“மதி அக்காவோட சேர்த்து நாலு பேர் வேலைக்கு போறீங்க. இந்த அளவுக்கு சம்பளம் கொடுக்க முடியாதா? நம்ம வீட்ல வேலை ஜாஸ்திதான் அதுக்கான ஊதியம் கொடுத்தாதானே வருவாங்க.”
“ஓ! இதை நேரடியா சொல்லாம எதுக்கு அப்படி சொன்ன?”
“உங்களுக்கு மட்டும்தான் கோவம் வருமா?” எனக்கும் கசந்து போகையில் வார்த்தைகள் தடிக்கத்தானே செய்யும் என்பதாய் இருந்தது அவள் வாதம்.
“சரி நான் பேசுறேன்.”
“இன்னைக்கு காலையில பேசுன மாதிரியா?”
“சமு.”
“என்னவோ நான் சொல்லிக்கொடுத்து நீங்க பேசுற மாதிரி அத்தை நினைச்சிக்கிட்டாங்க.”
“நீ சொல்லித்தரலைனு நான் சொல்லிடுறேன்.” வேண்டுமென்றே அவன் சொல்ல, ஒரு உந்துதலில் அவன் தோளில் லேசாக அடித்துவிட, அதனை கவனித்துவிட்ட உமையாளும் மண்டிப்போட்டு வந்து மகிழ்நனை அடித்தாள்.
“அச்சோ பாப்பா…” சமுத்திரா அதிர்ந்து போக, அதை விளையாட்டாக மாற்றிவிட்டாள் சுட்டிப்பெண்.
“அவளுக்கு நேரா அடிச்சி காமிச்சு சொல்லிக்கொடுத்துட்டு அப்படியே ஷாக் ரியாக்ஷன்லாம் கொடுப்பா.” மகளின் செல்ல அடிகளை தடுத்து அவளை தூக்கிப்பிடித்து முத்தம் வைத்து கூச்சமூட்டி சிரிக்க வைத்தபடி மனைவியின் காலை வார, அமைதியாக அவளிடத்தில் படுத்துக்கொண்டு அப்பா மகள் விளையாட்டை கவனித்தாள். ஒருகட்டத்தில் உறக்கம் கண்ணை சுழற்ற உமையாளின் குரலில் தூக்கத்தை விரட்ட முயன்றாள். கவனித்துவிட்ட மகிழ்நன் விளக்கணைத்து வந்து மகளை படுக்க வைத்தவன், “அம்மாவுக்கு தூக்கம் வந்துடுச்சு, நாமளும் தூங்கலாம் பாப்பா.”
“ப்பா…” புரண்டுப் படுத்து மகிழ்நன் மேல் ஏற,
“அப்பாவுக்கும் தூக்கம்.” என்று கண்களை மூடி உறங்குவது போல் செய்ய, அவனை மீறிக்கொண்டு கீழே இறங்கப் பார்த்தாள். இவன் தடுக்க, சிரிப்பும் கண்டிப்பும் திமிறலும் சிணுங்கலும் என சில நிமிடங்கள் இருவருக்குள்ளும் தள்ளுமுள்ளு.
பொறுத்துப் பார்த்த சமுத்திரா மெலிதாக அதட்டி அவளை படுக்க வைத்தாள். மகிழ்நன் நெருங்கி வந்து இருவரையும் அணைத்துக்கொள்ள, கிளுக்கிச் சிரித்து அந்த அணைப்பை ஏற்றாள் உமையாள்.
“சேட்டை, எப்படிதான் நாள் முழுக்க இவளை சமாளிக்குறியோ.” முதல் முறையாக பிள்ளை வளர்ப்பில் மனைவியை மெச்சிக்கொண்டான்.
கணவனின் அணைப்பிலும் இயல்பிலும் உறையாத புன்னகையுடன் உறக்கம் தழுவினாள் சமுத்திரா. மறுநாள் சமைப்பது அவள் முறை. உதவிக்கு நன்மதி வருவாள் என்று எதிர்பார்த்தாலும் கை அதன் வேலையை வேகமாய் செய்தது. நன்மதி எழுந்து வந்த சமயம் வேலையை முடித்துவிட்டாள் சமுத்திரா. கொஞ்சம் சுணக்கம்தான். செய்கிறேன் என்றுவிட்டு இப்படி உறங்கினால்… உடலுக்கு எதுவும் முடியவில்லையோ என்று அவளைப் பார்க்க, நன்றாகவே இருந்தாள் நன்மதி. அதில் இன்னும் சுருங்கியது சமுத்திராவின் முகம்.
அறைக்கு வரும் போது கவனித்துவிட்டு மகிழ்நன் என்னவென்று கேட்க, ஒருநாள் தானே இதையெல்லாம் பெரிதுபடுத்த வேண்டாம் என்ற எண்ணத்தில் ஒன்றுமில்லை என்றுவிட்டாள்.
அந்த ஒரே நாளில் பழைய வாழ்வு மீண்டும் வந்தது போலானது. காலை அனைத்தும் சமுத்திரா முடித்து வைத்துவிட, மாலை கடந்து இரவு தாமதமாக வந்தனர் செழியனும் நன்மதியும். சுணக்கத்துடன் அவர்களை எதிர்கொண்ட சமுத்திரா மகளின் உணவையும் தன்னதையும் முடித்துக்கொண்டு ஒதுங்கி அமர்ந்துகொள்ள, உடை மாற்றி வந்தவர்களோ ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.
செழியன் அம்மாவை கூப்பிட்டு அருகில் அமர்த்திக்கொள்ள, மற்றவர்கள் பார்வையும் இவர்களிடம் குவிந்தது.
“ஹாஸ்பிடல் போயிட்டு வந்தோம். டாக்டர் கன்பார்ம் பண்ணிட்டாங்க, ஒரு மாசம் ஆகுது.”
சட்டென்று மூத்த மருமகளைப் பார்த்தார் பத்மா. மெதுவாக வந்து செழியன் அருகில் அமர்ந்து கொள்ள, அத்தனை ஆனந்தம் பத்மாவிற்கு.
“இருக்கற எல்லா சாமிக்கும் வேண்டுதல் வச்சிருந்தேன், ஒருவழியா கண்ணை தொறந்துட்டாங்க.” இருவரின் முகத்தையும் திருஷ்டி எடுத்தார்.
மகிழ்நனும் சமுத்திராவும் ஆர்வமாக வந்து வாழ்த்த, உமையாளிடம் கூட விளையாட பாப்பா வரப்போகிறது என மகிழ்வாக பகிர்ந்துகொண்டனர்.
“டாக்டர் சொல்றதை கேட்டு கவனமா இருங்க.” கந்தவேலும் ஆசிர்வதித்தார்.
மகிழ்ச்சியில் அவர்கள் இருவரையும் அமர வைத்து இரவு உணவு பரிமாறியவர் நன்மதியை எதுவும் செய்யவிடாது அறைக்கு அனுப்பிவிட்டார். அன்றைக்கு இருந்த மகிழ்ச்சியில் இரவு நன்மதி செய்யும் வேலைகளை தனதாக்கிக்கொண்டார். அத்தனை பத்திரம் சொல்லிவிட்டு படுக்கச் செல்ல அதற்காகவே காத்திருந்தது போல் மகிழ்நனை பிடித்துக்கொண்டான் செழியன்.
“ட்ரீட்மெண்ட்டுக்கு பணம் சேர்த்ததால வேதாவுக்கு செய்ய உன்கிட்ட வாங்குற மாதிரி ஆகிடுச்சு. இப்போ அதுக்கு அவசியமே இல்லாம போயிடுச்சு, அதனால் உன் அக்கவுண்டுக்கு மீதி பணத்தை டிரான்ஸ்பர் பண்ணிட்டேன். வந்துடுச்சான்னு செக் பண்ணிக்கோ.”
“இப்போ என்ன அவசரம்னு இன்னைக்கே பண்ணியிருக்க?” மகிழ்நன் கடிந்துகொள்ள, அவன் கைப்பிடித்த செழியன்,
“உன்கிட்ட சொல்றதுக்கு என்ன… சம்பளம் தவிர கமிஷன் பணமெல்லாம் கொஞ்சம் வரும். வேண்டாம்னு எல்லாம் சொல்ல முடியாது. ஆரம்பத்துல அந்த பணத்தை சொந்த செலவுக்கு யூஸ் பண்ணிட்டுதான் இருந்தேன். எல்லாம் தள்ளிப்போகவும் நேர்மைக்கு புறம்பா இருக்குற எதுவும் வேண்டாம்னு மதி ஸ்ட்ரிக்ட்டா சொல்லிட்டா. அதுலேந்து அப்படி வர்ற பணத்தை டோனேட் பண்ணிடுறேன். அப்படி நல்லது பண்ணாலாவது நல்ல செய்தி கிடைக்கும்னு அவளுக்கு நம்பிக்கை. அவ நம்பிக்கை வீண் போகல. ட்ரீட்மென்ட்டுக்கு சேர்த்து வச்ச பணம் இப்போ தேவையே இல்லைன்னு ஆகிடுச்சு. இது உன்னோடது, உனக்கு சேர வேண்டியது. வச்சிக்கோ.” என்றுவிட்டான்.
மகிழ்நனுக்கு மறுக்க முடியவில்லை. மனைவியிடம் வந்தவன்,
“பணம் வந்துடுச்சு. பாப்பாவுக்கு வாங்கிடலாமா?” அதில்தானே எல்லாம் துவங்கியது என்று அதனை முடிக்கப் பார்க்க, வேண்டவே வேண்டாம் என்றுவிட்டாள் சமுத்திரா.
“அந்த பணத்துல வாங்குற நகை எனக்கு பழசை நியாபகப்படுத்திட்டே இருக்கும்.” என்று சொல்லி திரும்பி படுத்துக்கொண்டாள்.
“சமு.” மனைவியிடம் தெரியும் விலகலில் பகீரென்றது.
“எனக்கு தூங்கணும்.” அன்றைய தின நினைவில் இன்றும் வலித்தது.
சோகமே உருவென மகிழ்நனும் மனைவியை ஒத்து அமைதியாக படுத்துவிட, அதற்கு எதிர்பதமாக இருந்தது செழியனின் அறை.
“நான் சொன்னேன்ல, ரிலாக்ஸ்சா இருந்தா எல்லாம் சரியா நடக்கும்னு. பாரு இந்த ஐ.வீ.எப் எல்லாம் இல்லாமலையே பாப்பா நம்மகிட்ட வந்துட்டா.” மனைவியை கொஞ்சினான் செழியன்.
கிடைக்காத வரை பெரிதாக தெரிந்த வரம் கிடைத்தபின் அத்தனை அமைதியை கொண்டுவந்திருந்தது. செய்தியை கேட்ட அனைவரும் கொண்டாடிவிட்டனர். அவளுக்கு என்னவோ இப்படி அமைதியாக அனைத்தையும் ஏற்கப் பிடித்திருந்தது. வயிற்றில் கைவைத்து சிலிர்த்து சிரித்துக்கொண்டாள். செழியனும் அவளுடன் சேர்ந்துகொள்ள, இருவரின் கனவுகளும் விரிந்தது.
அவர்களது அழுகைகளுக்கு முற்று கிடைத்துவிட்ட மகிழ்வை பகிர்ந்துகொள்ள மறுநாளே வந்துவிட்டனர் நன்மதியின் பெற்றோர்.
“காலையே வரலாம்னா ஸ்கூல் போயே தீருவேன்னு நிக்கிறா. அதுதான் அவ வேலை முடிச்சி வர சமயம் பாத்து வந்தோம்.” பத்மாவிடம் பேசிய நன்மதியின் அம்மா தொடர்ந்து,
“ரொம்ப வருஷம் கழிச்சி உண்டாகியிருக்கா. நீங்கதான் நல்லா பாத்துக்கணும் அண்ணி. வயசு வேற ஏறிடுச்சுனு பக்குபக்குனு இருக்கு எனக்கு. ஆர்வக்கோளாறுல என்னத்தையாச்சு இழுத்துப்போட்டு செய்வா, நீங்கதான் கொஞ்சம் எடுத்து சொல்லணும். இன்னும் ஒரு ஒன்பது மாசம்.. அட ஏழுல வளைகாப்பு போட்டு நான் கூட்டிட்டு போயிடுவேன். அதுவரைக்கும் அவளை வெயிட் தூக்கவிடாம அதிக வேலை செய்யவிடாம கண்ணும் கருத்துமா பாத்துக்கிட்டா கூட போதும் அப்புறம் நான் தேத்தி அனுப்பிவிட்ருவேன்.” என்று பத்மாவிடம் துவங்கி சமுத்திராவிடம் வந்தார், “அண்ணியும் நீயும் இருக்குற தைரியம்தான் எனக்கு. கூடவே இருந்து பாத்துக்கோ சமு.”
இவர் இத்தனை பேசுவாரா என்று பார்த்தான் மகிழ்நன். இதுவரை அவன் பார்த்த வரையில் நன்மதியின் வீட்டினர் அமைதியாக வருவதும் போவதுமாய் இருக்கும் இடம் தெரியாதது போல் இருப்பர். இன்றோ அவர்கள் பேசும் பேச்சில் இருந்த எதுவோ ஒன்று அவன் எண்ணத்தை மாற்றியது. ஏதோ ஒன்று உறுத்தியது. அது தங்கள் வீட்டுக் கூடத்தில் உயர்ந்த அவர்களின் குரல்களால் கூட இருக்கலாம். சமுத்திரா அம்மாவின் குரல்தான் பெரிது என்ற எண்ணம் இத்தனை நாட்களும். இன்று அதனை தூக்கிச் சாப்பிடும் வண்ணம் தேன் தடவிய பதத்தில் அதிகாரம் இருப்பது போல் தோன்றியது. ஐந்து வருடங்களாகப் பார்க்கிறேன் அப்படியெல்லாம் இருக்காது என்று சொல்லிக்கொண்டான்.
மறுநாளிலுருந்து பத்மாவின் நடவடிக்கையே மாறியது. நன்மதியே எழுந்து வந்தாலும்,
“இந்த நேரம் நல்லா தூங்கணும் அப்போதான் குழந்தை வளர்ச்சி நல்லா இருக்கும்.” என்று அனுப்பி வைத்தார்.
“சோர்ந்து சோர்ந்து தெரியுற, நல்லா சாப்பிடணும்.” என்று முதல் வாரம் உணவு வகைகளை செய்து அவள் முன் அடுக்கினார்.
“இன்னும் எதுக்கு வேலைக்கு போகணும்? பிள்ளை வளர்ந்து ஸ்கூல் போகிற வரை வீட்ல இருக்கலாம்ல?”
“அவளுக்கு முடியுற வரைக்கும் அவ போகட்டும் ம்மா. வேலைக்கு போயிட்டே இருந்தவ திடீர்னு வீட்ல இருந்தா ஸ்ட்ரெஸ் ஆகிடும் அப்புறம் குழந்தையை பாதிக்கும்.” அடக்கிவிட்டிருந்தான் செழியன்.
“நாக்குக்கு என்ன புடிக்குற மாதிரி இருக்குனு சொல்லு, நான் செஞ்சித் தரேன். வாந்தி வருதா? புளிப்பா சாப்பிடணும்னு தோணுதா?” என ஏதாவது கேட்டுக்கொண்டும் கொடுத்துக்கொண்டும் இருந்தார்.
என்ன இதில் சமுத்திரா அல்லோலப்பட்டுப்போனாள். பழையபடி நன்மதி ஓய்விற்கு சென்றுவிட, வேலை மொத்தமும் சமுத்திராவிடம் வந்தது.
“புள்ளைத்தாச்சி பொண்ணை என்னனு வேலை வாங்குறது? ஒன்னுகிடக்க ஒன்னு ஆகிட்டா? அதுதான் அவ வர்றப்போ எல்லாம் ஒன்னும் செய்ய வேணாமான்னு துரத்திடுறேன்.” என்று சொல்லிக்கொள்வார் பத்மா.
கலைவாணி ஏதாவது சொன்னால், “ரொம்ப வருஷம் கழிச்சி உண்டாகியிருக்காங்க, செஞ்சிட்டு போறேன் ம்மா. கொஞ்ச மாசம்தானே.” என்றுவிடுவாள் சமுத்திராவே. கஷ்டமாய் இருந்தாலும் ஒன்றும் சொல்ல முடியாமல் அனுசரித்துப்போனாள்.
இம்முறை சமுத்திராவை கவனித்துவிட்டான் மகிழ்நன்.
“இனி அண்ணியும் வேலை செய்ய முடியாது. ஆள் போட்டுக்கலாம். சமு எவ்வளவு பார்ப்பா. சம்பளம் எவ்ளோனாலும் நான் கொடுக்குறேன், நீ ஆள் வர சொல்லு.” என்றுவிட்டான் மகிழ்நன்.
பெரிய மருமகள் குறித்த மகிழ்வில் இருந்ததில் ஒத்துவந்துவிட்ட பத்மா மெல்ல தன் கை வரிசையைக் காட்டினார்.
ஒருமாதம் கழித்து நன்மதிக்கு ஏதாவது செய்ய விருப்பப்பட்டால், “நான் ஆஞ்சி தரேன், நீ செய். என்னை விட உன் கைப்பக்குவம் அவளுக்கு வாந்தி வராம இருக்கு.” என்று சமுத்திராவிடம் வேலையை நகர்த்திவிட்டார்.
“உனக்கும் இப்படித்தான் செஞ்சேன். நீயும் விரும்பி சாப்பிட்ட.” என்றுவிடுவார்.
பிள்ளைத்தாச்சி பெண்ணிற்கு என்று வேறு வழியில்லாமல் செய்வாள். மெல்ல அனைத்தையும் கவனித்த மகிழ்நனுக்கு வீடு முன்போலவே மாறிவிட்டது புரிந்தது. மகிழ்வதற்கு பதில் வருத்தம் மேலோங்கியது. யாரையும் எதுவும் சொல்ல முடியவில்லை. வீட்டிற்கு வாங்கும் அனைத்திலும் நன்மதியின் பிடித்தம் முன்னிறுத்தப்பட்டது. காய்கறிகள் ஆகட்டும், நொறுக்கு தீனியாகட்டும் நன்மதியின் விருப்பம் போல் வீடு மாறியது.
என்ன செய்தாலும் மசக்கை பெண் இருக்கும் வீடு இப்படித்தான் இருக்க வேண்டும் என்று துவங்கி நன்மதிக்கு பிடித்த உணவு வகைகளே மூன்று வேலையும் சமுத்திராவின் கைப்பக்குவத்தில் பத்மாவால் தயாரிக்க வைக்கப்பட்ட, பொறுத்துப் பார்த்த மகிழ்நன் தனக்கென்று ஒரு வாய்ப்பு வந்ததும் பிடித்துக்கொண்டான்.
வாழ்வில் எடுக்கவே விருப்பப்படாத அந்த முடிவை மனைவியின் மனநலம் காக்கும் பொருட்டு எடுத்தான். வேறொருவர் அவன் இடத்திற்கு மாறுதல் கேட்டு விண்ணப்பித்திருக்க, யாருக்கேனும் மாறிக்கொள்ள விருப்பம் இருக்கிறதா என்று மேலிடத்திலிருந்து தகவல் வந்தது. யாரையும் கேட்காது உடனே ஒப்புக்கொண்டுவிட்டான் மகிழ்நன்.