“சின்ன க்ளாஸ்கு இல்லை டென்த் பசங்களுக்கு அவ க்ளாஸ் எடுக்குறா அக்கா. அதோட நீட் கோச்சிங் அவங்க ஸ்கூல்ல ஸ்டார்ட் பண்ணியிருக்காங்க, அந்த டீம்ல மதியும் ஒருத்தி. அதுக்கான ஒர்க் லோட் இருக்கும்ல.”

“அப்போ நீ சீக்கிரம் வந்துட்டு அவளை பஸ்ல வர சொல்லாம்ல. அவ க்ளாஸ் எடுக்குறான்னு நீயும் ஏன்டா அங்க உக்காந்து காயுற?” விடவில்லை கல்யாணி. தம்பியை தோண்டித் துருவினாள்.

“எனக்கும் ஆறு மணி வரைக்கும் அங்க வேலை இருக்கு. நான் மெயின் ஆபீஸ்ல இருக்கேன். சில நேரம் ஆறரை வரைக்கும் கூட இழுக்குது. என் ஒர்க் முடிச்சிட்டு அவ ஸ்கூலுக்கு போய் ஒரு பத்து நிமிஷம் காத்திருந்தா அவளையும் அழைச்சிட்டு வந்துரலாம்னுதான் ஒண்ணா வரோம்.” அசராது பதில் கொடுத்தான் செழியன். 

“என்னமோ போ. அவளை எதுலேந்து காப்பாத்துறேன்னு தெரியல. எதுக்கு இப்படி ஓடணும்?” என சலித்துக்கொண்டாள் கல்யாணி.

“தனியாவா வந்த? அத்தான் வரல? ரெண்டு நாள் அவர் ஜாலியா இருக்கணும்னு உங்களை மட்டும் துரத்திட்டாரா?” என இலகுவாக பேச்சை மாற்றிவிட்டான் செழியன். அதை கவனித்துக்கொண்டே வெளியே வந்த நன்மதி கணவனைப் பார்த்து கண்சிமிட்டி சமையலறை சென்றாள்.

“அவரை கூட்டிட்டு வந்து இங்கேயும் அவர் பின்னாடியே நான் ஓடணுமாடா? எனக்கு ரெண்டு நாள் ரெஸ்ட். அதோட நகை வாங்கணும்னு அம்மா சொல்லவும் கிளம்பிட்டேன். எப்போதும் எல்லாம் ஒண்ணாதான வாங்குவோம்.” என்றார் கல்யாணி. 

“எப்போ போகணும் ம்மா?” என செழியன் பார்க்க அவர் நாள் பார்த்து சொன்னார். 

உள்ளே பிள்ளைகள் கேட்க கேட்க நிலா, நட்சத்திரம், மிக்கிமவுஸ் என விதவிதமான தோசைகள் ஊற்றிக் கொண்டிருந்தாள் சமுத்திரா. அதனை கவனித்துக்கொண்டே சின்னவர்களிடம் பேச்சுக் கொடுத்த நன்மதி,

“நைட்டுக்கு எதுவும் செய்யணுமா சமு?” என்ற கேள்வியுடன் அங்கு மூடியிருந்த பாத்திரங்களை பார்த்தாள்.

“ஹான் இல்லை அக்கா. சாம்பார் வச்சாச்சு. நமக்கு இட்லி பசங்களுக்கு தோசை.” சமுத்திரா பதில் சொல்ல, ஹாட்கேஸை திறந்து பார்த்தாள் நன்மதி. ஏற்கனவே தேவையான அளவு இட்லி ஊற்றி எடுத்து வைத்திருந்தார்கள்.

“சரி எதுவும் வேணும்னா சொல்லு.” தண்ணீர் எடுத்துக்கொண்டு வெளியேறிவிட்டாள் நன்மதி. 

பெருமூச்சுடன் செல்லும் அவளைப் பார்த்தாள் சமுத்திரா. கல்யாணி வந்ததுமே என்ன உணவு என்று கேட்டு இட்லியை முதலில் ஊற்றிவிடு என்றுவிட்டார். இதுபோன்று கல்யாணியோ இல்லை வீட்டிற்கு விருந்தினர்களோ வந்தார்கள் எனில் நன்மதி சமையலறை பக்கம் எட்டிப்பார்ப்பாள். இவளுக்கு கொஞ்சம் கைகொடுப்பாள். விடுமுறை நாட்களிலும் உதவுவாள், ஆனால் பெரிதாக பட்டுக்கொள்ளமாட்டாள். என்ன வேண்டும் என கேட்டு அதை மட்டும் செய்து வைத்துவிட்டு செல்வாள். 

பேச்சு சுவாரசியத்தில் குடும்பம் இருந்ததால் நன்மதி வந்ததும் இட்லி ஊற்றிக்கொள்ளலாம் என்றுதான் சமுத்திரா நினைத்தாள். 

ஆனால், “தூக்கி அடிச்சா ஒன்றை டன் வெய்ட்டுடாங்குற மாதிரி இருக்கும் மதி ஊத்துற இட்லி. அவ வர்றதுக்குள்ள சமுவை இட்லி ஊத்த சொல்லிடுமா. சாம்பார் கூட நான் வச்சிடுறேன், உன் பெரிய மருமகளை மட்டும் உள்ள விட்டுறாத.” என பத்மாவிடம் கல்யாணி சொல்லிக் கொண்டிருந்ததை கேட்க நேர்ந்தது. அதற்கு மேல் என்ன செய்ய என்று அனைத்தையும் செய்துவிட்டாள் சமுத்திரா. உமையாளை நடுவில் அமர்த்தி இவர்கள் குடும்பமாக சுற்றி அமர்ந்துகொண்டு பேசினார்கள்.

கலகலவென அன்றைய உணவுப் பொழுது முடிய, ஒன்றும் சொல்லாமல் அத்தனை பாத்திரத்தையும் கழுவிப் போட்டாள் நன்மதி. பார்த்த சமுத்திராவுக்கு ஒருமாதிரி இருந்தது. என்னவோ நன்மதி முகத்தில் களைப்பும் சோர்வும் இருப்பது போல் இருக்க,

“நான் பாத்துக்குறேன் அக்கா. நீங்க ரெஸ்ட் எடுங்க.” என சொல்லிப் பார்த்தாள்.

“இருக்கட்டும் சமு. நீயும் எவ்ளோ செய்வ. பாத்திரம் கழுவ ஆள் வச்சிக்கலாம்னு நானும் கல்யாணம் ஆன புதுசுலேயே சொன்னேன். நம்ம பேச்சை கேக்ககூடாதுன்னு இருந்தா என்ன பண்றது?” பெருமூச்சுடன் சொல்லிவிட்டு அவள் அறைக்குச் சென்றுவிட, இவள் ஒருமாதிரி நின்றாள். இதுபோன்று நன்மதி இதுவரை பேசியதில்லை. நீங்கள் செய்கிறீர்களா செய்யுங்கள் என்னால் இது முடியாது என வெளிப்படையாக ஒதுங்கிக் கொள்வாள். இரவு எளிமையாக எதுவும் செய்கிறேன் என்று அவள் வந்து நின்றாலும் இவர்கள் குடும்பத்தின் நாக்கோ வக்கணையாக கேட்கும். எனக்கு செட் ஆகாது என்றுவிடுவாள் நன்மதி. மனது கேளாமல் அனைத்தையும் செய்ய ஆரம்பத்திலேயே பழகிவிட்டாள் சமுத்திரா. இப்பொழுதும் சுமையாக தெரியவில்லை. என் குடும்பத்திற்காக செய்கிறேன் என்று நினைக்க, அந்த குடும்பம் என்ற உணர்வில் விரிசல் விழுந்தது.

சனிக்கிழமை ஒருநாள் வீட்டில் நன்றாக நேரம் செலவழித்துவிட்டு ஞாயிறு காலையே நகைக்கடைக்கு கிளம்பியது மொத்தக் குடும்பமும்.

“பாப்பாக்கு முதல்ல பாத்துடலாம்.” என்று சொல்லிதான் சமுத்திராவை அழைத்துச் சென்றான் மகிழ்நன்.

சகோதர்கள் இருவரும் தத்தம் மனைவியுடன் வண்டிகளில் பயணிக்க, கல்யாணியின் பிள்ளைகள் ஆளுக்கு ஒருவராய் மாமன்கள் வண்டியில் ஏறிக்கொண்டனர். ஏனைய மூன்று பேருக்கு ஆட்டோ பிடித்தாகிவிட்டது.

பத்து கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் கும்பகோணம் நகரின் பிரபல நகைக்கடையில் குழுமினர். மகளுக்கு தங்கம் வாங்கப்போகிறோம் என்ற ஆவல் இருந்தாலும் சமுத்திராவுக்கு என்ன வாங்குவது என்பதில் குழப்பம். எல்லாமே இருப்பது போல் ஒரு எண்ணம். மகளுக்கு என முதல்முறை வாங்குவது நியாபகம் வைத்துக்கொள்ளும்படி இருக்க வேண்டும் என்ற யோசனை மட்டுமே. இரவு கணவனிடமும் கேட்டாள், அங்கு சென்று பார்த்துக்கொள்ளலாம் என்றுவிட்டான் அவன். 

கடைக்குள் நுழைந்ததுமே என்ன வேண்டும் என்று கேட்டார்கள். சமுத்திரா கணவனைப் பார்க்க, பதில் என்னவோ அவன் அக்காவிடமிருந்து வந்தது.

“ஆரம் பாக்கணும்.” என்று கல்யாணி சொல்ல, எங்கு செல்ல வேண்டும் என வழி சொல்லி அனுப்பி வைத்தனர்.

சமுத்திரா திரும்பி கணவனைப் பார்க்க, அவன் அக்கா மகன் வேந்தன் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லிக் கொண்டிருந்தான். 

“அஞ்சு பவுன்ல காட்டுங்க.” என சட்டமாக சொல்லி நாற்காலியில் கல்யாணி அமர, பத்மாவும் அருகில் இடம் பிடித்துக்கொண்டார்.

நன்மதி செழியனைப் பார்க்க, சமுத்திரா மகிழ்நனைப் பார்த்தாள். 

இரண்டும் சேர்த்து ஐந்து பவுன் நகையா இல்லை ஒன்றே ஐந்து பவுனுக்கா? சந்தேகம் மருமகளுக்கு. இவர்களுக்கு இது தெரியுமா? முன்னரே பேசி வைத்துவிட்டார்களா? 

இன்றைய விலைக்கு ஐந்து பவுன் என்றால் ஆறு லட்சத்தை நெருங்கலாம். அதன்பின் மகளுக்கு ஒரு பவுனிலாவது வாங்க வேண்டும், அது ஒருலட்சம் தாண்டும். ஆறேழு லட்சம் வைத்திருக்கிறானா கணவன் என்று சமுத்திரா பார்க்க,

மூன்று பவுன் மூணரை லட்சம் நெருங்கும். கொஞ்சம் நெருக்கிப்பிடித்து கைக்கடிக்காமல் தங்களால் வாங்கக்கூடிய பலம் இதுதான் என பேசி வைத்து கடைக்கு வந்திருந்த நன்மதியும் செழியனுக்கு கண்காட்டினாள். 

தொண்டை சரி செய்துகொண்டு அக்காவின் அருகில் அமர்ந்த செழியன், “மூணு பவுனுக்கு பாக்கலாம் அக்கா. வேதாவுக்கு இன்னும் நிறைய விசேஷம் இருக்கு எல்லாத்துக்கும் செய்யணும்ல.” என மென்குரலில் முணுமுணுக்க, கல்யாணியின் பார்வை மொத்தமாக மாறிவிட்டது.

“மூணெல்லாம் எந்த மூலைக்கு? அஞ்சு பவுன்தான் பார்வையா இருக்கும்.” என்று இடைப்புகுந்தார் பத்மா.

“இதெல்லாம் வீட்லையே பேசிட்டு வர மாட்டிங்களா? நாந்தான் ரெண்டு நாள் முன்னாடியே யோசிச்சு முடிவு பண்ணிக்கோங்கன்னு சொன்னேன்ல.” என தன் மகன்கள் இருவரையும் கடுமையாக பார்த்தார் கந்தவேல்.

“நாங்க அம்மாகிட்டே அப்போவே சொல்லிட்டோம். ஆளுக்கு மூணு பவுன் செய்யுறோம்னு.” மகிழ்நன் தன் குடும்பத்தினரை குழப்பமாக பார்த்தான். 

செழியன் தன் அம்மாவை கடினமாக பார்க்க, 

“என் நாத்தி அஞ்சு பவுனுக்கு செயின் எடுக்கப் போறாளாம். நீங்களும் அதே அளவுக்கு செஞ்சாதான் மதிப்பா இருக்கும்.” பதில் கல்யாணியிடமிருந்து வந்தது.

“அக்காகிட்ட முன்னாடியே சொல்லலையா நீ?” என மகிழ்நனும் அம்மாவை அதிருப்தியாக பார்க்க, குற்றம் சுமத்தப்பட்ட பாவனையுடன் தன் பிள்ளைகளை ஏறிட்ட பத்மா, “அவ சொல்றதும் நியாயம்தானடா. நானும்தான் கொஞ்சம் அதிகம் புரட்டப் பாருங்க, மூணு பவுன் சின்னதா இருக்கும்ன்னு அப்போவே சொன்னேனே.” என்றார். அவர் சொன்னார்தான் மகிழ்நன்தான் பார்த்துக்கொள்ளலாம் என்றான். அது இப்போது இப்படி வந்து நிற்கிறது. 

அவரை கண்டுகொள்ளாமல், “மூணு பவுனுக்கு காட்டுங்க.” என்று கடைக்காரரிடம் சொல்லிவிட்டான் செழியன். 

“செழியா?”

“நாங்க சொன்னதை அம்மா உன்கிட்ட சொல்லுச்சா இல்லையான்னு எங்களுக்குத் தெரியல. எங்களால இவ்வளவுதான் முடியும் அக்கா.” என்றுவிட்டான் நேராக.

கல்யாணி தன் சின்னத்தம்பியைப் பார்க்க, “திடீர்னு இவ்வளவு பவுனுக்கான பணத்துக்கு எங்க போறது? இருக்குறதை வச்சி இப்போ வாங்கிக்கலாம். பின்னாடி வேதாவுக்கு செஞ்சிடலாம் அக்கா.” என்றான் சமாதானமாய்.

“உங்க விருப்பத்துக்கே செய்ங்கப்பா… நான் சொல்றதுக்கு என்ன இருக்கு இதுல? சபையில என் குடும்பம் மரியாதையா இருக்கணும்னு எதிர்பார்த்தது எந்தப்புத்தான். அவங்க அஞ்சு போடுறாங்க, உங்களை அதைவிட கூட போட சொல்லலாம் ஆனா உங்களுக்கு சிரமமா இருக்கும்னுதான் அவங்களுக்கு இணையா போட சொன்னேன். அப்புறம் உங்க விருப்பம்.” என்ற கல்யாணி நகர்ந்து சென்று இறுதியாக அமர்ந்துகொண்டாள்.

மகிழ்நன் சங்கடமாக பார்க்க, செழியனுக்கும் வருத்தம்தான். அக்காவின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய முடியவில்லையே. மகள் தள்ளி சென்றுவிட, பத்மாவின் முகமும் சுருங்கியது. கடைக்காரர்கள் நகைகள் எடுத்துக்காட்ட செழியன் அதனை பார்த்து மனைவியிடம் காண்பித்து தந்தை புறமும் நகர்த்தினான்.

சமுத்திரா தவிப்பாக கணவனைப் பார்த்தாள். மகளுக்கு முதலில் எடுக்கலாம் என்றுவிட்டு இப்போது வேதாவுக்கு பார்க்கிறார்கள், இவனும் ஒன்றும் சொல்லாமல் இருக்கிறானே. அவனருகில் சென்று அவன் கையை மெல்ல சுரண்ட, யோசனையில் இருந்து வெளிவந்தவன் சமுத்திராவை சங்கடமாக பார்த்தான்.

“பாப்பாக்கு எடுக்கணும்.” 

“எடுக்கலாம்… அக்கா இப்படி இருக்குறது மனசுக்கு ஒருமாதிரி இருக்கு.” என்றவன் செழியனைப் பார்க்க, அவனும் இவனைப் பார்த்தான். இருவருக்கிடையிலும் மொழியில்லா பரிமாற்றங்கள். 

அண்ணனுக்கு கண்காண்பித்து எழுந்து சென்ற மகிழ்நனை பின்தொடர்ந்து சென்றான் செழியன். குடும்பத்தினரை விட்டு தள்ளிச் சென்றார்கள்.

“நான் நாலரைலேந்து அஞ்சு பவுன் வரைக்கும் பாக்கலாம்னு இருந்தேன். உனக்கு சிரமமா இருக்குமேன்னுதான் மூணு சொன்னேன். அக்கா மனசு சங்கடப்படுது.” என்றான் மகிழ்நன் கவலையாய். 

நின்ற இடத்திலிருந்தே கல்யாணியை திரும்பிப் பார்த்த செழியனுக்கும் அதே எண்ணம்தான்.

“இன்னும் கொஞ்ச நாள் போனா நானே பணம் ரெடி பண்ணிடுவேன். ஆனா விலை ஏறிடும் இப்போவே வாங்கிடலாம்னு நிக்கும்போது என்னாலையும் எதுவும் செய்ய முடியல. என்னால நீயும் செய்ய நினைக்குறதை குறைச்சிக்குற.” எனும்போதே செழியனின் முகம் கசங்கியது. 

“ஹே… அதெல்லாம் இல்லைடா. உன்னை விட்டு நான் மட்டும் எப்படி அதிகம் செய்வேன்.” என்றவன் சில நொடிகள் யோசித்து, “என்கிட்ட கொஞ்சம் இருக்கு. இப்போ அக்கா கேக்குற மாதிரி அஞ்சு வாங்கிடலாம். உனக்கு முடியுறப்போ குடு போதும்.”

“அதெல்லாம் வேண்டாம்.” உடனே மறுப்பு செழியனிடம். 

சற்று தொலைவில் தெரிந்த மகள் மனைவியைப் பார்த்த மகிழ்நன், “அக்காவ சங்கடப்படுத்திட்டு நாம நிம்மதியா இருந்துட முடியுமான்னு நீயே சொல்லு. நான் பணம் தர்றேனு யாருக்கும் சொல்ல வேணாம்.” வீட்டுப் பெண்ணான அக்காவை சங்கடப்படுத்தி அதில் தன் மகளுக்கு நகை வாங்குவதில் துளியும் விருப்பமில்லை மகிழ்நனுக்கு. இன்னும் வீட்டினரிடம் உமையாளுக்கு வாங்கும் எண்ணம் இருக்கிறது என்று சொல்லவில்லை. அதற்கு ஒதுக்கிய பணத்தை அண்ணனுக்கு கொடுத்துவிடலாம் என்ற எண்ணம் வரவும் சடுதியில் முடிவெடுத்துவிட்டான்.

“நீ செய்ய நினைக்குறதை செய் மகிழ். எனக்காக பார்க்காத, நான் மூணு போடுறேன் அதுபோதும்.” என்ற செழியனின் குரலில் இருந்த உறுதியற்ற தன்மையை கண்டுகொண்ட மகிழ்நன் அவனை சமாளித்து சமாதானம் செய்து தன் முடிவுக்கு ஒத்துக்கொள்ள வைத்துவிட்டான். 

அண்ணன் தம்பி இருவரும் வந்து ஐந்தில் பார்க்கலாம் என்றதும் பத்மாவின் கண்கள் ஒளிர, கல்யாணி அப்படி ஒன்றையும் வெளிப்படுத்தவில்லை. தள்ளி அமர்ந்தது அமர்ந்ததுதான் என்பது போல் இறுதி வரை ஒதுங்கியே இருந்துகொண்டாள். 

நன்மதி குழப்பமாக கணவனைப் பார்க்க, சமுத்திராவுக்கு என்னவோ புரிவது போலிருந்தது. தன்னிடம் கண்சிமிட்டி கெஞ்சலாக பார்த்த கணவனின் பார்வை கண்களில் நீர் நிறைத்தது. கலங்கலாகத் தெரிந்த அவன் பிம்பத்தை தெளிவுப்படுத்தவென கண்களை துடைத்துக்கொண்டவள் குனிந்த தலையை நிமிர்த்தவே இல்லை.