“இன்னும் தூங்கலையா நீ?” என்ற மகிழ்நனை சங்கடமாகப் பார்த்த செழியன்,

“டிஸ்டர்ப் பண்ணிட்டேனாடா?”

“எதுவும் பிராப்லமா செழியா? இந்த நேரம் வந்திருக்க?” அக்கறையாக கேட்ட மகிழ்நன் கூடத்தில் நிலவும் இருளுக்கு தன் கண்களை பழக்கினான்.

“பேங்க் போயிருந்தேன், இதை வச்சிக்கோ.” பணத்தை மகிழ்நன் கையில் கொடுக்க, குழப்பமாக பார்த்த மகிழ்நன் தெளிந்து அதனை மீண்டும் அண்ணன் கையிலேயே திணிக்கப்பார்த்தான்.

“உனக்கே டைட்டா இருக்குனு சொன்ன. என்ன அவசரம்னு இந்த நேரத்துல வந்து நீட்டுற?”

“என் கையில இருந்தா செலவாகிடும். இருக்குறப்போ தரேன் வாங்கிக்கோ.”

“எனக்கு அவசரம் இல்லைடா.”

“எனக்கும் இப்போ தேவையில்லைடா. முடியுறப்போ கொடுக்குறேன், உனக்கும் செலவு இருக்கும்ல. மறுக்காத. எனக்கு தேவைன்னா எங்க போகப்போறேன் உன்கிட்டதான் வருவேன், வச்சிக்கோ. குட் நைட்.” என அழுத்தமாக மகிழ்நன் மறுக்க முடியாதபடி பேசிச் சென்றான் செழியன்.

பெருமூச்சுடன் உள்ளே வந்த மகிழ்நன் தன்னை பார்த்தபடி எழுந்து அமர்ந்திருந்த மனைவியிடம் அந்த பணத்தைக் காண்பித்து, “இதுதான் அவன். கேக்குறதுக்கு முன்னாடி கொடுத்துடுவான். இதுக்கு போய் என்மேல நம்பிக்கை இல்லாம நடந்துக்கிட்டீல்ல நீ.” என்று மீண்டும் குற்றம்சாட்டுவது போல் பேச, சுருக்கென்றது சமுத்திராவுக்கு.

என்ன சொல்கிறான் இவன்? அண்ணனுக்கு கொடுத்த பணம் திரும்பி வராது என்று தான் பேசியது போல் அல்லவா செல்கிறது இந்த பிரச்சனை. தடம் மாறுகிறதே. அதற்கு மேல் அமைதியாக இருக்க முடியாமல்,

“அவங்க தரமாட்டாங்கன்னு சொல்லவே இல்லை நான்.” என்றாள் தைரியத்தை வரவைத்துக்கொண்டு.

பீரோவில் பணத்தை வைத்து பூட்டியவன், “அவனுக்கு தந்ததுக்குதான் பேசியிருக்க நீ. அதுவும் என்கிட்ட கம்முனு இருந்துட்டு உன் அம்மாகிட்ட சொல்லியிருக்க.” 

சொன்னது தவறுதான் அதற்காக மன்னிப்பும் கேட்டாகிவிட்டது. இன்னும் என்ன வேண்டுமாம். சலிப்பும் அழுகையும் சேர்ந்து வந்தது. அம்மா என்னடாவென்றால் முந்தானையில் முடி என்கிறார் இவன் இரண்டு நாட்களாய் முகம் கூட பார்க்காது இன்றுதான் நிமிர்கிறான். 

“…” ஒன்றும் சொல்லாது கலக்கமாய் அவள் பார்க்க, விடிவிளக்கின் வெளிச்சத்தில் மெத்தையில் வந்தமர்ந்தவன்,

“அன்னைக்கு என்னவோ பதிலுக்கு பதில் நம்பிக்கை வச்சேன்னு பேசுற. நம்பிக்கை போற அளவுக்கு அப்படி என்ன நடந்துச்சு இப்போ?” அன்று முற்று பெற்ற சண்டை இன்று தொடர்ந்தது. 

“சொல்லு சமுத்திரா… நான் வச்ச நம்பிக்கையும் நீ வச்சேன்னு சொன்னதும் ஒண்ணா?” அவள் உதடு துடிக்க அமர்ந்திருக்க, பதில் வேண்டும் என்று பார்த்தான் மகிழ்நன்.

கணவனின் ஊடுருவும் பார்வையில் உள்ளம் உதறியது. நானும் நம்பினேன் என்று ஏதோவொரு வேகத்தில் அன்று பேசிவிட்டாலும் அவன் கேட்டால் எப்படி எதிர்வினை ஆற்றுவது என்று யோசித்து வைத்திருந்தாள். இருந்தாலும் அனைத்தும் மறந்தது போலானது.

“சமுத்திரா.” ஆழியின் அழுத்தத்தை உடைக்கும் விதமான குரலில் அவன் அழைக்க, முத்து உதிர்ந்தது.

“பாப்பாக்கு வாங்கலாம்னு சொல்லி கூட்டிட்டு போயிட்டு கடைசி வரைக்கும் வாங்கலைல. நீங்களும் நம்பிக்கை கொடுத்து அழைச்சிட்டு போயி அதை உடைச்சிட்டீங்க.” ஒருவாறாக மனதில் இருந்தவற்றை அவள் சொல்ல, பேச்சற்று பார்த்தான் மகிழ்நன்.

அன்று ஏதோ பேச்சுக்கு எதிர்வினை ஆற்றவேண்டும் என சமுத்திரா நம்பினேன் என்று சொல்லிவிட்டதாக எண்ணி அதனை பெரிதுபடுத்தாமல் இருந்தவனுக்கு மனைவியின் இந்தக் கோணம் புதிது. 

“பாப்பாக்கு வாங்கப்போறோம்னு ஆசையா வந்தேன். அத்தாச்சி முன்னாடி போய் ஆரம் காட்ட சொல்லவும் பாப்பாக்கு பாக்கணும் உங்களை கேட்டேன், பாக்கலாம் பாக்கலாம்னு சொல்லி கடைசி வரைக்கும் பாக்கவே இல்லை.” சமுத்திராவின் குரல் பிசிறடித்தது.

“உங்ககிட்ட இதுவரைக்கும் நான் எதுவும் கேட்டிருக்கேனாங்க? என்னவோ தோணுச்சு பாப்பாக்கு வாங்கணும்னு. அது அவ்வளவு பெரிய தப்பா? நம்பிக்கை அதுஇதுனு எல்லாம் பேசுறீங்க. எனக்கு கஷ்டமா இருக்கு. உங்க மேல நான் வச்ச நம்பிக்கையும்தான் உடஞ்சிட்டு என்ன பண்ண முடியும் இப்போ?” 

வார்த்தைகள் இழந்து பார்த்தான் மகிழ்நன். இதுபோன்று பேசும் சமுத்திரா புதிதாய் தெரிந்தாள். கண்கள் கலங்கி கன்னங்கள் சிவப்பேற இருநாட்கள் முன் அழுத போதுகூட அவள் அம்மாவிடம் சொன்னது அவள் தவறுதானே என்று எளிதாக கடந்துவிட்டான். இன்று அவன் புறம் இருக்கும் சறுக்கலை சுட்டிக்காட்டி அழுகையை அடக்க முயற்சிக்கும் அவளின் பாங்கு அவனைத் தாக்கியது.

அமைதியாக அவனுக்கு முதுகு காட்டிப் படுத்தவளை பெருமூச்சோடு பார்த்தபடி தன்னிடத்தில் படுத்தான் மகிழ்நன். 

“எப்போதும் எதுவும் கேக்காதவ இப்போ கேக்குறேன்னு நீங்களும் கொஞ்சம் யோசிச்சிருக்கலாம்.” என்றாள் திரும்பாமலே.

தலையை மட்டும் உயர்த்தி அவளைப் பார்த்தவன், “வாங்கித்தர மாட்டேன்னு சொல்லல. இன்னும் கொஞ்ச நாள்ல வாங்கிக்கலாம்னுதான் சொல்றேன். இனிமே சம்பாரிக்கிறது எல்லாம் பாப்பாக்குதான.” சொன்னதையே மீண்டும் சொன்ன மகிழ்நனுக்கு அப்போதும் சமுத்ராவை சமாளித்துவிடலாம் என்ற எண்ணம்தான். 

“இங்க பாரு சமு, நடந்ததை மாத்த முடியாது. நான் வேதாக்கு வாங்கிக்கொடுத்தது, நீ உன் அம்மாகிட்ட சொன்னது எல்லாத்தையும் விடு. பணம் சேர்ந்ததும் உமையாளுக்கு வாங்கிடலாம்.” என்று சொல்ல, ஏற்புடையதாக இருந்தது சமுத்திராவுக்கு.

நடந்து முடிந்ததை திருத்த முடியாது. பிற்பாடு வாங்கிக்கொள்ளலாம் என்று சொல்கிறானே பார்த்துக்கொள்ளலாம் என ஏமாற்றத்தை புதைக்க முயன்றாள். அவளுக்கும் இதுபோன்று சஞ்சலம் கொண்டு முகம் தூக்கி மனம் வலிக்க வலிக்க நொடிகளைக் கழிப்பது அவஸ்தையாக இருந்தது. பிரச்சனையிலிருந்து வெளிவந்து இதற்கொரு முற்றுப்புள்ளி வைத்தால் போதுமென்ற முனைப்பில் நிம்மதி மூச்சுடன் அவன் புறம் திரும்பி புன்னகைக்க முயன்றாள் ஆனால் முடியவில்லை. அவனுக்கு அப்படியொன்றும் இல்லை போல, மனைவியை சமாளித்துவிட்ட திருப்தியில் இதழ் விரிய கையை நீட்டி அவள் தலையை லேசாக வருடிவிட்டான். 

“தூங்கு சமு.” எக்கி அவள் நெற்றியில் லேசாக முத்தமிட்டு அவள் முடியை விளையாட்டாய் கலைத்துவிட்டு தன் இடத்தில் நேராகப் படுத்தவன் நிமிடத்தில் உறங்கிப் போனான். 

மகளை அணைவாகப் பிடித்தபடி சற்று எம்பி கணவனைப் பார்த்த சமுத்திராவும் ஆசுவாசமாய் துயில் கொண்டாள். 

நாட்கள் அதன்போக்கில் நகர, சமுத்திரா தன்னையும் அறியாமல் அனைத்திலும் ஒரு எச்சரிக்கை உணர்வோடும் ஆராய்ச்சிப் பார்வையோடும் பார்க்க ஆரம்பித்தாள். அன்று வழமை போல் வாசலில் வைத்து உமையாளுக்கு ஊட்டிக்கொண்டிருக்க, பள்ளிக்கு கிளம்பி வந்த நன்மதி செழியனுக்காக காத்திருந்த நேரம் உமையாளிடம் பேச்சு கொடுத்தாள். உமையாள் தூக்கச் சொல்லி கைநீட்டி அவளிடம் தாவ,

“பெரியம்மா ட்ரெஸ் எல்லாம் சாப்பாடு ஆக்கிடுவ. ஸ்கூல் போகணும் அவங்க, நைட் போகலாம்.” என சமுத்திரா சமாளிக்க,

“இப்போவே என்கூட ஸ்கூல் வர்றியா நீ? க்ளாஸ்ல உக்காந்து ஏ,பீ,சி,டீ படிப்போமா?” உமையாளுக்கு நிகராக பேச்சு கொடுத்து அவளை தூக்கிக்கொண்டாள் நன்மதி.

சமுத்திரா ஆச்சர்யமாக அவளைப் பார்த்தாள். இதுபோல் எல்லாம் குழந்தையிடம் கூட ஒட்டிக்கொண்டு பேசுபவளில்லை அவள். உமையாளாகச் சென்றால் பேசுவாள், சில நிமிடங்கள் விளையாடுவாள் அவ்வளவே. இன்று தூக்கி வைத்து பேசுகிறாள் என்று பார்க்க, செழியன் வரவும் இன்முகத்தோடு உமையாளை சமுத்திராவிடம் கொடுத்தாள். உமையாள் அழுகையை கூட்டத் தயாராக, அவளிடம் என்னவோ பேசி கையசைத்து நன்மதி விடைபெற அது சமுத்திராவின் கவனம் பெற்றது.

சுருக்கங்களின்றி சரியான அளவில் நீர்ச்சத்துகளை தக்கவைத்துக்கொண்டு வழுவழுப்பாக பளிச்சென்று இருந்த நன்மதியின் உள்ளங்கை எதர்ச்சையாக சமுத்திராவின் கருத்தில் பதிந்து ஒப்பீட்டுக்குள் சென்றது.

தன்போக்கில் தன் உள்ளங்கை இரண்டையும் விரித்துப் பார்த்தாள் சமுத்திரா. பளீரென்ற நிறம் மங்குமளவுக்கு ரேகைகள் அங்குமிங்கும் ஓட்டம் கொண்டிருந்தது. பெரிய ரேகைகள் ஒருபுறம் ஆக்கிரமிக்க சிறியது பல இங்குமங்குமாய் பரந்து விரிந்து சுருங்கி என அழுத்தமாக தன் தடங்களை பதித்தது மட்டுமின்றி ருசிமிகுந்த உணவின் பின்னிருக்கும் வியர்வை மணிகளின் ஆதிக்கம் போல் அதன் சுவடை தாங்கியிருந்தது. வெங்காயம் பூண்டு உரித்தது, இருப்புச்சத்துள்ள காய்கறிகள் வெட்டப்படுவதால் உண்டாகும் வேதியியல் மாற்றங்கள் தன் தோலிற்கு கொண்டு வந்த கருமை நிறம், கத்தியால் காய்கறி நறுக்கும் போது தெரியாமல் விழுந்த சிறு வெட்டுக்காயம், எண்ணெயில் சிறு துளி தண்ணீர் தவறிப்போய் விழுந்ததால் உண்டான வெடிப்புகளின் பரிசாய் வடுவாய் கன்றிப்போன மச்சங்கள், கரண்டி பிடித்து மாவு அரைத்து என வேலைகள் அனைத்தும் செய்ததன் பலனாய் சற்று உள்ளே போன கட்டைவிரல் சதைப்பிடிப்பு என இருபது வயதிலேயே வயதானவர்களுக்கு இருப்பது போலிருந்தது.

“ம்மா…” உமையாள் அவள் உள்ளங்கையில் தன் கை வைக்கவும் அந்த கையைப் பிடித்துக்கொண்டு பட்டென்று நிமிர்ந்துப் பார்த்தாள் சமுத்திரா.

மழலையில் என்னவோ சொல்லிக்கொண்டே அம்மா கன்னத்தில் முத்தமிட்டாள் சின்னவள். அதில் மற்றைய எண்ணங்கள் பின்சென்றுவிட, மகள் பிரதானமானாள். கொஞ்சிக்கொண்டே மீதி உணவு ஊட்டி முடித்து உள்ளே செல்ல, வங்கிக்கு கிளம்பி வந்தான் மகிழ்நன்.

“சாப்பிட்டீங்களா? கூப்பிடவே இல்லை.” அவனுடன் பேசிக்கொண்டு பாதியில் நின்றுவிட்டாள்.

“அம்மா கொடுத்தாங்க.” பதில் மனைவியிடமும் கொஞ்சல் மகளிடமும் சென்றது. 

அப்பாவும் மகளும் அவர்கள் உலகத்தில் ஏதோ பேசி சிரிக்க, அப்பாவிடம் செல்லத் தாவினான் உமையாள்.

“ஈவ்னிங் தூக்குறேன் தங்கம். அப்பா பேங்க் போகணும்.” அவன் மறுக்க, மகள் அழுக ஆரம்பித்தாள்.

“செழியன் கிளம்புனப்போவும் அழுத மாதிரி இருந்துச்சு, இப்போவும்… நாங்க வேலைக்கு கிளம்புற நேரம் பாப்பாவை எதுக்கு வாசல்ல வச்சிட்டு நிக்குற? பாத்து பாத்து அவ அழுகணுமா?” 

தூக்கச் சொல்லி அழும் மகளை தூக்க முடியாத ஆதங்கத்தில் மனைவியிடம் அவன் முகம் காட்ட,

“அங்கன்னா ஒழுங்கா சாப்புடுறா. நீங்க கிளம்புறீங்கன்னு அவளுக்கு சாப்பாடு கொடுக்காம இருக்கவா.” குரல் உயர்த்தவில்லை என்றாலும் பதில் நறுக்கென்று வந்தது. இருந்த எரிச்சலில் மகிழ்நன் கண்டுகொள்ளவில்லை. ஆனால் பேத்தி அழுகவும் அவர்களை நெருங்கிவிட்ட பத்மா இதனைக் கேட்டு அப்படியே நின்றுவிட்டார்.

சமுத்திராவிடமிருந்து முழுதாக நழுவி மகிழ்நனின் நெஞ்சுப்பகுதி சட்டையை பிடித்துக்கொண்டு உமையாள் அழுக, “ஏன் பின்னாடி வச்சி ஊட்ட வேண்டியதுதான?” கடுப்பாகக் கேட்டான் கணவன்.

“அப்போ நாளைக்கு நீங்களே பின்னாடி வச்சி ஊட்டிப் பாருங்க.” என்றுவிட்டாள் பட்டென்று. அவளை முறைத்துவிட்டு மகளைத் தூக்கியிருந்தான் அவன்.

“வண்டில ஒரு ரவுண்ட் அழைச்சிட்டு போயிட்டு வரேன். அவ முகத்தை துடைச்சிவிடு.” என்கவும் மகளின் முகம் துடைத்துவிட, ஜோராக கைதட்டிக்கொண்டு சென்றாள் உமையாள்.

சமுத்திராவும் அவர்களை பின்தொடர்ந்தவள் மகிழ்நனுடன் வண்டியில் சென்று வந்த மகளை பேசி சமாதானம் செய்து உள்ளே அழைத்து வந்தாள்.

“நல்லாதானே இருந்த, இப்போ என்ன திடீர்னு பேச்செல்லாம் தினுசா இருக்கு? பெருசு தான் இஷ்டத்துக்கு இருக்கு, நீயும் அதை பார்த்து கெட்டுப்போயிடாத. ஆம்பிளைங்களுக்கு ஆயிரம் வேலை இருக்கும், அவங்க கிளம்புறப்போ வாயை குறைச்சிக்குறது நல்லது. வீட்ல இருக்குறப்போ நல்ல மனநிலையில் அவங்களை வச்சுக்கணும்.” என்ற பத்மாவின் கூற்றில் ஒன்றும் விளங்காமல் நின்றவளுக்கு மின்னல்வெட்டியது போல் சில நிமிடங்கள் முன்பு கணவனுக்கு கூறிய பதில் நினைவு வர, அதிர்ந்து பின் அதைதான் குத்திக்காட்டுகிறார் என்று புரிந்ததும் முகம் சுருங்கியது.

ஆண்களுக்கு மட்டும்தான் வேலையா? தனக்கில்லையா? இல்லை தான் செய்வது எல்லாம் வேலையாகத் தெரியவில்லையா? மாதமானால் சம்பளம் கைக்கு வந்தால்தான் வேலை செய்வதாய் அர்த்தமா?

முதல்முறையாய் சுணக்கம் வந்தது. அதனைத் தொடர்ந்து ஒப்பீடும் நடந்தது. இதுபோன்று நன்மதியிடம் பேசிவிட முடியுமா? இல்லை பேசினால் அவள் அமைதியாக சென்றுவிடுவாளா? தான் என்பதால் அலட்சியமா? விடையறியா கேள்விகள் நீண்டது.