிள்ளை விக்ரம். அண்ணாவிடமிருந்து மட்டும் தான் கிடச்சது. கிடச்சிட்டு இருக்கு..நாளை கிடைக்குமான்னு தெரியல..என கண்ணீர் வந்தது.
“அதெல்லாம் கண்டிப்பாக கிடைக்கும்” என விக்ரம் அவன் அம்மா தோளில் சாய்ந்து அமர்ந்தான்.
அண்ணாவும் சாப்பிடலை. எனக்கு போதும். அண்ணாவுக்கு குடுங்க என மானசா எழுந்தாள்.
எதையும் யோசிக்காத. இப்ப வீட்டுக்கு கிளம்பணும். எல்லாரும் ரம்யாவை திலீப் வீட்டிற்கு தான் அழைத்து செல்வாங்க. நாமும் கிளம்பணும்.
நான் வரலை அண்ணா. நான் தாத்தா வீட்டுக்கு போறேன்.
ரம்யாக்கா வாழ்க்கை சந்தோசமா இருக்கணும்ன்னு தான் அவங்க திருமண நேரம் வெளியே போனேன். நானெல்லாம் ராசியில்லாதவள். எனக்கு பிடித்த யாரும் என்னுடன் இருக்கவே மாட்டேங்கிறாங்க.. அதனால அவங்க வாழ்க்கை என்னால கெட்டுப் போக வேண்டாம். எல்லாரும் போயிட்டு வாங்க என விக்ரமை பார்த்தாள்.
“போதும் பவர்”. இதுக்கு மேல பேசாத. என்னால கேட்க முடியாது. நானும் உன்னோட தாத்தா வீட்டுக்கு வாரேன்.
அம்மா, அண்ணாவை சுவாதி அண்ணியை பற்றி கொஞ்சம் சிந்திக்க சொல்லுங்க. ரசி அக்காவும் சுவா அண்ணியும் ஒண்ணா படிச்சவங்க. அவங்க கர்ப்பமா இருக்காங்க. ஆனால் அண்ணிக்கு இன்னும் திருமணம் நடக்கலைன்னு இன்று எல்லாரும் அவங்கள தப்பா பேசுறாங்க.. சொல்லுங்கம்மா..
விக்ரம் தலை கவிழ்ந்து அமர்ந்தான்.
நீயே பாரும்மா..கல்யாண விசயத்தை பேசினால் இப்படி தான் தலையை தொங்க போட்டுக்கிறான் என அன்னம் கோபமாக விக்ரமை பார்த்தார்.
மானசா விக்ரமிடம் மண்டியிட்டு, ப்ளீஸ் அண்ணா..எனக்காக? ப்ளீஸ் கெஞ்சினாள்.
“யோசிக்கிறேன்” என விக்ரம் சொல்லவும் அன்னம் அவனை நிமிர்ந்து பார்த்து, “இதுக்காக தானடா காத்து கிடக்கோம்” அன்னம் புன்னகைக்க, யோசிக்கிறேன்னு தான் சொன்னேன். யாரிடமும் தேவையில்லாமல் பேசி என் மைண்டை ஆஃப் செய்யாதீங்க.
ம்ம்..என்றார்.
விக்ரம் மானசாவுடன் வெளியேற விகாஸ் தனியே அமர்ந்திருந்தான்.
அண்ணா..என மானசா அவனை விக்ரமிடம் காட்டினாள்.
அவன விடும்மா…
அண்ணா..ப்ளீஸ்..
ம்ம்…நீ எல்லாரிடமும் சொல்லு. நாம தாத்தா வீட்ல இருக்கலாம்.
ம்ம்..என அவள் நகர, விக்ரம் விகாஸ் அருகே சென்று அமர்ந்தான். விகாஸ் கையிலிருந்த அலைபேசியில் கீர்த்தனா புன்னகையுடன் இருப்பதை அவன் பார்த்துக் கொண்டிருந்தான். விக்ரம் கண்கள் கலங்கியது..
Advertisement