Advertisement
நீ நான் 27
சுவாதி பேசவில்லை என்பதால் அவளுடனே இருந்தாள். விக்ரம் வரவும் அவனை அணைத்து அழுதாள் மானசா. பெரியவர்கள் அவளையே பார்த்தனர்.
“எதுவும் பிரச்சனையா? இது என்ன காயம்?” என்று அவளது உதட்டை பார்த்தான் விக்ரம்.
“கீழ விழுந்ததில் அடிபட்ருச்சு அண்ணா” என சொல்லி விட்டு, அண்ணா, அண்ணியை நீ கல்யாணம் பண்ணிக்கணும்.
“என்னால முடியாது” என விக்ரம் எழுந்து சுவாதியை பார்த்தான். அவள் கையில் வைத்திருந்ததை பார்த்து அவன் மனமோ அடித்துக் கொண்டது.
பிறந்தநாள் பரிசாக அவன் கொடுத்த மோதிரம் அது. அவள் அதை கையில் மாட்டிக் கொண்டு மானசாவை பார்த்து, “நான் தூங்கணும்” என படுத்துக் கொண்டாள். விக்ரம் கண்கள் கலங்கியது.
இறந்தவங்களுக்காக உயிரோட இருக்கிறவங்கல்ல நீ தண்டிக்கிற. இதுனால அவங்க நிலையை பார்த்தேல்ல. கொஞ்சமாவது யோசி..
மானூ, “எனக்கு பசிக்குது” என சுவாதி விக்ரம் இல்லாதது போல அவளாகவே படுத்துக் கொண்டே சொன்னாள். விக்ரமோ அங்கு இருக்க முடியாமல் எழுந்தான்.
பாட்டி அவனை பார்த்து விட்டு, “நான் எடுத்து வாரேன் மானூ. நீ சுவாவுக்கு ஊட்டி விடும்மா” என முந்தானையால் கண்ணை துடைத்துக் கொண்டே வெளியேறினார்.
அண்ணா, அண்ணியை எப்பொழுதும் போல கூப்பிட மட்டும் செய்யேன். ப்ளீஸ் மானசா கெஞ்ச, எச்சிலை விழுங்கிய விக்ரம் “பேபி..” என அழைத்தான். சுவாதியிடம் பதிலில்லை.
மானசா விக்ரமை பார்க்க, அவனாகவே மீண்டும் “பேபி” என அழைத்தான். அவள் அப்படியே படுத்திருந்தாள்.
விக்ரம் சுவாதி முன் வந்து, “பேபி” என அவள் பார்க்குமாறு அமர்ந்தான். அவள் கண்களை மூடியவாறு “மானூ பசிக்குது” என்றாள். அவனால் தாங்க முடியாமல் கண்ணீர் வந்தது.
மானசா சுவாதி முடியை மெதுவாக கோதிக் கொண்டு, அண்ணி உங்க விக்ரம் வந்திருக்காரு. கண்ணை திறந்து பாருங்க..
“மானூ” என சுவாதி கண்ணீர் வர, விக்ரம் அவள் கண்ணீரை துடைத்து விட்டான்.
கண்ணை திறந்த சுவாதி, “மானூ இது யாரு?” சுவாதி கேட்க, விக்ரம் உடைந்து போனான். மானசா கண்ணீருடன் விக்ரமை பார்த்தான்.
இவரு தான் அண்ணி உங்க விக்ரம்..
இல்ல..விக்ரம்..இவனில்லை. என்னோட விக்ரம் இவனில்லை என தலையணையை எடுத்து விக்ரமை அடித்து, “வெளிய போடா..நீ தான் என்னோட கீர்த்துவ கொன்னீயா?.. கொன்னீயா?” என மேலும் மேலும் அடிக்க, விக்ரம் கதறி அழுதான்.
தாத்தாவும் பாட்டியும் உள்ளே வந்து விக்ரமை பார்த்தனர்.
“அண்ணா” மானசா அழைக்க, விக்ரம் அழுது கொண்டே வேகமாக வீட்டிலிருந்து வெளியேறினான். விகாஸ் மானசா பேசியதை சிந்தித்தவாறு காரில் இருந்தவன் விக்ரம் அழுது கொண்டே வருவதை பார்த்து காரிலிருந்து இறங்கினான்.
“மாம்ஸ்” விகாஸ் அழைத்துக் கொண்டே அவன் கையை பிடிக்க, விகாஸ் கையை உதறினான் விக்ரம். விகாஸ் அதிர்ச்சியுடன் விக்ரமை பார்த்தான்.
மானசா அங்கு விக்ரம் முன் வந்து அவன் சட்டையை பிடித்து, “பார்த்தேல்ல என்ன செஞ்சு வச்சிருக்க? எல்லாமே போச்சு”. உனக்கு உன்னோட கீர்த்தனா தான் முன்னாடி நிக்கிறா.. உன்னையே ஆசையாக காதலித்துக் கொண்டிருந்த அண்ணி கண்ணுக்கே தெரியல. உன்னை என்ன செய்றது? அடிக்கவும் முடியல..ஆறுதல் சொல்லவும் முடியல என மானசா அழுதவாறு சோர்வில் தடுமாறினாள்.
விகாஸ் அவளை பிடிக்க அருகே வர, சட்டென அவனை விட்டு விலகி சுவற்றை பிடித்து நின்றாள்.
“என்னாச்சும்மா? உனக்கு ஏதும் இல்லையே?”
என்னையும் கொன்னுரு..என மானசா நிற்க முடியாமல் அழுதாள். அண்ணியை கொல்றதா தான சொன்ன. எதுக்கு தனியா கொல்லணும்? என்னையும் சேர்த்து கொன்னுரு என அவள் சொல்ல, “சொல்லாதம்மா..கோபத்துல்ல பேசிட்டேன்” என கதறி அழுதான் விக்ரம்.
போ..என அவள் அவனை தள்ளினாள்.
யாரும் என்னோட பிள்ளைகளை பார்த்துக்க வேண்டாம். நானே இருவரையும் பார்த்துக்கிறேன். எவனும் வராதீங்க என சினமுடன் கத்தினார் தாத்தா.
தாத்தா, “சுவாக்கு என்ன?” விகாஸ் கேட்க, மானசா அவளை சீற்றமுடன் முறைத்து, “அண்ணனாடா நீ?” என அவன் சட்டையை பிடித்து, “இத்தனை நாள் அவங்கள தனியா விட்டு இப்ப என்ன கேக்குற?” என அவனை அடித்தாள்.
“இவனுகளுக்கு புரியாது. நீ வாம்மா” என தாத்தா மானசாவை அழைத்துக் கொண்டு..கதவை அடைத்து விட்டார்.
மாம்ஸ், “அவளுக்கு என்னாச்சு?”
விக்ரம் ஏதும் சொல்லாமல் காரை எடுத்து வீட்டிற்கு சென்று குடிக்க ஆரம்பித்தான். விகாஸ் அங்கேயே காரில் இருந்தான்.
காலையிலே ரம்யா தமிழின் வீட்டில் அவளறையிலிருந்து பையுடன் வந்தாள்.
“என்னாச்சும்மா? எங்க போற?” வேல் விழி பதறி, “அத்தை, நான் பாட்டி வீட்டுக்கு போகவா?”
“திடீர்ன்னு எதுக்கும்மா போற?” கிருபாகரன் கேட்டார்.
அத்தை, மாமா..என தயக்கமுடன் மிருளாலினி தமிழினியனை பார்த்தாள்.
“என்ன ரம்யா? எதுக்கு போற?” மிருளாலினி கேட்டாள்.
“அத்தை மாமாகிட்ட தனியா பேசணும்” என இருவரையும் அழைத்து சென்று, அக்கா, மாமா சண்டை போட்ருக்காங்க. அவங்க தனியா பேச நேரமே இல்லை. இரவு மாமா நேரம் கழித்து வாராங்க..அதனால நான் பாட்டி வீட்டுக்கு போறேன். அவங்கள நீங்க சரி பண்ணுங்க..
இன்னும் இரு வாரம் தான..ப்ளீஸ் அத்தை..கோவிச்சுக்காதீங்க என வேல்விழி கன்னத்தை பிடித்து கொஞ்சினாள்.
ஆமாம்மா, மருமக சொல்றது சரிதான். நாமும் வெளிய எங்காவது போயிட்டு வரலாம். ஒரு வாரம் தனியா இருந்தா அவங்க பிரச்சனை சரியாகிடும் என்றார் அவர் கணவன் கிருபாகரன்.
சரிங்க, வந்து இடையிடையே பிள்ளைகளை நீ பார்த்துக்கோடா. அக்கா எல்லாரிடமும் சொல்லீட்டு போறோம் என வெளியே வந்து, தமிழ்..போ. ரம்யாவை விட்டு வா..
அம்மா, “எதுக்கு போறா?” தமிழினியன் கேட்க, பாட்டி வீட்ல இருக்கணும்ன்னு பிள்ளை ஆசைப்படுது. போயிட்டு வரட்டுமே என அவனுடன் அனுப்பி வைத்தார்.
தமிழ் பாட்டி வீட்டில் காரை நிறுத்த, இறங்கிய ரம்யா விகாஸ் கார் அருகே சென்று கார்க்கண்ணாடியை தட்டினாள். தூக்கம் கலைந்து விழித்து அவளை பார்த்தான் விகாஸ்.
“கார்லேயா இரவு முழுவதும் தூங்கிட்டு இருக்க?” என தமிழினியன் “கதவை திறடா” என்றான். இவர்கள் சத்தம் கேட்டு பாட்டியும் தாத்தாவும் வெளியே வந்தனர்.
ரம்யாவை பார்த்து, “வாம்மா” என தாத்தா அழைக்க, “அவனுக்கு என்னாச்சு தாத்தா?”
அவன் கிடக்கட்டும். “நீ வாம்மா. தமிழ் உள்ள வா” என இருவரையும் உள்ளே அழைத்து தாத்தா செல்ல, பாட்டி விகாஸ் அருகே வந்து, “உள்ள வா” என கோபமாக கூறி விட்டு சென்றார்.
“மானு எங்க?” ரம்யா கேட்க, நேற்று அவள் மயங்கியதாக சொல்ல ரம்யா பதட்டமாகி, “இப்ப அவள் எங்க இருக்கா?” என தேடினாள்.
“எதுக்கும்மா இவ்வளவு பதட்டம்?”
“தாத்தா எங்க அவ?” நிதானமாகி ரம்யா கேட்க, தமிழ் அவளை ஒரு மாதிரி பார்க்க, ஏதோ உள்ளது என தாத்தாவிற்கு தெளிவாக புரிந்தது.
“மானூ மானூ” ரம்யா அழைக்க, அவள் படிகளில் இருந்து இறங்கி வந்தாள். ரம்யாவை பார்த்ததும் பயங்கர சந்தோசம் அவளுக்கு.
“அக்கா” என அவளை ஓடி வந்து அணைத்துக் கொண்டாள்.
நீ நல்லா தான இருக்க? கையை விரித்து..ம்ம்..”ஐ அம் ஓ.கே” என்றாள்.
“எதுக்கு மயக்கம் வந்தது?” தமிழினியன் கேட்க, “மாமா..எனக்கு ஒன்றுமில்லை. பாக்குறீங்கல்ல?” இப்ப கூட யோகா பண்ணீட்டு தான் வாரேன்.
“நீயும் காலையில யோகா பண்ணுவீயா? கீர்த்துவும் பண்ணுவா” என தமிழ் முகம் வாட, மானசா மனமே அலுத்துக் கொண்டது.
“அக்கா, நான் தயாராகிட்டு வாரேன்” என்று மானசா சென்றாள்.
“நான் கிளம்புகிறேன் தாத்தா” என்ற தமிழினியன் விகாஸை பார்த்து, “சித்தியை நீ பார்க்கப் போகவேயில்லையா?” அவங்க ரொம்ப கஷ்டப்படுறாங்க. கம்பெனியை நஷ்டத்துக்கு கொண்டு வந்து விட்றாம அதை பாரு.
சும்மா பப்ளிம்மா.. பப்ளிம்மான்னு குடிச்சுட்டு இருக்காத. “இப்ப சுவா தான் இப்படி இருக்கா? சித்தியையும் அப்படி ஆக்கிடாத” என கோபமாக திட்டி விட்டு மானசா அறை கதவை தட்டினான். தலையில் துவாலையுடன் கதவை திறந்த மானசா..வாங்க மாமா என்றாள்.
தமிழ் உள்ளே சென்று, “நீ நல்லா தானம்மா இருக்க?”
ம்ம்..சூப்பர் மாமா
சுவாதியிடம் சென்று தமிழ் மண்டியிட்டு கண்ணீருடன் சுவா, நம்ம “திலீப்- ரம்யா” திருமணம் நெருங்கிடுச்சுட்டா. நீ தான ஆர்கனைஸ் பண்ணுவ. இன்னும் இரு வாரம் தான் இருக்கு. வேலை மெதுவாக தான் இருக்கு. ஷாப்பிங் பற்றி கூட யாரும் பேசலைடா. நீ இப்படியே இருந்தால் ரகா, ராஜா போல திலீப்பும் திருமணம் அன்று ரொம்ப கஷ்டப்படுவாங்க. சீக்கிரம் எழுந்திருடா..அண்ணா எப்போதும் உன் பக்கம் தான். உனக்கு பிடிச்ச எல்லாம் செய்ய தயாரா இருக்கேன்.
விக்ரம்..விக்ரம்..என்றாள். அவன் அவளை இழுத்து அணைத்து அழுதான். இதை பார்த்த விகாஸ் உள்ளே சென்று மண்டியிட்டு சுவாதியின் கையை இழுத்து அவன் கன்னத்தில் வைத்தான். அவனை பார்த்த சுவாதி பட்டென கையை உருவினாள்.
“போடா வெளிய” என தமிழ் கோபமாக விகாஸை பிடித்து தள்ளினான்.
“மாமா” என மானசா அவனிடம் வந்தாள்.
மானூ, இதுல நீ தலையிடாத கோபமாக சொன்ன தமிழ், “இப்ப தான் உனக்கு சுவா கண்ணுக்கு தெரியுறால்லா? காதலித்த பொண்ணுக்காக உன்னோட தங்கையை செய்யாத தப்புக்காக தண்டனை கொடுத்துருக்க? என்ன பேச்சு பேசிட்ட? அவ எப்படி அழுதா? சுவாவோட வாழ்க்கையையே நீயும் விக்ரம் நாசமாக்கீட்டீங்க” என கத்தினான். எல்லாரும் கண்ணீருடன் சுவாதியை பார்த்தனர்.
தமிழ், கிளம்பு. ஹாஸ்பிட்டலுக்கு நேரமாகுதுல்ல? என்று தாத்தா அவனை அனுப்பி விட்டு, இங்க பாருப்பா உங்க வாழ்க்கையில நடந்த பிரச்சனைக்கும் என்னோட பேத்திக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இனி நீ இங்க தங்கணும்ன்னா உன்னோட வேலையை பார்க்க போகணும். இது தான் என்னுடைய கட்டளை.
மானூவுக்கும் உனக்கும் என்ன பிரச்சனைன்னு எனக்கு தெரியாது. ஆனால் அவ தங்க கூட பணம் கொடுத்துட்டு இருக்கா. உன்னோட தங்கையை நீ தான் கவனித்து இருக்கணும். ஆனால் அவள் படிக்கவும் சென்று, டான்ஸ் கற்றுக் கொடுத்து சிரமம் பார்க்காமல் என்னோட பேத்தி சுவாதியை பார்த்துக்கிறா. இதுனால தான் அவளை எல்லாருக்கும் பிடிச்சிருக்கு. சும்மா யாரையும் நான் என் வீட்ல இருக்க விட மாட்டேன். உனக்கு புரியும்ன்னு நினைக்கிறேன்.
“தாத்தா” ரம்யா அழைக்க, “நீ வாடா நாம போகலாம்” என ரம்யாவை அழைத்து உள்ளே சென்றார். அவள் மனதில் “இவங்களுக்குள் என்ன பிரச்சனை?” என சிந்தனையுடன் சென்றாள்.
மானூவோ, அவ்விடம் விட்டு நகர்ந்து தலையில் கட்டி இருந்த துவாலையை எடுத்து விட்டு கண்ணாடி முன் சென்று அமர்ந்து விகாஸை பார்த்து விட்டு, ஹேர் டிரை செய்யத் தொடங்கினாள். அவளை பார்த்துக் கொண்டே விகாஸ் வெளியேறினான்.
பாட்டி சுவாதியிடம் வந்து, “விக்ரம் உன்னை கல்யாணம் செய்வார்” என்றார்.
ஆமா பாட்டி, கண்டிப்பா அண்ணியை அண்ணா கல்யாணம் பண்ணுவான். செய்ய வைப்பேன் என்றாள். அவள் நெற்றியில் பாட்டி முத்தமிட்டு, உன்னையும் கவனிச்சுக்கோம்மா என்றார்.
“யாரும் இப்படி பாசமா முத்தம் கொடுத்ததில்லை பாட்டி” என அவர் கன்னத்தில் புன்னகையுடன் முத்தமிட்டாள் மானசா.
(ஒரு வாரம் கழிந்தது)
ரோஹித் மனீஷாவை பாட்டி அறையில் விட்டதில் இருந்து சரியாக தூங்க முடியாமல் திண்டாடினான். அதனால் வேலையில் முழு கவனத்தையும் செலுத்தினான். மதிய நேரம் அஜய்யுடன் வீட்டிற்கு வராமல் ஆர்டர் செய்து சாப்பிட்டுக் கொண்டிருந்தான். இரவு எல்லாரும் உணவுண்ணும் போது உண்டு விட்டு மனீஷாவை ஏறெடுத்தும் பார்க்காமல், பேசாமலே ஒரு வாரம் சென்றது. அனைவரும் இருவரையும் கவனித்துக் கொண்டிருந்தனர்.
முதல் இரு நாட்கள் ஏதும் தோன்றாத மனீஷாவிற்கு ரோஹித்தின் விலக்கம் கஷ்டத்தை ஏற்படுத்தியது. அவனை எதிர்நோக்கி இவள் பேச சென்றால் வேறு யாரிடமாவது பேசி பேச்சை திருப்பி விடுவான். நாட்கள் செல்ல செல்ல..அவன் அருகாமை அவளுக்கு வேண்டுமென்னு எண்ண ஆரம்பித்தாள்.
அன்று காலையும் அவன் சென்று விட, பாட்டி அறையிலிருந்து அவள் வெளியே வரவேயில்லை. பாட்டி காத்திருந்து விட்டு அவள் வரவில்லை எனவும் உள்ளே சென்றார்.
கண்ணீருடன் அவள் அலா, ரோஹித் இருவரின் புகைப்படத்தையும் மாறி மாறி அலைபேசியில் பார்த்துக் கொண்டிருந்தாள்.
“சாப்பிட வரலையாம்மா?” ராணியம்மா கேட்டார்.
கண்ணை துடைத்து எழுந்து அமர்ந்து, பசிக்கல பாட்டி.
“பசிக்கலையா? பிரிந்து இருக்க முடியலையாம்மா?”
பாட்டி..
ம்ம்..உனக்கு என்னோட பேரனையும் பிடிச்சிருக்குன்னு தெரியுதும்மா? அவன் உன்னிடம் காதலை எதிர்பார்ப்பது தவறு தான். ஆனால்ம்மா..உன் அலா இல்லை. அவன் இடத்தில் உன்னால இவனை வைத்து பார்க்க முடியாதாம்மா?
அப்படியில்லை பாட்டி. எனக்கு இவர் மீது காதல் வந்துருச்சோன்னு தோணுது. ஆனால் அலாவுடன் காதலித்து விட்டு இவரையும் காதலிப்பது தவறில்லையா?
உன்னோட அலா உயிரோட இருந்தால் மிகத் தவறு. ஆனால் நாம் காதலித்தவங்க இறந்தால் வாழ்க்கையே இல்லை என்றாகாதும்மா..
பாட்டி, “நீங்க தாத்தாவுக்கு பின் யாரையும் காதலிக்கலையே!”
ஆமாம்மா, நாங்களும் காதலித்து தான் திருமணம் செஞ்சோம். எனக்கு அவர் குடும்பம் தான் எல்லாமாய் இருந்தது. உனக்கு அப்படி இல்லைம்மா? உன் பெற்றோரும் இல்லையே!
உனக்கு இப்ப இருப்பது யாரோ அவங்களோட சேர்ந்து வாழ்வது தான புத்திசாலித்தனம்.
ஆனால் அலாவை என்னால மறக்க முடியாதே!
அதனால ஒன்றுமில்லைம்மா..நீ அலாவை மறக்க முடியலைன்னாலும் பரவாயில்லைம்மா. அவர் யாருடன் பழகினாரோ அவர்கள் யாரும் அவரை மறக்க மாட்டார்கள். அது போல இருக்கட்டும்.
ரோஹித்..உன்னிடம் காதலை எதிர்பார்த்து காத்திருக்கிறான். உனக்காக நேரம் கொடுத்திருக்கான். ரொம்ப நாள் அவனை நீ காத்திருக்க வைத்தால் அவன் மனமும் பாதிக்கப்படும். உனக்கு புரியும்ன்னு நினைக்கிறேன்..
“நான் அவரோடவே தங்கிக்கவா?” மனீஷா கேட்க, அது உங்கள் விருப்பம்மா.. என்னிடம் பர்மிசன் கேட்க நீங்க காதலர்கள் இல்லை. கணவன் மனைவி. கணவன் மனைவிக்குள் சின்ன விலகல் வந்தாலும் அது அவர்கள் வாழ்க்கையையே புரட்டி போட்டு விடும் என அவர் சொல்ல, பாட்டி..நான் அவருடன் வாழ ஆரம்பிக்கிறேன் என்றாள்.
“நல்லதும்மா” என அவளை இழுத்து அணைத்துக் கொண்டார் பாட்டி. உணவை உண்டு விட்டு சோட்டுவுடன் மகிழ்வுடன் நேரம் செலவழித்து விட்டு மதிய உணவை எடுத்துக் கொண்டு, “தியா நான் போயிட்டு வாரேன்” என சோட்டுவுடன் அஜய் கம்பெனிக்கு கிளம்பினாள் மனீஷா.
அவர்கள் காரில் சென்று கொண்டிருக்க, சோட்டுவோ..அத்த, “மாமா” என கையை காட்டினாள். காரிலிருந்து இறங்கிய ரோஹித் அலைபேசியில் பேசிக் கொண்டிருந்தான்.
அண்ணா, “காரை நிறுத்துங்க” என இருவரும் ரோஹித்தை பார்த்தனர்.
ரோஹித் கையை ஆட்ட, ஒரு பொண்ணும் பையனும் வந்தனர். வந்த பொண்ணோ ஓடி வந்து அவனை கட்டிக் கொள்ள, மனீஷா முகம் மாறியது. சோட்டு அவளை பார்த்தான்.
“அத்த, நாமும் போகலாம்” சோட்டு அழைக்க, சைன் போட்டு அந்த பையனும் ரோஹித்தை அணைத்தான். அந்த பொண்ணோ ரோஹித் கையை விடவே இல்லை. பிணைத்தே வைத்தவாறே பேசிக் கொண்டிருந்தனர். மனீஷாவிற்கு அழுகை முட்டிக் கொண்டு வந்தது. அவள் அவனிடம் மேலும் நெருக்கமாக நிற்க, அழுது விட்டாள் மனீஷா.
அண்ணா, வீட்டிற்கு கிளம்பலாம்.
அய்யாவுக்கு உணவும்மா?
“வேண்டாம் போங்க” என அவள் சொல்ல, “அத்தை, மாமாகிட்ட பேசலாம். அழாதீங்க” என்றான் சோட்டு. அவள் அழுது கொண்டே இருந்தாள்.
“போன பிள்ளை இன்னுமா வரலை?” ராணியம்மா தியா, முக்தாவிடம் கேட்க, “அதான? அஜய் வந்து சாப்பிட்டு கிளம்பீட்டார்” தியா சொல்ல, “அண்ணி..ஏதோ சரியில்லை” முக்தா கூறினாள்.
“அவளுக்கு அழை” தியா சொல்ல, முக்தாவின் அழைப்பில் “ஸ்விச் ஆஃப்” என்று வந்தது.
அண்ணி, “ஸ்விச் ஆஃப்” ன்னு வருது.
“உன்னோட அண்ணனுக்கு போடு” என ராணியம்மா சொல்ல, முக்தா ரோஹித்தை அழைத்தாள்.
அவன் தன் டெல்லி நண்பர்களுடன் ஜாலியாக பேசிக் கொண்டிருந்தான்.
அழைப்பை எடுத்து முக்தா கூறியதை கேட்டு அதிர்ந்தான். “எவ்வளவு நேரம் இருக்கும்?”
“நீ அண்ணியை பார்க்கலையா?” முக்தா பதட்டமாக கேட்க, இல்ல முகி, அவள் வரவேயில்லை.
“போச்சு போச்சு..அண்ணி அலைபேசியும் ஸ்விச் ஆஃப்ன்னு காட்டுது” என சொல்ல, “அவ எதுக்கு தனியா வரணும்?” ரோஹித் சத்தமிட்டான்.
“என்னாச்சுடா?” நண்பர்கள் கேட்க, “இருங்க” என கையை காட்டி விட்டு, “எதுக்கு வரணுமா? என்ன கேள்விடா கேக்குற? அவ உன்னோட பொண்டாட்டி” என தியா கோபமாக திட்டினாள்.
ஹே..தியா, டிரைவர் நம்பர் கொடு. நான் பேசுகிறேன். அஜய்கிட்ட தான் இருக்கும். சீக்கிரம் பாருடா. மூணு மணி நேரம் ஆகுது.
“அவ்வளவு நேரமா எங்க போயிருப்பா? தியா அந்த டான் என்னை மாதிரி அவளையும் கடத்திட்டீன்னா?” ரோஹித் கற்பனை ஓட, “உன்னோட எண்ணத்துல்ல கொல்லிய வைக்க. முதல்ல டிரைவர்கிட்ட பேசிட்டு சொல்லுடா” என அலைபேசியை அணைத்தாள்.
காய்ஸ் இருங்க. நான் அண்ணாவை பார்த்துட்டு வாரேன் என ரோஹித் அஜய் அறைக்கு செல்ல, இருவரும் அவன் பின்னே வந்தனர்.
“ஏன்டா, எல்லாரும் ஏழரையவே கூட்டுறீங்க?” என அஜய் சீட்டிலிருந்து எழுந்து கோர்ட்டை மாட்டிக் கொண்டு, “வா பார்க்கலாம்” என டிரைவருக்கு கால் செய்ய அவனும் எடுக்கலை.
“செட்” என நெற்றியை தேய்த்து யோசித்துக் கொண்டே காரில் ஏறி தேடினார்கள்.
தியாவை அழைத்து நடந்ததை அஜய் முழுவதுமாக கேட்டு விட்டு நேராக சங்கர் அண்ணா கடையில் நிறுத்தினான்.
“அண்ணா, இங்கேயா?” ரோஹித் கேட்க, தியா ப்ரெண்ட்ஸ்ல்ல ஒருத்தியும் மனூ தான. “கண்டிப்பா இங்க தான் வந்துருப்பா” என அஜய் சொல்லிக் கொண்டே செல்ல, அங்கே உணவை ருசித்துக் கொண்டிருந்த அனைவர் பார்வையும் ஒரு டேபிளில் வந்து நின்றது.
மேசையில் இரு கைகளையும் ஊன்றி இரு கையாலும் கன்னத்தை தாங்கியவாறு பாவமாக அமர்ந்திருந்தான் சோட்டு. அவனுக்கு அருகே டிரைவரும். எதிரே முடியை ஒதுக்கிக் கொண்டே அழுது மூக்கை உறிஞ்சி க்யூட்டாக போதையில் இருப்பது போல கோக் பாட்டிலை தொண்டையில் சரித்து ரோஹித்தை தாளித்துக் கொண்டிருந்தாள் மனீஷா. சங்கர் அண்ணாவும் மற்றவர்களும் அவளை வருத்தமாக பார்த்துக் கொண்டிருந்தனர்.
“அண்ணா, என்ன இது?” அஜய் கேட்க, நீங்களே பாருங்க தம்பி .
ரோஹித்தோ சீற்றமுடன் அவளை முறைத்துக் கொண்டே அவர்கள் முன் வந்து நின்றான்.
“மாமு, அத்தை என்னை கொல்றா. முடியல. காப்பாத்து” என சோட்டு கெஞ்சுவது போல் சொல்ல, “சோட்டு..உன்னோட மாமு ரொம்ப மோசம். அவர பத்தி பேசாத” என அவள் பேசிக் கொண்டிருக்க, “அண்ணா எப்போ இருந்து டிரிங்க்ஸ் ஆஃபர் பண்றீங்க?” அஜய் கேட்டான்.
அவர் சத்தமாக சிரித்து, தம்பி அது குளிர்பானம். இருபதாவது குடிச்சிப்பா பாப்பா. பார்த்து கூட்டிட்டு போங்க..
எல்லாரும் அவளையே பார்ப்பதை பார்த்த ரோஹித் கோபமாக, “இங்க என்ன செய்ற?” என கத்தினான். அந்த பொண்ணோ அவனை அமைதி படுத்துகிறேன் என அவன் கையை பிடித்தாள்.
ரோஹித்தை பார்த்து, வாயில் கை வைத்து விக்கிக் கொண்டிருந்த மனீஷா அந்த பொண்ணு அவன் கையை பிடிக்கவும் விக்கல் நின்றது.
கண்கலங்க எழுந்து அவனை பார்த்தாள். அந்த பொண்ணு கையை உதறிய ரோஹித் மனீஷாவை அடித்து விட்டான்.
“தம்பி, எல்லார் முன்னாடியும் அடிக்கிறீங்க?” கோபமாக கேட்டார் சங்கர்.
“அவ எல்லார் முன்னாடியும் மானத்தை வாங்கிட்டு இருக்கா? அவ கேக்குறான்னு நீங்களும் கொடுத்துருக்கீங்க? இவள காணாமல் எல்லாரும் பதறிகிட்டு இருக்காங்க? என்ன செஞ்சுட்டு இருக்கா?”
“ஏய், உன்னை யாரு வெளிய வரச் சொன்னது?” ரோஹித் அவளது கையை அழுத்தமாக பிடித்து கேட்க, அவள் கண்களில் இருந்து கண்ணீர் வந்தது.
வாயில் இரு கையையும் வைத்து அழுது கொண்டிருந்தவளுக்கு வாமிட் வர, கட்டுப்படுத்திக் கொண்டிருந்தாள்.
“சார், அவங்க என்ன பேசிட்டு இருந்தாங்கன்னா?” என ஒருவன் வந்து பேச, “சாப்பிட தான வந்தீங்க? சாப்பிட்டு போங்க என” அவள் கையை பிடித்து வெளியே இழுத்தான் ரோஹித். ஒரு கையை வாயில் வைத்து, அவன் கையை உதறி விட்டு வாஷ்பேசனுக்கு ஓடினாள் மனீஷா.
“எதுக்குடா அடிச்ச?” அஜய் கோபமாக ரோஹித்திடம் கத்தி விட்டு உள்ளே சென்றான். சங்கர் அண்ணாவும் அவன் பின் சென்றார்.
டேபிளில் இருந்த ஒருவன் அவனது அலைபேசியை நீட்டினான் ரோஹித்திடம். அவனை முறைத்துக் கொண்டே அதில் இருப்பதை வாங்கி பார்த்தான். அவன் நண்பர்களும் பார்த்தனர்.
முதலில் அமைதியாக இருந்தவள் குளிர்பானத்தை ஆர்டர் செய்து, வரிசையாக குடித்துக் கொண்டே இருந்தாள். ரோஹித் எண்ணம் வரவும்..சோட்டு, உன்னோட மாமு ரொம்ப மோசம். அவர் தான என்னை இப்படி கட்டிக்கணும்னு சொன்னாரு. அவரை பிடிச்சிருக்குன்னு தானடா சொன்னேன்.
“என்னோட அலா செத்து போனாலும் மறக்க முடியலைன்னு சொன்னது தப்பாடா? இப்படியா என்னை தள்ளி வைப்பார்?” என மீண்டும் குளிர்பானத்தை குடித்து..
பேசவே இல்லைடா..அவரை விட்டால் எனக்கு இப்ப யாருடா இருக்கா? என்னோட குடும்பத்தை விட்டு அலாகிட்ட வர நினைச்சேன். அவர் இவர் கையில என்னை விட்டு போயிட்டார். சரி இவரிடமாவது பேசலாம்ன்னு தான நினைச்சேன்.
அலா செத்து ஒரு மாசம் கூட ஆகலை. “அதுக்குள்ள நான் இவரை காதலிக்கணும்ன்னா என்னால எப்படி முடியும்? அலாவுடன் என்னோட காதல் எத்தனை வருசம் தெரியுமா? ஏழு வருசமா லவ் பண்ணேன்டா..உடனே எப்படி மறக்கணும்?” நெஞ்சுக்குள்ள ஆணியை இறக்கியது போல இருக்குடா. உன்னோட மாமு எனக்கு மருந்து போடுற மாதிரி பேசினார். இந்த ஒரு மாசத்துல்ல என்னையும் அறியாமல் அவரை காதலிக்க ஆரம்பிச்சுட்டேன்.
அலா மீதுள்ளது போலன்னு சொல்லைன்னாலும்..உன்னோட மாமுவை எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு. ஆனால் அவரு வேற பொண்ணை கட்டி புடிச்சுட்டாரு..இப்படி..இப்படி..கட்டிப்பிடிச்சுட்டாரு..பெருசா ஏமாந்த மாதிரி இருக்குடா என தலையை டேபிளில் சாய்த்து அழுது கொண்டிருந்த போது தான் உள்ளே வந்தனர்.
ரோஹித் கண்கலங்க பார்த்து, வீடியோவை அழித்து அவரிடம் அலைபேசியை கொடுத்து, “தேங்க்ஸ்” என்று அவளை பார்த்தான்.
முகம் சிவந்து..முகத்தில் அடித்த தண்ணீரை கூட கழுவாது சோட்டு அருகே வந்து, சோட்டுவிடம் சாரி சொல்லி விட்டு ரோஹித்தை பார்க்காதது போல் காருக்கு விரைந்து அதில் ஏறினாள்.
“மனூ, எங்களோட வா” அஜய் அழைக்க, “மாமா தலை வலிக்குது. நான் வீட்டுக்கு போகணும். உங்களை தொந்தரவு செஞ்சதுக்கு மன்னிச்சிருங்க. நீங்க எல்லாரும் ஆபிஸூக்கு போங்க. சங்கர் அண்ணாவிடம் பே பண்ணிடுங்க” என்று டிரைவரை பார்த்து, அண்ணா…சீக்கிரம் வீட்டுக்கு போங்க. தலைவலி அதிகமா இருக்கு.
ரோஹித் கார் அருகே வந்து, “வா..நாம சேர்ந்து போகலாம்” என அழைக்க, நான் போய்க்கிறேன். இனி வெளியே வரவே மாட்டேன்.
ஹே, “ஐ அம் ஜோவிஸ்” அந்த பொண்ணு மனீஷாவிடம் கை கொடுக்க, தேவையில்லை. “அண்ணா, காரை எடுக்கப் போறீங்களா இல்லை நான் பேருந்தில் போகவா?” என கத்தினாள்.
டிரைவர் ரோஹித்தை பார்க்க, அவன் ஏதும் சொல்லாமல் இருக்கவும் காரை எடுத்து விட்டார் அவர். கண்ணீருடன் பின் இருக்கையில் சாய்ந்து கொண்டாள் மனீஷா.
அத்தை, “அழுறியா?” என சோட்டு கேட்க, அவனிடம் புன்னகையை காட்டி விட்டு பேசாமல் வந்தாள்.
ஏன்டா ரோஹித்? உன்னையெல்லாம்..அவள் இன்று உன்னுடன் புதுசா வாழ்க்கையை ஆரம்பிக்கணும்ன்னு சொல்லி தான் உணவோட உன்னை பார்க்க வந்தா. கம்பெனிக்கு அவள் வரலைண்ணா.. அஜய் அவன் நண்பர்களை பார்த்தான்.
ரோஹித், “உங்கள் இருவரையும் பார்த்து தான் கோவிச்சிட்டு போயிருப்பாளோ!” அவன் நண்பன் கேட்க, “அவள் எப்படி பார்த்திருப்பா? பார்த்தாலும் எங்களை பார்த்து எதுக்கு அவளுக்கு கோபம் வரப் போகுது?”
“கட்டிபிடிச்சிட்டு இருந்தது” என அவள் சொன்னதை நண்பன் சொல்லி தன் மனைவியாக போகும் ஜோவிஸை பார்த்தான்.
“எங்க வச்சுடா கட்டிபிடிச்சுட்டு இருந்தீங்க?” அஜய் கேட்க, அண்ணா..வெல்கம் தான பண்ணேன்.
“எப்படி வெல்கம் பண்ண? கட்டி தான பிடிச்ச?” அஜய் கேட்க, நான்..தான் என அந்த பொண்ணு அஜய்யை பார்த்தாள்.
போடா..போடா…நீயே கெடுத்துக்கிட்ட? இனி அவளை சமாதானப்படுத்தி..இந்த பொண்ணுங்கல்ல சமாதானப்படுத்துறதே ரொம்ப கஷ்டம் தான்.
மனூ அழுதே கொன்றுவா.. பாவம்டா நீ? அஜய் சொல்ல, ஹே, நீங்களும் வாங்க இப்பவே பிரச்சனையை முடிச்சிடலாம் என அவர்களையும் இழுத்து வீட்டிற்கு சென்றான் ரோஹித்.
டேய், இனி நீ நாளைக்கு ஆபிஸ் வா என சொல்ல, “தேங்க்யூ அண்ணா” என காரை எடுத்து விரைந்து செலுத்தினான்.
வீட்டிற்கு வந்த மனீஷா அழுது கொண்டே பாட்டி அறைக்கு சென்று கதவை தாழிட்டாள். அனைவரும் அவளை அழைத்துக் கொண்டிருந்தனர்.
சோட்டு தரையில் விழுந்து, “அம்மா வலிக்குது…வலிக்குது” எனக் கத்தினான்.
சோட்டு, உனக்கு என்னாச்சு? தியா பதற, அவளை பார்த்து கண்ணடித்தான்.
சத்தம் கேட்டு வெளியே ஓடி வந்த மனீஷாவை பிடித்த அனைவரும் அவளிடம் பேச, ரோஹித் நண்பர்களுடன் உள்ளே வந்தான்.
ரோஹித்தை பார்த்து அவள் உள்ளே ஓட, கதவின் முன் வந்த ரோஹித் அவள் உள்ளே செல்லாதவாறு மறித்து நின்றான்.
“சொல்றதை முதல்ல கேளு” அவன் சொல்ல, ஊஹூ..ஊஹூ..என இடவலமாக தலையை ஆட்டினாள் மனீஷா.
“வாயை திறந்து பேசு” அவன் சொல்ல, மொத்தமாக அவன் மீது எடுத்தாள் வாந்தி. எடுத்து விட்டு பச்சப்பிள்ளை போல் வாயை மூடிக் கொண்டாள்.
ரோஹித் நண்பர்கள் சிரியாய் சிரிக்க,”சாரி” என வாயை மீண்டும் மூடிக் கொண்டாள்.
வழியை விட்டு எல்லாரையும் பார்த்து விட்டு ராணியம்மா அறைக்கு சென்று அவன் சட்டையை கழற்ற, அவள் குளியலறைக்கு ஓடினாள். அவனும் அவள் பின்னே சென்றான்.
ரோஹித் மனீஷாவை இழுத்து சவர் அடியே நிறுத்தி, அவனும் நின்றான். இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருந்தனர்.
மனீஷா சட்டென விலக, அவளை இழுத்து பின்னிருந்து அணைத்து, நீ நினைக்கிற மாதிரி எங்களுக்குள் ஒன்றுமேயில்லை. அவங்க மேரேஜ் பண்ணிக்கப் போறாங்க. இன்வெயிட் பண்ண வந்திருக்காங்க. டெல்லில்ல நம்ம வீட்ல வச்சுட்டாங்க. இங்க வந்து சொல்லீட்டு அப்படியே உன்னையும் பார்த்துட்டு போகலாம்ன்னு வந்தாங்க..வேகமாக அவனை திரும்பி பார்த்தாள்.
“தமிழ்ல்ல பேசுறீங்க?”
“நான் கத்துக்கிடேன். உனக்கு கத்துத் தரவா?” என இருபதலியாக கேட்டான்.
ஹா? என அவள் கேட்க, “கத்து தரவா இல்லை உனக்கும் தெரியுமா?”
ம்ம்..
“கத்து தரவா?” என அவளது கன்னங்களை தாங்கி பிடித்தான். அவள் அமைதியாக அவனை பார்த்தாள்.
“முதல்ல ப்ரெஷ் பண்ணு” என காற்றை கையால் தள்ள, முறைத்த மனீஷா வெளிய போங்க. வாரேன்..
நாம சேர்ந்தே போகலாம்.
போகலாம்..போகலாம்..நான் குளிச்சிட்டு வாரேன்..
“நானும் குளிக்கணுமே!”
“அதுக்கு?”
“அதுக்கு” என ரோஹித் அவளை சீண்டினான்.
போங்க என வெட்கமுடன் அவனை வெளியே தள்ளி விட்டு குளித்து அவள் துவாலையை கட்டிக் கொண்டு வந்தாள். ரோஹித் அவளை பார்த்து கண் சிமிட்ட, “சீக்கிரம் குளிச்சிட்டு வாங்க. நான் ஆடை எடுத்துட்டு வாரேன்” என கப்போர்ட்டை திறந்தாள்.
ரோஹித் நின்று அவளையே பார்த்துக் கொண்டிருக்க, “போங்க..உங்க ப்ரெண்ட்ஸ் இருக்காங்க” என அவனை உள்ளே தள்ளி விட்டு ஆடையை மாற்றி தயாராகி வெளியே வந்து வந்தவர்களிடம் மன்னிப்பு கேட்டு அமர வைத்து விட்டு, அவர்கள் அறைக்கு சென்று ரோஹித்திற்கு ஆடை எடுத்து வந்து கொடுத்து விட்டு அவர்களுடன் அமர்ந்தாள். அவனும் வந்தான்.
நண்பர்கள் இருவரும் அழைப்பு விடுக்க, வினித்தும் யுக்தாவும் வந்தனர்.
“சாப்பிட வர இவ்வளவு நேரமா வினு?” தியா கோபமாக கேட்க, “அதான் வந்துட்டோம்ல்ல” என அவர்களை பார்த்தனர்.
யுக்தாவை பார்க்கவும் அந்த பொண்ணு அவளிடம் வந்து, உங்களோட மேரேஜ் என சொல்லும் போதே, “அது இனி தான நடக்கப் போகுது” என கார்த்திக் நேராக யுக்தாவிடம் வந்து அவள் தோளில் கையை போட்டான்.
“நீங்க யாரு?” ரோஹித் நண்பன் கேட்க, கார்த்திக்கை பற்றி கூறி விட்டு, யுகியும் கார்த்திக் மாமாவும் தான் காதலிச்சாங்க. இவங்களும் கல்யாணம் பண்ணிக்கப் போறாங்க என மறைமுகமாக யுக்தாவின் திருமண விசயத்தை அவாய்டு செய்தனர்.
“அப்படியாக்கா?” அவள் கேட்க, கார்த்திக் யுக்தாவின் கையை அழுத்தினான்.
அவனை பார்த்து விட்டு, பாட்டி..எங்க கல்யாணத்தை பற்றி நீங்க ஆன்ட்டிகிட்ட பேசுங்க என்றாள். அனைவருக்கும் மகிழ்ச்சியானது. அவர்களையும் இன்வெயிட் செய்து விட்டு ரோஹித்திடம் கூறி அவர்கள் கிளம்பினார்கள்.
யுகிம்மா, “நான் பேசலாமா?” ராணியம்மா ஆர்வமுடன் கேட்டார்.
ம்ம்..பேசுங்க பாட்டி என்றாள்.
சோட்டு நீயும், மனூவும் தயாராகி வாங்க. நாங்க ஷாப்பிங் போயிட்டு இரவு உணவை வெளியே முடித்து வாரோம்.
“பாக்கெட் மணியில என்ன ஷாப்பிங் பண்றது?” மனீஷா கேட்க, மனூ நீ நிறைய வாங்கிடுவ. “பத்தாயிரம் ரூபாய்” என தியா சொல்ல, இதுவா பாக்கெட்மணி..
“எனக்கெல்லாம் சேவிங்க்ஸ் கூட இவ்வளவு வராதுப்பா” என்றாள். மூவரும் கிளம்பினார்கள்.
“அனைத்தும் சரியாகிக் கொண்டிருக்கிறது” என ராணியம்மா மனதில் பெருமகிழ்ச்சி.
விகாஸ் வீட்டின் காவல்காரர் ஓடி வந்து விகாஸ் அம்மாவை அழைத்தார். அவர் மட்டும் கீழே வந்தார்.
“பெரியம்மா வந்துருக்காங்கம்மா” என அவர் சொல்ல, பாட்டியை பார்த்து “வாங்க அத்தை” என்று அவரை வரவேற்றார். விகாஸ் கம்பெனிக்கு தயாராகி கீழே வந்து கொண்டிருந்தான்.
“வாம்மா” என பாட்டி வெளியே பார்க்க, மானசா வீட்டை பார்த்துக் கொண்டே உள்ளே வந்தாள். அவள் பார்வையில் விகாஸ் முகம் கடுகடுத்தது. மானசாவை பார்க்கவும் சுவாதியை எதிர்பார்த்தார் விகாஸ் அம்மா.
மானூ, சுவா வந்திருக்காளா? என அவர் அவளிடம் ஓடி வந்தார்.
“சாரி ஆன்ட்டி. ஆனால் உங்களுக்கு பெரிய சர்பிரைஸ் இருக்கு” என சொல்லிக் கொண்டே கை தட்டினாள். அவர் ஆர்வமாக அவளை பார்த்தார்.
வழியை விட்டு நகன்று கையை நீட்டினாள். மொத்த குடும்பமும் வந்திருந்தனர்.
எல்லாரையும் பார்த்து மகிழ்ந்தாலும் அவர் மகளை பார்க்க முடியவில்லை என ஏக்கமுடன் மானசாவை பார்க்க,” அண்..ணீ..” மானசா புன்னகையுடன் இழுத்து அழைத்தாள்.
அனைவரும் வழிவிட, “இதோ..உங்க பிரின்சஸ் உங்க வீட்டுக்கு வந்துட்டாங்க” என கையை விரிந்தாள்.
“அம்மா” என சுவாதி அவள் அம்மாவை ஓடி வந்து அணைத்து, “சாரிம்மா சாரி..சாரி..உங்கள ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன்” என அழுதாள். விகாஸ் அம்மா தன் மகளை உச்சி முகர்ந்தார்.
இனி அம்மாவை விட்டு எங்கும் போகக்கூடாது. அம்மாவை யாருன்னு கேட்பியா? என அதட்டலான அவர் குரல் வெகு நாட்களுக்கு பின் வர, அனைவரும் புன்னகைத்தனர். கண்கலங்க மானசா இருவரையும் பார்த்தாள்.
அத்தை, “உங்களுக்காக மானூ உங்க பொண்ணை பழைய சுவாதியாக மீட்டு கொடுத்திருக்கா? அவளுக்கு என்ன தரப் போறீங்க?” ரம்யா கேட்டாள்.
“என்ன வேணும்ன்னாலும் தயங்காம கேளும்மா. நான் எதையும் உனக்காக செய்வேன்” என்றார்.
மானசா விகாஸை பார்க்க, அவனுக்கு தூக்கி வாரி போட்டது. என்னத்த கேட்கப் போறா? லவ்வ சொல்லப் போறாளோ? என அவன் மனம் உலன்று கொண்டிருந்தது.
எனக்கு ஒன்று மட்டும் போதும் ஆன்ட்டி. அதை கேட்கும் நேரம் இதுவல்ல. நான் கேட்கும் நேரம் கொடுங்க போதும். ஆனால் இப்ப..ரம்யாக்கா மேரேஜூக்காக ஷாப்பிங் போகணும். வாங்க கிளம்பலாம்.
“கொஞ்ச நேரம் எல்லாரும் உட்காருங்க” என சுவாதி மானசாவை தனியே அழைத்து சென்றாள்.
“அத்தை, என்ன சீக்ரெட்டா?” சுருதி கேலி செய்ய, “முதல்ல இவளுக்கு கல்யாணம் பண்ணி மகிழ் மாப்பிள்ளையோட அனுப்பி விடுங்க” என அவர் புன்னகையுடன் கூறி விட்டு “பரம ரகசியம் தான்” என இருவரையும் அவர் அறைக்கு அழைத்து சென்றார். சுருதி அவரை முறைத்து பார்த்தாள்.
Advertisement