நன்மதியின் பிறந்தவீடும் ஒருமணி நேர பயணம்தான். நேரம் கிடைக்கும் போது செல்வார்கள், இப்பொழுது மருத்துவ அலைக்கழிப்புகளுக்கு இடையே போக்குவரத்து குறைந்துவிட்டது. தம்பிக்காரன் மாமனார் வீடு செல்லவும் இவனும் செல்வோமா என்று கேட்க, நன்மதிக்கு ஆசை இருந்தாலும் நாள் தள்ளிப்போயிருக்கும் நேரத்தில் பயணிக்க யோசனை. அவள் முகம் குழப்பமாக இருப்பதை கவனித்தவன், 

“கிளம்பு மதி, நாமளும் போயிட்டு நேரமே வந்துடலாம்.” என்று எழுந்துவிட்டான்.

“இப்போ போய் ட்ராவல் வேண்டாமே.” அறைக்கு வந்ததும் நன்மதி தயங்க,

“இங்க இருந்தா இதையே நினைச்சிட்டு இருப்ப, கிளம்பு. கொஞ்சம் ரிலாக்ஸா இருக்கும்.” பேசி சரிக்கட்டி அவர்களும் கிளம்பிவிட்டார்கள்.

“நிஜமாவே போறோமா?” ஆசையும் அதிர்வுமாய் கணவனை பின்தொடர்ந்து வந்துக்கேட்டாள் சமுத்திரா.

“அதுல என்ன சந்தேகம்?”

“எப்போதும் சாப்பிட்டு ரெஸ்ட் எடுத்து குடும்பத்தோட டைம் ஸ்பென்ட் பண்ணனும்னு சொல்வீங்க.”

“இவ்ளோ நேரம் இங்க இருந்தோம், உனக்கும் உங்க வீட்ல இருந்தா நல்லாயிருக்கும்னு தோணும்ல. காலையிலிருந்து வேலை செய்யுற பங்ஷன் டைம்ல உன் அம்மா அப்பாவை பார்த்தா ஹாப்பியா இருக்கும்… கொஞ்ச நேரம் அங்கேயும் இருந்துட்டு வரலாம்.” என்றவனை நெருங்கி வந்து அணைத்துக்கொண்டாள் சமுத்திரா. 

தானாக வந்து தன் நெஞ்சினில் தலைசாய்த்து தன்னைச் சுற்றி கைகள் கோர்த்து அணைத்துக்கொண்டவளை அதிர்வாகப் பார்த்தான் மகிழ்நன். மனைவியாக அவள் அணைக்கும் முதல் அணைப்போ? நினைவடுக்குகளை புரட்டிப்பார்த்தது மனது. 

“சமு…” கிறுக்கன் பதிலுக்கு அணைத்து நெருக்கத்தினை கூட்டாமல் அவள் முகம் பார்க்க விழைந்தான். 

இயல்பாக அவனை விட்டு விலகியவள், “வண்டில தானே போகப்போறோம், சுடி மாத்திக்கவா? புடவை கஷ்டமா இருக்கும்.” என சொல்லிக்கொண்டே அலமாரியிலிருந்து மாற்றுடை எடுத்தாள். 

“சமு…”

“பாப்பாவையும் தூக்கிட்டு வாங்க, ட்ரெஸ் மாத்திவிடணும்.” அவனது தடுமாற்றம் அவளிடம் இருந்தது போல் தெரியவில்லை. கணவன் தன்னை புரிந்துகொண்டு நடக்க ஆரம்பித்ததே வாழ்க்கைக்கு நிறைவு கொடுத்தது போலிருக்க, இறுக்கங்கள் தளர்ந்து பழைய இளக்கத்துடன் வளைய வந்தாள். 

அவனுக்குத்தான் அவளின் மாற்றங்கள் மனதினில் பதிந்துகொண்டே இருந்தது. கோவம் கொண்டு விலகி நின்றதாகட்டும் இப்பொழுது மீண்டும் குடும்பத்துடன் இணங்கியதாகட்டும் தன் முயற்சிகளை அங்கீகரித்து ஏற்றுக்கொள்வதாகட்டும் அனைத்திலும் மனைவி என்பவள் முன்பை விட தன் மனதிற்கு நெருக்கமாவதை உணர முடிந்தது. ஐயத்திலோ பதட்டத்திலோ ஏதோவொரு வகையில் அவனின் எண்ணங்களில் முதன்மை வகிக்கிறாள் மனைவி, புதுவிதமான மாற்றம்தான். எந்த விஷயமாக இருப்பினும் அவளுக்கு ஒத்துவருகிறதா என்று மனது சிந்திக்கிறது. கீப் இட் அப் என்று அவனுக்கு அவனே சொல்லிக்கொண்டு வெளியேற, கதவை அடைத்த சமுத்திரா கையிலிருந்த உடையால் முகத்தை மூடி மறைத்துக்கொண்டாள். 

அவனை அணைத்ததில் அவளது அனைத்தும் குறுகுறுவென்றது. தன் மனம் கவர்ந்த கணவன், தன் பிள்ளைக்கு அப்பா இருப்பினும் அந்த உணர்வு சிலாகிப்பை கொடுக்க அவளுக்குள்ளாகவே நாணச் சிரிப்பு சிரித்து உடை மாற்றி கதவைத் திறந்தாள். அதற்காகவே காத்திருந்தவன் போல உடன் உள்ளே நுழைந்தான்.

“பாப்பாவை தூக்கிட்டு வாங்கனு சொல்லிட்டு கதவடைச்சா எப்படி வர்றதாம்?” சலுகையாக கேட்டுக்கொண்டே மகளை மெத்தையில் விட, சமுத்திரா எதுவும் சொல்லவில்லை. ஏதாவது பதில் வரும் என மகிழ்நன் அவள் முகத்தைப் பார்க்க, சமுத்திரா அவள் வேலையைப் பார்த்தாள். எதையோ எதிர்பார்த்து ஏமாற்றம் அடைந்தது போல் முகத்தை தொங்கப்போட்டு மகள் அருகே அமர்ந்துகொண்டான்.

“என்னாச்சுங்க?” சட்டென மாறிவிட்ட அவன் முகத்தினை கண்டு சமுத்திரா கேட்க, அந்தக் கேள்வியை தனக்குத்தானே கேட்டுக்கொண்டான். விடை கிடைக்கவில்லை பின்னர் எங்கனம் அதனை மனைவிக்குச் சொல்ல.

“ஒன்னுமில்லை சமு, கிளம்பலாமா?” எழுந்து கைகளை மேலுயர்த்தி அவன் நெட்டி முறிக்க, இவள் சுணக்கத்துடன் பார்த்தாள். அவனுக்குப் புரியவில்லை.

“என்ன?”

“ஒன்னுமில்லை.” என்றாள் இவள் இப்பொழுது. அந்த தொனியே எதுவோ இருக்கிறது என்று சொல்ல,

“சொன்னாதானே தெரியும்.”

“பாப்பாவுக்கு ஒரு ட்ரெஸ் எடுத்து என் ஹேண்ட்பேக்ல வைக்கலாம்ல. டிரெஸ் கூட மாத்த வேண்டிய அவசியமில்லாம போட்டிருந்த பேண்ட் சட்டையோட கிளம்பிட்டீங்க. எனக்கு அப்படியா?” என்று நிறுத்த,

“அவ்வளவுதானே! சொல்லு செஞ்சிட்டுப் போறேன்.” என்று அலமாரியைத் திறந்து ஒரு உடையை எடுக்க,

“அது பெருசா இருக்கும், வேற எடுங்க.” என்றாள். இவன் இன்னொரு உடை எடுக்க,

“அது சின்னதாகிடுச்சு.”

அதனை வைத்துவிட்டு அடுத்ததை எடுத்தான்.

“பங்ஷன் போட்டுட்டு போற டிரெஸ் மாதிரி இருக்கு, வீட்டுக்கு போறதுக்கு எதுக்கு இது? கசகசன்னு இருக்கும்.”   

பொறுமையை இழுத்துப் பிடித்து வேறு எடுக்க,

“சம்மர்ல போடுற டிரெஸ் இப்போ போட்டா பாப்பாவுக்கு குளிரும்.”

“அடியே!” அலமாரியை மூடிவிட்டவன், “உனக்கு எப்படி வேணுமோ அப்படி நீயே வந்து எடுத்துக்கோ. இப்படி என்னை பழிவாங்காத.” என்றுவிட்டான்.

முறைத்த சமுத்திரா, “இருக்குற டிரெஸ்ல ஒன்னு எடுக்க சொன்னா அது ஏதோ கஷ்டமான வேலை மாதிரி சொல்லிக்கிட்டு…” முணுமுணுத்துக்கொண்டே தன் பையில் மகளுக்கு உடை எடுத்து வைத்துக்கொண்டாள்.

“சத்தமாவே சொல்லலாம். இப்படி முணுமுணுக்கணும்னு என்ன இருக்கு, என்ன பண்ணிடப் போறேன்.” 

சத்தமாவா, திடுக்கிட்டுப் பார்த்தாள் சமுத்திரா. அப்பொழுது மனதிற்குள் நினைக்கவில்லையா வாய்விட்டு கணவனை சாடிவிட்டோமா என்று அவனை சங்கடமாய் நிமிர்ந்துப் பார்க்க, அவனும் அவளைத்தான் பார்த்தான்.

“என்னங்க?”

“பரவாயில்லை சத்தமாவே பேசலாம்.” அப்பொழுதே இதுபோன்ற மனைவியின் சாடலுக்கு தன்னை தயார்படுத்திக் கொள்ளப்பார்த்தான் மகிழ்நன். 

மூன்று வருடங்களாக எதிர்த்துப் பேசாத மனைவி இப்போது முணுமுணுப்பு வரை வந்திருக்க, போகப்போக இது எங்கு செல்லுமோ என்ற யோசனையும் இருக்கவே செய்தது. 

மூவரும் வண்டியிலேயே சமுத்திரா வீடு நோக்கி கிளம்பினர். என்றும் இல்லாத நாளாய் அத்தனை உற்சாகமாக இருந்தது சமுத்திராவுக்கு. அதன் வெளிப்பாடாய் மக்கள் நடமாட்டம் குறைவான இடத்தில் ஒருகையால்  கணவனின் தோள் பற்றிக்கொண்டாள். அதனை அவன் உணரும் முன் முதுகில் உணர்ந்த அசைவு திசைதிருப்பியது.

“பாப்பாவை நல்லா புடிச்சிக்கோ சமு. நெளிஞ்சிட்டே இருக்கா.” 

அச்சோ என்று பதட்டமாகி கணவனின் தோளிலிருந்து கையை எடுத்து மகளை நன்றாக பிடித்துக்கொண்டாள். இருவருக்கும் உண்டான சில நொடி இனிமை கூட பெற்றோருக்கான கடமையில் பின்சென்றுவிட்டது.

வழக்கத்திற்கு மாறாக நிதானமாக வாகனத்தை இயக்கியதால் நேரம் சென்றே சமுத்திரா வீடு சென்றனர். இந்நேரம் இவர்களை அங்கு எதிர்பார்த்திராத அதிர்வு அப்பட்டமாய் தெரிந்தது. 

“சமு, பாப்பா…” ஆர்ப்பாட்டமாக கலைவாணி வரவேற்க, ஆண்களிடம் பொதுவான நலவிசாரிப்புகள்.

மகனும் மகளும் சில வருடங்களுக்கு பின் குடும்பத்துடன் நாள் கிழமையில் ஒன்றாக இருக்கவும் கலைவாணியை கையில் பிடிக்க முடியவில்லை.  

மாப்பிள்ளைக்கு விருந்து உபச்சாரம் தயாரானது.

“வீட்டு மாப்பிள்ளைனா உசத்தி மருமகன்னா தக்காளி தொக்குல்ல.” இடையே கிடைத்த சந்தர்ப்பத்தில் வியர்வை ஒழுகிய தன் முகத்தை காண்பித்து கணவனை முறைத்துவிட்டு சென்றாள் சமுத்திராவின் அண்ணி. அவள் சொல்வது போல் அப்படியொன்றும் அவளை வேலை செய்ய சொல்லி பிழிந்துவிடவில்லை என்பதால் அவன் கண்டுகொள்ளவில்லை.

பெண்கள் மூவரும் சேர்ந்தே மதிய உணவு தயார் செய்தனர். பிள்ளைகளை ஆண்கள் பார்த்துக்கொள்ள, அனாசியமாய் பிள்ளைகளை கையாளும் மச்சினனைப் பார்த்து மெச்சிக்கொண்டான் மகிழ்நன். அவனோ தன் தந்தையிடமும் தாயிடமும்,

“மாப்பிள்ளை நல்லவிதமாதான் இருக்காரு. அன்னைக்கு வீட்ல பாத்தப்போவும் சரி இன்னைக்கும் சரி அவர்கிட்ட நிறைய மாற்றம் தெரியுது. ஒன்னும் பயப்படத் தேவையில்லை. அவ்ளோ ஒன்னும் மோசமானவரும் இல்லை, பழசை எல்லாம் பேசிக்க வேண்டாம்.” என்று நற்சான்று கொடுத்துவிட்டான்.

மாலை வரை பிறந்த வீட்டில் சீராடிவிட்டு கணவனுடன் கிளம்பினாள் சமுத்திரா. அத்தனை மகிழ்ச்சி. திருமணத்திற்கு பின்னான பண்டிகை காலங்கள் என்பது எழுதப்படாத கூடுதல் வேலை தினம். முதல் நாள் வீடு சுத்தம் செய்வது துவங்கி பண்டிகை நாளன்று செய்யப்படும் விருந்து உணவுகள் காலியாகும் வரை ஓய்வின்றிய வேலை. இதில் சிறு வயதில் கொண்டாடியது எல்லாம் மங்கலாய் நினைவடுக்குகளில் பின்சென்றுவிடுகிறது.  

தலைமுறைகள் தொட்டு தொடரும் குடும்ப பழக்கவழக்கங்களை கடைபிடிக்க வேண்டும் என்று சொல்லி சொல்லியே வீட்டிற்கு வரும் மருமகள்களை கொண்டு அதனை தூக்கி நிறுத்தும் வேலையை மாமியாரான பெண்களே செய்கின்றனர். அத்தனை வருடம் அவ்வீட்டில் பிறந்து வளரும் மகனுக்கு அந்தக் கட்டுப்பாடுகளில் தளர்வு கொடுத்துவிடுகின்றனர். 

“சமுவுக்கு ஹாப்பியா?” வண்டியின் வேகத்தை குறைத்து கண்ணாடி வழியே மனைவியைப் பார்க்க முயன்றான் மகிழ்நன். பட்டென்று தலையாட்டி அவனுக்கு நிம்மதி கொடுத்தவள் தனிமையில் இன்பமும் கொடுத்தாள். 

கணவனின் நெருக்கத்தை உள்ளார்ந்த அன்புடனும் என் கணவன் என்ற பாசத்துடனும் அவள் ஏற்க, மனைவியை பிரிய சிரமப்பட்டான் மகிழ்நன். கைவளைவில் வைத்துக்கொண்டு உறங்கும் வரை முத்தங்கள் வாரித்தெளித்து மனைவியை மகிழ்வாக வைத்திருக்கிறோம் என்று உள்ளுக்குள் பெருமை பட்டுக்கொண்டான். எல்லாம் சரியாகிவிட்டது என்ற நிம்மதியுடன் உறக்கத்திற்கு செல்ல, மறுநாளே சஞ்சலங்கள் துவங்கியது.

பத்மா எப்போதும் எழும் நேரத்திற்கு எழுந்து பாத்திரங்கள் உருட்ட, நொந்து போய் எழுந்து வந்த சமுத்திரா, “அக்காவும் இப்போ ஹெல்ப் பண்றாங்கல்ல நேரம் கழிச்சி வேலை செஞ்சிக்கலாம் அத்தை. நீங்களும் கொஞ்சம் தூங்குங்களேன்.” என சொல்லியேவிட்டாள். 

பாத்திரத்தை அப்படியே வைத்துவிட்ட பத்மா, “இத்தனை வருஷம் எழுந்து பழகிடுச்சு உடனே மாறுமா. நீங்க தூங்குங்க.” இயல்பாக சொல்கிறாரா குத்தலாக சொல்கிறாரா என்று ஒருநொடி நின்று பார்த்தவள் அறைக்குச் செல்லத் திரும்ப,

“எழுந்தது எழுந்துட்ட இன்னைக்கு எந்த காய் சாம்பாருக்கும் பொரியலுக்கும்னு சொல்லிட்டு போனா நறுக்கி வச்சிடுவேன்.”

கண்களை மூடி உதட்டைக் கடித்தவள், “இன்னைக்கு அக்கா செய்யுறேன்னு சொன்னாங்க. அவங்ககிட்ட கேளுங்க அத்தை.” 

ஆம், உடல்நிலை நன்றாக இருக்கும் சமயங்களில் ஒருநாள் விட்டு ஒருநாள் தான் செய்வதாக ஒத்துக்கொண்டிருக்கிறாள் நன்மதி. இன்று அவள் முறை என்பதால் இரவே ஒதுங்கிக்கொண்டாள் சமுத்திரா. நன்மதி எழுந்து வரும் நேரம் அவளுக்கு மேல்வேலைகள் செய்து உதவினால் போதும் என்று இவர்களுக்குள் பேசி வைத்திருக்க, சலசலப்பில்லாத பழைய நடைமுறையை பின்பற்ற முயன்றார் பத்மா. 

“ஓ! ஆளுக்கு ஒருநாள்னு பிரிச்சிக்கிட்டிங்களா.” அவராக புரிந்துகொண்டு கேட்க,

“வீட்டு வேலைக்கு ஆள் இன்னும் கிடைக்கலையா அத்தை?”

“அந்த மாமி வீட்ல வேலை செய்யுறவ ரெண்டாயித்தி ஐநூறு கேக்குறா. ஆறு பேர் இருக்கோமாம், பத்து பாத்திரம் அதிகமிருக்கும். வீடும் பெரிய வீடு மூணு ரூம் ஹால் இருக்கு, துடைச்சி பெருக்கணும்னா கூட கொஞ்சம் போட்டு கொடுக்கணும்னு சொல்றா. அதிகமா இருக்கவும் வேண்டாம்னுட்டேன்.” என்று சொல்ல, மனக்கணக்கு போட்ட சமுத்திரா,

“அவங்களையே வர சொல்லிக்கலாம் அத்தை. நம்ம வீட்டு வேலைக்கு சரியாதான் கேக்குறாங்க.” என்க, அதிர்ந்த பார்வை பத்மாவிடம்.

“என்ன சரியா கேக்குறாளா? வாசல் பெருக்கி பாத்திரம் கழுவ மட்டும் ரெண்டாயிரம். வீடு பெருக்கி கூட்ட ஆயிரம் வரை கேப்பா போல, அதெல்லாம் கட்டுப்படி ஆகாது நமக்கு.”

“அப்போ எவ்ளோ கொடுக்கலாம்னு சொல்றீங்க?” 

“எல்லாம் சேர்த்து ரெண்டுன்னா பாக்கலாம், இல்லைனா நம்மளே செஞ்சிக்கலாம். சின்ன பசங்க உங்களுக்கு இந்த கணக்கெல்லாம் புரியாது. மதியும் இதேதான் பண்ணா, இந்த காலத்து பசங்க நீங்க இப்படி இருக்குறதாலதான் அவங்க சம்பளம் ராக்கெட் வேகத்துல போகுது.” என்று சொல்ல, நேரே கணவனிடம் சென்று நின்றுவிட்டாள் சமுத்திரா.

“இந்த வீட்ல முடிவெடுக்குற உரிமை யார்கிட்ட இருக்கு?”

மனைவியின் கேள்வியில் தலையும் புரியாது வாலும் புரியாது அவன் விழிக்க, அதற்கு வலு சேர்க்கும் விதமாய் ஒரு நல்ல செய்தியும் அதனைத் தொடர்ந்த இயல்பு வாழ்க்கையின் முரண்களும் அவன் நினைத்துப்பார்க்காத முடிவை எடுக்க வைத்தது.