“இந்த ஆரமும் நெக்லெஸும் செட்டா கிடைக்கும்னு நினைக்கவே இல்லை. இந்த பூ டிசைன் அழகா வந்துருக்கு.” வீட்டிற்கு வந்ததும் வாங்கியதை பிரித்துப் பார்த்து சொல்லிக்கொண்டிருந்தாள் கல்யாணி.
கடையில் அம்மாவும் பிள்ளைகளும் தேர்ந்தெடுக்க, இறுதிவரை அவர்கள் தெரிவில் தலையிடவில்லை அவள். செழியன் சார்பாய் ஒரு ஆரமும் அதற்கு தோதாக அமைந்துவிட்ட நெக்லெஸ் மகிழ்நன் கணக்கிலும் வந்தது. இரண்டும் சேர்த்து பத்தேகால் சவரனில் வந்து நிற்க, அண்ணனும் தம்பியும் தங்களின் முக்கால்வாசி சேமிப்பை கரைத்துவிட்டிருந்தனர். காத்திருக்க காத்திருக்க விண்ணுயரும் தங்கத்தின் விலை இவர்களை அச்சமூட்டியது. கையில் பணம் இருக்கும்போதே சாமர்த்தியமாக வாங்கிவிடுவது சாலச்சிறந்தது இந்த நடுத்தர வர்க்கத்தினருக்கு.
சிறிது நேரம் அதுகுறித்து பேசிவிட்டு பத்திரமாக அதனை தன் அறைக்கு எடுத்துச் சென்று வைத்தார் பத்மா.
பிள்ளைகள் குறுக்கும் நெடுக்கும் ஓடிக்கொண்டிருக்க அவர்களிடம் ஒருகண்ணும் தத்தம் மனைவிகளிடம் ஒருகண்ணும் வைத்திருந்தனர் சகோதரர்கள். இருவரின் முகங்களும் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. நன்மதி கணவனை முறைத்துவிட்டு அறைக்கு சென்றுவிட, சமுத்திரா தலைகுனிந்தபடி அறைக்குச் சென்றாள். இருவருமே ஒரே நேரம் உடைமாற்றிக்கொண்டு சமையலறை செல்ல, வேலையை இழுத்துப்போட்டு செய்ய ஆரம்பித்தாள் சமுத்திரா.
“எல்லாம் ஒன்னுகூடிட்டாங்க. நம்மள கண்டுக்கமாட்டாங்க. நீ போய் ரெஸ்ட் எடு சமு.” சமுத்திராவின் வாட்டத்தைக் கண்டு நன்மதி சொல்ல, அவள் நிமிர்ந்தாள் இல்லை.
தோள்களை குலுக்கிக்கொண்டு தனக்கும் பிள்ளைகளுக்கும் கொறிக்க எடுத்துக்கொண்டு நகர்ந்துவிட்டாள் நன்மதி. நன்மதி மட்டும் வெளியே வருவதை கவனித்த மகிழ்நன் மனைவி வெளிவர காத்திருந்தான். வெகுநேரம் அவள் வரவே இல்லை என்கவும்,
“சமு கொஞ்சம் தண்ணி கொண்டு வா.” என அமர்ந்தவாக்கிலேயே குரல் கொடுக்க,
“நான் எடுத்துட்டு வரேன் மகிழு.” என எழுந்துவிட்டார் பத்மா.
“அவ வருவா நீ உக்காரு…” என அவன் சொல்வது அவர் செவி அடையும் முன் உள்ளே சென்றுவிட்டார் அவர்.
பெருமூச்சுடன் தலையசைத்துக்கொண்டவன் பின்னர் பார்த்துக்கொள்ளலாம் என அமைதியாகிவிட, சமுத்திராவின் வாட்டமான முகத்தினை மகிழ்நன் மட்டுமே கண்டுகொண்டான். அவனுக்கும் சங்கடம்தான். ஆனால் எடுத்துச் சொன்னால் சமுத்திரா புரிந்துகொள்வாள் என்ற நம்பிக்கையில் கொஞ்சம் அசட்டையும் வந்துவிட்டது. பிள்ளைகளுடன் விளையாடி கூடத்திலேயே ஆங்காங்கே படுத்து மதியம் குட்டித்தூக்கம் ஒன்று போட்டு எழுந்தார்கள் அவ்வீட்டு சுகவாசிகள்.
மாலை போல அனைவரும் சேர்ந்து கோவிலுக்கு சென்று வந்தபின் கல்யாணி பிள்ளைகளுடன் ஊருக்கு கிளம்பிவிட்டாள். வீடு வழக்கத்திற்கு வர, மனைவி அறைக்கு வர காத்திருந்தான் மகிழ்நன். அவளோ சமையலறையே கதி என அனைத்தையும் இழுத்துப்போட்டு செய்துகொண்டிருந்தாள். பத்மா கூட அலுப்பில் அறைக்குள் முடங்கிவிட்டார். நன்மதி சொல்லவே வேண்டாம் நாளை திங்கள், வேலை நாள் என நேரமே சென்றுவிட்டாள்.
உறங்க வந்ததிலிருந்து பார்க்கிறான். நன்மதி அவன் ஒருவன் அங்கு இருப்பதையே கண்டுகொள்ளாமல் இரவு க்ரீம் தடவிக்கொண்டு கணவனுக்கு முதுகு காட்டி படுத்துவிட்டாள். இருமுறை அழைத்துப் பார்த்த செழியன் அவன் தோள் பற்றி உசுப்ப, உதறினாள் நன்மதி.
“ஹே… மதி…” யாசிப்பும் குழைவும் சேர்ந்தாற்போன்ற குரலில் மனைவியை அழைத்தபடி அவள் தோளில் தன் தாடை வைத்து செழியன் அழுத்த, பலம் கொண்டு அவனை உதறினாள் நன்மதி.
“மதி…” விடாமல் மீண்டும் படையெடுத்தான் கணவன். அவளை சுற்றி கைகளை படரவிட்டு அவள் முதுகோடு ஒட்டிக்கொண்டவன், “மதியமும் கோவமா முகம் திருப்புன. இப்போவும் இப்படின்னா என்னடி? நான் சொல்ல வர்றதை கேளேன்.” என இறங்கி வர,
அவனை தள்ளிவிட்டு அவன் புறம் திரும்பியவள், “என்ன சொல்லிடப்போறீங்க! உங்க பாசமலர் முகம் தூக்குனதும் தாங்கல சாருக்கு. இருக்கறதை மொத்தமா தூக்கிக்கொடுத்துட்டீங்க. ஆஹான், மொத்தமா கொடுக்க கூட இருந்திருக்காதே என்ன பண்ணீங்க?” என அழுத்தமாகக் கேட்க, சங்கடமாகப் பார்த்தான் செழியன்.
“எனக்கு இப்போ பதில் வேணும்.” மனைவியின் இறுக்கமான குரலில் மகிழ்நன் பணம் கொடுத்ததை சொல்லிவிட, பல்லைக் கடித்தாள் நன்மதி.
“எத்தனை முறை சொன்னேன். நம்மளால என்ன முடியுதோ அதை செஞ்சா போதும். ஊருக்கு முன்னாடி பகட்டு காட்டிக்குறேனு நம்ம கையை நாமளே வெட்டிக்கக்கூடாது. உங்க தம்பி அதிகம் செய்ய ஆசைப்பட்டா அது அவங்க விருப்பம், அதுக்காக நீங்களும் அதே அளவுக்கு செய்யணும்னு இல்லை.”
“ஹே என்ன பேசுற நீ. நம்மளை விட அவன் அதிகம் செஞ்சிட்டா நமக்கு தலைகுனிவாகிடும்தான் அவனும் குறைச்சி செய்றேன்னு நின்னான். கடைக்கு வந்து அக்கா அப்படி வருத்தப்படவும் ரெண்டு பேருக்குமே மனசு கேக்கல. நம்ம வீட்டுப் பொண்ணை வருந்த வச்சிட்டு நாம நிம்மதியா வாழ்ந்துட முடியுமா? அதான் ஒண்ணா வாங்கிட்டோம். அவன்கிட்ட வச்சிக்குற கொடுக்கல் வாங்கலுக்கு எல்லாம் நீ கணக்கு பாக்காத. எல்லாம் நான் சமாளிச்சுக்குவேன்.” என விட்டுக்கொடுக்காமல் பேச,
“அப்படி செய்யணும்னு அவசியமில்லைங்குறேன். நம்ம வருமானத்துக்கு ஏத்த மாதிரி முறை செய்யுறதுல என்ன கெளரவ குறைச்சல்னு எனக்குப் புரியல? இப்படி கடன் வாங்கி செஞ்சிதான் பாசத்தை நிரூபிக்கணுமா இல்லை இதுதான் நமக்கான மரியாதையை தீர்மானிக்குமா?”
“சபையில என்ன செய்யுறோமோ அதை வச்சுதான் பாசமும் மரியாதையும் கிடைக்கும். என்னமோ ஒன்னும் தெரியாத மாதிரி பேசாத நீயும்.” கொஞ்சம் காட்டம் இருந்ததோ, ஆனால் தான் அவன் முடிவை எதிர்த்து பேசுவதில் அவனுக்கு விருப்பமில்லை எனப் புரிந்தது நன்மதிக்கு. அதற்காகவெல்லாம் தன் எண்ணங்களை மாற்றிக்கொள்ளவில்லை அவள்.
“அப்படி செஞ்சாதான் மரியாதை கிடைக்கும்னா… பாசத்துக்கான அளவுகோல் பணம்னா நாம போட நினைச்ச மூணு பவுனுக்கு என்ன மரியாதை கிடைக்குமோ நம்ம நிலைமைக்கு எது சரியா இருக்கும்னு அவங்க நினைக்குறாங்களோ அவ்ளோ கிடைச்சா போதும். முதல் மரியாதைதான் வேணும்னு இல்லை.”
“முதல் மரியாதை வேணாம்னு நீ நினைக்கலாம், எல்லாரும் அப்படி இருக்கமாட்டாங்க. இந்த வீட்டுக்கு மூத்த மகனா அதுக்கான மரியாதையோட சபையில நிக்கனும்னு என் பெத்தவங்களும் கூடப்பிறந்தவங்களும் விரும்புறாங்க. எங்கேயும் நான் தலைகுனியக்கூடாதுங்குற அவங்க எண்ணம் தப்புனு சொல்லுவியா நீ?” என அவளிடமே எதிர்கேள்வி எழுப்பினான்.
“ஓ! ஆக, எல்லாத்துலையும் மூத்த மகனா பொறுப்பா இருக்கீங்க நீங்க?” நன்மதி கேலியாக கேட்க, அதனை கருத்தில் கொள்ளாதவனாய்,
“ஹே! சும்மா ஏதாச்சு சொல்லாத. மகிழ் என் தம்பி. எங்களுக்குள்ள ஆயிரம் இருக்கும். எல்லாத்துக்கும் எல்லாருக்கும் விளக்கம் கொடுத்துட்டு இருக்க முடியாது.” என்று உதறப்பார்க்க, அழுத்தமாய் பார்த்தாள் நன்மதி.
அதில் முகம் திருப்பியவன், “ப்ச்… என்ன இப்போ? அக்கா பொண்ணுக்கு செய்யணும்னு தோணுச்சு. வேதா இந்த வீட்டுக்கு மொதோ பேத்தி. நான் தூக்கி வளர்த்த பொண்ணு. அவளுக்கு செய்ய யோசிச்சிகிட்டு ஒதுங்கி நிக்க முடியாது என்னால. சும்மா எல்லாத்துக்கும் கணக்கு பாக்காத, கணக்கு கேக்காத.”
கணவன் இதற்கு மேல் வளைந்து கொடுக்கப் போவதில்லை என்று புரிந்துபோனது, “நான் வேண்டாம்னு சொல்லுவேன்னு என் முகத்தை கூட கடையில பாக்கல. கமுக்கமா உங்க தம்பி அம்மாவோட கூட்டு சேர்ந்து வாங்கியாச்சு. செலெக்ட் பண்றப்போ பேருக்கு எனக்கும் சமுத்திராவுக்கும் காமிச்சிட்டு அப்படியே அடைகாத்தமாதிரி பில் போட போயாச்சு. விரலுக்கு ஏத்த வீக்கம்தான் வேணும்னு சொன்னா கேக்க கஷ்டமா இருக்கு… என்னவோ பண்ணுங்க.” பொருமலுடன் அவனுக்கு முதுகு காட்டி படுத்துவிட்டாள் நன்மதி.
சில நிமிடங்கள் இருவருக்குள்ளும் பேச்சில்லை. விளக்கு அணைக்கப்பட்டு ஒருவருக்கு ஒருவர் முகம் காட்டாது திரும்பிப் படுத்துக்கொள்ள ஒருகட்டத்தில் மனது கேளாமல் மனைவி புறம் திரும்பிவிட்டான் செழியன்.
இருட்டிற்கு கண்களைப் பழக்கி மனைவியின் வடிவம் பார்த்தவன் மென்குரலில் அழைத்தான்.
“மதி…”
“…”
“ஹே மதி…”
“என்னை பாருடி…” அவள் முதுகோடு ஒட்டிக்கொண்டவன் மென்மையாக அவளை அணைத்துக்கொள்ள, முழங்கையால் அவன் வயிற்றில் குத்தினாள் நன்மதி.
மென்மையை வன்மையாக மாற்றி குத்திய கையை தன் பிடிக்குள் கொஞ்சம் அழுத்திப் பிடித்தவன், “தாய்மாமனா நான் செய்யணும்லடி. எனக்கு அவங்களும் முக்கியம்தான. நீயே என்னை புரிஞ்சிக்கலைன்னா எப்படி? உறவு முக்கியமில்லையா?”
“செய்யக்கூடாதுனோ, உறவு முக்கியமில்லைன்னோ நான் சொல்லலையே.” என்றவளும் தன் எண்ணத்திலிருந்து பின்வாங்குவதாய் இல்லை.
“சரி வாங்கியாச்சு. இப்போ என்ன பண்ணலாங்குற? போய் மூணு பவுனுக்கு மாத்திட்டு மீதிக்கு காசு வாங்கிட்டு வந்துரலாமா?” செழியன் லேசாக குரல் உயர்த்த, முறைத்துப் பார்த்த நன்மதி,
“என்னை மொத்தமா எல்லார் முன்னாடியும் வில்லி ஆக்கிடுங்க, அது ஒண்ணுதான் இன்னும் பாக்கி.”
“நீ வில்லி இல்லடி என் கள்ளி…” சட்டென்று மனைவி மூக்கோடு மூக்குரசி அப்பேச்சினை முடிக்கப்பார்த்தான்.
“ஹான்! நல்லா இருக்கே கதை… எதைத் திருடினேனாம்?” அவனுக்கு ஒத்து கொஞ்சம் தணிந்து போனாள் நன்மதி. இனி என்ன செய்ய முடியும் பார்த்துக்கொள்ளலாம் என்ற நம்பிக்கை வேர்விட்டதன் பலனாய் அவனுக்கு இணையாக குழைந்தாள்.
“அஞ்சு வருஷமா கூட இருக்குறவளுக்கு இது தெரியாதாமாம்?” கிசுகிசுப்பாய் நன்மதியின் செவி உரசி, அவள் கன்னங்களில் நாசி கொண்டு ஊர்வலம் நிகழ்த்தியவன் இதழ்கள் கொண்டு கோலம் போட, மீசை உராய்வுகளில் கூசிச் சிரித்தாள் நன்மதி.
மனைவியின் சிரிப்பு அவனைத் தூண்டிவிட, முகத்தோடு முகம் உரசி பட்டும்படாமல் இதழ்களை அவள் கன்னத்திலும் இதழோரங்களிலும் உறவாட விட, எதிர்பார்ப்பாய் கண்களை மூடிக்கொண்டாள் நன்மதி.
அவனோ அவள் எதிர்ப்பார்ப்பை அதிகப்படுத்தும் முனைப்பில் இருந்தானே ஒழிய அதை நிறைவேற்றிடும் எண்ணம் துளியும் இல்லை. அவனின் தொடர் சீண்டலில் கடுப்பானவளாய் அவன் முகத்தை அழுத்தமாக பற்றிக்கொண்டாள் நன்மதி.
செழியன் கள்ளப்பார்வை பார்க்க, அவனை தன்னிடம் இழுத்துக்கொண்டவள், “சோதிக்காதயா… ஒழுங்கா முத்தம் கொடு.” என உரிமையாய் கேட்க,
“முத்தம் மட்டும் வேணுமா மொத்தமா வேணுமா?” புருவம் உயர்த்தினான் அக்கள்ளன்.
“எனக்கு முத்தம் மட்டும் போதும்.” என்றாள் அவளும் சீண்டிப்பார்க்கும் ஆவலில்.
“ஆனா எனக்கு மொத்தமும் வேணும்.”
பேச்சுகள் அறுபட்டு இச்சங்கள் முதன்மை பெற, சில நிமிடங்கள் காதல் முரசு ஓங்கி ஒலித்தது. தீராக்காதலை சக்தி தீரும்வரை கொண்டாடியவர்கள் கையணைப்பில் அயர்ந்துக்கிடக்க, செழியனின் நெற்றி யோசனையில் சுருங்கியது. கவனித்த நன்மதி தன் விரல்கொண்டு அதனை நீவிவிட, அவ்விரலை பிடித்து முத்தம் வைத்தான் செழியன்.
“என்னங்க யோசனை?”
“எப்படி மகிழுக்கு பணம் கொடுக்கப் போறோம்னு யோசிச்சேன்.”
“அதை கடன் வாங்குறதுக்கு முன்னாடி யோசிச்சிருக்கணும்.” என்றவளே, “பணம்தானே சம்பாரிச்சிக்கலாம்.” என தைரியமும் கொடுத்தாள். அவள் தலையோடு தலை சாய்த்து அணைத்துக்கொண்டான் செழியன். சஞ்சலங்கள் நீங்கி இனிய இரவிற்குள் சென்றார்கள் இருவரும்.