“தோசை ஊத்தியிருக்கேன். எல்லாருக்கும் எடுத்து வச்சிடு.” என அடுப்பை அணைத்தவர், “ஹப்பப்பா என்ன வேர்வை. வயசு ஏற ஏற கொஞ்சம் வேர்த்துவிட்டாலே படபடன்னு வருது.” என முந்தானையால் முகத்தை துடித்துக்கொண்டே வெளியேறினார்.
பெருமூச்சுடன் அங்கிருந்தவற்றை பார்த்தாள் நன்மதி. இரவுக்கு பெரிதாக வேலைகள் இல்லை. உணவு தயாராய் இருந்தது. மறுநாள் காலைக்கு பார்க்க வேண்டும். மின்சாதனப்பெட்டியில் என்ன இருக்கிறது என திறந்து பார்த்துவிட்டு மனதிலேயே என்ன செய்ய முடியும் என கணக்கிட்டபடி வெளியே வந்து கணவன் அருகில் அமர்ந்தாள்.
அம்மா பிள்ளைகள் எல்லாம் டீவியில் மூழ்கியிருந்தனர். தனியாரில் உதவியாளராக வேலைப் பார்க்கும் மாமனார் இன்னும் வீட்டிற்கு வரவில்லை.
ஏதோ யோசனையில் இருக்கும் மனைவியின் பின்னங்கழுத்தை யாருமறியாமல் இருவிரல் கொண்டு வருடிவிட்டான் செழியன். திரும்பிப் பார்த்து கணவனை முறைத்தாள் நன்மதி. புருவம் உயர்த்தி அவள் கழுத்திலிருந்த கையை கொஞ்சம் கீழிறக்க, நாக்கை மடித்து சுட்டுவிரலால் அவனை மிரட்டியபடி நகர்ந்து அமர்ந்தவள் மற்ற இருவரையும் கண்காட்டினாள். அலட்சியமாய் உதடு சுழித்தவன் அதனை அப்படியே அவளை நோக்கி குவிக்க எழுந்து சென்றுவிட்டாள் நன்மதி. வெடிக்கத் துடித்த புன்சிரிப்பை கடினப்பட்டு அடக்கிய செழியன் மீசையை நீவியபடி தம்பியையும் தாயையும் ஓரக்கண்ணால் நோட்டமிட்டபடி மெல்ல நகர்ந்து பூனை நடையுடன் மனைவியைத் தேடிச் சென்றான்.
“புள்ளை இல்லாத வீட்டில் கிழவன் துள்ளி விளையாடுனானாம், அந்த கதையால இருக்கு.” பின்னோடே கணவன் உள்நுழையவும் கேலியாய் பார்த்தாள் நன்மதி.
“நான் உனக்கு கிழவனாடி?”
வந்த வேகத்திற்கு மனைவியைப் பிடித்து எழுப்பி சுவற்றோடு சேர்த்து நிறுத்தி அவள் கன்னத்தில் மாறி மாறி முத்தம் வைத்து கழுத்தில் புதையப் பார்த்தான். அவன் அதிரடியை எதிர்பார்க்காத நன்மதி கால் விரல்களில் பிடிமானம் கொடுத்து அவன் வேகத்திற்கேற்ப எம்பி நின்றாள். அன்பின் வெளிப்பாடாய் சின்ன சின்ன முத்தங்கள் அவள் மேனியை சென்று சேர, கண்களை மூடி ஓரிரு நொடி அதனை அனுபவித்தவள் சூழல் உணர்ந்து அவன் பின்னந்தலை முடியைப் பிடித்துத் தடுத்தாள்.
“என்னங்க, நான் ஓகேதான்.” கணவனின் மனம் அறிந்தவள் போல் அவள் சொல்ல, அவனுக்கு மனைவியின் நலம் அறிய வேண்டும்.
“சமாளிச்சிடுவியா?” சமுத்திரா இல்லையென்றால் வீட்டு வேலைகள் மதியிடம் வரும். உமையாளின் இல்லாமை பெரியவர்களின் கவனத்தை இவர்களிடம் குவிக்கும். அது மதிக்கு அழுத்தம் கொடுக்குமென்ற கவலை கணவனுக்கு.
கணவனின் அக்கறையில் கண்களை சிமிட்டி இதழ்கள் விரிய புன்னகைத்தாள் நன்மதி.
“உமையாள் இருந்தா வீடே சத்தமா இருக்கும். ரூம்குள்ள இருந்தாலும் தனியா இருக்குற மாதிரி இருக்காது. அங்கேயும் இங்கேயும் ஓடிட்டு இருப்பா, அழுது ஊரை கூட்டுவா, பாடுறது, ஆடுறதுனு நம்மளை என்கேஜ்டா வச்சிப்பா…” தம்பி மகள் குறித்த நினைவுகள் மேலெழும் போதே இதழ்கள் இதமானது, “ரூமுக்குள்ளேயே இருக்காத. கொஞ்ச நேரம் வெளில வந்து உக்காரு.” அக்கறை கொட்டிக்கிடந்தது செழியனிடம்.
“நீங்க போங்க வரேன்,” என்றவள் செல்லும் அவனை பிடித்திழுக்க, தன்னால் அவன் விழிகள் கேள்வியில் விரிந்தது. நெளிந்து உயர்ந்துக் கிடந்த புருவங்களை கட்டைவிரலால் நீவிவிட்டவள் மற்றைய விரல்கள் கொண்டு கலைந்து போயிருந்த அவன் சிகையை சரிசெய்துவிட்டாள்.
“இப்போ போலாம்.”
இருவர் முகத்திலும் வாடாத புன்னகை.
இதுபோன்ற சிறு சிறு செயல்கள்தாமே அன்றாடத்தை உயிர்ப்போடு வைக்கிறது. சோர்வுகளை நீக்கி பிரபஞ்சத்தினை அழகாக்குகிறது. அதனை உணர்ந்து வெளிப்படுத்தி வாழும் வாழ்க்கை சொர்க்கம்தானே. கேட்டால் இல்லையென்பார்கள்.
அன்றைய இரவு உணவு வேளை அமைதியாக கழிய, இரவே சமையலறையை சுத்தம் செய்துவிட்டாள் நன்மதி. நியாபகமாக பாதாம் ஊறவைத்துவிட்டு சென்றாள். அலைபேசியில் அலாரம் வைத்துக்கொண்டவள், “தூங்கிட்டா எழுப்பி விடுங்க.” என கணவனிடம் சொல்லிவிட்டே படுத்தாள். அவனும் மனைவியை அணைத்துக்கொண்டு உறக்கம் தழுவினான்.
பக்கத்து அறையில் இருந்த மகிழ்நனுக்கு உறக்கம் வருவேனா என்றது. அலைபேசியில் விளையாடினான், ரீல்ஸ் பார்த்தான், பாட்டு கேட்டான். எப்பொழுதும் அம்மாவும் மகளும் நேரம் தாழ்ந்து உறங்க, இவன் படுத்து சிறிது நேரத்தில் தூங்கிவிடுவான். இன்று தொல்லை செய்ய மகளும் இல்லை, உறக்கமும் இல்லை. அது அவனுக்கு புரியவும் இல்லை. மனைவி மகள் வாசமின்றி அவன் அறை அவனதாக இல்லை என்ற நிதர்சனம் உணராமல் அலைபேசியில் சார்ஜ் தீரும் வரை பார்த்துவிட்டு வெகு நேரம் சென்றே உறங்கினான். பலன் காலையில் தாமதமாக விழிப்பு வந்தது.
மாறாக மனைவியுடன் ஆறு மணிக்கு எழுந்துகொண்ட செழியன் நன்மதியோடு சமையலறை வந்துவிட்டான்.
“நான் ஹெல்ப் பண்றேன். என்ன பண்ணனும்.” என்று நிற்க, உறங்கி எழுந்த சோர்வின் சாயலில் கூட நன்மதியின் முகம் பிரகாசித்தது. பத்மாவின் முகமோ இருளடித்தது.
“இங்க என்ன பண்ற நீ?” வாசல் தெளித்து கோலம் போட்டு வந்த பத்மா மகனை சமையலறையில் பார்க்கவும் பதறாத குறையாக வேகமாக வந்தார்.
“என்னம்மா?” ஏதும் அறியாதது போல் ஒரு பாவனை.
“இங்க என்ன பண்ற நீ?”
“மதி எழவும் நானும் முழிச்சிட்டேன். சரி உங்களுக்கு ஏதாச்சு ஹெல்ப் பண்ணலாம்னு வந்தேன்.” என்றவன் இயல்பாய் பெரிய வெங்காயம் ஒன்றை எடுத்து தோல் உரிக்க, பட்டென்று அதனை பிடுங்கினார் பத்மா.
“இதெல்லாம் நீ எதுக்கு செய்யுற? மதி செஞ்சிப்பா.” மகன் சமையல்கட்டு வந்ததில் சுத்தமாய் உடன்பாடில்லை பத்மாவிற்கு.
“மதியே எவ்வளவு செய்வா? நான் ஹெல்ப் பண்றேன்.”
“சமுத்திரா இவளை விட சின்னவ, அவ செய்யல.” தன் பேச்சை கேட்காமல் மகன் சட்டமாய் நிற்பதில் மனதின் எண்ணங்களுக்கு வார்த்தை வந்துவிட்டது.
கையில் எடுத்ததை அப்படியே மேடையில் வைத்துவிட்ட நன்மதி, “அப்போ அவ வந்து எல்லாம் செய்யட்டுமா? அதுவரைக்கும் எல்லாரும் சாப்பிடாம இருப்போமோ?” மாமியாரை விடுத்து கணவனிடம் முறையிட,
“சமுத்திரா அளவுக்கு இங்க வேற யாருக்குமே வேகம் வராதுமா. அதுக்காக அத்தியாவசியமான வேலையை நாம செய்யாம இருக்க முடியுமா?” என்றுவிட்டான். மறைமுகமாக தன்னைத்தான் சமுத்திராவோடு ஒப்பிடுகிறான் என்று காதில் புகை வராத குறையாக உள்ளுக்குள் தகித்துப் போனார் பத்மா.
“சமுத்திராவுக்கும் நீ ஹெல்ப் பண்றதாலதான் ஈஸியா செய்ய முடியுது. எழுந்து வந்து பாத்தேன் நீ வாசல்ல இருந்தேன் அதுதான் மதிக்கு உதவலாம் நான் வந்தேன்.” என இப்படியும் ஒரு பேச்சு. சுமூகப்படுத்துகிறானாம்.
“சமுத்திரா வர்றதுக்கு முன்னாடி மதியும்தான் எல்லாம் செஞ்சா. இப்போவும் செய்யதான் வந்திருக்கா. நீ ஹெல்ப் பண்றேண்ணா ஓகே நான் வேற வேலை பாக்குறேன்.”
“ஏன் நேத்தி நான் எதுவும் பண்ணாமதான் சாப்பிட்டீங்களா எல்லாரும்?” என கேட்டுக்கொண்டே மேடையில் இருந்த காய்கறிகளை எடுத்துக்கொண்டு நறுக்க ஏதுவாக கீழே அமர்ந்துகொண்டார் பத்மா.
மனைவியை ஒருபார்வை பார்த்துவிட்டு வெளியேறினான் செழியன். நன்மதி பெருமூச்சுடன் சமையல் வேலையைத் தொடங்கினாள். மதியத்திற்கு எப்போதும் போல் இரு காய்கறிகள், குழம்பு என வைத்தவள் மூன்று டப்பிகளில் அதை அடைக்கப்போக குளித்து கிளம்பி வந்த செழியன்,
“நான் பாத்துக்குறேன், நீ ரெடி ஆகு. போ.” என அந்த வேலையை தனதாக்கிக்கொண்டான்.
ஒரு அடுப்பில் நன்மதி முட்டை வேக வைக்கவும் வெளியேறிய பத்மா சிறிது நேரம் கழித்து வந்து பார்க்க, மகன் சாப்பாட்டுக் கூடையும் கையுமாக நின்றான். வெடுக்கென்று அவன் கையிலிருந்து பிடுங்கிச் சென்று உணவு மேசையில் வைத்து வந்தவர், “மகிழு இன்னும் எழும்பல, அவனை எழுப்பிவிடு.”
“இன்னும் மதிக்கு லன்ச் கட்டல. கட்டிடுங்க.” என்று அம்மாவிடம் வேலை கொடுத்துவிட்டு செல்ல, மகனை முறைத்தபடி நன்மதிக்கு உணவு கட்டினார்.
‘சமைக்கச் தெரிஞ்சவளுக்கு அதை டப்பிக்குள்ள கட்டிக்கத் தெரியாதாம்? என் புள்ளை இவளுக்கு கட்டிக்கொடுக்கணுமா? இவளை யார் இப்போ வேலைக்கு போகச் சொல்லி கேட்டா?’ என்ற முணுமுணுப்புகளுக்கு இடையே மதியத்திற்கானது முடிய, காலை என்ன செய்திருக்கிறாள் என்று பார்த்தார்.
சட்னி மட்டும் அரைத்து வைத்திருந்தாள்.
‘இட்லி என் புள்ளை வந்து ஊத்துவானா? நல்ல வேலை நைட்டே இட்லி மாவு எடுத்து வெளில வச்சேன் இல்லைனா என்ன ஆகியிருக்குமோ? அவளுக்கு வேணுங்குற முட்டையை மட்டும் கரெக்ட்டா வேக வச்சுக்கிட்டா.’ வாய் ஓயாமல் என்னவோ சொல்லிக்கொண்டே இட்லி ஊற்றி வைத்தார்.
வெகு நாட்கள் கழித்து தம்பியின் அறைக்கதவை தட்டாமல் உள்ளே நுழைந்தான் செழியன். ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான் மகிழ்நன். அருகில் இருந்த தலையணை எடுத்து தம்பியின் முகத்தில் பொலிச்சென்று ஒன்று வைக்க, அடித்துப்பிடித்து எழுந்தான் மகிழ்நன்.
செழியன் வாய் விட்டு சிரிக்கும் சத்தம் அறையை நிறைக்கும் வரை அவனுக்கு ஒன்றுமே புரியவில்லை. புரிந்த கணம் கால்களை வீசி எழுந்தவன் செழியனை அடிக்கத் துரத்த, சிரித்துக்கொண்டே கூடத்திற்கு ஓடிவந்தான் அண்ணன்காரன். துரத்திக்கொண்டு வந்த மகிழ்நன் செழியனைப் பிடித்து அவன் முதுகிலே மொத்த, வீட்டினர் அதிர்வுடன் பார்த்து நின்றனர்.
“என்னடா பண்றீங்க? சின்ன பசங்களா நீங்க?” அதிர்ந்து விழித்த கந்தவேலுக்கோ அண்ணன் தம்பிக்குள் பூசலோ என்ற பதட்டம்.
“பொறாமை புடிச்சவனே! அண்ணி கேட்டுக்கோங்க.” நன்மதியிடம் அடுத்து புகார் வாசிக்க, சிரிப்புடன் கணவனைப் பார்த்தாள் நன்மதி. கணவனின் விளையாட்டுக்களை சுவாதீனமாக ரசிக்கும் பாவனைக்கு அவள் உடல்மொழி மாறியது.
“புள்ளையை ஸ்கூலுக்கு அனுப்புற வயசுல ஸ்கூல் பசங்க மாதிரி என்னடா சண்டை வேண்டிக்கிடக்கு. காலாகாலத்துல எல்லாம் நடந்திருந்தா இந்நேரம் புள்ளையை ஸ்கூலுக்கு கிளப்பி இருப்பான், இப்படி தம்பியோட மல்லுகட்டிட்டா இருப்பான். மகராசிக்கு இன்னும் மனசு இறங்கி வரல. வயசு போகுதுங்குற எண்ணம் இல்லாம தினம் டப்பி கட்டிக்கிட்டு ஹாண்ட்பேக் மாட்டிக்கிட்டு கிளம்பிடுறது.” ஒரே நிமிடத்தில் பத்மா மூத்த மகன், மருமகளை பேசிவிட, விரிந்ததிருந்த இதழ்கள் அனைத்தும் சுருங்கிக்கொண்டது.
வேதனையுடன் செழியன் மனைவியைப் பார்க்க, சட்டென இறுக்கமான உடலுக்கு இணையாக கண்ணோரம் துளிர்த்த கண்ணீரை சுண்டுவிரலால் சுண்டிவிட்டு தொண்டை செருமினாள் நன்மதி. எதுவும் யோசிக்கவில்லை செழியன் வேக எட்டுக்களில் மனைவியை நெருங்கியிருந்தான். அவள் மறுப்பாய் தலையசைத்து சமையலறை சென்று முட்டை எடுத்துக்கொண்டு கொல்லைப்புறம் சென்றுவிட்டாள். பின்னோடே செழியனும்.
“என்னம்மா நீ?” மகிழ்நன் மனம் கேட்காது அம்மாவை பார்க்க,
“உனக்கு நேரமாகல? இந்நேரம் எழுந்து வந்து காபி குடிச்சிருப்ப. சமுத்திரா இல்லைங்கவும் ஒன்னும் சரியா நடக்கல. ஒருநாள் நீ கிட்சன் பக்கம் வந்திருப்பியா, உன் அண்ணன் விட்டா அங்கேயே குடுத்தினம் இருந்துடுவான் போல.” ஹாட்கேஸை மேசையில் வந்து வைத்தவர் சின்ன மகனிடமும் முகம் காண்பித்தார்.
அடுத்தடுத்து வந்த நிமிடங்களில் நால்வரும் கிளம்பிச் செல்ல, வீடு மயான அமைதியை தத்தெடுத்துக்கொண்டது. உணவு வேளையிலேயே இன்று உண்பதற்கு தவிர வேற எதற்கும் ஒருவரும் வாய் திறக்கவில்லை. எப்போதும் உமையாளின் சலசலப்பும் சமுத்திராவின் பரபரப்பும் அவ்வீட்டையே சுறுசுறுப்பாய் வைத்திருக்கும். இன்றோ இந்த ஒருநாளிலேயே வீட்டின் மனநிலை மாறிப்போனது போலிருந்தது.