“ஆசை ஆசையா வளத்துக் கட்டிக்கொடுத்த என் பொண்ணை ராணி மாதிரி நடத்தலைனாலும் போகட்டும்னு விடலாம், வேலைக்காரி மாதிரில்ல அந்த வீட்ல கிடந்து அல்லாடுறா. அதை சரிபண்ண துப்பில்லாம நாதியத்து நிக்குறேனே நானு. மூணு வேலை நெய்யும் பாலும் கொடுத்து வளத்தேன். கலகலன்னு இருக்குற பொண்ணு இன்னைக்கு குரல்ல சுரத்தே இல்லை. பேசிட்டு இருக்குறப்போவே தூங்கிட்டா. என் பொண்ணை தூங்ககூட விடாம வேலை வாங்குறாங்களே…” கலைவாணி தன் தொண்டையை கிழித்துக்கொண்டு வீட்டின் நடுவே குறுக்கும் நெடுக்குமாய் நடந்துகொண்டே புலம்பினார்.
“இந்தா நிப்பாட்டு, என்னத்துக்கு இப்போ எழவு வீடு மாதிரி ஒப்பாரி வச்சிட்டு இருக்க?” எரிச்சலாய் வந்தது அய்யாவுவின் குரல்.
“நியூஸ் எல்லாம் பாக்குறியா இல்லையா’யா? நாட்ல என்னென்னவோ நடக்குது இவளும் விவரம்கெட்டத்தனமா இருக்காளேன்னு நானே பதறிப்போய் இருக்கேன். உனக்கு ஒப்பாரி வைக்குற மாதிரி இருக்கா?” என சண்டைக்கு வந்தார் கலைவாணி.
“மாப்பிள்ளை வீட்ல கொடுமை பண்ற மாதிரி பேசுற. எல்லா வீட்லையும் வேலை இருக்கத்தான் செய்யும். அவ குடும்பத்தை அவ பாக்க வேணாமா?”
“ஏன் இவ மட்டும்தான் அந்த வீட்டு மருமகளா? இவ மட்டும்தான் அந்த வீட்டை தோள்ல சுமக்கணுமா? அந்த வீட்டுக்கு மூத்தவன்னு ஒருத்தி இருக்காளே அவ ராணி மாதிரில்ல இருக்கா. நான் பெத்ததுதான் விவரம் இல்லாம இப்படி கிடக்கு.” நிற்பதாய் இல்லை கலைவாணி.
“சும்மா நொய்யி நொய்யிங்காத. ஏன் கல்யாணம் கட்டி வந்து நீ செய்யல. உன் புள்ளையை கட்டிட்டு வந்த பொண்ணு செய்யணும்னு நீ ஒத்தக்கால்ல நிக்கல? இப்போ உன் பொண்ணு பண்ணா உலகமே இடிஞ்சி விழற மாதிரி ஒப்பாரி வைக்குற.” என நன்றாக கேட்டுவிட்டார் அய்யாவு. திருமணமானால் புகுந்த வீட்டின் பொறுப்புகளை பெண்கள் ஏற்பது இயல்புதானே. இதற்கு எதற்கு இத்தனை நாடகம்? எளிதாக எடுத்துக்கொண்டார் அய்யாவு.
“நல்லா சொல்லுவ நீ. உனக்கெங்கே தெரியப்போகுது பொண்ணுங்க கஷ்டம்.” என அவர் மீண்டும் எதுவோ சொல்லத் துவங்க இடையிட்டார் கணவர்,
“உனக்கு மட்டும் உன் மருமவ கஷ்டம் புரிஞ்சிருச்சாக்கும்?”
“இந்தா அவளுக்கு என்ன கஷ்டங்குறேன்? என் புள்ளையை வளைச்சி போட்டு கல்யாணம் கட்டுனவ, கையோட பெங்களூர் கூட்டிட்டு போயிட்டா. அங்க அவ இஷ்டப்படி இருக்கா, அவ தலையாட்டுனாதான் என் புள்ளையே என்னை பாக்க வர்றான்.” என நீட்டி முழக்கினார்.
“அவனுக்கு லீவ் கிடைக்குறப்போதான் வரமுடியும். வந்தாலும் நீ பஞ்சாயத்து இழுத்து வைக்குறேனு உன் மகன்தான் ஊருக்கு வரவே பயப்புடுறான்.”
“மருமவ மேல ரொம்பத்தான் கரிசனம்.” என சடைத்துக்கொண்டவர், “இப்போ பேச்சு அவங்களை பத்தியில்லை. நம்ம பொண்ணை பத்தி.” துவக்கத்திற்கே வந்து நின்றார்.
“ராத்திரி பேத்தி தூங்கவிடாம அழுதிருப்பா அதான் அலுப்புல தூங்கியிருக்கும் சமுத்திரா. அதைபோய் பெருசு பண்ணிட்டு இருக்க.” என அந்த பிரச்சனையை அவர் முடிக்கப்பார்க்க,
“பகல் முழுக்க ஓயாம வீட்டு வேலை பார்த்து புள்ளையும் சமாளிச்சு அந்த கூட்டுக்குடும்பத்தை அனுசரிச்சு போறால்ல, அவ வீட்டுக்காரர் புள்ளையை செத்த நேரம் பாத்துகிட்டு இவளை தூங்க விடலாம்ல. அவருக்கும் புள்ளைதானே அது.” கலைவாணி தன்பிடியில் நிற்க,
“அவரும் நாள் முழுக்க வெளில வேலை பாத்துட்டுதான வராரு.” மருமகனுக்கு வக்காலத்து வாங்க முயன்றார் அய்யாவு.
“நாலு காசு சம்பாரிச்சிட்டா போதுமா? பொண்டாட்டியை ராணி மாதிரி வச்சுக்கணும். இந்த ஆம்பளைங்க எல்லாருக்குக்ம் ஒரே புத்தி பொண்டாட்டியை அடக்கி வச்சே பழகிட்டீங்க.” கலைவாணியின் வழக்காடலை சமாளிக்க முடியாமல் மீண்டும் வயலுக்கே கிளம்பி சென்றுவிட்டார் அய்யாவு.
அவர்களும் தஞ்சை மண்ணின் மைந்தர்கள்தாம். அரைமணி நேரம் பயணித்தால் மகளை சந்தித்துவிடும் தூரத்தில் இருக்கின்றனர். தொழில் விவசாயம். மகன் பெங்களூரில் மென்பொருள் பொறியாளர். மகள் சமுத்திராவை முதுகலை படிக்கவைத்து கட்டிக்கொடுத்தாகிவிட்டது. பிக்கல்பிடுங்கள் இல்லாமல் இருப்பதை வைத்து நிறைவான வாழ்க்கை ஏற்படுத்திக்கொள்ளலாம் என்றாலும் கலைவாணிக்கு தன் மகள் துயரப்படுகிறாள் என்ற எண்ணம். தினம் ஒரு பாட்டாய் அதனை பாடிவிடுவார். தன் கைப்பிடிக்குள் தன் சொல்பேச்சு கேட்டு செல்லமாய் வளர்ந்தவள் இன்று புகுந்த வீட்டின் பேச்சிற்கு மறுபேச்சில்லை என்பது போல் செயல்பட, தாளவில்லை கலைவாணிக்கு. அந்த வாரம் முழுதும் அதே பேச்சினை பேசி கணவரை தன் இழுப்புக்கு கொண்டுவந்துவிட்டார். மகளை அழைத்து வந்து தங்களுடன் ஒருவாரமேனும் வைத்துக்கொள்ள வேண்டும் என்ற கலைவாணியின் முடிவுக்கு தலையாட்டுவதை தவிர அய்யாவுக்கு வேறு வழி தெரியவில்லை.
தினமும் உமையாள் உறங்கும் நேரம் சமுத்திராவும் உறங்கிவிடுவாள். அன்று முழுதும் ஆட்டம் போட்டுவிட்டு மாலை பொழுதினில்தான் உமையாள் உறங்கியிருக்க, அவளருகிலேயே உடலை குறுக்கிப் படுத்தவள் பத்து நிமிடம் அசந்து உறங்கியிருப்பாள் அவ்வளவுதான் அறைக்கதவு திறக்கவும் அதுகொடுத்த க்ரீச் சத்தத்தில் அதிர்ந்து எழுந்துவிட்டாள்.
விளக்கை போட்ட மகிழ்நன் பேந்த பேந்த விழிக்கும் மனைவியையும் அருகில் அசந்து உறங்கும் மகளையும் ஒருபார்வை பார்த்தவன், “என்ன இவ்ளோ நேரம் தூக்கம்?” என கேட்டுக்கொண்டே தன் பையை மேசையில் வைத்துவிட்டு சட்டையை கழட்டினான்.
“ஹான்…” சில நொடிகள் ஒன்றும் புரியவில்லை சமுத்திராவுக்கு.
“விளக்கு ஏத்துற நேரம் வந்துடுச்சே இன்னும் தூங்குற இன்னைக்கு? செம்ம ஆட்டமா அம்மாவும் பொண்ணும்.” என கேட்டுக்கொண்டே அவர்களை நெருங்கி வந்து மனைவியின் கன்னத்தை லேசாக தட்டியவன் குனிந்து மகளின் நெற்றியில் முத்தமிட்டு நிமிர்ந்தான். அதில் தெளிந்தவள் வாரி சுருட்டிக்கொண்டு எழுந்தாள்.
காலை முதல் ஆளாய் எழுந்திரிக்கும் சமயம் கணவன், மகளது உறக்கம் கெட்டுவிடக்கூடாது என்ற எண்ணத்தில் பூனை நடையிட்டு வெகு நிதானமாய் உதட்டை கடித்துக்கொண்டு கதவை திறப்பதாகட்டும் மூடுவதாகட்டும் செயல்கள் அனைத்தும் இவர்கள் இருவரை கருத்தில் கொண்டே அமையும். இன்று என்னடாவென்றால் சத்தம் கொடுக்காத கதவுகள் கூட அவன் திறந்த வேகத்திற்கு க்ரீச் என்றுவிட்டது.
உமையாள் உறங்கும் நேரங்கள் தவிர்த்து மற்ற நேரங்கள் கதவு மூடப்படுவதில்லை, அந்த யோசனையும் கரிசனமும் கூட இன்றி படாரென உள்ளே வந்துவிட்டானே என்ற பெருமூச்சுடன் மகளைப் பார்க்க, அவள் அசையக்கூட இல்லை. இன்று இரவு உறங்கின மாதிரிதான் என்ற சலிப்புடன் உறங்கக் கெஞ்சிய உடலை பிரயத்தனப்பட்டு நகர்த்திக்கொண்டு வெளியேறினாள் சமுத்திரா. வெளியேறும் முன் கீழே பாய் விரித்து மகளை அதில் படுக்கவைத்தாள். அருகில் யாரும் இல்லையென்றால் எழுந்ததும் இறங்குகிறேன் என கீழே விழுந்து வைக்கிறாள் ஒன்றரை வயது உமையாள். கணவன் வந்ததும் மகளை பார்த்துக்கொள்ள சொல்லிவிட்டு கொல்லைப்புறத்தில் ஒரு ஓய்வறை உண்டு, அங்கு சென்று முகம் கழுவலாம் என்று நகரப்போக,
“விளக்கு வெக்குற நேரம் கொல்லைக்கதவை சாத்தனும், மகிழே வந்தாச்சு…” என்ற பத்மாவின் கண்டிப்புக்குரல் வந்தது. அதில் அவள் நேரம் தாண்டி உறங்கிவிட்டாள் என்ற குட்டு இருந்ததை உணர்ந்துகொண்ட சமுத்திரா காதில் வாங்காதது போல் முகம் கழுவி கதவடைத்து வந்து மகிழ்நனுக்கு காபி கலந்தாள்.
“அம்மா தண்ணி.” என்ற குரலோடு கூடத்திற்கு வந்தான் மகிழ்நன்.
“இதோ எடுத்து வச்சிட்டேன்பா.” என அவன் வீட்டினுள் நுழையும் போதே எடுத்து வந்துவிட்ட தண்ணீரையும் பலகாரத்தையும் கொடுத்தார்.
சோபாவில் அமர்ந்து டீப்பாயில் கால் நீட்டி ஆட்டிக்கொண்டே தண்ணீர் குடித்தவன் காபி என்று மீண்டும் கேட்க, மருமகள் நேரமெடுப்பது போல் தெரிய, அவரே உள்ளே சென்றார்.
“ஒரு காபி போட எவ்வளவு நேரம்.”
“இதோ ஆச்சு அத்தை.” என இரு டம்ளர்களில் அவள் ஊற்ற, உனக்கு ஒன்றா எனக் கேட்டு மகனுக்கு போட்டதை ஆற்றியபடி வெளியேறினார். பெருமூச்சுடன் விளக்கேற்றிவிட்டு தனக்கு போட்டதை எடுத்துக்கொண்டு கூடம் வந்தாள் சமுத்திரா. காலை ஒன்பது போல் கிளம்பும் கணவன் வீடு வந்து சேர ஐந்தேமுக்கால் இல்லை ஆறாகிவிடும்.
“அடுத்த வாரம் போய் எடுத்திடலாமா என்ன சொல்ற நீ?” என மகனிடம் கேட்டுக்கொண்டிருந்தார் பத்மா.
“இதெல்லாம் சொல்லிட்டா வரும். திடீர்னு நேரம் வந்துடும் அப்போ அவசரமா வாங்குற மாதிரி இருக்கும். இந்த மாசம் விலை குறையும்னு நியூஸ்ல பாத்தேன். வீணாப்போற பொருளா என்ன? என்னைக்கு இருந்தாலும் வாங்க வேண்டியதுதானே.” என சொல்லவும், மகிழ்நன் முகம் யோசனைக்கு தாவியது.
சமுத்திராவுக்கு என்னவென்று கேட்க நா துடித்தது. ஆனால் கணவன் பொதுவில் கேட்கக்கூடாது என்றல்லவா சொல்லியிருக்கிறான். அதனால் மெளனமாக பார்த்துக்கொண்டிருந்தாள்.
“என்ன யோசனை மகிழு? செஞ்சுதானே ஆகணும்.” என பத்மா மீண்டும் சொல்ல,
சரி சரி என்று கேட்டுக்கொண்ட பத்மா விடாது என்னென்னவோ பேசிக்கொண்டிருந்தார். அதில் பாதியும் டீவியில் மீதியுமாய் கவனம் வைத்திருந்தான் மகிழ்நன். அம்மா மகன் பேச்சுக்களை பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு மீண்டும் உறக்கம் வருவது போல் ஆக, மணியைப் பார்த்த பத்மா,
“நைட் என்ன செய்யப் போற? காய் எதுவும் நறுக்கணும்னா எடுத்து தா. நான் ரெடி பண்ணி தரேன்.” என இவள்புறம் திரும்பவும் தலையை உலுக்கிக்கொண்டு மாமியரைப் பார்த்தாள். அதனை கவனித்துவிட்ட பத்மா, கேலிச்சிரிப்புடன்,
“அதுக்குள்ள கனவுக்கு போயாச்சா… நைட் டிபன் செஞ்சு சாப்பிட்டு நேரமே தூங்கு.” என்றவர் மருந்துக்கும் அவர் இடத்தை விட்டு எழவில்லை. கணவனின் பார்வை நொடி இவள் மீது பதிந்து மீண்டும் டீவிக்குள் சென்றுவிட்டது.
“மகிழ் நைட்டுக்கு என்ன வேணும்?” மருமகளிடமிருந்து மகனிடம் தாவிவிட்டார் பத்மா.
“சப்பாத்தி போடு ம்மா.” அலைபேசியில் என்னவோ செய்தி வரவும் அதை எடுத்து பார்த்துக்கொண்டே எழுந்தவன் அடுத்து அழைப்பு வரவும் நகர்ந்துவிட்டான்.
சப்பாத்தி என்றதுமே சமுத்திராவின் உறக்கம் எல்லாம் தூர சென்றுவிட்டது. விழிகள் விரிந்துகொள்ள ஐயோ என்று அலறியது மனது. உமையாளுடன் சேர்த்து ஏழு பேருக்கு சப்பாத்தி போடுவதென்றால் சும்மாவா?
“நான் குருமாவுக்கு காய் நறுக்குறேன். நீ மாவு பிசை. சின்னக்குட்டி எழறத்துக்குள்ள தேய்ச்சிடனும் இல்லைனா செய்ய விடமாட்டா.”
“மதியத்துக்கு வச்ச சாம்பார் மீதியிருக்கு. வேற எதுவும் பண்ணிக்கலாம்.” என அவசரமாக பதில் கொடுத்தவள் இதை முதலில் அவர் கேட்ட போதே சொல்லியிருக்கலாம் என மானசீகமாக தலையில் அடித்துக்கொண்டாள். இவள் பதில் சொல்லியிருந்தால் கேள்வி மகிழ்நனிடம் தாவி இருக்காது.
“அதை நாளைக்கு சுண்ட வச்சிக்கலாம். மகிழ் சப்பாத்தி கேட்டிருக்கான், போடாம எப்படி…” என்று அவர்பாட்டிற்கு எழுந்துவிட்டார்.
ஆயாசத்தில் தலையில் கைவைத்துவிட்ட சமுத்திராவுக்கு கணவன் மேல் எரிச்சல் வரும்போல் இருந்தது. வாயை வைத்துக்கொண்டு சும்மா இல்லாமல் இவனை யார் இப்போது சப்பாத்தி கேட்கச் சொன்னதாம்? அடுப்பின் தணலில் வியர்வை சொட்ட சொட்ட நின்று சமைக்கும் பெண்களின் செளகரியத்திற்கு முன் வீட்டு ஆண்களின் நாலு முழ நாக்கு நீண்டுகொண்டு முக்கியத்துவம் பெற்றுவிடுகிறதே. அதை அவ்வீட்டு மூத்த பெண்மணியும் கருத்தில் கொள்வதில்லை என்பதுதான் வேதனையின் உச்சம்.
கணவன் கையில் கிடைத்தால் சப்பாத்தி கட்டையால் அடித்துவிடலாம் என்ற எண்ணம் தோன்றவும், ‘அவங்களை அடிக்குறதா?’ நெஞ்சில் கைவைத்துவிட்டாள் சமுத்திரா. மனதில் இருப்பதை தயக்கமின்றி பேசவே ஒன்றுக்கு இரண்டுமுறை யோசிக்க வேண்டும் என்கையில் அடிப்பதெல்லாம் நினைவில் தோன்றுவதே குற்றமாய் தோன்றியது அவளுக்கு.
தலையை உலுக்கிக்கொண்டு சப்பாத்தி போட எழுந்து செல்ல, பாதி தேய்த்துக் கொண்டிருக்கும் போதே வந்துவிட்டாள் உமையாள். அவளுக்கு முகம் கழுவிவிட்டு தேய்த்த சப்பாத்தியில் இரண்டை மட்டும் கல்லில் போட்டு எடுத்து ஊட்டும் போது வந்துவிட்டனர் செழியனும் நன்மதியும்.
“ஒர்க் ஹெக்டிக்கா போகுதா? தினம் லேட்டா வர? அண்ணியும் பாவம் உனக்காக அவ்வளவு நேரம் உன் ஆஃபீஸ்ல காத்திருந்து வராங்க. அவங்களுக்கு ஒரு வண்டி வாங்கிக் கொடுக்கலாம்ல, ஸ்கூல் முடிஞ்சதும் சீக்கிரம் வீட்டுக்கு வந்துடுவாங்க.” என அண்ணனை நிற்க வைத்துப் பேசினான் மகிழ்நன். மணி அப்போதே ஏழரை.
அறைக்குச் செல்லும் மனைவியை ஒருபார்வை பார்த்த செழியன், “அவளுக்கு வண்டி ஓட்டத் தெரியாதுடா. அதோட ஸ்பெஷல் கிளாஸ் எடுக்குறா அதுதான் லேட்டா வரோம்.”