“வந்து முழுசா ஒருநாள் ஓடிப்போச்சு இன்னும் கூடப்பிறந்தவளை போய் பாக்கனும்னு எண்ணம் வரலையே.” காலையே அங்கலாய்ப்பாக கலைவாணி ஆரம்பிக்க,
“நைட் டிராவல் பண்ணதுல தூக்கம் சரியா இல்லை. உன் பேரன் சிணுங்குனதை நீயும் பாத்துட்டு தானே இருந்த?” என்றான் மகன். முந்தைய நாள் காலை விடிந்த பின்தான் பெங்களூரிலிருந்து குடும்பத்துடன் வீடு வந்து சேர்ந்திருந்தான். உறக்கம் சரியாக இல்லாததால் அவனது மகன் நாள் முழுதும் நசநசவென இருக்க குடும்பமாக ஓய்வு போட்டாகிற்று.
“விடிஞ்சும் இத்தனை நேரம் ஆகிடுச்சு இன்னும் கிளம்புனபாடு இல்லை. உன் மாமியார் வீட்டுக்கு போயிட்டு சாவுகாசமா தங்கச்சியை பாத்துக்கலாம்னு இருக்கியா?” சமுத்திரா வீட்டிற்கு செல்லும் வழியில்தான் அவன் மாமனார் வீடும் இருக்கிறது, அங்கு ஒருஎட்டு தலைகாட்டிவிட்டு தான் சமுத்திரா வீடு செல்வர் எப்பொழுதும்.
“அவ வாழ்க்கையில சங்கடம் வந்துச்சே உடனே வரத்தான் முடியல வந்ததும் அவ வீட்டுக்கு டான்னு போய் நின்னுருக்க வேணாம்? அக்கறை இல்லைன்னு அவளை கட்டுனவரை நான் வெளுத்து வாங்கினா அவ கூடப்பிறந்ததே இப்படி இருக்கே. உன்னை கட்டுனவ உனக்கு மேல இருக்கா.” மகனை பேசவே விடவில்லை பொரிந்துவிட்டார் கலைவாணி.
‘சமுவுக்கு பிரச்சனைன்னு எல்லாத்தையும் என்கிட்ட சொல்லிட்டீங்க உடனே நான் போய் விசாரிக்க. பொண்ணு விவகாரம் என் காதுக்கு வரக்கூடாதுன்னு என்னை ஒதுக்கித்தானே வச்சீங்க. எனக்கு மதிப்பில்லாத இடத்துல நான் ஏன் எல்லாத்தையும் இழுத்துக்கணும்? என் இடத்துல நான் இருந்துக்குறேன்.’ என்று பட்டுக்கொள்ளாமல் தள்ளி நின்றாள் கலைவாணியின் மருமகள்.
“சும்மா ஏதாச்சும் சொல்லாதமா. காலையிலேயே சமுவுக்கு போன் போட்டுட்டேன், மாப்பிள்ளை வேலைக்கு கிளம்பியாச்சு. மதியம் சாப்பிட்டு போனா பாப்பா கூட கொஞ்ச நேரம் விளையாடிட்டு அப்படியே மாப்பிளை வந்ததும் விசாரிச்சிட்டு நைட் சாப்பாடு முடிச்சிட்டு வந்துரலாம்னு இருக்கோம்.”
“அப்போ உங்களுக்கு மதியம் உன் மாமனார் வீட்ல சாப்பாடு.” சரியாக நாடி பிடித்து கலைவாணி கேட்க, ஆமாம் என்றான் மகன்.
“என்னமோ பண்ணுங்க, எங்களுக்கு அப்புறம் அவளுக்கு நீயும் உனக்கு அவளும்தான் துணை. பாத்து நடந்துக்க. எத்தனை நாள் இங்க இருப்ப?”
“தீபாவளி முடிஞ்சி ரெண்டு நாள் இருப்பேன்.” அதன்பின் பொதுவான பேச்சுக்கள் இடம்பெற,
“கொஞ்சம் அதிரசம் தட்டலாம்னு மாவு ரெடி பண்ணி வச்சிருக்கேன். உன் வீட்டம்மாவ கூப்பிடு. இப்போவே போட்டு எடுத்துட்டா சமுவுக்கும் கொஞ்சம் எடுத்துட்டு போகலாம்.” என்று மருமகளை இழுக்க, செய்துதானே ஆகவேண்டும் என்ற கட்டாயத்தில் வந்தாள் அவள். இல்லையென்றால் காதில் ரத்தம் வரவைத்துவிடுவார். அதோடு எப்போதாவதுதானே ஊருக்கு வருகிறோம் செய்துவிட்டு போவோம் என்ற எண்ணமும்.
அவர்கள் முடிவு செய்தது போல் மாமனார் வீடு சென்றுவிட்டு அங்கிருந்து நேரே சமுத்திரா வீடு சென்றனர். வெகு மாதங்கள் கழித்து அண்ணனை பார்த்ததும் ஆவலுடன் வரவேற்றாள் சமுத்திரா. சமுத்திராவின் அண்ணன் தங்கை மகளுக்கு வாங்கி வந்திருந்த உடைகளை கொடுத்தான். நலவிசாரிப்புகளுக்குப் பின் அண்ணன் மகனை சமுத்திரா ஆசையாக தன் இடுப்பில் வைத்துக்கொண்டு சுற்ற, உமையாளுக்கு பொறுக்கவில்லை. மாமன்காரன் தூக்கி வைத்து கொஞ்சியதெல்லாம் கணக்கிலேயே எடுக்கவில்லை.
“மாமாடா தங்கம்.” என்று அவன் கொஞ்சிப்பார்க்க,
“அடிக்கடி வந்து போகன்னு இருந்தா பழகிடுவா.” என்றார் பத்மா.
“அது இருக்கத்தான் செய்யும். அதுக்காக பொறந்த ஊரை மறக்கலாமா. பசங்க கூடவே சொந்த ஊர்ல இருக்குற மாதிரி வராது. நீயும் இந்த பக்கம் மாத்திட்டு வரப்பாரு.” சொந்த அனுபவத்தின் பலனாய் பத்மா அவிழ்த்துவிட, காரியம் கெட்டது என்பதுபோல் பார்த்து பேச்சை மாற்றினாள் சமுவின் அண்ணி.
“தீபாவளிப் பலகாரம் எல்லாம் ஆச்சா அம்மா?” அதிரசத்தை கொடுத்து வேட்டு வைத்தாள் அவள்.
“எங்க, செய்யலாம்னா ஆளாளுக்கு வேணாங்குறாங்க. நீ செய் நான் செய்யுன்னு போட்டி வேற…” மடை திறந்தது போல் துவங்கிய பத்மா இழுக்கவுமே ஓரளவு விஷயம் புரிந்த சமுவின் அண்ணன்காரன் உட்புகுந்து ஆட்டத்தை கலைத்துவிட்டான்.
“சின்ன வயசுல தீபாவளின்னா வெடி, பலகாரம் தான் நியாபகம் வரும். இப்போல்லாம் அலுத்துடுச்சு. நினைச்சா நினைச்ச நேரம் எல்லாம் வாங்கி சாப்பிட்டுக்க முடியுது.”
“அதை சொல்லுங்க. இங்கேயும் அதே பேச்சுதான்.” தன்போல் அடங்கிவிட்டார் பத்மா.
பிள்ளைகளுக்கு இடையே மாட்டிக்கொண்டு அவர்களை சமாதானம் செய்து கொஞ்சிக்கொண்டிருந்த சமுத்திராவின் காதில் இந்த பேச்சுக்கள் விழவில்லை. அவளைப் பார்த்த அவள் அண்ணனுக்கும் திருப்திதான். பிரச்சனை என்று வீட்டினர் சொன்ன போது எழுந்த பதட்டமும் வருத்தமும் இப்போது துடைத்தெறியப்பட்டது. அதுவும் மகிழ்நன் வந்தபின் அவனின் இயல்பான பேச்சுக்கள், இணக்கமான அணுகுமுறை, சமுத்திராவை தொடர்ந்த அவன் பார்வைகள் என திருப்தியாகவே அங்கிருந்து கிளம்பினர். மகிழ்நனின் உபசரிப்பே முன்பை விட இப்போது நெருங்கிப் பழகுவது போன்ற தோற்றம் கொடுக்க, தீபாவளி அன்று கண்டிப்பாக வீட்டிற்கு வரவேண்டும் என்று அழைப்பு விடுத்துக் கிளம்பினர். மனைவியை ஆலோசிக்காது வருகிறோம் என்று ஒப்புக்கொடுத்த மகிழ்நனுக்கு மனைவியிடமிருந்து தீபாவளிப் பரிசு காத்திருந்தது.
புத்தாடையும் பட்டாசுமாய் விடிந்தது தீபாவளிப் பண்டிகை. நேரமே எழுந்து பெரியவர்களிடம் எண்ணெய் வாங்கிக்கொண்டு பெயருக்கு அதனை தலையில் தேய்த்து குளித்து வர, பெண்களின் கட்டுப்பாட்டில் சமையலறை அல்லோலப்பட்டது.
“கிரைண்டர்ல வடைக்கு போட்டிருக்கேன். கொஞ்சமா தண்ணி தெளிச்சு விடுங்க அக்கா.” அடுப்பில் வேலை பார்த்துக்கொண்டே நன்மதியிடம் சொல்ல, பத்மா எதையோ கேட்டு வந்தார். அவருக்கும் பதில் சொல்லி மீதி வேலையையும் பார்த்து முடிக்கும் முன் நாக்கு தள்ளியது சமுத்திராவுக்கு.
அவள் ஒருத்தியாய் செய்யும் போது விரைந்து முடித்துவிடுபவளால் இருவரின் தொடர் ஒத்துழைப்பில் நேரம் பிடித்தது என்றுதான் சொல்ல வேண்டும். இவள் பக்குவம் நன்மதிக்கு வரவில்லை. இவள் ஒன்று சொல்ல அவள் வேறு பதத்தில் எடுத்தாள். மனது ஒப்பாமல் சமுத்திராவே அதனை இழுத்துப் போட்டு செய்தாள்.
வடைக்கு கொஞ்சமாகத்தான் நீர் விட்டால் ஆனால் அதிகம் ஆகிவிட்டதாம் இப்படியே வடை சுட்டால் அதிக எண்ணெய் பிடிக்கும் என்று சொல்லி அரிசி மாவை போட்டு பிசைந்து வடை தட்டினாள் சமுத்திரா. இதெல்லாம் நமக்கு வராது என்று ஒதுங்க நினைத்தாலும் சமுத்திரவுக்காக நின்றுப் பார்த்த நன்மதி ஒருகட்டத்தில், “சமைச்சதை எடுத்துட்டு போய் வச்சி நான் சாமியறை ரெடி பண்றேன் சமு.” என நகர்ந்துவிட்டாள்.
ஒத்திசைப்பாய் போக வேண்டும் என்று நினைத்தாலும் வீட்டு விவகாரங்கள் குறிப்பாக இந்த சமையலறை பழக்கங்களில் இருவருக்கிடையில் நிலவும் முரண் தடுப்பாய் எழுந்து நின்றது. அதனை கடப்பது சிரமம் என்றே தோன்றியது நன்மதிக்கு. ஒன்று சமுத்திரா அளவுக்கு இவளுக்கு கைப்பக்குவம் வரவேண்டும் இல்லையா இவள் இசைவுக்கு அவள் பொறுத்து பழகிக்கொள்ள வேண்டும். இரண்டுமே சாத்தியம் என்று தோன்றவில்லை.
“உமையாள் சிணுங்கிட்டே இருக்காளாம். அவளை சமாளிக்குற பொறுப்பை சமு கொடுத்திருக்கு போல. ஐயா அதுல பிஸி.” சொல்லும் போதே தம்பியின் திணறலான முகம் நினைவு வந்து மென்னகையை கொடுத்தது.
“ஆஹான், நீங்களும் கொஞ்சம் கத்துக்கலாம் கத்துக்கொடுக்கலாம்.”
“எதை எப்படினு சொன்னா வசதியா இருக்கும் டீச்சரம்மா…”
“குட்டீஸை ஹாண்டில் பண்றது எப்படினு கத்துக்கிட்டு வைஃபை எப்படி தாங்குறதுனு கத்துக்கொடுக்கலாம்.” என கண்சிமிட்ட,
“பார்றா, அப்போ நான் நல்லா தாங்குறேன்னு ஒத்துக்குற.”
“இல்லையா பின்ன?” குறும்பாக பார்த்தவள் கன்னத்தை கிள்ளி தன் இதழில் முத்தம் வைத்துக்கொண்டவன், “ரொம்ப யோசிக்காத. இன்னும் ஒருவாரம் வெய்ட் பண்ணலாம்.” என்ற தீவிரத் தொனியில் நன்மதியின் முகமும் இருண்டது.
“ஹே, உடனே டல் ஆகாத. நாலு நாள்தான் தள்ளி போயிருக்கு அதுக்குள்ள எதிர்பார்ப்பு வச்சிக்க வேண்டாம். இன்னைக்கு உள்ளதை மட்டும் பாரு.” ஆதரவாக அவள் கன்னம் தட்டிச் சென்றான் செழியன். முயன்று தன் கவனத்தை திசைத் திருப்பினாள் நன்மதி.
படையல் போட்டபின் வெடி வெடித்து மகிழ்வாக கொண்டாடினர். எவ்வித கசப்புகளும் இன்றி அனைவர் மனதும் மகிழ்வில் நிறைந்தது. சில பல சச்சரவுகள் எழுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமிருந்தாலும் அதனை நியாயமாக கடக்க முயன்ற செயல்களின் வீரியத்திலும் பண்டிகை தினத்தின் மகிழ்விலும் அது அடிபட்டுபோனது.
“எவ்ளோ பெரிய வெடி, சத்தம் காதை பொளக்குது. அசருறாளா பாரேன்.” ஐயம் கொள்ளாமல் வெடி சத்தத்திற்கு கைதட்டும் உமையாளை காட்டி பேசிக்கொண்டனர் சகோதரர்கள்.
சமுத்திராவும் நன்மதியும் சக்கரம் மத்தாப்பு என்று கொளுத்திவிட்டு உள்ளே வந்துவிட, ஆண்கள் கொஞ்ச நேரம் வெளியே நின்று வெடித்து வந்தனர். குடும்பமாக உணவருந்திவிட்டு சோர்வாக கூடத்தில் அமர,
“அவ வீட்டுக்கு போயிட்டு வந்துர்றோம். ஊர்லேந்து மச்சான் வந்திருக்காரு.” என்று மனைவியைப் பார்க்க, இனிமையாய் அதிர்ந்து போனாள் சமுத்திரா. அண்ணன் அழைக்கவும் சம்பிரதாயத்திற்கு வருவதாக ஒத்துக்கொண்டான் என்று நினைத்தாள். இப்போது உண்மையிலேயே செல்லலாம் என்று சொல்ல பரபரப்பு தொற்றிக்கொண்டது.
“நான் பாத்துக்குறேன் அப்பா. மெயின் ரோட்ல பயப்படுற அளவுக்கு இருக்காது வண்டில போயிட்டு இருட்டுறதுக்கு முன்னாடி வந்துர்றோம்.” என்றபின் என்ன சொல்ல முடியும். அமைதியாகிவிட்டார்.
“நீயும் எங்கேயாவது கிளம்புறியா இல்லை வீட்ல இருக்கப்போறியா?” சுணக்கத்துடன் பத்மா பெரிய மகனிடம் தாவ, அவன் பார்வை மனைவியிடம் சென்றது.